சாதி மல்லிப் பூச்சரமே !!! 37

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 37

மனைவியின் வார்த்தையைப் பொய் என்று ஒதுக்கிச் சென்றவன், இப்போது அவள் கிணற்றில் விழுந்து விட்டாள் என்றதும் பதட்டத்தில் தன்னவளைக் காப்பாற்ற இவனும் ஓடிச் சென்று விழுந்தவன், மனைவியை நாலா புறமும் நீரில் துழாவி தேடிப் பார்க்க, “ஏட்டி பாப்பு, மாமா சும்மா சொன்னேன் டி. எங்கன டி இருக்க?” இவன் நீருக்குள்ளேயும் மேலேயும் மிதந்த படி புலம்ப

“ஹா... ஹா... ஹா... மாமா, நான் இங்கே இருக்கேன். அதெப்படி? இந்த ஜென்மத்துக்கும் நான் தான் உன் பொஞ்சாதியா? இதோ, இப்போ சொன்னீயே… இது தான் மாமா உண்மை! உன் ஆழ் மனசுலே இருந்து வர்ற உண்மையான வார்த்தை மாமா இது” மேலே கிணற்றின் விளிம்பிலிருந்து தென்றல் கெக்கலித்துக் கணவனை வம்பிழுத்தவள்

“ஹா.. ஹா... அதெப்படி மாமா விழப் போறேன்னு பொய் சொல்லிட்டு ஒரு கல்லைக் கிணற்றில் தூக்கிப் போட்டுட்டு நான் ஒதுங்கி நின்றதற்கே இப்படி பதறியடித்து ஓடி வந்து கிணற்றுக்குள் குதிச்சிட்ட. நான் ஒரு மாடலிங் பொண்ணு மாமா. எனக்கு நீச்சல் தெரியும் என்றதையே மறந்துட்டியா?” இன்னும் இன்னும் இவள் கணவனைக் கேலி செய்ய

மனைவியின் குரலைக் கேட்டதும் பதட்டம் விலக, உடலிலும் முகத்திலும் நீர் வடிய படியேறி மேலே வந்தவனின் கை விரல்களோ அடுத்த நொடி மனைவியின் கன்னத்தைப் பதம் பார்த்து இருந்தது.

கணவனின் ஒரு அறையிலேயே சுருண்டு விழுந்தாள் தென்றல். “இப்போன்னு இல்லட்டி... எப்பவும் என் உணர்வுகளோடு வெளையாடுறதே ஒனக்கு வேலையா போச்சு டி. ஆமா, இந்த ஜென்மத்துக்கு நீதேன் என் பொஞ்சாதி. ஆனா என் மனசளவுல ஒன்னைய நான் விலக்கி வெச்சு ரொம்ப நாளாச்சு. இனி இந்த ஜென்மத்துக்கு நீ என் மனசுக்குள்ளாற வர முடியாது. மறுக்கா இப்டி ஏதாவது என் உணர்வுகளோட வெளையாண்ட…” என்று எச்சரித்த படி கர்ஜித்தவன்,

அடுத்த நொடி விழுந்து கிடந்த மனைவியைத் தன் கைகளில் ஏந்தி, அவள் எதிர்பாராத நேரம் அவளைக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டவன், “அதேன் நீச்சல் தெரியும்னு சொன்னயில்ல? எழுந்து நீயே மேலே வந்துக்கடி” என்று கடித்த பற்களுக்கு இடையில் வார்த்தையைத் கடித்து துப்பிய படி விலகிச் சென்றான் வேந்தன்.

இன்று தன் மாமனுக்குப் பிறந்த நாள் என்பதால் தான் இடையில் நடந்து முடிந்த பிரச்சனைகளை விடுத்து மறந்து அவனுக்கான நாளாய் அவனுக்கான மனைவியாய் இருக்க விரும்பினாள் தென்றல். ஆனால் அதுவே அவளின் இன்றைய செயலுக்கு வேறு விதத்தைத் தன்னவனுள் விதைக்கும் என்பதை இவள் அறியவில்லை. ஒவ்வொரு முறையும் தன்னவன் கண்ணில் வழியும் காதலை உணர்ந்திருந்தவளால் இப்போதெல்லாம் அது இல்லாமல் வெறுமையைக் கண்டவள் ஏனோ நடை பிணமாகத் தான் மாறிப் போனாள் தென்றல்.

ஆனால் அவளால் அப்படி இருக்க முடியாமல் அடுத்து அடுத்து அவள் இந்த ஊருக்கு வந்த வேலைகள் அழைக்க.. அதன் விளைவாக அடுத்த கட்ட நடவடிக்கையாக தன் அதிகாரத்தை வைத்து M.L.Aவின் பினாமி பெயரில் இயங்கும் சாயப்பட்டறைத் தொழிற்சாலைக்கு சீல் வைத்தாள் தென்றல். பெரிய இடம் தற்போதும் M.L.Aவாக இருப்பவன். அதனால் அவனை நெருங்க இவளுக்கு கடினமாக இருந்தாலும் ஊர் நன்மைக்காக செயல்படுத்தி முடித்தாள் இவள்.

அதில் வஞ்சம் கொண்ட அந்த M.L.Aவும் அவன் ஆட்களும் இவளைப் பதவி நீக்க செய்ய நினைத்தவர்கள் இவள் வீட்டில் இவளுக்கே தெரியாமல் லஞ்சப் பணத்தை வைத்து தென்றலை மாட்ட வைக்க நினைக்க

அதை அறிந்த மதிவேந்தனோ, “தென்றல் எங்கன இருக்குத?” என்றபடி அவள் வீட்டிற்குள் நுழைந்து இவன் மனைவியைத் தேட

பிறந்த நாள் அன்று கணவனைப் பார்த்து அவனிடமிருந்து வசவை வாங்கிக் கட்டிக் கொண்டு வந்த பிறகு, தென்றல் வேந்தனைக் காண முயற்சிக்கவில்லை. ஆனால் எப்போதும் கணவன் நினைவாக இருந்தவளுக்கு, இப்போது தன் வீட்டில் கணவனின் குரலைக் கேட்கவும் ஏனோ அதுவும் அவனின் நினைவுதானோ என்று இவள் அமர்ந்திருக்க

“ஏட்டி தென்றல், ஒன்னையத்தேன்… எங்கிட்டு இருக்க?” இவன் குரலை உயர்த்தி கேட்கவும்

இது கனவு இல்லை நினைவு என்பதை உணர்ந்தவள், அவசரமாக எழுந்து வந்து மேல் மாடியில் நின்று கீழே பார்த்தவள் கணவன் தான் என்றதும், “என்ன மாமா?” என்ற படி இவள் அவசரமாய் மாடியிலிருந்து இறங்கி ஓடி வர

“பைய… பைய டி...” என்றவன் மனைவி அருகில் வந்ததும் அவள் கூந்தலை ஒதுக்கி, “ஒன் ரூம் எது?” என்று இவன் கிசுகிசுப்பாய் கேட்க

கணவனின் பேச்சும் செயலும் அவளுக்குள் குறுகுறுப்பு ஏற்படுத்த, “இங்க யாரும் இல்ல மாமா. எதுவா இருந்தாலும் நீ கொடுக்க வந்ததை இங்கேயே எனக்குக் கொடு” என்றபடி இவள் உதட்டைச் சுழித்துக் காண்பிக்க

நறுக்கென்று மனைவியின் தலையில் கொட்டியவன், “நேரங்காலம் தெரியாம ஒனக்கு ரொமன்ஸ் கேக்குதாடி?” என்று சலித்தவன் மனைவியின் கூற்று உண்மையா என்பதை சுற்றும் முற்றும் பார்த்து அறிந்து கொண்டு, “ஒன் பிளஷர் எங்க? ரிப்பேர் செய்யக் குடுத்திருக்கீயா?”

இவள் புரியாமல், “ஆமாம்...” என்று தலை அசைக்க

“ஓ... சரி நான் சொல்லுத வரைக்கும் வண்டியை திரும்ப எடுத்துட்டு வந்துராத. வீட்குள்ளையும் வெளி ஆளுங்களை சேர்த்துக்கிடாத”

கணவன் எதற்கு சொல்கிறான் என்று புரியவில்லை என்றாலும் “சரி” என்று தலை அசைத்தவள், “ஆனா மாமா, வண்டி ரிப்பேர் சரி செய்து வந்தாச்சே”

“எப்போ? வெளியே வண்டியை காங்கலயே?” இவன் பதட்டம் இல்லாமல் கேட்க

“இன்னையிலிருந்து இரண்டு நாளைக்கு அரசாங்க விடுமுறை மாமா. அதனால் வண்டிக்கு வேலை இல்லைன்னு ஷெட்ல நிறுத்தச் சொல்லிட்டேன். டிரைவர் கூட கிளம்பிட்டார். என்ன விஷயம் மாமா?” கணவன் ஏன் இவ்வளவு கேட்கிறான் என்ற நிலையில் இவள் கேள்வி கேட்க

அதே நேரம், “போலீஸ் கெளம்பிட்டாக” என்று அவன் கைப்பேசிக்கு குறுந்தகவல் வர, அதைப் பார்த்தவன்

“நீ ஷெட் தொரவா (சாவி) எடுத்துகிட்டு வா” என்று அவசரப் படுத்தியவன் அதே அவசரத்துடன் ஷெட்டைத் திறந்து காரின் சீட்டுக்குக் கீழே மூட்டைகளாய் கட்டிப் பதுக்கி வைத்திருந்த பணக் கட்டுகளை எடுத்தவன், அதே வேகத்துடன் மொட்டை மாடிக்கு வந்தவன், ஒரு விசில் சத்தத்தைக் கொடுக்க, இவனுக்குப் பதிலாக எதிர் விசில் சத்தம் காம்பவுண்டை ஒட்டி வரவும், உடனே திருப்தியுடன் இவன் கையில் உள்ள பணக் கட்டைத் தூக்கிப் போட, அதை அந்த சுவரை ஒட்டிய மறைவிலிருந்து எடுத்துச் சென்றது ஒரு உருவம்.

கணவனின் செயலை விழிவிரித்து ‘இது என்னடா புதுசா ஏதோ கட்டு!’ என்பது போல் பார்த்த தென்றல், கணவனிடம் என்னவென்று கேட்கவிருந்த நேரம், வெளி வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்று, அதிலிருந்து காவலர்கள் இறங்கும் சத்தம் கேட்க, அவர்கள் உள்ளே வரவும், மனைவியைத் தோளோடு அணைத்த படி இவன் கீழே வரவும் சரியாக இருந்தது.

“வாங்க இன்ஸ்பெக்டர், என்ன இந்த பக்கம்?” இவன் வீட்டாளாய் உரிமையாய் விசாரிக்க

“சார்... நீங்களா!” இவனை எதிர்பார்க்காததால் வந்தவன் தயங்கியபடி இழுக்கவும்

“என்ன நீங்களா? ஏன்... ஒங்க கலெக்டர் மேடம் என் பொஞ்சாதின்னு ஒங்களுக்குத் தெரியாதா என்ன? அப்போ நான் இங்கன இருக்கிறதுல ஒங்களுக்கு என்ன ஆச்சரியம்? இதுல என்னைய கேள்வி கேக்குறீய… ஆனா நீங்க ஏன் இங்கன வந்தீயனு எதுவும் சொல்லலையே?” இவன் அதிகாரமாய் கேட்க

“சார், அது வந்து… நம்ம கலெக்டர் மேடம் லஞ்சப் பணம் வாங்கினதா புகார். அதான் search பண்ண வந்தோம். ஆர்டர் காப்பி இதோ சார்” வந்தவன் ஒரு தாளை நீட்ட

“அத நீங்களே வச்சிக்கிடுங்க” என்றவன், “ஏட்டி, அநியாயத்துக்கு நியாயஸ்தியா இருக்கியோ… ஒன் மேலே பொய் புகார் எல்லாம் குடுத்து, அதையும் தூக்கிட்டு வார்ற அளவுக்கு எதிரிகள வளர்த்து வச்சிருக்க போல” என்று மனைவியிடம் கேட்டவன்

“நீங்க ஒங்க கடமைய தாராளமாக செய்யலாம் இன்ஸ்பெக்டர்” என்று வந்தவனுக்கு அனுமதி தந்தவன், “ஏட்டி, அதுவரைக்கும் நாம இப்டி செத்த ஒக்காருவோம்” என்றவன் மனைவியின் தோளிலிருந்து கையை விலக்காமலே அவளுடன் அங்கு போடப் பட்டிருந்த சோபாவில் அமர

இப்பொது தான் தென்றலுக்கு நடப்பது என்ன என்று கொஞ்சம் புரிந்தது. அதில் கணவனை ஒட்டி அமர்ந்தவள், “உனக்கு முன்பே தெரியுமா மாமா இப்படி ஒரு பழி என் மேல் வரப் போகிறதைப் பற்றி?” இவள் கிசுகிசுப்பாய் கேட்க

“ம்ம்ம்... எல்லாம் சாயப் பட்டறைக்கு நீ சீல் வெச்சதுக்காண்டி வந்த வினை. ஆனா இந்த வேந்தன் யாருன்னு அவிங்களுக்குத் தெரியல” இவன் மீசையை முறுக்க

கணவன் இருக்க பயமேன் என்ற எண்ணத்தில் அமைதியானவள் கூடவே என்றும் இல்லாமல் இன்று கணவனின் அருகாமை கிடைத்திருக்க, அதை உள்ளூர உவகையுடன் அனுபவிக்க ஆரம்பித்தாள் தென்றல்.

“என்ன இன்ஸ்பெக்டர், நீங்க தேடி வந்தது கெடைச்சுருச்சா?” லஞ்சப் பணம் கிடைக்காமல் தொங்கிய முகத்துடன் வந்து நின்ற அதிகாரியிடம் இவன் கேட்க

“சாரி சார்... சாரி மேம்... wrong information போல”

“ஹா... ஹா... தப்பான தகவலா? நீங்க வெளையாண்ட ஆட்டம் எல்லாம் சரிதேன். என்ன, அதை நீங்க இந்த மதிவேந்தன்ட்ட வெளையாண்டதுதேன் தப்பு. போய்ச் சொல்லுங்க ஒங்கள இங்கன ஏவுன அம்புட்ட... மேடம் வீட்ல நீங்க வெச்சதா சொன்ன லஞ்சப் பணம் கெடைக்கலன்னு” சிரிப்பில் ஆரம்பித்தவன் இறுதியாய் அந்த காவலனை உறுத்து விழித்த படி பல்லைக் கடிக்க, வந்தவர்களோ விட்டால் போதும் என்று சென்று விட்டார்கள்.

அதில் களைந்தவள் “வீட்டில் கார் இருக்கான்னு கேட்டியே, அப்போ கார் இருக்கானு தெரிஞ்சிக்க வந்த நீ பிறகு எதற்கு மாமா உன் ஆளா காம்பவுண்ட் சுவர் பக்கம் இருக்க வைத்த?” தென்றல் தெரிந்தும் கொள்ளும் ஆர்வத்தில் கேட்க

“அது ஒண்ணுமில்ல… அவிங்க, கார் மட்டும்னு யோசிக்காம வீட்டில் வேற எங்கனயாவது வெச்சிருந்தா? ஆனா கார்லதேன்னு தகவல் வந்ததாலதேன் முதலில் அதில் தேடுனேன்... கெடைச்சிருச்சு”

கணவன் பதிலில், உள்ளம் அமைதியாக “ம்ம்ம்... அப்போ என் கூட ரொமான்ஸ் செய்ய நீ வரலையா?” இவள் கணவனிடம் ஓரப் பார்வையில் கிறக்கமா கேட்க

அதில் மந்தகாசமாய் மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், “கலெக்டர் அம்மாவுக்கு ஏன் தான் இப்படி எல்லாம் புத்தி போகுதுன்னு தெரியல” என்றபடி ஒருவித விலகலுடன் எழுந்தவன், “சரி கெளம்பு, செத்த வெளியே போய்ட்டு வரலாம்” என்றபடி இவன் முன்னே நடக்க

கணவனின் விலகலில், “யோவ் மாமா, கல்யாணத்துக்கு முன்ன பச்சு பச்சுன்னு கேட்காமலே முத்தம் கொடுத்த... இப்போ உரிமையா நான் இருந்தும் நீ செய்யறது எல்லாம் அநியாயம் யா” என்று பல்லைக் கடித்தவள் கணவனுக்குப் பழிப்பு காட்டி விட்டு காலால் தரையை நங்... நங்.. என்று மிதித்த படி அவனுடன் கிளம்பினாள் தென்றல்.

வேந்தன் மனைவியை அழைத்துக் கொண்டு வந்த இடம் ஐயாரு வீடாய் இருக்க, அவரும் வாசலிலே அமர்ந்திருக்க, அவரிடம் வந்தவன், “எது… இவ ஒங்க வீட்டுப் பொண்ணுங்கறது எல்லாம் மறந்துட்டீய போல... என் பொஞ்சாதிங்குற ஒரே காரணத்துக்காண்டி அந்த MLAவோட சேர்ந்து இவள மாட்டி விட முடிவு செஞ்சிருக்கீய இல்ல? அந்தளவுக்கு சாதி வெறி புடிச்சு ஆட்டுது ஒங்கள.

ஒங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணுனாலே நான் விடமாட்டன்னு சொன்னவன். என் பொஞ்சாதிக்கு ஒன்னுனா சும்மா விட்ருவனா? இனிமேலாச்சும் ஒண்ணு யாவகத்துல வச்சிக்கிடுங்க... நீங்க மோதுறது கலெக்டர்ட்ட இல்ல இந்த மதிவேந்தன்ட்டதேன்னு. இனி இதுபோல நடந்தது… இந்த வேந்தன் இது போல சும்மா பேசிட்டு இருக்க மாட்டான் சொல்லிட்டேன்” என்ற எச்சரிக்கையுடன் இவன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்ப

சீரும் பாம்பாய் மாறிப் போனார் ஐயாரு. உண்மை தான்… வேந்தன் சொன்னது போல் சாயப்பட்டறை விஷயத்தில் அந்த பினாமி ஆட்களோடு சேர்ந்து இவர் செய்த சதி தான் தென்றல் லஞ்ச விஷயம். அதிலிருந்து மனைவியைக் காப்பாற்றியதும் இல்லாமல் இப்போது வேந்தன் எச்சரித்து விட்டுச் செல்லவும், இன்னும் சீற்றம் கொண்டார் அவர். ஆனால் இந்த விஷயம் தெரிந்தவன் காளி என்பதால் இவர் சீற்றம் பக்கத்திலிருந்த அவனிடம் திரும்ப...

“என்னலே, கூடயிருந்தே எட்டப்பன் வேலை பாக்குதியா? இந்த விசயம் ஒன்னையத் தாண்டி வேற யாருக்குலே தெரியும்? நெசத்தச் சொல்லுலே” இவர் சீர

முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல், “ஆமா, நான்தேன் சொன்னேன். ஆனா நீங்க சொன்ன எட்டப்பன் சோலி பாக்கல. நன்றிக் கடன்... வேந்தன் எனக்கு செஞ்ச உதவிக்காண்டி அவனுக்கு ஒரு நல்லது செஞ்சேன். என்னைய அவன் புடிச்சிக் குடுத்து, நான் செயிலுக்குப் போனாலும் என் பிள்ளைக் குட்டிங்க கஷ்டப்பட்டப்போ அவன்தேன் பாத்துக்கிட்டான். ஆனா என்னைய எப்போதும் ஒங்க சாதிப் பயல் ஒங்க சாதிப் பயல்னு சொன்ன நீங்க எதுவும் என் குடும்பத்துக்கு செய்யல.

நான் தப்பு செஞ்சிருந்தாலும் திருந்துன பொறவு என்னைய கேஸ்லயிருந்து எப்படி வெளியே எடுக்க முடியும்னு பாத்து அவன்தேன் செஞ்சான். சும்மா ஒங்க சாதின்னு நெஞ்ச நிமித்திகிட்டு திரியாதியும். மொதல்ல அவனப் போல நல்ல மனுசனா இருக்கப் பாருங்க” என்ற அறிவுரையுடன் அந்த இடத்தை விட்டு அகன்றான் காளி.

உண்மையில் அவன் சொன்னது போல் அவனுக்கும் அவன் குடும்பத்திற்க்கும் சகலமும் செய்தது மதிவேந்தன் தான்.

கோவில் திருவிழாவின் போது ஒரு பிரச்சனையில் காளியை வேந்தன் போலீஸில் பிடித்துக் கொடுக்க, ஐயாரு தன் சாதிப் பயல் என்று அப்போது எகிறியவர், அவனைப் பிறகு மறந்து போக, காளி நல்லவனாய் மாறியதும் வேந்தன் தான் அவனை வெளியே எடுத்தான். அவனுக்கு நன்றிக் கடனாய் ஐயாருக்கும் அந்த பினாமி ஆளுக்கும் வலது கையாய் இருந்து, இன்று தென்றல் விஷயம் வரை அனைத்து தகவல்களையும் வேந்தனிடம் சொல்லி அவனுக்குத் துணையாய் இருந்தவன் காளி. இனியும் அவனுடனே இருப்பான் காளி.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 37
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN