துளி 17

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கண் ஜாடையில்

உன்னை
அறிந்தேனடி

என்
பாதையில்

இன்று
உன் காலடிதேவ்வின் டையரியின் முன்பக்கத்தில் அவளது கையொப்பம் இருக்க இதழில் புன்னகையோடு அதை தடவிக்கொடுத்தவள் மறுபக்கம் திருப்ப அதில் தன் கையெழுத்தால் கவிதையொன்றை கிறுக்கியிருந்தான் தேவ்....

உன் அருகாமையில்

“என் காதலை உணரவில்லை...

உன் சீண்டலில்

என் மனதை உணரவில்லை..

உன் வெட்கத்தில்

என் ஏக்கத்தை உணரவில்லை...

உன் கோபத்தில்

உணர்ந்தேன்...

என் இதயத் துடிப்பிற்கான

ஆக்சிஜன்

உன் இதழ் சுழிப்பென்று....”என்ற தேவ்வின் கவிதையில் தன்னுள் சிரித்துக்கொண்டவள் மனதினுள்

“கவிதையெல்லாம் எழுதுவியா அப்பு... ம்ம்..... இந்த கவிதையும் உன்னை மாதிரியே ஸ்வீட்டாக இருக்கு....” என்று எண்ணிக்கொண்டவள் மறு பக்கத்தை பிரட்டினாள்....

அதில்

“ஹாய் ஸ்ரயா.....

ஆமா என்னோட ஸ்வீட்டி பியூட்டி கியூட்டி சூட்டியை தான் நான் செல்லமாக மனசுக்குள்ள ஸ்ரயானு கூப்பிடுவேன்... ஆனால் இது யாருக்கும் தெரியாது... ஏன் என்னோட சூட்டிக்கு கூட அது தெரியாது..... ஆமா அவளுக்கு இதுவரை நான் அவளோட காதலை புரிந்துக்கொண்டேனாங்கிற சந்தேகம் இருக்கு...ஏன்னா நம்ம டிசைன் அப்படி... எனக்கு அவமேல இருந்தது காதல் தான்னு நான் உணரவே ரொம்ப நாள் எடுத்துக்கிட்டேன்... அதற்காக எப்பவும் அவ திட்டுவா... அவளோட கோபம் நியாயமானது தான்.. ஆனா வெறும் ஈர்ப்பை காதல்னு சொல்லி ஒரு பெண்ணின் மனதோடு விளையாடுவதில் எனக்கு விருப்பமில்லை.... எல்லாருக்கும் காதல் எப்படியே... என்னை பொறுத்தவரை அது ஒரு அழகான உறவுக்கான ஆரம்பம்...அதை சரியாக தொடரனும்னு நினைத்தேன்..... அதுக்காக கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன்... ஆனா அதுக்கு அவ என்னை தத்தினு திட்டிட்டா....

நானும் அதை பெருசா எடுத்துக்கல.... ஏன்னா அவளுக்கு என்னை திட்டுறதுனா அவ்வளவு பிடிக்கும்... அதை விட அவ உரிமையாக திட்டுற ஒரே ஆள்னா அது நான் மட்டும் தான்......இதுவும் அவதான் சொன்ன.....😂😂 அதனால் நானும் பெரிய மனசுபண்ணி மனசார திட்டிக்கட்டும்னு விட்டுட்டேன்.....

அவ எப்பவுமே எனக்கு ஸ்பெஷல் தான்.... அவளை முதல் முறை ராகிங் டைமில் தான் பார்த்தேன்... அப்பவே இவ நம்மளை சைட் அடிக்கிறாளோனு ஒரு டவுட்டு..... அதுக்கு பிறகு மியூசிக் ரூமில் அவ மயங்கி விழுந்ததும் நிஜமாகவே நான் பயந்துட்டேன்.....அதுக்கு பிறகு அவ என் பக்கமே தலைவைத்து படுக்கமாட்டானு நினைத்தேன் ...... ஆனா அடுத்தநாளே அவ வந்தது எனக்கு பெரிய ஷாக் தான்....வந்தவ கிபோர்ட் வாசிக்கவானு கேட்க எனக்கு செம்ம ஹேபி... ஆனா அவ கீபோர்ட் வாசித்ததும் நான் டோட்டல் பிளாட்.... ப்பா..... இப்போ நினைச்சாலே சும்மா ஜிவ்வுனு இருக்கு... என்னை நினைத்து எனக்காக அவ வாசித்த மாதிரியே ஒரு பீல்... சுற்றி யாரும் இல்லாமல் இருந்திருந்தா நிச்சயம் அவளை கட்டிப்பிடிச்சு உம்மா கொடுத்திருப்பேன்...

இது பேராசை தான்... அப்படி மட்டும் நான் செய்திருந்தா அவ என்னை நாலு மிதி மிதிச்சிருப்பா..... இல்லை....இல்லை... என்னோட ஸ்ரயா பேபி அவ்வளவு நல்லவ இல்லை.... நிச்சயம் என்னை தொங்கவிட்டிருப்பா..... அவ எப்பவுமே ஸ்வீட் தான்...

அந்த நிமிஷம் அவ மேல எனக்கொரு ஈடுபாடு இருக்குனு புரிந்தது... ஆனாலும் மனசு அதை ஒத்துக்க விரும்பலை... இது வெறும் ஈர்ப்பு தான்னு முடிவாக சொல்லிடுச்சு...ஆனாலும் கூட ஒரு சந்தேகம் இருந்தது..... அந்த சந்தேகத்தால அவகூட இருந்த உறவு பிரிந்துவிட கூடாதுனு அதை மனசுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தேன்....

கொஞ்ச நாள்லயே அவ என்கூட ரொம்ப க்ளோஸ் ஆகிட்டா.... ஆனால் அவளுக்கு பிடிவாதம் அதிகம்.... அவ சொன்னதை கட்டாயம் செய்தே ஆகனும்.. இல்லைனா அவ்வளவு தான்.... எனக்கு அவ இப்படி அடம் பண்ணுறது பார்க்கும் போது ஒரு சில நேரம் சிரிப்பாக இருந்தாலும் ஒரு முறை பயங்கரமாக டென்ஷன் ஆகிட்டேன்....

ராஜனோட பர்த்டே பார்ட்டிக்கு எங்களை கூப்பிட்டு இருந்தான்... அது பசங்க பாட்டி அப்படீங்கிறதால எல்லாம் இருக்கும்னு அவளை வரவேண்டாம்னு சொன்னேன்... சுத்தி எல்லாரும் இருந்தால பாட்டி முடிய லேட்டாகும் நீ வராதுனு சொன்னேன்... ஆனா அவ எதுக்கு சொல்றேன்னு புரிந்துக்கொள்ளாமல் எப்பவும் போல அடம்பிடிக்க எனக்கு கோபம் வந்து அவளை லெப்ட் என்ட் ரைட் வாங்கிட்டேன்... அவ கோவிச்சிட்டு போயிட்டா... நானும் அவளை அடுத்த நாள் சமாதானப்படுத்திக்கலாம்னு அடுத்த நாள் வந்து பேசுனா மேடம் என்கிட்ட முகம் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க...என்னை கெஞ்சவிட்டு ஒரு வாரம் பாடாய்படுத்துனா.... ஆனாலும் இந்த பொண்ணுங்களுக்கு பசங்களை கெஞ்ச விடுறதுல அப்படி என்ன சந்தோஷமோ தெரியலை...

ஆனாலும் கூட நம்ம மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட கெஞ்சுவது கூட ஒரு வகையான சந்தோஷம் தான்...... நாம கெஞ்ச கெஞ்ச அவங்க கண்டுக்காத மாதிரி கண்டுக்கிறது கூட ஒரு வகை பீல் தான்.... இதுவரை அப்படி நான் உணர்ந்ததில்லை... யாருகிட்டயும் இவகிட்ட கெஞ்சுன அளவுக்கு கெஞ்சுனது இல்லை.... வளர்ந்த குழந்தைனு சொல்லுவாங்களே... அது அவ தான்... ஆமா.. மனசால அவ இன்னும் குழந்தை... அன்புக்கு ஏங்குகிற குழந்தை... நான் சாதாரணமாக செய்கிற சின்ன விஷயத்துக்கு கூட அவ அவ்வளவு சந்தோஷப்படுவா..... ஒரு முறை அவ ப்ராஜெக்ட் வர்க்னு லன்ச் சாப்பிட லேட் ஆகிடுச்சு.... அதுக்கு நான் திட்டே போய் அவளுக்கு சாப்பிட வாங்கிட்டு வந்து கொடுத்தேன்... நான் சாப்பாட்டை பிரித்து அவ கையில கொடுத்ததும் அவ கண்ணுல இருந்த டேம் ஓபன் ஆகி ஓவர் ப்ளோவில் தண்ணீ போக ஆரம்பிச்சிருச்சு... நான் என்னமோ ஏதோனு பதறி விசாரிக்க அதுக்கு அவ அம்மா போனதுக்கு பிறகு யாரும் நான் சாப்பிட்டேனா இல்லையானு கவலை பட்டதில்லை... நீ தான் முதல் முதலாக என்னை சாப்பிடலைனு திட்டியிருக்கனு சொன்னா....

நான் அவசரப்பட்டு திட்டோமே இப்போ நம்மை வச்சி செய்யப்போறாளேனு மனசுக்குள்ள நினைச்சிட்டு வந்தேன்.. ஆனா இவ இப்படி சொன்னதும் தப்பிச்சோம்டா சாமினு தான் தோனுச்சு..... ஹாஹா.... நான் நினைத்தது அவளுக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் நான் நடக்கும்னு நினைத்ததை அவ செய்திருப்பா....

ஆனா அப்போதான் அவ மனசு சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஏங்கியிருக்குனு புரிந்துக்கொண்டேன்..... அப்போ தான் அம்மாவோட அருமை புரிந்தது...

நான் ஊருல இருந்தபோதும் சரி... இங்கு வந்தபோதும் சரி அம்மா கால் பண்ணி நேரத்திற்கு சாப்பிட்டேனானு தெரிந்துக்கொள்வாங்க.... எனக்கு அந்த ஏக்கம் வந்திடக்கூடாதுனு தான் அம்மா கால் பண்ணுறாங்கனும் புரிந்தது...

நான் சாதாரணமாக நினைத்திருந்த விஷயங்கள் ரொம்ப பெருசுனு புரியவைத்தது அவ தான்..

வீட்டுக்கு பத்திரமாக போயிட்டியானு நான் அனுப்புற மெசேஜ் கூட அவளை அத்தனை சந்தோஷப்படுத்ததுனு தெரிந்தப்போ அவ மனதின் ஏக்கம் புரிந்தது.. அதனாலயே அவளை சந்தோஷப்படுத்திட்டே இருக்கனும்னு அவளை ரொம்ப கவனமாக பார்த்துக்கனும்னு நினைச்சேன்.. எங்க போனாலும் அவளை கூடவே கூட்டிட்டு போனேன்.. அவளை கூட்டு போக முடியாத இடங்களுக்கு போறதை குறைச்சிக்கிட்டேன்.... என்கூட இருக்கும் போது அவ பாதுகாப்பாக உணர்வதை நான் உணர்ந்தேன்.... அதுவே எனக்கு போதுமா இருந்தது..... அவளுக்கு ஆளில்லாத சாலைகளில் மழை நேரத்துல நடந்து போக அவ்வளவு விருப்பம்... அதைவிட அவளுக்கு மழையில நனையிறதுனா ரொம்ப பிடிக்கும்.... நைட்டுல பீச்சுல உட்கார்ந்து பௌர்ணமி நிலவை பார்க்க அவளுக்கு கொள்ளை பிரியம்... இப்படி சின்ன சின்ன விஷயங்கள் தான் அவளோட ஆசைகள்.......

இப்படியே போயிட்டிருந்தப்போ தான் நான் என்னோட லவ்வை அவகிட்ட சொன்னேன்... சாரி சாரி.... அவகிட்ட கேட்டேன்....

ஆமா கேட்டேன்.... நீ என்னை லவ் பண்ணுறியானு கேட்டேன்... லவ்வை கூட சரியா பிரபோஸ் பண்ண தெரியலைனு இன்னும் வரைக்கும் திட்டுவா.... பிரபோஸ் பண்ண தெரியாமல் இல்லை... ஏதாவது செய்யப்போய் அது வேற மாதிரி ஆகிடுமோனு பயம் தான்... இது எனக்கு மட்டுமா எல்லாருக்குமானு தெரியலை... அவ என்னை பார்த்து மனதில் காதலை வைத்துக்கொண்டு தான் என் கூட இத்தனை நாள் நல்லவனாக பழகியானு கேட்டுட்டா அதைவிட ஒரு வெட்கமான விஷயம் வேறு எதுவும் இல்லை... அதனால தான் நான் காதலை வெளிப்படுத்தாமல் இருந்தேன்... ஆனா இந்த பசங்க சொன்னாங்கனு அவகிட்ட கேட்டதும் தான் தப்பு பண்ணிட்டமோனு தோனிச்சு.. ஆனா அதையும் அவ இல்லைனு ஆக்கிட்டா.. ஆமா.. என்னோட ஸ்ரயா பேபி... என்னை விரும்புறா... இது அவ சொன்னப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா...?? ஒரு பொண்ணோட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத காதலை பெறுவது ஒரு ஆண்மகனுக்கு எப்படியொரு கர்வத்தை கொடுக்கும்னு எனக்கு அந்த நொடி புரிந்தது.... அந்த நொடி எதையோ பெரிதாக சாதித்த உணர்வு...... நம்மகிட்ட எல்லாம் இருக்கும் போது கிடைக்கும் காதலை விட எதுவுமே இல்லைங்கிற சமயத்தில் நமக்கு கிடைக்கிற காதல் ஒரு வரம்... காலேஜ் டேஸ் லவ் நிறைய பேருக்கு கைகூடினதில்லைனு கேள்வி பட்டுருக்கேன்... ஆனா அது கைகூடுனா அதை விட சந்தோஷம் எதுவும் இல்லை.... காதல் ஒரு போதைனு சொல்லுங்க.. உண்மை தான் போல.. அதான் கண்டமாதிரி உளருறேன்.....

ஆமா.. அவளை நினைச்சாலே... ஏதோதோ தோனுது.. அதான் இப்படி. அவ சிரிப்பு,அவ கோபம், அவ குறும்பு,அவ சிணுங்கல், அவ தவிப்பு, அவ அழுகை,அவ கள்ளத்தனம் இப்படி அவளை மொத்தமாக பிடிச்சிருக்கு.. ஆன் இதெல்லாம் அவகிட்ட நான் சொன்னதில்லை. . சில விஷயங்கள் சொல்வதை விட மனசுக்குள்ள வைத்து ரசிக்கிறது தான் சுகம்.. அது அவங்களுக்கும் புரியும்... ஆமா... என்னோட ஸ்ரய்வுக்கு நான் அவளோட செயல்களை ரசிக்கிறேன்னு தெரியும்... ஆனா அவ அதை என்கிட்ட காண்பித்ததில்லை... ஏன்னா அவளுக்கு தெரியும் நான் அவளை புரிந்துப்பேன்னு...

எனக்காகனு அவ எதை செய்யவும் தயங்கியதில்லை... எனக்காக தான் பாடமாட்டேன்னு முடிவுல இருந்தவ மறுபடியும் பாட ஆரம்பிச்சா...எனக்காக தான் அவ நான்வெஜ் சாப்பிட ஆரம்பிச்சா...

ஆமா... ஸ்ரயா பேபி சுத்த சைவம்... எனக்கு இந்த விஷயம் தெரியாது... ஒரு நாள் நாங்க லன்சுக்கு வெளிய போயிருந்தோம்.. அது நான்வெஜ் ஹோட்டல்.. அன்னைக்குனு பார்த்து அங்க வெஜ் எதுவுமே இருக்கலை.. இவளும் தான் வெட்ஜினு சொல்லலை.. நாங்க எல்லாரும் நான்வெட்ஜ் ஆடர்பண்ணி சாப்பிட இவளும் எங்ககூட சாப்பிட்டா....

காலேஜ் போனதும் விடாமல் வாமிட் பண்ண ஆரம்பிச்சா... நான் நல்லாவே பயந்துட்டேன்.. என்னாச்சுனு விசாரிக்கும் போது தான் அவ வெட்ஜிங்கிற விஷயமே தெரியும்... நான் அவகிட்ட சாப்பிடும் போதே சொல்லியிருக்கலாமேனு கேட்க இல்லை சொல்லியிருந்தா நீயும் சாப்பிட மாட்ட.. அதான் சொல்லலைனு சொன்னா.. எனக்கு அதை கேட்டதும் ஒரு மாதிரி ஆகிடுச்சு... அப்போ சரி நானும் இனி உன்னை மாதிரியே வெட்ஜே சாப்பிடுறேன்... அப்போ நீ பீல் பண்ண மாட்டல்லனு சொல்ல அவளோ இல்லை . நான் நான்வெட்ஜ் சாப்பிட பழகுறேன்னு சொல்லி என்னை தடுத்து அவ நான்வெட்ஜ் சாப்பிட பழகுனா... அவ உடம்பு அதுக்கு ஒத்துழைக்காத போதும் அவ கஷ்டப்பட்டு சாப்பிட்டு பழகிட்டா....

நிஜமாவே இவ என்னமாதிரி பொண்ணுன்னு என்னால புரிந்துக்கொள்ள முடியலை... ஏன் எனக்காகனு இவ இவ்வளவு கஷ்டப்படுறானும் புரியலை... அந்த அளவுக்கு நான் அவளுக்கு எதுவும் செய்ததில்லை.. சில சமயம் இவளை நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கும்... இவ இப்படி நம்மேல பையித்தியாமாக இருக்கிறாளே.. விதிவசத்தால நமக்கு ஏதாவது நடந்தா இவ நிலைமை என்னனு மனசுக்கு பயமாக இருக்கும்.... இவளுக்காகவாவது நாம நூறு வருஷம் வாழனும்னு கடவுள்கிட்ட வேண்டிப்பேன்....” என்று ஸ்ரவ்யா வாசித்துக்கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க டையரியை பத்திரப்படுத்திவிட்டு எழுந்து சென்றாள் ஸ்ரவ்யா...

வெளியே தேவ்வும் அவன் அன்னையும் நின்றிருந்தனர்..

தேவ்வின் அன்னை

“அம்மாடி... அடுப்படியில மஞ்சள் தூள் டப்பா இருக்கும்.. அதை கொஞ்சம் கரைத்து எடுத்து வாமா...” என்று கூற அவர்கூறியபடி ஸ்ரவ்யா எடுத்து வந்து கொடுத்தாள்...

தனக்கும் தேவ்விற்கும் அந்த மஞ்சள் நீரை நன்றாக தெளித்துவிட்டவர்

“சூட்டி துடைக்க துண்டும் மாத்துறதுக்கு துணியும் எடுத்துட்டு குளிக்கிற இடத்துல போடு... நான் குளிச்சிட்டு வந்திடுறேன்... அப்படியே தம்பிக்கும் எடுத்துட்டு வந்திடு...” என்று கூறி அவர் வீட்டின் பின்புறம் செல்ல தேவ் கதிரையை வாங்கி வாசலில் அமர்ந்துகொண்டான்...

ஸ்ரவ்யா இருவருக்கும் மாற்றுடையை அவர்கள் குளிக்கும் இடத்தில் மாட்டிவிட்டு வாசலுக்கு வர அங்கு தேவ் ஒரு சிறுவனுடன் வம்பிழுத்துக்கொண்டிருந்தான்

“டேய் என்னடா இந்த பக்கம்??”

“அண்ணே.... அம்மா கோழி பிடிச்சிட்டு வரசொன்னிச்சு அண்ணே...”

“யார்வீட்டு கோழியடா...”

“எங்க வூட்டு கோழி தான்.... காலையில போனிச்சா... அதை தேடி கூட்டிட்டு வரசொல்லிச்சு...|

“இப்போ பிடிச்சிட்டு வர சொன்னாங்கனு சொன்ன??”

“ஆமாண்ணே.. கோழியை பிடிச்சு கூட்டுட்டு வரசொல்லுச்சு...”

“எப்படி கூட்டிட்டு போவ..”

“வானு கூப்டா கீர்த்தி வந்திடும்னே...”

“யார்டா அது கீர்த்தி.....”

“எங்க கோழி பேரு தான் அண்ணே அது.. கீர்த்தி சுரேஷ்... பேரு நல்லா இருக்கா??? நாந்தாண்ணே வச்சேன்...”

“அடப்பாவி பயலே.. யாரு பேர யாருக்கு வச்சிருக்க..??”

“கீர்த்தி மட்டும் இல்லன்னே சாய் பல்லவி,தமன்னா, சமந்தா இப்படி எல்லாமே என்வீட்டுல இருக்குனே... இரு கூப்பிடுறேன்....”

“ஏ சமந்தா இந்த வா... அண்ணே உன்ன பார்க்கனுமாம்... “ என்று கூற ஒரு ஆட்டுக்குட்டி துள்ளி குதித்து ஓடி வர அதை பார்த்திருந்த ஸ்ரவ்யாவோ சிரிக்கத்தொடங்கினாள்.. அவள் சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்த தேவ் அவளிடம்

“பார்த்தியா சினிமா செலிபிரிட்டி எல்லாம் நம்ம ஊருல எப்படி ஒய்யாரமாக சுத்தி திரியிறாங்கனு..” என்று கூற மேலும் சிரித்தாள் ஸ்ரவ்யா...

அப்போது அந்த சிறுவன் அழைத்த சமந்தா என்ற ஆட்டுக்குட்டி அவனிடம் வந்து அவன் காலை சுற்றியது...அவனும் அதை தூக்கி தடவ அதை பார்த்திருந்த ஸ்ரவ்யா

“அப்பு... எனக்கு அந்த ஆட்டுக்குட்டியை வாங்கிக்தர்றியா??” என்று கேட்க

“டேய்.. அக்கா கையில அந்த குட்டியை குடுடா...” என்று கூற அந்த சிறுவனோ...

“அச்சோ சமந்தா வெளிய வந்தது தெரிந்தா அம்மா திட்டும்...”

“நீ இதுக்கு சமந்தா பெயரை வச்சது அவங்க புருஷனுக்கு தெரிந்தா உன்னை நல்லா மொத்துவாரு... சும்மா குடுடா. அந்த அக்கா தொட்டு பார்த்துட்டு தந்திரும்..” என்று கூற அந்த சிறுவனோ சுற்றும் முற்றும் பார்த்தவாறு அந்த ஆட்டுக்குட்டியை ஸ்ரவ்யாவின் கையில் கொடுக்க அவளும் அதை வாங்கி தடவிக்கொடுத்தவள் மீண்டும் அந்த சிறுவனிடம் கொடுத்தாள்... அந்த சிறுவன் சமந்தாவோடு அங்கிருந்து தன் கீர்த்தியை தேடிச்சென்றான்...

அப்போது தேவ்வின் அன்னையும் குளித்து உடைமாற்றி வந்திட தேவ் குளிக்க சென்றான்....

தேவ்வின் அன்னை வந்ததும் பக்கத்து வீட்டு பெண்மணியும் தன் இல்லம் திரும்பிட அப்போது தேவ்வின் தொலைபேசி அழைக்க அதை எடுத்தவன் ஸ்ரவ்யாவை ஒரு பார்வை பார்த்தபடியே தன் தொலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN