🌹பாகம் 24🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மயூரா ரோஜாவை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. அவளுக்கு ஆயிரம் வேலைகள் அங்கு காத்துக் கொண்டிருந்தன. பொறுப்பான அக்காவாய் மதுவை தயார் படுத்தும் வேலை அவளுடையது தானே . அவளுடைய ஆடை தேர்வுகள், பரிசு பொருட்கள் எல்லாம் தயார் செய்ய வேண்டுமே.
இடையில் இன்பவனம் சென்று வந்தது கூட அவள் மனதில் நிம்மதிக்கு பதில் குழப்பத்தைதான் விதைத்து விட்டிருந்தது. காதல் என்று உணரும் முன்னே நடந்து விட்ட பால்ய விவாகம். காதல் என கண்டு கொண்ட பொழுது காயம் விளைவித்த காதலன். அவன் இல்லாமல் வாழவும் முடியாமல் அவனோடும் வாழவும் முடியாமல் கண்ணாமூச்சி காட்டும் தன் வாழ்க்கையை நினைத்து நொந்து போனாள். நடப்பது நடக்கட்டும் என்று மனதை தேற்றிக் கொண்டு பிற காரியங்களில் ஈடுபட்டாள்.
ருத்ரன் நிலையும் அவ்வாறே. தன்னவள் தன்னிடம் வந்து சேரும் நாள் ஒன்று கண்டிப்பாக வர வேண்டும் என மனதார சிவனை வேண்டிக்கொண் டான். திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி இருந்தன.அன்று அனைவரும் வெளியே சென்று விட்டிருந்தனர்.
பெற்றவர்கள் அனைவரும் சென்னையில் இருக்கும் உறவினர்களுக்கு பத்திரிக்கை வைக்கவும்,மது தன் தோழிகளுடன் இரண்டு நாள் பார்சலரேட் பார்ட்டிக்கும் சென்று விட,வீட்டில் எஞ்சியிருந்தது ருத்ரனும் மயூராவும் மட்டும்தான்.
மதுவின் சாரிகளுக்கு ஏற்றவாறு இரவிக்கைகளுக்கு பூவேலை செய்யும் வேலை இன்னும் முடியாததால் மயூரா சென்னைக்கு செல்லவில்லை.ரிசார்ட் பொறுப்பு ருத்ரனுடையது என்பதால் அவனும் அவளுடனே தங்கி விட்டான்.
காலையில் அவன் கிளம்பி ரிசார்ட்க்கு சென்று விட, தனித்து விடப்பட்ட மயூரா தன் வேலைகளில் ஆழ்ந்து விட்டாள்.இருட்டும் முன்பே வீடு திரும்பி விட்ட ருத்ரன்,மயூராவை எங்காவது வெளியே சாப்பிட அழைத்து செல்லலாம் என்ற எண்ணத்தில் அவளைத் தேடி அவள் அறைக்கு சென்றான்.அங்கு அவள் இருப்பதற்கான சுவடுகளே இல்லை.
எங்கே சென்றாள் இந்த கருப்பாயி என மனதில் எண்ணியவாறே ஒவ்வொரு அறையாய் சென்று தேடி , கடைசியில் ஹீலிங்க் ரூம்பிற்க்கு வந்தான்.அங்கே அறை விளக்கை கூட தட்டாது மயூரா சுருண்டு படுத்திருந்தாள்.
அவள் படுத்து இருந்த கோலமே அவனுக்கு அவள் நிலையை உணர்த்தியது. அவளை பாடாய் படுத்தும் அந்த மூன்று நாட்கள். குழந்தைப் போல் அவனை மட்டுமே தஞ்சம் அடையும் அந்த மூன்று நாட்கள்.
ருத்ரன் மனம் என்னவோ செய்தது.நீண்ட நெடிய ஐந்து வருடங்களில் இந்த மாதவிடாய் தருணங்களில் எப்படி தவித்திருப்பாள்?
அந்த சிந்தனை கூட அன்று இல்லாமல் அவளை அவமானப்படுத்தி நிச்சயத்தை நிறுத்தி இருவருக்கும் கேடு வரவழைத்துக் கொண்ட தன் முன்கோபத்தை நினைத்து அப்பொழுதும் வருந்தினான்.
மேலும் தாமதியாது மூலிகை தேனீர் தயாரித்து எடுத்து வந்தான். மயூரா அவன் வந்ததை கூட உணரவில்லை. மேஜையில் கொண்டு வந்த பானத்தை வைத்து விட்டு, சிஸ்ட்டத்தில் அவளுக்கு பிடித்த இசையை கசிய விட்டான்.
மெல்ல அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை நீவிவிட்டான். அவன் தொடுகையின் ஸ்பரிசம் உணர்ந்து மயூரா கண் விழித்தாள். வலியின் சாயல் அவள் வாடிய முகத்திலே ருத்ரன் கண்டுக் கொண்டான்.
மெல்ல அவளை எழுப்பி அந்த சூடான பானத்தை பருக தந்தான். மயூராவிற்கும் அந்நிலையில் அதை மறுக்க தோணவில்லை. இந்த ஐந்து வருடங்களில் மாத விடாய் காலங்களில் அமிர்தம் நன்றாக கவனித்துக் கொண்டாலும், அவள் உயிர் ஏங்கியது என்னவோ ருத்ரனின் ஸ்பரிசத்திற்கு மட்டும் தானே. தனிமையில் அன்னாளில் நடந்த பழைய விஷயங்களை நினைத்து பார்ப்பாள்.
அந்த நாட்களில் ருத்ரன் oru கணமும் பிரியாது அவள் கூட இருப்பானே. தாய் போல் அரவணைத்து அவள் வலி தெரியாமல் பார்த்துக் கொள்வானே. அதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்து அந்த மூன்று நாட்களை இப்படிதான் ஐந்து வருடங்களாய் கடந்து வந்திருந்தாள்.
ஏனோ இன்று அவனை அருகில் பார்க்கையில் கண்ணீர் கரையுடைத்தது. எதுவும் பேசாமல் அவன் முகத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
ருத்ராதான் "ஏண்டி காலையிலே உனக்கு பீரியட்னு சொல்லல? நா ரிசார்டுக்கு போய் இருக்க மாட்டேன் தானே? இப்ப கூட உனக்கு இவ்வளவு வீம்பாடி?''அவன் குரலில் கடுமை இல்லை. அது ஆதங்கமாகவே வெளிபட்டது.
மயூரா "இல்லை மாமா, நீ கிளம்பி போய்ட்டே, அப்புறம் தான் வந்துச்சு. சமாளிச்சிக்க லாம் பார்த்தேன். பட் முடியல ''கண்ணீரோடு சொன்னாள்.
அதற்கும் மேல் தாளாமல் அவளை வாரி அணைத்துக் கொண்டான் ருத்ரன். "மன்னிச்சிடுடி, உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். முட்டாள்.. முட்டாள் நானு. உனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனு அப்போ எப்படி நான் மறந்து போனேனு தெரியலடி'' அவளை அணைத்தவாறே புலம்பினான்.

"வா வந்து மடியில படுத்துக்கோ, பெயின் கொஞ்சம் பெட்டர் ஆ இருக்கும் ''மயூராவை மடியில் படுக்க வைத்துக் கொண்டான். அவன் விரல்கள் அவள் தலை கோதி விட, அந்த சுகத்தில் வலி மறந்து குழந்தைப் போல் உறங்கினாள்.
அவள் உறங்குவதை உறுதி செய்துக் கொண்டு, ருத்ரன் போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து திரும்பவும் அவள் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டான். திரும்பவும் அவளை தன் மடியிலே இறுத்திக் கொண்டான். அவளும் அவன் கையை இறுக பற்றிக் கொண்டே உறங்கினாள்.

நீண்ட நாட்களுக்கு பின் மீண்ட நிம்மதியான உறக்கம், மயூராவை ஆரத்தழுவியது. பல வருடங்களுக்கு பின் மயூராவோடு இப்படி அருகில் இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது ருத்ரனுக்கு.அவள் அவன் மடியிலே உறங்க ,அவனும் அமர்ந்த நிலையிலே உறங்கிவிட்டிருந்தான்.விடியலில் முதலில் எழுந்தது ருத்ரனே.இன்னமும் அயர்ந்து உறங்கும் மயூராவை எழுப்பாமல்,ருத்ரன் எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு இருவருக்கும் காலை சிற்றுண்டி தயாரிக்க ஆரம்பித்தான். மயூரா வீட்டை விட்டு சென்றதிலிருந்து அவன் சமைப்பதில்லை.பெரும்பாலும் அவன் சமைப்பது எல்லாமே அவள் விரும்பி உண்ணும் உணவுகள்தான்.அவளே அந்த வீட்டில் இல்லாது போது அவன் சமைத்து என்ன ஆக போகிறது?

நெய் விட்டு முறுகலாய் தோசையும் தொட்டுக்க கடலை சட்னியும் ,மணக்க மணக்க காபியும் தயாரித்துவிட்டு,மயூராவை சென்று எழுப்பினான்.வலி கொஞ்சம் குறைந்த நிலையில் ,மயூரா நன்றியுடன் ருத்ரனைப் பார்த்து புன்னகையித்தாள்.
"குட் மார்னிங் மயிலே,இப்ப வலி பரவாயில்லையா?போய் குளிச்சிட்டு வா, நாம காலை பசியாறலை பசியாறலாம்." வாஞ்சையாய் அவள் தலையை கோதினான்.அவளும் சிறு தலையசைப்புடன் குளிக்கச் சென்றாள்.ருத்ரன் சுட்டு வைத்த தோசைகளை மயூரா ருசித்து உண்டாள்.சுட சுட காபி உள்ளிறங்கியதும் உடம்பிற்கு தென்பு வந்தது போல் இருந்தது மயூராவிற்கு."மதியம் உனக்கு என்ன சமைக்கட்டும் மயிலே?இன்னிக்கு ஐயா சமையல்தான்.நீ மெனு சொல்லு ஜமாய்ச்சிடறேன்."

ருத்ரன் கேட்கவும் ,மயூரா கேள்வியாய் புருவத்தை உயர்த்தினாள்.
"ஐயா இன்னிக்கு ரிசார்ட்டுக்கு போகலாயா? " காபியை அருந்தியவாறே மயூரா கேட்டாள்.
"உனக்கு பீரியட்ஸ்னா என்னை எங்கயாச்சும் நகர விட்டிருக்கியா?உன் கூட தானே இருப்பேன்.அது அப்படியே பழகிடுச்சு.அதோட வீட்டில்யாரும் இல்லை,உன்னை தனியா விட்டுட்டு அங்க போய் என்னால நிம்மதியா வெர்க் பண்ணமுடியாது.மூனு நாளைக்கு உன் கூடதான் இருப்பேன்.ஆபிஸ் வெர்க்கெல்லாம் நான் இங்கயிருந்தே முடிச்சிடுவேன்.சோ நோ வெரிஸ் பேபி" ருத்ரன் குறும்பாய் கண்ணடித்தான்.

மயூராவிற்கு பழைய ருத்ரனைப் பார்ப்பபது போல் இருந்தது."மாமா நாட்டுக் கோழி பிரியாணி செஞ்சி தர்வியா?" மயூரா அப்படி கேட்கவும் ருத்ரனுக்கு என்னவோ போல் ஆயிற்று. இந்த ஐந்து வருடங்களில் அவன் மறந்துவிட்ட அவளுடைய விருப்பமான உணவு."உனக்கு இல்லாததா மயிலே,நீ போய் ரெஸ்ட் பண்ணு.மாமா எல்லாத்தையும் சமைச்சிட்டு உன்னை வந்து கூப்பிடறேன்.சரியா?.போய் ரெஸ்ட் பண்ணுடி"அவளை ஹீலிங் ரூம் வரை கைய்த்தாங்கலாய் அழைத்து சென்று படுக்க வைத்தான்.


அவன் கூட இருக்கும் பொழுது மட்டும் இந்த வயிற்று வலி மாயமாய் மறைந்து விடுகிறதே.மயூரா மனதிற்குள் எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்தாள்.அவள் விரும்பி வாசிக்கும் நாவல்கள் அனைத்தும் அவள் அருகே ருத்ரன் எடுத்து வைத்திருந்தான்.அவற்றில் ஒன்றை உருவிக் கொண்டு வாசிப்பில் ஆழ்ந்த்தாள்.ஐந்து வருடங்களாய் மறந்துப் போன அவள் பழக்க வழக்கங்கள் மீண்டும் துளிர்த்து எழுந்தது.இடையிடையே ருத்ரன் அவளை வந்து பார்த்து விட்டு சென்றான்.குடிக்க எதாவது சுட சுட மூலிகை டீ கண்டிப்பாய் அவன் கையில் இருக்கும்.
 

Author: KaNi
Article Title: 🌹பாகம் 24🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN