அத்தியாயம் 16

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 16
காற்றை தரும் காடுகளே வேண்டாம்...
ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்...
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்...
தேவை எதுவும் தேவை இல்லை...
தேவை எல்லாம் தேவதையே....
சிவரஞ்சனியின் காதில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சித்ஸ்ரீராம் உருகி உருகி பாடிக்கொண்டு இருக்க, செக்இன் முடித்துவிட்டு போர்ட்பாஸ் வாங்கி, தான் செல்ல வேண்டிய விமானத்திற்காக கேட் 4ல் காத்திருந்தவளின் அருகில் ஆடவர் யாரோ வந்து நிற்க, அது யாரென்று பார்த்தாள். அவள் எதிர்பார்த்தபடியே அது அர்ஜூன் தான்.
அவனுக்கு கேட்கவேண்டும் என்பதற்காகவே 'அம்மா வீட்டிற்கு செல்கிறேன்' என வீட்டினரிடம் சத்தமாக கூறிவிட்டு கேஃப் புக் செய்து, சென்னை டிராபிக்கில் தவழ்ந்து, ஆர அமர 12.30 மணிக்கு விமானநிலையம் வந்து சேர்ந்தாள்.
வருவானோ வரமாட்டானோ என்று சிறிதாக வந்த அச்சம் தீர, அவன் வந்ததால் வந்த மகிழ்ச்சியை கட்டுபடுத்தி கொண்டு வரும் விமானங்களை வேடிக்கை பார்க்கும் வேலையை செவ்வனே செய்தாள்...
உண்மை காதல் யார் என்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா?
முதலை களத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்...
திரும்பவும் பாடலில் மூழ்கியவளின் தோலை தட்டியவன் 'போகலாம்...' என்று செய்கை காண்பிக்க, காதில் மாட்டியிருந்த புளூடூத் ஹெட்போனை எடுத்து தோலில் தொங்க போட்டவள், தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானாள்.
அவளின் டிராலியை அர்ஜூன் வாங்க முற்பட்டான்... அதை தன்புறம் இழுத்தவள் 'டக்டக்' என்ற வேகநடையுடன் அதை இழுத்து சென்றாள். (கோபமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறாளாமாம்...!)
தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவள் அமர, அவளை தொடர்ந்து வந்த அர்ஜூனும் அவளுக்கு பின்னால் இரண்டு வரிசைகள் தள்ளி அவனுடைய இருக்கையில் அமர்ந்தான். அர்ஜூன் ஜன்னல் பகுதியில் அமர்ந்து இருப்பதையும் அவனுக்கு அருகில் உள்ள இருக்கை காலியாக இருப்பதையும் கண்டவள், வேறு இருக்கைக்கு மாறிக்கொள்வதாக ஏர் ஹோஸ்டஸிடம் கேட்டாள்., வாரநாள் என்பதால் விமானம் காலியாக இருந்ததால் உடனே அவளும் சம்மதித்தாள். அர்ஜூனின் அருகில் சென்றவள் கைகளை கட்டிக்கொண்டு வேறெங்கோ பார்த்தபடி "எனக்கு வின்டே சீட் வேணும்...." என்க, அவனும் தாராளமாக விட்டுக்கொடுத்தான்.
திருமணம் முடிந்த கையோடு சாவு வீட்டில் புதுமண தம்பதிகள் இருக்கக்கூடாது என்று உடனேயே அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை வரும் வரை அர்ஜூன் சிவரஞ்சனி என்ற ஜீவன் இருப்பதையே அவன் கண்டுகொள்ளவில்லை. உடைமைகள் அதிகமாக இருந்தும் கூட அதை எடுத்துச்செல்ல அவன் உதவவில்லை. ராஜரத்தினம் தான் உதவி செய்தார். அதை நினைவில் கொண்டவள், அவன் செய்ததை போலவே அர்ஜூன் என்ற ஜீவன் இருப்பதையே கருத்தில் கொள்ள கூடாது என்று சபதம் எடுத்தாள்.
விமானம் கிளம்பி இருபது நிமிடங்கள் ஆகிய பின்னும் அர்ஜூன் அவளிடம் பேச முயற்ச்சிக்காமல் இருப்பதை கண்டவள் தன் சபதத்தை எல்லாம் உடைத்தெறிந்து "ஏன் என்கூட வரீங்க...? நாளைல இருந்து ஆபிஸ் போகனுமே..." என்றாள். இதுவரை ஒரு மாதம் வரை விடுப்பு எடுத்தவன் அதில் பாதி லாஸ் ஆஃப் பே ஆக, நாளை தான் அலுவலகம் செல்லலாம் என்று இருந்தான்.
"ம்... வடிவேலு ஜெயிலுக்கு போரேன் ஜெயிலுக்கு போரேன்னு ஊர் முழுக்க சொன்ன மாதிரி திடீர்னு 'நான் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்னு' கத்திட்டு வந்துட்டயே... உன் மாமியார் எப்படி என்ன சும்மா விடுவாங்க... துரத்தி விட்டுட்டாங்க... அதோட உன்னுடைய பேரன்ஸ் என்னையும் கூப்பிட்டு இருக்காங்க..." என்று ஏற்ற இறக்கத்துடன் அவன் கூறிய விதத்தில் சிரிப்பு வர, அதை கட்டுப்படுத்தும் பொருட்டு தன் பார்வையை ஜன்னலின் பக்கம் திருப்பினாள்.
உண்மையில் சிவரஞ்சனி தான் தெரியாமல் செய்த தவறால் கோபப்பட்டு அம்மா வீட்டிற்கு செல்கிறாள். கண்டுக்காமல் விட்டாள் இந்த பிரிவு நிச்சயம் குடும்ப பிரச்சினையில் முடியும். நாமே பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தே அவன் உடன் வந்தான். ஆனால் சிவரஞ்சனி தெரிந்தும் தெரியாதது போல் கேட்கவும் தன் கெத்தை விட்டுக்கொடுக்க மனமின்றி இவ்வாறு சொல்லி வைத்தான்.
"அப்பா அம்மா உங்ககிட்ட பேசனாங்களா...? எப்போ..." வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவள் திடீரென நினைவு வந்தவளாக கேட்க, நேற்று இரவு சக்தி பேசுவதற்கு முன்பு பேசினார்கள் என்று விடையளித்தவன் பாடல் கேட்க துவங்கிவிட்டான். இப்போது புரிந்தது சக்தி எப்படி அர்ஜூனிடம் நன்றாக பேசிவிட்டு தன்னிடம் வர வேண்டாம் என்று கூறியதற்கான விடை.
சக்தியிடம் அவர்களின் தந்தை லிங்கம் எப்பொழுதும் கண்டிப்பாகவே நடந்து கொள்வார். அவர் அருகில் இருந்து இருப்பார். அதனால் நன்றாக பேசி இருப்பான் என நினைத்தவள் வீட்டிற்கு சென்ற பிறகு அவன் அர்ஜூனின் மனதை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
அதன் பிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. சிவரஞ்சனி மட்டும் வீடியோ எடுத்து கொண்டு வந்தாள். முதலில் அழகாக பஞ்சு போன்று பறக்கும் மேகங்களை வீடியோ எடுத்தவள் பிறகு டிக்டாக்கிற்காக, அர்ஜூன் கண்களை மூடிக்கொண்டு பாடலில் மூழ்கி இருக்கும் போது அவனுக்கு தெரியாமல் சில வீடியோக்களை எடுத்து, ஒரு பாடலை சேர்த்து எடிட் செய்து கொண்டு இருக்க அவர்களின் நாற்பத்து ஐந்து நிமிட பயணம் சீக்கிரம் முடிவுக்கும் வந்தது.
" ரஞ்சி.... உன்கிட்ட நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..." தங்களை அழைத்து செல்ல வீட்டில் இருந்து யாராவது வந்து இருக்கிறார்களா என பார்வையை சுழற்றிக்கொண்டே நடந்து வந்து கொண்டு இருந்தவளை கைப்பிடித்து இழுத்து நிறுத்திய அர்ஜூன் அவளிடம் தன் அதிமுக்கியமான கேள்வியை கேட்க வந்தான்.
"உங்களுக்கு எந்த பதிலும் சொல்ல நான் தயாரா இல்லை..." என்று உதட்டை சுழித்து காட்டியவள் தூரத்தில் சக்தி காத்திருப்பதை பார்த்துவிட்டு வேகமாக செல்ல எதிரே வந்தவனை மோதிவிட்டாள். மோதியவனும் மன்னிப்பு கேட்டு விட்டு திரும்பி செல்ல அவனை தொடர்ந்து வந்தவள் அவன் கண்ணத்தில் அறைந்து இருந்தான்.
"எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே இடிப்ப..." சிவரஞ்சனி அவனிடம் சண்டைக்கு நின்றாள். சொந்த ஊர் வந்துவிட்டோம் என்பதே அவளுக்கு புது தெம்பை அளித்தது.
"தெரியாம தாங்க இடிச்சேன்... சாரிங்க..." என்று அவன் மன்னிப்பு வேண்ட, "பொய் சொன்ன பல்ல கழட்டிடுவேன்... தெரியாமல் இடிச்சவன் எதுக்குடா அவன்கிட்ட ஐ-பை போட்ட..." என்றவள் அவனின் சட்டை காலரை பிடிக்க, அர்ஜூன் அவளை சமாதானம் செய்து கூட்டி சென்றான்.
"வாங்க மாமா...." என்று அர்ஜூனை ஒரு சிறு புன்னகையுடன் வரவேற்ற சக்தி சிவரஞ்சனியின் உடைமைகளை வாங்கிக்கொள்ள "என் இரத்தத்தின் இரத்தமே...." என்று அவனை கட்டிக்கொண்டாள்.
" ஏய்... ரவுடி பேபி... எத்தனை தடவை சொல்லி இருக்கேன்... பப்ளிக்ல சீன் கிரியேட் பன்னாதன்னு..." என்ற சக்தியிடம், இடித்தவனை பற்றி குற்றப்பத்திரிகை வாசித்த சிவரஞ்சனி உண்மையில் அர்ஜூன் என்ற ஒருவன் வருவதையே மறந்து போனாள்.
தங்கள் போக்கில் பேசிக்கொண்டு நடந்தபடி கார் இருக்கும் இடத்திற்கு சென்றவர்கள் பயணப்பொதிகளை எல்லாம் காரினுள் வைக்கும் போதே அர்ஜூன் வராததை கவனித்தனர். அவனை தேடி உள்ளே வந்தவர்கள் அர்ஜூன் யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதை கண்டு அவன் அருகில் வந்து யார் என்று பார்க்க அது அவர்களின் அத்தை மகன் நிரஞ்சன்.
"ஷிவ்... அத்தான மாமா முன்னாடி அத்தான்னு கூப்பிட்டுடாத... நீ அத்தான்ட்ட பேசாமல் இருக்கிறதே நல்லது..." சிவரஞ்சனியிடம் ரகசியம் போல் பேசிய சக்தி, அவர்களிடம் வந்து "ஹாய் அத்தான்... எப்படி இருக்கீங்க... பார்த்து ரொம்ப நாளாச்சே..." என்றவாறு சம்பிரதாயமாக பேச்சு கொடுத்தான்.
ஆனால் சிவரஞ்சனியோ அர்ஜூனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே "அத்தான்... என்ன ஒரு போன் கூட பன்னறது இல்லை... உங்களை ரொம்ப மிஸ் பன்னேன் தெரியுமா..." என்றவள் நிரஞ்சனின் முதுகில் ஒரு அடி வேறு போட்டு வைக்க, விட்டிருந்தால் அர்ஜூன் நிரஞ்சனை கொலை கூட செய்திருப்பான்... அவ்வளவு கோபம் வந்தது. கோபத்தால் அர்ஜூனின் முகம் சிவப்பதை கண்ட சிவரஞ்சனி வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோமே என்று நினைத்தவளாக தலை வலிக்கிறது என்று கூறி அர்ஜூனையும் சக்தியையும் அங்கிருந்து கிளப்பிக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டாள்.
*******
வயிறு முட்ட உண்டுவிட்டு நன்றாக தூங்கும் மதியம் மூன்று மணியளவில் தனம் வேலையாட்களை விரட்டிக்கொண்டு இருந்தார். இவ்வளவு நேரம் அரண்மனை போன்ற வீட்டை மலர் தோரணங்களால் அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தவர், திருமணம் முடிந்து முதல் முறை வீட்டிற்கு வரும் தன் மகள் மற்றும் மருமகனை வரவேற்க ஆரத்தி கரைக்க மறந்துவிட்டார்.
சிவசக்தி இருந்தவரையில் அவரே இந்த வீட்டின் மகாராணி. அந்த மகாராணி பட்டத்திற்கு தகுதியானவரும் கூட. ஆனால் அமைதியின் சொரூபமான தனம், முப்பது ஆண்டுகளாக தன் மாமியாரின் பேச்சையே கேட்டு நடந்துகொண்டு இருந்தவருக்கு தற்போது தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
ஆனால் அவரின் மருமகள் அப்படி இல்லை. ஸ்ரீதர் கல்லூரியில் உடன் பயின்ற சுசி என்னும் சூசனை காதல் திருமணம் செய்துகொண்டான். கைக்குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட அவளை கிறிஸ்துவ சபையை சேர்ந்த சகோதரிகள் எடுத்து சூசன் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தனர். அவளும் நன்றாக படித்து இப்பொழுதும் தன் சொந்த உழைப்பால் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறாள்.
சூசனை முதலில் லிங்கமும் தனமும் சிவசக்தியும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு அவளின் நற்பண்புகளை புரிந்து கொண்டவர்கள் அவளை ஏற்றுக்கொண்டனர். சுசி நற்குணம் படைத்தவள் மட்டுமல்லாமல் சாமர்த்தியசாலி கூட. தற்போது அவர்களின் மகன் சந்தோஷிற்கு ஒன்றே முக்கால் வயது.
கல்வியாண்டு முடியும் தருவாயில் இருப்பதால் அவர்கள் பள்ளியில் முக்கியமான கணக்கு வழக்குகளை முடிக்கும் பணியை அவளிடம் ஒப்படைத்து இருந்தார் லிங்கம். அதனால் அவளால் இன்று அர்ஜூன் மற்றும் சிவாவை வரவேற்க வீட்டில் இருக்க முடியவில்லை. எனவே தனம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து களைத்தே போனார்.
அர்ஜூன் மற்றும் சிவா அருகில் வந்துவிட அவசரமாக ஆரத்தி கரைத்து தனம் வெளியே வரவும் அவர்களின் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. காரிலிருந்து இறங்கிய சிவரஞ்சனியை அவள் ஆசையாக வளர்த்த லேப்ராடர் வகையை சார்ந்த டிங்கி என்னும் நாய் அவளை அனைத்து கொண்டது. அவளிடம் சிறிது நேரம் கொஞ்சிய டிங்கி பிறகு அர்ஜூனை பார்த்து குரைக்க ஆரம்பித்தது.
சிவரஞ்சனியும் சக்தியும் அடக்கியும் அது குரைப்பதை நிறுத்தாமல் இருக்க, அர்ஜூனின் பின்னால் இருந்து வந்த ஒரு குரலால் அமைதியடைந்த அந்த நாய், அந்த குரலுக்கு உரிமையான நிரஞ்சனிடம் ஓடி சென்று கொஞ்ச ஆரம்பித்தது. வெகுநேரம் ஆகியும் அவனை விட்டு பிரியாத அந்த டிங்கியயே அர்ஜூன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
- தொடரும்...
மன்னிக்கவும் மக்களே. சின்ன அத்தியாயம் தான். வழக்கம் போல் உங்கள் வாக்குகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN