ஆதித்யா சக்கரவர்த்தி-10

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்10



நந்தன் மலரின் மீது கோபமாக இருந்தாலும் நொடிக்கொரு முறை அவள் அழைப்பாளா? மெசேஜ் செய்வாளா?என்று பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அவன் தன் இடத்தில் இருந்து இறங்கி அவளிடம் சென்று பேச தயாராக இல்லை. அதை அவனது ஈகோ தடுத்தது. பின்னே அவள்தானே முகத்தில் அடித்தது போல் முதலில் அழைப்பை துண்டித்தது.... அப்படி என்றால் அவள் தான் தன்னிடம் முதலில் பேச வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் மலரே அவனுக்கு முதலில் மெசேஜ் அனுப்பவும், நந்தனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


மலருக்கு தன்மீது காதல் இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்து அக மகிழ்ந்து போனான்.


அவளது முதல் மெசேஜ்க்கு ரிப்ளை செய்தவன்,அடுத்த மெசேஜை பார்த்தவுடன் அவனால் பதில் அனுப்ப முடியவில்லை. மலரை நேரில் சென்று பார்த்து தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தோன்ற நொடியும் தாமதிக்காமல் ஆதித்யாவின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான் நந்தன். வரும்வழியில் மலரை சந்தோஷப் படுத்துவதற்காக புது சுடிதார் செட் ஒன்றை கூட வாங்கினான்.

ஆனால் இங்கு வந்து பார்த்தால் மலர் அந்த ஆதித்யாவுடன் ஷாப்பிங், சினிமா என்று ஊர் சுற்ற சென்று விட்டாள் என்றாள் சௌமியா.

உள்ளுக்குள் கோபம் எரிமலையாக வெடித்தாலும் முகத்தில் புன்னகையுடன் சௌமியாவிடம் பேசிவிட்டு வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்தான் நந்தன். ஆனால் அவளோ கல்லூரி கதைகள் அது...இது என்று பேசி அவனது மனதை மாற்றி விட்டாள். சௌமியா மலரை போல் அளவோடு பேசுபவள் அல்லவே...!!

பழைய கதைகளை பேசி அவனை சிரிக்கவைத்து நார்மல் ஆக்கினாள் சௌமியா. அவளது நட்பு நந்தனின் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அதேசமயம் மலரின் மீது கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது.

அவர்களுடன் படித்த பலருக்கு திருமணம் முடிந்திருந்தது. அதைப் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.


"அந்த தொப்பை சுரேஷுக்கு போன மாசம்தான் இரண்டாவது குழந்தை பிறந்துச்சு" என்று நந்தன் சொல்ல


"அப்போ சுரேஷ் வயதுக்குள்ள ரெண்டு குழந்தைங்க இருந்துச்சா" என்று சந்தேகம் கேட்டு அவனை சிரிக்க வைத்தாள் சௌமியா.


இருவரும் கலகலவென பேசிக்கொண்டிருக்க நந்தனின் மனது மலரின் மீதிருந்த கோபத்தை சற்று ஒதுக்கி வைத்தது.


இடையில் சௌமியாவின் திருமணத்தை பற்றி பேச்சு எழுந்தது. சௌமியா முழுவதுமாக சொல்லவில்லை என்றாலும் இரண்டு நிச்சயதார்த்தம் உடைந்ததை பற்றி சொல்லிக் கண் கலங்கினாள்.


"நான் ரொம்ப அண் லக்கி நந்தா மாஸ்டர்... எல்லாத்துலயும் அண் லக்கி" என்று கண் கலங்கியவளது வருத்தம் கண்டு மனம் இளகிய நந்தன், அவளது கைகளை தட்டி கொடுத்து ஆறுதல் படுத்தினான். சௌமியா உள்ளுக்குள் வஞ்சகமாக வெற்றி சிரிப்பு சிரித்தாள். மேலும் வேலைக்காரர்கள் பேசியது, தோழிகள் கிண்டல் செய்தது, எல்லாவற்றையும் கூறி நந்தனின் அனுதாபத்தை பெற்றாள்.

நந்தனின் மனது தனது தோழிக்காக வருத்தப்பட்டது...


அவளது உண்மையான முகம் தெரியாமல்...?

இங்கு ஷாப்பிங் வந்த மலரின் கண்கள் அவளது மொபைலில் தான் அதிகமாக இருந்தது. நந்தன் அவளது கடைசி மெசேஜ்க்கு பதில் அளிக்கவே இல்லை.

வானதி வேறு,அத்தை அது நல்லா... இருக்குல்ல... இது ரொம்ப நல்லா இருக்குல்ல... என்று கேட்டுக் கொண்டே வந்தாள். எல்லாவற்றிற்கும் ஆம் என்பது போல் தலையை மட்டும் அசைத்து கொண்டுவந்தாள்.

ஆதித்யா மலரை பார்த்துக்கொண்டே தான் அவர்கள் பின்னே வந்துகொண்டிருந்தான்.

மலரின் கண்கள் மொபைலில் இருப்பதை கண்டவுடன் அவளது கைகளிலிருந்து அதை பறித்துக் கொண்டான். மலர் அவனது திடீர் செய்கையில் திடுக்கிட்டு அவனை பார்க்க, "குழந்தைய முதல்ல கவனி... மொபைல் எங்கேயும் ஓடி போகாது" என்றான் எரிச்சலுடன்...

அதன்பிறகு மலர் வானதிக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து வாங்கி கொடுத்தாள். ஒருவழியாக ஷாப்பிங் முடிந்தது என்று மலர் நினைத்தாள். ஆனால் குழந்தைக்கு உடை எடுக்க வேண்டும் என்று மீண்டும் பெரிய துணிக்கடைக்கு அழைத்து சென்றான் ஆதித்யா. மலருக்கு எரிச்சலாக தான் வந்தது. ஆனால் அழைத்து வந்தது ஆதித்யா அவனிடம் இவள் என்ன சொல்வது?

குழந்தைகளுக்கான உடைகள் இருக்கும் பகுதிக்கு இருவரையும் அனுப்பிவிட்டு, "இன்னும் கொஞ்ச நேரம் நந்தாவை நம்ம வீட்டிலேயே பிடிச்சு வச்சுக்கோ.." என்று சௌம்யாவுக்கு மெசேஜ் அனுப்பி விட்டான்.

சௌமியா ஏற்கனவே ஆதித்யாவிற்கு நந்தன் வந்துள்ளதை மெசேஜ் மூலமாக தெரிவித்து இருந்தாள். ஆதித்யாவின் மூளை படுவேகமாக திட்டங்களைப் போட்டது.

ஆதித்யா மீண்டும் உள்ளே செல்லும் பொழுது வானதிக்கு எல்லா உடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு சீக்கிரம் உடை எடுப்பார்களா? என்று மீண்டும் ஆச்சரியப்பட்டான் ஆதித்யா. அவனது இரு தங்கைகளும் ஒரு ஆடையை எடுப்பதற்குள் கடையையே ஒரு வழி ஆக்குவார்கள்.

அவன் உள்ளே வந்ததை பார்த்ததும், வானதியை கூட்டிக் கொண்டு அவன் அருகில் வந்தவள்,

"சௌமி அண்ணா வீட்டுக்கு போவோமா?" என்று கேட்டாள் மலர்.

"சௌமிக்கும் சுவாதிக்கும் டிரஸ் எடுக்கணும் கடைக்கு வந்துட்டு அவங்களுக்கு எடுக்காமல் போக எனக்கு மனசில்ல" என்று உடனே மறுத்துவிட்டான் ஆதித்யா.


லேடிஸ் செக்ஷன்க்கு மூவரும் செல்லும்பொழுது, வானதியை ஆதித்யா தூக்கி வைத்துக் கொண்டான்.

"கொஞ்சம் நீயே செலக்ட் பண்ணி குடுத்துடு" என்று ஆதித்யா சொன்னவுடன் தயங்கினாள் மலர் "எனக்கு அவங்களோட டேஸ்ட் எப்படின்னு தெரியாது சௌமி அண்ணா... நீங்களே செலக்ட் பண்ணுங்க"என்று மலர் நழுவ பார்க்க...

"நீ என்ன செலக்ட் பண்ணாலும் அது எல்லாருக்கும் பிடிக்கும்..." என்று வானதியை தூக்கிக்கொண்டு நகர்ந்து விட்டான் ஆதித்யா.


சுவாதி ஏதாவது விழாவிற்கு சென்றால் மட்டுமே புடவை அணிவது பார்த்திருக்கிறாள். அவளது நிச்சயதார்த்தத்திற்கு கூட புடவையில் தான் வந்திருந்தாள். சுவாதி எப்பொழுதும் போடுவது சுடிதார் தான்.

சௌமியா எப்பொழுதும் ஜீன்ஸ்,ஜெகின்ஸ், லெகின்ஸ் போட்டு அதற்கேற்றவாறு மேலே ஷார்ட் டாப் ஆர் லாங் டாப் அணிந்து இருப்பாள். அவளுக்கு துப்பட்டா போடும் பழக்கம் அறவே இல்லை. அப்படியே துப்பட்டா போட்டு இருந்தாலும் அது அவளது கழுத்தோடு ஒட்டிக் கிடக்கும் அல்லது ஒருபக்க தோளில் தொங்கிக்கொண்டிருக்கும் கேட்டால் ஃபேஷன் என்பாள்.

மலரின் அம்மா சுமதிக்கு அவள் இரண்டு பக்கமும் துப்பட்டாவை போட்டு பின் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான்...

மலருக்கு அன்று முழுவதும் காதில் இருந்து ரத்தம் வராத குறையாக அட்வைஸ் மழையை பொழிவார். தோழிகள் வற்புறுத்தினாலும், ஏன் பட்டிக்காடு என்று கிண்டல் செய்தாலும் அவள் துப்பட்டா போடாமல் வெளியே சென்றதில்லை. அவள் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். அதனாலேயே மலரிடம் அனைவரும் நட்பு பாராட்டுவார்கள். அதற்கெல்லாம் மூலக் காரணமே அவளது அம்மா சுமதி தான்.... அந்த அளவிற்கு ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்திருந்தார் . ஆனால் சுயநலத்தையும் கள்ளத் தனத்தையும் அவளுக்கு கற்றுக் கொடுக்கவில்லை அதுதான் அவள் வாழ்வில் விளையாட தயாராகியது.

அம்மாவின் நினைவில் லேசாக கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டாள் மலர். அவள் அம்மா இப்போது இருந்திருந்தால் அவளுக்கு ஆசை ஆசையாக அல்லவா உடைகள் எடுத்திருப்பார்.உடை விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாலும் உடைகள் பார்வைக்கு பளிச்சென்றும் மற்றவர்களின் கண்ணை உறுத்தாத உடைகள் நிறையவே எடுத்துக் கொடுப்பார்.அவளது அப்பாவிற்கு மலர் தாவணி அணிந்தால் ரொம்பவும் பிடிக்கும்.அவளது அம்மாவோ மகாலட்சுமி என்று நெட்டி முறிப்பார். இப்பொழுது யார் அவளுக்கு உடை எடுத்துத் தருவது? அவள் போட்டாலும் தான்... யார் அழகு பார்ப்பது? அவளுக்கு தான் யாருமே இல்லையே... மனதில் தோன்றிய விரக்தியை விரட்ட நந்தன் இருக்கிறானே! என்றது மனம்....


அவனிடம் சீக்கிரம் பேச வேண்டுமே! என்ற உந்துதலில் வேகவேகமாக உடைகள் எடுக்க தொடங்கினாள் மலர்.


இருவருக்கும் எந்த நிறம் பிடிக்கும்... என்று அவர்கள் அடிக்கடி போடும் உடையிலிருந்து யூகித்து அவளே அவர்களுக்கு உடைகள் எடுத்தாள். சுவாதிக்கு மூன்று புடவைகள், இரண்டு செட் சுடிதார் எடுத்தவள்...


சௌம்யாவுக்கு முதலில் அவள் எப்பொழுதும் போடும் ஜீன்ஸும் ராயல் ப்ளூவில் வெள்ளை நிற பூக்கள் போட்ட ஒரு டாப்ஸும் எடுத்தாள். ஆதித்யா ஆளுக்கு ஐந்து உடைகள் எடுக்க சொல்லி இருந்ததால்...சௌமியாவிற்கு ஏற்றவாறு 3 செட் டாப்சும் அதற்கேற்ற லெகின்ஸ் எடுத்தாள்.இன்னும் ஒரு உடைக்கு என்ன எடுப்பது என்று யோசித்தவள், ஆகாய நீல நிற காட்டன் மிக்ஸ்ட் சில்க் புடவை ஒன்றை எடுத்தாள். சௌமியாவின் நிறத்திற்கு அது கண்டிப்பாக பொருந்தும் என்று நினைத்தாள். தேர்ந்தெடுத்த உடைகளுக்கு சேல்ஸ் உமனிடம் பில் போட சொன்னாள். ஆனால் அவரோ அவளை வித்தியாசமாக பார்த்துவிட்டு சென்றதை மலர் உணரவில்லை


ஆதித்யா எங்கே? என்று சுற்றுமுற்றும் தேடினாள். அவன் இல்லாது போக வெளியே வந்து பார்த்தாள். அவள் தேடுவதை உணர்ந்த அங்கு வேலை செய்யும் ஒருவன் அவளிடம் ஓடி வந்து "சார் செகண்ட் ப்ளோர் ல இருக்கிறார் மேடம்"என்றான்.


மலர் கை கடிகாரத்தை பார்த்தாள் 7 மணியாக பத்து நிமிடங்கள் இருந்தன. அவர்கள் வந்ததோ 4 மணி... தாமதமாவதை உணர்ந்து, அவனை சீக்கிரம் கிளம்ப சொல்லவேண்டும் என்று நினைத்து ஆதித்யா இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

ஆதித்யா மலரை பார்த்ததும், "எனக்கும் கொஞ்சம் செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணு" என்றான்.


மலர் தயக்கத்துடன், நேரமாவதை சொன்னாள்.

"அப்போ இவ்வளவு தூரம் வந்துட்டு நான் ஷர்ட் எடுக்காம போகணுமா?" என்று ஆதித்யா அரட்டவும்,

மலர் மிரண்டு, "எடுத்துட்டே போகலாம்" என்று விட்டாள்.


ஆதித்யா இது நல்லாயிருக்கா? என்று கேட்டதும் மலர் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள். அதன்பிறகு அவன் காட்டிய அனைத்திற்கும் அவள் நல்லா இருக்கு.. ஆமா ரொம்ப நல்லா இருக்கு... என்று மட்டும்தான் சொன்னாள்.அதை கவனித்த ஆதித்யாவிற்கு கோபம் வந்தது.

"நந்தனுக்கு மட்டும்தான் நீ செலெக்ட் பண்ணுவியா?" என்று ஆதித்யா ஒரு மாதிரி குரலில் கேட்கவும்...

"இல்ல சௌமி அண்ணா..." என்று தயங்கினாள் மலர்.

"இப்போ நீதான் செலக்ட் பண்ற" என்று விட்டு அவன் நகர்ந்துவிட,


கைகளை பிசைந்து கொண்டு நின்ற மலர் வேறு வழி இல்லாமல் தனக்கு நன்றாக இருப்பதாக தோன்றிய உடைகளை அவனுக்கு செலக்ட் செய்தாள்.

அவள் தேர்ந்தெடுத்த அனைத்துமே நன்றாக இருந்தாலும் விலையில் அப்படி ஒன்றும் உயர்ந்தது இல்லை... அதை கவனித்த ஆதித்யா,


"இது என்னோட கடைதான்...அதனால எவ்வளவு ரேட் ஆனாலும் பரவாயில்லை" என்று முணுமுணுத்தான்.

"ரேட்ட பாக்காதீங்க சௌமி அண்ணா... இது எல்லாமே நல்ல தரமான டிரஸ் தான். அதனாலதான் எடுத்தேன்" என்றவள்...

"அப்பாவுக்கு சொந்தமா சின்னதா ஒரு டெக்ஸ்டைல் ஷாப் இருக்கு... நான் அங்க அடிக்கடி போறதால, எனக்கு இத பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்று குனிந்த தலை நிமிராமல் கண்ணீரை கட்டுப்படுத்தினாள்.

அதன்பிறகு ஆதித்யா அவளை எதுவும் சொல்லவில்லை. வானதி தான் அவனிடம் விடாமல் ஐஸ்கிரீம் கேட்டுக்கொண்டே இருந்தாள். அவளிடம் ஷாப்பிங் முடித்ததும் வாங்கலாம் என்று சொல்லி அடக்கி வைத்தான்.

மலர் எல்லாம் முடிந்தது என்று நினைத்த நேரம் ஆதித்யா, அவளுக்கும் உடைகள் எடுத்துக்கொள்ள சொன்னான். மலர் உடனே மறுத்துவிட்டாள். அவளிடம் நிறைய உடைகள் இருப்பதாக பொய் சொன்னாள். அவளை மேலே கீழே ஒரு முறை பார்த்தவன், "கரெக்டா அஞ்சு செட் ட்ரஸ் தான் நீ வச்சிருக்கணும்... அதைத்தான் மாத்தி மாத்தி போடுற மாதிரி இருக்கு" என்று சரியாக ஊகித்துக் கூறினான்.

மலர் உள்ளே எழும்பாத குரலில், "என்னோட வீட்ல நிறைய டிரஸ் இருக்கு, போய் ஒரு நாள் எடுத்துட்டு வரணும்... இங்க கம்மியா தான் இருக்கு" என்றாள்.

"அப்போ இப்ப எடுக்கிறதுல்ல எந்த பிரச்சினையும் இல்லையே?"என்று விடாமல் அதிலேயே நின்றான் விடாக்கண்டன் ஆதித்யா.


அதற்குமேல் ரொம்பவும் பிகு பண்ண விரும்பாமல், இரண்டு காட்டன் சுடிதார் மட்டும் எடுத்துக் கொண்டாள். ஆனால் ஆதித்யா அவனே பிங்க் கலரில் வெள்ளை நிற கற்கள் பதித்த சல்வார் ஒன்றை தேர்ந்தெடுத்து அவளுக்கு கொடுத்தான். மலர் மறுத்தும் அவன் விடாததால் அதையும் வாங்கிக்கொண்டாள். ஆனால் அண்ணன் திரும்பி வந்ததும், ஆதித்யாவிடம் தன் உடைக்கான பணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் வாங்கிய முடித்தவர்கள் கடையை விட்டு வெளியே வந்தனர்.

அங்கு வேலை செய்பவர்கள் அவர்கள் வாங்கிய துணிப்பைகளை ஆதித்யாவின் காரின் பின்சீட்டில் கொண்டு வைத்தனர். அதனால் மலர் முன் இருக்கையில் அமர வேண்டியதாக போயிற்று. அவளது மடியில் வானதி அமர்ந்துகொண்டாள். வரும்பொழுது மலர் வானதி இருவருமே பின் இருக்கையில் தான் அமர்ந்து வந்தனர். அதனால் மலருக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை. முன் இருக்கையில் வந்தமர்ந்ததும் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தாள்.

ஆனால் ஆதித்யா தான் டிக்கியில் வைக்கவேண்டிய பைகளை பின்னிருக்கையில் வைக்க சொன்னான் என்று அவளுக்கு தெரியாதில்லையா?

மணி 8 ஆகியிருந்தது ஆதித்யா அவளது மொபைலை அப்பொழுதுதான் கையில் கொடுத்திருந்தான் மூன்று புது மெசேஜ்கள் வந்திருந்தது... நந்தனிடமிருந்து...

அவளைப் பார்க்க அவன் ஆதித்யாவின் வீட்டிற்கு வந்திருப்பதாகவும்... சௌமியா உடன் பேசி கொண்டிருப்பதாகவும்... சீக்கிரம் வருமாறும்... அனுப்பியிருந்தான்.

அவன் 7 40-க்கு தான் மெசேஜ் செய்திருந்தான். இப்பொழுது எட்டுதான் ஆகிறது..... நந்தனுக்கு "வந்து கொண்டிருக்கிறேன்" என்று மட்டும் பதில் அனுப்பினாள்.


சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடலாம் அவனிடம் பேசி விடலாம் என்று சந்தோஷமாக வந்தாள் மலர்.


ஆனால் கார் வீட்டிற்கு செல்லாமல் ஒரு உணவகத்திற்கு சென்றது. மலரின் பொறுமை பறந்தது.


"சௌமி அண்ணா வீட்டுக்கு போகலாம். எனக்கு சாப்பாடு வேண்டாம்." என்றாள் மலர்.

ஆதித்யா அவளை முறைத்தான்.

"உனக்கு சாப்பாடு வேண்டாம்னா, குழந்தை பட்டினியா இருக்கனுமா?
அவ சாப்பிடற டைமுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டாமா...
என்றவனை புரியாமல் பார்த்தாள் மலர்.

இன்னும் 5 நிமிடங்களில் வீட்டிற்கு சென்று விடும் தூரம் தான். அங்கு சென்று சாப்பிட்டால் போயிற்று.
ஐந்து நிமிடத்தில் என்ன ஆகிவிடப் போகிறது? என்று நினைத்தவள் வெளியில் எதுவும் சொல்லவில்லை. பின்பு அதற்கும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று அமைதியானள்.
மூவருக்குமே ஆடர் செய்தவன் ஆடர் வரும்வரை மலரிடம் பேச்சு கொடுத்தான்.

"எப்ப கல்யாணம் பண்றதா இருக்கீங்க?"
என்று ஆதித்யா கேட்கவும்,

"அண்ணன் வந்ததுக்கு அப்புறம் தான் எதை பத்தியும் பேச முடியும்" என்றவள்,

"அண்ணா எப்போ வருவாங்க? சௌமி அண்ணா" என்று அவனிடமும் கேள்வி கேட்டாள்.

"இன்னும் டூ வீக்ஸ் ஆகும்" என்றான் ஆதித்யா.

இரண்டு வாரத்தில் அண்ணன் வந்துவிடுவான் என்றதும்
மலரின் மீன் போன்ற விழிகள் பளிச்சென்று விரிந்து பளபளத்தது. அது ஆதித்யாவையும் கவர்ந்தது.


"உன்னோட கண்ணு ரொம்ப அழகா இருக்கு மலர்" என்று ஆதித்யா ரசனையுடன் சொன்னதும், அவனை திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் மலர். அவள் அப்பாவியாக இருக்கலாம்! ஆனால் முட்டாள் இல்லையே! ஏதோ உள்ளுக்குள் நெருடியது மீண்டும் நேற்று அவன் அறையில் பேசியதை நினைத்து பார்த்தவளுக்கு பேச நா எழவில்லை.


நந்தன் சொல்வதுபோல் நான் இவனிடம் எட்டி நின்றுதான் பேசவேண்டும்... இப்பொழுதும் அப்படித்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்தாள் மலர்.

உணவு வந்ததும் மௌனமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினர். மலர் வீட்டிற்கு வரும் வழியில் தூங்குவது போல கண்களை மூடி ஆதித்யாவிடம் பேசுவதை தவிர்த்தாள். வானதி உண்மையாகவே மலரின் மடியில் படுத்து தூங்கி விட்டாள்.


கண்களை மூடி படுத்திருந்த மலருக்கு கார் நிற்பது புரிந்தது. இருந்தாலும் நடிப்பை விடவில்லை. ஆதித்யா கூப்பிடுவான்... அதன்பிறகு இறங்கலாம். இப்பொழுதே விழித்தால், தனது நடிப்பு தெரிந்துவிடும் என்று நினைத்து கண்களை மூடி தான் இருந்தாள்.


இங்கோ நந்தனின் பொறுமை பரந்து விட, அவன் தன் வீட்டிற்கு கிளம்புவதாக கூறி விட்டு வெளியே வந்தான். அதற்குமேல் அவனை பிடித்து வைக்க முடியாமல் அவனை வழி அனுப்புவதற்காக சௌமியாவும் வந்தாள். அவர்கள் வெளியே வருவதற்கும் ஆதித்யாவின் கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

தன் கன்னத்தில் ஏதோ ஊர்வது போல் இருக்கவும் திடுக்கிட்டு கண் விழித்தாள் மலர்.

ஆதித்யா தான் ஏசி காற்றில் ஆடிக் கொண்டிருந்த அவளது முடியை காதோரம் ஒதுக்கினான். சட்டென்று அவனது கைகளை தட்டிவிட்டாள் மலர்.
உடனே ஆதித்யாவின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

மலருக்கு கோபத்தினாலும் அச்சத்தினாலும் உடல் லேசாக நடுங்கியது.

நடுக்கத்தை மறைத்து விட்டு
ச்சே... என்று முகத்தை சுளித்தவள்... வானதியை தூக்கிக்கொண்டு கார் கதவை திறக்க முயன்றாள். முடியவில்லை என்றதும் திரும்பி ஆதித்யாவை பார்க்க, அவன் இன்னும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சௌமி அண்ணா ...நீங்க உங்க லிமிட்ஸ க்ராஸ் பண்றீங்க... ப்ளீஸ் டோர ஓபன் பண்ணுங்க"என்றாள் மலர் அழுத்தத்துடன் ...

"நீ என்ன அத்தான்னு கூப்பிடலாம் மலர். என்னோட தங்கச்சியதானே உன்னோட அண்ணன் கல்யாணம் பண்ணி இருக்கான். எதுக்கு தேவையில்லாம சௌமியா அண்ணான்னு கூப்பிடுற" என்று சம்பந்தமில்லாமல் சொன்ன ஆதித்யாவை பயத்துடன் பார்த்தாள் மலர்.

அவனது பார்வையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை உறைந்து போனது.

மலரின் பார்வையை கண்டுகொள்ளாமல்,
"வீட்டுக்குள்ள போலாமா?" என்று கேட்டவன் கார் கதவை திறந்துவிட்டான்.

வந்தவர்கள் உடனே இறங்காமல் பத்து நிமிடம் கழித்து இறங்கியதை நந்தனும் சௌமியாவும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்.

வெளியே இருந்தவர்களுக்கு உள்ளே நடந்தது தெரியாதல்லவா....!

அதுவும் மலர் இறங்கியவுடன் அவளது தோளில் தூங்கியிருந்த குழந்தையை ஆதித்யா மிகவும் நெருக்கமாக சென்று தன்னிடம் வாங்கிக்கொண்டான்.

அதைப்பார்த்த நந்தனுக்கு கொதிக்கும் எரிமலையின் சூட்டோடு போட்டி போடும் வகையில் மனம் கொதித்தது.


மலரின் கருவிழிகள் நந்தனை பார்த்ததும் கலங்கியது. "என்னை இங்கே இருந்து கூட்டி போயேன்" என்று இறைஞ்சியது.

அதையெல்லாம் கண்டுகொள்ள நந்தனுக்கு பொறுமை இல்லையே!


ஆதித்யா நந்தனை ஏற்கனவே தூரத்திலிருந்து பார்த்திருந்தாலும் அப்போதுதான் இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர்.

ஆதித்யா அலட்சியத்துடன் தான் நந்தனை பார்த்தான்.

சௌமியா நந்தனுக்கு தன் அண்ணனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.இருவரும் போலியான புன்னகையுடன் தான் கைகுலுக்கிக் கொண்டனர்.

மலரின் கண்கள் நந்தனை விட்டு அகலவில்லை. அவளின் பார்வையை உணராதது போல் நின்ற நந்தன்,
தனக்கு தாமதம் ஆவதாக சொல்லி விடைபெற்றுக்கொண்டு வேகமாக கிளம்பி விட்டான்.மறந்தும் மலரினை திரும்பி பார்க்கவில்லை.

நந்தனின் அலட்சியத்தை பொறுக்கமுடியாத மலருக்கு கண்கள் உடைப்பெடுத்து அழுவதற்கு தயாராகியது. ஆனால் மற்றவர்களின் முன் அழுவதற்கு தன்மானம் இடம் கொடுக்காமல் வேகமாக தனது அறைக்கு ஓடினாள்.

அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

மறுநாளிலிருந்து மலர் பால்கனிக்கு செல்வதில்லை, அறையிலேயே இருந்து கொள்வாள். வானதிக்கு சாப்பாடு ஊட்டுவது இல்லை. கதை சொல்வதில்லை. தூங்க வைப்பதில்லை. முடிந்தவரை ஆதித்யாவின் கண்களில் படாமல் தனது கூட்டிற்குள் அடங்கினாள்.

அவளது அறைக்கே சென்று சௌமியா பேசினால் கூட ஓரிரு வார்த்தைகள் தான் பேசினாள்.

அவளது அண்ணனைப் பற்றி அவளிடமே புகார் செய்வது சுத்தமாக மலருக்கு பிடிக்கவில்லை.

அண்ணன் தங்கைக்குள் பகையை மூட்டி விட அவள் யார்??

ஆனால் மலர் இப்படி கண்ணாமூச்சி ஆடுவது ஆதித்யாவிற்கு பிடிக்கவில்லை.மூன்று நாட்கள் விட்டு பிடித்தவன், நான்காவது நாள் காலை அவளது அறை கதவை தட்டினான்.

மலர் கதவை திறந்தவுடன் அனுமதியின்றி உள்ளே நுழைந்தவனை பார்த்து திகைத்து நின்றவளிடம் அவனது மொபைலை கொடுத்தான் ஆதித்யா.

சுவாதி லைனில் இருப்பதாக சொன்னவுடன் மலரும் அவனிடமிருந்து மொபைலை வாங்கி தயக்கத்துடன், "ஹலோ அண்ணி" என்றாள். அந்தப்புறம் சுவாதி கோபத்தில் எரிந்து விழுந்தாள்.

வானதியை பார்ப்பதைவிட அவளுக்கு வேற எந்த வேலையும் இருக்கக் கூடாதாம். அண்ட வந்த இடத்தில் ஒழுங்காக இருக்க வேண்டுமாம். கல்யாண கனவில் மிதக்க கூடாதாம். நந்தன் வந்ததை மகேஷ் இடமும் அவளிடமும் மறைப்பதற்கு தனியாக சுடு சொற்கள் வேறு....

ஆனால் மலரிடம் தங்களது மொபைல் எண்களை கொடுக்காமல் சென்றது யாருடைய தவறு?

அண்ணியின் ஒவ்வொரு சொல்லும் நெஞ்சை ரணமாக தைக்க...
வானதியை மட்டும் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டு மொபைலை ஆதித்யாவிடம் கொடுத்துவிட்டாள்.

ஆதித்யா மர்ம சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

மதிய உணவினை மறுத்துவிட்டு அறையில் இருந்த மலருக்கு எப்படி தான் தைரியம் வந்ததோ... நந்தனுக்கு கால் செய்தாள்.

அவன் முதல் முறை முயற்சி செய்யும் போது காலை அட்டென்ட் செய்யவில்லை. மறுமுறை மலர் அழைக்கும்போது முதல் ரிங்கிலே எடுத்தான்.


"ஹலோ" என்றதோடு மலரின் சத்தம் தேய்ந்து மறைந்தது...

நந்தன் அழைப்பைத் துண்டித்து இருந்தான்....

சற்று நேரம் கையில் இருந்த மொபைலை வெறித்து பார்த்தவள், அழக்கூட மனமில்லாமல் மொபைலை மெத்தையில் போட்டுவிட்டு தோட்டத்திற்கு சென்றாள்.

வாழ்க்கையை எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமல் மனதில் விரக்தி ஏற்பட்டது?

தோட்டத்தில் சௌமியாவின் சிரிப்பு சத்தம் கேட்டது. மலருக்கு அவளிடம் தனது துக்கத்தை பகிர்ந்து கொள்ள மனமில்லை. அவளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்து திரும்பி நடந்த மலரின் காதில்,

"நந்தா மாஸ்டர் உங்களுக்கு கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு" என்ற சௌமியாவின் குரலும் கூடவே வந்தது.

தன்னை தவிர்த்து விட்டு சௌமியாவிடம் பேசுகிறானா? நந்தன் என்று ஒரு நிமிடம் நினைத்தவள், அடுத்த நிமிடமே அவர்கள் கல்லூரி நண்பர்கள் அவர்களை எப்படி தவறாக நினைக்கலாம்.


தவறாக நினைத்த மூளைக்கு மானசீகமாக இரண்டு கொட்டு போட்டுக்கொண்டாள் மலர்.
அவளது மனம் கடலில் மூழ்கிய கப்பல் போல் நந்தனின் நினைவில் மூழ்கியது.


மறுநாள் சௌமியா தனது பழைய கல்லூரி நண்பர்களுக்கு சின்ன கெட் டு கெதர் வைக்க வீட்டிலேயே பார்ட்டி அரேஞ்ச் செய்தாள். அதில் பங்கு பெற தன் கல்லூரியில் பயின்ற தனக்கு தெரிந்தவர்களை அழைத்தவள், தன்னை கிண்டல் செய்த தோழிகளை மட்டும் அழைக்கவில்லை. கண்டிப்பாக நந்தனை திருமணம் செய்து விட்டு தான் அவர்களை அழைக்க வேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டாள்.

மாலை வேளையில் வந்திறங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் நந்தனும் இருந்தான்.

சௌமி அழைத்து விட்டாளே... என்று வேண்டா வெறுப்பாகத்தான் அங்கு வந்திருந்தான். அவன் வருவதற்கு முக்கிய காரணம் சௌமியாவின் மீதிருந்த பரிதாபம்தான். தினமும் அவனுக்கு தவறாமல் மொபைலில் அழைப்பவள் அடிக்கடி சொல்வது,


"உங்க கிட்ட ஷேர் பண்ணா எனக்கு ரொம்ப ரிலீப்பா இருக்கு நந்தா மாஸ்டர்" என்றுதான்... அதில் உருகியவன் தான்.
சௌமியா தவறாமல் தினமும் ஒரு தடவையாவது பேசி விடுவாள்.

அவனும் தான்..

அவளது பேச்சு பாதி,
மலரும் அவளது அண்ணனும் சேர்ந்து அங்கே சென்றார்கள்... இங்கே சென்றார்கள்... அண்ணன் மலருக்கு அது வாங்கி கொடுத்தார் ...இது வாங்கி கொடுத்தார் என்று இருக்கும். அதிலேயே மலர்மேல் நிறைய வெறுப்பு உருவாக்கியது.

ஆதித்யாவிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது என்று அவனை மடக்கி விட்டால் மலர் என்று கேவலமாக நினைத்தான்.

அதேசமயம் சௌமியா கள்ளங்கபடம் இல்லாமல் தன்னிடம் வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாள் என்று நினைத்து அவள் மேல் பரிதாபமும் பாசமும் உருவாகியது.
அதனால் தான் அவள் பாசமாக கூப்பிட்ட பின் வராமல் தவிர்க்க முடியவில்லை அவனால்...

சௌமியாவின் நண்பர்களுக்கு ஆதித்யாவை பற்றி ஓரளவு தெரியும். அதனால்தான் என்னவோ? அவளிடம் என்னதான் நட்பாக இருந்தாலும், ஓரளவு இடைவெளியை உண்டாக்கிக் கொண்டனர். இன்றும் அவள் அழைத்ததற்காகத்தான் வந்திருந்தனர்.

பழைய கதைகளை சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு கொரிக்க தின்பண்டங்களும் குளிர்பானங்களும் கொடுக்க பணியாளர்கள் வந்தார்கள். அதை குடித்து விட்டு மீண்டும் கலகலப்பில் இறங்கினர்.

மீண்டும் எல்லாரும் சேர்ந்து தங்கள் கல்லூரி நாட்களுக்கு செல்வது போல் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.

வந்தவர்களில் ஒருவன் திரைப்படம் பார்க்கலாம், என்றதும் மற்றவர்களும் சரி என்றுவிட்டு ஒரு ஃபேமஸ் கொரியன் திரில்லர் திரைப்படத்தை ஓடவிட்டு பார்க்க ஆரம்பித்தனர்.

அவ்வளவு நேரம் வானதிக்கு ட்ராயிங் நோட்டில் வரைய சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த மலர், கீழே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அறையிலிருந்து வெளியே வந்து கீழே எட்டிப் பார்த்தாள். ஹாலில் ஒரு பதினைந்து பேர் கிட்ட அமர்ந்திருந்தனர். அதில் நந்தனும் இருக்கவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


அவனிடம் சென்று பேசவேண்டும் என்று தோன்ற, அறைக்குள் சென்று முகம் கழுவிவிட்டு முடியை திருத்தி சமன் செய்துவிட்டு கீழே இறங்கி வந்தாள்.


வந்தவர்களில் சுகன் என்பவன் மலர்
படி இறங்கி வருவதை பார்த்துவிட்டு,

"யாருடா இந்த ஏஞ்சல்??" என்று நந்தனிடம் கேட்க...

முகத்தில் ஒரு துளி மேக்கப் இல்லாமல் அன்றலர்ந்த மலர்போல் வந்தவளை பார்த்த நந்தன், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் எங்கோ பார்த்தான்.

எப்படி இருக்க வேண்டியவர்கள்?? இன்று யாரோ போல் இருக்க வேண்டிய நிலை எப்படி வந்தது??

பணத்திற்காக ஏமாற்றுபவளது முகத்தைப் பார்த்தும் தனக்குள் உணர்வுகள் தூண்டப்படுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. தன் மேலேயே வெறுப்பு வந்தது நந்தனுக்கு...

அவர்கள் அருகிலிருந்த சௌமியாவிற்கு சுகனின் பேச்சு எரிச்சலை கொடுத்தது. "பெரிய ஏஞ்சல்" என்று முகத்தை சுளித்தவள்...நந்தனை லேசாக நெருங்கி அமர்ந்து, படத்தில் கவனத்தை வைத்தபடி அவனது கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டாள்.


நந்தன் யோசனையில் இருந்ததால், இதை கவனிக்கவில்லை. ஆனால் மலர் கவனித்தால் அவள் வந்து நின்றும் நந்தன் அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை...போதாததற்கு சௌமியாவுடன் இத்தனை நெருக்கம். அப்படியென்றால் அன்று தன்னை தவிர்ப்பதற்காகத்தான் சௌமியாவிடம் பேசியிருக்கிறான்.


இதயம் வெடித்து சிதறியது போல் வலித்தது மலருக்கு... அப்படி என்றால் அவனுக்கு தன்னை பிடிக்கவே இல்லை போல.... என்று கண் கலங்கி கொண்டே எதிர்ப்புறம் நடக்க ஆரம்பித்த மலர், தரையில் விரித்திருந்த கார்பெட் தட்டி கீழே விழுந்தாள். ஹால் ஓரத்தில் அலங்காரத்திற்காக போடப்பட்டிருந்த டேபிளின் நுனி அவளது நெற்றியில் குத்தி ஆழமாக காயத்தை உண்டாக்கியது. மலர் வலியில் "அம்மா" என்று கத்தியதும் தான் அங்கிருந்தவர்கள் அவளை பார்க்கவே செய்தனர்.


நந்தன் திடுக்கிட்டு அவளிடம் செல்ல போக, அதற்கு முன்னே வந்த ஆதித்யா அவளை கைகளில் ஏந்தினான்.

மலர் அவனது பிடியிலிருந்து நழுவ பார்க்க ஆதித்யா அவளை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். ஏற்கனவே வலியினால் சோர்ந்திருந்த அவளால், அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அரைமயக்கத்தில் நந்தனை பார்க்க, அவன் சௌமியாவின் கைகளை இறுக பிடித்துக் கொண்டு நின்றான். நெற்றியில் பட்ட வலியைவிட இதயத்தின் ரணம் அதிகரிக்க மயங்கினாள் மலர்.

தொடரும்....
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN