உறவாக வேண்டுமடி நீயே14

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 14


அங்கு நந்திதாவின் நிலையோ இதை விட மோசம். அவன் காதலை உணரவில்லை என்றால் இவள், ‘காதலே இல்லாத இப்படி ஒரு திருமண வாழ்வு தனக்கு தேவையா? என்று தான் நினைத்தாள். அவன் விரும்பியோ இவள் விரும்பியோ இந்த திருமணம் நடக்கவில்லையே? அன்று கோபத்தினால் நடந்த கட்டாய திருமணம் என்றால் இன்று வேணியை வைத்து நிர்பந்தத்தால் நடந்த கட்டாய திருமணம்! அவ்வளவு தான். ஒருவேளை அபி, வேணி விஷயத்தை எடுத்துச் சொல்லி பேசிப் புரியவைத்து பிறகு இந்த திருமணம் நடந்திருந்தால் அவளுக்கு மனதில் ஏதோ ஒரு மாற்றம் வந்திருக்குமோ என்னமோ?

அபி செய்த தப்பின் வெறுப்பால் அன்றும் சரி இன்றும் சரி அபியின் மேல் நந்திதாவுக்கு காதல் இல்லாமால் போனது. அதாவது அவள் அப்படி நினைத்தது தான் ஜெயிக்க எதுவும் செய்வான் என்ற எண்ணம் தான் இந்த திருமணத்தால் வலுப் பெற்றது அவளுள். இது இயற்கையே! நல்ல முறையில் அறிமுகம் ஆகாத ஒரு ஆணை ஒரு பெண்ணால் வேறு எப்படி நினைக்க முடியும்? அவன் வீம்பிலும் இவள் கோபத்திலும் இருக்கும் வாழ்க்கையின் அடுத்த நிலை தான் என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்…

திருமணம் முடிந்து ஒரு வாரம் சென்றிருக்கும். ஒரு நாள் அபி தன் வேலைகளை சீக்கிரம் முடித்து கொண்டு வீட்டுக்கு வர, துருவனும் வேணியும் நீச்சல் குளத்தை அதகளப் படுத்திக் கொண்டிருந்தார்கள். அபியைப் பார்த்ததும் வேணி அவனிடம் வரப் பார்க்க, அதை உணர்ந்தவன் “பிரின்சஸ்! அப்பா இப்போ தான் வந்தேன். சோ நான் போய் ஃபிரெஷாகி வருவேனாம். அதற்குள்ள நீங்களும் ஃபிரெஷ்ஷாகிட்டு வந்துடுவீங்களாம் என்ன? என்று சொல்லிச் சென்றவன் அதன் படியே வர,

அவன் வருவதற்குள் வேணியைக் குளிக்க வைத்து வேறு உடையில் அழகாய் அவள் மாறியிருக்க, மகளைப் பார்த்து ரசித்தவன் பாரதியிடம், “நன்றி பாரதி!” என்று வாய் மொழியாகவே சொல்ல, அதை ஒரு முறுவலுடன் ஏற்றுக் கொண்டவள் வேணிக்கு ஜூஸ் எடுத்து வர உள்ளே சென்றாள் அவள்.

“எங்க வீட்டுப் பெண்ணை நாங்க பார்த்துக்க நன்றியா? நல்லா இருக்கு டா நீ சொல்றது. அம்மாவும் அப்பாவும் ஆளுக்கொரு இடத்தில் இருந்துகிட்டு பணம் சம்பாதிங்க. இதிலே நன்றியாம் நன்றி!” இப்போதெல்லாம் மேகலை நேரம் கிடைக்கும் போது எல்லாம் மகனைக் கொட்டிக் கொண்டேயிருந்தார். அவருடைய ஆதங்கம் அவருக்கு. ‘இவனும் வான்னு கூப்பிட மாட்டேங்கிறான் அவளும் வர மாட்டேங்கிறா. இப்படியே இருந்தா எப்படி?’ என்ற ஆதங்கம் அவருக்கு.

“ம்மா...” என்று அபி தாயிடம் ஏதோ சொல்ல வர, அதற்குள் வேணி அவன் இடுப்பைச் சுற்றித் தன் இரு கால்களையும் படர விட்ட படி அவன் மடி மீது ஏறி அமர்ந்தவள் அவன் தாவடையைப் பிடித்து தன்னைப் பார்க்கும் படி முகம் திருப்பியவள் “அபிப்பா.... இந்த சித்தப்பாவை திட்டுப்பா” என்று கட்டளை இட, மகளின் உரிமையான சித்தப்பா! என்ற அழைப்பிலும் தன்னிடம் உரிமையுடன் சொல்வதிலும் உள்ளம் குளிர்ந்தவன்.

மகளிடம் எதையும் திணிக்காமல் இயல்பாய் அவள் தன்னையும் தன் குடும்பத்தையும் ஏற்க வேண்டும் என்று இவன் நினைத்திருக்க, இது தம்பியும் அவன் மனைவியும் பார்த்த வேலை என்று உணர்ந்தவன், ‘இதற்கு தான் ஆபீஸிலிருந்து சீக்கிரம் வந்தியாடா?’ என்பது போல் கண்ணாலேயே இவன் கேட்க, ‘நான் இல்லைப்பா! எல்லாம் மணிமேகலையின் திருவிளையாடல்!’ என்று அவனோ தாயைக் காட்டி கண்ணாலேயே பதில் தர, அதற்குள் ‘அபிப்பாஆஆஆஆஆ!’ என்று பொறுமையிழந்து அழுத்தி அழைத்து தந்தையைத் தன் திசை திருப்பியிருந்தாள் வேணி.

“வாட் மை பிரின்சஸ்?” இவன் கேட்க

“சித்தப்பாவை திட்டு” இவள் மறுபடியும் அதே சொல்ல

“ஏன் டா?”

“என்ன வெள்ளாவில் வைத்து தான் வெளுக்கணும் சொல்லறாங்க ப்பா! என்று மகள் புகார் படிக்க, அதே நேரம் பாரதி ஜூசைக் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி மகளுக்குப் புகட்டியவன், “அப்படியா?” என்று கேட்டு விட்டு இவன் தம்பியைப் பார்க்க,

“ஹேய் ராங்கி ரங்கம்மா! நான் மட்டுமா அப்படி சொன்னேன்? நீயும் தான் என் பொண்டாட்டியை அப்படி சொன்ன!” என்று துருவன் போலியாய் எகிற, ஜூசை ஒரு மிடறு குடித்தவள் பின் தந்தையின் டிஷர்ட்டில் உரிமையாய் உதடு ஒற்றி விட்டு தன் பாப் கட்டிங் முடியை இடது கையால் ஒதுக்கிய படி,

“பின்ன என்ன மாதிரி (நிறம்) தான சித்தி? அப்ப அவங்களையும் தான் வெள்ளாவில வெக்கணும்!” பதிலுக்கு இந்த வாண்டு அவள் சித்தப்பாவிடம் எகிற, துருவனுக்கு சிரிப்பு வந்தது.

அதை அடக்கியவன், “ஹேய் ராங்கி! என் பொண்டாட்டி ஒண்ணும் உன்னை போல கருப்பு இல்லை. அவ வெள்ளை கலரு! தெரியுமா?” என்று துருவனே பதில் தர

“யூ ஆர் பேட் பாய் சித்தப்பா! பொய் சொல்றவங்க எல்லாம் பேட் பாய்! சித்தி என்ன மாதிரி தான். என் பேர் ரங்கம்மா இல்ல. மை நேம் இஸ் திருவேணி அபிரஞ்சன்!” என்று அந்த வாண்டு அழுத்திச் சொல்ல, மகளின் மொழியில் அவளை அணைத்து உச்சி முகர்ந்தான் அபி.

“அண்ணா உன் பொண்ணுக்கு ராங்கி ரங்கம்மானு பேரு வைத்திருக்கக் கூடாது ணா. பஜாரின்னு வைத்திருக்கணும் ணா. என்னமா என் கிட்ட வாயடிக்குது இந்த வாண்டு!” என்று துருவன் வம்பிழுக்க, அபிக்குப் புரிந்தது. துருவன் வேணியைச் சீண்ட, அதற்கு மகள் பாரதியைச் சீண்டியிருக்கிறாள் என்று! அவன் முகத்தில் புன்னகை விரிந்தது.

“வெவ்வவ” என்று தன் சித்தப்பாவுக்கு அழகு காட்டியவள் அப்பனின் நெஞ்சில் தலை சாய்த்து “அபிப்பா... இனிமே டெய்லி இப்டி வருவியா?” சீக்கிரம் வருவாயா என்பதாக கேட்க, மகளின் உச்சந்தலையில் தன் கன்னம் பதித்தவன் “எஸ் டா பிரின்சஸ்” என்று உறுதி அளிக்க,

“அப்ப இன்னிக்கி நான் சித்தி சித்தப்பா விளையாடின மாதிரி டெய்லி நீ நான் அம்மா வெளாடலாமா ப்பா?” என்று கண்ணில் எதிர்பார்ப்புடன் கெஞ்ச, மற்றவர்கள் சொல்லிக் கொடுத்துக் கேட்டாலும் மகளின் குரலில் ஏக்கத்தையும் ஆசையையும் உணர்ந்தவனோ, “நிச்சயம் விளையாடலாம் டா பேபி” என்று வாக்கு கொடுத்தவனின் மனதிற்குள்ளோ அதை எப்படி எப்போது செய்வது என்ற கணக்குகள் உருவானது.

வேணி தினமும் இவன் வீட்டிற்கு வர, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அபியும் நேரத்தோடு வீட்டுக்கு வர, தந்தைக்கும் மகளுக்குமான நெருக்கம் அதிகமானது. அவனை அப்பா என்று மேகலை அழைக்க சொல்ல எனக்கு அபிப்பா தான் பிடித்து இருக்கு என்னிடம் வேணி அறிமுகம் ஆனதே அந்த அபிப்பா என்ற வார்த்தையால் தான் அதனால் மகள் இப்படியே அழைக்கட்டும் என்று சொல்லி விட்டான் அவன். வீட்டில் அதிக நேரம் இருந்ததால் மகளின் அழுகை கோபம் பிடிவாதம் கொஞ்சல் சிரிப்பு ஏக்கம் ஆசை எல்லாம் அத்துப் படி ஆனது அபிக்கு.

இதற்கிடையில் ஒரு நாள் அபிக்கு ஜுரம் வர, வைரஸ் ஜூரம் இல்லையென்றாலும் இரண்டு நாள் அவனைப் படுக்கையில் விழ வைத்தது அது. அப்பொழுதும் நந்திதா அவனை அழைத்து நலம் விசாரிக்கவோ வந்து பார்க்கவோ இல்லை. அபியும் அதை எதிர் பார்த்தவனாக இருக்கவில்லை. ஆனால் இருவரின் தாய்க்கும் தான் மறுபடியும் அடித்துக் கொண்டது. நந்திதாவுக்கு முறைப்படி அபி மறுபடியும் கோவிலில் வைத்து தாலி கட்டியதிலிருந்து தங்கம் மகளிடம் முதல் முறையாக அதட்டியும் கெஞ்சியும் எப்படி எல்லாமோ எடுத்துச் சொல்லிப் பார்த்து விட்டார். ஆனால் நந்திதா அசைந்த பாடில்லை. இதோ, அபிக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும் போய் பார்க்காமல் இருக்கும் மகளிடம் பேசாமலிருந்து போர்க்கொடியைத் தூக்கினார் அவர்.

இந்த இரண்டு நாட்களாக நந்திதா அவரிடம் பேச நெருங்க, அவர் விலக, தாயின் பாராமுகத்தை ஏற்க முடியாமல் தவித்தாள் அவள். அவளுடைய நேரமோ என்னமோ அவளுடைய கம்பெனியில் முக்கியமான மெஷின் ஒன்று பழுதாக, அதை சரி செய்ய ஆட்கள் வட நாட்டில் இருந்து வரவிருப்பதால் அதை மேற்பார்வையிட இவள் கம்பெனியிலேயே தங்க வேண்டி வந்தது.

இவளுக்கென்று ஒரு ஸ்டார் சூட் அறை இருப்பதால் அதில் ஒன்றும் அவளுக்கு சிரமமோ இப்படி தங்குவது புதிதோ இல்லை. அதனால் இவள் தங்கம் பேசாததால் போதும்பெண்ணிடம் விஷயத்தைச் சொல்லி அவள் அவரிடம் சொல்ல, தங்கத்திற்கு இவ்வளவு நாள் இல்லாத கோபம் மகள் மேல் வந்தது. அதே கோபத்துடன் கிளம்பி இவர் அவள் எதிரே வந்து நிற்க,

“வாங்க அம்மே! நீங்க வேணியைப் பார்த்துக்குவீங்கனு தானே நான் இங்கே தங்கியிருக்கேன். நீங்க இப்போ எனக்குத் துணையா இங்க வந்தா எப்படி? இது மாதிரி நான் தங்குவது என்ன புதுசா?” என்று நந்திதா தாயை வரவேற்று கேட்க,

“சத்தியமாயிட்டு ஞான் நிங்களோட அம்மே தான ராணிமா?”

“அம்மே!” இவள் ஏதோ சொல்ல வர,

“அது சத்தியமெங்கில் நிங்கள இங்கன செய்யுமோ? என்ட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்திருக்கும் இல்ல? அவள் பேச இடமே கொடுக்காமல் பேசியவர், “அ தம்பி செய்யினது தெட்டுதான். ஞான் அது சரினு பரயில்லா. பட்சே இனி சம்சாரிக்க ஞான் தயாரில்லா. அப்போ அ தாலிய மறச்சு சுமக்க காரணம் நிங்களோட தன்மானம். இப்போ அத சுமக்க வேணி காரணம். நாளய என்ட பேரக்குட்டியண்ட ஜீவிதம் காட்டிலும் எனிக்கு என்ட மகளோட ஜீவிதம் பிரதானம்.

ஷமிக்க முடியாத குற்றமோ அனுசரிக்க முடியாத பந்தமோ இ லோகத்தில் இல்ல ராணிமா! நிங்களோட அச்சனை மாத்ரம் ஷமிக்க முடியும். பட்சே அபிம மாத்ரம் ஷமிக்க முடியல. சரி… முடியும் முடியாதுனு நிங்கள ரண்டு பேரும் சம்சாரிச்ச பிறகு தீர்மானிக்கனும் கேட்டியோ? எனிக்கு ஒரு தீர்மானம் வேணம் ராணிமா! இங்கனயானு நிங்கள் ஜீவிதம் தொடருமெங்கில் வேணியை அவ தாத்தா கிட்ட விட்டுடுங்கோ.

அச்சனோட பாசத்துக்கு ஏங்கின நிங்கள போல் வேணியும் கஷ்டப்படும். நிங்களோட பிடிவாதம் கொண்டு நிஷ்சயம் வேணி மற்றொரு யுகநந்திதாவாய் வரும். அப்போல் நிங்களோட இஷ்டம். இ அம்மேக்கா கூட சம்சாரிக்க மாட்டீங்களா ராணிமா?” என்று அவர் இறுதியாக முடிக்க, நந்திதாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

‘தாய் சொல்வது போல் அபியிடம் பிடிவாதத்தை தவிர என்ன குணம் அப்படி தவறாய் இருக்கு? பபுலு கூட அபியை விசாரித்து ‘பெண்கள் விஷயத்தில் அவர் சொக்கத் தங்கம்.. என்ன கோபம் தான் அதிகம் வரும்… மற்றபடி எந்த கெட்டப் பழக்கமும் இல்ல… உன் வாழ்வை நீ அவரோடு வாழ நினைத்தா எனக்கு சந்தோஷம்!’ என்று தானே அன்று சொன்னான்’ என்று யோசித்தவளின் மனமோ ஒரு பக்கம் அம்மே மறு பக்கம் மகள், ஏதோ ஒரு மூலையில் மகன் செய்தது தப்பே என்றாலும் அவன் வாழ்வை சீரமைக்கத் துடிக்கும் தாய் மேகலை. இப்படி மூன்று பேரும் மூன்று இடத்திலிருந்து எனக்காக பல்லக்கைத் தூக்க நினைத்தாலும் நான்காவது இடத்தில் நிற்க வேண்டிய அபி மட்டும் அதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லையே என்று நினைத்தவள்.

“அம்மே நீங்க வீட்டுக்குப் போங்க. வேணி உங்களைத் தேடுவா” நந்திதா சொல்லிப் பார்க்க,

“நிங்களுக்கு நிங்களோட மகள் முக்கியமெங்கில் எனிக்கு என்ட மகள் முக்கியம் ராணிமா” அவரும் பிடிவாதமாய் நிற்க, எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவரின் பாசத்தில் கண் கலங்கியது நந்திதாவுக்கு. இரவு பத்தரை மணிக்கு தான் மெஷின் ரிப்பேர் செய்யும இஞ்சினீயர்கள் வருவார்கள் என்பதால் எட்டரைக்கெல்லாம் தங்கத்திற்கு உணவையும் மாத்திரையும் கொடுத்து தூங்கச் சொன்னவள் இவளும் உணவு உண்டு விட்டு இவள் வாழ்வில் நடந்ததையும் இப்போது தங்கம் பேசியதையும் அசைபோட்ட படி அங்கிருந்த காரிடாரில் நடந்து கொண்டிருந்தாள் நந்திதா. இங்கு இப்படி என்றால் இதோ அபி வீட்டில்…

இரண்டு நாட்களாக படுக்கையிலே இருந்தவனுக்கு உடல் ரொம்ப சோர்வாக இருக்க, அபி அவன் அறையை ஒட்டிய பால்கனியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து மாலை நேர சூரிய மறைவையும் இதமான தட்ப வெப்பத்தில் வீசிய குளிர் காற்றையும் ரசித்து அனுபவித்த படி அமர்ந்திருக்க, கையில் ஜூஸ் டம்ளருடன் அவன் முன்னே வந்து நின்றார் மேகலை.

“என்ன ப்ப, அதற்குள்ள எழுந்துட்ட? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாம் இல்ல?” என்றபடி அவர் ஜூசைக் கொடுக்க, அதை வாங்கிக் குடித்தவன்

“ம்மா... போதும். இரண்டு நாளா எனக்கு அது தான் வேலையே!” சலித்த படி சொன்னவன் “இந்த துருவன் தொழிலைக் கத்துக்கிட்டாலும் கத்துக்கிட்டான், என்ன ஒரு வேலையும் செய்ய விடமாட்டேங்கிறான் ம்மா!” தம்பியை நினைத்து இப்பொழுது குரலில் பெருமிதம் இருந்தது. “ஆனாலும் இந்த இரண்டு நாள் எதைப் பற்றியும் யோசிக்காம யாருக்கும் பதில் சொல்லாம என் அம்மா கையால் சாப்பிட்டு தூங்கி எழுந்தேன் பார் சொர்க்கம் மா… ம்ம்மாஆ... வாட் எ லைஃப்!”அவன் குரலில் நிம்மதியும் சந்தோஷமும் ஒருங்கே ஒலித்தது.

மகன் தலையைக் கோதியவர், “இனிமே வாரத்துக்கு ஒரு நாள் உன் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்கு அபிப்பா” அந்த குடும்பம் என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்த படி அவர் சொல்லி விட்டு விலக நினைக்க,

தாயின் கையைப் பிடித்து இழுத்துத் தன் பக்கத்தில் அமரவைத்து அவர் மடியில் தன் தலை சாய்த்து அவர் கைப் பிடித்து வலுக்கட்டாயமாகத் தன் சிகை கோத வைத்தவனோ, “ம்... இப்போ சொல்லுங்க, என்கிட்ட என்ன சொல்ல வந்தீங்க? என்ன கோபம் உங்களுக்கு?” என்று இவன் கேட்க, மகன் கேட்டதும் அவர் மறுக்கவும் இல்லை எதுவும் சொல்லவும் இல்லை. அவர் அமைதியாய் இருக்க,

“ம்மா” என்று இவன் உந்த

“நீ செய்தது சரின்னு நினைக்கிறியா அபிப்பா?” அவன் எழுந்து அமர பார்க்க, அதைத் தடுத்தவர்,

“நீ நந்திதாவுக்கு செய்ததை பத்தி தான் நான் கேட்கிறேன். சரினா அதற்கான உன் நியாயம், தவறுனா அதற்கான உன் மன்னிப்பு எங்க? இது இரண்டுமே உங்க இருவருக்கான விஷயம். அதை நான் கேட்கல. நீங்க இருவருமே பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எல்லோருக்கும் தெரிய நீ உங்க கல்யாணத்தை மறுபடியும் நடத்தின பிறகு நீ உன் மனைவியை வீட்டுக்கு வான்னு கூப்பிட்டு இருக்கலாமே? அது தான் தங்கத்துக்கு வருத்தம்.

எதுவோ ப்பா! ஒரு தாயா ஒரு பெண்ணா நீ நந்திதாவுக்கு செய்ததை என்னால ஜீரணிக்கவே முடியல. இந்த உலகத்துல ஒரு பெண் கல்யாணம் ஆகாம கடைசிவரை இருக்கலாம் ஏன் வாழவும் முடியும், ஐயோ! முதிர்கன்னியா இவங்கன்னு எல்லோரும் பரிதாபமாகத் தான் பார்ப்பாங்க. ஆனா அதே பெண் கழுத்தில் தாலி இருந்தும் புருஷன் கூட இல்லனா அதே சமுகம் பார்க்கிற பார்வையும் நினைக்கிற நினைப்பும் வேற அபிப்பா! குடும்ப வாழ்வில் வாழ்ந்தவ தானே அதை மறக்கமு…” மேற்கொண்டு சொல்ல முடியாமல் அவருக்குத் தொண்டை அடைக்கவும், கூடவே அவர் கண்ணிலிருந்து வந்த சூடான கண்ணீர் அவன் கண்ணோரத்தில் விழுந்தது.

“அம்மா!” என்று பதறி எழுந்து தாயைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான் அபி. இரும்பு மனுஷியாய் இருந்தவர். அவனுக்கு விவரம் தெரிந்து இன்று தான் அவன் முன் கண்ணீர் விடுகிறார். அது இத்தனை நாள் அவர் அனுபவித்த வலி வேதனை கஷ்டத்தை அவனுக்கு உணர்த்தியது. ‘எத்தனை நாள் இவர் இதையெல்லாம் மறைத்து தனிமையில் தானே கண்ணீர் விட்டிருப்பார்!’ என்று நினைத்தவனின் ரத்தமோ கொதித்தது. ஒரு மகனாய் அவனுக்கு கண்கள் கலங்கியது.

“ஆனா அதை நீ இன்று என் மருமகளுக்கும் கொடுத்துட்டியே அபிப்பா!” அவர் குரலில் அப்படி ஒரு வலி! ‘நான் வளர்த்த பிள்ளை, நீ இப்படி செய்யலாமா?’ என்ற கேள்வியும் அதில் இருந்தது.

அவனால் என்ன சொல்ல முடியும்? சின்ன வயதிலிருந்து பிடிவாதம் பிடிக்கும் அவன் குணத்தை சொல்லுவானா இல்லை எதிரி என்று வந்தால் பாரபட்சம் பார்க்காமல் மூர்க்கத்தனமாக வந்து நிற்கும் அவன் வெறியைச் சொல்லுவானா இல்லை அறியக் கூடதாத வயதில் தன் தந்தை மூலமாகவே சில பெண்களின் குணத்தை அறிய நேர்ந்த தன் துரதிருஷ்டத்தைச் சொல்லவானா? எதைச் சொல்லி தான் செய்ததைத் தன் தாய்க்கு புரியவைப்பான்?

இதே வார்த்தையை வேறு யார் கேட்டிருந்தாலும் ஏன் நந்திதாவே கேட்டிருந்தாலும், நீ யார் என்னைக் கேட்க? நான் இப்படி தான் என்ற பதிலோடு விலகியிருப்பான். ஆனால் இன்று கேட்பது தாயிற்றே! அதிலும் நீயா இப்படி என்று வருந்துபவரிடம் என்ன சொல்லுவான்?

இப்பொழுது மகளாய் அவரைத் தன் மடி தாங்கி அவர் தலையை வருடியவன், தாய் கேட்டது அனைத்துக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்றாலும், “கல்யாணம் தான் அவ விருப்பம் இல்லாம நடந்தது. நம்ப வீட்டுக்கு வருகிறதாவது அவ விருப்பபட்டு வரணும் தான் ம்மா நான் அவளை பிடிவாதமா கூப்பிடல” என்று இவன் விளக்க, எழுந்து மகன் கன்னங்களைத் தன் இரு கைகளிலும் தாங்கியவர்,

“எனக்குத் தெரியும் அபிப்பா. என் வளர்ப்பு என்னைக்கும் தவறா போகாது. நீ நல்லவன் தான் டா! என்ன? கொஞ்சம் இல்ல ரொம்பவே பிடிவாதம் பிடிப்பவன்” என்று சொல்லி அவர் சிரிக்க, அந்த சிரிப்பு இவன் உதட்டிலும் பரவிய நேரம், அழகான இன்னிசையுடன் அபியின் போன் ஒளிர்ந்தது. யார் என்று பார்த்தவனுக்கு முகத்தில் இன்னும் புன்னைகை விரிய, “ம்மா... உன் பேத்தி தான். அவ அம்மா போனிலிருந்து இருந்து கூப்பிடுறா” என்க,

“பாவம் ப்பா குழந்தை! நீ ஜுரமா இருந்ததுல இருந்து அவளை வர வேணாம்னு சொல்லிட்ட. உன்னை காணாம தேடுறா போல. பேசு டா” என்றவர் கீழே செல்லத் திரும்ப,

“ம்மா இருங்க. நீங்களும் பேசுங்க” என்று சொல்ல, வந்த அழைப்பு நின்று போனது. “பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. துருவனும் பாரதியும் வெளியே போனவங்க இன்னும் வரல. நைட் டின்னருக்கு எல்லாம் ரெடியானு பார்க்கப் போறேன். நீ பேசுடா” என்றவர் விலகி விட, இவன் நாம் அழைப்போமா என்று நினைத்து கால் பட்டனை அழுத்துவதற்குள் மறுபடியும் அவனுக்கு அழைப்பு வர, அதை அட்டன் செய்தவன் எதிரில் இருப்பவருக்கு ஹலோ சொல்லக் கூட அவகாசமே கொடுக்காமல்

“சொல்லு டா மை பிரின்சஸ்!” என்று இவன் கொஞ்ச, அதைக் கேட்ட நந்திதாவுக்கு உடலில் மின்சாரமே பாய்ந்தது.

‘இவ்வுலகில் எல்லா தந்தையும் தம் மகளை இப்படி தான் கொஞ்சி அழைப்பாங்களா? இந்த வினாடி நானும் உன் மகள் தான்! நீ என்னைக் கொஞ்சு. நான் அதை ஆசை தீர கேட்கிறேன்’ என்று மனதால் நினைத்தவள், கண்கள் கலங்க அப்படியே அமைதியாக இருந்தாள் தந்தை பாசத்திற்காக ஏங்கிய அந்த பேதை. மனைவி மட்டும் தான் கணவனுக்குத் தாயாக முடியும் என்று யார் சொன்னார்கள்? இதோ இங்கு கணவனும் தந்தையானான் தன் மனைவிக்காக!

“என்ன டா அமைதியா இருக்க? அப்பா மேல கோபமா அம்முக்குட்டி?” என்று இவன் மறுபடியும் கொஞ்ச, நந்திதாவின் கண்ணில் தேங்கிய கண்ணீர் இமை தாண்டி உருண்டது. எப்போதும் நந்திதா பேச மாட்டாள். அவள் போனிலிருந்து வேணி தான் இவனிடம் பேசுவாள். அதுவும் இந்த நேரத்தில் என்னும் போது அழைத்தது மகள் என்றே அபி நினைத்தான். “ஹலோ செல்லம்” என்று இவன் மறுபடியும் ஆரம்பிக்க,

“நான் நந்திதா” என்றாள் எந்த ஒரு வலியையும் காட்டிக் கொள்ளாத குரலில். ஏதோ முதல் முறையாக இப்போது தான் பேசுவது போல் இருவருக்குள்ளும் ஒரு தயக்கம். அதுவோ ஒரு வினாடி அமைதியைத் தத்து எடுத்தது.

“ஓ! என் பட்டத்து ராணியா? சொல்லுங்க ஜமீன் ராணி” என்று இவன் இலகுவாய் ஆரம்பிக்க, அவளிடம் சிறிய கோபத்துடன் கூடிய அதே அமைதி.

“பேச வந்து விட்டு என் மகாராணி இப்படி இருந்தால் உங்கள் மகாராஜா நான் என்ன செய்வது?” மறுபடியும் இவன் சீண்ட, அவள் பல்லைக் கடிக்க, அது இந்த பக்கம் இருந்தவனுக்கு நன்றாகவே கேட்டது. மனதிற்குள் உல்லாசம் பொங்க அதில் இவன் “ஹஹ் ஹா” என்று வாய் விட்டே சிரிக்கவும்,

கடுப்பானவள், “உங்களுக்கு ஜுரம்னு சொன்னாங்க” என்று ஆரம்பித்து நிறுத்த,

“ஆமாம் ஜுரம்” இவன் அதையே சொல்லி நக்கல் பண்ண,

‘உன்னைப் போய் விசாரிக்க வந்தேன் பாரு’ என்று கடுப்பானவள், “உங்களுக்கு எல்லாம் சாதாரண ஜுரம் வந்திருக்கக் கூடாது...”

அவள் முடிப்பதற்குள், “ஏன் கொரோனா ஜுரம் வந்து இருக்கணும்னு நினைக்கிறியா?” பட்டென்று இவன் கேட்டு விட, மறுபடியும் அவளிடம் அமைதி. ஏன் என்று யோசித்தவனுக்கு சொன்ன வார்த்தையின் வீரியம் புரிய, அந்த நிலையை மாற்ற நினைத்தவன், “என் மகள் தூங்கியாச்சா? எங்க சத்தத்தே காணோம்?” என்று இவன் கேட்க,

அதைப் புரிந்து கொண்டவள் “தூங்கியிருக்கலாம்” என்று பதில் தர

“இருக்கலாமா? அப்போ நீ எங்கே இருக்க?” இவ்வளவு நேரமிருந்த இலகுத் தன்மை மறைந்து இப்போது அவன் குரலில் கூர்மை இருந்தது.

“ஆபீஸில்” என்று ஆரம்பித்து இங்கு தங்குவதற்கான காரணத்தை இவள் சொல்ல,

“சரி நீ கிளம்பு” என்றவன் அவன் பி.ஏ பெயரைச் சொல்லி அவனைப் பார்த்துக்கொள்ள சொல்லுவதாக இவன் சொல்ல, வேண்டாம் என்று மறுத்தவள் கூட தாய் இருப்பதாகச் சொல்ல,

“அத்தைக்கே உடம்பு சரியில்ல. இப்போ ஏன் அவங்க அங்க தங்கணும்?” இவன் கரிசனமாய் கேட்க, அந்த இதம் ‘என்னையும் என் வீட்டையும் பற்றி நினைக்க பார்க்க ஒருவர் இருக்காங்க’ என்ற எண்ணத்தை அவளுக்குள் கொடுத்தது.

“சொல்லச் சொல்லக் கேட்காம எனக்குத் துணையா இருக்காங்க. ரிப்பேர் பார்க்க வர்றவங்க வடநாடு. கேள்வி கேட்க ஆள் இல்லனா ஏமாத்திடுவாங்க. அதான் நான் இருக்கேன்” என்பதையும் இவள் சேர்த்துச் சொல்ல

“ஒரு தொழிலை நடத்துபவனுக்கு இது தெரியாத என்ன? நீ போன வை நான் வரேன்” இவன் சொல்ல,

“இல்ல வேணாம்... உங்களுக்கு ஜுரம்…” இவள் இழுக்க,

“யுகா! போன வை, நான் வரேன்” அவன் குரலில் சொல்வதைச் செய் என்ற கட்டளையிருந்தது. பின் கிளம்பி கீழே வந்தவனை மேகலை கேள்வியாகப் பார்க்க, இவன் அனைத்தையும் சொல்ல, மருமகளுக்கு என்றதும் அவனை அனுப்பி வைத்தார் அவர். வரும் வழியிலேயே அவளின் இரவு உணவைப் பற்றி அக்கறையாக இவன் கேட்க அவள் உண்டுவிட்டதைச் சொல்ல பாக்டரிக்கு வந்தவன் தங்கத்திடம் பேசி அவரை நந்திதா வந்த காரிலேயே அனுப்பி வைத்தவன் பின் தன் வேலையாக லேப்டாப்பில் மூழ்கயிருந்த நேரம், அவன் முன் டோஸ்டட் பிரட்டும் சாக்லேட் மில்க்கையும் வைத்தாள் அவன் மனைவி. இவன் நிமிர்ந்து கேள்வியாய் பார்க்க,

“ஜுரம் வந்த உடம்பு, இத சாப்பிட்டுப் படுங்க. அவங்க வர இரவு பதினொன்னு ஆகுமாம்” இவள் சொல்ல, மனைவியின் கரிசனத்தை ஏற்று அவள் கொடுத்ததை உண்டவன்,

“இன்னைக்கு மதியம் நல்ல தூக்கம் யுகா. சோ தூக்கம் வரல, வொர்க் பார்க்கிறேன்” என்றவன் தன் வேளையில் மூழ்க, அவளும் அவளின் வேளையில் மூழ்கிப் போனாள்.

இஞ்சினீயர்கள் வர, நந்திதா சொன்னது போல் கண்ணில் விளக்கெண்ணை விட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததால் தான் சரியாக வேலை செய்தார்கள் வந்தவர்கள். முகம் சோர்ந்து போய் தூக்க கலக்கத்துடன் அமர்ந்து இருந்த மனைவியை பார்த்தவன், எப்படியும் வேலை முடிய விடியற்காலை ஆகும் என்பதால் அவளைப் படுக்கச் சொல்ல, அவனின் வற்புறுத்தலில்

“இரண்டு மணி நேரம் நான் தூங்குறேன் பிறகு நீங்க தூங்கப் போகணும்” என்ற டீலுடன் படுக்கச் சென்றாள் நந்திதா.

நல்ல தூக்கத்தில் திடீர் என்று அவளுக்கு விழிப்பு வர, எழுந்து மணியைப் பார்த்தவளுக்கு அது மணி மூன்று என்று காட்டியது. ‘போனில் அலாரம் வைத்தேனே! அது ஏன் அடிக்கவில்லை?’ என்று யோசித்தவளுக்கு அதைத் தன் தூக்கத்திற்காக அபி நிறுத்தி இருப்பதை உணர்ந்தவளுக்கு, ஐயோ என்று இருந்தது.

அறையை விட்டு இவள் வெளியே வந்து பார்க்க, வேலைகள் எல்லாம் முடித்து வந்தவர்கள் போயிருந்தார்கள். ‘இன்னும் நேரம் ஆகும் என்றார்களே! இவ்வளவு சீக்கிரமாகவா முடிந்தது?’ என்று நினைத்தவளுக்கு அப்படி அபி வேலை வாங்கியிருக்கிறான் என்பது புரிந்தது. அவனைப் பார்க்க, அமர்ந்திருந்த சேரில் அமர்ந்த படி அவன் முன்பிருந்த குட்டி டேபிளின் மேல் தலை கவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் அவன்.

பார்த்தவள், ‘இப்படி தூங்கினா முதுகு வலிக்குமே’ என்று நினைத்தவளுக்கு அவனை எப்படி அழைப்பது என்று புரியவில்லை. புதிதாக என்னங்கவா? இல்லை எப்போதும் போல அபியா? இல்லை தொட்டா? இதில் எது செய்யவும் தயக்கமாக இருந்தது அவளுக்கு.

‘ஒருவேளை மறுபடியும் ஜுரம் வந்திருக்குமோ?’ என்று குழம்பியவளுக்கு அதை அவனை தொட்டு பார்த்து அறிய இரண்டு முறை மெதுவாக அவனிடம் கொண்டு சென்ற கையை இதுவரை இல்லாத ஒரு உணர்வுடன் தயக்கத்துடன் இழுத்துக் கொண்டாள் நந்திதா. ‘சரி இப்படியே தூங்கட்டும்’ என்ற முடிவுடன் திரும்பி இவள் இரண்டு அடி எடுத்து வைக்க,

“யுகா, எழுந்திட்டியா?” என்ற சொல்லுடன் தன் தூக்கம் கலைந்து எழுந்தான் அபி. கண்கள் இரண்டும் சிவந்து போய் அவன் சோர்வாக இருக்கவும்,

“நீங்க அறையில் தூங்குங்க” இவள் அவசரமாகச் சொல்ல,

“அப்போ நீ?” பட்டென்று வந்தது இவனிடம் இருந்து கேள்வி. இவள் என்ன சொல்வாள்? ஒருவர் மட்டும் படுக்கக்கூடிய சிறிய கட்டில் தானே இருக்கு. அதில் எப்படி? ஸோஃபா இருக்கு. ஆனா’ அதற்கும் வேணாம் என்று சொன்னாள். இவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வலித்த கழுத்தை இப்படி அப்படி அசைத்து சரி செய்தவன், எழுந்து கை கால்களை உதறி இடுப்பை பின்புறம் வளைத்து விட்டு நிமிர்ந்தவன்,

“சரி வா போகலாம்” என்று சொல்ல

“இப்பொழுதா?” என்று விழி விரித்தாள் அவள். ஒரு நொடி அதை ரசித்துப் பார்த்தவன், பின் இயல்பாகி,

“நான் ரொம்ப டயர்டா இருக்கேன். வா யுகா வீட்டுக்குப் போகலாம். எனக்குத் தூங்கணும்” இவன் சிறுபிள்ளையாய் சொல்ல, அந்த குரலுக்கு கட்டுப்பட்டு அவனுடன் வெளியே வந்தாள் அவள். அறைகளைப் பூட்டி செக்யூரிட்டியிடம் சாவியைக் கொடுத்தவர்கள், அவன் எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக மறுத்து தானே காரை ஓட்டினாள் அவனின் யுகா.

காரில் அமர்ந்ததும் அவன் தூங்கி விட, இவள் எவ்வளவு மெதுவாக காரை ஒட்டியும் வீடு வந்து விட்டது. கார் நின்றது கூடத் தெரியாமல் அவன் இன்னும் தூக்கத்தைத் தொடர, இப்பொழுதும் அவனை எப்படி எழுப்புவது என்று அறியாமல் இவள் குழம்ப, “வீடு வந்தாச்சா யுகா?” என்று கேட்ட படி எழுந்து அமர்ந்தான் அபி.

அவள் “ம்...” என்றதும்

“ஓகே, பாய்!” என்றவன் இறங்கி தன்னிடம் உள்ள சாவியால் கதவைத் திறந்து கொண்டு அவன் உள்ளே போக,

இவள் இருக்கிறாளா இல்லை கிளம்பினாளா என்று திரும்பியும் பார்க்காமல் சென்று கதவை அடைத்தவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நந்திதா.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே14
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN