ஆதித்யா சக்கரவர்த்தி-26

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 26

ஆதித்யா வந்த நிலையை பார்த்ததும் மலருக்கு நெஞ்சம் நடுங்கி தான் போனது...
ஆதித்யா குடித்துவிட்டு வந்திருந்தான்...
கையிலும் மது பாட்டில் இருந்தது. சாதாரணமாகவே அவனைப் பார்த்து நடுங்கும் மலரின் நிலையை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது அவளுக்கு ....
வந்ததும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தவன் கையிலுள்ள பாட்டிலை சோபாவின் ஓரத்தில் வைத்துவிட்டு கண்களை மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
பணியாளர்கள் ஓரிருவர் அங்கும் இங்கும் நின்று அவனை வேடிக்கை பார்ப்பது தெரிந்தது...

அதை கவனித்த மலர் தைரியத்தை திரட்டிக்கொண்டு...
அவனின் அருகே வந்தவள், "வாங்கங்க நம்ம ரூமுக்கு போயிடலாம்..." என்று மெல்லிய குரலில் அழைக்க...
ஆதித்யா கண்களை திறக்கவே இல்லை....

அவன் அருகில் வந்து அமர்ந்த மலர் மீண்டும் "என்னங்க" என்று அவனின் கையை தட்டி அழைக்க... அவளின் கையை இறுகப் பிடித்துக் கொண்டான் ஆதித்யா.
லேசாக வலித்தது மலருக்கு பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டவள் மீண்டும்...
"ப்ளீஸ்ங்க கீழ வச்சு எதையும் பேச வேண்டாம்... மாடிக்கு போய்டலாம்" என்று கெஞ்ச....
கண்களை திறந்து அவள் முகத்தை ஒரு நொடி பார்த்தவன்,
என்ன நினைத்தானோ... தட்டுத்தடுமாறி எழுந்து மாடியை நோக்கி சென்றான்.

கிச்சனுக்கு சென்று லெமன் ஜூஸ் போட்டு எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்கு சென்றாள் மலர்.

ஆதித்யா அறையில் அங்கு இல்லாமல் போக பால்கனிக்கு சென்றாள். அங்குதான் நிலவை வெறித்தவாறு திண்டில் அமர்ந்திருந்தான் அவன்....
அவனை நெருங்கவே பயமாகத்தான் இருந்தது...
பயந்து கொண்டே அவனின் அருகில் சென்றவள் "நான் உங்ககிட்ட பேசணும்" என்றாள்.
ஆதித்யா திரும்பவே இல்லை... அவனின் கண்கள் நிலவிடமே இருந்தது.

தான் சொல்வதை அவன் கேட்பான் நினைத்துக்கொண்டு...
"நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க நந்தன் வந்து......" என்று மலர் முடிக்கவில்லை அவளது கையில் இருந்த ஜூஸ் டம்ளர் கீழே விழுந்து உடைந்து இருந்தது.
ஆதித்யா கோபத்துடன் மலரின் தோள் பட்டையை அழுத்தி பிடித்திருந்தான்.
போதையில் அவனின் கண்கள் சிவந்திருந்தது.

"எதுக்குடி என் வாழ்க்கையில வந்த? எதுக்கு வந்த?... சொல்லு எதுக்கு வந்த? இங்க வலிக்குதுடி ..."
இங்க என்று அவனது நெஞ்சினை சுட்டிக் காட்டியவன்...
"போயும்... போயும்... உன் மேல எனக்கு காதல் வந்து இருக்கே... உனக்கு அந்த நந்தன தான பிடிச்சிருக்கு... நீயும் எங்க அம்மா மாதிரி நீ லவ் பண்ணவன் கூடயே போய்டுவ.... நான் எங்க அப்பாவ மாதிரி தூக்குப்போட்டு செத்துருவேன்.... கெட்டதிலும் ஒரு நல்லது மாதிரி நமக்கு குழந்தைங்க இல்ல... இருந்திருந்தா இன்னொரு ஆதித்யா உருவாகி இருப்பான்.... என்ன மாதிரியே உள்ளுக்குள்ள செத்து செத்து பிழைப்பான்..."
மலர் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கவும்...

"நீ அழாத டி... உன் மேலயும் தப்பு இல்ல... மேல ஒருத்தன் உக்காந்து நம்ம எல்லாருக்கும் தலையெழுத்து எழுதறான் பாரு... அவன தான் சொல்லணும்... ஏற்கனவே ஒருத்தன மனசுல வச்சுக்கிட்டு நீயும் என் கூட வாழ முடியாதுல... சரி நீயும் எங்க அம்மா மாதிரியே என்ன விட்டுப் போய்டு..." என்ற போதையில் தள்ளாடியபடி கீழே சரிந்து அமர்ந்து சுவரோடு சாய்ந்தான் ஆதித்யா.
அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது

போதையின் வீரியத்தில் தன் கடந்த காலத்தின் துக்கத்தை மலரிடம் உளற ஆரம்பித்தான் அவன்...
அம்மா ஓடி விட்டார். அப்பா தற்கொலை செய்து கொண்டார். மூன்று தங்கைகளின் வயிற்றையும் நிறைக்க வேண்டும்....
ஒரு பிளஸ் 2 படிக்கும் சிறுவனால் எவ்வளவு வேதனைகளை தாங்க முடியும்.
சுற்றியுள்ளவர்களின் கேலி கிண்டல்களை பொறுத்துக்கொண்டு தங்கைகளுக்காக பொறுமையாக இருந்தான் ஆதித்யா. அப்பாவின் பொறுமை அவனிடம் அப்பொழுது இருந்தது....

அப்பொழுதுதான் அவனது அப்பாவின் தூரத்து உறவினர் ஒருவர் அவனின் அப்பா இறந்ததற்கு துக்கம் விசாரிக்க வந்திருந்தார். அவர்களின் நிலையை பார்த்து பாவப்பட்டு அவருடன் வருமாறு அழைத்தார்.

முதலில் மறுத்த ஆதித்யாவை தங்கைகளை காட்டி சமாதானப்படுத்தினார் அவர்.
"இங்க பாருப்பா ஆதித்யா... மூணு பொட்ட பிள்ளைகள வெச்சிகிட்டு நீ தனியா இங்கே இருந்து சமாளிக்க முடியாது. இங்க இருக்கிற வீட்டை வித்துட்டு காசு வாங்கிட்டு வா... அத வச்சு எங்க வீட்டு பக்கமா ஒரு வாடகை வீட்டில் தங்கிக்கலாம்... இல்லனா எங்க வீட்லயே கூட தங்கிக்கலாம்...எங்களுக்கும் குழந்தைங்க இல்ல... உன்னோட தங்கச்சிகள என் சம்சாரம் அம்மா மாதிரி பாத்துக்கும். உனக்கும் நான் அங்க நல்ல வேலையை வாங்கி தரேன்" என்றதும் சிறிது நேரம் யோசித்த ஆதித்யாவும் சரி என்று விட்டான்.

அவனுக்கும் உள்ளுக்குள் தங்கைகளின் பாதுகாப்பை பற்றி பயம் இருந்தது
உடனே அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்கும் ஏற்பாடும் நடந்தது...
அவர்களின் வீட்டை அதே ஊரில் வாழ்ந்த ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் வாங்கிக்கொண்டு கணிசமான தொகையையும் கொடுத்தார்.

அதை வாங்கிக்கொண்டு ஆதித்யாவும் அவனது தங்கைகளும் அந்த தூரத்து உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

பணம் அவனிடம் இருந்தால் காணாமல் போய்விடும் என்று பயம் காட்டி அதை தன்னிடமே வைத்துக் கொண்டார் முருகேசன்...
வந்த இரண்டு நாட்களும் எல்லாம் நன்றாகத்தான் சென்றது.
முருகேசனுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் எந்த பிரச்சினையும் வரவில்லை.
முருகேசனின் மனைவி கனகவள்ளி குழந்தைகள் மூவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார்.
ஆதித்யாவிடமும் பரிவுடன் தான் நடந்துகொண்டார்.
மூன்றாம் நாள் ஆதித்யாவை ஒரு பெரிய ஹோட்டலில் பேரர் வேலைக்கு சேர்த்து விட்டார் முருகேசன்.
முதலில் புதிய வேலைக்கு திணறிய ஆதித்யாவும் பின் விரைவிலேயே கற்றுக்கொண்டான்.

ஆனால் அவனுக்கு இருந்த பெரிய கவலை சௌபாக்கியா தான்... அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் மெலிந்து கொண்டே போனாள் அவள்.
பக்கத்தில் இருந்த அரசு மருத்துவமனையில் காட்டும் பொழுதுதான் அவளுக்கு நுரையீரலில் புற்றுநோய் இருக்கிறது என்று தெரியவந்தது. அதுதான் ஆதித்யாவிற்கு அடுத்த பெரிய ஆடி ...
அவன் அப்பொழுது வாங்கிய சம்பளம் வெறும் 1500 ரூபாய் மட்டுமே... அதையும் வீட்டு செலவிற்காக கனகவல்லி இடம் கொடுத்துவிடுவான்.
அவர்கள் வீட்டை விற்று கொடுத்த பணம்... இன்னும் முருகேசனிடம் தான் இருந்தது.... அதை வைத்து கொண்டு
தனியார் மருத்துவமனையில் சௌபாக்கியாவை காட்டினால் ஆப்ரேஷன் செய்து காப்பாற்றி விடலாமென்று நினைத்தான் ஆதித்யா ...

அன்று வேலை முடிந்து வந்ததும் முருகேசன் இடம்தான் சென்று நின்றான் அவன்....
"சித்தப்பா எங்க வீட்ட வித்த பணம் உங்ககிட்ட தான இருக்கு... அத வச்சு தங்கச்சிக்கு ஆப்பரேஷன் பண்ணிடலாம்" என்று சொன்னான் ஆதித்யா.

பணத்தை பற்றி பேச்சை எடுத்ததும் எங்கிருந்துதான் வந்தாரோ கனகவல்லி அவர்களின் அருகே வந்து நின்று கொண்டார்.

மனைவியின் முகத்தை பார்த்த முருகேசன்...
"இந்த வீட்டு மேல ஒரு லோன் இருந்துச்சு பா அந்தப் பணத்த அதுக்கு கட்டிட்டேன்" என்று கையை விரித்தார் அவர்.
உண்மையில் அந்தப் பணம் கனகவல்லி கையில்தான் இருந்தது.
ஆதித்யா அவரிடம் "பணத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?" என்று கேட்டுப் பார்த்தான்... அவர் இப்போதைக்கு முடியாது என்று விட ஆதித்யா சோர்ந்து போனான்.
தினமும் தங்கையின் வேதனையை பார்த்து பார்த்து உள்ளுக்குள் புழுங்கி புழுங்கி செத்தான்.

சுவாதி சௌமியா இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் நல்லவர் போல் நடித்த கனகவல்லி நாளாக நாளாக அவரின் நிஜ முகத்தை காட்ட ஆரம்பித்தார். குழந்தைகளை வேலை வாங்குவது... ஓடி போனவளின் குழந்தை என்று திட்டுவது... என்று அவர்களுக்கு கொடுமைகள் ஆரம்பித்தது.
சௌபாக்கியாவை கூட ஒழுங்காக கவனிக்காமல் விட்டுவிட்டார் கனகவல்லி.

இதையெல்லாம் அறிந்த ஆதித்யா முருகேசனிடம் சொல்ல, அவரோ "உங்களுக்கெல்லாம் சோறு போடுறதே பெருசு..." என்று சொல்லி அவனின் வாயை அடைத்து விட்டார்.

ஆதித்யாவிற்கு கோபம் வந்தாலும் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. இப்பொழுது வீடு வாசல் எதுவும் இல்லாமல் தங்கைகளை கூட்டிக்கொண்டு எங்கே செல்ல முடியும்? எப்படிப் பிழைக்க முடியும்?... அதனால் அவர்களைப் பொறுத்து போக வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டான் அவன்.
ஒருபுறம் சௌபாக்கியாவின் நிலை வேறு கவலைக்கிடமாக இருந்தது.
மூச்சுவிடாமல் துடிக்கும் தங்கையை பார்த்து கலங்கிப் போகும் ஆதித்யாவை... தேற்ற கூட ஆளில்லை.
"வலிக்குது அண்ணா... வலிக்குது அண்ணா... என்னை காப்பாத்து எனக்கு ரொம்ப வலிக்குது... நான் சாகப் போறேனா? என்னால வலியை தாங்கிக்க முடியல அண்ணா... அம்மா வேணும் எனக்கு அம்மா வேணும்" என்று கதறிய தங்கையை பார்த்து கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது அவனால்.

ஒருநாள் இரவு சௌபாக்கியாவின் உயிர் அவளின் உடலை விட்டு பிரிந்தது...

இறுதிச் சடங்கு முடிந்த பின் கனகவல்லி முருகேசனிடம் சொன்னதை அவனால் கேட்க முடிந்தது....
"சனியன் எத்தனை நாள் இழுத்துட்டு கிடந்து இருக்கு.... இப்பதான் நிம்மதி" என்று இரக்கமில்லாமல் பேசிய சித்தியை ஒன்றும் செய்ய முடியாமல் அங்கிருந்து நகர்ந்தான் ஆதித்யா.

அன்று ஹோட்டலில் வேலையாக இருந்த ஆதித்யாவை டேபிள் நம்பர் மூன்றில் ஆர்டர் எடுத்து வருமாறு சொன்னான் ஒருவன்...
டேபிள் நம்பர் மூன்றில் ஒரு ஜோடி அமர்ந்திருப்பது போல் இருக்கவும் அருகில் சென்ற ஆதித்யா திகைத்து விட்டான்.

அங்கே அமர்ந்திருந்தது அவனை பெற்ற தாயும் அவரின் உயிருக்குயிரான காதலனும்....
நெற்றி வகிட்டில் குங்குமம் தாலி எல்லாம் இருக்க பட்டு சேலை மின்ன பணக்கார தோரணையில் அமர்ந்திருந்தார் அவர்...

அவரின் அருகே அமர்ந்து இருந்தவன் கால்மேல் கால் போட்டு அவனும் ராஜ தோரணையாக தான் அமர்ந்திருந்தான். கண்டிப்பாக அவன்தான் ஈஸ்வர் என்பதை புரிந்துகொண்ட ஆதித்யா கடமைக்காக அவர்கள் அருகில் சென்று "ஆர்டர் ப்ளீஸ்" என்றான்.
சங்கரி ஆதித்யாவை பார்த்து திகைத்து விட்டார்... ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருக்க ....ஈஸ்வர் ஒரு பிளேட் பிரியாணியும் சிக்கன் 65 ஆர்டர் செய்தார்.

"மேடம் உங்க ஆர்டர்..." என்று தன் தாயின் புறம் திரும்பி கேட்ட ஆதித்யாவின் கண்களில் மருந்துக்கும் உணர்வு இல்லை.

"எனக்கு சாம்பார் சாதம் போதும்" என்று குற்ற உணர்ச்சியுடன் அவன் கண்களைப் பார்க்காமல் சொன்னார் சங்கரி.

"இன்னும் டென் மினிட்ஸ்ல உங்க ஆர்டர் வந்துடும்" என்றவன் நகர பார்க்க ...

"உன்னோட பேரு என்ன?" என்று கேட்டான் ஈஸ்வர்...

"ஆதித்யா"

" நைஸ் நேம் யங் மேன்... அப்பா என்ன பண்றாங்க?"

"அப்பா இறந்து போயிட்டாங்க சார்" என்று குரல் இறுக சொன்னான் ஆதித்யா...
அதை கேட்டதும் சங்கரியின் முகம் அதிர்ச்சியை காட்டியது...

" சோ சேட்... அப்போ அம்மா என்ன பண்றாங்க?" என்று ஈஸ்வர் விடாமல் கேட்க...
சங்கரியை ஒருமுறை பார்த்தவன்...
"அப்பா சாகறதுக்கு முன்னாடியே... அம்மா செத்துப் போயிட்டாங்க... சார்" என்றான்.

"சரி கூட பொறந்தவங்க யாராவது இருக்காங்களா?"

"ஆமா சார் ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க எனக்கு..." என்றான் ஆதித்யா.

அதைக்கேட்டதும் அதிர்ச்சியாகி சங்கரி,
"மூணு பேரு தானே..." என்று தன்னை மறந்து கேட்டுவிட...
ஈஸ்வரின் கண்கள் கூர்மையாக சங்கரியை பார்த்தது....

" ஒரு தங்கச்சி போன மாசம் செத்துப் போயிட்டா..." என்றவனின் குரலில் கரகரப்பு இருந்தது.

"சரி ஆர்டர் கொண்டு வா" என்று ஈஸ்வர் அவனை அனுப்பிவிட....
சங்கரியின் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்த்த ஈஸ்வர்....

"என்ன ஃபீலிங்ஸா? உன்னோட பசங்கள புருஷன் விட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் அவங்களுக்கு உனக்கும் சம்பந்தம் இல்லைன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்... அவங்களுக்காக நீ வருத்த படவே கூடாது" என்ற கடினமான குரலில் சங்கரியிடம் சொன்னார்.

ஆர்டர் கொண்டு வந்த கொடுத்த ஆதித்யாவை....
"கிளாஸ்ல தண்ணிய ஊத்தி தா..." என்று ஈஸ்வர் கேட்க.
அவன் டம்ளரில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருக்கும் போதே அவன் கையை தட்டிவிட்ட ஈஸ்வர்... தன் மேல் நீர் விழுந்ததும் அவனது கன்னத்தில் அறைந்தார்.

"யூ ப்ளடி ராஸ்கல்... என்னோட டிரஸ் இவ்ளோ காஸ்ட்லினு தெரியுமா? உனக்கு... உன்னால அது இப்போ வேஸ்டா ஆகிட்டு..." என்று அனைவரின் முன்பும் கத்த...
ஆதித்யா அறை வாங்கிய கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

சங்கரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அடிவாங்கிய மகனின் முகத்தை பார்க்க தெம்பில்லாமல் தன் முன்னால் இருக்கும் உணவின் மீது கவனத்தை வைத்திருந்தார்.
அதற்குள் அங்கு வேலை செய்யும் ஓரிருவர் வந்து ஈஸ்வரை சமாதானம் செய்துவிட்டு ஆதித்யாவை திட்டி உள்ளே அழைத்து சென்றுவிட்டனர்.

உணவு முடித்துவிட்டு இருவரும் செல்வதற்குமுன் ஆதித்யாவை பார்க்க சங்கரி வந்தார்...
"தம்பி.." என்று அவர் அழைத்ததும்
உள்ளம் வெடிக்கும் அளவிற்கு அழுகை வருவது போல் இருந்தது அவனுக்கு....
பெற்ற தாயாக இருந்தும் மகனை அடிப்பதை வேடிக்கை பார்க்கும் தாய் எத்தனை பேருக்கு கிடைக்கும்...
ஆதித்யா கண்கள் கலங்கி இருந்தாலும் அலட்சியமாக அவரை பார்க்க...
"இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு.... இதை வச்சுக்கோ" என்று அவனது கையில் திணிக்க பார்க்க,
"வேண்டாம் மேடம்..." என்று அதை வாங்க மறுத்து விட்டான் ஆதித்யா.

சங்கரி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் வாங்க மறுத்தவனிடம், " கவலைப்படாத தம்பி ...நானே அவர்கிட்ட சொல்லி உன்ன படிக்க வைக்கிறேன்... பாப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா? எங்க இருக்குறீங்க இப்போ?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க,
"மேடம் நீங்க இங்க வந்து இருக்குற கஸ்டமர் ...எங்ககிட்ட எல்லாம் ரொம்ப நேரம் பேசக்கூடாது... நீங்க போங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு" என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான் ஆதித்யா.

இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லாமல் ஆள் அரவம் இல்லாத இடத்திற்கு சென்று ஓவென்று கத்தி அழுதான் ஆதித்யா .அது தான் அவன் கடைசியாக அழுதது. அதன் பிறகு அவனது செய்கைகள் எல்லாவற்றிலும் இருப்பது முரட்டுத்தனமும் கோபமும் ஆத்திரமும் மட்டும் தான்....
அவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது இந்த உலகில் வாழ வேண்டுமென்றால் அதற்கு தேவை பணம் பணம் பணம் மட்டுமே....
அதை சம்பாதிக்க வழி என்ன? என்று யோசிக்க ஆரம்பித்தான்
கண்டிப்பாக நேர்மையாக மட்டும் உழைப்பால் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் குறுக்கு வழியில் புகுந்தவர்கள் தான் இன்று லட்சாதிபதிகளாக இருக்கிறார்கள் என்றும் உணர்ந்தவன் திருட்டு என்ற தொழிலை செய்ய முடிவு செய்தான்.
இயற்கையிலேயே புத்திக்கூர்மை அவனுக்கு அதிகம் என்பதால்... அவனுக்கு கஷ்டமாக எதுவும் இருக்கவில்லை. சிறு சிறு திருட்டுகளில் முதலில் ஈடுபட்டவன்... பின் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து பெரிய தொகையாக திருட ஆரம்பித்தான்....

இதற்கிடையில் கொடுமைக்கார சித்தியிடம் இருந்தும் பேராசைக்கார சித்தப்பாவிடம் இருந்தும் தங்கைகளை மீட்டு தனியாக வந்து விட்டான். அதுநாள்வரை சோறு போட்டவர்கள் தங்கைகளை பாதுகாத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இருவரையும் விட்டு வைத்தான்

தன் தந்தை தன்னிடம் சொன்னதுபோல் தன் பெரிய ஆளாக வேண்டும் என்ற வெறியில்
பெரியதாக திருடி தொழிலை ஆரம்பித்த ஆதித்யா பின் பலதுறைகளில் புகுந்து இன்று வெற்றிகரமாக பெரிய தொழிலதிபராக நிற்கின்றான்.
சிறுவயதில் தங்கைகள் பட்ட கஷ்டத்திற்காக...
அவர்கள் எது கேட்டாலும் நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைத்தான். நிறைவேற்றவும் செய்தான்.....

அவனது வாழ்க்கையில் இதுவரை அவன் பார்த்தது எல்லாம் முட்களும் காயங்களும் தான்... அதுதான் அவனின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் முழுமுதற் காரணம்...
ஆதித்யாவின் அத்தனை வருட காயத்திற்கு மருந்திட வந்தவளாக மலர் தெரிந்தாள். அவள் மீது தன்னை அறியாமல் காதல் கொண்டாலும் அதை எப்படி வெளிப்படுத்த என்று தெரியாமல் திணறி போனான். அதுவும் அவள் இன்னொருவனுக்கு நிச்சயம் ஆனவள் என்று தெரிந்த பின்பும் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் பெரும் வலியை அனுபவித்தான்.

அவளின் மருண்ட பார்வையில் காதலில் விழுந்த ஆதித்யாவிற்கு இப்பொழுது எல்லாவற்றின் மீதும் வெறுப்பு தான் வந்தது....
என்னத்தான் தங்கைகளின் கட்டாயத்திற்காக திருமணம் முடித்தேன் என்று சொல்லிக்கொண்டாலும் அவனுக்குள் இந்த மலரின் மீதான காதல்தான் அவன் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதற்கு காரணமாகும்...

தனது வாழ்க்கையில் நடந்தவற்றை குடிபோதையில் உளறி தள்ளிவிட்டு ...
கண்களில் நீர் வடிய தொய்ந்து அமர்ந்திருந்த ஆதித்யாவை பார்த்த மலருக்கும் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
அவன் அருகில் சென்று அமர்ந்த மலர் ஆதித்யாவின் முதுகை ஆறுதலாக வருட....
"என்னைத் தொடாத நீ... எனக்கு நீ வேண்டாம்... போடி போ... அவன்கிட்டயே போ... எனக்கு நீ வேண்டாம்..." என்று உளறிக்கொண்டே மலரின் மடியில் படுத்து கொண்டான் ஆதித்யா.

தன் மடியில் படுத்திருந்த ஆதித்யாவின் தலையை கோதி விட்ட மலர்... முதல் முறையாக அவளாகவே அவனின் முன்நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்...

மலருக்குள் காதல் மலருமா???
தொடரும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN