சாதி மல்லிப் பூச்சரமே !!! 40

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 40

கிராமங்களில் தவழும் சுத்தமான காற்றை சுவாசித்த படி... இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்வு கிடைப்பது எல்லாம் சொர்க்கம். பகட்டாய் பழகாமல் மற்றவர்களின் குணாதிசயத்தை ஏற்று வாழும் மக்கள் எல்லாம் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே போய் விட்டார்கள். உறவுகளின் அருமை, தங்கள் கவுரவதிற்கான முதலிடம், உண்ணும் அன்னத்தை தெய்வமாய் மதிப்பது, பாசத்தில் கூடு கட்டி வாழ்வது இப்படிப் பட்ட வாழ்வு எல்லாம் இன்னும் கிராமப்புறங்களில் கிடைக்கத் தான் செய்கிறது.

இப்படி ஒரு வாழ்வுக்காக நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ஏங்குவதும் இவ்வாழ்வை பெற்றவர்கள் அதன் அருமை தெரியாமல் பட்டணத்து பகட்டில் மயங்கி ஓடுவது இயல்பு தானே?

அப்படி ஒரு பகட்டு வாழ்வைத் தேடி நரேன் ஓட ஆரம்பித்தவன், மூச்சிறைக்க அவன் நின்றது என்னமோ marine enginer என்ற பதவியுடன் கப்பலில் ஆறு மாதம், நிலத்தில் ஆறு மாதம் என்ற நிலையில் தான்.

பகட்டின் மேல் உள்ள மோகத்தில் திரிந்தவனுக்கு யாருக்கும் கை கட்டி பதில் சொல்லாமல் நினைத்ததை சாப்பிட்டு நினைத்ததை உடுத்தி பூலோக ரம்பைகளின் உரசல்களில் வாழும் இந்த வாழ்வு ஏனோ அவனுக்குப் பிடித்து தான் இருந்து. எல்லாம் வழமை போல ஆரம்பத்தில் காணாதவன் கண்டது போல ஆவென்று வாய் பிளந்து நிற்கும் வரை தான்.

பிறகு மனதில் ஒரு வெறுமை எழ, ‘ச்சீ! இந்த வாழ்வுக்கா இவ்வளவு தூரம் ஒடி வந்தோம்?’ என்று அவனை நினைக்க வைத்தது என்னமோ உண்மை தான். குடும்ப சூழ்நிலையால் உறவுகளைப் பிரிந்து கட்டாயந்தின் பேரில் வெளிநாடு செல்வது வேறு. ஆனால் இப்படி அதன் மேலுள்ள மோகத்தில் சென்ற நிறைய பேரின் நிலை என்னமோ நரேனின் நிலையாகத் தான் இருக்கும்.

இதே குழப்பத்தில் இருந்தவனுக்கு அடுத்த ஆறு மாத கால அட்டவணைப் படி தன் சொந்த மண்ணில் வசிக்க வந்த நேரம்... சாமந்தி மேல் அவனுக்கு காதல் வந்தது தான் அதிசயத்திலும் அதிசயம். உறவுகளோடு வாழ்ந்தவனுக்கு அதே உறவுகளுக்காக ஏங்குவது இயல்பு. ஆனால் பல நாட்டு பெண்களைக் கண்ணாடி உடையில் கண்டவனுக்கு, சாமந்தி மேல் வந்த காதலைத் தான் விதி என்பதோ?

அப்படி வந்த காதலைக் கூட முதலில் சாமந்தியிடம் தெரிவிக்காமல் அவளுக்கு எல்லா வகையிலும் துணையாக இருக்கும் வேந்தனிடம் இவன் தெரிவிக்க....

“எப்டிலே இது ஒத்து வரும்? நீ மெத்த படிச்சிட்டு எப்போம் பாரு வெளிநாட்டு கலச்சாரத்தோட சுத்திட்டு கெடக்க. ஆனா சாமந்தி மழைக்காண்டி கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத பொண்ணு. எப்டி சரிப்பட்டு வரும்? இப்போ தெய்வீக காதல்னு வசனம் பேசிட்டு, பொறவு ஒன் சேக்காலிங்களுக்கு கூட அறிமுகப் படுத்த தயங்கப் போகுத. பொறவு அந்தப் பொண்ணு ஏன் தேன் ஒன் வாழ்க்கையில் வந்தான்னு வாழ்கை மேலயே ஒனக்கு வெறுப்பு வந்துரும்.

இது வேணாம்... இன்னொன்னு, இது நெலையான காதல்னு சொல்ல முடியாது. தோ இப்பவே கப்பல்ல வேலைன்னு குதிச்சிட்டு போனவன் அதே எத்தன நாள்ல அந்த வாழ்க்கை மேல சுருதியே இல்லாம வந்து நிக்க... அதனால தேன் சொல்லுதேன், போய் பொழப்ப பாரு... சின்னப் பிள்ளள சாமந்தி. அந்தப் பிள்ள மனசுல எதையும் வெதச்சுராத... போ போ” இது தான் வேந்தனின் பதிலாக இருந்தது.

ஆனால் நரேனின் காதலோ உண்மையிலேயே தெய்வீக காதலாகத் தான் இருந்தது.... எங்கும் எல்லா இடத்திலும் சாமந்தி மட்டுமே அவன் கருத்தில் நிறைந்து இருந்தாள். மறுமுறை கிராமத்திற்கு வந்தவன் நேரடியாகவே இவன் காதலை சாமந்தியிடம் சொல்லி விட

அறியா பெண் இல்லையா? முதலில் இவன் பகட்டு வாழ்வுக்குப் பயந்தவள், பின் இவன் உறுதியைப் பார்த்து மிரண்டு, இவனுக்கு கிடுக்குப் பிடி போட நினைத்தவள், இதே மண்ணில் வாழ்ந்து விவசாயம் செய்யும் ஒருவனைத் தான் தான் கட்டிக் கொள்வேன் என்று இவள் சொல்ல

அதற்கும் மண்டையை மண்டையை ஆட்டினான் இந்த காதல் தீவிரவாதி. அதில் மயங்கிய இந்த பேதைப் பெண்ணும் அவன் காதலை ஏற்றுக் கொள்ள, யாருக்கும் தெரியாமல் காதல் வானில் சிறகடித்துப் பறந்தார்கள் இந்த காதல் ஜோடிகள். விளைவு, கலையரசனின் உறவுகளில் ஒருவனிடம் இவர்கள் சிக்கி விட, இருவரும் வேற்று ஜாதியினர் என்பதால், இரண்டு ஊரும் கலவரமானது.

வேந்தன் இரண்டு நாள் வெளியூர் சென்றிருந்தவன், திரும்ப வரும் வழியில் தான் இதை அறிந்தான் அவன். இவன் பண்ணை வீட்டுக்கு வர, இவன் வீடோ சில போலீஸ் மற்றும் அடியாட்களுடன் பலத்தப் பாதுகாப்பில் இருந்தது. பார்த்ததும் போலீஸ் தென்றல் உத்தரவின் படியும், அடியாட்கள் மாமன் கந்தமாறனின் உத்தரவின் படி இருக்கிறார்கள் என்பது புரிந்தது அவனுக்கு.

இவன் உள்ளே நுழைய, அங்கு தர்மா, அவன் மனைவி, சாமந்தி, அவள் பாட்டி, தங்கை, அங்கை, நவீன் மற்றும் இவன் குடும்பத்தார் அனைவரும் குழப்பத்துடனும் சோகத்துடனும் அமர்ந்திருந்தனர். இவனைப் கண்டதும் “வேந்தா!” என்று குரலெடுத்த படி ஓடி வந்த அங்கை இவனைக் கட்டிக் கொண்டு, “என் புள்ளைய அந்தப் படுபாவி என்ன செஞ்சான்னு தெரியலையே... பசிதாங்காத... என் புள்ள எங்க சோறு தண்ணி இல்லாம கெடக்கானோ? இல்லனா... இல்லனா...” மேற்கொண்டு சொல்ல முடியாமல் அவர் உடல் நடுங்கவும்

ஆதரவாய் அவரை அனைத்துக் கொண்டவன், “சித்தி, பாயப்படாதீய. அப்டி எதுவும் இருக்காது. அதேன் நான் வந்துட்டேன் இல்ல? சீக்கிரம் நரேன தேடிக் கண்டுபுடிச்சி கூப்டுட்டு வருதேன். தைரியமா இருங்க சித்தி” என்று இவன் அவரைத் தேற்ற

“ஒன்னையத்தேன்யா நம்பியிருக்குதேன்” அந்தப் பெண்மணி அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து கதற…

தாமரையும், கந்தமாறனும் வந்து அவரைத் தாங்கிக் கொண்டார்கள். வீட்டின் சூழ்நிலை புரிந்திருந்தாலும் முழுமையாய் என்னவென்று தெரிந்து கொள்ள இவன் அங்கிருந்த மனைவியிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க

முதலில் மகனின் காதல் தெரிந்ததும் கலையரசன் தாம் தூம் என்று மகனிடம் குதிக்க, அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் தன் காதலில் உறுதியாக நின்றான் நரேன். இதில், இந்தனை வருடம் வாயே திறக்காத அங்கை கூட மகனின் காதலுக்குத் துணையாகப் பேசவும், இன்னும் வெறி கொண்டு ஆடினார்.கலையரசன். என்ன ஆனாலும் தன் சாதி தான் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தவர், தன் வீட்டு ஆட்களிடம் சொல்லி, இரண்டு ஊர் பிரச்சனையாய் இதை மாற்றி, சாமந்தியைப் போட்டுத் தள்ள நினைக்க,

இவர்களின் சாதி வெறியை முன்பே பார்த்து அறிந்திருந்த தென்றல் சாமந்தியையும் அவள் குடும்பத்தாரையும் பாதுகாப்பாய் ஒரு இடத்தில் வைக்க, அதில் கட்டுக்கடங்காத கோபத்தில் அவர்கள் நரேனைக் கடத்தி விட, எங்கு தேடியும் அவன் கிடக்காததால் தான் இப்போது குடும்பமே சோகத்தில் முழ்கியிருப்பதாக தென்றல் அனைத்தையும் சொல்லி முடித்ததும்...

அதே நேரம் “எல்லாம் என் மேல தான் தப்பு. என்னய மன்னிச்சிடுங்க மச்சான். நான் இந்த ஊர விட்டே போய்டறேன். அவர எப்டியாவது காப்பாத்திக் குடுத்துடுங்க” சாமந்தி வேந்தன் காலில் விழுந்து கெஞ்ச

சங்கடத்துடன் இவன் மனைவியைப் பார்க்க, தென்றல் அவளைப் பிடித்துத் தூக்கி தன் தோள் சாய்த்து கொள்ளவும், “இங்க பார்லா… அவனுக்கு ஒண்ணும் நடந்துருக்காது. நான் இருக்குதேன்... விடியறத்துக்குள்ளார அவன் எங்கன இருந்தாலும் கூப்டுகிட்டு வர்றது என் பொறுப்பு” என்று இவன் தைரியமும் வாக்கும் அளிக்க

“அந்த எடுபட்ட கிறுக்கனுக்கு, புள்ளைய விட அப்டி என்ன சாதி வெறி புடிச்சிருக்கு... இப்டி புள்ளைய மறச்சு வெக்குற அளவுக்குப் போய்ட்டான். ஏன், அவனுக்கு மட்டும் தேன் கோவம் வெறி எல்லாம் வருமா? இதோ அந்த கங்கை அம்மா புண்ணியத்துல என் பிள்ள நல்ல மாதிரி வந்துரட்டும். நானே என் புள்ள ஆசப்பட்ட வாழ்க்கைய முடிச்சு வெக்குதேன்” என்றபடி அங்கை மூக்கைச் சிந்தி வீசியவர், கூடவே ஆவேசமாய் தன் கூந்தலைத் தூக்கி கொண்டையிட்ட படி,

“அடங்கி அமைதியா போனா... ஏறி மிதிக்குதான் அந்த ஆளு. எலேய் சின்னவனே(நவீன்), இப்போ சொல்லுதேன் நல்லா கேட்டுக்கோ... ஒங்க ரெண்டு பேத்துக்கும் பொஞ்சாதினா அது இந்த அக்கா தங்கச்சிதேன்...” அதாவது சாமந்தி அவள் தங்கை மரிக்கொழுந்தை சுட்டிக் காட்டியவர், “எனக்கு மருமவளுங்கனா அது இவளுங்க ரெண்டு பேத்தும்தேன்... எந்த கொம்பனுங்க அதை மாத்துதான்னு நானும் பாக்கேன்....” வாய் செத்த பூச்சியாய் இருந்த அங்கை இப்போது கணவனை எதிர்க்கத் துணிந்து விட, சபாஷ் என்று மனதிற்குள்ளே அவரை மெச்சினாள் பூந்தென்றல்.

அங்கையின் பேச்சில் மொத்த குடும்பமும் நவீனைப் பார்க்க, “என் அம்மா என்ன முடிவு எடுத்தாலும் அது எனக்கு சம்மதம் தான்” இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான் அவன்

பின் காளியிடமும் தன்க்குத் தெரிந்த சில ஆட்களிடமும் பேசிய வேந்தன் பிறகு மனைவியை மட்டும் தனியே அழைத்து, “கிட்டத்தட்ட நரேன் இருக்குத எடம் தெரிந்துருச்சி... இதுக்கு கலையரசன் சித்தப்புவும் தொணையா நிக்கறதுதேன் கஸ்டமா இருக்கு. நீ இவிங்கள பாத்துக்க. மூர்த்தி மாமாவும், மாறன் மாமாவும் கல்யாண சோலிய பாக்கட்டும். நரேன் வந்ததும் கல்யாணம்தேன்.

அங்கை சித்தி கையால எங்களுக்கு பாதுகாப்பு வேணும்னு ஒன்ட்ட கேட்டதா ஒரு மனு எழுதி வாங்கிக்கிடு… பொறவு நான் பாத்துக்கிடுறேன்..” என்றவன் பின் “நெசமா மனசார காதலிக்கிறவுகள யார் பிரிக்குறவுகனு நானும் பாக்குதேன்” என்று இவன் மீசையை முறுக்கியபடி மனைவிக்கு கட்டளையிட

கணவனை ஆழ்ந்து பார்த்தபடி, “அப்போ நாம பிரிஞ்சி இருக்கமே மாமா?” என்று இவர்களின் காதலுக்காக இவள் கேட்க

“இவ வேற!” என்று பல்லைக் கடித்தவன், “அதேன் நெசமான காதலர்கள்னு சொன்னேன் இல்ல? அப்போ நீயே புரிஞ்சிக்கிடு...” கணவனின் எகாத்தாளமான பதிலில் இவள் திரும்பிச் செல்ல எத்தனிக்க

“என்னட்டி எதுவும் சொல்லாம போகுத?” என்று இவன் கேட்க, நின்றவள்… அவனைத் திரும்பி பார்க்காமலே,

“கணவன் கொடுத்த வாக்கு நிறைவேற துணையா இருக்கறவ தான் நல்ல மனைவி... அப்படி பார்த்தா நான் நல்ல மனைவி தான்...” அவனுக்கான பதிலை இவள் மறைமுகமாக கொடுக்க, ஒரு மந்தகாச முறுவலுடன் விலகிச் சென்றான் வேந்தன்.

வேந்தன் கொடுத்த வாக்குப் படி நரேனைக் கண்டுபிடித்து அழைத்து வந்து விட, அங்கை கொடுத்த வாக்குப் படியே... ஊராரையும் கணவனையும் எதிர்த்துக் கொண்டு, தன் இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணத்தை முடித்தார் அந்த வீரத் தமிழச்சி. இங்கு எல்லோரும் ஒற்றுமையாக இருக்க… அங்கு சாதி வெறி பிடித்த கலையரசனோ தனி மரமாக தனியாக இருந்தார். அவர் வெறிக்கு தூபம் போட்ட எந்த உறவுமே இப்போது அவருடன் இல்லை. இது தான் உலகம்… இது தெரியாமல் சக மனிதர்களை வைத்துக் கொண்டு ஒரு சிலர் ஆடும் ஆட்டம் தான் என்னென்ன...

இங்கு அனைத்தும் நல்ல மாதிரி முடிய, தன்னுடைய கடமையில் இருந்த சாமந்தி, மரிக்கொழுந்து வாழ்வு சரியாகிடவும், இனி தன் வாழ்வை வாழ தர்மா தயாராகி அன்று வீடு வர… அவன் மனைவியோ அவன் கண்ணிலேயே படாமல் கண்ணாமூச்சி ஆட்டோட்டம் காட்டினாள். இவர்கள் வீட்டில் இருப்பதோ ஒரு பெட்ரூம், ஒரு சின்ன கிச்சன், ஹால். இதையே அவன் எத்தனை முறை சுற்றி வந்து தேடுவான்?

“அடி போடி…” என்று இவன் கலைத்துப் போய் சோபாவில் அமர, அவன் கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வரவும், அதை எடுத்துப் பார்க்கையில், ‘சார், வீடு முழுக்க உங்க மனையாளைத் தேடினீங்களே... மொட்டைமாடிக்கு வந்தீங்களா?” என்று மனைவி குறுந்தகவல் அனுப்பியிருக்க... அதைப் பார்த்தவன், “யாஹ்ஹூ!” என்ற கூச்சலுடன் இவன் படியேறி இரண்டு மாடி தாண்டி மொட்டைமாடி செல்ல... அங்கு அழகு ஓவியமாய்... தலை நிறைய பூ வைத்துப் பட்டுப் புடவையில் புதுப் பொன்னாய் நின்றிருந்தாள் அழகி.

இவன் உல்லாசமாய் மனைவியை நெருங்கியவன் தன்னவளைப் பின்னாலிருந்து அணைத்தபடி, “அந்த வானத்து நிலவுக்குப் போட்டியா என் நிலவு என்ன இப்படி ஜொலிக்கிது...” என்று சரசமாய் மனைவியின் காது மடலை உரசியபடி இவன் கேட்க

அதில் உடல் சிலிர்த்தவள், “எல்லாம் மன்னவன் வருகைக்காக தான்” என்று இவளும் மயக்கமாய் சொல்ல

“அது எப்படி இன்று நான் இந்த மூடுல தான் வரவேன்னு உனக்குத் தெரியும்?” என்று இவன் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க

“காலையில இருந்து உங்க பார்வை எனக்குத் தெரியாதா? அதிலும் ஈவினிங் எப்போ வருவன்னு நீங்க என்கிட்ட கேட்ட போதே எனக்குத் தெரிஞ்சிடுச்சி... உங்க கேள்வி எதுக்குன்னு”

தன் வார்த்தையை வைத்தே தன்னைப் புரிந்து கொள்ளும் மனைவியின் காதலில் கரைந்தவனாக... அவளைத் தன் பக்கம் திருப்பி இருக்க அணைத்துக் கொண்டவன், “வா கீழே போகலாம்” என்று அழைக்க

“நம்ம டீல் உங்களுக்கு மறந்து போச்சா... நான் எங்க இருக்கனோ அங்கயிருந்து நம்ம பெட் ரூமுக்குத் தூக்கிட்டுப் போகணும் என்றது தான் அந்த டீல். அதற்க்காகத் தான் இந்த நேரத்துல யாரும் மொட்டைமாடியில இருக்க மாட்டாங்கன்னு தெரிந்து தான் நான் இங்கு வந்திருக்கேன்.... தூக்கிட்டுப் போங்க மாமா” என்று அவள் காதலோடு சிணுங்கலாய் சொல்ல

தன்னவளின் மாமாவில் சிலிர்த்தவனோ... அவள் கேட்ட படியே இவன் மனைவியைக் கையில் ஏந்திக் கொள்ள, கணவனின் கழுத்தில் தன் கையை மாலையாய் இட்டு மேற்கொண்டு அவன் முன்னேற, தன் சம்மதத்தைக் கணவனுக்குத் தந்தாள் நிலவழகி. அறைக்கு வந்து தங்களுக்கான வாழ்வை காதலோடு ஆரம்பிக்க... முடிவில் அழகி கணவன் மார்பிலேயே தலை சாய்க்க... தன்னவளின் கேசத்தை வருடியவனோ, “மூன், கொஞ்ச நாள் நாம டார்ஜிலிங் போய் வரலாமா?” என்று தர்மன் கேட்க

கணவனின் ஹனி மூன் ஆசையைப் புரிந்து கொண்டவளாக, “ம்ம்ம்... போகலாம்... ஆனா டார்ஜிலிங் வேணாம்... ஏற்காடு போய் வரலாமா?” இவள் அந்த இடம் தான் தனக்கு ஆசை என்பது போல் சொல்ல

வசதிவாய்ப்பில் கோடீஸ்வரியாய் பிறந்து வளர்ந்தாலும்... தன்னுடைய வருமானத்திற்கு எற்ற படி அவள் ஒவ்வொரு முறையும் நடந்து கொள்வதைப் போல் இப்போதும் மனைவி தனக்காகப் பார்த்து பேசவும், அதில் அகமகிழ்ந்தவனாக காதல் பொங்க தன்னவளின் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் காதலோடு முத்தமிட்டவனோ, “தாங்க்ஸ் டி” என்க

“உங்க தாங்க்ஸ் எனக்கு வேணாம்.. அதிலும் இப்படி வேணாம்” என்று பொய்யாக ரோஷத்துடன் சொன்னவள்... அவனுக்கு அது எப்படி என்று இவள் சொல்லித் தர, இதோ… அழகி தன் தாயிடம் சொன்னது போல் நூற்றாண்டு காலம் வாழ, இவர்கள் வாழ்க்கைப் பயணம் அன்பு காதலுடன் துவங்கி விட்டது. கணவன் சற்று முன் சொல்லி கொடுத்த பாடத்தையே… அவனுக்கு வேண்டிய வகையில் சொல்லி கொடுத்தால் அழகி… அவர்கள் வாழ்வில் இனி என்றும் இன்பம் தான்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 40
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN