உறவாக வேண்டுமடி நீயே 8

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 8


‘நீச்சல் குளத்தில் அந்த ஆட்டம் போட்டால் பிறகு ஜுரம் வராமல் என்ன செய்யுமாம்? இதில் என் அம்மாவையும் அவள் பக்கம் இழுத்துவிட்டாள் கொண்டாளே இந்த ஜமீந்தாரிணி!’ என்று அவளைப் பற்றி யோசித்தவனின் மனமோ ஆபீஸ் போகும் போது தாய்க்காக என்று அவளின் வீட்டு வாசலில் நின்று தாயிடம் சில வார்த்தைகளை அவளைப் பற்றி கேட்டுக் கொண்டு தான் செல்ல வைத்தது. அதே மறுநாள் காலையில் தாய் நிதானமாக இருப்பதைப் பார்த்தவன் “என்ன மா இன்றைக்கு வேணியின் அம்மா உங்கள் பாசக்காரப் பெண் வீட்டிற்குப் நீங்க போகவில்லையா?” இவன் அவரிடம் வம்பு வளர்க்க

“போடா கழுதை! எப்பொழுதுமே என்னிடம் வம்பு செய்வது தான் உன் வாடிக்கை. நந்திதாவுக்கு உடம்பு நன்றாக இருக்கு டா. கூட அந்த டாக்டர் தம்பி இருப்பதால் நந்திதா என்னை வர வேண்டாமென்று சொல்லிவிட்டாள். கூடவே என்ன சொன்னாள் தெரியுமா? இங்கே உங்களை அனுப்பிவிட்டு எங்கே என் மேல் நீங்க பாசம் வைத்துவிடுவீர்களோ என்ற பயத்தில் உங்கள் பிள்ளை அங்கே பாசப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார் ஆன்ட்டி என்று சொல்லி அனுப்பினாள். நான் கிளம்பி வரும்போதே அவன் அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டுத் தான் அனுப்பி வைத்தான் என்று சொன்னேன். எந்தளவுக்கு உன்னைப் புரிந்து வைத்திருக்கிறாள் பார் அந்த பெண்!” என்று அவன் கேட்காமலே இவர் சகலத்தையும் சொல்லிவிட

“என்னை வைத்து நக்கல் செய்கிறாளா அந்த மேடம்? ஒரு நாள் இருக்கிறது அவளுக்கு!” இவன் பொய்யாய் கோபப்பட்டு மிரட்டினாலும் மனதிற்குள் முதல் முறையாக சிறு சலனம் வரத் தான் செய்தது அபிக்கு.

அன்று காலை எழும்போதே புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாள் நந்திதா. இன்று அவள் புதிய வேறு ஒரு துறையில் அடி எடுத்து வைக்கப் போகிறாள். I.T துறை! ஒரு வெளிநாட்டு நிறுவனம் தன் கால் தடத்தை இந்தியாவில் பதிக்க நினைத்து அதற்கான வேளைகளில் இறங்க, அதனுடைய கிளை நிறுவன உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டி போட்டாலும் இவள் அதைப் பெறுவதற்கு படு தீவிரமாக இருந்தாள். அதற்காக தங்களுடைய கொட்டேஷனில் குறைந்த தொகையையே கோட் செய்திருந்தாள். நிச்சயம் இப்படி ஒரு தொகையை யாரும் கோட் செய்திருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருந்ததால் தனக்கு தான் அதன் ஆர்டர் என்பதில் உறுதியாக இருந்தாள் நந்திதா. அதற்கான முடிவு இன்று என்பதால் அவளின் பரபரப்பிற்கு அதுவுமொரு காரணம். இவள் காலை உணவிற்குப் பிறகு அந்த மீட்டிங் நடக்கும் ஹோட்டலுக்குச் செல்ல, அவளுக்கு முன்பே ஹோட்டல் வாசலில் காத்திருந்தாள் பாரதி.

“குட் மார்னிங் மேம்”

“குட் மார்னிங் பாரதி! Today they will announce the result no? I am very much excited! எல்லோரும் வந்தாகிவிட்டதா?” இவள் நடந்து கொண்டே கேட்க

“எஸ் மேம்! They will start within five minutes” அதற்குள் இருவரும் உள்ளே வந்து அவர்களுக்கான இடத்தில் அமர்ந்து விட சரியாக கான்ஃபிரன்ஸ் ஆரம்பிப்பதற்கு இரண்டு நிமிடம் முன்பு கதவு திறக்கப்பட, ஒரு கிரேக்க மாவீரனின் உறுதியுடன் உள்ளே நுழைந்தான் அபிரஞ்சன்! நின்று கொண்டிருந்த நந்திதாவின் பக்கம் ஒரு சலனமற்ற பார்வையை வீசியவனோ பின் தனக்கான இடத்தில் அமர்ந்தான் அவன்.

அவனைப் பார்த்ததுமே நந்திதாவின் மனது கணக்குப் போட ஆரம்பித்தது. இந்த கம்பெனிக்கான அறிவிப்பை அபியைச் சந்திப்பதற்கு முன்பே பார்த்து அதற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்திருந்தாள் இவள். நிச்சயம் இதில் அபி கலந்து கொள்வது அவளுக்குத் தெரியாது. ஒரு வேளை தெரியப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்தானோ? என்ற சந்தேகம் இப்போது வந்தது அவளுக்கு. அவன் என்ன தான் இதில் கலந்து கொண்டாலும் தான் கோட் செய்திருக்கும் தொகைக்கு குறைவாக கோட் செய்து ஆர்டரை வாங்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தாள் நந்திதா.

“Ladies & gentleman! welcome to all! எங்களுடைய மென்பொருள் நிறுவனம் இங்கு இந்தியாவில் கால் பதிக்க இருக்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதற்கு நிறைய பேர் ஃபிரான்சீஸ் எடுக்க விண்ணப்பித்திருந்தீர்கள். முதலில் அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுக்கே தெரியும் யார் கம்மியாக கோட் செய்திருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் தர முடியும் என்று. அதன் படி எங்களுக்கு வந்த லோ கோட் கம்பெனியில் தேர்தேடுக்கப் பட உள்ளது துரை கம்.... மன்னிக்கவும். அவர்களை விட குறைவாக கோட் செய்தது AR கம்பெனி என்பதால் அவர்களுக்குச் செல்கிறது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்” அந்த மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி பேசி முடித்ததும் ஒரு பெரிய கரகோஷம் ஆரம்பித்து அடங்கியது. பின் பல வாழ்த்துக்களுக்குப் பிறகு அபி எழுந்து சென்று அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் நந்திதாவை ஒரு வெற்றிப் பார்வை பார்த்தபடியே கையெழுத்திட்டான் அவன்.

அனைத்தும் முடித்து நந்திதா காரில் கிளம்பவிருந்த நேரம் அவளை சொடக்கிட்டு அழைத்தவன் “எப்படி? எப்படி? என் தொழில் சாம்ராஜ்யத்தை அழித்து என்னை மண்ணைக் கவ்வ வைக்கப் போகிறீர்களா? நீங்கள் என்னை விட அதிக ஷேர் ஹோல்டர் ஆனால் அது சீக்கிரமாக நடந்துவிடுமென்று நினைப்பா மேடம் உங்களுக்கு? மேடம்! நீங்கள் முன்பே கைப்பற்ற நினைத்த கான்ட்ராக்ட் இது. அதற்காக உங்கள் கம்பெனி ஆளுக்குத் தெரிந்து ஒரு கோட் பிறகு நீங்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் ஒரு குறைந்த கோட் போட்டு வைத்திருப்ப என்று எனக்குத் தெரியும். அந்த கோட் விடத் தான் இப்போது நான் இன்னும் குறைவாக போட்டு வாங்கியிருக்கிறேன்.

நம் எதிரி எதிர்காலத்தில் செய்யப் போவதை முடக்குவதை விட அவன் முன்பே யோசித்தது இனி யோசிக்கப் போவது எல்லாவற்றையும் அறிந்து அடித்துத் தூக்கவேண்டும். அது தான் மேடம் ஒரு சிறந்த சாணக்கியனின் குணம்! அப்போ நான் சிறந்த சாணக்கியன் தானே?” என்று நக்கல் தொனியில் வெற்றி பெருமிதத்தில் பல மேடம் போட்டுப் பேசியவன் ஸ்டைலாக இரண்டு விரல்களை மட்டும் நெற்றியில் வைத்தவன் “வர்ட்டா?” என்று ரஜினி பாணியில் சொல்லிவிட்டுச் சென்று விட, முகத்தில் எதையும் காட்டாமல் “நீ சாணக்கியன் இல்லை டா. வில்லாதி வில்லன் டா!” என்று சொல்லிக் கொண்டவள் ஆபீஸ் வந்து சேர்ந்தாள் நந்திதா.

“சாரி மேம்! இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை” பாரதி குற்ற உணர்ச்சியுடன் சொல்ல

“its not a good answer பாரதி! நீங்க துரை கம்பெனி ஸ்டாஃப். அதிலும் எனக்கு P.A. உங்கள் பொறுப்பிலிருந்த விஷயத்திலிருந்து தான் மெசேஜ் லீக் ஆகியிருக்கிறது. இப்படி சாரி என்று சொன்னால் முடிந்ததா? யார் அந்த கருப்பு ஆடு என்று கண்டுபிடியுங்கள்” அங்கு அபியிடம் காட்ட முடியாமல் போன கோபத்தை இங்கு இவளிடம் காட்டியவள் “உன் அப்பாவுக்குக் கூடத் தெரியாது. உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த குறைந்த கோட் அபிக்கு மட்டும் எப்படி தெரிந்தது? நிச்சயம் இதற்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள். அதை முதலில் கண்டு பிடி...”

அவள் முடிப்பதற்குள் “எனக்கு என்னமோ என் தங்கை மகன் புகழ் மேல் தான் மேம் சந்தேகமாக இருக்கிறது” அந்த கம்பெனி மேனேஜர் என்ற முறையில் பாரதியின் அப்பா திருமலை சொல்ல

“எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?”

“சமீபத்தில் நீங்கள் கேம்ப் போயிருந்த போது ஒரு நாள் நீங்கள் மெயிலில் அனுப்பிய அந்த கம்பெனியின் ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட விபரங்களை பாரதி தன்னுடைய பென் டிரைவில் காப்பி செய்து எடுத்துக்கொண்டு கிளம்பும் போது தானே விபத்து நடந்தது! அந்த விபத்துக்குப் புகழ் காரணமாக இருப்பானோ என்று எனக்கு சந்தேகம் இருந்தது. அந்த பென் டிரைவில் இருப்பதைத் திருடத் தான் அவன் அந்த விபத்தையே நடத்தியிருக்கான். ஹாஸ்பிட்டலில் அவன் தான் அதிக நேரம் இருந்தான். ஒரு வேளை, அப்போது நடந்திருக்கலாம்!” தான் யூகித்த படி கண்ணால் பார்க்காததை பாரதி அப்பா சொல்ல, இதைக் கேட்ட பாரதியின் மூளையோ தந்தைக்கு மேல் வேறு ஒன்றை யூகித்தது.

“ஓ! அப்போது அவனை தள்ளியே வையுங்கள். அவனுக்கு எப்படி தண்டனை தரவேண்டுமோ அப்படி நான் கொடுத்துக்கொள்கிறேன். இனி அது என் வேலை! இதற்கு மேல் எந்த ரகசியமாக இருந்தாலும் என்னிடமே இருக்கட்டும். நீங்கள் இரண்டு பேரும் பாதுகாப்பாக ஆபீஸ் விஷயத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்” நந்திதா கட்டளை இட

“மேம்... நான் ராஜினாமா செய்கிறேன்” இது பாரதி.

“வாட்!? இந்த கான்ட்ராக்ட் எனக்கு முக்கியம் தான் பாரதி. கம்பெனி விதிப் படி பார்த்தால் நான் உன்னை சஸ்பென்ட் செய்ய வேண்டும் தான். ஆனால் திருமலை சார் எங்கள் கம்பெனிக்காக நிறைய செய்திருப்பதால் தான் நான் அப்படி செய்யவில்லை. அதுவுமில்லாமால் நீ அர்ப்பணிப்பாக வேலை செய்பவள். அதனால் தான் உன்னை விடுகிறேன்” நந்திதாவிடம் ஒரு அதிகார தோரணை இருந்தது.

“நீங்கள் சொன்ன அர்ப்பணிப்பைத் தான் இப்போது நான் இழந்துவிட்டேனே மேம்? ப்ளீஸ் மேம்! இதற்கு சம்மதியுங்கள். நான் போகிறேன்” இவள் வலியுடன் மன்றாட

“அப்படி எல்லாம் அனுப்ப முடியாது. இப்போது என்ன? திருமலை சார் யூகித்ததைத் தானே சொன்னார்? எது உண்மை என்பதை நீ கண்டுபிடித்து நிரூபி. அதுவரை லீவ் எடுத்துக்கொள். நோ ரிசைன் நோ சஸ்பென்ட். புரிந்ததா? இப்போது நீங்கள் இரண்டு பேரும் போகலாம்”. இவள் இறுதி முடிவாய் சொல்லி விட, மனதில் ஆயிரம் தேனீக்கள் கொட்டிய வலியுடன் கிளம்பினாள் பாரதி.

வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஒருநிலையில் இல்லை. “ச்சீ! எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கான் நம்பிக்கை துரோகி!” அவன் துரோகத்தில் முதல் முறையாக அவள் கண்களில் நீர் கோர்த்தது. “நல்ல வேளை! இவனை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்கவில்லை” என்றெல்லாம் புலம்பியவளுக்கு அவனிடமே நேருக்கு நேர் பேசிவிட வேண்டும் என்ற வேகம் வர, எப்பொழுதோ துருவன் கொடுத்த அவனுடைய தனிப்பட்ட நம்பருக்கு அழைத்தவள் அவனை எங்கு எப்பொழுது சந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் குறித்துக் கொண்டு அவனுக்கு முன்பே துருவன் சொன்ன இடத்தில் அவனுக்காக காத்திருந்தாள் பாரதி.

“ஹாய் கண்ணம்மா! என்னாச்சு என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று அவசரமாக வரச் சொன்னாய்? ஏதாவதுசம்திங் சம்திங்?” என்று கேட்டு கண்ணடித்த படி அவன் ரிசர்வ் செய்திருந்த மேசையில் அவள் முன் அமர, காளியின் அவதாரத்தில் அவனை முறைத்தவள்,

“கடைசியில உன் பணக்கார புத்தியைக் காட்டிட்ட இல்லை? அன்றைக்கு விபத்து நடந்த போது என்னமாக நடித்தீங்க! அப்போது மட்டுமா? எப்போதுமே நீ என்னிடம் நடித்துதான் இருக்கிற. இப்படி செய்து இருக்கீயே நீ எல்லாம் ஒரு ஆண் மகனா டா? நல்ல வேளை! நான் உன்னை நம்பி எதையும் வெளிப்படுத்தவில்லை. அப்படி மட்டும் சொல்லியிருந்தால் இந்நேரம் உன் சுயநலத்திற்காக என்னை விற்றிருப்பாய்” பாரதி விட்ட வார்த்தையில்

“ஏய்!” அடக்க முடியாத கோபத்துடன் மேசை மேலிருந்த கண்ணாடிப் பூ ஜாடியைத் தூக்கிப் போட்டு உடைத்திருந்தான் துருவன்.

சத்தம் கேட்டு பேரர் வந்து நிற்க, “இதற்கான விலை எவ்வளவோ அதற்கான பணத்தை நான் தருகிறேன்” இவன் பதிலில் அவன் நிற்பானா என்ன? அவன் விலகியதும், “ஒரு பெண்ணை அடிக்கக் கூடாதென்று நினைப்பவன். அதிலும் காதலியை!” அவள் நிமிர்ந்து பார்க்க, “என்ன டி பார்க்கிறாய்? ஆமாம்! நான் உன்னைக் காதலிக்கிறேன். அப்போது நீ என் காதலி தானே? இப்போது இல்லை உன்னை எப்போது முதல் முறையாக பார்த்தேனோ அப்போதிலிருந்தே விரும்புகிறேன். நீயும் அப்போதிலிருந்து இல்லையென்றாலும் இப்போது என்னை விரும்புகிறாய் என்று எனக்கு நல்லாவே தெரியும்.

ஆனால் நீ இப்படி இருப்பாய் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ச்சை! நம்பிக்கை தான் டி வாழ்க்கைக்கு முக்கியம். அந்த நம்பிக்கை என் மேல் உனக்கு இல்லை. அப்படி என்ன நடந்திருந்தாலும் நீ என்னை நம்பியிருக்க வேண்டும். இப்போது சொல் அப்படி நான் என்ன செய்து விட்டேன் என்று நீ இந்த பேச்சுப் பேசினாய்?” அடக்கப் பட்ட கோபத்துடன் அவன் கேட்க,

“என்ன செய்யவில்லை? என்னைக் காப்பாற்றுவது போல் காப்பாற்றி அந்த கான்ட்ராக்டுக்கான விஷயத்தைத் திருடி உங்கள் அண்ணனிடம் கொடுக்கவில்லை?”

“என்ன உளறுகிறாய்?” இவன் நெற்றி சுருங்க கேட்க

“ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் நடிக்காதே”

“வருகிற கோபத்திற்கு நிஜமாகவே உன்னை அறைந்து பல்லைக் கழட்டிவிடுவேன். என்னைக் கோபப்படுத்தாமல் என்னவென்று விபரமாகச் சொல்” இவன் குரலை உயர்த்தவும், சற்றே தணிந்து அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள் பாரதி.

“நீ வைத்த குற்றச் சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு கான்ட்ராக்டில் உங்கள் கம்பெனியும் எங்கள் கம்பெனியும் கலந்து கொண்ட விஷயமே எனக்குத் தெரியாது. எல்லாவற்றையும் என் அண்ணன் என்னிடமிருந்து மறைத்து விட்டார். அதனால் தான் என்னை வெளிய வேற விஷயமாக அனுப்பிட்டு கான்ஃபிரன்ஸிற்கு அவர் வந்திருக்கார். நீ நம்பினாலும் நம்பவில்லையென்றாலும் இது தான் உண்மை. அன்றைக்கு உனக்கு விபத்து நடந்த போது நான் வந்ததது தற்செயல் தான். ஆனால் நான் துடித்தது உண்மை!”

“இதை நான் நம்ப மாட்டேன்” பட்டென அவள் பதில் தர

“எங்கே என் கண்ணைப் பார்த்து அதைச் சொல்! உன் முதலாளி உன்னை நம்பாததால் ஓவென்று உனக்கு கதறி அழவேண்டும் போலிருக்கே, அதே மாதிரி தான் டி என் கண்ணம்மா என்னை நம்பவில்லை எனும்போது எனக்கும் கதறி அழவேண்டும் போலிருக்கு. அதை உன்னால் என் கண்ணில் படிக்க முடியவில்லையா?” அவன் குரலில் விரக்தி கோபம் இயலாமை எல்லாம் இருந்தது.

“நீ சொன்ன குற்றச் சாட்டிற்கு நான் காரணம் இல்லையென்று நிரூபிக்கிறேன். ஆனால் அதற்கு பிறகு உன் முகத்தில கூட முழிக்க மாட்டேன்!” தொண்டை அடைக்க கூறிய படி செல்ல எழுந்து ஓர் அடி எடுத்து வைத்தவனோ பின் நின்று திரும்பி அவளைப் பார்த்து காதலியிடம் இப்படி ஒரு நிலைமையில் காதலைச் சொன்ன முதல் காதலன் நானாகத் தான் டி இருப்பேன்!” ஒரு கசந்த புன்கையைச் சிந்திய படி வெளியேறினான் துருவன்.

நாம் செய்யாத தப்பை ஒருவர் நம்பவில்லையென்றால் அதன் வலியும் வேதனையும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவளால் ஒரு வினாடி ‘துருவன் சொல்வது உண்மையாக இருக்குமோ?’ என்று எண்ணியவளின் நெஞ்சோ அமிலத்தை ஊற்றியதைப் போல் பொசுங்கியது.

போகும் தன் காதலனையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் பாரதி

இப்படியே அவரவர் பிரச்சனைகளுடன் அவரவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்க, ஒரு நாள் இரவு பதினோர் மணி சென்றும் தூங்காமல் தோட்டத்தில் ஏதோ சிந்தனையில் குளிரில் அமர்ந்திருந்தாள் நந்திதா.

அவள் முகத்தில் அப்படி ஒரு துயரமும் சோகமும் பற்றியிருந்தது. இதை தன் அறையிலிருந்து பார்த்த பபுல் அவளை நெருங்கியவன், “ஆஸ்ரேலியாவையும் இன்டியாவையும் எப்டி ஜாய்ன் பண்றது இல்ல பிரிட்ஜ் கட்றதுனு டீப் திங்கிங்கா? எப்டி கடல் வழியா இல்ல லேண்ட் வழியாவா?” என்று கேட்ட படி வந்து அமர்ந்தவனை திரும்பி அவன் முகம் பார்த்தவள்

“நீ இன்னும் தூங்கவில்லையா பபுல்?” என்று கேட்க

“அது நான் கேட்கணும். ஆஸ்ட்ரேலியா குளிரைத் தாங்கின உன்க்கு இந்த குளிர்லாம் பெருசில்ல தான். ஆனா இந்த குளிரும் உன் உடம்புக்கு ஆகாதுன்னு உன்க்கு தெரிய வேணாம்?” என்று அவளைக் கடிந்தவன் தன் கையோடு கொண்டு வந்திருந்த சால்வையை அவளை சுற்றி போர்த்தி விட, அவன் அன்பில் நந்திதாவுக்கு விழிகள் கலங்கியது. அதை அவள் மறைக்க அரும்பாடு படுவதைப் பார்த்தவன், “ஹோ குயீன்! என்ன இது? நம்ம ரெண்டு பேருக்கும் சீக்கிரம் மேரேஜ் ஆகட்டும். அப்பறம் பார் நான் உன்ன எப்டி எல்லாம் பார்த்துகிறேனு”

“அனுதாபத்தாலும் பரிதாபத்தினாலும் நடக்கிற கல்யாணம் எல்லாம் வாழ்க்கையில் நிலைக்கும் என்றோ இல்ல நல்லா இருக்கும் என்றோ நீ நினைக்கிறாயா பபுல்?” இவள் நைந்த குரலில் கேட்க

“டேய்! யார் சொன்னா நான் உன் மேலே வைத்து இருக்கறது அனுதாபம் பரிதாபம்னு? சுத்த 916 லவ் மா லவ்” இவன் வசனம் பேச

‘என்னைவிட சில மாதங்கள் பெரியவன் நீ. ஆனால் காதலுக்கும் பரிதாபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறாய் டா” என்ற படி இவள் அவன் சிகையைச் செல்லமாக கலைக்க

அவள் கையைப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன் “அது எப்டி குயீன் நீ இப்படி சொல்லலாம்?” இவன் சிறிதே கோபப் பட

“உண்மை... நான் சொல்வது உண்மை ராசா. உன் கண்ணில் காதல் இல்லை டா. அன்பு பாசம் தோழன் என்ற உரிமை இருக்கு. கூடவே பரிதாபமும் குடம் குடமா இருக்கு. அதை நான் நன்றாக உணர்கிறேன் பார்க்கிறேன். எப்போதும் உன் கண் பொய் சொல்லாது பபுல். அதை நான் எட்டு வயதிலிருந்தே பார்க்கிறேன். சின்ன வயசுல நான் ஒரு அனாதைன்னு சொன்னதிலிருந்து உன் கண்ணில் பரிதாபத்தைப் பார்க்கிறேன். அதனால் என்னை உண்மையாகவே ராணி மாதிரி வைத்திருக்க வேண்டுமென்று நினைத்தாய். ஆனால் அதை நீ காதலென்று தப்பாக முலாம் பூசிக்கொண்டு கல்யாணம் செய்தால் தான் என்னை சந்தோஷமாக வைத்திருக்க முடியுமென்ற பிம்பத்தை நீ உருவாக்கிவிட்டாய்” இவள் நீண்ட விளக்கம் தர

“அதெல்லாம் இல்ல. சும்மா சும்மா என்க்கு காதல் இல்லன்னு சொல்லாத குயீன்” அவன் குரலில் பிடிவாதம் இருந்தது.

“ஓ அப்படியா? சரி நான் ஒன்று கேட்கிறேன் பதில் சொல். நீ வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் தானே? நீ ஒரு நாளாவது என்னை நீச்சல் உடையில் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறதா இல்லை கல்யாணம் தானே செய்து கொள்ளப் போகிறோம் என்று உனக்கு வரம்பு மீறி பழகத் தான் தோன்றியதா?” இவள் கேட்க

“அது எப்டி தோனும்? நான் ஆயிரம் தான் வெளிநாட்ல பிறந்திருந்தாலும் என்னையும் உன்னையும் வளத்தது இன்டியாவுல பொறந்த அதுவும் தமிழ்நாட்ல பொறந்த தங்கம் அம்மே தானே? அப்றம் நான் எப்டி அப்டியெல்லாம் யோசிப்பேன்?” இப்பொழுது ஒரு வித வலியுடனும் பெருமையுடனும் அவன் கேட்க

“அதுவும் சரி தான். அப்போது அவர்கள் வளர்த்த பையனென்றால் நீ கல்யாணத்திற்குப் பிறகு தான் அப்படி எல்லாம் நினைப்பாய் இல்லையா?
கல்யாணம் ஆகிவிட்டால் கணவனுக்கு மனைவியிடம் முழு உரிமை இருக்குமாம். அதாவது நீ இதுவரையில் என்னைத் தோழியாகத் தான் பார்த்த. ஆனால் மனைவி என்ற கண்ணோட்டத்தில் இனி என்னை வைத்துப் பார். நான் சொல்றது புரியுதா பபுல்? உன் மனைவியாக உன்னால் என்னை நெருங்க முடியுமா? உன்னால் அதை நினைத்துப் பார்க்கக் கூட முடி..." அவள் முழுதாக முடிக்கும் முன்


“வாய மூடு எரும!, இதுக்கு மேல் பேசினா அடி பின்னிடுவன். இதுவர நான் உன்னை அடிச்சது இல்ல” அவள் வாயைத் தன் கைகளால் மூடியவனின் கண்களிலோ ரௌத்திரம் மின்ன வார்த்தைகளோ துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் குண்டு என டமால் டமால் என வெடித்தது..

இங்கு இவளுக்கு கண்ணீரே வழிந்தது. அவளுக்குத் தானே தெரியும் அது ஆனந்தக் கண்ணீர் என்று! அவன் கையை விலக்கியவள் “நான் சொல்வதையே உன்னால் தாங்க முடியவில்லையே? பிறகு எப்படி டா?”

“பேசாதே என்றன் இல்ல?” என்று அதட்டியவன் அவள் முகத்தை இழுத்து தன் மார்பிலே அழுத்திக் கொண்டான் அந்த உத்தம நண்பன். “அப்ப உன்க்கு எப்போ தான் டா அன்பான வாழ்க்க கெடைக்கும்?” அவன் குரலில் அப்படி ஒரு துயரம்! அது தன் தோழியின் வாழ்வுக்காக துடிக்கும் துடிப்பு.

“ஆறு வயதிலிருந்து என்னைப் பார்க்கும் நீயே இப்படி துடிக்கிறாய் என்றால் என்னைப் படைத்த கடவுள் சும்மா விட்டுவிடுவாரா சொல்? நிச்சயம் ஒரு நல்ல அன்பான குடும்பம் எனக்கு கிடைக்கும் டா” இவள் உணர்ந்து சொல்ல, தோழியின் முகத்தை நிமிர்த்தி தன் இரு கைகளாலும் அவள் கன்னம் தாங்கியவன்,

“அப்போ அதுவரைக்கும் நான் உன் கூட தான் இருப்பன்” இவன் கெஞ்ச

“அதெல்லாம் முடியாது. உனக்கு ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப் போகிறேன். அதை அப்படி சொல்ல கூடாதோ? ம்ம்ம்... அன்றைக்கு சொன்ன மாதிரி என் சுமையை உன் தோளில் ஏற்றப் போகிறேன். அதுவும் இரண்டு தோளிலும் பாரம் தாங்குவாயா?” பழைய நந்திதாவாக இவள் அவனை”ச் சீண்ட

“அதெல்லாம் தாங்குவேன் தாங்குவேன். என் குயீன் குண்டச்சியோட வெயிட்டையே நான் தாங்குனேன். இதெல்லாம் ஜுஜுபி. சொல்லு அது என்னனு? இவனும் அவளை வார, அவனை முறைத்தவள் பின் முகத்தில் சோகம் இழையோட,

“தங்கம் அம்மே உண்மையாகவே என்னைப் பெற்றவங்க இல்லையென்று உனக்குத் தெரியும் தானே? என்னை வளர்க்க என் ஜமீன்தார் அப்பாவால் வேலைக்கு நியமிக்கப் பட்டவர். அவருடைய அண்ணன் மகள் தான் போதும்பொண்ணு. அவ பிறந்த உடனே அளுடைய அம்மா இறந்துவிட்டார். அப்பா தான் வளர்த்தார். பனிரெண்டாவது வரை படித்திருக்கிறாள்”

“ஏன்? அதுக்கு மேல அந்த மரமண்டைக்கு படிப்பு ஏறலையா?” இவன் இடை புக

“ப்ச்சு! நான் முழுதாக சொல்லி முடித்து விடுகிறேன். பிறகு நீ எதுவாக இருந்தாலும் சொல்” இவள் கண்டிப்புடன் சொல்லவும் தன் விளையாட்டுத் தனத்தை விட்டான் பபுல்.

“அவள் வாழ்க்கையில் அப்படி ஒன்று நடக்கவில்லையென்றால் நிச்சயம் படித்திருப்பாள். என்ன சொல்வது? மரணப்படுக்கையிலிருந்த ஒருவரின் விருப்பத்தாலும் பிடிவாதத்தாலும் அவள் வாழ்வே போய்விட்டது. அவள் பாட்டி படுத்த படுக்கையாகிவிட, இறப்பதற்கு முன் தன் பேத்தி கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட, தூரத்து சொந்தத்தில் ஒருவனை அவசரமாகப் பிடித்து கல்யாணம் செய்து வைத்தார்கள்.

கல்யாணத்தைப் பார்த்த திருப்தியில் அந்த பாட்டி அன்றே இறந்து விட, அதன் பிறகு பாட்டிக்கு காரியம் நடந்து முடிய, அன்று ஆற்றில் குளிக்கப் போய் ஆற்றோடு போய்விட்டான் இவளைக் கட்டியவன். பாவம்! சின்னப் பெண் என்று கூட யோசிக்காமல் அந்த பிஞ்சிலேயே அவளுடைய பூவையும் பொட்டையும் எடுத்து மூலையில் உட்கார வைத்து விட்டார்கள்.

இது என்ன அநியாயம் பபுல்? வாழ்க்கையை வாழ ஆரம்பிக்காத பெண்ணுக்கு கூட சாங்கியம் சம்பிரதாயம் என்று சொல்லி இப்படி ஒரு அநியாயம் செய்ய எப்படி மனது வந்தது? எத்தனை பெரியார் வந்தாலும் இப்படிப் பட்ட கொடுமையிலிருந்து பெண்களுக்கு விடிவே இல்லையா? இதுக்கு ஆரம்பம் யாரென்று தேடி இதை முற்றிலும் ஒழிக்க நான் சென்ற பாதை எதுவுமே எனக்கு முடிவைக் கொடுக்கவில்லை. இனி வரும் தலைமுறைகளாவது ஒவ்வொரு தாயும் மாமியாரும் தன் மகள் மருமகளுக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்க விடமாட்டேன் என்று மனதால் உறுதி எடுத்து அதில் பிடிவாதமாக இருந்து செயலில் காட்டினால் தான் இதற்கு விடிவு.

பெண்ணுக்குப் பெண் தான் எதிரி என்ற சொல்லைத் தகர்த்து எறிந்துவிட்டு நாங்கள் அப்படி இல்லையென்று ஏன் ஒவ்வொரு பெண்ணும் நிரூபிக்கக் கூடாது?” போதும்பொண்ணில் ஆரம்பித்து அவளுடைய ஆத்திரம் கோபம் இயலாமை கேள்வி ஆதங்கம் எல்லாவற்றையும் தன் தோழனிடம் கொட்டினாள் நந்திதா.

“இந்த கொடுமையை எல்லாம் பார்த்ததாலோ என்னவோ அன்றே இவள் அப்பா இறந்து விட்டார். மாமியார் வீட்டில் இருந்தவளை அம்மே இந்தியா வந்த போது பார்த்துப் பேசி இங்கே அழைத்து வந்துவிட்டார். இவள் மாமியாரும் இவளுடைய வாழ்க்கை நன்றாக இருந்தால் போதுமென்று இப்போது நினைக்கிறார். இப்போது அவள் இஞ்சினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அவள் தான் நான் உனக்குப் பார்த்திருக்கும் பெண். அவளைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா பபுல்?” இவள் ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்க,

“ஓ மை காட்! அந்த கருப்பிய போய் நான் கட்டிக்கணுமா? ஐயோ! சும்மா கோல்ட் மாதிரி தக தகன்னு மின்னுற எனக்கு அந்த கருப்பியா?ஜீசஸ் இப்படி செய்வார்னு தெரிஞ்சிருந்தா கனடால இருக்கும்போதே யாராவது ஒரு ஹாலிவுட் பியூட்டிய மேரேஜ் பண்ணியிருப்பேன். பர்லோகத்தில் இருக்குற என் ஜீசஸ்! என்ன ஏன் இப்டி சோதிக்கிற?”

அவன் இன்னும் ஏதேதோ பேச, அவன் வாயை மூடியவள், “காட்டெருமை! ஏன் டா கத்துகிறாய்? நான் சொன்னது என்ன அதை விட்டு நீ இந்த விஷயத்துக்கு கஷ்டப் படுகிறாய்?” என்று கேட்ட படி இவள் நாலு அடியையும் சேர்த்துப் போட, அவள் கையை விலக்கி இரண்டு கையையும் பிடித்துக் கொண்டவன்

“அந்த விஷயம்லா ஒரு விஷயமா? என் குயீன் சொன்னா நாளு கொழந்தைய பெத்த நாப்பது வயசு ஆன்ட்டிய கூட மேரேஜ் பண்ணிப்பேன். பரவாயில்ல நான் டாக்டர் என் பொண்டாட்டி இஞ்சினீயர். நல்லா தான் எனக்கு பொண்ணு பாத்திருக்க” இவன் மறைமுகமாக தன் சம்மதத்தைச் சொன்னவன், “பட்…” என்று சொல்லி நிறுத்த,

“என்ன பபுல்? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்” என்று நந்திதா கவலைபட

“ஒன்னுமில்ல குயீன்! என்ன தான் இது லவ் இல்லனு நீ சொன்னாலும் என்க்கு இது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. சின்ன வயசுலிருந்து உன்னத் தான் மேரேஜ் பண்ணப் போறேனு மைண்ட் செட்ல இர்ந்துட்டேன். இப்ப சடனா நீயில்ல வேற பொண்ணுனு சொல்ற. சோ என் மைண்ட் சேஞ்ச் பண்ண கொஞ்சம் டைம் குடு. அப்ப தான் என்னால அவகூடயும் ப்ரீயா பழக முடியும். ஓகே… வா… ஆர் யூ ஹேப்பி நவ்? சீயர் அப் குயீன்!” என்று அவன் உற்சாகமாகச் சொல்ல,

“அப்போது நான் சொன்னதால் தான் கட்டிக்கப் போகிறாயா?” இவளிடம் நெருடல்.

“அப்டி எல்லாம் சொல்லாத குயீன். ஐ பிலீவ் மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவன். யார்க்கு யார்னு நாம டிசைட் பண்ண முடியாதுனு தெர்யும். சோ நமக்கு யார் வர்றாங்களோ அவங்கள லவ் பண்ணா பிராப்ளம் சால்வ்டு. ஜீசஸ் என் தலைல அந்த… வாட் டு யூ சே குயீன்? ஹாங்… பஜாரி! அந்த பஜாரிய கட்டிட்டார். சோ அந்த வாயாடி மங்கம்மா பேச்சை காலம் ஃபுல்லா பேச விட்டு கேக்கணும்னு என்க்கும் ஆசை வந்துச்சு. நான் அவ கிட்ட பேசணும் குயீன். எல்லாத்துக்கும் மேல உன்க்கு ஒரு நல்லது நடக்காம எங்க மேரேஜ் நடக்காது” அவன் உறுதியாய் சொல்ல

“பாருடா! என்னமாய் தத்துவம் எல்லாம் சொல்கிறாய்! நீ இதற்கு சம்மதித்ததே எனக்கு மிகவும் சந்தோஷம். மற்றபடி என்னுடைய திருமணம் பற்றி பிறகு பார்க்கலாம் டா” என்ற சொல்லுடன் அவன் மடியில் தலை சாய்ந்தாள் நந்திதா.


அப்பா அம்மா கணவன் பிள்ளைகள் கிடைப்பது தான் ஒரு பெண்ணுக்கு வரமென்று யார் சொன்னது? நல்ல நட்பும் வரம் தான்! அதிலும் இப்படி ஒரு ஆண் தோழன் கிடைப்பதும் வரம் தான்! அந்த வரம் அவளுக்கு கிடைத்திருப்பதாக நினைத்தாள் நந்திதா.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN