ஆதித்யா சக்கரவர்த்தி-27(final episode part i)

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 27

தன் மடியில் தலை சாய்த்திருந்த ஆதித்யாவின் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் மலர்.

இவ்வளவு நாட்களாக அவளிடம் பண்ணின அட்டூழியங்கள் எல்லாம் அவளின் பாசத்திற்காக... அன்பிற்காக... உண்மையான காதலுக்காக... ஏங்கிய மனதுடன் அவன் செய்தது என்று இன்றைய அவன் பேச்சில் புரிந்துகொண்ட மலரின் மனம் உவகையில் இருந்தது.

தன் கணவன் தன்மீது கடலளவு காதலையும் பாசத்தையும் ஏக்கத்தையும் வைத்துள்ளான் என்றால் எந்த மனைவிக்கு தான் சந்தோஷமாக இருக்காது?

தோட்டத்தின் எதிர்புறம் பால்கனி இருந்ததால்.... அப்பொழுது வீசிய குளிர்ச்சியான காற்று மேனி தொட மலருக்கு குளிர ஆரம்பித்தது.
ஆதித்யா அவளின் மடியில் படுத்திருந்ததால் எழவும் முடியவில்லை...

தனது சல்வாரின் துப்பட்டாவை எடுத்து உடலை மூடி கொண்டாள் மலர்.ஆதித்யா வாயிலிருந்து மெல்லிய புலம்பல்கள் வந்துகொண்டுதான் இருந்தது....

அவனது அருகில் குனிந்து காதைத் தீட்டிக்கொண்டு கேட்டாள் மலர்.
"மலர் மலர் என்ன விட்டு போயிடாத மலர் போயிடாத... எனக்கு நீ வேணும் மலர்" என்று அவன் புலம்பவும்... உள்ளம் உருகி கண்கள் கலங்கியது மலருக்கு...
அவளின் கண்களுக்கு இப்பொழுது உண்மையிலேயே குழந்தையாகவே தான் தெரிந்தான் ஆதித்யா.
பாசத்திற்கு ஏங்கும் சிறுவன் அவன்....
அந்த சிறு வயதிலேயே எவ்வளவு வலி வேதனையை அனுபவித்து இந்த அளவு வளர்ந்து இருக்கிறான். அவன் தேர்ந்தெடுத்த பாதை தவறாக இருந்தாலும் அதற்கு காரணம் அவன் அனுபவித்த வலிகள் தானே...
ஆதித்யா கடந்த காலத்தில் அனுபவித்த கசப்பான அனுபவங்களை மாற்றி அமைக்க இனி தன்னாலான முயற்சியை செய்ய வேண்டும் என்றும் அவன் இழந்த தாய் அன்பையும்.... காதலையும் மனமார அவனுக்கு அளிக்க வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்ட மலர்...குளிரில் நடுங்கியபடி அமர்ந்த நிலையிலேயே உறங்கியும் போனாள்.

சூரிய ஒளி சுள்ளென முகத்தில் பட, போதையின் தாக்கத்தில் தலை பிளந்து விடுவது போல் வலி எடுக்க... இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து கண்விழித்தான் ஆதித்யா.

சுற்றுமுற்றும் பார்த்தவனுக்கு அப்பொழுதுதான் தான் தன் அறையின் பால்கனியில் அதுவும் தரையில் படுத்து இருப்பது தெரிந்தது.

கண்களை கசக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவன் மலரின் முகம் அருகில் தெரியவும் தான்... தான் படுத்திருப்பது மலரின் மடியில் என்பதை உணர்ந்து விழுக்கென்று எழுந்து அமர்ந்தான்.

தனது துப்பட்டாவை குளிருக்காக மூடி சுவரில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தவளின் தோற்றம் ஆதித்யாவை என்னவோ செய்தது.

அறைக்குள் செல்ல எத்தனித்தவன் என்ன நினைத்தானோ? மலரை கைகளில் ஏந்தி கொண்டு அறைக்குள் சென்று மெத்தையில் படுக்க வைத்தான்....
தனது தலையை அவ்வளவு நேரம் மடியில் தாங்கி இருக்கிறாள்... சுவரில் வேறு சாய்ந்து தூங்கி இருக்கிறாள் என்றால் கண்டிப்பாக நிம்மதியாக தூங்கி இருக்க மாட்டாள் என்று அவனுக்கு தெரியும் அதனால் அவளை அப்படியே விடவும் மனம் வரவில்லை.

அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு ஏசியின் அளவை குறைந்தவன்.... முகம் கழுவிவிட்டு தோட்டத்திற்கு சென்று விட்டான் தலை பயங்கரமாக வலித்தது. இரவில் என்ன நடந்தது? என்று நினைவிலில்லை ஏதோ அரைகுறையாக தட்டுத்தடுமாறி மாடிக்கு சென்ற வரைதான் அவனுக்கு ஞாபகம் இருந்தது.
செயற்கை நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த நாற்காலியில் தலையை கைகளில் தாங்கியவாறு அமர்ந்திருந்தான் ஆதித்யா....

இரவில் நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை என்றாலும் மலரை கண்டிப்பாக ஏதாவது அசிங்கமாக பேசி இருப்ப நீ என்று சொன்னது அவனின் உள்மனம்... அவளை வருத்தப்பட வைத்தால் அவளைவிட தனக்கு தான் வலிக்கிறது என்ற விரக்தியில் தான் அமர்ந்திருந்தான் ஆதித்யா.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ.... அவனின் முன்னால் சூடான காபி நீட்டப்பட நிமிர்ந்து பார்க்காமலேயே யாரென்று புரிந்து விட்டது அவனுக்கு....

நிமிர்ந்து அவளின் முகத்தை பார்க்காமல் அங்கிருந்து எழுந்து மற்றொரு நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
அவனின் செயல் அவனுக்கே சிறுபிள்ளைத்தனமாக தான் இருந்தது...
இருந்தும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்...
அங்கும் அவள் வந்து காபியை நீட்ட கோபத்துடன் அவளைத் திட்டுவதற்காக நிமிர்ந்து பார்த்தவன் அவளின் முகத்தில் இருந்த விரிந்த புன்னகையைப் பார்த்ததும் பேச்சிழந்து விட்டான்.
இதோ இந்த புன்னகையை பார்த்து தானே அவளிடம் விழுந்தான்....!!!

சாதாரண காட்டன் புடவையில் அக்காலை வேளையில் பேரழகியாக காட்சி தந்தவள்... தலைக்கு குளித்து இருந்ததால் தனது நீண்ட கூந்தலை முடியாமல் விரித்துவிட்டு... அவளின் தெத்துப்பல் தெரிய அழகான புன்சிரிப்புடன் நின்றிருந்தவளை பார்த்தவனுக்கு அவளைத் திட்ட எப்படி மனம் வரும்.

தனது முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த மலர், "இந்தாங்க ஆதி காபி" என்று கொடுத்தாள்.
இது ஆதித்யாவிற்கு அடுத்த அதிர்ச்சி.... ஆதித்யாவிற்கு தன் பெயரை ஆதி என்று சுருக்கி கூப்பிட்டால் பிடிக்கவே பிடிக்காது. சிறுவயதிலிருந்து யார் ஆதி என்று கூப்பிட்டாலும் சண்டை போடுவான்... ஒருமுறை அவனது பள்ளித் தோழன் ஒருவன் அவனை டேய் ஆதி பீதி பேதி என்று அனைவரின் முன்பும் கிண்டல் செய்ததால் அவனுக்கு ஆதி என்ற பெயரின் மீது வெறுப்பு .

ஆதித்யா என்று கூப்பிட சொல்வான்.. ஏன்? இப்போது வரை யாரும் அவனை ஆதி என்று கூப்பிட்டது இல்லை இவன் கூப்பிடவும் விட்டதில்லை....

அதுவும் மலர் திருமணத்திற்கு முன்னால் சௌமி அண்ணா... சௌமி அண்ணா... என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அந்த அண்ணாவை இழுத்து விடுவாள். திருமணத்திற்குப் பின்பு அந்த பெயர் குறைந்து, ஏங்க.... என்னங்க.... வந்துங்க.... என்று தான் கூப்பிடுவாள்...

இன்று இவளுக்கு என்ன ஆனது? என்றும் இல்லாத அதிசயமாக தன்முன் இயல்பாக சிரிப்பதோடு மட்டும் அல்லாமல் தன் பெயரை ஆதி என்று வேறு சுருக்கி கூப்பிடுகிறாள். ஒரே இரவில் ஏதாவது காத்து கருப்பு அடித்துவிட்டதா? என்பதுபோல் ஆதித்யா மலரை வித்தியாசமாக பார்த்தான்.

மறந்தும் இரவில் என்ன நடந்தது? என்ன பேசினேன்? என்று கேட்கவில்லை கண்டிப்பாக அது மீண்டும் அவளை வருத்தப்பட வைக்கும் என்று வாயை மூடி அமைதியாக இருந்தான்.

அவனின் வித்தியாசமான பார்வையை கண்டுகொள்ளாமல், "சீக்கிரம் எடுத்துக்கோங்க ஆதி..." என்று இன்னும் காபியை அவன் முன்னால் நீட்டிக் கொண்டுதான் நின்றிருந்தாள் மலர்.

அவள் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டவன், அதை ஒரு சிப் பருகிவிட்டு மலரின் முகத்தைப் பார்த்தான். இனிப்பு சரியாக போட்டிருந்தாள். அவனுக்கு எப்போதுமே கசப்பாகத்தான் இருக்கவேண்டும்... அவளோ அவனின் அருகில் இருந்த நாற்காலியில் கூலாக அமர்ந்து அவளுக்கான காபியை பருகிக் கொண்டிருந்தாள்... "எனக்கு இவ்வளவு இனிப்பு போட்டா பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல" என்ற குரலில் கடினத்துடன் மிரட்டுவது போல் அவன் கேட்க...
மலர் அவனைப் பார்த்து பயப்படவில்லை.

தோளை குலுக்கிவிட்டு.....
"காபி கப் மாறிப்போச்சு ஆதி... இந்தாங்க...." என்று குடித்துக்கொண்டிருந்த காப்பியை அவனிடம் நீட்டினாள்.

ஆதித்யா ,"என்னது?" என்று அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க...
மலர் அவனின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல்...
அவனின் கையில் இருந்த காபியை தான் வாங்கிக்கொண்டு (பிடுங்கிக்கொண்டு) அவளின் கையிலிருந்த காப்பியை அவன் கையில் திணித்தவள்...
ஆதித்யா ஏற்கனவே எச்சில் படுத்தி இருந்த காப்பியை அசால்டாக பருக ஆரம்பித்தாள்.
அவன் விழிப்பதை பார்த்து சிரிப்பாக இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு மலர் காபியை பருகிக் கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தாள்.

நேற்று இரவிலேயே புரிந்துவிட்டது... ஆதித்யா அவனது அன்பையும்... காதலையும்.... ஏக்கத்தையும்.... துக்கத்தை கூட கோபமாகத்தான் வெளிப்படுத்துவான் என்று... தன் கணவன் தன்னை நேசிக்கிறான்.. என்று தெரிந்த பின்பு அவனை நெருங்க அவள் தயங்கவில்லை... அவனைப் பார்த்து பயப்படவும் இல்லை.

இங்கு ஆதித்யாவோ, மலரின் திடீர் செய்கைகளினால் குழம்பித் தவித்தான்....
தலைவலி அதிகமாக இருந்ததால் மலர் குடித்துவிட்டு, அவன் கையில் திணித்து இருந்த காபியை குடித்துவிட்டான்... அது உண்மையில் அவனுக்காக போட்டது கசப்பாகத்தான் இருந்தது ஆனால் மலர் குடித்ததாலோ என்னவோ அவனுக்கு அதுவும் சுவையாக தொண்டையில் இறங்கியது...
மலரின் திடீர் செய்கைகள் ஏனோ மனதிற்கு இதமாகத் தான் இருந்தது. ஆனால் நேற்று நடந்ததை நினைத்து பார்த்தால் கோபமாகவும் வந்தது... அதற்கு இன்னும் அவள் விளக்கம் கூட கொடுக்கவில்லை....

அலுவலகத்திற்கு தயாராகி வந்த ஆதித்யாவின் முன்...
"நான் உங்ககிட்ட பேசணும் ஆதி..." என்று வந்து நின்றாள் மலர்..............

**********************
தனது அலுவலகத்தின் சுழல் நாற்காலியில் அமர்ந்து டேபிளில் இரண்டு கைகளையும் ஊன்றி தலையை தாங்கி பிடித்தவாறு அமர்ந்திருந்தான் ஆதித்யா.

கதவை கூட தட்டாமல் "பாஸ் பாஸ்" பாஸ் என்று ஓடிவந்தான் சரத்....

"என்னடா?" என்று ஆதித்யா கடுப்பாக கேட்க....

"நம்ம குடோன்ல உள்ள வச்சிருந்த சரக்கு எல்லாம் தீ பிடிச்சி எரியுதாம் பாஸ் ...அங்க இருந்த நம்ம வேலை ஆளுங்க அஞ்சு பேருக்கு சரியான தீக்காயமாம்..." என்று பதற்றத்தோடு சொன்ன சரத்தை உக்கிரத்தோடு பார்த்த ஆதித்யா ....

"யார் பண்ண வேல?" என்று அவன் உறும...

"எல்லா அந்த சொட்ட மணி வேலைதான் பாஸ்... ஏற்கனவே நம்ம சரக்கு போன லாரியை பிடிச்சு வச்சுட்டு வம்பு பண்ணினான்... நம்ம அத கண்டுக்காம விட்டுட்டோன்னு அடுத்தடுத்து நம்மளுக்கு குடைச்சல் குடுத்துட்டு இருக்கான்...." என்ற சரத்தும் குறையாத கோபத்துடன் கூறினான்.

"அவன இத்தன நாள் விட்டு வச்சது தப்பாப் போச்சு ...இனி அவனுக்கு நான் யாருன்னு காட்றேன்" என்று கர்ஜித்த ஆதித்யாவின் குரலில் கட்டுக்கடங்காத கோபமும் ஆவேசமும் இருந்தது.

"கருணாக்கு போன் பண்ணு இன்னைக்கு அவன சும்மா விடக்கூடாது... பொருள் போனா போகட்டும் அத கூட விட்ரலாம் உசிரு போனா திரும்ப வருமா? அஞ்சு பேர படுக்க வச்சு இருக்கான் ....அவன் உடம்புல உசுர தவிர எதுவும் இருக்கக்கூடாதுன்னு கருணா கிட்ட சொல்லிரு... கண்டிப்பா அவன் வப்பாட்டி வீட்டுக்கு போகும்போது தனியா தான் போவான் கூட வர்ற போலீஸ் படையை வேண்டாம்னு சொல்லிடுவான் அதையும் சேர்த்து சொல்லிடு" என்று முதலாளியாக ஆடர் போட்டவன்...

"நான் போய் ஹாஸ்பிடல்ல நம்ம ஆளுங்கள பாத்துட்டு வாரேன்..." என்று நிற்காமல் தனது காரில் ஏறி சென்று விட்டான் ஆதித்யா.
வெளியே சென்ற ஆதித்யாவின் முகத்தில் இருந்த இறுக்கத்தை பார்த்த சரத் ...
"என்ன ஆகப்போகுதோ?" என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே கருணாவுக்கு போன் போட்டான்...
இங்கு வீட்டிலிருந்த மலருக்கு தான் காலையில் கோபத்துடன் சென்ற ஆதித்யாவின் முகமே கண்ணுக்குள் நின்றது....

அவளுக்கு பேசும் வாய்ப்பை அளிக்காமல்... ஏன் அவளது முகத்தை கூட பார்ப்பதை தவிர்த்து விட்டு..." நீ யார் கூட வேணாலும் போகலாம் நான் எதுவும் சொல்ல மாட்டேன்..." என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அதையேதான் திரும்பி திரும்பி சொன்னான் ஆதித்யா....

கோபத்தை கூட அளவாக காட்டும் மலருக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தியது அவனின் வார்த்தைகள்....
"அப்ப எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிங்க.... நேத்து மூச்சு முட்ட குடிச்சிட்டு வந்து நான் இல்லாமல் இருக்க முடியாதுன்னு பொலம்பிட்டு இன்னைக்கே நீங்க சொன்னது நான் இந்த வீட்டை விட்டு போகணுமா? போக முடியாது என்ன பண்ணுவீங்க... எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... உங்க அம்மா மாதிரி பழைய காதலன் லொட்டு லொசுக்குனு சொல்லி கூப்பிட்டான்னு அவன் பின்னாடியே போய்டுவேனா... என்ன காதலிக்கிற நீங்க என் மேல வச்சு இருக்கிற அன்புக்கு செலுத்துற மரியாதை இதுதானா?... இத்தனைக்கும் நான் பேச வர்றத கேட்கக்கூட உங்களுக்கு நேரம் இல்லை அப்படித்தானே...!! இதுல இவர் என்ன காதலிக்கிறாராம்... வெளில சொல்ல மாட்டாராம்... உள்ளுக்குள்ளே வச்சு உருகுவாராம்... தங்கச்சி கண்ணை கசக்கினா சேர்த்துபாராம்.... இல்லனா விரட்டி விடுவாராம்.... இவர் சொல்லும்போது வரணுமாம்... விரட்டும் போது போகணுமாம்... நான் என்ன உங்க வீட்டில வளக்குற நாய்க்குட்டியா?" என்று மனதில் இருப்பதை மறைக்கமுடியாமல் கோபத்துடன் கேட்டுவிட்டாள் மலர்.
இவ்வளவையும் சொல்வதற்குள் மூக்கு நுனி சிவந்து கண்களில் கண்ணீர் குளம் கட்டியது... ஆனால் வெளியே விடவில்லை கட்டுப்படுத்திக் கொண்டாள்....
அவள் பேச பேச புரிந்து கொள்ளாமல்... நீ இந்த வீட்டை விட்டு போறதா இருந்தா போ யார் கூட வேணும்னாலும் போ... என்று விட்டேத்தியாக சொல்லி அவளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தவனை பார்த்து அத்தனை நாள் அமைதியாக இருந்த மலர் என்கிற சாது மிரண்டு விட்டது...

சாது மிரண்டால் காடு தாங்காது அல்லவா...!!

மூச்சு வாங்க நீளமாக பேசிய முடித்த மலர்... சிறிது நேரம் கழித்து தான் பேசியதின் அர்த்தம் அப்பொழுதுதான் விளங்க
பயத்துடன் ஆதித்யாவை பார்த்தாள்....
அவன் முகமும் மனமும் சேர்ந்து இறுகி போய் கருத்திருந்தது... அவள் சொன்னதெல்லாம் உண்மை என்பதால் கூட இருக்கலாம்.

அதற்கு பிறகு அவளிடம் வாக்குவாதம் செய்யாமல் காலை உணவை தவிர்த்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பி சென்று விட்டான் ஆதித்யா.
'என்ன இருந்தாலும் நீ கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம் மலரு... பூச்சாண்டி கிடைச்ச கேப்புல பூந்து ஓடிட்டே...' என்று இருபத்தி இரண்டாவது முறையாக நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள் மலர்.

ஹாஸ்பிடலுக்கு சென்று அடிபட்டவர்களை பார்த்த ஆதித்யாவின் கோபம் இன்னும் தலைக்கேறியது....
நம் நாட்டில் விளையும் மஞ்சள் கிழங்கையும் இயற்கையாக விளையும் மருத்துவ பொருட்களையும் விவசாய பொருட்களையும்... பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம்தான் சௌபாக்கியா எக்ஸ்போர்ட்.... தங்கையின் நினைவாக அவன் ஆரம்பித்திருந்த கம்பெனி....
ஆதித்யா மற்ற விஷயங்களில் எப்படி இருந்தாலும் சரி தொழிலில் நேர்மையாக தான் இருந்தான். அவன் வழியில் குறுக்கிடாத வரை அவன் நல்லவன் தான்.....!!!
அவர்களின் குடோனில் தீப்பற்ற வாய்ப்பே இல்லை எல்லா முன்னேற்பாடுகளும் அங்கு இருக்கும். அதையும் மீறி விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றால் எந்த அளவிற்கு இறங்கி இந்த வேலையை செய்திருக்க வேண்டும்....

விபத்தில் சிக்கியவர்களின் குடும்பம் ஹாஸ்பிடலில் ஓலமிட்டுக் கொண்டிருக்க.... அவர்களை ஒருபுறம் அங்கு வேலை செய்யும் செவிலியர் ஒருவர் அமைதியாக இருக்க சொல்லிக்கொண்டிருந்தார்.
விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்திற்கு அவர்கள் குணமாகும்வரை மருத்துவ செலவையும் வீட்டு செலவையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு வந்தான் ஆதித்யா.

காரில் சென்று கொண்டிருக்கும் போதுதான்....
காலையில் தான் கோபத்துடன் கிளம்பும்போது கடைசியாக பார்த்த மலரின் முகம் அவனது மனதில் மின்னலென ஒரு நொடி மின்னி மறைய அவளை இப்பொழுதே பார்க்கவேண்டும் என்று காதல் மனம் கூப்பாடு போட்டது... அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறினான் அவன்...
அவள் பேசிய வார்த்தையின் வீரியம் அதிகம்தான்... முக்கியமாக அவள் அவனின் அம்மாவின் பேச்சை எடுத்தது சுத்தமாக அவனுக்கு பிடிக்கவில்லை... ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க தான் செய்தது. மலர் தன் அம்மாவைப் போல என்று அவன் நினைத்தது உண்மைதானே...!!! அவள் அப்படி செய்வாள் என்று நான் எப்படி நினைக்கலாம்....
அது தவறுதான் என்று உள்மனம் ஒத்துக்கொண்டது. அவனிடம் ஒரு வார்த்தை பேசவே தயங்கிக் பயந்து நடுங்கி போகின்றவள்.... நீளமாக பேசி இருக்கிறாள் அது உலக அதிசயமே தான் என்று நினைத்துக் கொண்டான் ஆதித்யா.

நேற்று இரவு குடிபோதையில் நன்றாக உளறிக்கொட்டி இருக்கிறோம் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது....
அப்பொழுது அவள் பேசியதை ஆராயாமல் கோபத்துடன் இருந்தவனின் மனம் இப்பொழுது ஆராய்ந்தது...

"நான் இந்த வீட்டை விட்டு போகணுமா? அதெல்லாம் போக முடியாது" என்று உறுதியாக சொன்ன மலரின் குரல் மீண்டும் அவனது காதில் ஒலிக்க...
'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்று சொல்லும் அளவிற்கு உள்ளம் உவகையை தத்தெடுத்தது.
அப்படி என்றால் அவள் தன்னை விட்டு செல்ல மாட்டாள்... தன்னுடன் தான் இருக்கப் போகிறாள்... என்று உள்ளம் மகிழ்ந்தவன் வீட்டிற்கு சென்று அவளிடம் என்ன பேசுவது? என்று யோசித்துக்கொண்டே சந்தோஷமாக வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

காரில் வரும் பொழுது கூட காலையில் குட்டி போட்ட பூனையாக தன்னை சுற்றி சுற்றி பேச வந்தவளின் முகம் இம்சித்துக் கொண்டே இருந்தது....

வீட்டிற்கு வந்து காரை நிறுத்திவிட்டு... இரண்டிரண்டு படிகளாக தாவிய படி மாடி ஏறினான் ஆதித்யா.
அவனின் சிரித்த முகத்தை பார்த்து கீழே இருந்த வேலைக்காரர்கள் அவர்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

தங்களின் அறைக்கதவை தட்ட ஆதித்யாவின் கை அந்தரத்தில் நின்றது ... உள்ளே சுவாதியின் நாராசமான பேச்சு காதில் விழுந்தது
"என்னடி முழிக்கிற உன்ன அவ்வளவு சீக்கிரம் சந்தோஷமா இருக்க விட்டுடுவேனா? பாத்தியா நந்தன வச்சே உனக்கு ஆப்பு வச்சுட்டேன் .... இனிமே என்னோட அண்ணே சுட்டுப்போட்டாலும் உன்னை ஏத்துக்காது..." ஹா ஹா ஹா என்ற ஆங்கார சிரிப்பு வேறு....
மலரினும் மெல்லிய குரலும் ஆதித்யாவிற்கு கேட்டது...

"ஏன் அண்ணி என் மேல அவ்வளவு வெறுப்பு உங்களுக்கு என்னதான் பண்ணேன்?" என்று கேட்டவளின் குரலில் கலக்கத்தையும் மீறி வருத்தம் இருந்தது.

"பின்ன என் புருஷன் என்ன விட்டு தள்ளி இருக்க நீ தானே காரணம்..."
திகைத்து விழித்த மலரின் விழிகள் நானா? என்று கேள்வி எழுப்பியது.

"நீயே தாண்டி காரணம்... நீ மட்டும் தான் காரணம்.... உன் அப்பா அம்மாவை முழுங்கிட்டு... நீ எப்போ எங்க வாழ்க்கை கொள்ள வந்தியோ அன்னைக்கு பிடிச்சது பீடை... சண்டை சச்சரவு இல்லாமல் இருந்த எங்க வாழ்க்கை இப்போ எப்படி வந்து நிக்குது... உன்ன ஆரம்பத்திலேயே துரத்தி இருப்பேன் என்னோட மகிக்கு உன் மேல பாசம் அதிகம் ...அதுக்காக தான் பொறுத்து போனேன் அதுக்கு இப்ப சேர்த்து வச்சு அனுபவிச்சுட்டேன்" என்று உள்ளம் கொதிக்க கொதிக்க வார்த்தைகளை தேளாக கொட்டினாள் சுவாதி.
மலர் பேசவில்லை அமைதியாக நின்றாள்....

அவள் அமைதியை கூட கவனிக்காமல் தன் பாட்டிற்கு பேசினாள் சுவாதி...
"நேத்துதான் மகி முகத்தைப் பார்த்தே பேசினார்... அதுல கூட அவர் பேச்சில் முன்ன இருந்த ஒட்டுதல் இல்ல ...ஏதோ கடமைக்கு பேசின மாதிரி பேசினார்... இதுக்கு முன்ன அவர் என் என்கிட்ட கோபமா ஒரு வார்த்தை கூட பேசினது இல்ல... எல்லாம் உன்னால தான்..."
என்றவளின் குரல் லேசாக வருத்தத்ததில் தேய்ந்து ஒலித்தது

சில நொடிகளிலேயே பழைய குரலில்...
"நாங்க இப்படி சண்டை போட்டுட்டு இருக்கும்போது உன்ன மட்டும் நான் சந்தோஷமா விட்டுவிடுவேனா? உன்ன நா என்னோட அண்ணியா வர விட்டதுக்கு முதல் காரணம் என்ன எதிர்த்து நீ எதுவும் செய்ய மாட்ட ...என் பேச்சை மீற மாட்டேன்னுதான்...." என்ற சுவாதியை...
இது என்ன புது கதை? என்பது போல் மலர்பார்க்க....
"என் அண்ணனுக்கு எவ்வளவு சொத்து இருக்குன்னு உனக்கு தெரியுமா மலர்?... உனக்கு தெரியாதுல்ல..."
என்று சொல்லி அவளைப் பார்த்து கலகலவென்று சிரித்துவிட்டு..
"இதுவே என்னோட அண்ணியா வேற ஒருத்தி வந்து இருந்தா... எங்க அண்ணனுக்கு இருக்குற சொத்துக்கு என் பேச்சுக்கு அடங்குவாளா? மொதல சௌமி அவசரப்பட்டு உன்ன ஆதித்யா வைத்து கல்யாணம் பண்ணி வைப்போம்னு செல்லும்போது என்னால ஒத்துக்க முடியல தான்... அதுக்கப்புறம் நான் யோசித்துப் பார்த்தபோது அது சரிதானு தோணுச்சு... என்ன மொதல்ல மகேஷ் வருத்தப்படுவார்னு உன்ன நெனச்சு பீல் பண்ணேன்... எங்க அண்ணன் முரட்டு குணம் எனக்கு நல்லாவே தெரியும். ஹி இஸ் அரோகன்ட்... தென் அவன் உன்னை அடிச்சு கண்கலங்கி நின்னா மகேஷ் வருத்தப்படுவார் னு எனக்கு தோணுச்சு... என்று மேலும் பேசிக்கொண்டே போனவளின் பேச்சை கவனிக்காமல் அவள் பின்னால் நின்று கொண்டிருந்த கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்....

உணர்ச்சிகளை துடைத்த முகம் கண்களில் ஆழமாக தெரிந்த வலியின் சுவடு... திறந்திருந்த கதவை தள்ளிவிட்டு உள்ளே வந்தது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்த தங்கையின் முதுகை வெறித்து பார்த்து கொண்டு நின்றிருந்தான் ஆதித்யா....
மலரை மட்டுமே பார்த்துக் கொண்டு தனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் தீர்த்துக் கொண்டிருந்தாள் சுவாதி.

போதாத குறைக்கு மலரின் கையிலிருந்த சிறிய பேண்டேஜ் வேறு சுவாதியின் கண்ணில் பட, "நல்லா கொடுமை பண்றானா என் அண்ணன்... அனுபவி அனுபவி நல்லா அனுபவி... நீ அனுபவிக்க வேண்டியவ தான் ..." என்று கெக்கே பிக்கே என்று கிறுக்குபிடித்ததுபோல் சிரித்துக் கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றான் ஆதித்யா.

அண்ணனின் திடீர் வருகையை எதிர்பாராமல் திணறிப் போன சுவாதி...
"அது வந்து அண்ணா... மலர் கிட்ட சும்மா ஜாலியா பேசிட்டு இருந்தேன்" என்று சமாளிக்க பார்க்க...
" நானும் நீ ஜாலியா பேசினத கேட்டேன் "என்ற உணர்ச்சி துடைத்த குரலில் பதில் சொன்ன அண்ணனை பார்த்ததும் கிலி பிடித்தது சுவாதிக்கு.....

பதில் பேசாமல் அரண்டு விழித்துக் கொண்டிருந்த தங்கையை பார்த்து இகழ்ச்சியாக சிரித்தவன்...
"நான் மத்தவங்கள பொருத்தவரை ரொம்ப கெட்டவன் சுவாதி... ஆனா உனக்கும் சௌமியாவுக்கும் நான் அப்படியா இருந்தேன்? என்ன இருந்தாலும் அம்மாவோட ரத்தம் நமக்குள்ள ஓடுறத நம்ம மூணு பேருமேநிருப்பிச்சுட்டோம்...ரொம்ப பெருமையா இருக்கு ல்ல..."என்று சிலாகித்து சொன்ன ஆதித்யாவின் குரலில் அடிபட்ட வேதனை இருந்தது.

"அண்ணா நான் ஏதோ தெரியாம...." எப்படி சமாளிப்பது என்று கூட சுவாதி திணற....

ஆதித்யாவும் அவளை விடாமல்,
"எப்ப இருந்து உனக்கு சொத்து மேல ஆசை வந்துச்சு சுவாதி... உங்களுக்கு இல்லாத பணமா? சொத்தா?... எடுத்துக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கோ... சின்ன வயசுல இருந்தே நீங்க கேட்ட எதையும் மறுக்காம செஞ்சு கொடுத்துட்டு வந்து இருக்கேன்... அது நல்ல வழியிலேயே கெட்ட வழியிலயோ நீங்க ஆசைப்பட்டத உங்ககிட்ட வந்து கொடுக்க நெனச்சேன்.... இப்பவும் அப்படித்தான்" என்றவன்,
"ஆனா ஒரு விஷயம் உண்மைதான் சுவாதி.... என்ன இருந்தாலும் பெத்தவங்க வளத்த மாதிரி வருமா? நான் சாதாரண அண்ணன் தான... நானும் சரி இல்ல.... நீங்களும் சரி இல்ல... அப்பாவோட ரத்தம் பின்னுக்கு போய்ட்டு அம்மாவோட ரத்தம் முன்னுக்கு வந்துட்டு போல..." என்று வெறுப்புடன் சொன்ன ஆதித்யாவை அதிர்ச்சியுடன் பார்த்து... "அண்ணா அப்படி எல்லாம் இல்ல... நான் எதோ ஏதோ அவசரப்பட்டு தப்பா பேசிட்டேன்..." என்று கண்கலங்கிய வண்ணம் மறுத்தவளை சட்டை செய்யவே இல்லை அவன்... தொடர்ந்து பேசிக் கொண்டேதான் இருந்தான்.

"அப்புறம் வேறு ஏதோ கேட்டியே...
ஹான்ன்.... மலர நான் கொடுமைப்படுத்துறதா நீயே முடிவு பண்ணிட்டல்ல...???
என் மேல உனக்கு எவ்வளவு நல்லெண்ணம்... ஒரு பொண்ண கஷ்டப் படுத்துற அளவுக்கு நான் கீழ்தரமானவனா? அயோக்கியனா? சொல்லு சுவாதி... உன் அண்ணன் மேல உனக்கு ஏன் இவ்வளவு நல்லெண்ணம்? நானும் மூணு தங்கச்சிங்க கூடத்தான் பொறந்தேன்... ஒரு பொண்ண கஷ்டப்படுத்தி அதுல சந்தோஷம் படுற வக்கிரமான ஆளு நான் இல்ல... நான் சக்கரவர்த்தி பையன் ஆதித்யா அதை மறந்து போயிட்டியா? இந்த அண்ணன் உனக்கு அவ்வளவு மட்டமா போயிட்டானா?" என்று கேட்டு கண் கலங்கியவனைப் பார்த்து பதறி அவனருகில் வந்தாள் மலர்.

அவ்வளவு நேரம் அண்ணன் தங்கை சண்டை என்று விலகி நின்று பார்த்தவள்... ஆதித்யாவின் கண்கள் கலங்குவதை காணமுடியாமல் அவனருகில் வந்து அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு ஆதரவாக நின்று கொண்டாள்....

அவ்வளவு நேரம் அவனது முகத்தில் இருந்த கலக்கம் மறைய... தன் அருகே வந்து நின்ற மலரை பார்த்து புன்னகைத்தவாறு,சுவாதியின் புறம் திரும்பி...
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சுவாதி... உனக்கு நான் நன்றிக்கடன் பட்டு இருக்கேன்... நீ என்ன நெனச்சி மலர எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும் சரி மலர் எனக்கு கிடைச்சதுக்கு நீங்கதான் காரணம்... இந்த ஒரு விஷயத்துல நான் ஃபீலிங் பிளஸ்ட்(feeling blessed)"என்று மகிழ்ச்சியுடன் கூறினான் ஆதித்யா....
நிமிடத்திற்கு நிமிடம் குணத்தை மாற்றும் தன் அண்ணனை தான் முகத்தில் பீதியுடன்... பேயறைந்தது போல் பார்த்து கொண்டிருந்தாள் சுவாதி....

அண்ணியின் பயந்த முகத்தைப் பார்த்த மலர், ஆதித்யாவின் கையை அழுத்தமாக பிடித்து,"போதுங்க... அண்ணி பயப்படுறாங்க பாருங்க..." என்று தடுக்க பார்க்க ...

"நீ கொஞ்ச நேரம் சும்மா இரு மலர் .. சில விஷயங்களை பேசிட்டு இன்னைக்கே எல்லாத்துக்கும் முடிவு கட்டணும்னு நினைக்கிறேன்...." என்றவன்,

சுவாதியின் புறம் திரும்பி,
"பாத்தியா இந்த இளிச்சவாய..." என்று மலரை காட்டியவன்...
" மேடம் உன் புருஷன் உன் கிட்ட பேசாம இருக்கிறார் ன்னு ரொம்ப கவலை பட்டாங்க.... ஏதோ தியாக வள்ளல் மாதிரி நீ பண்ண எல்லாத்தையும் மறந்து ...அவ அண்ணா கிட்டயே போய் அண்ணி பாவம் அண்ணா... ரொம்ப நல்லவங்க நீங்க பேசலனா கஷ்டப்படுவாங்கனு ஏதேதோ செண்டிமெண்ட் டயலாக் பேசிட்டு வந்தவ... நீ இத்தன வார்த்த அவள கஷ்டப்படுத்துற மாதிரி பேசியும்... என்னோட அண்ணா உங்க கிட்ட பேசுறதுக்கு நான்தான் காரணம்னு பெருமையா சொல்லி காமிக்கல பார்த்தியா... உண்மையிலேயே மலர் தி கிரேட் முட்டாள் தான்" என்றவனை பார்த்து வியந்து விழிகளை விரித்தாள் மலர்....

சுவாதிக்குமே இது அதிர்ச்சியான தகவல் தான்....
தங்கையின் அதிர்ந்த முகத்தையும் மலரின் வியந்த பார்வையும் அலட்சியப்படுத்தி விட்டு, சுவாதியை அழுத்தமாக பார்த்த ஆதித்யா...
"சுவாதி உங்களுக்காக வாழ்ந்து வாழ்ந்து என்னோட விருப்பு,வெறுப்பு, வாழ்க்கை எல்லாத்தையும் தொலைச்சிட்ட மாதிரி எனக்கு தோணுது... இனி நீ இந்த வீட்டுக்கு வர்றதா இருந்தா நான் சொல்றத ஞாபகத்துல வச்சிக்கோ... இவ மலர்... என்னோட பொண்டாட்டி ...என் வீட்டுக்கு உரிமைக்காரி ...அவளுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைச்சாகணும் ...அப்படி மரியாதை கொடுக்க இஷ்டம் இல்லனா இனிமேல் இந்த வீட்ல காலடி எடுத்து வைக்காத..." என்று உச்ச சுருதியில் எச்சரித்தான் ஆதித்யா. அவனது குரல் துளிக்கூட தங்கை என்ற பாசத்தை காட்ட வில்லை... இறுகி போய் இருந்தது...

அழுதுகொண்டே அறையைவிட்டு வெளியே போன தங்கையை பார்த்து உள்ளுக்குள் வலித்தாலும் வெளியே விரைப்பாக தான் நின்றான் ஆதித்யா.

"அண்ணி பாவங்க..." என்று தன் அண்ணிக்கு வக்காலத்திற்கு மனைவியை பார்த்தவன்....
"மலர் ஒரு அளவுக்குத்தான் பொறுமை இருக்கணும்... குட்ட குட்ட நீ குனிஞ்சா... குட்டி கிட்டே தான் இருப்பாங்க எல்லாரும்.... தப்புன்னு தோணுச்சுன்னா யாரா இருந்தாலும் எதிர்த்து நின்னும் பழகு ...என்னையும் சேர்த்துதான் சொல்றேன்"என்றவன்,

"இந்த ஆதித்யா பொண்டாட்டி வீரமானவளா இருக்கணும்... இப்படி மொக்க பீசா இருக்கக்கூடாது" என்று சொல்லி தனது கவலையை மறைத்து இதழ் கடித்து சிரித்தான் ஆதித்யா.

அவன் சிரித்தாலும் உள்ளுக்குள் வேதனை படுவதை உணர்ந்தவளின் கண்கள் கலங்கியது.
மலரின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து அவளின் கவனத்தை திசை திருப்ப...
"காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடல... இப்போ மதியம் இரண்டு மணி..." என்று வயிற்றை தடவினான்....
அது சிறிது வேலை செய்தது...
"இருங்க உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்..." என்று வேகமாக வெளியேறினாள் மலர்...
செல்லும் அவளையே கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா சோபாவில் அமர்ந்து தலையை அழுத்திக் கொண்டான்....

தன்னால்தான் தங்கைகள் பிடிவாதக்காரிகளாக... பேராசைகாரிகளாக... சுயநலவாதிகளாக... மாறிவிட்டனர் என்று தனக்குள்ளேயே சுழலுக்குள் சிக்கிய படகாக துடித்துக்கொண்டிருந்தான் அவன்.
அவனது அப்பா... சிறு வயதிலிருந்து அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்த நல்ல பண்புகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு தான் தங்களின் வயிற்றைக் கழுவ தவறான வழியை தேர்ந்தெடுத்தான் ஆதித்யா....
தான் வளர்த்த தங்கைகளும் தன்னைப்போலவே இருக்கின்றனர் என்று காலம் கடந்த ஞானோதயம் பிறந்தது அவனுக்கு....

சிறுவயதிலிருந்தே அவர்களை கண்டித்து வளர்த்திருந்தால் இப்படி மாறி இருக்க மாட்டார்கள்... கண்டிக்காமல் ...அவர்கள் இஷ்டப்படி இவனும் வளைந்து கொடுக்க போய்தான் ... தங்கைகளும் இவ்வாறு சுயநலவாதிகளாக... மாறியிருக்கின்றனர். தன் மீது தான் அதிக தவறு... என்று உள்ளுக்குள் தன்னை நினைத்தே நொந்து போனான் ஆதித்யா.

அவன் வருத்தம் தோய்ந்த முகத்தை பார்த்தவாறு தான்... உணவை கொண்டு வந்தாள் மலர்....
ஆதித்யா உணவு பிளேட்டை வாங்க கையை நீட்ட ...
"நானே ஊட்டி விடட்டா ஆதி" என்று ஆசையாகக் கேட்டாள் மலர்.

ஆதித்யா சம்மதமாக தலையை ஆட்ட, அவன் அருகில் சோபாவில் அமர்ந்த மலர் அவனுக்கு ஒவ்வொரு கவளமாக பிசைந்து ஊட்ட ஆரம்பித்தாள்.

சிறுவயதில் அவனுக்கு தந்தை உணவு ஊட்டிய நினைவு வர... கண்கள் கலங்கியது. அதை உள்ளிழுத்துக் கொண்டவன் .... புன்னகையுடனே அவள் ஊட்டிய உணவை வாங்கிக் கொண்டான்.

இன்னும் சில விடயங்கள் அவர்களுக்குள் பேசி தீர்க்க வேண்டியது இருந்தது... அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த இருவரின் மனதும் அந்த நொடியின் மகிழ்ச்சியை மனதிற்குள் அனுபவித்தது......

தொடரும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN