ஆதித்யா சக்கரவர்த்தி-19

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 19

மலரும் நந்தனும் இருந்த நிலையைப் பார்த்த ஆதித்யாவிற்கு உள்ளம்.நெருப்பாக எரிந்தது.
இன்று தான் அவளின் கைகளை பிடித்த பொழுது... பொது இடம் அது இது என்று கைகளை உருவிக்கொண்டவள்... இப்பொழுது இன்னொருவனின் கைகளை பிடித்து கொண்டு கண்களை மூடி சுகமாக அவனின் தோளில் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள். எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் இவளுக்கு?பயங்கர ஆத்திரத்துடன் அவர்கள் அருகில் செல்ல போன... ஆதித்யாவின் பின்னால்...
சுவாதி அழுதுகொண்டே வர... இருக்கும் இடமறிந்து ஆத்திரத்தை அடக்கினான் ஆதித்யா.

"அண்ணா சீக்கிரம் வா... அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே?" என்று கூறிக்கொண்டே நடையை துரிதப்படுத்தி முன்னே சென்ற அவளும்... மலர் நந்தனின் தோளில் சாய்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டு அண்ணனை பார்க்க....
ஆதித்யாவின் முகம் கோபத்தை தனக்குள் கட்டுப்படுத்திக்
கொண்டிருப்பதை காட்டி கொடுத்தது.

"அண்ணா இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம்... அமைதியா இரு ... பிரச்சினை பண்ணிட வேண்டாம்" என்று எச்சரித்த சுவாதி, கணவனை நினைத்து அழுதுகொண்டே... அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர அவளின் அருகே ஆதித்யாவும் அமர்ந்தான்.
ஆனால் அவனின் கண்கள் நொடிக்கொருமுறை மலரை தான் பார்த்தது.

தங்களின் அருகே யாரோ அமர்ந்தது போல் இருக்கவும், நிமிர்ந்து பார்த்த நந்தனும் அவர்களைப் பார்த்து விட... மலரை தன் தோளிலிருந்து நகர்த்தி விட்டான்.

தங்களின் மீது தவறான அபிப்ராயம் வந்துவிட்டதோ? என்று உள்ளுக்குள் ஒரு மாதிரியாக உறுத்தியது.
அவன் நகர்த்தியதும்... லேசாக கண்களைத் திறந்து பார்த்த மலர் தான் இருக்கும் இடத்தையும் தன் அருகில் இருந்தவனையும் அப்பொழுதுதான் உணர்ந்தாள்.
தன் கைகளின் மீது இருந்த அவன் கையை பார்த்தவள்... சட்டென்று தட்டி விட்டு விட்டு எழுந்து நின்றாள்.

"முகம் கழுவிட்டு வரேன்" என்று முணுமுணுத்து விட்டு நகரப் போனவள்....அப்பொழுதுதான் அங்கிருந்து தன்னை பார்வையால் எரித்துக் கொண்டிருந்த ஆதித்யாவையும்... கணவனை நினைத்து அழுது கொண்டிருந்த சுவாதியையும் பார்த்தாள்.

தான் யாருக்கும் தகவல் சொல்லவே இல்லையே!!!
இவர்கள் எப்படி இங்கே?
யோசித்தவள் ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை குளிர்ந்த நீரால் அடித்து கழுவிவிட்டு சற்று தெளிவுடன் வந்து அமர்ந்தாள்.

இம்முறை கவனமாக நந்தனை விட்டு இரண்டு இருக்கைகள் தள்ளியே அமர்ந்தாள்.
ஆனால் ஆதித்யாவின் பார்வை இம்மியும் அசையாமல் மலரை சுற்றியே தான் இருந்தது. அதை உணர்ந்த மலர்தான் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

சிகிச்சை அளித்து விட்டு வெளியே வந்த மருத்துவரிடம்..."என்னோட ஹஸ்பண்ட்க்கு இப்ப எப்படி இருக்கு டாக்டர் சார்" என்று சுவாதி கதற...
மலரும் அழுகையோடு டாக்டரின் பதிலை எதிர்பார்த்து நின்றாள்.
நந்தனும் ஆதித்யாவும் எதுவும் பேசாமல் கேள்வியாக டாக்டரை பார்த்தனர்.

"ரொம்ப மன அழுத்தத்துல இருந்து இருக்கார் ... சுகர் லெவல் வேற ரொம்ப கம்மியா இருக்கு... கொஞ்சம் லேட்டா கொண்டுவந்திருந்தாலும் கோமாவுக்கு கூட போயிருப்பார்... இப்போ எங்களால முடிஞ்ச ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கோம்... இனி அவரை ஸ்டிரஸ்(stress) ஆக பாத்துக்குறது உங்க கைலதான் இருக்கு.... நார்மல் வார்டுக்கு மாத்தின அப்புறம் பேஷண்ட டிஸ்டர்ப் பண்ணாம போய் பார்த்துக்கலாம்" என்று டாக்டர் நகர்ந்துவிட...
சுவாதி தலையில் கை வைத்து இருக்கையில் அமர்ந்து கதற ஆரம்பித்து விட்டாள்.

எவ்வளவுதான் அவள் மோசமானவளாக இருந்தாலும் மகேஷ் மீது அவளுக்கு காதல் அதிகமாகவே இருந்தது. அவனுக்கு ஒன்று என்றால் உயிர்வரை வலிக்கும் அவளுக்கு....

அண்ணியின் அழுகையை பார்த்து மலரும் அழுக ...
சுவாதி ஆக்ரோஷத்தோடு எழுந்து... "எல்லாமே உன்னாலதான் பீட பிடிச்சவளே... அப்பா அம்மாவ காவு வாங்கிட்டு எப்போ நீ எங்க வாழ்க்கைகுள்ள வந்தியோ அன்னையோட எங்க சந்தோஷம் நிம்மதி எல்லாமே போச்சு... செத்து தொலைடி சனியனே... எதுக்கு எங்க உசுர போட்டு வாங்குற... செத்துப் போ" என்று வெறிபிடித்தவள் போல் மலரை தள்ளிவிட,
அண்ணியின் திடீர் ஆக்ரோஷ தாக்குதலை எதிர்பார்க்காத மலர் கீழே விழுந்தாள்.

ஆதித்யா தங்கையை பிடித்துக்கொண்டு அவளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க, சுவாதி அவனது பிடியிலிருந்து திமிறிக்கொண்டு ஆக்ரோஷத்துடன் மலரை பார்த்தாள்.

கீழே விழுந்த மலரை நந்தன் தூக்கி தன் தோளோடு அணைத்தவாறு, "எதுக்கு தேவையில்லாம காட்டுமிராண்டித்தனமான நடந்துக்கிறிங்க? நீங்களும் ஒரு பொண்ணு தான?" என்று சுவாதியுடன் சண்டைக்கு வர,

"அப்படிதாண்டா சண்டை போடுவேன். உனக்கு கேட்க எந்த உரிமையும் இல்லை. நீ உன் வேலைய பாத்துட்டு போ..." என்று சுவாதியும் விடாமல் கத்த,
ஆதித்யாவின் கண்கள் நந்தனின் பிடியிலிருந்த மலரின் மீது படிந்தது. அதை உணர்ந்து மலரும்... அவனிடமிருந்து விலக பார்க்க "இப்போ உரிமை இல்லன்னா என்ன? கூடிய சீக்கிரம் உரிமை வந்துரும்..." என்று கூறிய நந்தனின் பிடி இறுகியது. மலர் அதிர்ந்துபோய் அவனை பார்க்க, அவனின் கண்களில் தெரிந்த மாற்றத்தை பார்த்து உண்மையிலேயே பயந்து போனாள்.

அவ்வளவு நேரம் கோபத்தை கட்டுப் படுத்தி கொண்டிருந்த ஆதித்யா, மலரை அவனிடமிருந்து பிரித்து, "என்னோட மனைவி மேல உனக்கு எந்த உரிமையும் இல்லை... அந்த உரிமை எப்பவும் வரவும் வராது... தேவையில்லாம எங்க குடும்ப விஷயத்துல தலையிடாத" என்று ஆத்திரத்துடன் எச்சரித்தான்.

நந்தனும் விடாமல்...
"இப்போ உரிமை இல்லாம இருக்கலாம்... கூடிய சீக்கிரமே உரிமையை கொண்டுவருவேன்... உங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆன உடனே மலர கல்யாணம் பண்ணி அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போகப்போறேன்" என்று மலரின் மனதை அறியாமல் அவனும் எகிற...

ஆதித்யாவின் கோபம் தலைக்கேற.... "உனக்கு அவ்வளவு தைரியமா? என்னோட பொண்டாட்டியா நீ கல்யாணம் பண்ணுவியா டா ராஸ்கல்" என்று ஆத்திரத்துடன் அவனின் முகத்தில் ஓங்கி குத்தினான்.

நந்தனும் ஆக்ரோஷத்துடன்...
"அவ இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் போதும். நானே என்னோட மலர நல்லா பார்த்துப்பேன். இனி எங்களை யாராலையும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் விடமாட்டேன். மலர் எனக்கு தான்" என்று விடாமல் ஆதித்யாவுடன் சண்டை போட்டான்.

சுவாதி ஆரம்பித்து வைத்த சண்டை சிறிது நேரத்தில் கைகலப்பில் வந்து நின்றது....
அங்கிருந்த இருக்கைகள் எல்லாம் அங்கும் இங்கும் பறந்தது ... பொருட்களெல்லாம் ஒவ்வொன்றாக உடைய உடைய சண்டை வலுத்தது.

மலர்,சுவாதி இருவரும் தடுக்க... தடுக்க...இருவரும் அடிபிடி சண்டை போட ... சிறிது நேரத்திலேயே ஹாஸ்பிடல் கலவர பூமியானது.
அங்கிருந்த அனைவரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நர்ஸ் வந்து அமைதியா இருங்க என்று கத்தியும் கூட இருவரும் அடங்கவில்லை... இவர்கள் சண்டை போட்ட சத்தத்தில் டாக்டர்கள் கூட என்ன செய்வது? என்று தெரியாமல் தயங்கினர் காரணம் ஆதித்யா. தான்... அவனின் பணபலத்தையும் ஆள் பலத்தையும் நன்கு தெரிந்திருந்தனர். அடிதடி சண்டை போடுவது அவனல்லவா? என்ன சொல்லி அவர்களின் சண்டையை நிறுத்த?

அந்த மருத்துவமனையையே ஆதித்யாவின் தொழில்முறை நண்பர் ஒருவருடையதுதான்....
ஏன் ஆதித்யாவிற்கு மகேஷ் இங்கு அட்மிட் செய்யப்பட்டிருப்பதை பற்றிய தகவல் சொன்னதே அங்கிருந்த ஒரு டாக்டர் தான்...

இருவரும் விடாமல் சண்டை போட ...நந்தனை விட ஆதித்யா தான் ஆக்ரோஷத்துடன் தாக்கினான். எவ்வளவுதான் அடிவாங்கினாலும் நந்தனும் விடாமல் மல்லுக்கு நிற்க இருவரையும் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர் அனைவரும்...

அப்போதுதான் ஹாஸ்பிடலுக்கு என்ட்ரி ஆன சரத்-சௌமியா இருவரும், இவர்களின் சண்டையை பார்த்து இங்க என்னடா நடக்குது? என்று அதிர்ந்து விழித்தனர்

சரத் ஆதித்யாவின் அருகில் சென்று, "பாஸ் பாஸ் போதும்... பாஸ் அவரை அடிக்காதீங்க" அவனைப் பிடித்து இழுக்க,

சௌமியா, "நந்தா மாஸ்டர் சண்டை போடாதீங்க... இங்க வாங்க"என்று அவனை ஆதித்யாவிடமிருந்து பிரித்து எடுத்தாள்.

ஆதித்யா ஆக்ரோஷம் அடங்காமல் மூச்சு வாங்க ஆத்திரத்துடன் நந்தனை முறைக்க...
நந்தனும் அவனுக்கு சளைக்காமல் முறைத்தான்.

"பாஸ் என்ன பிரச்சினை?" என்று சரத் கேட்க...
அவனை திரும்பி முறைத்து பார்த்த ஆதித்யா, "அவன்கிட்டயே கேளு..." என்று முகத்தை திருப்ப...
இவர் கிட்ட இனி எப்படிக் கேட்டாலும் பதில் கிடைக்காது என்று நினைத்த சரத், நந்தனிடம் திரும்பி
"சார் நீங்க ரொம்ப சாது வாச்சே...ஏன் இந்த கோபம்?"என்று கேட்டான்.

அவனைப் பார்த்து முறைத்த நந்தன், "நான் சாதுன்னு யார் சொன்னா?" என்று பதில் கேள்வி கேட்க,

"முடியலடா சாமி...." என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட சரத்...
சௌமியாவை முறைத்துக்கொண்டே ...
"இல்ல சார் உங்க கல்யாணம் நின்னு போயும் நீங்க சந்தோஷமா தான்... எங்க கல்யாணத்தோட நின்னு அட்சதை தூவி வாழ்த்திட்டு போனீங்க அதான்... நீங்க சாதுன்னு தப்பா நினைச்சிட்டேன் சார்.." என்று விளக்கம் அளிக்க,
"இது இப்போ தேவையா?" என்று சௌமியா அவனை முறைத்து வைத்தாள்.

அதற்குள் கூட்டமும் கலைந்து சென்றுவிட... நர்ஸ் ஒருவர் வந்து "பேஷண்ட்ட நார்மல் வார்டுக்கு மாத்தியாச்சு.... அவர பாக்கணும்னா ஒவ்வொருத்தரா போங்க" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அவ்வளவு நேரம் தலையில் கைவைத்து சோர்ந்த சிலைபோல் அமர்ந்திருந்த சுவாதிக்கு உயிர் வந்து வேகமாக மகேசை பார்க்க சென்றாள்.

மலரும் அவள் பின்னே உள்ளே செல்ல போக... அவளின் கைப்பற்றி தடுத்து நிறுத்தினான் ஆதித்யா.

"விடுங்க நானும் என் அண்ணன பாக்கணும் இப்பவே..." என்று சிறு குழந்தையை போல் சொல்லி கண்கலங்கியவளை பார்த்த அனைவருக்கும் உள்ளுக்குள் என்னவோ செய்தது.
" நீ இப்போ உள்ள போனா சுவாதி ஆடுவா" என்று ஆதித்யா முறைத்துக் கொண்டே சொல்ல,

பரதநாட்டியமா? குச்சிப்புடியா? என்று அங்கிருந்த சீரியஸ்னஸ் புரியாமல் சந்தேகம் கேட்ட சரத்தின் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் சௌமியா.
ஸ்ஸ்ஸ்.... என்று கைகளை தேய்த்து கொண்ட சரத்,
"என்ன மியாவ் பொது இடத்தில மாமாவ அசிங்கப்படுத்துறல... இரு இரு ...வீட்டுக்கு தானே வரணும் வச்சுக்கிறேன்" என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தான்.

வெச்சுகிட்டாலும்... என்று மனதில் நொடித்து கொண்ட சௌமியா அவனை கடுப்புடன் முறைத்தாள்.

ஆதித்யா சரத் சொன்னதை கேட்டு அவனை முறைத்துவிட்டு,
மலரிடம் திரும்பி, "சுவாதிக்கு அப்புறம் நீ போ.... இப்ப போனா திரும்பவும் சண்டையை ஆரம்பிப்பா... மகேஷ் முன்னாடி சண்டை போட போறீங்களா? ரெண்டுபேரும்...ஹான்ன்?? அதனால அவ வந்ததும் நீ போ" என்று பொறுமையாகவும் அழுத்தமாகவும் ஆதித்யா சொல்ல,

அவனின் ஆளுமையான குரலில், மலரின் தலை அவளின் சம்மதம் இல்லாமலேயே... சரி என்று
அசைந்தது.

அதன் பிறகு மருத்துவமனை பணியாளர்கள் கலைந்து கிடந்த பொருட்களையும், இருக்கைகளையும் சரி செய்துவிட்டு செல்ல அனைவரும் அமர்ந்தனர்.
சோர்ந்துபோய் அமர்ந்திருந்த...
நந்தனின் மூக்கிலிருந்து நிற்காமல் இரத்தம் வழிந்து கொண்டே இருக்க, சரத் அவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்த நர்சிடம் முதலுதவி செய்து விட்டு கூட்டி வந்தான்.

ஆதித்யாவிற்கு நந்தனை அடித்ததினால் கைகளில் தான் நல்ல அடி... கைகளை மடக்கி அவன் அமர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.

இங்கு அறையின் உள்ளே மகேஷ் மெதுவாக மயக்கத்தின் பிடியிலிருந்து கண்களை திறந்தான். ஒருபுறம் அவனது கைகளில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க, அவனின் மறு கையை பிடித்துக்கொண்டு அதில் சாய்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் சுவாதி.
தனது கையை அவளிடம் இருந்து இழுத்துக் கொண்டவன்... அந்த நிலையிலும் அவளைக் கண்டுகொள்ளாமல் மலர் என்று முணுமுணுக்க அவனின் செயலில் சுவாதிக்கு தான் சுருக்கென்று நெஞ்சில் வலித்தது.
கோபத்துடன் எழுந்தவள் வெளியே வந்து மலரின் முன்னால் நின்றாள்.

மீண்டும் அவள் சண்டை போட தான் வந்திருக்கிறாள் என்று பயந்து மலர் எழும்ப, நந்தன் சரத் இருவரும் மலருக்கு துணையாக வந்து நிற்க... ஆதித்யா தங்கையை உறுத்து விழித்தான்.
எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த
சுவாதி, "நான் ஒன்னு இவள கொலை பண்ணிடமாட்டேன்" என்று கத்தி விட்டு... "அண்ணா உன் கூடவும் மலர் கூடவும் நான் கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள்.

மற்ற அனைவரும் ஆதித்யா மலர் இருவரையும் மாறி மாறி பார்க்க, நந்தன் தான் "எதுவா இருந்தாலும் இங்க வச்சு பேசுங்க சுவாதி" என்றான்.

அவள் மீண்டும் மலரை காயப்படுத்தி விடுவாளோ என்று நினைத்துதான் அவன் சொன்னது...

சுவாதியோ அவனை எரிப்பது போல் பார்த்துவிட்டு... தன் அண்ணனை பார்க்க...அவனும் யோசனையாக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் பேசவில்லை....
அங்கிருந்த அனைவரும் தனக்கு எதிராக இருப்பது போல் தோன்றவும்... சுவாதி முகம் வாடி சோர்ந்து அமர்ந்தாள்

அண்ணியின் சோர்ந்த முகத்தை பார்த்த மலர்,
"என்ன பேசணும் அண்ணி?" என்று அவளிடம் வர,
நந்தன் அவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.

அனைவரின் முன்பும் தனது கையை பிடித்தவனை அதிர்ச்சியுடன் மலர் பார்க்க...ஆதித்யாவோ சட்டென்று மூண்ட சினத்துடன், மலரை தன் பக்கம் இழுத்து கொண்டு,
"நீ உன்னோட லிமிட்ஸ ரொம்ப கிராஸ் பண்ற ...என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு... எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்" என்று கர்ஜித்து விட்டு,
"வா ஸ்வாதி ஏதோ பேசணும்னு சொன்னியே?" என்று மலரை இழுத்துக்கொண்டு... முன்னே செல்ல சுவாதியும் அவர்களின் பின்னே சென்றாள்.

"ஏன் சார் பாஸ வாண்டட் டா போய் வம்பு இழுக்கறீங்க...? அவரைப் பகைத்துக் கொண்டு யாராலும் வாழ முடியாது நந்தன் சார். பாத்து கவனமா இருங்க..." என்று சரத் தன் பங்கிற்கு எச்சரிக்கை செய்ய...

நந்தன் அழுத்தமாக நின்றானே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை...

ஆனால் மனதிற்குளோ...
"இந்த தடவ யார் என்ன சொன்னாலும்... நா மலர் இல்லாம அமெரிக்கா போக மாட்டேன்" என்று உறுதி எடுத்துக்கொண்டான்.
அதை முடிவு செய்யும் உரிமை மலரின் கையில் தான் உள்ளது என்பதை அவன் மறந்து விட்டான் போலும்....

அனைவரும் கலைந்து சென்றதும், சௌமியா சரத்திடம்,
"எதுக்குங்க நந்தா மாஸ்டரை மிரட்டுற மாதிரி பேசுறீங்க? அவர் சொன்னாலே புரிஞ்சுக்குவார்... ரொம்ப நல்லவர்" என்று பரிந்து கொண்டு வர...

அவளை மேலும் கீழும் ஒரு மாதிரியாக பார்த்த சரத்,
"நாளைக்கு எங்க அப்பா அம்மா வீட்டுக்கு போலாமா?" என்று கேட்கவும் அவனை திகிலோடு பார்த்தாள் சௌமியா...

அங்கு ஆட்டு உரலில் மாவு ஆட்டி.. அம்மியில் மிளகாய் அரைத்து... மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து... மாமியாருக்கு வெந்நீர் வைத்துக் கொடுத்து... நாத்தனாருக்கு தலை பின்னி விட்டு... எப்பா முதுகு உடைய உடைய வேலை செய்ய வேண்டியிருக்கும்...
அதை நினைத்து பார்த்தவள்...

"இல்லங்க... இல்லங்க நீங்க என்ன பேசினாலும் அது கரெக்ட் தான்... நான் சும்மா சொன்னேன்... சும்மா சொன்னேன்" என்று சௌமியா சிரித்தும் மழுப்ப...
சரத் அவளை பார்த்து முறைத்துவிட்டு, மறுபுறம் திரும்பி புன்னகைத்துக் கொண்டான்.

இருவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியும் இருவரும் திருமண வாழ்க்கையை தொடங்க வில்லை...

அவள் அவனை பிளாக்மெயில் செய்து திருமணம் செய்து கொண்டதால் அவளின் மீது செம கடுப்பு அவனுக்கு...
மேலும் அவளால் தான் அனைவரின் வாழ்க்கையும் சிக்கலில் இருக்கிறது என்பதை அவளின் மூலமே தெரிந்துகொண்டு மேலும் கோபம் தான் வந்தது.

இப்பொழுது கொஞ்ச நாட்களாக தான் அவளின் மீது ஈர்ப்பு வர ஆரம்பித்திருந்தது. மஞ்சக் கயிறு மேஜிக் ஸ்டார்ட் ஆகி இருந்தது என்று கூட சொல்லலாம்...

அவளின் தாழ்வு மனப்பான்மையும் பிடிவாத குணமும் தான் அநேக பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை புரிந்து கொண்டு அதைப் போக்குவதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்தான் சரத்.

எவ்வளவுதான் கோபம் வந்து அவளை திட்டினாலும் அவளின் உருவத்தை வைத்து ஒரு வார்த்தை அவளை பேச மாட்டான். அதனாலேயே சௌமியா அவனிடம் அடங்கி போக ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் வீட்டில் வேலை ஆள் இல்லை... ஏசி இல்லை.... சமைக்க மாட்டேன் என்று அடம் பிடித்தவளை அவர்களின் கிராமத்து வீட்டிற்கு கூட்டி சென்று இரண்டு நாள் தங்க வைத்தான் அதிலிருந்து அவனிடம் பொட்டி பாம்பாக அடங்கி விடுவாள் அவனின் மனையாள்.
என்று தன்னை உள்ளார்ந்த நேசத்துடன் கணவனாக ஏற்றுக்கொள்கின்றாளோ... அன்று தான் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருந்தான் சரத்.

தனியாக பேச வேண்டும் என்று இருவரையும் அழைத்து வந்திருந்த சுவாதி, எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்துக் கொண்டு நிற்க... ஆதித்யாவோ தங்கையிடம்,

"என்ன சுவாதி என்ன ஆச்சு? சொல்லு எதுவாயிருந்தாலும் அண்ணன் பாத்துக்குறேன்" என்று தைரியம் சொன்னான்.
மலர் என்ன வரப்போகிறதோ? என்று தன் அண்ணியை பயந்துகொண்டே பார்க்க....
கண்களை அழுத்தி துடைத்துக் கொண்ட சுவாதி தொப்பென்று அண்ணனின் காலில் விழுந்தாள்.

ஆதித்யா பதறி விலகி,
"எந்திரி சுவாதி ...என்ன பண்ற நீ?" என்று தங்கையை தூக்கி விட,

அவளோ எழாமல்,
"அண்ணா என் வாழ்க்கையே உன் கையில தான் இருக்கு.நீயும் மலரும் சேர்ந்து வாழ்ந்த மட்டும் தான் என்னோட குடும்பம் எனக்கு கிடைக்கும். இல்லனா கடைசிவரை நான் வாழாவெட்டி தான்... என் குழந்தை அப்பா இல்லாம கஷ்டப்படும் ண்ணா... என்னால இந்த கொடுமையை தாங்க முடியல ண்ணா... சீக்கிரம் செத்து போயிடுவேன் போல... அவர் என்ன உதாசீனப்படுத்தும் போது நெஞ்செல்லாம் வலிக்கு அண்ணா தாங்க முடியல என்னால..." என்றவள் அடுத்த எழுந்து மலரின் கால்களில் விழ போக, மலர் அதற்குள் ஆதித்யாவின் பின்னால் மறைந்து கொண்டாள்.
ஆதித்யா ...
"சுவாதி" என்று அரட்டி அவளை நிற்க வைத்தவன்...
"மகேஷ் என்ன சொன்னான்?" என்று கோபத்துடன் கேட்க,

"அவர் என்ன திட்டி இருந்தாலும் தாங்கி இருப்பேனே அண்ணா... அவர் என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்கிறார்... என்னால முடியல ண்ணா" என்று மீண்டும் சுவாதி அழுகையில் குலுங்க, தங்கையின் அழுகையில் ஆதித்யா என்ன செய்வதென்று தெரியாமல் இயலாமையுடன் நின்றான்.

மலரின் மீது இருந்த காதல் மனதோ, அவளுடன் சேர்ந்து வாழ் என்று கூற... மற்றொரு மனமோ எப்படி இருந்தாலும் நீ அவளுக்கு இரண்டாம் தரம் தான் என்று கேலி பேசியது.

தன் பின்பக்க தோள்பட்டையில் சாய்ந்து நின்று அழும் தன் அண்ணியை பார்த்து கண்கலங்கி கொண்டிருந்தவளை ஒருமுறை பார்த்தவன்,
"சரி சுவாதி நான் மலர் கூட சேர்ந்து வாழ சம்மதிக்கிறேன்... அழாதேம்மா" என்று கண்களை துடைத்து விட்டான்.

கண்டிப்பாக அவன் சம்மதிக்க மாட்டான்... என்ற தைரியத்தில் நின்ற மலர்,அவன் அப்படி சொன்னதும் தன் மீன் விழிகளை விரித்து அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.


தொடரும்...
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN