அத்தியாயம் 20

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 20
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு...
அது கோவையில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ கல்வியியல் கல்லூரி... அதனுள் நுழையும்போதே ஸ்ரீதர்க்கு வெறுப்பாக இருந்தது. இளங்கலை கல்வியியல் (B.Ed) படிக்கத்தான் அந்த கல்லூரிக்கு வந்திருந்தான்.
அவர்களின் வீட்டில் அனைவரும் கல்வியியல் படிக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். பல பள்ளிகளை நிர்வகிப்பவர்கள் கல்வியியல் கல்வி படித்தால் தான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒத்துபோக முடியும் என, அனைவரும் கல்வியியலின் ஏதேனும் ஒரு பட்டமாவது வாங்கி இருந்தனர். இதற்கு சக்தி மட்டும் விதிவிலக்கு. எனவேதான் அங்கு கணினி அறிவியல் பிரிவிற்கான கல்வியியல் பாடப்பிரிவில் சேர்ந்து இருந்தான்.
அவனது வகுப்பறையில் கிட்டத்தட்ட இருபது மாணவர்கள் மட்டுமே இருந்தனர். கணினி அறிவியலை பொறுத்தவரை பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே அதற்கான சிறப்பு ஆசிரியர்கள் தேவைப்படுவர் என்பதால், அதற்கான தேவை குறைவாக இருந்தது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. அதிலும் மாணவிகளே பெரும்பாலும் இருந்தனர்.
அப்போதெல்லாம் மாணவர்கள் பொறியியலின் மீது அதிக மோகம் கொண்டு இருந்த காலம். பொறியியல் படித்தால் கட்டாயம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என பலர் எண்ணியதோடு, அதை தன் பிள்ளைகள் படிப்பது கௌரவமாக எண்ணிய பெற்றோர் இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு படையெடுத்ததால் தற்போது ஸ்ரீதர் பயின்ற கல்லூரியில் அதிக மாணவர்கள் இல்லை. அதிலும் அவனது வகுப்பு மிகக்குறைவு.
கல்லூரியில் சில வாரங்கள் சென்றிருக்க ஒருநாள் அவனின் வகுப்புக்கு வந்த ஆங்கில பிரிவை சேர்ந்த சூசன், அங்கு நின்றிருந்த ஆசிரியரிடம் அனுமதி பெற்று, அங்கு இருந்த மாணவர்களிடம் யாருக்காவது கீபோர்ட் ப்ளே பன்ன தெரியுமா என்று கேட்க, ஸ்ரீதர் வகுப்பில் இருக்க பிடிக்காமல் ஏதோ அவனுக்கு யூ.கே.ஜி அளவிற்கு தெரிந்த கீபோர்டால் எனக்கு தெரியும் என்று அவளுடன் கிளம்பினான்.
சூசன் அவனை ஒரு சிறிய அறைக்குள் அழைத்துச் சென்றாள். சிலமாணவிகள் அங்கு இருக்க அங்கே அமர்ந்து இருந்த ஆசிரியை ஒருவர் தேசியகீதம் வாசிக்க தெரியுமா என்று கேட்டார். அப்பாடா... என பெருமூச்சு விட்டவன் ஆம் என்று தலையாட்டினான்.
அங்கிருந்த கீபோட்டை அவன் நின்றபடியே இசைக்க, அங்கிருந்த மாணவிகள் கூட்டம் ஜன கன மன... என பாட ஆரம்பித்தது. ஆசிரியை பாடல் ஒரு நிமிடத்திற்கு மேலாக சென்றுவிடுகிறது என்பதால் மீண்டும் மீண்டும் அந்த பெண்களை பாடவைத்தார். ஒருவழியாக அனைவரும் ஒழுங்காக பாடி முடித்த பிறகு, ஸ்ரீதர் சூசனை தவிர மற்ற அனைவரையும் வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு, ஒரு பாடல் புத்தகத்தை அவனிடம் நீட்டி இதை வாசிக்க தெரியுமா என்று கேட்க, அவனுக்கு அப்படி ஒரு பாடல் இருப்பது கூட தெரிந்திருக்கவில்லை.
எனவே சூசனிடம் அந்த பாடலை பாடக்கூறினார். அவள் பாடிய பாட்டு ஸ்ரீதரின் மனதை தொட்டது மட்டுமின்றி அவளின் குரலும் முகபாவனைகளும் கூட அவன் மனதில் ஆழமாக பதிந்தது‌. கூட்டத்தில் அவள் பாடும்போது அவளின் குரலை கவனிக்காதவன் தற்போது வெகு அருகில் அவள் மட்டும் பாடுவது அவனுள் அழியா கல்வெட்டாக பதிந்தது. எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் அந்த பாடலையும் அவளின் குரலையும் மறக்கவே மாட்டான்.
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
என் சகோதரன்... என் சகோதரன்...
வறுமையில் வாழ்பவன் என் நண்பன்...
வருத்ததில் இருப்பவன் சகோதரன்...
அல்லல் படுபவன் என் நண்பன்...
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்...
காரணம் அவனும் மனிதன்...!
பிறமதம் சேர்ந்தாலும் என் நண்பன்...
பிறஇனம் சேர்ந்தாலும் சகோதரன்....
பிறமொழி பேசினாலும் என் நண்பன்...
பிறகுலம் சார்ந்தாலும் சகோதரன்...
காரணம் அவனும் மனிதன்...!
அழகை இழந்தவன் என் நண்பன்...
அறிவை இழந்தவன் சகோதரன்...
ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன்...
ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன்...
காரணம் அவனும் மனிதன்!!!
சூசன் பாடலை பாடி முடித்த பிறகு ஸ்ரீதர் தன்னை மறந்து வாவ் கைத்தட்டினான். பிறகு அந்த ஆசிரியரின் வழிகாட்டுதலுக்கினங்க ஏதோ அந்த பாடலை வாசித்தான். நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு மேடையில் கீபோர்டை வாசிக்க வேண்டும். அவனுக்கு வந்த ஒரே பயம் சூசனின் பாடலை தான் கெடுத்து விடுவோமோ என்றுதான்.
அதனால் கல்லூரி விட்டவுடன் நேராக ஸ்ரீ சிவசக்தி பள்ளிக்கு சென்றவன் இசை ஆசிரியரிடம் கீபோர்ட் பெற்றுக்கொண்டே அதனுடன் வீடு திரும்பினான். இரவெல்லாம் கண்விழித்து மனதில் ஓடிய சூசனின் குரலுக்கு இசை அமைத்தவன், மறுநாள் அவன் அருமையாக வாசித்ததால் அவள் தேடி வந்து பாராட்டி நட்புக்கரம் நீட்டிய பிறகே திருப்தியானான்.
அதன்பிறகு அவர்களின் சந்திப்பு எல்லா செவ்வாய் கிழமைகளிலும் என்றாகியது. காரணம் வாராவாரம் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் அவர்களின் கல்லூரி முடிந்த பிறகு கல்லூரியில் இருக்கும் சிறிய அந்தோணியார் தேவாலயம் ஒன்றில் திருப்பலி நடைபெறும். விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம். பாடல் குழுவில் சூசன் இருந்ததால் ஸ்ரீதர் அவனாக சென்று கீபோர்ட் வாசிக்கிறேன் என்று அக்குழுவினருடன் கலந்து கொள்வான். படிப்பில் கவனம் செலுத்தியதை விட இசையில் கவனம் செலுத்துவது அதிகமானது.
அப்படி இருக்கையில் ஒருநாள் சூசன், அவன் ரெக்கார்ட் நோட்டையெல்லாம் முடிக்கவில்லை என்று கேள்விபட்டு இண்டர்னல் மார்க் போய்விடுமோ என்ற அக்கறையில் அவனிடம் சண்டைக்கு சென்றாள். அதனின் பயனாக அவளே அவனின் எல்லா ரெக்கார்ட்ஸையும் முடிக்கும் படி ஆகியது. அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினர். டா, டி போட்டு பேசும் அளவிற்கு அவர்களின் நட்பு வளர்ந்தது. ஸ்ரீதரின் காதலும் தான்.
நன்றாக சென்று கொண்டு இருந்த அவர்களின் வாழ்க்கையில் பூகம்பத்தை கிளப்ப வந்தது அந்த டீச்சிங் ப்ராக்டிஸ் காலம். ஸ்ரீதர் படிக்கும் போதெல்லாம் இளநிலை கல்வியியல் ஒரே ஒரு ஆண்டு படிக்க வேண்டிய பாடமாக இருந்ததால் அவர்களின் சந்திப்பு நேரமும் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாக மாறியது. அதிலும் சூசன் நல்ல மதிப்பெண் எடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் அவள் ஸ்ரீதரை சந்திப்பதை நிறுத்திக்கொண்டாள். அவள் பயிற்சிக்காக சென்ற பள்ளியும் ஸ்ரீதர் பயிற்சிக்காக சென்ற பள்ளியும் கிழக்கும் மேற்குமாக இருந்ததால் அவர்களின் சந்திப்பு இல்லாமல் போனது ஸ்ரீதரை மிகவும் வாட்டியது.
இதற்கு ஒரு முடிவு கட்டவென்று ஒருநாள் சூசன், ஆசிரியர் பயிற்சிக்காக வந்த பள்ளியின் முன்னாள் நின்றான். அது சிவசக்தி பள்ளியே என்பதால் அவனை யாரும் தடுக்கவில்லை. நேராக சூசனை தேடி சென்றவன் கிட்டத்தட்ட இருபது பயிற்சி ஆசிரியர்களின் முன்னிலையிலேயே தன் காதலை வெளிப்படுத்த, இந்த விஷயம் நேராக லிங்கத்தின் காதுகளுக்கு சென்றடைந்தது.
அதன்பிறகு தினமும் அவர்கள் வீட்டில் சண்டை தான். சூசனின் மறுப்பு, வீட்டினரின் கண்டிப்பு, ஆண்டின் இறுதியில் இருப்பதால் வரப்போகும் வைவா மற்றும் தேர்வு... என அனைத்தும் அவனை போட்டு படுத்தி எடுத்ததால் மனமுடைந்து போனவன், ஒருகட்டத்தில் வீட்டினரிடம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டவே ஆரம்பித்து விட்டான். அதையே சூசனிடமும் கூற, அப்பொழுது தான் ஸ்ரீதருக்கு அவளை பற்றிய உண்மையெல்லாம் தெரிய வந்தது.
இதுவரை ஸ்ரீதருக்கு தெரிந்தது தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பது மதம் மட்டுமே என்று நினைத்து கொண்டு இருந்தான். பிறகு தான் தெரிந்தது அவளின் வளர்ப்பு பற்றி. ரயில் நிலையம் ஒன்றில் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட சூசனை, அவள் தற்போது இருக்கும் இல்லத்தின் சகோதரிகள் தான் எடுத்து வளர்த்தனர் என்று தெரிய, அவள் பட்ட கஷ்டங்களை எண்ணி மனமுடைந்து போனான். இருப்பினும் அவள் தன் காதலை ஏற்காமல் இருக்க காரணம் தெரியவில்லை.
ஆனால் அவளே கூறினாள் நிறைய படிக்க வேண்டும் நல்ல வேளைக்கு சென்று என்னை வளர்த்த மடத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று. அவளின் ‌உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறி விடைபெற்றான். அதில் இருந்து அவன் அவளை தொந்திரவு செய்யவில்லை. ஆனால் அவளை கண்காணித்து கொண்டே இருந்தான்.
ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த சூசன், வேலை செய்து கொண்டே தொலைதூர கல்வி மூலம் முதுநிலை ஆங்கிலமும் முதுநிலை கல்வியியலும் பயின்று முடித்து, நல்ல சம்பளத்தில் வேறொரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியை ஆனாள். அதுவரை அவளின் முன் வராதவன் பிறகு வந்து காதல் என்று நிற்க, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் காதலை மறக்காமல் வந்து நிற்கும் ஸ்ரீதரை சூசனால் மறுக்கமுடியவில்லை. கொஞ்சம் அலையவிட்டு பிறகு ஓகே கூறினாள்.
அதன்பிறகு அமைதியான ஸ்ரீதர் முதன்முறை வீட்டினரிடம் பிடித்த பிடிவாதத்தால் சூசனுக்கும் ஸ்ரீதருக்கு திருமணம் நடைபெற்றது. சூசனை மதம் மாற சொல்லிய சிவசக்தியிடம் ஸ்ரீதர் மறுப்பு தெரிவிக்க, சிவசக்தி தன் பிடியை தளர்த்தவில்லை. எனவே சூசன் தான் விட்டுக்கொடுத்து போகவேண்டியதாக மாறியது.
அதன்பிறகு வேறு இரண்டு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் அவர்களுக்கு இல்லாமல் போக தினமும் வருந்தும் சூசனை திசைதிருப்ப, அவளை எம்.பில் படிக்க கூறினான். அதை நன்முறையில் முடித்தவள் கல்வியியலில் ஆராய்ச்சி படிப்பு படிக்க எண்ண, அப்போதுதான் சித்தார்த் அவளின் மணிவயிற்றில் உண்டானான். இருப்பினும் ஸ்ரீதர் அவளின் படிப்பிற்கு தடை விதிக்காமல் அவளுக்கு தேவையான உதவிகளை செய்து இன்று அவள் கல்வியியலில் டாக்டர் பட்டம் பெற்று, ஒரு பள்ளியையே முற்றிலுமாக நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறாள். அவள் செய்த வேலைக்கென ஒரு தொகையை எடுத்து, அதை தன்னை படிக்கவைத்த மடத்தில் இருக்கும் மற்ற குழந்தைக்கு மாதமாதம் தருவதை தவறுவதில்லை.
*********
ஸ்ரீதர் சூசனின் காதலை தொடர்ந்து பல பேச்சுகள் பேசிய மூவரும் அங்கேயே பாய்விரித்து படுத்துவிட, களைப்பில் அர்ஜூனும் ஸ்ரீதரும் உடனை நித்திரையை தழுவினர். அவர்கள் உறங்கியதை கண்டுகொண்ட சக்தி, அர்ஜூன் 'ராஜராஜ சோழன் நான்' பாடலை வாசித்ததில் இருந்து சிவரஞ்சனியை நினைத்து பாடல் பாடியது வரை அர்ஜூனுக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்து இருந்ததை மனமகிழ்ச்சியுடன் சிவரஞ்சனிக்கு அனுப்பிவிட்டே நிம்மதியுடன் படுத்தான் நாளை தன் நிம்மதி பறிபோகபோகிறது என்று அறியாதவனாய்....

- தொடரும்.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 20
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN