அத்தியாயம் 17

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 17
ஒருசில மாதங்களுக்கு முன்பு... (சரியாக சிவரஞ்சனியை பெண் பார்த்து விட்டு சென்ற இருநாட்களுக்கு பிறகு)
"அர்ஜூன்...?" அலுவலக கேண்டினில் அமர்ந்து பசியை தீர்க்க வாங்கிய டீயை குடிக்க கூட நேரமில்லாமல் அது ஆறிக்கொண்டு இருக்க, மடிக்கணினியில் ஏதோ நோண்டிக் கொண்டு இருந்த அர்ஜூன் எதிரில் கேட்ட குரலால் மடிக்கணினியில் இருந்து தலையை எடுத்து கேள்வியாக பார்த்தான்.
"ஐ யம் நிரஞ்சன்... ஸ்கூல்ல உனக்கு சீனியர்... என்னை தெரியுமா..." என்று அவன் கூற "ஓ..." என்று அர்ஜூனிடம் இருந்து ஒரு அசுவாரசியமான பதில் வந்தது.

பள்ளி கல்லூரி என செல்லும் இடமெல்லாம் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு, நடனம் என தன் முத்திரையை பதித்துவிட்டு வந்தவனுக்கு 'உன்னை தெரியும்' என்று ஒருவன் வந்து நின்றது பெரியவிஷயமாக படவில்லை.
"சிவசக்தி பாட்டியோட பேரன்..." என்று கூறி தன்னை மீண்டும் அறிமுகப்படுத்தி கொண்டவன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
" அப்படிங்களா...?" இப்போது அர்ஜூனின் குரலில் ஆர்வம் இருந்தது.
"நைஸ் டூ மீட் யு... என்ன இந்த பக்கம்..." என்றவன் சம்பிரதாயமாக கைநீட்ட அதை பிடித்து குளுக்கிய நிரஞ்சன், "கோயம்புத்தூர்ல இந்த கம்பனியோட இன்னொரு பிரான்ச் கட்ட ப்ளான் போட்டு இருக்காங்க இல்ல... அதுக்கு சிமெண்ட் அண்ட் அதர் மெட்டீரியல்ஸ் எங்க கம்பெனில வாங்க சொல்லி கொட்டேஷன் கொடுக்க வந்தேன்..."
"அப்படிங்களா... என்னுடைய ப்ரண்ட் தான் அந்த ப்ராஜெக்ட பாக்கராங்க... நான் உங்கள பத்தி சொல்லரேன்..."
"இல்ல அர்ஜூன்... அது கண்டிப்பா கிடைச்சிடும்... ரெக்கமன்டேஷன்லா வேண்டாம்..." என்று அவசரமாக கூறியவன் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என தயங்கினான்.
"நீங்க சிவசக்தி பாட்டிக்கு எப்படி பேரன்... இரண்டு நாளைக்கு முன்னாடி நான் அங்க வந்து இருந்தேனே... உங்கள பார்க்கவே இல்லையே..." என்று கேட்டான் அர்ஜூன் புதியவனை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில்.
"நான் சிவரஞ்சனியோட அத்தை பையன் அர்ஜூன்... உங்க பார்வை தான் வேற ஒருத்தங்க மேல இருநதுச்சே... என்னலாம் எப்படி கவனிச்சு இருப்பீங்க..." என்று நிரஞ்சன் கேட்டதும் அர்ஜூன் ஈஈஈ என இளித்து வைத்தான்.
"ரஞ்சிய சைட் அடிச்சது அவ்வளவு பச்சையாவா தெரிஞ்சது..." என்று சிரித்தபடி அர்ஜூன் கேட்க, நிரஞ்சன் முகத்தில் மருந்துக்கும் அந்த புன்னகை இல்லை.
"அர்ஜூன்... நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனுமே..."
"ம் சொல்லுங்க... இங்க நாம மட்டும் தான இருக்கோம்..." அர்ஜூன் மனதில் சிறு பயம் வந்தது என்னவோ உண்மை. கல்யாணம் பேசியதும் பெண்ணின் முறைப்பையன் எதற்கு தனியாக வந்து பேச வேண்டும் என்று சற்று யூகித்து இருந்தான்.
" பக்கத்துல உங்க ஆபிஸோட பார்க் இருக்கே... அங்க போகலாமா..."
"ம்... ஸ்யூர்..." என்றவன் தன் வேலைகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு அவனுடன் சென்றான்.
சிவரஞ்சனியை அர்ஜூனுக்கு பிடித்து இருந்தது. சிறு வயதில் சிலசமயம் அவளை சக்தியுடன் பார்த்து இருக்கிறான். அப்பொழுது சுண்டிவிட்டால் ரத்தம் வரும் நிறத்தில் கொழுகொழு என பால் கொழுக்கட்டை போல் இருந்தவள் தற்போது சிக்கென்று ஒடிசலாக அளவான உயரத்தில் பாம்பே மாடல் போல் இருந்தாள். அவளை பார்த்தவுடன் அர்ஜூனுக்கு பிடித்துவிட்டது. அதிலும் அவளின் உடலமைப்புக்கு சற்றும் பொருந்தாத நீண்ட கருநாகம் போல் இருந்த கூந்தலை மிகவும் பிடித்துவிட்டது. இப்போது இந்த நிரஞ்சன் என்ன பிரச்சினை கொண்டு வந்திருக்கிறானோ என்று பயமாக இருந்தது.
நிரஞ்சனை பார்க்க பார்க்கத்தான் அவன் யார் என்று அர்ஜூனுக்கு நினைவு வந்தது. ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவிற்கான நடன பயிற்ச்சியின்போது நடனம் சொல்லித்தரும் மாஸ்டரிடம் ஒழுங்காக ஆடவில்லை என்று நன்றாக திட்டுவாங்கி நடனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டான். இப்போது அர்ஜூனுக்கு நியாபகம் வந்தது. பிறகு அர்ஜூனின் காலில் அடிப்பட அர்ஜூனுக்கு பதிலாக நிரஞ்சன் திரும்பவும் ஆட வந்தது எல்லாம் வேறு கதை...
பார்க்கில் ஒரு கல் மேடையில் அமர்ந்த அர்ஜூனிடம் நிரஞ்சன், தானும் சிவரஞ்சனியும் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும் இப்பொழுது உங்களை பார்த்ததும் என்னை கழட்டிவிட்டு விட்டாள் என்றும் கூறி ஆதாரத்திற்காக அவனது கைப்பேசியை நீட்டினான். அதை வாங்கி பார்த்தவன், தான் மீண்டும் ஒரு பெண்ணிடம் ஏமாற பார்த்தேன் என்பதை உணர்ந்தான்.
திரும்ப திரும்ப ஏமாற பார்த்ததில், அவனின் ஈகோ பலமாக அடிவாங்கியதில் பேச்சற்று சிறிது நேரம் அமர்ந்து இருந்தவன், நிரஞ்சனுக்கு தெரியாமல் அதில் உள்ளவற்றை எல்லாம் தனது மெயிலுக்கு அனுப்பிவிட்டு நிரஞ்சனிடம் கைப்பேசியை ஒப்படைத்துவிட்டு பிறகு பார்க்கலாம் என்று விடைபெற்றான்.
வீட்டிற்கு வந்தவன் நிரஞ்சன் காண்பித்த சிவரஞ்சனியும் நிரஞ்சனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பார்த்தான். இவையெல்லாம் ஏன் மார்பிங் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது என்ற ஏக்கம். அதில் இருந்தவை இருவரும் கட்டிக்கொண்டு இருக்குமாறு ஒரு புகைப்படம், இருவரும் நேருக்கு நேர் காதலாக பார்த்தபடி ஒரு புகைப்படம், இருவரும் சிரித்து பேசியபடி இருக்கும் சில படங்கள், டிங்கியை இருவரும் கட்டிக்கொண்டு உருளும் ஒரு வீடியோ... இருவரும் சேர்ந்து ஒன்றாக நடனம் ஆடும் பல வீடியோக்கள்... எல்லாவற்றுக்கும் மேலாக ஏதோவொரு கோவிலில் சிவரஞ்சனி கையில் இருந்த குங்குமத்தை நிரஞ்சன் எடுத்து அவளின் நெற்றி வகிட்டில் வைக்கிறான். அவளும் சிரித்த முகத்துடன் இருக்கும்படி இருந்த அந்த வீடியோ அர்ஜூனை மிகவும் பாதித்தது.
மற்றவை எல்லாம் நிரஞ்சனாக ஏற்படுத்தப்பட்டவையாக கூட இருக்கலாம். அல்லது தானாக நடந்தவையாக அல்லது நட்பின் அடிப்படையில் நடந்ததாக கூட இருக்கலாம்... ஆனால் குங்குமத்தை ஏதோ கணவன் போல் வைப்பதும் அதற்கு சிவரஞ்சனி சிரிப்பதும் அவனை எரிச்சலடைய செய்தது.
ஏற்கனவே ஒருமுறை ஏமாந்தவன் இம்முறையும் ஏமாற விரும்பவில்லை. எனவே அவளிடம் விலக்கம் கூட கேட்காமல் அவள் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டான். அர்ஜூன் எப்பொழுதும் ஒருவரை வேண்டாம் என்று முடிவு செய்து விட்டால் எல்லாவற்றையும் மறந்து அவர்களை உதறி தள்ளிவிட்டு தன் வழியில் போகும் ரகம். அதனாலேயே அவனுக்கு நண்பர்கள் பலர் இருந்தாலும் நெருங்கிய நண்பர்களை ஒருகை விரல்களால் எண்ணிவிடலாம்... அவன் சிவரஞ்சனி வேண்டாம் என்று முடிவு செய்து இருக்க, கடவுள் வேறொரு திட்டத்தை அவர்களுக்கு வைத்து காத்துக்கொண்டு இருந்தார்.
ராஜரத்தினத்தின் பிளாக்மெயிலால் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அர்ஜூனின் பள்ளி பருவத்தில் அனைவரையும் மிரட்டியே வேலை வாங்கும் இரும்பு மனிதை சிவசக்தி பாட்டியின் உடல்நிலை வேறு மோசமாகி போக அவரின் இறுதி ஆசையை அவனால் தட்டிகழிக்க முடியவில்லை. எனவே திருமணமும் நடந்தது.
முதலில் சிவரஞ்சனியை தவறாக புரிந்து கொண்டவன், தான் நினைத்தது நடக்கவில்லையே என்ற ஆதங்கத்திலேயே அவளை வெறுத்தான். ஆனால் அவளுடன் பழக பழக தான் அவளின் நல்ல மனது அவனுக்கு புரியவந்தது.
ஒருநாள் நிரஞ்சன் அர்ஜூனை ஒரு காஃபி ஷாப் அழைத்து சக்தி மற்றும் அர்ச்சனா இருவரும் ரோட்டில் நின்று பேசிக்கொண்டு இருக்கும் வீடியோவை போட்டு காட்டினான். தேவையில்லாமல் அவர்கள் இருவரும் பேசுவதை தன்னிடம் காட்டி அவர்களை மாட்டிவிட்ட பிறகு தான் அர்ஜூனுக்கு நிரஞ்சனின் மேல் வந்த சந்தேகம் உறுதியானது.
அப்பொழுது அவனை துருவி துருவி சிவரஞ்சனியினுடனான அவனின் காதலை பற்றி விசாரித்ததில் அவனின் பதில்கள் அனைத்தும் முன்னுக்கு முரனாக இருந்ததை கண்டுகொண்டான். அர்ஜூன் குடைந்து எடுத்ததில் ஒருகட்டத்தில் நிரஞ்சன் தனது பொறுமையை இழந்து தன் ஒருதலை காதலை ஒப்புக்கொண்டு சிவரஞ்சனியை அடைந்தே தீருவேன் என்று சபதம் வேறு போட அர்ஜூன் ஒரு அலட்சிய பார்வையை வீசுவிட்டு சென்றுவிட்டான்.
வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவனுக்கு புரியவந்தது எதற்கு சக்தியை நிரஞ்சன் இடையில் இழுத்தான் என்று. சக்தி மேல் கோபப்பட்டு தான் சக்தியுடன் சண்டையிட்டால், சிவரஞ்சனி சக்தியின் மேல் உள்ள பாசத்தில் கணவனை உதறி தள்ளிவிடுவாள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டான்.
சிவரஞ்சனியை கண்கானிப்பதே நிரஞ்சனின் முழு நேர வேலையாக மாறி இருந்ததை அர்ஜூன் அறிந்து வைத்திருந்தாலும் சிவரஞ்சனி மேல் இருந்த நம்பிக்கையில் அவன் அதை அலட்சியமாக எடுத்துக்கொண்டான். ஆனால் சிவரஞ்சனி நிரஞ்சனையே திருமணம் செய்து இருக்கலாம் என்று பேச்சுவாக்கில் கூறியதும் அவனின் நம்பிக்கை ஆட்டம் காண தற்போது அவனுக்கு பயபந்து மனதில் உருண்டது.
********
நிரஞ்சன் டிங்கியை கொஞ்சிய படியே அர்ஜூனை பார்த்த ஒரு கேவலமான பார்வை, அவனுக்கு சொல்லாமல் சொல்லியது இந்த வீட்டில் உன்னை இந்த நாய்க்கு கூட பிடிக்கவில்லை என்பதை. நிரஞ்சனுக்கு பதிலாக அவனும் ஒரு அலட்சிய பார்வையை சிந்தியவன் "உன் லெவல் இந்த நாயோடதான்..." என்று யாரும் பார்க்காத போது அவனிடம் கூறினான். நிரஞ்சனுக்கு முகம் கருத்தது.
ஏர்போர்ட்டில் இருந்து இறங்கியதில் இருந்து வீட்டினுள் நுழையும் வரை அவனிடம் அனைவரும் சம்பிரதாயமாகவே பேசினர். எப்பொழுதும் தொனதொனவென அவனிடம் பேசும் சக்தி கூட அர்ஜூனை வாங்க மாமா என்று அழைத்ததோடு சரி... அதற்கு பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை... சிவரஞ்சனி கோபமாக இருக்கிறாள்... ஸ்ரீதர் அவனின் அன்னையை போன்று கொஞ்சம் அமைதியானவன்... தேவைக்கு அதிகமாக பேசமாட்டான்... மாமனார் மாமியாரிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை... அவ்வளவு பெரிய வீட்டில் தனித்து விடப்பட்ட உணர்வு வந்தது அர்ஜூனுக்கு. அவன் வீட்டில் சிவரஞ்சனிக்கு வந்த தனிமை உணர்வை தற்போது அவன் நன்றாகவே உணர்ந்தான்.
"மிஸஸ் அர்ஜூன் விஜயன்... உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..." சக்தி தன் நீண்ட வருட சந்தேகத்தை சிவாவிடம் கேட்டான்.
"உன்னுடைய ட்வின் சிஸ்டரா போயிட்டனேடா... எப்படி அறிவு இருக்கும்... உன்னமாதிரியேதான் இருப்பேன்..." பதிலடி கொடுத்தவள் தனம் செய்துவைத்து இருந்த குலாப்ஜாமூனை அவனது வாயில் திணித்தாள்.
அர்ஜூனுக்கு டீ போட போகிறேன் என்று பெயர் பன்னிக்கொண்டு அவனின் முறைப்பில் இருந்து தப்பிக்க சமையல் கட்டிற்குள் புகுந்த சிவரஞ்சனியை தொடர்ந்து வந்த சக்தி யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவளிடம் பேசினான்.
"ஏர்போர்ட்ல நான் உன்கிட்ட என்ன சொன்னேன்... அத்தான் கூட பேசாதன்னு சொன்னன்னா... நீ ஏன்டி நான் சொல்லரத கேட்கமாட்டீங்குற... நிரஞ்சன் இப்பல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை. அவன் பக்கம் போகாமல் இரு... இல்லன்னா அவ்வளவு தான்..."
"டேய் ஏற்கனவே அர்ஜூன் என்ன கண்ணாலேயே மிரட்டராரு... நீயும் ஏன்டா சிடுசிடுன்னு பேசற..."

"நீ ஒழுங்கா இருந்தா அவர் ஏன் உன்ன மிரட்ட போராரு..."
"ம்ச்... அவரு சந்தேக படரது தப்பில்லை.. நான் அத்தானோட பேசுறது தப்பா..." சிவரஞ்சனி வாக்குவாதம் செய்தாள்.
"இது நல்லா இருக்கே... உங்களுக்கு வந்தா பொசசிவ்னஸ்... எங்களுக்கு வந்தா சந்தேகமா... உங்களுக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி... ஷிவ் கோவம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும்... பொசசிவ்னஸ் இருக்குற இடத்தில் தான் லவ் இருக்கும்... ஒழுங்கா மாமாவோட லவ்க்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து அவர் சொல்லறத கேளு..." என்று சக்தி சீரியஸாக அட்வைஸ் செய்து கொண்டு இருக்க சிவரஞ்சனி கிளுக்கென்று சிரித்தாள்.
சிரித்தவளை கண்டு முறைத்தவன் நான் எல்லோருக்கும் டீ போடுகிறேன் என்றபடி அவளின் தலையை தட்டி வெளியே அனுப்பிவிட இன்னுமும் நிரஞ்சனை கண்டு முகத்தில் எல்லும் கொல்லும் வெடிப்பதுபோல் அர்ஜூன் அமர்ந்து இருந்தான்.
'லவ்வாம்... காமெடி பன்னிகிட்டு...' என சக்தி கூறியதை நினைத்து பார்த்தவள் 'ஒருவேளை சக்தி சொல்லுறது உண்மையா இருந்தா... எனக்கும் தான் அர்ஜூன முதல்ல பிடிக்கல... இப்போ பிடிச்சு இருக்கே... அதுபோல அவனுக்கும் என்னை பிடிச்சதுனா..." என சிந்தித்தபடியே அர்ஜூனின் அருகில் அமர்ந்தவள் திடீரென தலையில் தட்டிக் கொண்டு, "உங்களுக்கு ஏத்தமாதிரி டீ போட சொல்ல மறந்துட்டேன்..." என்று எழுந்தாள்.
"பரவாயில்லை..." என்று அவளின் கையை பிடித்து இழுத்து அருகில் அமர்த்திக்கொண்ட அர்ஜூன் மீண்டும் அவள் கையை விடவில்லை. சிவரஞ்சனி அதை மனதில் குறித்துக்கொண்டாள்.
"மாப்பிள்ளை... எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் கோயம்புத்தூர்ல சாப்ட்வேர் கம்பெனி வச்சு இருக்காரு... ரொம்ப வருஷமா நல்லா ஓடிட்டு இருந்த கம்பெனி இப்போ படுத்துடுச்சு. அவர் பல பிஸ்னஸ் செய்யரதால இதை வித்துடலாம்னு பார்க்கறாரு. உங்களுக்கு விருப்பம்னா நான் உங்களுக்கு வாங்கிதரேன்... நீங்க நல்லா கொண்டுவந்துடுவீங்க... எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு..." லிங்கம் மெதுவாக தன் திட்டத்தை தன் மாப்பிள்ளையிடம் கூறினார்.
ஒரு நொடி சிவரஞ்சனியை பார்த்த அர்ஜூன் அவளின் சிரித்த முகத்தை கண்டு அவளுக்கு இதில் விருப்பம் என புரிந்து கொண்டு "மாமா... நீங்க எஸ்.எம் கம்பெனி பத்திதான சொல்லரீங்க... சாரி மாமா. அதை என்னுடைய ப்ரண்ட் ஒருத்தர் வாங்க இருக்காரு. அவர் வாங்கிட்டா அந்த கம்பெனில நான் கொஞ்சம் சேர்ஸ் வாங்கரேன்னு சொல்லி இருக்கேன்...."
"ஏங்க உங்க ப்ரண்ட் வாங்கி... அதுல நீங்க சேர்ஸ் வாங்கி... எதுக்கு இவ்வளவு... ஒரேடிய முழு கம்பனியையும் நீங்களே டேக் ஓவர் பன்னிகோங்க... அவ்வளவு தான்..."
"இல்ல ரஞ்சி... அவர் என்னுடைய ப்ரண்ட் மட்டும் இல்ல... என்னுடைய வெல்விஷர்... ரொம்ப டேலண்ட்... ரிடையர்ட் கர்னல் வேற. அவர பகைச்சுக்க முடியாது. அதோட நான் எதிர்பார்த்த ப்ரமோஷன் வேற கிடைக்கும் நிலைமைல இருக்கு... அதனால என்னால் வேலைய விடமுடியாது..." என்றவனிடம் சக்தி டீ கொடுக்க அதை வாங்கிக் கொள்ளும் போது தான் சிவரஞ்சனியின் கையைவிட்டான்.
அர்ஜூன் கூறுவதையே உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்த நிரஞ்சன் அடுத்த திட்டத்தை தனது மனதில் குறித்துக்கொண்டான். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் ஓய்வு எடுக்க அறைக்கு கிளம்பினர்.
தனம் ஆரத்தி எடுத்து அர்ஜூன் மற்றும் சிவரஞ்சனியை உள்ளே அழைத்துவந்து களைப்பை போக்க சக்தி டீ கொடுத்து, ஓய்வு எடுக்க இருவரும் அறைக்கு செல்லும் வரை நிரஞ்சன் இடத்தை காலி செய்யவில்லை. இவன் எல்லாம் எனக்கு எதிரியா... இதுக்கு அந்த ரவியே பரவாயில்லையே... என நினைத்தவனுக்கு நிரஞ்சனை பற்றி முழுமையாக தெரியாமல் போனது...
நிரஞ்சன் செல்வதையே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு வந்த அர்ஜூன் ஏதோ ஒன்றில் முட்டி நின்றான். பஞ்சு மூட்டையோ என்று பார்க்க அது சிவரஞ்சனி தான்.
‌‌ "லேசர் ட்ரீட்மெண்ட் மூனு வருஷம் தான் வேலை செய்யுமா...?" என்றாள். சத்தியமாக அர்ஜூனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் அவளையே பார்ப்பதை பார்த்து விட்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள் தொடர்ந்தாள்.
"கண்ணு தெரியலையா...?" என்றாள். தற்போது அவனுக்கு அவள் முதலில் கேட்ட கேள்வி புரிந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக கண்கண்ணாடி அணிந்திருந்த அர்ஜூன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் லேசர் சிகிச்சை செய்து அதை நீக்கி இருந்தான். கேள்வி புரிந்த போதும் விடையளிக்காதவன் திரும்ப நிரஞ்சன் சென்றுவிட்டானா என பார்க்க அதை கவனித்த சிவரஞ்சனி "போயாச்சு... போயாச்சு..." என்றபடி தன் அறைக்குள் புகுந்தாள்.
அவள் பின்னாலேயே வந்தவன் அறைக்கதவை தாழிட்டு கைக்களை கட்டிக்கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். சென்னையில் எப்பொழுதும் அவன் அவர்களின் அறைக்கதவை தாழிட்டது இல்லை. சும்மாக சார்த்தி வைப்பான் அவ்வளவே... இப்போது தாழிட்டதும் கொஞ்சம் பயமாகவே இருந்தது சிவரஞ்சனிக்கு. புது இடம் என்பதால் தாழிடுகிறான் என்று கூறிய அவளின் மனசாட்சி அவளின் பயத்தை துணி வைத்து துடைத்தார் போன்றாக்கியது.
"நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்..." என்றவனை அழுத்தமாக பார்த்தாள் சிவரஞ்சனி. நிரஞ்சனை பற்றி கேட்கப்போகிறான் என நினைத்தாள்.
"ஏர்போர்ட்ல அந்த பையன அடிச்ச பிறகு என்கிட்ட சொன்ன உனக்கு கராத்தே தெரியும்னு...ஆனா நான் நேத்து நைட் உன்கிட்ட மிஸ்பிகேவ் பன்னப்ப ஏன் என்ன அடிக்கலை..." தலைவலியை தவிர அவனுக்கு உடலில் எந்த வலியும் இல்லை என்பதால் அவனாக யூகித்து இருந்தான் சிவரஞ்சனி சொல்வது போல் தங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என்று.
அதிலும் அவள் வருத்தமாக இருப்பதாகவே தெரியவில்லை. எனவே நம்பினான் தான் போதையில் தவறு ஏதும் செய்யவில்லை என்று. ஆனால் அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தது சிவரஞ்சனியின் பதில்.
"இதை நீங்கதானே கட்டனீங்க..." தாலி, பவளம், கருகமணி, காசு என என்னென்னவோ கோர்க்கப்பட்டு இருந்த தாலி சரடை தான் அர்ஜூனின் முகத்திற்கு நேராக தூக்கிக் காட்டி கேட்டாள்.
"அதுல என்ன சந்தேகம்..." வெறுப்பாக வந்தது அவனது பதில். முதலில் எல்லாம் அவள் கேள்வி கேட்டால் அவன்தான் ஒழுங்காக விடையளிக்க மாட்டான். தற்போது இவள் அப்படி செய்கிறாலே என்ற கடுப்பு.
"அப்புறம் நான் எதுக்கு உங்கள அடிக்கப்போரேன்... நீங்க தான் எனக்கு தாலி கட்டிய கணவனாச்சே..." முதலில் கேட்ட கேள்விக்கு தற்போது விடையளித்தவள் அவன் அருகில் வந்து மலரை தீண்டிச்செல்லும் பட்டாம்பூச்சி போன்று பட்டும் படாமலும் அவனது இதழில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு குளியலறையில் புகுந்து கொண்டாள்.
அர்ஜூன் சுதாரிப்பதற்குள் அவள் அதிரடியாக நடந்துகொள்ள அவன் பேச்சுமூச்சற்று சிலையாக நின்றிருந்தான். அர்ஜூன் லிங்கம் வாங்கி தருவதாக கூறிய பலகோடிகள் மதிப்புள்ள தொழில்நுட்ப நிறுவனத்தை அவன் வேண்டாம் என்று கூறியது அவளை மிகவும் கவர்ந்தது. எனது பொசசிவ் கணவன் என பெருமையாக கூறிக்கொண்டாள். அதன் எதிரொலிப்பினால் தன்னையும் மறந்து அவ்வாறு நடந்து கொண்டாள்.
குளியலறைக்குள் சென்றவளுக்கு வெட்கம் பிடிங்கிதள்ளியது ஒருபுறம் இருந்தாலும் கொஞ்சம் அச்சமாக இருந்தது. "அவசர பட்டுட்டயே சிவா... இன்னும் கொஞ்சம் அவன் மனச நல்ல புரிஞ்சுகிட்டு அப்பறம் இப்படி பன்னியிருக்கலாம்... கண்டிப்பா கேவலமா நினைக்கப்போரான்...‌ எதாவது திட்டட்டும் அப்புறம் வச்சிக்கரேன்...." என சொந்த மண்ணில் இருப்பதால் தைரியம் வர பெற்றவளாய் மனதில் மட்டும் கூறிக்கொண்டவள் பயண அசதி தீர குளித்து முடித்து வெளியே வர அங்கே அர்ஜூன் இல்லை....
- தொடரும்.
இன்று கொஞ்சம் பெரிய அத்தியாயம் என்று நினைக்கிறேன். பிடித்திருந்தால் வழக்கம் போல் உங்கள் கருத்துக்களையும் வாக்குகளையும் கொடுக்க தவறவேண்டாம் நண்பர்களே...
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 17
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN