சாதி மல்லிப் பூச்சரமே !!! 33

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 33

அவன் சொன்னது போல் முகம் அலம்பச் சென்றவளின் மனதில் ஒரே ஒரு வினாடி பெண்களுக்கே உள்ள பாதுகாப்பு நிலையில் இவனை நம்பிச் சொல்லலாமா என்று தோன்றத்தான் செய்தது. ஆனால் அடுத்த நொடி உன் பிரச்னையைத் தீர்க்காமல் என்னால் தூங்க முடியாது என்று அவன் சொன்ன வார்த்தைகள் நினைவு வர, ஒரு முடிவுடன் அனைத்தையும் அவனிடம் கொட்டினாள் அழகி.

அழகி, திருநெல்வேலி டவுனில் உள்ள புகழ் பெற்ற தனியார் கல்லூரியில் தான் மருத்துவம் படிக்கிறாள். தற்போது இறுதியாண்டு பயிற்சியில் இருக்கிறாள். அவள் கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியர் ஒருவன் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் பெண்களின் குளியல் அறையில் அங்கு வேலை செய்யும் ஒருவரின் துணையோடு கைப்பேசியை வைத்தவன், அதில் பதிவாகும் பெண்களின் அந்தரங்கத்தைக் கண்டு ரசிக்க, இதை எப்படியோ தெரிந்து கொண்ட நிலவழகியின் தோழிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுதி நிர்வாகியிடம் சொல்ல, அவனோ அந்த காமுக பேராசியருக்குத் தகவலைச் சொல்லி விட, இவனோ கல்லூரித் தலைமைக்குச் சென்றால், காணொலிகளை வலைத்தளத்தில் பரவ விடுவதாக மிரட்ட...

ஆண் பெண் உடலைப் பேதமின்றி கூறு போடும் துறையில் இருக்கும் அழகிக்கோ அவள் தோழிகளுக்கோ இது ஏதோ அசிங்கமான விஷயம் என்றோ தன் உடலைத் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஒருவன் கண்டு விட்டால், ஏதோ நம் உடல் வெளித்தோற்றத்தில் தான் கற்பு இருப்பதாக நினைத்து மனம் உடைந்து துவளவோ சாகவோ யாரும் முடிவு எடுக்கவில்லை. எதுவாக இருந்தாலும் அவனைச் சந்திக்க அழகி முதற்கொண்டு அனைவரும் தாயாராகத் தான் இருந்தார்கள். ஆனாலும் இதில் சில பெண்கள் வீட்டில் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பயப்படத் தான் செய்தார்கள்.

இது தான் பெண்ணைப் பெற்றவர்கள் செய்யும் தவறு. பெண்ணின் உடல் அமைப்பில் தான் கற்பு இருப்பது போலவும் அதைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர, அதை சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தருவதில்லை. ஒரு பெண்ணின் உடலை அவள் அனுமதி இல்லாமல் யாரோ ஒரு ஆண் பார்த்து விட்டால், ஏதோ நடக்கக் கூடாத அசிங்கம் தங்கள் வாழ்வில் நடந்ததாகவும், தங்கள் குடும்ப கவுரவமே அழிந்ததாக பிதற்றி, மனம் உடைந்து தற்கொலை வரை செல்வது சகஜமாகிவிட்டது.

ஆனால் பாதிக்கப்பட்ட தங்கள் பெண்ணிடம், நாங்கள் இருக்கிறோம், இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று தோள் கொடுத்துப் பாருங்கள். பின் இப்படிப் பட்ட கயவர்களின் செயல்களையும் அவர்களையும் தூள் தூள் ஆக்கலாம்.

நாம் பிறக்கும்போது சந்தர்ப்ப சூழ்நிலையால் நம் தாய்க்கு பிரசவம் பார்ப்பதும் சில நேரத்தில் ஆண் மருத்துவர்கள் தான். பின் உடலில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை செய்வதும் சில ஆண்கள் தான். நாம் வயது பேதமின்றி இறக்கும்போது நம் உடலில் போர்த்தி உள்ள ஆடையை விலக்கி இறுதி யாத்திரைக்கு நம்மை அனுப்புவதும் ஒரு ஆண் தான். பின் இடையில் இப்படிப் பட்ட கயவர்களுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?

இதை ஒவ்வொரு தாய் தந்தையரும் தன் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நம் கடமைதானே? இதையெல்லாம் உணர்ந்து இருந்ததால் சிலர் தைரியமாக இருக்க, மேல்தட்டு மக்களாக இருந்தாலும் சிலர் வீட்டுக்குப் பயப்பட, இறுதியில் கல்லூரி நிர்வாகத்திற்கு விஷயம் கொண்டு செல்வதை இவர்கள் நிறுத்தி விட, அந்தக் கயவனுக்கு அதுவே வெற்றியாகிப் போக, வலைத்தளங்களில் பரவாமல் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பெண் பிள்ளைகளை அவன் படுக்கைக்கு அழைக்க, அதில் ஒருத்தி எதிர்த்துக் கேட்டதில் இப்போது அவளுடைய புகைப்படம் வலைத்தளத்தில் உலவுகிறது. இதோ தற்போது அவனுடைய அடுத்த குறி அழகி. அவள் எதுக்கும் துணிந்திருந்தாலும் வீட்டின் கவுரவத்திற்கும், தாய் தந்தையருக்கும் பயந்து தான் போனாள் அந்த துணிவு மிக்க டாக்டர்!

இது தான் அழகியின் பிரச்சனை. இது சம்பந்தமாக மதிவேந்தனிடம் சொன்னால் அனைத்து உதவியும் செய்வான். ஆனால் அவனை வீட்டை விட்டு துரத்திய பிறகு அவனுக்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத அழகிக்கு அவனிடம் உதவிக்கு போய் நிற்க மனம் இல்லை. அதனால் தான் இப்படி ஒரு முடிவு. ஆயிரம் தான் படித்திருந்தாலும் சந்திரமண்டலத்திலேயே பெண்கள் கால் பதித்தாலும் இப்படி ஒரு சூழ்நிலையில் பெண்கள் எடுக்கும் முடிவு இதுவாகத் தான் இருக்கிறது.

அனைத்தையும் கேட்டவன் கழுத்து நரம்பு புடைக்க, “இதுக்காகத் தான் உசுர விடப் பார்த்தியா? எல்லா பெண்களும் சேர்ந்து அவன் இருக்கிற இடத்துக்குப் போய் அவன நாலு மிதி மிதிச்சு அவன் கையில் இருக்கிறதை அழிச்சிட்டு வர்றத விட்டுட்டு இங்க வந்து சாகறாளாம்! இந்தா… இது என்னுடைய விசிட்டிங் கார்ட். அதுல இருக்கற பெர்சனல் நம்பருக்கு அவனப் பத்திய டீடெய்ல்ஸ் அனுப்பு. மீதிய நான் பார்த்துக்கிறேன். அவனுக்கு இருக்கு கச்சேரி. நீ வீட்டுக்குப் போ” இவன் உரிமையாய் அதட்டி உருட்டி அவளை சமாதனப்படுத்த

சொல்லி முடித்த பிறகும் இவனிடம் சொன்னது சரியோ இவனால் சரி செய்ய முடியுமா.. என்ற குழப்பத்திலே நின்றிருந்தாள் அழகி. அவள் முகத்தில் குழப்பத்தையும் கவலையும் கண்டவனுக்கு ஒரு காதலனாய் அவளை அணைத்து ஆறுதல் படுத்த துடித்தது தர்மனுக்கு. ஆனால் அதை செய்ய முடியாதே?

அவளுடைய குழப்பத்தை தவறாக யூகித்தவன், “எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. என்கிட்ட சொல்லிட்ட இல்ல? நான் பார்த்துக்கிறேன். போலீஸ் டிபார்ட்மெண்ட்ல எனக்கு தெரிந்த சைபர் கிரைம் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். எதுவும் வெளியே வராம அவனை வைத்து நான் முடிக்கிறேன். அந்த ஃப்ரொபசருக்கும் பாடம் கற்பிக்கிறேன். உன் ஃபிரண்ட்ஸ் கிட்ட சொல்லி அவங்களையும் நிம்மதியா இருக்கச் சொல்லு” அவன் குரலில் நான் செய்வேன் என்ற உறுதி இருந்தது. அதிலும் உனக்காக எதையும் செய்வேன் என்ற உறுதியைப் பார்த்தவள்

இவனையா சந்தேகப்பட்டோம் என்ற ரீதியில் இவள் அவன் முகத்தையே கண் சிமிட்டாமல் பார்க்க

தானாக அவள் புறம் எழுந்த கையை சிரமப்பட்டு அடக்கியவன், “என்னடா மா?” என்று இவன் குழைவாகக் கேட்க

தன்னிலையில் இருந்து சுதாரித்தவள், “இவன்ட்ட இருந்து காப்பத்துறேனு சொல்லிட்டு நாளைக்கு இதையே சாக்கா வச்சிகிட்டு.. நீயும் அவனை மாதிரி நடந்துக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?” இவன் நைந்து கேட்டான் என்று அனைத்தையும் சொல்லி விட்டோமே என்று தன் மேலுள்ள கோபத்தில் இவள் வார்த்தையைக் கொட்ட

அவளைத் தீர்க்கமாக ஆழ்ந்து பார்த்தவன், “இதை வெச்சு தான் நான் உன்னை நெருங்கனும்னு இல்ல. எனக்கு அது தான் வேணும்னா, எந்த நிமிஷமும் உன்னைய அரிசி மூட்டையத் தூக்கிட்டுப் போற மாதிரி உன்னையத் தூக்கிட்டு போய்ட்டே இருப்பேன். ஆனா எனக்கு...” என்று அவன் நிறுத்த

‘ஐயோ!’ அழகிக்கு தான் என்னமோ போல் ஆனது. ‘ஒழுங்கா இருக்கறவன் கிட்ட நானே ஐடியா குடுத்துடுவேன் போலவே’ என்ற எண்ணத்துடன் இவள் விலக நினைக்க, அதே நேரம் அவன் கைப்பேசி

“உன்னப் பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி

கண்ணப் பார்த்த வேகத்துல என்ன மறந்து போனதடி
காலம் தெரியல அம்மாடி
நேரம் தெரியல
இப்போது தனித்து படுக்கவும்
நினச்சு துடிக்கவும்

எனக்கு தான் முடியல ஆஆஅ.....”

என்ற பாடல் இசைக்கவும் விழிகள் விரிய அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் நின்றாள் அழகி. இந்தப் பாடலை அவள் தோட்டம், துரவு, கழனி என்று உலாவும் போது எல்லாம் கேட்டிருக்கிறாள். ஆனால் இது இவன் கைப்பேசியிலிருந்து இசைத்ததா!

அவளின் ஆச்சரியம் கலந்த முகத்தைப் பார்த்தவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி, “என்ன நிலா?” என்று இவன் சாதரணமாகக் கேட்க

“ஆங்... நீங்க அவன் விபரம் கேட்டீங்க. உங்க நம்பர் தந்தீங்க… ஆனா என் நம்பரை கேட்கல நீங்க” ஞாபகம் வந்தவளாய் இவள் சொல்ல

“உன் நம்பர் என் கிட்ட இருக்கு. நீ வீட்டுக்குப் போனதும் மெசேஜ் இருக்கும் பார்” இவன் ஒரு கோணல் சிரிப்புடன் சொல்ல, ‘இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போலவே’ என்ற எண்ணத்துடன் அங்கிருந்து விலகினாள் அழகி. செல்லும் அவள் மனதில் எல்லாம் எழுந்த ஒரே கேள்வி மதிவேந்தனின் நண்பன் என்பதைத் தவிர வேறு எந்த நம்பிக்கையில் சகலத்தையும் அவன் கேட்டதும் சொன்னேன் என்பது தான் அது.

விலகிச் செல்லும் அழகியையே அவளின் பிம்பம் தன் கண் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் தர்மா. திடீரென அவன் தோளில் ஒரு கை படரவும், நண்பன் தான் என்பதை அறிந்து கொண்டவன், “எல்லாத்தையும் கேட்டியா வேந்தா?” என்று இவன் கேட்க

“ம்ம்ம்... நிச்சயம் அவனை விடக் கூடாது டே... ஒரு கை பாத்துருவோம். ஆனா... அழகி இத என்ட்ட கூட சொல்லாம எதுக்கு இப்டி ஒரு முடிவை எடுக்கணும்?” மதி வேந்தனுக்கு அப்போ இவளுக்கும் நான் யாரோ தான என்ற கவலை வந்தது.

“பெண்களுக்கே உள்ள தயக்கமும் பயம் தான் டா”

“இருந்தாலும்...” என்று சமாதானம் ஆனவன் “சரி, நீ அழகிய கடைசிவரைக்கும் நல்லா பாத்துக்கிடுவ இல்ல?” நண்பனின் காதலை அறிந்ததால் அதற்கு தனக்கு முழு சம்மதம் என்ற பெயரில் இவன் கேட்க

அடுத்த நொடி சந்தோஷத்தில் நண்பனை ஒரு முறை அணைத்து விடுவித்தவன், “அவளும் சம்மதம்னு மட்டும் சொல்லட்டும்... அப்புறம் எப்படி பார்த்துக்கிறேனு பார்லே” என்று உறுதி அளித்தான் இவன்.

வேந்தனுக்கு சிறுவயதிலிருந்தே தர்மனைத் தெரியும். ஒரே ஊரில் ஓடிப் பிடித்து விளையாடியவர்கள். தர்மனின் தாய் தந்தையர் வசதியில் சற்று குறைவானவர்களாக இருந்தாலும் நன்கு படித்தவர்கள். அதனாலேயே அவர்கள் வேலை நிமித்தமாக டவுன் பக்கம் சென்று விட்டார்கள்.

பிறகு எப்போதாவது தர்மா அவன் தாத்தா வீட்டுக்கு வரும்போது எல்லாம் இருவரின் நட்பும் இணைபிரியாமல் வளர்ந்தது. தர்மனைத் தவிர அழகியிடம் வேறு யாராவது இப்படி பேசியிருந்தால் நிச்சயம் அவர்கள் சங்கை அறுத்திருப்பான் மதிவேந்தன். நண்பனின் குணங்களை ஆதியிலிருந்து அந்தம் வரை தெரியும் என்பதால் அழகிக்கு இந்த வாழ்வு கிடைக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

தர்மன் வேற்று இனத்தவனாய் இருந்தாலும் அழகிக்கு இதில் விருப்பம் என்றால் யார் தடுத்தாலும் இருவரின் திருமணத்தை நடத்த விழைந்தான் அவன். அவன் மட்டுமா? அழகி மட்டும் தன் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டால், வருகின்ற பிரச்சனைகளான ஏழு கடல் ஏழு மலையையும் தாண்டி தன்னவளைத் தன் கண்ணுக்குள் வைத்துப் பார்க்கத் தயாராகத் தான் இருந்தான் தர்மா.

நண்பர்கள் இருவரும் சேர்ந்து அந்தப் பேராசிரியரை மாணவிகளின் விஷயத்தை மறைத்து சட்டத்தின் பிடியில் வேறு ஒரு விஷயத்தில் கிடுக்குப் பிடி போட்டு அவனை உண்டு இல்லை என்று செய்து விட்டார்கள். அழகிக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் வேந்தன் இதில் தலையிட்டு சரி செய்தான் என்பதை நண்பர்கள் இருவரும் அவளிடம் மறைத்து விட்டார்கள்.

அழகியின் பிரச்னையைத் தீர்த்த பிறகு, ‘கவனமா இரு… இனி எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு’ என்று அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் தட்டி விட்டானே தவிர மறந்தும் அவள் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பவில்லை தர்மா.

அழகியும் சம்பிரதாயத்துக்குக் கூட அவனிடம் நன்றி சொல்லவில்லை. கூடுமானவரை அவனைத் தவிர்க்கவே அவள் விரும்பினாள். இப்படி அவனிடம் அனைத்தும் சொன்னதே அவள் இயல்பு இல்லை. அதன் பிறகு அவளுக்கு இருந்த வேலையில் அவனை மறந்தே போனாள். தோழிகள் இந்த பிரச்சனை சம்பந்தமாய் அவளிடம் நன்றி சொல்லும்போது மட்டும் அவளையும் மீறி அன்று அவன் பேசிய பேச்சும் அவனும் அவளுக்கு நினைவில் வருவான். எப்போது அவன் தன் காதலைச் சொன்னானோ அன்றிலிருந்து தனியாக அதிக நேரம் தோட்டத்தில் உலவுவதையும் தவிர்த்தாள் இவள். தர்மாவும் அவளிடம் நெருங்கவில்லை.

இப்படியாக ஒரு வருடம் செல்ல... தாய் செண்பகவல்லி ரூபத்தில் விதி அழகி வாழ்வில் சில பல பிரச்சனைகளைக் கொடுக்க, மறுமடியும் தர்மாவின் உதவியை நாடி நின்றாள் நிலவழகி.

அழகிக்குப் படிப்பு முடியும் சமயம் மேற்கொண்டு வேலைக்குச் செல்ல நினைத்தவள் அதற்கான தீவிரத் தேடலில் இறங்க, அவள் தாய் செண்பகவல்லியோ மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தார். அதிலும் முன்பே தன் அண்ணன் மகன்களில் ஒருவனை மகளுக்கு மணம் முடிக்க ஆசையில் இருந்தவருக்கு, வீட்டுக்கு வீடு வாசல் படி போல் சமீபத்தில் அவரின் பெரிய அண்ணன் மனைவியோடு அவருக்கு சண்டை ஏற்பட, அதில் குடுமிப் பிடி வரை போனார்கள் அண்ணியும் நாத்தனாரும்.

இந்த சண்டையின் உபயத்தால் தன் மகளை விட பன்னிரெண்டு வயது மூத்தவனான தன் பெரிய அண்ணன் மகனுக்கே நிலவழகியை கட்டிக் கொடுத்துத் தன் அதிகாரத்தைப் பிறந்த வீட்டில் நிலைநிறுத்த நினைத்தார் செண்பகவல்லி. அனைத்துக்கும் காரணம் சுயநலம் தான். தான் பிறந்த வீட்டில் தன் கை ஓங்க எதையும் செய்யத் துணிந்தார் அவர்.

ஆரம்பத்திலிருந்து கணவன் மூர்த்தியை அடக்கி ஆண்டதில், மகள் திருமண விஷயத்திலும் தான் எடுக்கும் முடிவே பிரதானம் என்ற முடிவில் அவர் இருக்க, கணவர் முதற்கொண்டு கணவன் வீட்டார் அனைவரையும் கட்டிப் போட்டார் செண்பகவல்லி. தன்னுடைய பாசம் என்னும் அங்குசத்தை வைத்து அண்ணனைச் சரி கட்ட, அவரும் தங்கையின் ஆசைப் படி இத்திருமணத்திற்கு சம்மதித்தார்.

மணமகளான அழகிக்குத் தகவல் சொல்லப் பட, முதலில் தாய் சொன்ன விஷயத்தை அவள் கிரகித்துக் கொள்ளவே சற்று நேரம் ஆனது. காரணம், தன் மாமன் மகனின் அதிக வயது வித்தியாசம் மட்டுமில்லை. அவனுக்கு வாலிப வயதில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட, ஓருயிர் ஈருயிராய் இருந்த அவர்கள் காதல், இடையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கவும், இவர்கள் காதல் ஜெயிக்காமல் போனது. அதில் இவன் தன்னை மறந்த குடியில் அடிமையாய் இருந்தவன், பின் தெளிந்து தனக்கான வாழ்வை மேற்கொண்டவன், இன்று ஹைதராபாத்தில் பெரிய கம்பெனியில் நல்ல வருமானத்தில் இருக்கிறான்.

அழகியைச் சிறு வயதில் தூக்கிக் கொஞ்சி விளையாடியவன். இன்று அந்த மாமனான அவரா தனக்கு கணவன்? முதலில் இந்த திருமணம் வேண்டாம் என்று மறுக்கத் தான் நினைத்தாள் அழகி. ஆனால் ஏனோ அப்படி செய்ய முடியாமல் தன்னை மாதிரியே காதலில் தோல்வியுற்ற மாமனைத் திருமணம் செய்ய சம்மதித்தாள். அதுவும் அவன் மேல் காதல் என்ற உணர்வு இல்லாமல் தான்.

எப்படியோ ஒரு நாள் பெற்றவர்கள் கை காட்டும் ஒருவரைத் தான் திருமணம் செய்ய போகிறோம். அது ஏன் மாமன் மகனான இவர் இருக்கக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு. அதிகபட்சம் நம் நாட்டில் திருமணங்கள் காதல் இல்லாமல் பெற்றோர்களால் பார்த்து தானே நடக்கிறது? அவ்வழியே இந்த திருமணத்தை ஏற்க ஆரம்பித்தாள் நிலவழகி.

மூர்த்திக்கு விருப்பம் இல்லை என்றாலும் வழக்கம் போல் செண்பகவல்லி அவரை அடக்கி விட, மகளும் முழுமனதாக சம்மதித்துவிடவும், மேற்கொண்டு திருமண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார் அவர். ஐயாருவிலிருந்து யாருக்கும் இந்த திருமணத்தில் அந்த வீட்டில் விருப்பம் இல்லை என்றாலும் செண்பகவல்லி வழக்கம் போல் தன் அசைட்டையால் தூர நிறுத்தினார் அவர்களை.

மாப்பிளைக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் என்றார்கள். ஆனால் ஒரு வார்த்தை கூட அவன் அழகியிடம் பேசவில்லை. திருமணத்திற்காக வாங்கப் போன எந்த பொருளிலும் எதிலும் அவன் கலந்து கொள்ளவும் இல்லை, தன் அபிப்ராயத்தையும் சொல்லவில்லை. ஏன்… ஊரிலிருந்து முறைப்படி அழகியைப் பெண் பார்க்கவும் வரவில்லை அவன். அழகியும் இதையெல்லாம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.

எப்போது தங்கள் சுக துக்கங்களில் அரணாய் இருந்து அனைத்திலும் தங்களைக் காத்த மதிவேந்தனைத் தங்கள் குடும்பம் எப்போது இப்படி சாதியைக் காட்டி அவனைத் துரத்தியதோ... அன்றே இந்த குடும்பத்தை விட்டுப் போனால் போதும் என்று முடிவு எடுத்து விட்டாள் நிலவழகி. ஒரு வகையில் இந்த தண்டனை அவளுக்குக் கிடைக்கக் கூடியது தான் என்ற எண்ணம் அவளுக்கு. ஆமாம்... தண்டனை தான்! அதிலும் அவள் தாய் செய்த, செய்யும் பாவத்திற்காக இவளுக்கு இவளே தண்டனை கொடுத்துக் கொள்கிறாள்.

வேந்தனின் விஷயம் தெரிந்த பிறகு அவனுக்கு எந்த உதவியையும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவளுக்கு, அவள் குற்ற உணர்வை அதிகரிப்பது போல் இன்னும் சில பல செயல்களை அவனுக்கு செய்தார் தாய் செண்பகவல்லி. மதிவேந்தனைப் பார்க்கும் போதெல்லாம் இடம் பொருள் பார்க்காமல் அவன் சாதியை வைத்து அவனை இழிவாகப் பேசுவார்.

அதற்கு அவன் அவருக்குப் பதில் கொடுத்து விடுவான் என்பது வேறு விஷயம். ஆனால் அதை அவர் இப்படி செய்வது எல்லாம் மகள் அழகி எதிரிலேயே பேச, எல்லாவற்றையும் இவள் நேருக்கு நேர் கேட்க நேரும்போது எல்லாம் உள்ளுக்குள் வலிக்கத் தான் செய்யும் அழகிக்கு. தாயை எதிர்த்துக் கேட்க முடியாமல் துடிப்பாள் அவள்.

இதற்கு எல்லாம் எதிர்வினையாக, அழகியைக் குத்திக் காட்டிப் படுத்தி எடுத்தார் செண்பகவல்லியின் அண்ணி. முகூர்த்தப் புடவை எடுக்கப் போகும்போது மணப்பெண்ணை அழைத்துச் செல்லக் கூடாது என்பது அவர்கள் வழி முறை. ஆனால் செண்பகவல்லி பிடிவாதமாய் மகளை அழைத்துச் செல்ல, கோபத்தில் யாருக்கும் தெரியாமல் அழகியை வார்த்தைகளால் சுட்டார் செண்பகவல்லியின் அண்ணி. அப்போதே இந்த திருமணம் நடக்கவேண்டும் என்ற உறுதியை எடுத்தாள் அழகி. ‘நீ வேந்தன் மச்சானை ஏசுற இல்ல.. இப்போ பார் உன் மகளை ஏசவும் ஆள் வந்தாச்சி’ என்று நினைத்தது நிலவழகி மனது.

தாய் வேந்தனை நோகடிக்க, தன்னை நோகடிக்க திருமணம் என்ற பெயரில் ஒரு வழி இருப்பதை உணர்ந்தவள், முழுவீச்சாக இந்த திருமண சடங்கில் ஈடுபட்டாள் அழகி. ஆனாலும் தன் மாமன் மகளின் வாழ்வை விட்டுக் கொடுக்க முடியாமல் வேந்தன் அவளிடம் இத்திருமணத்தைக் குறித்துப் பேச, தான் நோகடிக்கப் பட வேண்டும் என்பதற்காக அவனிடம் இந்திருமணத்தில் தனக்கு முழு சம்மதம் என்றாள் அவள். பாவம்! தர்மா தான் நொறுங்கிப் போனான். நண்பனின் கண்ணியமான காதலைத் தெரிந்திருந்தும் அவனுக்கு எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டான் மதிவேந்தன்.

அப்படி இப்படி என்று நாட்கள் நகர… இதோ, விடிந்தால் திருமணம். திருமணம் பெண் ஊரில் என்பதால் மாப்பிள்ளை பெண்ணைத் தேடி இந்த ஊருக்கு வர வேண்டும். அதையே மாப்பிள்ளை அழைப்பாக மணமகனைக் காரில் அமரவைத்து அழைத்து வருவார்கள். இதோ, இப்போது அந்த சடங்கும் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது.

இதுவரை அழகியிடம் மணமகன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் கையில் வளர்ந்த தனக்கே இப்படி ஒரு சங்கடம் என்றால் தன்னை வளர்த்த அவருக்கு எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் அழகியும் ஒதுங்கி விட்டாள். இத்திருமணத்திற்கு யாரும் போகக் கூடாது என்று கந்தமாறன் சொல்லி விடவும், மதிவேந்தன் குடும்பத்தார் யாருமே திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

அனைத்து ஆர்ப்பாட்டமும் முடிந்து, அனைவரும் படுக்கைக்கு ஆயத்தமாக, சற்று நேரத்தில் எல்லாம் அழகியின் கைப்பேசி சிணுங்கியது. நேரம் கட்ட நேரத்தில் யார் என்று இவள் பார்க்க, அதுவோ அவள் திருமணம் செய்யப் போகும் மாமன் பெயரைக் காட்டியது. என்னவாக இருக்கும் என்ற யோசனையில் இருக்கும் போதே அழைப்பு விடாமல் ஒலிக்க, பக்கத்தில் படுத்திருந்த தாயை ஒரு பார்வை பார்த்தவள் பின் அழைப்பை ஏற்க,

“அழகி, கொஞ்சம் மேல் மாடிக்கு வா... நான் உன்கிட்ட அவசரமா பேசணும்” என்றது சாட்சாத் அது அவள் மாமன் குரல் தான்.

‘ஏன் இவ்வளவு அவசரமா பதட்டமா ஒலிக்குது?’ என்று யோசித்தவள், “என்ன மாமா என்ன பிரச்சனை? நடு சாமம் ஒன்றரை மணிக்குப் பேச என்ன இருக்கு மாமா?” இவள் குரலில் பதட்டமே இருந்தாலும் தெளிவாய் இவள் கேட்க

“ஐயோ! அழகி, ஒரு உயிர் போற விஷயம் அழகி… கொஞ்சம் வா பேசணும்” அவன் மறுமுனையில் அவசரப்படுத்த

உயிர் என்ற உடன் எதைப் பற்றியும் யோசிக்காமல் எதற்கும் இருக்கட்டும் என்ற எண்ணத்துடன் கையில் போனுடனே மாடி ஏறினாள் அழகி.

அங்கோ, உயிருக்கு ஆபத்து என்றவன் வெளியே கிளம்பத் தயாராக ஷோல்டர் பேக்கை முதுகில் மாட்டிய படி, முகத்தில் சொல்லொனா வேதனையுடன் நின்றிருந்தான்.

“என்ன மாமா, யாருக்கு என்ன?” இவள் பதட்டத்துடன் கேட்க

“அழகி, என்ன மன்னிச்சிடுமா... இப்பவும் நான் அமைதியா இருந்தனா நாம இரண்டு பேர் வாழ்க்கை மட்டுமில்ல... அங்க இரண்டு உயிரும் போய்டும்” இவன் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் சொல்ல

“மாமா, என்னனு தெளிவா சொன்னா ஏதோ என்னால முடிந்ததை நான் செய்வேன் இல்ல... முதல்ல புரியற மாதிரி சொல்லு மாமா” தன்னைத் தூக்கி வளர்த்த மாமனிடமே அவள் அதட்டல் போட

அது சரியாய் வேலை செய்தது. “அழகி, ஆரம்பத்தில் இருந்தே உன்னைத் திருமணம் செய்துக்க எனக்கு விருப்பம் இல்லமா. நான் உன்னை அப்படி பார்க்கல… அதான் உண்மை. அப்பா இப்படி பேசி முடித்து இருக்கிறதா போன்ல சொன்னப்பவே நான் என் மறுப்பைச் சொல்லிட்டேன்”

அழகி அமைதியாய் கேட்டுக் கொண்டிருக்க, அவனே தொடர்ந்தான். “நான் மறுத்ததால அப்பாவும், அத்தையும் (செண்பகவல்லி) கிளம்பி ஹைதராபாத்தில் நான் தங்கியிருக்கிற வீட்டுக்கே வந்துட்டாங்க. அப்பா ஒரு பக்கம் கெஞ்ச, அத்த அவங்க பங்குக்கு ஒரு பக்கம் கெஞ்சினாங்க, அன்று நீ ஒரு வருஷம் நினைவு தப்பியிருந்தப்போ நான் தான டா பார்த்துக்கிட்டேன்... அதுக்காகவாது இத நன்றியா செய்டான்னு கெஞ்சினாங்க”

அழகிக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. ‘ச்சீ! என்ன தாய் இவர்கள்? தான் பெற்ற பெண்ணை அசிங்கப் படுத்துறோம்னு யோசிக்காம, பத்திரிக்கை வெக்கப் போறோம்னு பொய் சொல்லி திருட்டுத்தனமா ஊருக்குப் போய் கெஞ்சிப் பேசி சம்மதிக்க வைத்து இருக்காங்க. இப்படி நடத்தியாவது தன் உரிமையை பிறந்த வீட்டில் இவங்க நிலைநாட்டணுமா என்ன?’

இவள் எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல, அதை எதிரில் நின்றிருந்தவனின் குரல் இடை வெட்டியது. “சரின்னு அவங்களுக்காக சம்மதித்தேன். அப்பவும் உன் கிட்ட நெருங்கி என்னால பேச முடியல. அதுக்கு அது மட்டும் காரணம் இல்ல” அவன் சற்றே நிறுத்த

மேலும் என்ன என்பது போல் இவள் அவனை நோக்க, “என் ஆபிஸ்ல ஒரு பொண்ணு… கைம்பெண் வேலை செய்றா. நாலு வயசுல ஒரு குழந்தை இருக்கு. எங்களுக்குள்ள எந்த தப்பான எண்ணமும் இல்ல. அந்த எண்ணத்திலும் நாங்க பழகவும் இல்ல. ஒருவருக்கொருவர் உதவி தான் செய்துகிட்டோம். ஆனா அந்த உறவு நட்பையும் மீறி கடைசி வரை தொடரணும்னு எனக்கு ஆசை.

சரி, அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டு அந்த பொண்ணு கிட்ட என் விருப்பத்தை சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அப்பா அதுக்கு ஒத்துக்கவே இல்ல. உடனே அவசர அவசரமா நம்ம திருமணத்திற்கு ஏற்பாடு செய்துட்டார். எல்லாம் ஒரு சில மிரட்டலோட தான். அந்த மிரட்டலுக்குப் பயந்தேன் என்றதை விட அன்று நான் என் நினைவையே இழந்து நின்ற போது அப்பா அம்மா அத்த தானே தோள் சாய்த்து தேற்றினாங்க... அதை நினைச்சேன் ஒத்துகிக்ட்டேன்....”

தன் மாமா எதற்கு இந்த திருமணத்திற்கு இவ்வளவு அவசரப்படுத்தினார் என்பது இப்போது அழகிக்குப் புரிந்தது. “ஆனா இப்போ விஷயம் கை மீறிப் போயிடுச்சு அழகி. நாங்க காதலைப் பரிமாறிக்கலறனாலும் இன்று நான் இல்லாம அவ இருக்க முடியாதுன்றதை அவ உணர்ந்துட்டா. குழந்தை வேற என்னைத் தேடுதாம். இப்போ ஒரு விபத்தில் குழந்தை அடிபட்டு படுத்துட்டு இருக்கு. ஒரு நண்பனா இப்போ நான் அவளுக்கு ஆறுதல் சொல்லி பேசுறத விட, அந்தக் குழந்தைக்கு அப்பாவா, அந்தப் பொண்ணுக்கு கணவனா கூட இருக்கணும்னு நினைக்கிறேன்.

சோ, என்ன மன்னிச்சிடு அழகி. ஊர் கூடி விடிந்தா கல்யாணம் என்ற நிலையில உன்னை இப்படி ஒரு நிலையில் விட்டுப் போக மனசு வரல தான். ஆனா அப்பா, அத்தைக்காக கூட உன் கழுத்துல தாலி கட்டி… என்னால அதை இப்போ நினைத்தே பார்க்க முடியல. என் மனசாட்சியே என்னைக் கொல்லுது. நான் இல்லனா இந்த திருமணம் நிற்காது.

அத்தை எப்படியாவது பேசி வேற மாமா பசங்களில் ஒருத்தனை உனக்குக் கட்டி வெச்சிடுவாங்க. ஆனா அந்தப் பொண்ணு அப்படி இல்ல அழகி. இது நான் உனக்கு செய்யும் பாவம் தான். ஆனா எனக்கு வேற வழி தெரியல... நான் இதை சொல்லாமப் போகக் கூட என் மனசாட்சி தடுக்குது. நான் போகவா அழகி? நீ என்ன புரிஞ்சிக்கிற இல்ல?” அவன் நீளமாய் பேசி பரிதாபத்துடன் நிற்க

அவளோ தன் அம்மா எப்படியாவது வேறு மாமன் மகன்களில் ஒருவரைப் பேசி முடித்து திருமணத்தை நடத்தி விடுவார்கள் என்று அவன் சொன்னதிலேயே அவள் மனது உழன்று நின்றது. அப்பொழுதும் அவன் வார்த்தையை மனதில் ஏற்றியவள், “நான் போகாதேனு சொன்னா போகாம இருந்துருவியா மாமா?” என்ற கேள்வியை அவன் முன் வைக்க

எந்த வித தயக்கமும் இல்லாமல் அடுத்த நொடியே “முடியாது... யார் தடுத்தாலும் நான் போய் தான் தீருவேன்” அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து அவன் பதில் தர

“இப்பவாச்சும் தைரியமா இப்படி ஒரு முடிவு எடுத்தியே மாமா... காலையில என் கழுத்தில் தாலி கட்டிட்டு ஓடிப் போகாம இருந்தியே!” தன் உள்ளத்தில் உள்ள கொதிப்பை அவள் வார்த்தையாய் கொட்ட...

“அழகி!” அவமானத்தில் துடித்துப் போனான் அந்த ஆறடி உள்ள ஆண்மகன்.

“நீ போ மாமா... நான் பார்த்துக்கிறேன். அதான் சொல்லிட்டியே... என்னப் பெத்தவ தன்னோட அண்ணனுங்க கையில் காலில் விழுந்தாவது இந்த கல்யாணத்த நடத்திருவாங்கனு. அதனால எனக்கு கல்யாணம் நடக்கும்… நீ போ” விரக்தியில் என்ன பேசுறோம் என்று தெரியாமல் அழகி வார்த்தைகளைப் பந்தாட

ஒரு வினாடி நின்று அவளின் முகத்தைப் பார்த்தவனோ, மேற்கொண்டு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து விலகி, இல்லை இல்லை… அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினான் அழகிக்கு என்று பார்த்திருந்த மணமகன்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 33
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Chellam

Member
கடைசி நேரத்தில் நல்ல முடிவு எடுத்தானே அது வரை சந்தோஷம்.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கடைசி நேரத்தில் நல்ல முடிவு எடுத்தானே அது வரை சந்தோஷம்.
Thank you sis❤️
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN