ஆதித்யா சக்கரவர்த்தி-21

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 21



அம்மாவின் புதிய அவதாரத்தில் அதிர்ந்து நின்ற ஆதித்யா... வீட்டிற்கு உள்ளே செல்லாமல் வெளியில் நின்று என்ன பேசுகிறார்கள்? என்று கேட்க ஆரம்பித்தான்.
அது மதிய வேலை என்பதால் குழந்தைகள் வீட்டில் இல்லை...இருவர் மட்டுமே இருக்கிறோம் என்ற தைரியத்தில் இருவரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர்.

"என்னம்மா இப்படி சொல்ற... இப்படி எல்லாம் பேசாத.... நமக்கு கல்யாணம் முடிஞ்சு 18 வருஷம் முடிஞ்சு போச்சு... திடீர்னு நீ எப்படி அடுத்தவன் கூட போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் என்ன பேசுவாங்க" என்று அவரை அடக்க பார்த்த சக்கரவர்த்தியின் குரலில் ஏகத்துக்கும் வருத்தம் இருந்தது.

"என்னது அடுத்தவன் கூட போக ஆசைப்படுறேனா? யாரு அடுத்தவன்? நீங்கதான் அடுத்தவர்... ஆனால் ஈஸ்வர் என்னோட முதல் காதல் ...என்னோட உயிர் மூச்சு அவர். இத்தனை வருஷம் நாங்க பிரிஞ்சு இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் மறக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே தவிச்சுகிட்டு இருந்தோம்" என்றவர்,
"இப்ப நான் குடும்பம் குழந்தை எல்லாத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு யோசிச்சா... என்னோட முதல் காதல் பட்டு போவாம பசுமரத்தாணி மாதிரி என்னோட நெஞ்சு குழியில ஆழமா பதிஞ்சு இதுக்கு....
கல்யாணம் முடிஞ்சு 18 வருஷம் ஆகிட்டா... ஆகிட்டு போகட்டும்...நான் என்ன உங்கள ஆசைப்பட்டா கல்யாணம் பண்ணேன்?... என்ன நாலு பேரு மணமேடையில் புடிச்சிட்டு தான் உட்கார்ந்து இருந்தாங்கன்னு மறந்து போச்சா? அப்பவே உங்ககிட்ட கத்தினேன் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு... எவ்வளவு கெஞ்சிக் கேட்டேன். நான் கத்துவதை காதுல வாங்காம தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டா... எல்லாம் மறந்து போய்டுமா..."

"அம்மா சாகும் போது உன்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சத்தியம் வாங்கிட்டு தான் செத்துப் போனாங்க ...அவங்க கடைசி ஆசையை நான் எப்படி மறுப்பேன்..."

"அந்த கெழவி என்ன சொன்னாலும் அப்படியே கேட்டு செஞ்சீங்களா? அதாவது செத்துப் போய்ட்டே அதோடு சத்தியத்தை எதுக்கு புடிச்சு வச்சுக்கிட்டு உங்களை யாரு சுத்த சொன்னா... இதுல எங்க அப்பா அம்மாவும் கூட்டுசதி பண்ணி என்னையும் ஈஸ்வரையும் பிரிச்சு உங்க கூட கட்டாயம் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க...." என்று ஆக்ரோஷமாக பேசினார் சங்கரி.

"ப்ச்ச் பெரியவங்கள அப்படி எல்லாம் பேசாத...உங்க அப்பா அம்மாவுக்கும் நான் உன்னை கல்யாணம் பண்ணனும்னு தான் ஆசை. என்னால யாரோட பேச்சையும் மீற முடியல...."

"சரி அப்போ மீற முடியல...
இப்பதான் எந்த வீட்டிலேயும் பெரியவங்க இல்லையே ...எனக்கு பண்ணின பாவத்துக்கு எல்லாரும் சீக்கிரம் போய் சேர்ந்துட்டாங்க... இதுக்கு மேல யாராலயும் என்னை தடுக்க முடியாது. நான் என்னோட ஈஸ்வர் கூட போகப்போறேன்.... அவர்தான் என்னோட உயிர். என்னோட நாடி நரம்பு எல்லாத்துலயும் அவரை தவிர வேறு யாருமே இல்லை...."
ஒரு கணவனாக நின்று அவர் பேசிய பேசிய பேச்சை கேட்கும் பொழுது சக்கரவர்த்தியின் இதயம் மௌனமாக ரத்தக் கண்ணீர் வடித்தது... எந்த கணவனுக்கு தான் தன் மனைவி இன்னொருவனை விரும்புகிறேன். அவன் என் உயிர் என்று சொன்னால் தாங்க முடியும்... அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல பதினெட்டு வருட திருமண வாழ்க்கை... இத்தனை வருடங்களில் தன்மீது காதல் வந்திருக்கும் என்று நினைக்கவில்லை என்றாலும் அன்பாவது வந்திருக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார் அவர்... அதுகூட இல்லை என்று நிரூபித்தார் சங்கரி...

"இங்க பாரு சங்கரி... நமக்கு தோளுக்கு மேல வளர்ந்த பையன் இருக்கான். மூணு பொண்ணுங்க வேற... உன்னோட நடவடிக்கையால் நாளைக்கு அவங்க எதிர்காலமும் பாதிக்கப்படலாம்.... இனி இப்படியெல்லாம் பிரிஞ்சு போறேன் அப்படி இப்படின்னு பேசாத" என்று சாதுவான அவரும் எடுத்துச்சொல்ல பார்க்க....
சங்கரி திரும்பவும் பல்லை கடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்துவிட்டார்...

"இப்படி ஒவ்வொருத்தருக்கும் யோசிச்சு யோசிச்சு தான் என்னோட காதலை இழந்து நிற்கிறேன். இந்த தடவ நான் யாரைப் பத்தியும் கவலைப்பட மாட்டேன்.... எனக்காக ஈஸ்வர் அவரோட பொண்டாட்டியையும் பிள்ளையையும் விட்டுட்டு வர தயாராக இருக்கிறார்.... நான் மட்டும் சுயநலவாதியா என்னோட குடும்பமும் என்னோட குழந்தைன்னு பார்க்க முடியுமா?"

"ஏன்மா இப்படி பேசுற நம்ம சௌபாக்கியா... நீ இல்லாம இருக்க மாட்டாளே பிஞ்சு குழந்தை மா அவ... அவளைவிட்டு போக உனக்கு எப்படி மனசு வருது....?" என்று பேசியவரின் பேச்சு மனதை தொட,
லேசாக கண் கலங்கிய சங்கரி, பின்பு வேகமாக தலையாட்டி... "எனக்கு உங்க கூட தொடர்புடைய எந்த சொந்தமே வேண்டாம்... ஈஸ்வர் தெளிவா சொல்லிட்டார். எந்த குழந்தையும் நம்ம கூட வச்சுக்க வேண்டாம்னு அப்புறம் என்னோட குடும்பத்து கூட நான் தொடர்புள்ள இருக்கக் கூடாதுன்னு சொல்லிவிட்டார். அப்படி வச்சுக்கறதா இருந்தா கண்டிப்பா என்ன கல்யாணம் பண்ணி வாழ மாட்டாராம்...நா என்னோட ஈஸ்வர் கூடத்தான் வாழப்போறேன். என்னோட பத்தொன்பதாவது வயசுல உங்கள கல்யாணம் பண்ணிக்கும்போது எனக்கு பயம் அறியாமை எல்லாம் இருந்துச்சு... ஆனா இப்போ இல்ல... கண்டிப்பா நான் எதுக்காகவும் ஈஸ்வர விடமாட்டேன்..." என்று உறுதியாக சொல்லிவிட்டார் அவர்...
இவ்வளவு எடுத்து சொல்லியும் அதை மதிக்காத மனைவியை வருத்தமாக பார்த்தார் சக்கரவர்த்தி.

சக்கரவர்த்தி மிகவும் சாந்தமான மனிதர். பொறுமையின் திருஉரு. இல்லையென்றால் இவ்வளவு வருடம் சங்கரியின் முகம் திருப்புதலயும் தனிமையில் சொல்லும் கடுமையான சொற்களையும் தாங்கிக்கொண்டு இருந்திருக்க மாட்டார்.
இப்பொழுதும் மனைவியை கடுஞ்சொல் சொல்லாமல் தான் பேச முயற்சி செய்தார். ஆனால் அதன் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்....
இவ்வளவு நேரம் பெற்றோர்களின் உரையாடலை கேட்டு பிரமை பிடித்தது போல் நின்ற ஆதித்யா உணர்வு பெற்று "அப்பா" என்று கூப்பிட்டவாறு வீட்டிற்குள் வந்தான்.
அதுவரை சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் அவன் குரலைக் கேட்டதும் அமைதி ஆகினர். சங்கரி வேகமாக சமையலறைக்குள் நுழைந்து கொள்ள ஆதித்யா சக்கரவர்த்தியின் அருகே வந்து அமர்ந்தான்.

அவன் பெரும்பாலும் அம்மாவை எதற்கும் கூப்பிடுவதில்லை. சிறுவயதிலிருந்தே அப்பா அப்பா என்றுதான் சுற்றுவான். அம்மாவை விட அப்பா தான் அவனுக்கு பிடிக்கும். அதற்கு சிறுவயதிலேயே சங்கரி அவனிடம் காட்டிய ஒதுக்கம் கூட காரணமாக இருக்கலாம்.

"எக்ஸாம் நல்லா பண்ணியாச்சா?" என்று கேட்டவரின் குரலில் மருந்துக்கும் மகிழ்ச்சி இல்லை... வெறுமை தான் இருந்தது.
அதைக் கண்டு கொண்டவன்,
"நல்லா பண்ணினேன் பா" என்றுவிட்டு அமைதியானான்.
சங்கரி அவனுக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தார். முகத்தில் ஒரு உணர்வும் இல்லை....
அவனின் தேர்வு குறித்து கூட எதுவும் விசாரிக்கவில்லை அவர்... மற்ற நாட்கள் என்றால்... இது சாதாரணம் தானே என்று விட்டுவிடுவான் ஆதித்யா... ஆனால் இன்றோ இதுவரை தங்களிடம் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசாத தாயின் புதிய அவதாரம் உள்ளுக்குள் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஒருங்கே கொடுத்தது.
என்னதான் குழப்பமாக இருந்தாலும் தந்தையிடம் எதுவும் கேட்கவில்லை .... எங்கே அவர்கள் பேசியதை கேட்டான் தெரிந்தால் வருத்தப்படுவாரோ என்று நினைத்து விட்டு விட்டான்.

நாட்கள் அதன் பாட்டிற்கு நகர... ஆதித்யா அதன்பிறகு பெற்றோரின் நடவடிக்கையை நன்றாக கவனிக்க ஆரம்பித்தான். முக்கியமாக தாயின் நடவடிக்கையை...
தான் அல்லது தங்கைகள் இருக்கும் நேரம் அமைதியாகவே இருந்தாலும் மற்ற நேரங்களில் அடிக்கடி வாக்குவாதங்கள் சண்டைகள் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டான்.

ஏனோ தாயை அதிலிருந்து சுத்தமாக பிடிக்கவில்லை அவனுக்கு... தன் தந்தையை போன்ற நல்ல மனிதர் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு அன்பானவர் அவர்...தவறு என்று தெரிந்தாலும் பொறுமையாக எடுத்துச் சொல்பவர்... சுடுசொல் பேசாதவர்.... குடும்பத்தின் தேவையறிந்து பார்த்து பார்த்து அனைத்தையும் செய்பவர்... இப்படிப்பட்ட மனிதரை கேவலமாக பேசும் தாயை வெறுக்க ஆரம்பித்தான்.
யார் அந்த ஈஸ்வர்? எதற்கு தேவையில்லாமல் தங்களின் வாழ்க்கையில் குறுக்கே வருகிறான்... என்று என்று கோபம் கூட வந்தது. ஆனால் யாரென்று தெரியாமல் என்ன செய்வது? என்று அமைதியானான் ஆதித்யா.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்... தனது தோழர்களுடன் விளையாட்டு மைதானத்திற்கு சென்றுவிட்டு ஆதித்யா வீடு திரும்பும் பொழுது வீடே அதிருமாறு சண்டை நடந்து கொண்டிருந்தது.

"த்தூ...விருப்பமில்லாதவள கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து விபச்சாரம் பண்ணி புள்ள பெத்து வச்சிருக்கியே... உனக்கெல்லாம் அசிங்கமா இல்ல நீ எல்லாம் ஆம்பளையா..."

"புள்ளைங்க முன்னாடி இப்படியெல்லாம் அசிங்கமா பேசாத மா ... கல்யாணத்து தவிர உனக்கு விருப்பம் இல்லாம எதுவும் நடக்கல..." என்ற சக்கரவர்த்தியின் குரல் கரகரத்தது.

தன் தந்தையை மரியாதை இல்லாமல் பேசிய தாயின் குரலில் பதறியபடி உள்ளே வந்தான் ஆதித்யா.
வந்தவனின் கண்ணில் முதலில் பட்டது... சுவரோடு ஒட்டியபடி
தாய் தந்தை இருவரும் சண்டை போடுவதை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தன் மூன்று தங்கைகளை தான்...
மனம் இளக, தங்கைகளின் அருகே சென்று பாசத்துடன் அணைத்துக் கொண்டவன்... சண்டை போடும் தாய் தந்தையரை கலக்கத்துடன் பார்த்தான்...

நடந்த களேபரத்தில் குழந்தைகளை மறந்து விட்டனர் இருவரும்...
அதுவும் சங்கரி வெளிப்படையாகவே வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்....

"ஆமாய்யா ஆமா என்ன மீறி எதுவும் நடக்கல தான்... நானும் ஆரம்பத்துலே உன்ன ஏத்துகிட முயற்சி பண்ணேன் தான் ...ஆனா இந்த நெஞ்சுல ஈஸ்வர தவிர யாருக்கும் இடமில்ல...
எங்க காதல் எவ்வளவு உண்மைனா நாங்க ரெண்டு பேரும் தனித்தனியா கல்யாணம் பண்ணியும்... எங்க மனசுல உள்ள காதல் அழியவே இல்ல..." என்றவர்
"அப்புறம் உன் கூட வாழ்ந்த இத்தனை வருஷத்துல நான் அப்படி என்னத்த பாத்துட்டேன்... மாடு மாதிரி உடம்பு வச்சுக்கிட்டு நீ உழைச்சி கொண்டுவந்து கொட்டினாலும் திங்குறதுக்கும் உடுக்குறதுக்கும் தான் சரியா இருக்கும்.. நான் வேலைக்கு போற சம்பாத்தியம் அப்படியே பேங்குக்கு லோனா போகுது... என்ன வாழ்க்கை இது? ஈஸ்வர் எவ்வளவு பெரிய ஜமீன்தார்ன்னு தெரியுமா? என்ன உயிருக்குயிரா இன்னும் விரும்புறார். எனக்காக பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு வரக்கூட தயாரா இருக்கார்... அவ்ளோ காதல் என் மேல ...நீ மட்டும் எனக்கு விவாகரத்து கொடுத்தனா நான் போய்கிட்டே இருப்பேன்" என்றவரின் பேச்சு அத்தனை வலியைக் கொடுத்தது
சக்கரவர்த்திக்கு....

"என்னால கண்டிப்பா உன்ன விவாகரத்து பண்ண முடியாது மா" என்று தன் முடிவில் இருந்து மாறாமல் இருந்தவரை வெறுப்புடன் பார்த்து, "அப்போ என் முடிவையும் நாளைக்கு நீங்க பாப்பீங்க..." என்று தனது அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டார் சங்கரி.
மன பாரம் தாங்காமல் கண்கலங்கிய சக்கரவர்த்தி, அப்பொழுதுதான் குழந்தைகள் நால்வரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவரையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.

சிறு குழந்தைகள் மூவரையும் பற்றிப் பிரச்சினை இல்லை.... ஆனால் மூத்த மகன் ஆதித்யாவிற்கு கண்டிப்பாக அவர்களின் பேச்சுவார்த்தை ஓரளவு புரிந்திருக்குமே என்று கலங்கி போனார் ....
தந்தையின் கலக்கத்தை பார்த்தவன், தங்கைகளிடம் திரும்பி, அவர்களின் அறைக்கு சென்று படுக்குமாறு சொல்லிவிட்டு அவரிடம் வந்து நின்றான்.

"யாருப்பா ஈஸ்வர்? அம்மா ஏன் திடீர்னு இப்படி மாறிட்டாங்க?" என்று கேள்வி கேட்ட மகனின் முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை.
தந்தையின் முகம் அவமானத்தால் சிவப்பதை பார்த்தவன்... ஒன்றும் பேசாமல் அவரை அணைத்துக் கொண்டான்.
இந்த ஆறுதலே போதும் என்பதுபோல் அவனை அணைத்துக் கொண்டு கண்கலங்கிய சக்கரவர்த்தி உள்ளுக்குள் நொறுங்கிப் போய் தான் இருந்தார்.

மறுநாள் விடியற்காலையிலேயே சங்கரி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்....
அவர் பெற்றெடுத்த குழந்தைகளை கூட மறந்து விட்டார் போலும்....
ஊர் முழுவதும் விஷயம் பரவ, சக்கரவர்த்திக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் வீடு தேடி வந்து தங்களது விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவரை அவமானப்படுத்தி விட்டு சந்தோஷமாக சென்றனர் சுற்றத்தினர்....
போதாததற்கு அந்த ஈஸ்வரனின் மனைவி குழந்தைகளுடன் வந்து... உன் மனைவிதான் இதற்கெல்லாம் காரணம் ....மனைவியை அடக்க துப்பில்லாதவன் எதற்கு திருமணம் செய்து கொண்டாய்? நீ எல்லாம் ஆம்பளையா...என்று ஒரு ஆட்டம் ஆடி விட்டு சென்றார்.

சங்கரி வீட்டை விட்டு வெளியேறிய பின் வந்த இரு தினங்களும் வேலைக்கு கூட செல்ல முடியாமல், அவமானத்தினால்... சோறு தண்ணீர் இல்லாமல் அறையிலேயே அடைந்து கிடந்தார் சக்கரவர்த்தி.

ஆதித்யா தான் பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கேட்டு தன்னால் முடிந்த உணவை செய்து குழந்தைகளுக்கு கொடுத்தான்.

சௌபாக்கியா தான் அம்மா இல்லாமல் அழுது அழுது ஓய்ந்து போய் இருந்தாள். அவளை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது .

உண்மையைச் சொல்லப் போனால் ஆதித்யாவினால் இதை தாங்கிக் கொள்ளயே முடியவில்லை...
ஒரு பெண்ணின் காதல் இவ்வளவு தூரம் சுயநலமானதா?தான் பெற்ற பிள்ளைகளை விட காதல் பெரிதா? என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்....
தந்தைக்கு உணவை எடுத்துக் கொண்டு சென்றவன், அவர் மறுக்க மறுக்க தானே தன் கையால் ஊட்டியும் விட்டான்.

ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ந்ததால் என்னவோ தாய் இப்படி சென்றும் கண்ணீர் மட்டும் வரவில்லை....
ஆனால் தந்தையின் விரக்தியான முகத்தை பார்த்ததும் தன்னை மீறி கண் கலங்கி விட்டான் அவன்....
மகனின் பாசத்தில் உருகினாலும்... அவரின் முகத்தில் இருந்த விரக்தி மறையவில்லை.

அன்றிரவு வெளியே சென்ற சக்கரவர்த்தி தனது துக்கத்தை மறப்பதற்கு முதல்முதலாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.
தந்தையின் குரலில் இருந்த பேதமும், உடல்மொழியும் ஆதித்யாவிற்கு அவர் குடித்து இருப்பதை காட்டி கொடுத்தது....
தங்கைகளை தூங்க சொல்லிவிட்டு தந்தையிடம் வந்தவன்... அமைதியாக அவர் மடியில் தலை சாய்ந்து கொண்டான்.

மகனின் தலையை வருடி விட்டவரின் கண்கள் கண்ணீரை செறிந்தது.
"தம்பி அவ போய்ட்டா உன்னோட அம்மா போயிட்டா டா... என்னோட இத்தனை வருஷ வாழ்க்கையை பொய்யா கிட்டா... நான் அவள நம்பினேன்... எவ்வளவு சண்டை வந்தாலும் குழந்தைகள அனாதையா விட்டுட்டு போக மாட்டான்னு நெனச்சேன்... என்னோட நெனப்புல மண்ணள்ளி போட்டுட்டு சந்தோஷமா போயிட்டா... என்னால வெளிய எங்கேயும் போகவே முடியல தம்பி... முன்னாடி பரிதாபமா பேசிட்டு பின்னாடி கேலி பண்றாங்க... என்ன வாழ்க்கைன்னு விரக்தியாய் இருக்கு... நான் சீக்கிரம் போய் செத்து போயிடுவேன் போல" என்று உளறிய தந்தையின் மடியில் இருந்து விருட்டென எழுந்து அவரை கலவரமாக பார்த்தவன்...
"அப்பா தயவு செஞ்சு இப்படி பேசாதீங்க எங்களுக்கு நீங்க வேணும்...."என்று கெஞ்சினான்.
மீண்டும் விரக்தியான முறுவல் மலர்ந்தது அவர் இதழ்களில்....
"எனக்கு வாழனும்னு ஆசையே இல்லைப்பா... என்னால இந்த மன பாரத்தோட ரொம்ப நாள் வாழ முடியாது" என்றவர்...
"தங்கச்சிகள நல்லா பாத்துக்க பா... ஒரு அண்ணனா மட்டுமில்லாம தாய் தகப்பனா நீதான் அவங்க கேட்டது... எல்லாத்தையும் நிறைவேற்றி கொடுக்கணும் ... அவங்க கண் கலங்காம பாத்துக்கணும்... அவங்க வாழ்க்கையே உன்னோட பொறுப்புதான்... உன்ன நம்பி தான் இந்த உயிர் பிரியும்..." என்று மேலும் சொல்லிக் கொண்டு செல்ல...
அவரது பேச்சில் மீண்டும் துடித்துப் போனான் ஆதித்யா,

"ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசுறீங்க... எங்களுக்கு உங்கள விட்டா யார் இருக்கா" என்று தன்னை மீறி அழுவனை அணைத்துக் கொண்டவர்...
"என்னால பொய்யான நம்பிக்கையை உனக்கு குடுக்க முடியாது டா தம்பி... ஒரு புருஷனா நான் தோத்துப் போயிட்டேன்... ஒரு அப்பனா என்ன ஜெயிக்க வைக்கிறது உன் கையில தான் இருக்கு..." என்றவர்...
"நான் பணம், அதிர்ஷ்டம், அழகு எதுவும் இல்லாதவன் தம்பி... என்ன மாதிரியே நீயும் ஆகிடக்கூடாது. இந்த உலகத்துல பணமும் அதிர்ஷ்டமும் இருந்தா எல்லாரும் உனக்கு கீழ தான் ஆதி ...இந்த காலத்துல யாரும் நல்லவனானு பார்க்க மாட்டாங்க... பணம் அழகு இதைத்தான் ஃபர்ஸ்ட் பாக்குறாங்க... என்மகன் என்ன மாறி கஷ்டப்படக்கூடாது. மகாராஜா மாதிரி பெரிய கோட்டையில வாழனும்.... என்ன மாதிரி சாதுவா இருந்தா... இந்த காலத்துல யாருக்கும் பிடிக்கிறது இல்ல... மதிக்கிறதும் இல்ல... எப்பவும் அழுத்தமா அதிகாரமா தோரணையா இருக்கிற ஆளுங்களை தான் எல்லாருக்கும் பிடிக்குது... நீயும் அப்படித்தான் இருக்கணும்" என்றவர்,
"நான் சொல்றத நல்லா கவனிச்சுக்கோ ஆதி... நீயும் வருங்காலத்தில் கல்யாணம் பண்ண வேண்டியது வரும் .... நீ கல்யாணம் பண்ண போற பொண்ணு மனசுல நீ மட்டும் தான் இருக்கன்னு தெரிஞ்ச அப்புறம் தான் நீ தாலி கட்டணும்... அவ மனசுல இன்னொருத்தன் இருக்கான்னு தெரிஞ்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்காத... அதையும் மீறி பண்ணினா என்ன மாதிரிதான் ஆகும்... உன்னோட நிலைமையும்...." என்றவர்... மதுவின் தாக்கத்தில் சோர்வாகி, "தம்பி எனக்கு தூக்கம் வருது... நீ போய் படுத்துக்கோ" என்று கூறிவிட்டு கண்களை மூடிக்கொண்டார் அவர்.
அதுதான் ஆதித்யா தந்தையிடம் பேசிய கடைசி பேச்சு... மறுநாள் அவன் பார்க்கும் பொழுது தூக்குப்போட்டு உயிரற்ற பிணமாக தான் கிடந்தார்.... அவர்
அவரை சுற்றி நின்று தங்கைகளுடன் தானும் அழுதது இப்பொழுதும் நெஞ்சில் ஆறாத ரணத்தின் சுவடுகளாக பதிந்திருந்தது....

ஆனால் தந்தையின் இறப்பிற்கு பிறகு தான் ஆதித்யாவின் துன்பமான வாழ்க்கையே ஆரம்பித்தது...

தனது மொபைல் போன் ஒலிக்க நினைவுகள் கலைந்து எழுந்தவன்... அழைத்தது யாரென்று பார்த்தான்.
சுவாதி தான் அழைத்திருந்தாள்....
எடுக்க மனமில்லாமல் மொபைலை வெறித்துப் பார்த்தான் ஆதித்யா.

இன்னும் சிறிது நேரத்தில் மலரை இங்கு வந்து விடுவார்கள்...
அவள் வேண்டா வெறுப்பாக வாழும் வாழ்க்கை இது... சில வருடங்கள் கழித்ததும் என் காதல் தான் முக்கியம் என்று தன் அன்னை போல அவளும் தன்னை விட்டு சென்று விடுவாள்... என்று நினைத்தவனுக்கு உள்ளம் கசந்தது.

அடுத்தடுத்த அழைப்புகள் வந்து கொண்டே இருக்க... வேண்டாவெறுப்பாக எடுத்து,
"ஹலோ" என்றான் கடுப்பாக....
"பாஸ் அனல் அடிக்குது... பாஸ் அனல் அடிக்குது... உங்க கோபத்த கொஞ்சம் சிம்ல வைங்க" என்று அந்தப்புறம் சரத் சொல்ல...
"இப்ப என்ன எழவுக்கு நீ போன் பண்ணுன அத முதல்ல சொல்லு" என்று மீண்டும் ஆதித்யா எறிந்து விழுந்தான்.
"பாஸ் மகேஷ் சார் டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்க ...நீங்க ஏன் இன்னும் மலர் தங்கச்சிய கூப்பிட வரல்ல..." என்று சரத் விளையாட்டுத் தனத்தை கைவிட்டுவிட்டு சீரியஸாக கேட்க,
கை கடிகாரத்தில் மணியை பார்த்தவன் ...
"ஓ..நேரம் ஆகிட்டா... நீங்க எல்லாரும் மகேஷ கூட்டிட்டு மலர் வீட்டுக்கு போங்க... நான் லஞ்ச் டைமுக்கு கரெக்டா அங்க வந்துருவேன்" என்று அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான் ஆதித்யா.

இனி வேறு வழியில்லை. நான் எடுக்கும் முடிவு தங்கையின் வாழ்க்கையை பாதிக்கலாம்.
மலர் கண்டிப்பாக என் மனைவியாக இந்த வீட்டிற்கு வருவது உறுதி... ஆனால் நந்தனின் பெயரை அவள் மனதிலிருந்து தான் தான் எடுத்தாக வேண்டும் இல்லையென்றால்... அது கொடிய விஷமாக பரவி பெரிய விருட்சமாக மாறிவிடும்.

கண்களை மூடி தந்தையை நினைத்துக் கொண்டவன்... "என்னால முடியுமான்னு தெரியல ப்பா ...ஆனா சீக்கிரமே மலர் மனசுல இருந்து அவன விரட்டி அடிக்கணும்... மலர் மனசுல என்ன தவிர யாரும் இருக்கக்கூடாது... இருக்கவும் விட மாட்டேன்" என்றவன் மலரை அழைத்துவர தனது ஸ்கார்பியோவில் தனது பாடிகார்ட்ஸ் உடன் கிளம்பினான்.

மலருக்கு சந்தோஷமாக தலை பின்னி கொண்டிருந்தாள் சௌமியா. அவளைப் பொறுத்த வரை இன்றோடு அனைவரின் பிரச்சனையும் முடிந்தது. மகேஷ் மாமாவுடன் சுவாதி சேர்ந்து விடுவாள். தன் அண்ணன் அண்ணியுடன் சேர்ந்து விடுவான்... இனி எந்த பிரச்சனையும் வராது.
தானும் தன் மாமாவுடன் சந்தோஷமாக வாழப்போகிறோம் என்று தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருந்தவளை... மலரின் குரல் நினைவுக்கு கொண்டு வந்தது.
" உன்னோட போன் அப்பவே வச்சு ரிங் ஆகுது ... இந்த உலகத்துல இருக்க சௌமி சீக்கிரம் எடுத்து பேசு" என்று தன் தலை முடியை சரி செய்து கொண்டே நகர்ந்து விட்டாள் மலர்...

இன்னும் சௌமியாவிடம் ஒழுங்காக பேசவில்லை என்றாலும் முகத்தையும் தூக்கிக்கொண்டு வைத்திருக்கவில்லை மலர்...
நந்தன் தான் சௌமியாவிற்கு அழைத்திருந்தான்....
"சொல்லுங்க நந்தா மாஸ்டர்... என்ன விஷயம் "என்று கேட்டாள் சௌமியா.
" இங்க ஹாஸ்பிடலுக்கு வந்தேன் மகேஷ் சார் டிஸ்சார்ஜ் ஆகிட்டாரா?" என்று கேட்ட நந்தனின் குரலில் லேசாக பதட்டம் இருந்தது.
"ஆமா... நந்தா மாஸ்டர் நாங்க எல்லாரும் அப்பவே கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம்"
" அப்படியா சரி சரி ....அதுவந்து... அது..வந்து மலர் என்ன பண்ணுறா?" என்று திக்கி திணறி அவன் கேட்க...
"அவசரமா கிளம்பிட்டு இருக்கா..."
" எங்க ?"
" எங்க அண்ணன் வீட்டுக்கு தான் போகப் போறா... திரும்பவும் அண்ணாவும் மலரும் சேர்ந்து வாழ போறாங்க..." என்று குதுகலத்துடன் சௌமியா சொல்ல...
அந்தப்புறம் அமைதியே பதிலாக கிடைத்தது...
" லைன்ல இருக்கீங்களா... ஹலோ.... நந்தா மாஸ்டர் நந்தா மாஸ்டர் "என்று கத்திக் கொண்டிருந்தாள்.

அந்தோ பரிதாபம்.....
மலர் மீண்டும் ஆதித்யா உடன் வாழ போகிறாள் என்று சௌமியா சொன்ன அடுத்த கணமே மொபைலை போட்டு உடைத்து இருந்தான் நந்தன்.

"என்னாச்சு லைன் கட் ஆயிடுச்சு..." என்று புலம்பிக் கொண்டே திரும்பியவள்... சரத் அவளை முறைத்துக்கொண்டு இருப்பதை பார்த்ததும் என்ன? என்று கேட்டாள்.
அவள் கையிலிருந்து மொபைலை பிடுங்கி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன்...
"மியாவ் போய் மாமாவுக்கு லெமன் ஜூஸ் போட்டு கொண்டு வா ..."
அவனை வித்தியாசமாக பார்த்தவள், "லட்சுமி ஆண்ட்டி கிட்ட கேக்க வேண்டியது தானே" என்றதும்,
"நான் ஒன்னும் அவங்கள கல்யாணம் பண்ணல உன்ன தான் கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கேன்...." என்று சிடுசிடுத்தவன் "போ போ" என்று அவளை அங்கிருந்து விரட்டினான்.
"என்னாச்சு இவருக்கு வரும்போது நல்லா தானே பேசினார்... திடீரென வேதாளம் முருங்கை மரம் ஏறுது" என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் சௌமியா.

"நந்தா மாஸ்டராம் நந்தா மாஸ்டர் கடுப்பேத்துறா நல்லா" என்று செல்லும் அவளை முறைத்துக் கொண்டே சோபாவில் சென்று அமர்ந்தான் சரத்.

இங்கு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மகேஷின் அருகே அமர்ந்திருந்த சுவாதியை ஒரு பொருட்டாக மதிக்காமல் வானதி உடன் பேசிக்கொண்டிருந்தான் மகேஷ்.
வந்ததிலிருந்து தன்னிடம் முகம்கொடுத்து பேசாத கணவனை கண் கலங்க பார்த்து கொண்டிருந்தாள் சுவாதி....
இவனை இப்படியே விட முடியாது என்று நினைத்து...
"வானதி குட்டி சௌமியா சித்தி கூட போய் விளையாடு" என்று அவளை வெளியே அனுப்பினாள்.

குழந்தை வெளியே சென்றும் கூட தன் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்த மகேஷை பார்த்து,
"ஏங்க அதான் உங்க தங்கச்சி புருஷன் வீட்டுல போய் வாழ போறால்ல ...எதுக்கு இப்போ முகத்தை திருப்பி விட்டு உட்கார்ந்து இருக்கீங்க..."

".........."

"அப்போ பேச மாட்டீங்களா? என்கிட்ட... ஏதோ என் தங்கச்சி மேல உள்ள பாசத்தால தப்பு பண்ணிட்டேன். அதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?"

"..........."

"ப்ளீஸ் மகி இப்படி இருக்காதீங்க என்னால தாங்க முடியல" என்று சுவாதி உடைந்து அழுகவும்...

முகத்தின் கடினம் மாறாமல்...
" என்னோட காதல நீ கொச்சைப்படுத்திட்ட.... உன் மேல நா வச்ச நம்பிக்கையை நொறுக்கிட்ட அப்பவே உன்னோட மகி செத்து போயிட்டான்... இப்போ இருக்குறது... வானதி அப்பா மட்டும் தான்..." என்றவன்,
மீண்டும் முகத்தை திருப்பி கொண்டு பேச பிடிக்கவில்லை என்ற தோற்றத்துடன் அமைதியாக விட, சுவாதி கண்ணீரோடு எழுந்து வெளியே வந்துவிட்டாள்.

வெளியே மலர் வானதிக்கு சிரித்துக்கொண்டே உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்ததும் சுவாதியின் முகம் உக்கிரமாக மாறி அவளை முறைத்துக் கொண்டிருக்கும்போதே....

"ஹேய் மியாவ் நில்லு ஜூஸ் குடிக்காம போறியே... மாமா தாரேன் நில்லு" என்று சௌமியாவை சரத் துரத்த,
சௌமியா வெட்கப் புன்னகையுடன் ஓடிக்கொண்டிருந்தாள்.
இங்கே இருக்கும் அனைவருக்கும் வாழ்க்கை சீராக மாறிவிட்டது.
என் வாழ்க்கை மட்டும் தான் பட்ட மரமாக மாறிவிடும் போல... என்று நினைத்தவள், மலரை வன்மமாக பார்த்து, "எல்லாத்துக்கும் காரணம் நீதாண்டி உன்ன அவ்வளவு சீக்கிரம் சந்தோஷமா வாழ விட்டுடுவேனா? உன் சந்தோஷத்துக்கு ஆப்பு வைக்கிறேன் இருடி" என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டிருந்தாள் சுவாதி.

சிறிது நேரத்திலே ஆதித்யா வரவும் குடும்பத்தோடு அனைவரும் அமர்ந்து உணவு உண்டனர்.
உணவிற்குப்பின் மகேஷ் தான் இந்த வீட்டிலேயே வானதி சுவாதியுடன் இருந்து கொள்வதாக சொல்ல ஆதித்யா மறுக்கவில்லை சரி என்று விட்டான்.

"ஆனா வேலைக்கு என்னோட கம்பெனிக்கு தான்... நீ கண்டிப்பா வரணும்" என்று ஸ்ட்ரிக்டாக ஆதித்யா சொல்லவும்....

"முடியவே முடியாது... நானே என்னோட தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு வேலை தேடிப்பேன். நீ அதைக் கெடுக்காம இருந்தால் மட்டும் போதும்" என்று மகேஷ் உறுதியாக சொன்னதும் ஆதித்யா சுவாதியை பார்க்க அவளோ அவர்களின் பேச்சை கண்டுகொள்ளவே இல்லை.
"சரி உன்னோட இஷ்டம்" என்று தோளை குலுக்கினான் ஆதித்யா.

சிறிது நேரம் பேச்சு, அரட்டை, சிரிப்பு என்று கழிய,
"சரி நாங்க கிளம்புறோம் லேட் ஆகிட்டு ..."என்று யாரின் பதிலையும் எதிர் பார்க்காமல் ஆதித்யா வெளியே வந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

அவனது குணத்தை அறிந்ததால் யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
சிறிது நேரத்திலேயே மலர் கிளம்பி அவளது லக்கேஜை பேக் செய்து கொண்டு வெளியே வர, மகேஷ் தங்கையின் தலையை பரிவுடன் தடவி விட்டு, "உனக்கு அண்ணா இருக்கேன்டா... ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லு உனக்குள்ளே வெச்சுகாத.. இனி அதுதான் உன் குடும்பம் பார்த்து நடந்துக்கோ" என்றான்.
அவனை "அண்ணா" என்று பாசமாக அணைத்துக் கொண்ட மலர், அண்ணன் அண்ணி இருவரையும் சேர்ந்து நிற்க சொல்லி... அவர்கள் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

சுவாதியின் முகம் எந்த உணர்வையும் காட்டாமல் இருக்க மகேஷ் மனதார அவளுக்கு ஆசிர்வாதம் செய்தான்.
சுவாதியின் அருகே நின்று கொண்டிருந்த வானதியை தூக்கி முத்தமிட்டு," அத்தை போயிட்டு வாரேன்" என்று கொஞ்சிய மலர்...
அடுத்து சிரித்த முகமாக நின்ற சௌமியா சரத் ஜோடியின் அருகே வந்து "போயிட்டு வாரேன் சௌமியா... போயிட்டு வரேன் சரத் அண்ணா...." என்று விடை பெற்றாள்.

"மலர் சிஸ்டர் உங்களுக்கு மகேஷ் அண்ணா மட்டும் இல்ல.... இந்த சரத் அண்ணாவும் உங்களுக்கு தான் சப்போர்ட் ... பத்திரமா போயிட்டு வாங்க..." என்று விடை கொடுத்தான்.
அவனிடம் சரி என்பது போல் தலை அசைத்த மலர்விழி,
சௌமியாவிற்கு சிறு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு ஆதித்யாவின் காரில் ஏறி அமர்ந்தாள்.

அனைவரிடமும் தலையசைத்து விடை கொடுத்த ஆதித்யாவின் உணர்ச்சிகளைப் போல காரும் வேகமெடுத்தது.

காரில் ஏறியதில் இருந்து அவனது முகத்தை கூட பார்க்காமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவாறு அந்த கொண்டிருந்தாள் மலர்.
அதை கவனித்த ஆதித்யாவின் கோபம் எல்லை மீற காரை நிறுத்திவிட்டு அவளை தன் பக்கம் திருப்பி, "என் வீட்டு வாசல்ல நீ காலடி எடுத்து வைக்கும் போது இந்த ஆதித்யா சக்கரவர்த்தியோட மனைவியா தான் நீ வரணும்... நான் சொல்றதுதான் நீ கேக்கணும்" என்று மிரட்டிவிட்டு மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தான்.

மலர் பதிலேதும் பேசவில்லை எதிர்பார்த்தது தான் என்பது போல் அமைதியாக இருந்தாள்.
அந்த அமைதி கூட ஆதித்யாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை. எல்லாரிடமும் சகஜமாக பேசுபவள் தன்னிடம் ஏன் இப்படி இருக்கிறாள்?

தன் அம்மாவின் ஞாபகம் வர, அவரும் இப்படிதான் அமைதியாக இருந்து அப்பாவின் கழுத்தறுத்து விட்டு சென்றார்.... அப்படியென்றால் மலரும் என்னை விட்டு சென்று விடுவாளா? என்று நினைத்து உள்ளுக்குள் மறுகியவன் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
காரின் வேகத்தை பார்த்து மலருக்கு வயிற்றினுள் பய பந்துக்கள் உருண்டாலும் அவள் வெளியே எதுவும் சொல்ல வில்லை.
கார் ஆதித்யாவின் வீட்டை வந்தடைந்ததும், காரிலிருந்து இறங்கிய மலரின் கைகளை பற்றிக்கொண்டு அவளை உள்ளே அழைத்து சென்றான் ஆதித்யா.
அவர்களின் பின்னே மலரின் லக்கேஜை எடுத்துக்கொண்டு பணியாளரும் வந்து கொண்டிருந்தார்.

அவன் பிடித்திருந்த கையின் அழுத்தம் மலருக்கு வலியை கொடுக்க கையை உருவிக் கொள்ள முயன்றவளை பார்த்து உறுத்து விழித்தான் ஆதித்யா.

அவனது பார்வை உள்ளுக்குள் கிலியை ஏற்படுத்த பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டு அவன் பின்னால் சென்றாள்.

மலரை அவனது அறைக்கு அழைத்து சென்ற ஆதித்யா பணியாளரிடம் லக்கேஜை வைத்து விட்டு செல்ல சொல்லி பணித்தான்....
அவர் லக்கேஜை வைத்து விட்டு நகரவும்,

"வெல் மலர் ஆதித்யா சக்கரவர்த்தி இனி இதுதான் நம்மோட ரூம்... நமக்கு மட்டுமே சொந்தமான ரூம்"என்றவன் நிதானமாக அவளின் அருகில் வந்தான்.

அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று மலருக்கு பயத்தையும் படபடப்பையும் கூட்ட... மலரின் கால்கள் அவளையுமறியாமல் பின்னால் நகர்ந்தது....
அவள் தன்னை விட்டு விலகுவது பிடிக்காமல்,
எட்டி அவளது கைகளை பிடித்து இழுத்து சுவரோடு சாய்த்தவன்... அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்து "ஐ லவ் யூ ஆதித்யான்னு சொல்லு.." என்றான்.

அவனை வேற்றுக்கிரக வாசி போல் பார்த்தவள், "நான் எப்படி?"என்று தயங்கினாள்.

"சொல்லு..." என்று ஆதித்யா அழுத்தமாக சொல்லியும் மலர் சொல்லாமல் இருக்க...

"அப்போ உன்னோட மனசுல இன்னும் அந்த நந்தா இருக்கானா...? அவன் இருக்கக்கூடாது... அவன் இருக்கக்கூடாது..." என்று வெறி பிடித்தவன் போல் கத்திய ஆதித்யா,
மலரின் தாடையை பிடித்து தன் பக்கம் திருப்பி, "கடைசியா கேக்கறேன் சொல்லு.... ஐ லவ் யூ ஆதித்யான்னு சொல்லு..."
மலர் சட்டமாக நின்றாலே தவிர அந்த வார்த்தையை மட்டும் சொல்லவில்லை.
அவள் கண்களில் தெரிந்த உறுதியில் கோபம் தலைக்கேற,
"நீ சொல்ல மாட்டல்ல... அப்போ... இரு உன்ன சொல்ல வைக்கிறேன் டி" என்றவன் அவளின் முகத்திற்கு அருகே குனியவும், மலரின் கண்கள் சாசர் போல் பயத்தில் விரிந்தது....

அவளின் கண்களில் பயத்தை பார்த்த ஆதித்யா அதற்குமேல் நெருங்க முடியாமல் அவளை உதறி தள்ளி விட்டு விடுவிடுவென்று வெளியேறி விட்டான்....
கீழே விழுந்த மலரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

தொடரும்...
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN