ஆதித்யா சக்கரவர்த்தி-15

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 15

ஆதித்யா அதிர்ச்சி அடைந்தது ஒரு நொடி தான் ... அடுத்த நொடியே கடுமையான கோபத்துடன், தனது மொபைலில் யாருக்கோ... அழைத்துக்கொண்டே விடுவிடுவென்று கீழே இறங்கி சென்றான்.

ஆதித்யாவின் அதிர்ச்சி மற்றும் கோபத்தை கவனித்துக் கொண்டிருந்த மலர்,அவன் விட்டு சென்றிருந்த நியூஸ் பேப்பரை எடுத்து பார்த்தாள்.

நேற்று ரிசப்ஷனில் சௌமியா சரத் கீழே விழுந்த புகைப்படத்துடன்... ஆதித்யா சரத்தை அடித்த புகைப்படமும் ... பெரிதாக போடப்பட்டிருக்க...
பிரபல தொழிலதிபர் ஆதித்யா சக்கரவர்த்தியின் அராஜகம் தங்கையின் காதலனுக்கு பலத்த அடி ... என்ற பெரிய எழுத்துக்களில் உள்ள தலைப்பை படித்ததும் மலர் அதிர்ந்து போனாள்.அவளது மனம் சௌமியாவிற்காக வருத்தப்பட்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? என்று பயந்து கொண்டே மலர் கீழே இறங்கி வரும் பொழுது...
ஆதித்யா, நேற்று யார் அந்த புகைப்படத்தை எடுத்தது? எந்த பத்திரிக்கை? என்று மொபைலில் டென்ஷனில் யாருடனோ கத்திக் கொண்டிருந்தான்.
அவனது குரலில் வீடே அதிர்ந்து ஒலித்தது. ஆதித்யாவின் சத்தத்தில் அப்பொழுதுதான் எழுந்து வந்த சுவாதி என்ன விஷயம்? என்பது போல் மலரை பார்க்க... அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

மகேஷும் வானதி உடன் அங்கு வர வீடே பரபரப்பாகியது.
சிறிது நேரத்திலேயே ஆதித்யாவின் வீட்டிலுள்ள... ஒவ்வொரு தொலைபேசியும் அலற வீட்டிற்கு யார் யாரோ வருவதும் போவதுமாக இருந்தனர்.

கிடைத்த இடைவெளியில் மகேஷ் சரத்திற்கு போன் செய்து...வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்து வைத்தான்.

ஆதித்யா புலியின் உறுமல் உடன் அங்குமிங்கும் நடக்க, அவனது விசுவாசிகள் சிலர் பிரச்சினைக்கு தீர்வு சொல்லிக் கொண்டிருந்தனர். மகேஷும் அவர்களுடன் தான் இருந்தான்.

மலர் வந்திருந்த நபர்களுக்கு வேலையாட்களின் மூலம் டீ,காபி, ஜூஸ் என்று அனுப்பிக்கொண்டே இருந்தாள்.

ஏற்கனவே அழுது வடியும் சௌமியா, இந்த விஷயத்திற்கு சும்மா இருப்பாளா? என்ன? தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தாள்.

அவளது அருகில் அமர்ந்திருந்த சுவாதி, என்னதான் இருந்தாலும் தங்கை அல்லவா? சௌமியாவை லேசான வருத்தத்துடன் பார்த்து ஆறுதல் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள். மலர் சௌமியாவிற்காக இக்கபட்டாலும் அவளருகில் செல்லவில்லை. தனது நட்பினை கொச்சைப்படுத்தி வஞ்சகமாக ஏமாற்றியவளுக்கு ஆறுதல் சொல்லக்கூட மனம் வரவில்லை.

சிறிது நேரத்திலேயே ஆதித்யாவின் கையாட்கள்... போட்டோ எடுத்த மீடியாகாரனை தூக்கி கொண்டு வர, அவனுக்கு பலத்த அடி கிடைத்தது.
அவ்வளவு அடி வாங்கியும்... அவனது வாய் சும்மா இராமல்,
"மீடியா காரன் மேலேயே கைய வச்சிட்டீங்களே... இனி என்ன நடக்கும்னு பாருங்க... இதை விட கேவலமா எழுதுவேன்" என்று எகிற....
அவ்வளவு நேரம் அமைதியாக நின்ற ஆதித்யா, அளவுக்கு மீறிய ஆத்திரத்தில் அவனது கன்னத்தில் அறைய அவனது உதடு கிழிந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.
மகேஷ் அவனை தடுக்க ...தடுக்க... அடித்து நொறுக்கியவன், அவன் மயங்கியதும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் ஓங்கி குத்தினான்.
மயங்கி இருந்தவனை இழுத்து கொண்டு வெளியே சென்றனர்
ஆதித்யாவின் பாடி கார்ட்ஸ்...

ஆதித்யாவின் கோபத்தை பார்த்து அவனை நெருங்கவே பயமாக இருந்தது எல்லோருக்கும்....
வானதி கூட ஆதித்யாவை பார்த்து பயந்து மலரின் பின்னால் மறைந்து கொண்டாள். அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் ஆதித்யா இல்லை.... பயங்கர வெறியுடன் இருந்தான்.

அன்று முழுவதும் ஆதித்யாவின் வீட்டில் ஒரே கலவரமாக இருக்க...
கொஞ்ச நாள் சௌமியாவை வேறு எங்காவது அனுப்பினால் பிரச்சினையை தானாக மறைந்து விடும் என்று ஆலோசனை வழங்கினர் சிலர்....

சிலரோ கூடிய விரைவில் சௌமியாவிற்கு திருமணம் முடிந்தால் நல்லது என்றனர்.... எந்த முடிவையும் எடுக்க முடியாமல் ஆதித்யா தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்க... அவனருகில் வந்த சௌமியா.

"அண்ணா" என்று அழுதவள்...
"நான் நந்தாவை பார்த்து பேசணும் அண்ணா ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.

தங்கையை புரியாமல் பார்த்தவன்... "நந்தா அமெரிக்காவுல இருக்கான் அவ்வளவு தூரம் நீ எப்படிமா?" என்று குழம்பினான்.

"அண்ணா நந்தா இந்தியாவில் தான் இருக்கார்... இன்னும் அமெரிக்காவுக்கு போகல... நேத்து தான் எனக்கே அந்த விஷயம் தெரியும்... ப்ளீஸ் அண்ணா அவர நான் பார்த்து பேசி ஆகணும்..." என்று உறுதியாக சொன்னவளை தீர்க்கமாக பார்த்தவன்... சில நொடி அமைதிக்குப் பிறகு, "நானே உன்ன அழைச்சிட்டு போறேன்" என்றான்.

"வேண்டான்னா நானே போய்டுவேன்..."

"ப்ச்ச் செளமி சொன்னா கேக்க மாட்டியா?" என்று ஆதித்யா அரட்ட...

"அண்ணா நீங்க வந்தா மலர வச்சு தேவை இல்லாத மன கஷ்டம் வரலாம்... அதனால நான் தனியா போனா தான் சரியா வரும்... ப்ளீஸ் அண்ணா" என்று அடம்பிடித்தவளை எப்பொழுதும்போல்
இயலாமையுடன் பார்த்தவன்....

"அட்ரஸ்??" என்று அவளிடம் கேட்க

"அதெல்லாம் நைட்டே என்னோட ஃபிரண்ட் சுகன் தந்துட்டான்..." என்றவள் அனுமதிக்காக அண்ணனைப் பார்க்க... "சரி டிரைவரையாவது கூட்டிட்டு போ..." என்றான் ஆதித்யா அவளை பார்க்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு....

"அதெல்லாம் நான் நல்லா டிரைவ் பண்ணுவேன் அண்ணா ...நானே போய்டுவேன்" என்றவள் விடுவிடுவென்று அறைக்கு சென்று கிளம்பியவள் கீழே இறங்கி வந்தாள்.
ஹாலில் இருந்த அனைவரும் சௌமியா வெளியே கிளம்பியதை பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்.

ஆதித்யா அனுமதி அளித்ததால் மற்றவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை அமைதியாக இருந்தனர். அவர்களுக்கும் சௌமியா எங்கே செல்கிறாள் என்று தெரியாது?

ஆதித்யா காலையில் குடித்த காபியோடு தான் அவ்வளவு நேரம் இருந்தான். அதனால் மற்றவர்களும் சாப்பிடவில்லை. வானதிக்கு மட்டும் மலர் இரண்டு தோசை ஊற்றி சாப்பிட வைத்திருந்தாள்.
சௌமியா வெளியே சென்றும் அனைவரும் ஏதோ எண்ணங்களில் உழன்றவாறே இருந்த பொசிஷனில் அப்படியே இருக்க.... மதியம் இரண்டு மணியை தாண்டியதால் சுவாதிக்கு பசி அதிகம் ஆக அவள்தான் அனைவரையும் சமாதானப்படுத்தி டைனிங் ஹாலுக்கு கூட்டி வந்தாள்.
மலர் அனைவரும் அமர்ந்தும் அமராமல் ஒரு ஓரத்தில் நிற்க... மகேஷ் தங்கையை அமர சொல்ல... அவள் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு மற்றவர்களுக்கு மட்டும் பரிமாறினாள். மகேஷுக்கு வருத்தமாக இருந்தது திருமணமாகி ஒரு நாளில் எவ்வளவு பிரச்சனை என்று...

ஆதித்யா மலர் சாப்பிடாமல் இருந்ததை கவனித்தாலும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டான். அவனுக்கு மனதில் நிறைய உறுத்தல்கள் இருந்தன. அதையெல்லாம் எப்படி சரி செய்ய? என்று யோசனையிலேயே சாப்பிட்டு முடித்தான்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க...
மலர் சாப்பிட அமரும் பொழுது மணி மூன்றாகி இருந்தது. அதுவும் அவளே பரிமாறி அவளே சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தும்... பார்க்காததுபோல் அலட்சியமாக சுவாதி அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.

தன் அம்மா கண்டுகொள்ளாமல் சென்றதை கவனித்த வானதிக்கு என்ன புரிந்ததோ ?? பெரிய மனுஷி போல் தன் அத்தைக்கு சாப்பாடு பரிமாற முயற்சி செய்து எல்லாவற்றையும் கீழே மேலே கொட்டினாள்.

குழந்தையின் பாசத்தில் கண்கலங்கிய மலர் அவளது தலையை செல்லமாக கலைத்து விட்டு, திருப்தியுடன் சாப்பிட்டு முடித்தாள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு வைக்கும் ஜீவன்! என்று நினைத்தவள் இவளும் வளர்ந்ததும் சுயநலவாதியாக மாறி விடக்கூடாது கடவுளே!! என்று வேண்டிக்கொண்டாள்.

அங்கு அதே நேரத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்த சௌமியாவிற்கு... நேற்றிரவு ரிசப்ஷனுக்கு வந்திருந்த சுகன் சொன்னது நினைவிற்கு வந்தது.

ஆதித்யா மலருக்கு தனது பரிசினை கொடுத்து வாழ்த்தி விட்டு கீழே இறங்கி
சௌமியாவிடம் வந்தவன்...
"நான் சொன்ன மாதிரியே உங்க அண்ணன் அந்த ஏஞ்சல மேரேஜ் பண்ணிட்டாரு போல... பின்ன சொன்னது யாரு?" என்று பெருமை அடிக்க... அவனை முறைத்தவாறே
"இப்போ அதுக்கு என்ன?" என்றாள் சௌமியா.

"இதிலிருந்து என்ன தெரியுது? நான் என்ன சொன்னாலும் நடக்குது... என்னுடைய கெஸ் மிஸ் ஆகாது சேமியா" என்றான் கெத்தாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு...

"அப்படியா ஜோசியரே.... கொஞ்சம் எங்களுக்கும் கல்யாண யோகம் இருக்கான்னு பார்த்து சொல்லுங்க" என்று சௌமியா நக்கலாக கேட்க...

"ஹி ஹி ஹி ஹி... உனக்கு எல்லாம் பல்லு போய் பாட்டி ஆனாலும் மேரேஜ் ஆகுறது சந்தேகம்தான்" என்றான் சுகன் கிண்டலாக....

அவன் அப்படி சொன்னதும் சௌமியாவின் முகம் சுட்ட கத்தரிக்காயை போல் சுருங்கிப் போயிற்று...

அவளின் முக மாற்றத்தை கவனித்த சுகன் சட்டென பேச்சை மாற்றினான்
"சௌமி நந்தா மாஸ்டரை நேத்து ஈவினிங் ஷாப்பிங் போன இடத்துல பார்த்தேன்" என்றது தான் தாமதம்...

"அவர்கிட்ட பேசினியா? இங்கதான் இருக்கிறாரா? என்ன சொன்னார் அவர்?" என்று பரபரத்தாள் அவள்....

தோழியின் ஆவலை பெரிதாக கண்டு கொள்ளாமல்... நந்தா சொன்னதை அப்படியே ஒப்புவித்தான் சுகன்.

" அவங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி இந்தியாவிலேயே ஏதாவது ஒரு பொண்ண இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்காவுக்கு போய் நிரந்தரமா செட்டிலாக போறாராம்... இனி இங்க வர கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்காராம்" என்று அவன் சொன்னதை கேட்டதும் சௌம்யாவுக்கு உள்ளுக்குள் லேசாக குறுகுறுப்பு....
அதை முயன்று அளவு மறைத்துக்கொண்டு...
"அவரோட அட்ரஸ் உனக்கு தெரியுமா?" என்று சௌமியா கேட்க...
"தெரியுமே..." என்று அட்ரஸை சொன்னான் சுகன்.

"தேங்க்யூ தேங்க்யூ வெரி மச் சுகா"என்று அவனுக்கு நன்றி சொன்னாள் சௌமியா.

நல்லவேளையாக அவளை பழையபடி சிரிக்க வைத்து விட்டோம்... என்று நிம்மதியோடு சுகன் நகர்ந்து விட்டான்.

சௌமியா மட்டும் கண் கலங்கி அழ ஆரம்பித்து இருந்தாலானால் அவளது அண்ணன் ஆதித்யா வந்து சுகனை அடித்து துவைத்து இருப்பான்.... கல்லூரியில் படிக்கும்போது விளையாட்டாக ஒருவன் சௌமியாவை ரேகிங் செய்து அழ வைத்துவிட்டான். அதை அவள் அண்ணனிடம் போட்டு கொடுத்து அவனுக்கு தர்ம அடி வாங்கி கொடுத்தாள். இன்று தனக்கு தான் தர்ம அடி என்று உள்ளுக்குள் பயந்துகொண்டு ஏதேதோ சொல்லி அவளை தான் சொன்னதை மறக்க வைத்து விட்டு... நகர்ந்து விட்டான் சுகன். (புத்திசாலி புள்ள...)

சுகன் சொன்ன விஷயத்தைக் கேட்டு மகிழ்ச்சியான மனநிலையில் மற்றொரு தோழியுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான்... ஆதித்யா மலரின் நடவடிக்கையை கவனித்து கோபத்துடன் சென்று அந்த அரைவேக்காடு சரத்தின் மீது மோதி என்னென்னவோ ஆகிவிட்டது.
அந்த விஷயத்தை அத்தோடு விடலாம் என்று பார்த்தால் இன்று காலையில் எழுந்த பூகம்பத்தில் தன்னை விரைவிலேயே யாருக்காவது திருமணம் செய்து வைத்து விடுவார்களோ? என்று பயம் வேறு வந்துவிட்டது.
அதனால் தான் ஆதித்யாவிடம் அடம் பிடித்து நந்தாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறாள்.

ஒரு சுற்று சாலையில் வளைந்து சுகன் சொன்ன தெருவை அடைந்தவள்,
எப்படியோ அட்ரஸ் விசாரித்து நந்தாவின் வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அழுத்தினாள்.

கதவைத் திறந்த நந்தன் அவளை பார்த்ததும் எடுத்த எடுப்பிலேயே முகத்தை சுளித்தான். சந்தோஷமாக அவனை ஏறிட்ட சௌமியாவிற்கு அவனது முக சுளிப்பை முகத்தை பார்த்ததும் முகம் வாடிவிட்டது.
அதை முயன்ற அளவு மறைத்துக்கொண்டு,"நல்லா இருக்கீங்களா நந்தா மாஸ்டர்" என்று வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் கேட்டாள் சௌமியா.
அவனை பார்த்தாலே தெரிந்தது அவன் நன்றாக இல்லை என்று.... கண்கள் சிவந்து இருக்க.... முகம் இறுகி... பத்து நாள் தாடி எடுக்காமல் சோர்ந்துபோய் தெரிந்தான். அதனையும் மீறி வாய் சும்மா இராமல் கேட்டு விட்டது...

சௌமியா தன்னை நக்கல் செய்கிறாள் என்று நினைத்து நறநறவென்று பற்களைக் கடித்தவன்..
"எதுக்கு இங்க வந்த??" என்று எடுத்ததும் வெடுக்கென்று கேட்டான் நந்தன்.

அவன் பேசும்பொழுது அவனின் மீது மதுவின் நெடி வருவதை உணர்ந்த சௌமியாவிற்கு உள்ளம் துடித்தது....

அவனது கேள்வியை புறந்தள்ளிவிட்டு, "நந்தா மாஸ்டர் ட்ரிங் பண்ணி இருக்கீங்களா ?"என்று பதட்டத்துடன் கேட்ட சௌமியாவை அழுத்தத்துடன் பார்த்தவன்... "இங்கிருந்து போய்டு" என்று அவள் வாசலுக்கு வெளியே நின்றதால் கதவை மூட முயன்றான்.

அவனை தள்ளி விட்டு வீட்டிற்குள் நுழைந்த சௌமியா வீட்டின் நிலையை பார்த்து அதிர்ந்தாள். பொருட்களெல்லாம் உடைந்தும்.. சிதறியும்... கலைந்தும் கிடந்தன.
ஹாலில் சோபாவில் விஸ்கி பாட்டில் இரண்டு காலியாக கிடந்தது. புகை பிடித்ததன் அடையாளமாக சாம்பல் அங்கேயும் இங்கேயும் சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்து மேலும் அதிர்ந்த அவனை பார்த்தாள் சௌமியா.

அவளது பார்வையை அலட்சியப்படுத்தியவன்...
"ப்ச்ச் கெட் அவுட் சௌமியா.... இப்படித்தான் திறந்த வீட்டுக்குள்ள ஏதோ வர்றமாதிரி உள்ள வர்றதா?" என்று நந்தன் குரலை உயர்த்தி கத்த முயன்றான்... ஆனால் குரல் மதுவின் தாக்கத்தால் குழறல் ஆகவே வந்தது.

"நந்தா மாஸ்டர் ... நீங்க குடிப்பீங்களா?" என்று கண்கலங்கிய சௌமியா,

"ப்ளீஸ் நந்தா மாஸ்டர் தயவுசெஞ்சு இப்படி குடிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க?" என்று கண்ணீர் வடித்தாள்.

"ச்சே என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா யாருமே..." என்று உறுமியவன்....
அவளின் கண்ணீர் முகத்தை பார்த்ததும், திரும்பி நின்று கொண்டு "தயவு செஞ்சு இங்கே இருந்து போயிடு சௌமியா"என்றான் குரலில் அடக்கப்பட்ட வேதனை இருந்தது.

அவனது வேதனை குரலை கேட்டதும் அழுகையை குறைத்துவிட்டு... கண்ணீரை துடைத்துக் கொண்ட சௌமியா...

"நந்தா மாஸ்டர் நான் உங்க ஃப்ரண்ட் தானே... என்கிட்ட உங்க ப்ராப்ளத்தை ஷேர் பண்ண மாட்டீங்களா?எதுக்கு என்ன அவாய்ட் பண்றீங்க? எவ்ளோ போன் கால்ஸ் எவ்ளோ மெஸேஜஸ் எதுக்குமே ரிப்ளை பண்ணல... ஏன்??" என்று தேம்பி கொண்டே கேட்டாள்.

"நோ நோ நோ ..நீ என் ஃப்ரெண்ட் இல்ல... என்னோட மலர என் கிட்ட இருந்து பிரிச்ச ஒருத்தனோட தங்கச்சி" என்று ஆத்திரத்துடன் கத்தினான் நந்தன்.

நந்தாவின் 'என்னோட மலர' என்ற வாக்கியத்தில் சௌமியாவின் முகம் ஒரு நொடி இறுகி வன்மத்துடன் மாறியது.

திரும்பி நின்றவனின் கையை வந்து பிடித்தவள்... அவனது கண்களை பார்த்துக்கொண்டே,
"எதுக்கு எப்ப பாத்தாலும் உங்களை ஏமாத்தினவள பத்தி யோசிக்கிங்க... உங்க வாழ்க்கைய பத்தி மட்டும் யோசிங்க நந்தா... உங்களுக்காக நான் இருக்கேன்" என்றவளின் குரலில் இருந்தது என்னவென்று பிரித்தறிய முடியவில்லை... பாசமா? பரிதாபமா? வன்மமா?

'நான் இருக்கேன்' என்று அவள் சொன்னதும் கண்கள் லேசாக கலங்க அவளைப் பார்த்தவன்...
" யார் இருந்தாலும் மலர் இல்லாம நான் அனாதை தான் சௌமியா... என்னால அவள மறக்கவே முடியல ...எனக்குன்னு யாருமே இல்லாத ஒரு ஃபீல்... அதனாலதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்காவுக்கு போகலாம்னு முடிவு பண்ணேன்.. கல்யாணம் ஆனா மலர மறந்திடலான்னு நெனச்சேன்.ப்ச்ச் ஆனா எந்த பொண்ண பார்த்தாலும் மலர் தான் என் கண்ணுக்கு தெரியுறா.." என்று வேதனையில் கண்களை மூடினான்.

பின் தன்னை சமாளித்துக் கொண்டு,
"அவகிட்ட திரும்பவும் பேசி பார்க்கலாம்னு நினைக்கும் போது தான் நீ இமெயில் அனுப்பியிருந்த...அதுல இருந்த ஆதித்யா மலர் கல்யாண பத்திரிக்கையை பார்த்ததுமே... என்னால தாங்கவே முடியல... யூ நோ சௌமியா நான் காலேஜ் படிக்கும் போது மட்டும்தான் ஒரே ஒரு டைம் சரக்கு அடிச்சு இருக்கேன்... இப்போ என்னோட வேதனைய மறக்கிறதுக்கு குடிக்கிறேன்..." என்று நந்தன் தன் உள்ளத்தை திறந்து அவளிடம் ஒவ்வொன்றாக கூற கூற சௌமியாவின் முகம் உணர்ச்சி துடைத்து ஒரு மாதிரி ஆகியது.

நந்தன் அவளின் முக மாற்றத்தை புரியாமல் என்னவென்பது போல் பார்க்க... அவளோ அவனின் கண்களை இமைக்காமல் பார்த்து... "என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? நந்தா மாஸ்டர்... உங்கள நான் நல்லா பார்த்துக்கிறேன்" என்ற குரல் பிசிராமல் கேட்டாள்.

அவள் என்ன சொன்னால் என்று புரியாமல் முழித்தவன் புரிந்த நொடி அவளது கன்னத்தில் அறைந்திருந்தான்.

அவன் அறைந்ததினால் எரிந்த கன்னத்தில் கை வைத்து நின்றாள் சௌமியா.அவளை வெறுப்புடன் பார்த்தவன்... டீப்பாயில் கிடந்த பேப்பரை தூக்கி அவளது முகத்தில் எறிந்தான்.

அவன் எறிந்த பேப்பரை பார்க்காமல் கீழே போட்டுவிட்டு குழப்பத்துடன் அவனைப் பார்த்த சௌமியாவை பொசுக்கிவிடும் ஆத்திரம் வந்தது அவனுக்கு....

"என்ன முகத்தை அப்பாவி மாதிரி வெச்சிருக்க... நல்லா நடிக்கிறீங்க எல்லாரும்....ஹான்ன்ன்...
நீயும் அந்த மலரை மாதிரி ஒருத்தன லவ் பண்ணிட்டு இன்னொருத்தனுக்கு மனைவி ஆக பாக்குறியா?? வெட்கமா இல்ல உனக்கு... உன்ன லவ் பண்ண பையன் பாவம் தான... அவனும் என்ன மாதிரி ஆகணுமா? உங்க அண்ணன் அவன வேண்டாம் னு சொன்னதும் அடுத்தவன பார்க்க ரெடி ஆயிட்டியா ..." என்று குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பச்சையாக கேட்டவன்...

அவள் அழுவதைப் பார்த்து...
"ச்சே கேவலமா இருக்கு தயவு செஞ்சு உன் முகத்தை என்கிட்ட காட்டாத... நீ எல்லாம் உயிரோட இருக்கிறதுக்கு எங்கேயாவது போய் சாவு" என்றவன் அவளது கையை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு வெளியே விட்டு விட்டு முகத்தில் அறைவது போல் கதவினை பட்டென்று மூடினான்.

அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சௌமியாவை உயிரோடு கொன்று விட்டதென்றே சொல்லவேண்டும்... வெகு நேரம் அங்கேயே சிலை போல் நின்ற அவள் தட்டுத்தடுமாறி தடுமாறி சென்று காரில் ஏறி அமர்ந்தாள்.

இங்கு வீட்டிலோ மலர் முடிந்தளவு ஆதித்யாவின் கண்களில் படாமல் கிச்சன்... தோட்டம் என்று சுற்றிக் கொண்டே இருந்தாள். காலையில் அவன் காட்டிய நெருக்கம் அவளை முடிந்தளவு அவனை விட்டு விலக்கி வைத்தது.

இப்படியே ஆதித்யாவின் கண்களில் படாமல் ஆட்டம் காட்டி கொண்டிருந்தவள் மாலை நேரத்தில் தோட்டத்தில் வந்து அமர்ந்தாள். தன் வாழ்க்கையே இந்த சில நாட்களில் எவ்வளவு மாறிவிட்டது... எல்லாம் கனவில் வருவது போல் வினோதமாக இருந்தது... இங்கு விருந்தாளியாக தங்கியிருந்த தான் இப்பொழுது இந்த வீட்டிற்கு மருமகள் ஆகிவிட்டோம்... எல்லாம் விசித்திரம் தான்... கடைசிவரை நந்தன் வரவே இல்லையே? அவ்வளவுதான் அவன் காதலா... என்று பழைய நினைவுகளில் கண்கலங்கி கொண்டிருக்க,

அவளுக்குப் பின்னால்...
"எத்தனை நாள் இப்படி ஓடி ஒளிய முடியும்னு நினைக்கிற?" என்று கேட்ட ஆதித்யாவின் குரலில் டக்கென்று குதித்தெழுந்தாள் மலர்.

காலையிலேயே அவனது நெருக்கத்தையும் அதிகமான கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்த்து பயந்தவளுக்கு... இப்பொழுது அவன் முகத்தில் இருந்த இலகுத் தன்மையை பார்த்தும் பயம் தான் வந்தது.

அவனோ அவளின் முகத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
கண்கள் கலங்கி அழுததற்கு அடையாளமாக கண்ணீர் கோடுகள் காய்ந்திருந்தது. அதை வெறித்து பார்த்த ஆதித்யா... "என் கூட இருக்கிறது அவ்வளவு கஷ்டமா இருக்கா?" என்று கேட்டுவிட்டு அவளது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் விடுவிடுவென்று வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

அவன் தன் அருகில் இருந்தவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்ட மலருக்கு ...அவன் குரலில் இருந்த வலி தெரியவில்லை... அவன் சென்றதும் மீண்டும் நிம்மதியாக அமர்ந்தாள்.
அவன் சொன்னதன் அர்த்தத்தை கூட ஆராயவில்லை...

தன் அறைக்குள் வந்த ஆதித்யாவிற்கு கோபம் அதிகரிக்க.... அதைக் கட்டுப்படுத்த முடியாமல் பூட்டியிருந்த சிறிய அறையினை தன்னிடமிருந்த சாவியை கொண்டு திறந்து உள்ளே நுழைந்தான்.

காரில் வந்துகொண்டிருந்த சௌமியாவிற்கு நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

நந்தனின் ஒவ்வொரு வார்த்தையும் நினைவிற்கு வந்து அவளது இதயத்தை குத்தி கிழித்தது.
"ச்சே கேவலமா இருக்கு தயவு செஞ்சு உன் முகத்தை என்கிட்ட காட்டாத... நீ எல்லாம் உயிரோட இருக்கிறதுக்கு எங்கேயாவது போய் சாவு...."
என்று நந்தன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அவளது தாழ்வு மனப்பான்மையின் அடிமட்டம் வரை நுழைந்து வலியைக் கொடுத்தது.

அவளது முகத்தைப் பார்த்து கேவலமாக இருக்கு என்று சொல்லிவிட்டானே.... கண்ணில் மீண்டும் நீர் நிறைய அழுதவாறு காரை ஒரு வளைவில் திருப்பினாள்.

ஹாரன் அடிக்காமல் திரும்பியதால் எதிரே வந்த பஸ் மோதி சௌமியாவின் கார் கவிழ்ந்து விழுந்தது....

சௌமியாவின் நிலை???

தொடரும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN