துளி 12

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நில் என்று கண்டிதாய்
உள் சென்று தண்டிதாய்
சொல் என்று கெஞ்சதான்
சொல்லாமல் வஞ்சித்தாய்


ஞாயிறன்று பதினொருபேர் கொண்ட பட்டாளம் பெந்தோட்ட நோக்கி வாடகை வேனில் புறப்பட்டது...
தேவ்,ஸ்ரவ்யா, அஜய், அபி, நிம்மி, கபிலன், முபாரக், அக்ஷய், ஸ்ரவ்யாவின் தோழி திவ்யா மற்றும் கபிலனின் மனைவி நித்யா என்று பதினொருவருடன் பயணம் ஆரம்பித்திருந்தது...
காலை ஏழரை மணியளவில் அனைவரும் அபியின் வீட்டில் ஆஜராகிட தேவ்வும் ஸ்ரவ்யாவை அழைத்துக்கொண்டு வந்தான்..
எப்போதும் போல் அமைதியாய் தேவ்வின் கையினை பிடித்தபடி வந்தவளை கண்டவர்களுக்கு உள்ளுக்குள் வேதனை எழுந்தபோதிலும் யாரும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை . அபி ஏற்கனவே ஸ்ரவ்யா பற்றி அனைவரிடமும் கூறியிருந்ததால் யாருக்கும் அவளின் நிலையை கண்டு அதிர்ச்சி எழவில்லை...
ஸ்ரவ்யாவை நெருங்கிய திவ்யா அவள் கரம்பற்ற அதில் திவ்யாவை திரும்பி பார்த்த ஸ்ரவ்யா தேவ்வை பார்க்க அவனோ
“திவ்யா சூட்டி.. உன்னோ தோஸ்த்து..” என்று கூற திரும்பி திவ்யாவை பார்க்க அவளும் கண்களின் நீருடன் ஸ்ரவ்யாவிடம்
“என்னை மறந்துட்டியாடி.. நான் தான் திவ்யாடி.. உன்னோட பம்கிங்...”என்று கூற அவள் அவள் இதழ்களில் புன்னகை உதித்தது...
அதை கண்ட திவ்யா அவளை கட்டியணைக்க ஸ்ரவ்யாவும் எந்தவித எதிர்வினையும் காட்டாது அவள் அணைப்பினில் அடங்கியிருந்தாள்..
அதை கண்ட தேவ் அஜயை பார்க்க அவனுமே ஸ்ரவ்யாவின் மாற்றத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான்...
இருவர் மனதிலும் ஸ்ரவ்யாவின் முன்னேற்றம் மகிழ்வை உருவாக்கியது..
பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு அனைவரும் பயணத்திற்கு கிளம்பினர்..
இரண்டரை மணிநேர பயணத்தின் பின் வேன் பென்தோட்டை ரிசாட்டின் முன் நின்றது....
அந்த ரிசோட்டின் அமைப்பே கடற்கரையோர பார்ம் ஹவுஸ் போல இருந்தது... ரிசார்ட்டிற்கு எதிர்புறம் தென்னை மரங்கள் கூட்டமாய் அமைந்திருக்கு அதை தாண்டி நீண்ட விரிந்த பென்தோட்டை பீச் இருந்தது...
அபி அனைவரையும் ரிசாட்டினுள்ளே வழிநடத்தி செல்ல மற்றவர்கள் அவரவரின் பைகளுடன் உள்ளே சென்றனர்..
உள்ளே ரிசப்ஷனில் அபி அறைகளுக்கான பணத்தை செலுத்தி சாவிகளை பெற்றுக்கொண்டான்..
ஸ்ரவ்யாவோ ரிஷப்ஷனுக்கு எதிர்புறமாக சிறு தடாகம் போன்று அமைக்கப்பட்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்தாள்...
அதில் நிறைய வெவ்வேறு நிற கோய் வகை மீனினங்கள் அங்கும் இங்கும் நீந்தியபடியிருந்தது.. தடாகத்தின் அருகிலேயே ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அதற்கான உணவும் இருந்தது... அதற்கு உணவிட விரும்புபவர்கள் அந்த உணவை எடுத்து அதற்கு உணவிடலாம்.. அந்த மீனினங்களும் யாரேனும் உணவிட்டால் அவ்விடத்தை நோக்கி படையெடுப்பதோடு தம் அகன்று திரண்ட நாவினை குவித்து உணவை பெற்றுக்கொள்ள நீரிலிருந்து சற்று மேல பாயும்...
வெள்ளை,ஆரஞ்சு, கறுப்பு, பொன்நிறம் என்று வெவ்வேறு நிறங்களில் துள்ளியெழும்பு அம் மீனினங்களின் போட்டியை பார்க்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும்..... உணவை வாயில் நிரப்பிக்கொண்டு மற்றைய மீன்களை இடித்துக்கொண்டு தம் வெற்றியை பறைசாற்றுவதாய் வாலினை இடமும் வலமுமாக ஆட்டிக்கொண்டு கொண்டு செல்லும் மீன்களின் குறும்பும் நம் கவலையை மறக்கச்செய்யும்...
ஸ்ரவ்யாவும் அவற்றின் விளையாட்டினை கண்இமைக்காமல் தூர நின்று ரசித்துக்கொண்டிருந்தாள்.. அதை கண்ட தேவ்
“சூட்டி... கிட்ட போய் பாரு..” என்று கூற அவளோ அவன் முகத்தை பார்த்திருந்தாள்...
அவனே அவள் கரம் பற்றி அந்த தடாகத்தின் அருகே அழைத்து சென்றவன் கண்ணாடி பாத்திரத்திலிருந்த உணவை எடுத்து ஸ்ரவ்யாவிற்கு கொடுத்தான்...
அதை கையில் வாங்கியவள் மீண்டும் தேவ்வையே பார்க்க அவனும் அவள் நிலை புரிந்து பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு உணவிட்டு காட்டினான்.. அதை பார்த்து ஸ்ரவ்யாவும் அவ்வாறே செய்துவிட்டு தடாகத்தை பார்த்தாள்..
முட்டி மோது வந்த மீன்கள் தாவிக்குதித்து உணவினை வாயில் நிரப்பிக்கொண்டு செல்லும் அழகினை பார்த்திருந்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சி..மீண்டும் மீண்டும் உணவிட்டு மகிழ்ந்திருந்தவளை பெரும்பாடுபட்டே அங்கிருந்து தேவ் அழைத்து சென்றான்..
ஆண்களுக்கு ஒரு அறை பெண்களுக்கு ஒரு அறையென்று இரண்டு பாமிலி அறைகள் எடுத்திருந்தான் அபி... ஸ்ரவ்யாவை தாம் பார்த்துக்கொள்வதாக மற்ற பெண்கள் பொறுப்பெடுத்துக்கொள்ள தேவ்வும் பலமுறை எச்சிரித்து அவர்களுடன் அனுப்பி வைத்தான்...
வந்ததும் அனைவருக்கும் காபி ஆடர் செய்த அபி அனைவரும் பீச்சிற்கு செல்லலாம் என்று கூற சரியென்று அனைவரும் தத்தமது உடைமைகளோடு ரிசாட்டின் வெளிப்புறமாகயிருந்த கடலில் குளிக்க கிளம்பினர்....
அன்று வெயில் குறைவாக இருந்ததால் கடல் நீர் குளியல் அத்தனை இதமாக இருந்தது...
அனைவரும் கடலில் ஆடிட அஜய் ஸ்ரவ்யாவோடு கரையில் அமர்ந்திருந்தான்.... ஸ்ரவ்யாவை கடலில் இறக்க பயந்து தேவ் தான் அவளோடு கரையில் இருப்பதாக கூற அஜயோ தான் இருப்பதாக கூறி அவனை வற்புறுத்தி அவன் நட்புக்களோடு அனுப்பி வைத்தான்...
அவன் கடல் நீரில் விளையாடிய போதும் கவனம் முழுதும் ஸ்ரவ்யாவின் மீதே இருந்தது..
ஸ்ரவ்யாவின் அருகே அமர்ந்திருந்த அஜய் அவர்கள் விளையாடுவதை பார்த்தபடி
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நடிக்கப்போற பேபி..??” என்று கேட்க அதில் அவனை திரும்பி பார்த்து அதிர்ந்து விழித்தவள்
“நீ... உனக்கு எப்படி...??”
“உன்னை பற்றி உன்னை விட எனக்கு நல்லா தெரியும்... சொல்லு பேபி... எதுக்கு உனக்கு குணமாகிய விடயத்தை எங்ககிட்ட இருந்து மறைத்த??”
“அஜூ....நான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்லுறியா??”
“ஆமா பேபி.. உன்னை நினைத்து அங்கொருத்தன் உருகிகிட்டு இருக்கான்.. அவனுக்காகவாவது நீ குணமான விஷயத்தை சொல்லனும்னு தோன்றலையா??”
“அவனுக்கு தெரியகூடாதுனு தான் இன்னும் நடிச்சிட்டு இருக்கேன்..”
“என்ன பேபி சொல்லுற??”
“அஜூ.. அவனை நான் காதலித்ததை விட என்னை பலமடங்கு அவன் காதலிக்கிறான்டா... நான் இப்படியே இருந்துட்டா அவன்கூடவே நான் இருக்கலாம்டா.. இல்லைனா அவனும் நிம்மதியாக இருக்கமுடியாது..நானும் நிம்மதியாக இருக்க முடியாது...”
“பேபி.. புரியாமல் பேசாத..”
“புரிந்ததால தான் பேசுறேன் அஜூ... அவனை பாரு... அவன் என்ன தப்பு பண்ணான்.. எதுக்கு எனக்காக அவன் கஷ்டப்படனும்... ஆனா எனக்காக என்று எல்லாம் செய்றான்... நான் குணமாகிட்டேன்னு தெரிந்தால் எந்த மாதிரி ஆபத்து வரும்னு உனக்கு தெரியாதா??? அதற்கு நான் இப்படியே அவன் இருந்துட்டு போறேன்...”
“ஆனா எத்தனை நாளுக்கு பேபி... நீங்க இரண்டு பேரும் வாழ வேண்டாமா??”
“நான் அவன் கூட வாழணும் என்று நினைத்ததால தான் இப்படியே இருக்கேன்னு சொல்றேன்... வேறொருத்தனாக இருந்தா நான் இருந்த நிலையை அவனுக்கு சாதகமாக பயன்படுத்தியிருப்பான்.. ஆனா என்னோட அப்பு அப்படி இல்லை அஜூ.. அப்படி பட்டவனை கஷ்டப்படுத்த சொல்லுறியா??”
“சரி நீ இப்போ என்ன பண்ண போற??”
“நானும் அப்புவும் கனடா போறதுக்கான எல்லா ஏற்பாடையும் பண்ணு... ஆனா இந்த விஷயம் என்னை பெத்தவரு காதுக்கு போகாத மாதிரி பார்த்துக்கோ.. அவரு நான் இன்னும் காப்பகத்துல இருக்கிறேன்னு நினைத்துக்கொள்ளட்டும்..”
“எல்லாம் சரிதான் பேபி.. ஆனா தேவ்வை ஏமாற்றுவது சரினு சொல்லுறியா??”
“இல்லை.. ஆனா அவனை காப்பாற்ற வேறு வழி தெரியலை... நான் காப்பகத்துல இல்லைங்கிற விஷயம் அவருக்கு தெரிந்தா நிச்சயம் அவரு தேவ்வையும் அவன் குடும்பத்தையும் தான் தேடுவாரு... அவருக்கு தெரிவதற்கு முதலில் அவனையும் அவன் குடும்பத்தையும் இங்கேயிருந்து கனடா கூட்டிட்டு போயிரணும்...”
“நீ ஏன் இப்படி பயப்படுற??? தப்பு பண்ண உங்க அப்பாவே தைரியமாக இருக்காரு..”
“அவருக்கு சொத்தும் சொகுசான வாழ்க்கையும் தான் முக்கியம்..அதுக்காக பெற்ற பொண்ணை கூட கொலை பண்ண தயங்க மாட்டாரு... ஆனா எனக்கு என் அப்புவும் அவன் குடும்பமும் முக்கியம்.. எனக்கு நடந்த எல்லா கொடுமையும் தெரிந்தும் என்னை சுத்தி வருபவனை உதறிட்டு போற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை... நேற்று இரவு எனக்கு நியாபகம் வந்தப்போ என் பக்கத்துல படுத்திருந்த தேவ் தான் எனக்கு முதலில் கண்ணுல பட்டான்... அவன் அணைத்துக்கொண்டு படுத்திருந்த என்னோட டையரியே அவனுக்கு எல்லாம் தெரியும்னு எனக்கு உணர்த்தியது.. அவன் கையில இருந்த என்னோட காணாமல் போன ப்ரேஸ்லட்டை பார்த்தும் புரிந்தது அவன் மனசு எத்தனை வருடமாகியும் இன்னும் ஒரு துளி கூட மாறலைனு... அப்போ முடிவெடுத்தேன்... வாழ்ந்தா இவனுக்காக இவன் கூட வாழனும்னு... அவனுக்கு நான் பண்ண துரோகத்துக்கு கடைசி வரைக்கும் இப்படியே வாழ்வது தான் நான் எனக்கு கொடுக்குற தண்டனை.... இது சுயநலம் தான்... ஆனா இத்தன ரணப்பட்ட போதும் என்னால் அவனை பிரியனும்னு ஒரு முடிவுக்கு வரமுடியலை..... அதேமாதிரி அவன்கூட சேர்ந்து வாழவும் முடியாத நிலையில் இருக்கேன்.. இப்படி இருந்தாலாவது கடைசி வரைக்கும் அவன் நிழலில் இருக்க முடியும்...”
“பேபி... நீ நினைக்கிறது சுத்த முட்டாள் தனம்.... இதெல்லாம் சொல்வதற்கு நல்லா இருக்கும்.. ஆனால் நடைமுறைக்கு சரிவராது..... உனக்கு அவன் நிழலிலேயே இருப்போம் அப்படீங்கிற நிம்மதி இருக்கும்.. ஆனா தேவ்வோட வாழ்க்கை கேள்விக்குறியாவது உனக்கு புரியலையா?? அவன் உன்னை புறக்கணிப்பான்னு நினைக்கிறியா??? உன்னோட யோசனை அவன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும்னு ஏன் உனக்கு புரியமாட்டேங்குது???? இப்போ உன்னோட பிரச்சினை என்ன உங்க அப்பா தானே... அதை நான் சரிப்பண்ணுறேன்... நீ தேவ்கிட்ட உண்மையை சொல்லு.... மற்றதை பார்த்துக்கலாம்...”
“உனக்கு அவனை பற்றி சரியாக புரியலைடா... இப்போ எனக்கு குணமாகிடுச்சுனு தெரிந்தால் நிச்சயம் அவன் கோபம் மொத்தமும் அவர் மேல திரும்பும்... என்னோட இந்தநிலைக்கு காரணமான அவரை ஏதாவது செய்யப்போறேன்னு கிளம்புவான்... அது அவனுக்கு தான் ஆபத்து.. இப்போ நான் இப்படி இருப்பதால அவனோட கவனம் மொத்தமும் என்மேல தான் இருக்கும்... என்னை பெத்தவரு மட்டும் இருந்தாலும் பரவாயில்லை... அவருக்கு துணையாக அந்த பரத்தும் அவன் அப்பாவும் இருக்காங்க.. அவங்க அப்புவை ஏதாவது பண்ணிட்டா அதற்கு பிறகு நான் உயிரோடு இருக்க மாட்டேன்....”
“பேபி... உன்னோட பயம் அனாவசியம்னு எனக்கு தோன்றுகிறது.. அதோடு நீ ஏதோ ஒரு விஷயத்தை என்கிட்ட இருந்து மறைக்கிறனும் புரியிது... அதுக்காக சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ காரணம் எல்லாம் சொல்றனு தெளிவாக புரியிது... இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு... உன்னோட அப்பா எதுக்கு தேவ்வை தொந்தரவு பண்ணுவாருனு சொல்லுற??”
“ஏன்னா அவனும் தாத்தாவோட சொத்துக்கு ஒரு வாரிசு....”
“பேபி... என்ன சொல்லுற???”
“ஆமா அஜூ... தேவ் என்னோட அத்தை மகன்... தாத்தாவோட மகள் வழி பேரன்...”
“நிஜமாகவா பேபி..”
“ஆமா அஜூ... எனக்கும் அவன் ஊருக்கு போன நேரம் தான் தெரியும்... அத்தையை பார்த்ததும் இவங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்னு தோன்றியது... வீட்டுக்கு வந்து பார்த்தப்போ தான் அது அத்தைனு தெரிய வந்தது.... தாத்தாவோட தம்பி மகள் தான் அப்புவோட அம்மா.. தாத்தாவோட தம்பிக்கும் இந்த சொத்துல பாதி பங்கு இருக்கு... ஆனா அவரு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால குடும்பத்தில் இருந்து விலக்கி வச்சிட்டாங்க... அது அப்பாவுக்கு தெரியாது... ஆனா தாத்தா இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்லியிருக்காரு..அம்மாவும் உயில் எழுதும் போது இதை அதில் சொல்லியிருக்காங்க.. ஆனா அது அப்பாவுக்கு தெரியக்கூடாதுனும் ஏதாவது இக்கட்டான நிலையில் இதை எனக்கு தெரியப்படுத்த சொல்லி லாயர் அங்கிளிடம் சொல்லியிருக்காங்க....அத்தை பற்றி தெரிந்ததும் லாயர் அங்கிள்கிட்ட இது பற்றி கேட்டபோது அவரும் அது உண்மை தான்னு சொன்னாரு.. சட்டப்படி அத்தைக்கு சேரவேண்டிய சொத்தை அவங்கிட்ட கொடுத்திடலாம்னு அதற்கு தேவையானவற்றை செய்ய ஆரம்பிக்கும் போது தான் என்னென்னவோ நடந்திடுச்சு.... சொத்தை அப்பா பெயரில் முழுதாக மாற்றி எழுதனும்னா நான் லீகலி என்கேஜ்ட்டா இருக்கனும்.... அதோடு அத்தையோட வாரிசான அப்புவோட கையெழுத்து இருக்கனும்.... இது இரண்டும் இல்லாமல் அவங்க சொத்தை முழுதாக அவங்க பெயருக்கு மாற்றமுடியாது... ரூலிங்க பவர் மட்டும் தான் அவங்களுக்கு......அப்படியே ஏதாவது தகடுதத்தம் செய்தாலும் அப்பு அவங்க மேல கேஸ் போட்டா சொத்தை மீட்க முடியும்... இது இன்னும் அப்பாவுக்கு தெரியாது... அது தெரிந்தா நிச்சயம் அவரு அப்புவோட குடும்பத்தை தேடி அவங்களை கொலை செய்ய முயற்சிப்பாரு.... அதனால் தான் சொல்லுறேன்........”
“என்னால நம்பவே முடியலை..... அப்பு உன்னோட அத்தைமகனா....??வாவ்... ஆனா பேபி இது தேவ்விற்கு தெரியவேண்டாம்னு சொல்லுற???”
“இதெல்லாம் தெரிந்தா நிச்சயம் அவன் ஒரு பஞ்சாயத்தை கூட்டாமல் விடமாட்டான்... பார்க்க அப்படியிருக்கான்னு நினைக்காத.... அவனுக்கு கோபம் வந்தால் சுற்றியுள்ள ஒருத்தனையும் விடமாட்டான்..”
“ஆனாலும் பேபி...”
“அஜூ.... முதலில் அப்பு மற்றும் அவனுடைய குடும்பத்தின் பாதுகாப்பு முக்கியம்.. லாயர் அங்கிள் தன்னால் முடிந்தமட்டும் சமாளிப்பாரு..ஆனால் அது தொடரும்னு எதிர்பார்க்கமுடியாது... அதனால நான் சொன்னதை சீக்கிரம் செய்...”
“பேபி... எனக்கென்னமோ இது சரினு படல... நீ தேவ்கிட்ட உண்மை சொல்லுறது நல்லதுனு படுது.... நாளைக்கு இதனால் புதுசாக ஒரு பிரச்சினை வந்திடக்கூடாது..”
“அது எப்பவும் வருவது தானே... வந்தா பார்த்துக்கலாம் அஜூ...”
“நல்லா பேச கத்துக்கிட்ட பேபி...”
“எல்லாம் உன்னோட சகவாசத்தால வந்தது தான் ஆங்கிரி பேட்...” என்று அவளும் அசால்டாக கூற அவளுடன் சேர்ந்து சிரித்தவன்
“பேபி.. இருந்தாலும் மறுபடியும் ஒருதடவை நல்லா யோசிச்சிக்கோ... இந்த விஷயத்தால வெளியில இருந்து பிரச்சினை வந்தா சமாளிக்கலாம்.. ஆனா தேவ் ஏதாவது தப்பா நினைச்சான்னா பிரச்சினை வேற மாதிரி போயிடும் நல்லா யோசிச்சிக்கோ...”
“வாழ்க்கையே பாழாகிடுச்சு... இதுக்கு மேல என்ன பிரச்சினை வரப்போகுது...?? வந்தா பார்த்துக்கலாம் அஜூ...விடு..” என்றவள் கண்களால் தேவ்வை தேட அவனும் அவள் மீது ஒரு பார்வையை பதித்தபடியே கடல்நீரில் விளையாடிக்கொண்டிருந்தான்...
சற்று நேரத்தில் அனைவரும் கரைக்கு வந்து உடைமாற்றிவிட்டு ரிசாட்டிற்கு சென்று குளித்து வந்தனர்...
நன்றாக கடலில் குளித்ததால் அனைவரும் பசியெழ அனைவரும் உணவுண்டுவிட்டு கார்டின் ஏரியாவில் கூடினர்.... மாலை வெயிலின் வெப்பம் குறையும் மட்டும் கார்டின் ஏரியாவில் இருந்து கதை பேசியவர்கள் மீண்டும் கடற்கரையிற்கு படையெடுத்தனர்...
கையோடு எடுத்து வந்திருந்த பேட் பாலோலின் உதவியோடு ஆண்கள் கிரிகெட் ஆட பெண்களோ தாம் எடுத்து வந்திருந்த பிளாஸ்டிக் பந்தோடு விளையாடத்தொடங்கினர்...
இப்போது தேவ் ஸ்ரவ்யாவோடு அமர்ந்துகொண்டு கடலை பார்த்துக்கொண்டிருந்தான்...
ஸ்ரவ்யாவோ அவனை ரசித்துக்கொண்டிருக்க தேவ்வோ வானையும் தன் கதிர்களை மறைக்க தயாராகிக்கொண்டிருந்த பகலவனின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்...
அவன் தோளில் சாய்ந்தவள் அப்பு என்று அழைக்க திரும்பி பார்த்தவன்
“என்ன சூட்டி...?? ஏதும் வேண்டுமா???” என்று கேட்க அவளோ இல்லையென்று தலையாட்டியவள் கண்மூடிக்கொண்டாள்....
அவள் செயலில் சிரித்தவன்
“உனக்கு ஏன்மா இப்படி என் தோள்மேல தலை வைத்து கண்மூடிக்கொள்ள அத்தனை விருப்பம்??? ஒரு முறை அதை பற்றி கேட்டப்போ.. எனக்கு சொந்தமான இடம்.. அதில் நான் தலைவைப்பேன்னு சண்டைக்கு வந்த.... இப்போ நினைத்தால் கூட உன்னை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வரும்...எவ்வளவு சண்டை போட்டிருப்ப... எவ்வளவு கெஞ்சியிருப்ப.. ஆனா உன்னை மாதிரி யாராலும் சண்டை போடவும் முடியாது... அதே மாதிரி தாஜா பண்ணவும் முடியாது... அவ்வளவு ஸ்வீட்மா நீ... அப்படி கலகலனு இருந்தவ இப்போ ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணி பேசுவதை பார்க்கும் போது மனசு வலிக்கிதுடி... சீக்கிரம் பழைய மாதிரி என்கிட்ட வந்திடுமா... பழைய மாதிரியே உன்னை நான் லவ் பண்ணனும்.... நீ இப்படி இருக்கும் போது உன்னை தொட்டு பேச கூட ஒரு மாதிரி சங்கோஜமாக இருக்கு... உன்னோட அனுமதியில்லாமல் உன்னை தொட்டு பேசுறேனோனு தோன்றுது.... உன்னை உரிமையாக அணைக்க கூட ஒரு நொடி நின்று யோசிக்கிறேன்........ அது ஏதோ உன்னை விட்டு தூரமாகுற மாதிரி தோன்றுது... நீ நட்பு என்ற வட்டத்துல இருந்தப்போது என்னோட எல்லைகள் எதுவென்று எனக்கு தெரிந்தது... ஆனா அந்த நட்பு காதலாக மாறியதும் உருவான உரிமையுணர்வு உன்கிட்ட நெருங்கி பழக சொல்லுது. ஆனா நீ யாருனு உனக்கே தெரியாமல் இருக்க இந்த நேரத்தில் அந்த உரிமையை எடுத்துக்கொள்வதை மனது தப்புனு சொல்லுது.... பழைய ஸ்ரவ்யாவாக என்கிட வா சூட்டி..உன்கிட்ட மட்டும் தான் நான் உரிமையாக நடந்துக்கொள்ள முடியும்...உனக்கு மட்டும் தான் அந்த உரிமையும் இருக்கு...” என்றவனின் வார்த்தைகள் புரியவேண்டியவளுக்கு புரிந்து அவள் மனதை அறுத்தெடுத்தது....
ஆணாய் அவனது எண்ணங்களை அவன் வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட்டான்... ஆனால் அவளது வேதனைகள் வலிகள் எதுவுமே இதுவரை சொல்லப்படவோ பகிரப்படவோ இல்லை...
அவனது ஏக்கங்களும் உணர்வுகளும் அவளுக்கு புரிந்த போதிலும் சூழ்நிலை அவளுக்கு ஏதுவாகவில்லை என்ற எண்ணமே அவள் உண்மையை வெளிப்படுத்த தடையாக இருந்தது...
சில சமயங்களில் எடுக்கும் உணர்வு பூர்வமான தீர்மானங்கள் வாழ்வில் பல சிக்கலை ஏற்படுத்தும்.... ஆரம்பத்திலேயே முடிச்சை அவிழ்க்க வேண்டிய கயிற்றை மேலும் முடிச்சிட்டு சிக்கலாக்கிக்கொண்டிருந்தாள் ஸ்ரவ்யா....
அது எத்தனை தூரத்திற்கு அவளை சிரமப்படுத்தும் என்பது வரும் காலங்கள் சொல்லும்...
சற்று நேரத்தில் அனைவரும் விளையாடிவிட்டு வர அனைவரும் ரிசாட்டிற்கு திரும்பினர்...
இரவு உணவை முடித்துவிட்டு ரிசாட்டில் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்த கேம்ப பயரிற்கு அனைவரும் கார்டன் ஏரியாவிற்கு வந்தனர்...
அங்கு ரிசாட்டிற்கு வந்திருந்த இன்னும் சிலரும் அதில் கலந்துகொண்டனர்...
தேவ்வும் அவனது குழுவினரும் பாட்டுப்பாட இன்னும் சிலர் ஆடி மகிழ்ந்தனர்.. ஆண்கள் சிலர் வைன் போத்தல்களோடு அந்த சூழ்நிலைகளை அனுபவிக்க பெண்கள் அவர்களை தொந்தரவு செய்யாதவாறு மறுபுறம் இருந்து அவர்களது லூட்டியை ரசித்துக்கொண்டிருந்தனர்...
அப்போது அனைவரும் தேவ்வை பாடச்சொல்ல அவனும் தன் கிட்டாரோடு ஸ்ரவ்யாவை பார்த்தபடி ஒரு பாடலை பாடத்தொடங்கினான்..
விழிகளிரண்டும் அவளை நோக்க அவர்களிருவருக்கும் மத்தியில் மூட்டப்பட்ட நெருப்பு கொழுந்துவிட்டு எழுந்துக்கொண்டிருந்தது..
இரவு நேரமும் வெண்ணிலவும் கடலலைகளின் இரைச்சலும் அந்த சூழலை ரசனைமிக்கதாய் மாற்றிக்கொண்டிருக்க தேவ்வின் இசையும் பாடலும் இன்னுமின்னும் அச்சூழ்நிலையை அழகாக்கியது....
விரட்டாம
விரட்டுறியே நீ
தொரத்தாம தொரத்துறியே
தெருவெல்லாம் திரிஞ்சேனே
நான் உன்ன தேடி தொலைஞ்சேனடி
நீ வேணும் நான்
வாழ நீ வேணும் கண்
மூட வருவேனே உயிர்
தருவேனே எனக்கு எல்லாம்
அடியே இனி நீதானே
அடங்கா ஏக்கம்
என்னை தாக்கும்போது
அடி நெஞ்சில் இடி மின்னல்
ஆச்சே தொடங்கா காதல்
தொடங்க முகவரிய
தந்தேனே என் தூக்கம்
போச்சே
எந்தன் விரல்
நீங்கி எங்கேயும் போகாதே
நீ உன் பார்வையாலே
மெல்ல எரிக்கிறாயே.......

என்று தேவ்பாட ஸ்ரவ்யாவோ தன்னை உணராமலே அடுத்த வரிகளை பாடினாள்...

நீ வேணும் நான்
வாழ நீ வேணும் கண்
மூட வருவேனே உயிர்
தருவேனே எனக்கு எல்லாம்
அடியே இனி நீதானே நீதானே....

என்று அவள் பாடலௌ முடிக்க அங்கிருந்த அனைவரும் கை தட்ட அப்போது தான் ஸ்ரவ்யாவிற்கு தான் பாடியது புரிந்தது... அவசரப்பட்டுவிட்டோமோ என்று சுற்றும் முற்றும் பார்க்க தேவ்வோ அவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான்... அவனது பார்வை மற்றது அனைத்தையும் மறக்கடிக்க சுற்றுப்புறம் மறந்து அமர்நதிருந்தவளை திவ்யா வந்து கட்டிக்கொண்டாள்...
அங்கிருந்த அனைவருக்கும் அவள் பாடியது தங்கள் முயற்சிக்கான பெரிய வெற்றியாக தெரிந்தது.. ஆனால் தேவ்வோ அவளிடமிருந்து பார்வையை அகற்றாது அமர்ந்திருக்க ஸ்ரவ்ய்வோ அஜயை கண்களால் உதவிக்கு அழைக்க அவனும் அவள் நிலை புரிந்து...
“வாவ் பேபி.. சூப்பரா பாடிட்ட... அபி... ரொம்ப லேட்டாகிடுச்சு... லேடிஸெல்லாம் அவங்க ரூமிற்கு போறாங்கனு போகட்டும்...” என்று கூற நிம்மியோ
“அது என்ன லேடிஸ் மட்டும் போறது... நாங்க இங்க தான் இருப்போம்..” என்று கூற அஜயோ தன் அருகே அமர்ந்திருந்த அபியின் காதில்
“என்ன ப்ரோ சிஸ்டர் போகமாட்டாங்க போல... அப்போ இன்னைக்து பார்ட்டி இல்லையா???”
“இருங்க ப்ரோ... போனு சொன்னா அவ இப்படி தான் அடாவடித்தனம் பண்ணுவா.. அவ வழியிலேயே அவளை பேக் பண்ணுறேன்..”
“நிம்மி மா... நீங்க எல்லாரும் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. ஆனா என்ன நாங்க சரக்கு அடிக்க போறோம்... நீங்களும் வந்து ஜாயின் பண்ணிக்கனும்... உங்களை பார்க்க வைத்து குடித்தால் எங்களுக்கு தான் வயிறு வலிக்கும்.. டேய் முபாரக் கிளாஸை எடுத்து வைடா.. அவங்களுக்கும் கொஞ்சம் கொடுப்போம்..” என்று அபி முபாரக்கோட கைகோர்த்து கிளாஸ் கப்பில் விஸ்கியை நிரப்ப அதை கண்டு பயந்த நிம்மி
“நாங்க போறோம்... நீங்க எல்லாம் முடிச்சிட்டு ரூமிற்கு வந்து சேருங்க...வாங்க போகலாம்..” என்று அனைவரையும் கிளப்பிக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோமென்று நிம்மி ஓட அதை கண்ட அஜய்
“எப்படி ப்ரோ....”
“அது அப்படி தான்..கண்டுக்காதீங்க... வாங்க நீங்களும் ஒரு கிளாஸ் எடுத்துக்கோங்க..”என்று அனைவருக்கும் ஊற்றிக்கொடுத்தான்...
ஆண்கள் அனைவரும் மதுவின் போதையில் மகிழ்ந்திருக்க பெண்கள் அனைவரும் சில நேரம் பலகதை பேசிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு உறங்கிவிட்டனர்....
அனைவரும் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்ட ஸ்ரவ்யா மெதுவாக எழுந்து அறையிலிருந்து வெளியேறி அவுட்டோரில் வந்து அமர்ந்துகொண்டாள்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN