உறவாக வேண்டுமடி நீயே 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 10


“என்ன? இன்னும் உங்க இரண்டு பேருக்கும் மயக்கம் தெளியவில்லையா? கதவைத் தட்ட தட்ட திறக்காமல் இருக்கிங்க!” எடுத்தவுடனே ஒரு பெண் போலீஸ் கேட்க,

“தொழிலில் மிகவும் பக்தி போல!” இன்னொருத்தி சொல்ல,

பாரதிக்கு இங்கேயே செத்துவிடலாமா என்றிருந்தது. இவர்கள் எல்லோரும் யார்? ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என்பது படிப்பறிவே இல்லாத ஒரு சாதாரண பெண்ணுக்குக் கூட தெரியுமே! பாரதிக்குத் தெரியாதா என்ன?

அதற்குள் துருவனுக்குக் கோபம் வர, “ஷட் அப் யாரிடம் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?” இவன் எகிற,

“அதுதான் சாரைப் பார்த்தாலே தெரிகிறதே நீ எப்படிப் பட்டவன் என்று” வந்த போலீஸில் ஒருவன் சொல்ல

அதே நேரம் துருவன் பாரதி மீது கேமரா ஒளி பட, கிளிக் என்ற சத்தத்துடன் இருவரையும் சேர்ந்து படம் பிடித்தான் AR கம்பெனிக்கு விரோதியான ஒரு பத்திரிகை நிபுணர்.

ஏற்கனவே பதட்டத்தில் இருந்தவளுக்கு அந்த ஒளி வெள்ளம் அவள் மூலைக்குள் எதையோ மறுபடியும் உணர்த்த பாரதி, அதிர்ச்சியில் “அம்மா!” என்ற கதறலுடன் மயக்கம் போட்டு விழப் போக, தாவிச் சென்று தாங்கிக் கொண்டான் துருவன். அதுவும் கேமெராவில் பதிவானது.

துருவன் பாரதி கெட்ட நேரமோ என்னமோ அவர்களுக்கு இப்படி எல்லாம் நடந்ததது. ஆனால் அபி தன் புத்திசாலித் தனத்தாலும் செல்வாக்காலும் அதிரடியாலும் இதற்கு எல்லாம் காரணமான பாரதியின் மாமா புகழ் மண்ணைக் கவ்வினான். அது மட்டுமில்லாமல் அவனை உருத் தெரியாமல் அழிக்கவும் தயங்கவில்லை AR.

பாரதி நந்திதாவின் பி.ஏ என்று தெரிந்ததிலிருந்து அவளைக் கண்காணிக்க அபி ஒருவனை நியமித்திருக்க, பாரதி ஹோட்டலுக்கு வந்ததிலிருந்து இப்போது அறையில் நுழைந்த போலீஸ் வரை அனைத்தையும் அபியிடம் சொன்னவன் கூடவே அந்த கேமராவில் துருவன் பாரதி இருவரும் பதிவானதையும் சொல்ல மறக்கவில்லை.

இது போதுமே அபிக்கு! இங்கு காரில் நந்திதா தூங்குகிறாள் என்பதையும் மறந்து ருத்ர தாண்டவம் ஆடிவிட்டான் அபி. தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே அடித்தான். அவர்களை நுனியிலிருந்து அடி வரை இவன் என்ன யார் என்று விசாரிக்க அவனுக்கு கிடைத்த பதில் பாரதியின் மாமன் புகழ்.

புகழுக்கு பாரதி மேல் நீண்ட நாட்களாகவே ஆசை இருக்க, அந்த ஆசை எல்லாம் அவள் துருவனுடன் ஒட்டுவதை பார்த்தவனுக்கு வெறியாக மாறியது. அதனால் அவன் போட்ட திட்டம் தான் இந்த சுவாதி தற்கொலை நாடகம். பாரதி அவர்கள் சொல்லி இருந்த அறைக்குள் வரும் போது ஏற்கனவே புகழ் அறையில் ஒளிந்திருக்க வேண்டும். பின் இவன் சொல்லியபடியே அவனுடைய போலீஸ் நண்பன் வந்து இருவரையும் சேர்த்து பிடிக்க, அதில் மானத்தை இழந்த பாரதிக்கு இவன் வாழ்க்கை கொடுக்க வேண்டும்.

அப்பொழுது தானே பாரதியை மணந்து அவனின் காலுக்குக் கீழே வைத்துக் கொள்ளள முடியும்? காலம் காலமாக ஒரு ஆண் தான் மட்டுமே விரும்பிய பெண்ணை அடைய நிறைய கதைகளிலும் சினிமாக்களிலும் இப்படித் தானே காண்பிக்கிறார்கள்? புகழின் கெட்ட நேரம் பாரதியின் நல்ல நேரம் பாரதி தவறி துருவன் அறைக்குப் போய் விட்டாள். இவன் சொன்னபடியே வந்த போலீஸூம் புகழ் அறையில் பாரதி இல்லை என்பதை அறிந்து பேருக்கு என்று மற்ற அறைகளைப் பார்க்க துருவன் பாரதி இருவரும் மாட்டிக் கொண்டார்கள்.

அப்பவும் வன்மம் வளர, புகழ் அந்த போட்டோகிராபரை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டான். ஆனால் இதெல்லாம் அடுத்த நொடியே தலை கீழாக மாறியது. அந்த ஹோட்டலின் நிர்வாகி ஒரு அரசியல் தலைவருக்கு கையாள் என்பதால் தன் சாகாக்களுடன் அபியின் கட்டளைக்கு இனங்கி அங்கு வந்து விட, அவரைப் பார்த்ததும் நழுவிக் கொண்டான் புகழ்.

அபியின் கட்டளைப் படி பாரதி துருவன் இருவரின் மொபைலையும் அவர்களிடமிருந்து வாங்கியர் அவள் இருவரையும் வேறு ஒரு நல்ல அறையில் வைத்துப் பூட்ட, பாரதியின் மயக்கத்தை நினைத்து பதட்டத்திலிருந்த துருவனுக்கு நடந்தது எதுவும் மனதில் பதியவில்லை.

பின் அங்கிருந்த போலீஸ் மற்றும் கேமராமேனின் போன்களை வாங்கி கொண்டிருந்த நேரம் உள்ளே நுழைந்தார் D.C.P க்கு கீழ் பணிபுரியும் தனிப்பட்ட ஒருவர். பின் அந்த போட்டோகிராப்பர் ஒரு நாளந்தர பத்திரிகையின் போட்டோகிரப்பர் என்பதை அறிந்தவர் அவனை நான்கு சாத்து சாத்தி அவனிடமிருந்த ஆதாரத்தை அழித்தார் அவர்.

இங்கு அறையில் பாரதிக்கு சற்றே மயக்கம் தெளிய, “நான் எதுவும் செய்யவில்லை. என்ன நம்புங்கள் நான் அப்படி இல்லை” என்று கண்ணைத் திறக்காமல் பயத்தில் அவள் அனத்தவும்,

“பாரதி! என்னை பார். அப்படி எதுவும் இல்லை” துருவன் அவளை உலுக்கி எழுப்ப

அவன் குரலுக்கு அமைதியாகி விழி திறந்து சுற்றும் முற்றும் பார்த்து எழுந்து அமர்ந்தவள் கண்ணில் அவளையும் மீறி கண்ணீர் வழிய, நடந்ததை யோசித்தவள் “நான் இங்கே இப்படி மாட்டிக்கொண்டேன் என்று தெரிந்தால் என் அப்பா உயிரையே விட்டுவிடுவார். துரு! அந்... அந்த.... போட்டோ மட்டும் வெளி வந்தது என்றால் பிறகு நானும் உயிரோடு இருக்க மாட்டேன்” அவள் இருந்த மனநிலைக்கு முகத்தை மூடிக்கொண்டு குமுறினாள் பாரதி.

என்ன தான் தைரியசாலியான பெண்ணாக இருந்தாலும் ஒரு அவப் பெயர் அதிலும் தங்களின் பெண்மையை பாதிக்கும் வகையில் வரும் போது எல்லா பெண்களும் ஒரே மாதிரி தான் மாறி விடுகிறார்கள். அதிலும் பாரதி மாதிரி நடுத்தர வர்க்கத்தினர் மாதா பிதா குரு தெய்வத்திற்கு அடுத்த படியாக மானத்தைத் தானே உயிராக கருதுகிறார்கள்?

“ஏய்! அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. அந்தளவிற்குப் போக நான் விட்டுவிடுவேனா என்ன?” அவள் கைகளை விலக்கியபடி இவன் தைரியம் கூற ,

“போன் இருந்தாலாவது நாம் யாரிடமாவது உதவி கேட்கலாம். ஆனால் அதையும் வாங்கிக் கொண்டார்கள். நம்மால் என்ன செய்ய முடியும்?”

“அநேகமாக இதுக்கு அண்ணன் தான் காரணமாக இருப்பார். எப்படியோ இந்த விஷயம் அண்ணனுக்குப் போயிருக்கிறது. உனக்கோ எனக்கோ யாராவது போன் செய்தால் இல்லை நாம் யாருக்காவது போன் செய்து உதவி கேட்டாலோ நிச்சயம் இந்த விஷயம் வெளியே போக வாய்ப்பு இருக்கிறது. அதனால தான் அண்ணன் அப்படி செய்திருக்கார். பாதுகாப்பாக நம்மை இந்த அறையில வைக்கவும் அவர் தான் சொல்லி இருப்பார். அதனால் அவர் நிச்சயம் நாம எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியே போக வழி செய்வார். நீ பயப்பாடமல் இரு” துருவன் கண்ணால் பார்த்த மாதிரியே அவளுக்கு தைரியம் சொல்ல, பெண் மனமோ தைரியம் கொள்ள மறுத்தது.

“இல்லை. இது வேறு யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள். விஷயத்தைப் பெரிதாக்கத் தான் நம்மை இப்படி ஒன்றாக அடைத்து வைத்திருக்காங்க” அவள் மட்டுக்கும் இன்னும் ஏதேதோ பிதற்ற,

“ஹே பாரதி! என்னைப் பார்” என்று அவளை உலுக்கியவன், “அப்பவும் நீ என்னுடன் தான் இருந்தாய். இப்பவும் நீ என்னுடன் தான் டி இருக்கிற. பிறகு என்ன பயம்?”

அவன் சொன்ன இந்த வார்த்தைகளில் தான் பிதற்றுவதை நிறுத்தி விட்டு நிலைகுத்திய பார்வையுடன் அவன் முகம் பார்த்தவள், “அந்த அறையில் மட்டும் உங்களுக்கு பதில் வேறு யாரவது இருந்திருந்தால்…” என்று நடுங்கிய படி அவள் சொல்ல,

“அப்பவும் உன்னை நான் விட்டிருக்க மாட்டேன்” இவன் குரலில் அப்படி ஒரு உறுதி.

“என்னை ஏதாவது செய்திருந்தால்?” முகத்தில் ரத்த பசையே இல்லாமல் வெளுத்துப் போய் அவள் முனுமுனுக்க,

“அப்பவும் என் மனைவியை நான் விட்டிருக்க மாட்டேன்” வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமால் அவளை இழுத்து அணைத்து ஆறுதல் படுத்த, ஒரு பெரிய கேவலுடன் இவளும் துருவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

ஆண்களின் காதல் தான் எவ்வளவு ஆழமானது! அதை ஒரு காதலனாகத் தன் காதலிக்கு உணர்த்தினான் துருவன்!

கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டு இருவரும் பிரிய, நீங்க இருவரும் வெளியே வாருங்கள்” என்றான் வந்தவன்.

எழுந்து நின்ற பாரதிக்கோ கை கால் எல்லாம் நடுங்கியது. அந்த நடுக்கத்தினுடனே அவளுடைய துப்பட்டாவால் முகத்தை மறைத்த படி தலைக்கு முக்காடு போட,

அவளின் எண்ணம் புரிந்து “ச்சீ! நான் தான் இருக்கேன டி. என்னை நம்பு கண்ணம்மா! அப்படி எதுவும் உனக்கு நடக்க நான் விட மாட்டேன் டா” அவள் முகத்தைத் தாங்கி உயிரே உருகும் குரலில் சொன்னவன் பின் நெற்றியில் முத்தமிட்டு அவள் கையை இறுக்கிப் பிடித்த படி வெளியே தன்னவளை அழைத்துச் சென்றான் அந்த காதலன்.

இவர்கள் முன்பிருந்த அறைக்கு வர, ஐயோ அம்மா என்ற எந்த சத்தமும் எழுப்பாமல் அபியிடம் மிதி வாங்கிக் கொண்டிருந்தான் அந்த போட்டோகிராபர். அபி அடிப்பதைப் பார்த்தவள் பின் சுற்றுபுறத்தை ஆராய்ந்து அங்கிருந்த நந்திதாவைப் பார்த்ததும் “மேம்!” என்ற கதறலுடன் ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டாள் பாரதி.

எத்தனை ஆட்கள் இருந்தாலும் அந்த கேமராமேனையும் நடிக்க வந்த போலீஸையும் தன் கையாலேயே துவைத்துக் காயப் போட்டான் அபி.

“அண்ணா விடுங்கள் செத்துட போகிறானுங்க” என்று துருவன் வந்து தடுக்க, எட்டி அந்த போட்டோகிராபர் முகத்திலேயே உதைத்தவன்,

“யார்... கிட்ட.... டா... உன் வேலையக் காட்டுற? இந்த AR தம்பியையே அசிங்கப்படுத்தப் பார்க்கிறாயா? அதற்கு நான் விட்டுவிடுவேனு எப்படி நினைத்த?” இப்பொழுது ஒரு உதையை அவன் வயிற்றில் விட்டவன் “சாவு டா... சாவு... நீ செத்தால் உன்னை எரித்து அந்த சாம்பலைக் காற்றால் கூட வாசம் பிடிக்க முடியாத அளவுக்கு அழித்து விடுவேன் டா” அபி கர்ஜிக்க , துருவன் தான் அவனை அடக்கி சமாதானப் படுத்தினான்.

எல்லாம் முடிந்து எல்லோரும் சென்றதும் “சரி வாங்க வீட்டுக்குப் போகலாம். பாரதியை அவள் வீட்டில் விட்டுவிடலாம்” என்ற அப்டி அபி ஓர் அடி எடுத்து வைக்க,

“அண்ணா! இந்த நிமிஷமே இப்பவே எனக்கும் பாரதிக்கும் கல்யாணம் செய்து வைத்து விடுங்கள் ணா!” நின்ற இடத்திலிருந்து இமியும் அசையாமல் பிடிவாத்துடன் ஒலித்தது துருவனின் குரல்.

“டேய்! என்ன டா திடீர்னு!” அபி குழம்ப

“இங்கே உங்களைப் பார்க்கும் வரை என் உயிர் என்னிடம் இல்ல ணா!” துருவன் உணர்ந்து சொல்ல, அபி நந்திதா இருவருடைய பார்வையும் பாரதி மேல் படிந்தது.

“இதற்கு பின்னால் அந்த புகழ் தான் இருக்கிறான் எனும்போது அவனிருக்கும் வீட்டுக்கு என்னால் இனி பாரதியை அனுப்ப முடியாது ணா. நம் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றால் அவமுறையாக வரவேண்டும். அதனால் தான் சொல்றேன். என்ன ஆனாலும் பாராதியை விட்டுக் கொடுக்க முடியாது” என்ற துருவனின் பேச்சிலும் குரலிலும் பிடிவாதமே நிறைந்து இருந்தது.

அபி ஏதோ சொல்ல வர, அதற்குள் நந்திதா “உங்கள் விஷயத்தில் நான் தலையிடக் கூடாது. இருந்தாலும் என் கருத்தை நான் சொல்கிறேன். அவளோ நீங்களோ அநாதை கிடையாது. பெற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ள அவளுக்கு அப்பாவும் உங்களுக்கு அம்மாவும் இருக்கிறார்கள். பெற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களை மீறி கல்யாணம் செய்து கொண்டவர்கள் வாழ்க்கை எல்லாம் என்ன ஆனது என்று நான் பார்த்திருக்கிறேன்” அவள் குரலில் அப்படி ஒரு வலி ஒரு நிமிடம் நிறுத்தியவள்,

“உங்களுக்கு பாரதியோட பாதுகாப்பு தானே முக்கியம்? அவள் அவ வீட்டுக்குப் போக மாட்டாள். என் வீட்டுக்கு நான் அழைத்திட்டு போறேன். காலையில இரண்டு வீட்டுப் பெரியவர்களை உட்கார வைத்துப் பேசுவோம். உங்கள் இருவருக்கும் கல்யாணமாக எவ்வளவு நாளானாலும் பாரதி என் பொறுப்பில் தான் இருப்பாள். கவலைப் படவேண்டாம்” என்று சொல்லியவள் திரும்பி, ‘நீங்க என்ன சொல்கிறீர்கள்?’ என்பது போல் அபியைப் பார்க்க, அவனோ ஒரு விளங்காப் பார்வையுடன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்பொழுது இவளும் அவனைப் பார்க்க, இருவரின் பார்வையும் ஒரு வினாடி ஒன்றோடொன்று கவ்வி நின்றது. இருவரில் முதலில் வெளி வந்தவன் அபி தான்.

“எனக்கு சம்மதம். நீ என்ன டா சொல்ற? ஆனால் இதற்கு எல்லாம் அவசியமே இல்லை” ஏனென்றால் இனி புகழ் என் பொறுப்பு. இனி நான் அவனை விடுவதாக இல்லை என்ற த்வனியில் பேசினான் அபி.

ஏற்கனவே பாரதியின் அப்பாவிடம் பாரதியின் தோழிக்கு விபத்து என்பதை நந்திதா சொல்லி, அவள் இரவு அங்கேயே தங்கிக் கொண்டாள் என்பதை தெரிவித்திருக்கவும், அதனால் பாரதி நந்திதா வீட்டில் தங்குவதற்குப் பிரச்சனை இல்லாமால் போனது.

நந்திதா சொன்ன மாதிரியே காலையில் இருவீட்டுப் பெரியவர்களை அமரவைத்து அனைத்தையும் சொல்ல, திருமலை அதிர்ச்சியில் ஒன்றும் பேசவில்லை. பேச முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்ணைப் பெற்றவர் இல்லையா? தங்கள் இளவரசிகளைப் பெற்ற தந்தைகளுக்குத் தானே தெரியும் இந்த செய்தி எவ்வளவு பெரிய நரக வேதனையைக் கொடுக்கும் என்று!

தாய் எதுவும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்த துருவன் எழுந்து சென்று அவர் காலடியில் அமர்ந்தவன் “அம்மா! நான் பரிதாபப் பட்டு பாரதியைக் கல்யாணம் செய்ய சம்மதம் சொல்லவில்லை மா. நான் அவளை விரும்புகிறேன். இந்த பிறவியில் உங்களுக்கு இரண்டாவது மருமகளாக வருவதற்கு ஒருத்தி இருக்கிறாள் என்றால் அது அவள் மட்டும் தான் மா. ப்ளீஸ் மா!” ஏதோ தாய் அந்தஸ்து பேதம் பார்த்து மறுக்க நினைத்துப் பேசாமல் இருக்கிறாரோ என்று நினைத்து இவன் தன மனதில் இருந்ததைச் சொல்ல,

“டேய்! நான் உன் அம்மா டா. உனக்கு எது பிடிக்குமென்று எனக்குத் தெரியாது? இவ்வளவு கேட்ட பிறகு இந்த நிமிஷமே பாரதியை என் மருமகளாக அழைத்துப் போக என் இதயம் துடிக்கிறது. ஆனால்…”

“ஆனால் என்ன மா?” வேணியைத் தன் மடியில் அமர்த்திய படி சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அபி கேட்க, இன்று தான் அபி நந்திதா வீட்டிற்குள் முதல் முறையாக வருகிறான். அதனாலேயே வேணி அவனை விட்டு நகரவில்லை.

“பெரியவன் நீ இருக்கும் போது எப்படி அபிப்பா நான் இவனுக்கு கல்யாணம் செய்ய முடியும்?” ஒரு தாயாய் தன் மனதில் இருந்ததை அவர் கேட்க, இந்த கேள்வியால் அடுத்த வினாடியே அபியின் பார்வை நந்திதாவின் பக்கம் செல்லவும் அவளும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையில் என்ன உணர்ந்தானோ?

“முதலில் தம்பிக்கு முடியுங்கள் மா. நான் இப்படியே இருக்கப் போவது இல்லை. கூடிய சீக்கிரம் உங்களுக்குப் பெரிய மருமகள் வருவாள். அதனால் வருகிற முகூர்த்தத்திலேயே இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் முடித்து விடலாம்” அபியின் குரல் இளகிப் போய் உறுதியில் ஒலித்தது.

இவ்வளவு நாள் திருமணமே வேண்டாம் என்று சொன்ன மகன் இன்று பெரிய மருமகள் வரை பேசவும் மேகலைக்கு சந்தோசத்தில் கண்களே கலங்கியது. எங்கே அவன் மனது மாறிவிடுவானோ என்ற பயத்தில் வரும் முகூர்த்தத்திலேயே திருமணம் செய்ய சம்மதித்தார் அவர்.

பின் திருமலையும் சம்மதிக்க, இன்றிலிருந்து நான்காம் நாள் நன்றாக இருக்கிறது என்றார்கள். ‘இவ்வளவு சீக்கிரமா?’ என்று மேகலை யோசிக்க, துருவன் அன்றே செய்யச் சொல்லி பிடிவாதம் பிடித்தான். அதுவரை பாரதியும் அவள் அப்பாவும் நந்திதா வீட்டிலே இருப்பது என்று முடிவானது.

அவசரமாக நடப்பதால் கோவிலில் திருமணம், பின் வரவேற்பு என்று முடிவானது. திருமணம் அன்று எல்லோரும் கோவில் போக வழி செய்தவன், தான் நந்திதாவையும் வேணியையும் அழைத்து வருவதாக அபி சொல்ல, அதன் படி முன்பே சென்றனர் அனைவரும்.

அதன் படியே கோவிலினுள் அபி பட்டு வேஷ்டி சட்டையில் பட்டுப் பாவடை சட்டையுடன் மிளிர்ந்த வேணியைத் தூக்கிய படி உள்ளே நுழைய, அவனுக்கு இடதுபக்கம் இரண்டு அடி இடைவெளி விட்டு பின்னால் அம்மன் தேர் என நந்திதா வரவும், இதைப் பார்த்த தங்கத்திற்கு மனது நிறைந்தது. ஏன் மேகலைக்குக் கூட கண்ணில் ஒரு மின்னல் வந்தது. ‘ஆனால் இது எப்படி சாத்தியம் ஆகும்? இப்படி நினைப்பது கூட தவறாச்சே’ என்றும் அவரின் முதிர்ந்த மனம் நினைத்தது. நாத்தனார் முடிச்சைப் போதும்பொண்ணையே போடச் சொன்னார்கள்.

முதல் முறையாக இந்த சடங்குகளை எல்லாம் பார்த்த பபுல் தான் ஐயரை இது எதுக்கு அது ஏன் என்று ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஆர்வத்தைப் பார்த்து பொறுமையாக நிதானமாக எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார் அந்த ஐயர்.

அன்று மாலையே திருமண வரவேற்புக்கும் ஏற்பாடு செய்திருந்ததால் யாருக்கும் நிற்கக் கூட நேரமில்லை. மாலையும் வர, ஒரு பெரிய ஹோட்டலில் வரவேற்பு நடக்க, அதில் மனமொத்த தம்பதிகளாக சிரிப்பும் சந்தோஷமுமாக வந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர் அன்றையை நாயகனும் நயகியுமான பாரதியும் துருவனும்.

கார்டனில் அங்கங்கே நின்றிருந்த தொழில் துறை நண்பர்களிடம் எல்லாம் சென்று ஓரிரு வார்த்தை பேசி உபசரித்து வந்தான் அபி. அப்படி ஒருவரிடம் பேசும் போது ஒரு இருண்ட இடத்திலிருந்து, “என்னடா சொல்ற? நிஜமாகவா?” என்று ஒருவன் கேட்க,

“அட! பின்ன என்ன நான் பொய்யா சொல்ல போறன்?” என்று வேறு ஒருவன் கேட்க,

“பார்க்கத் தான் நந்திதா பிசினஸ் வுமன். பழக்கம் எல்லாம் படு மோசம்! இப்போது யாரோ ஒரு நடிகருடன் சுற்றிக்கொண்டு இருக்கிறாளாமே? முன்பு கூட யாரோ ஒரு ஐம்பது வயது தொழிலதிபர் கூட பழக்கமாமே?” என்று இன்னொருவன் சொல்ல,

“அது பிஞ்சிலேயே அப்படித் தானாம். குழந்தை கூட யாருடையதென்று அவளுக்கே தெரியாதாம்” என்று இன்னொருவன் சொல்லி சிரிக்க,

“தப்” என்று சத்தம் எழ, “ஐயோ! அம்மா!” என்ற சந்தத்துடன் பேசியவர்களில் ஒருவன் விழ, அவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் அபி.

அங்கு பேசிய ஒருவனையும் அவன் விடவில்லை. அடி வாங்கியவர்கள் அடிக்குப் பயந்து ஓட, அப்பவும் விடாமல் இவன் துரத்தி, அங்கிருந்த செயற்கை நீரூற்றில் அவர்களை இவன் முக்கி எடுக்க, வரவேற்பு நடக்கும் இடமே கலவரமானது.

“யாரை என்ன பேச்சு டா பேசுற? நந்திதா என் மனைவி டா! நான் தாலி கட்டினவள் டா! அந்த குழந்தை வேணி என் மகள் டா! என் வீட்டு விழாவிற்கு வந்து என் மனைவி பெண்ணப் பற்றி பேசுகிறாயா? இந்த AR பற்றி நினைத்தாலே நான் சும்மா விட மாட்டேன். இதில் என் மனைவி பற்றி பேசினால் சும்மா விடுவேனா?” என்று சொல்லியபடி விடாமல் அபி ருத்திர தாண்டவம் ஆட, பின் அங்கு வந்திருந்தவர்கள் தான் அவனை விலக்கி விட்டார்கள்.

அப்பொழுதும் தன் ஆக்ரோஷம் அடங்காமல் தங்கத்திடமிருந்த வேணியை வாங்கிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றிருந்த நந்திதாவை நெருங்கியவன், அவள் கையைப் பற்றி அங்கிருந்த சிறு மேடை மேல் இழுத்துச் சென்றவன், உரிமையாக அவள் தோல் மேல் கை போட்டு அணைத்த படி,

“நந்திதா வெறும் நந்திதா இல்லை. யுகநந்திதா அபிரஞ்சன்! எஸ்… ஷி இஸ் மை வொய்ஃப். எங்களுக்கு முன்பே கல்யாணம் ஆகிவிட்டது. வேணி எங்கள் மகள்” இதற்கு மேல் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் பேசியவன்,

“இந்த விழாவோட சேர்ந்து எங்கள் விஷயத்தையும் ஹாப்பியா கொண்டாடுங்கள். லெட்ஸ் ஸ்டார்ட் பிரெண்ட்ஸ்” அவன் உறுதியும் கர்வமும் நிமிர்வுமாகச் சொல்லவும், அங்கிருந்த சலசலப்புகள் விலக, அவர்கள் மூவரையும் போட்டோ எடுத்துக் கொண்டார்கள் வந்திருந்த பத்திரிகையாளர்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு சுற்றியிருந்தவர்களைப் பார்த்து கர்வத்தோடு சொன்னானோ அதெல்லாம் ஓரிடத்தில் அதிர்ந்து போய் நின்றிருந்த தாயைப் பார்த்ததும் ஒன்றுமில்லாமல் போனது. கையில் இருந்த வேணியுடன் தாயிடம் வந்தவன், “அம்மா! அது வந்து…” என்று இவன் ஆரம்பிக்க,


“எனக்கு மிகவும் டயர்டா இருக்கு. நான் ரூமுக்குப் போகிறேன். விழா முடிந்ததும் உன் மனைவியை அழைத்துக்கொண்டு ரூமுக்கு வா அபிப்பா” என்ற கட்டளையுடன் விலகிச் சென்று விட்டார் அவனைப் பெற்ற தாய்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Ooooooo.... ஏன் இவங்க கல்யாணம் yaarukum sollamal இருக்காங்க.... Athuyum kuzhanthai vera இருக்கா..... Nalavelai abi ku therinjathu naala அந்த ஆளுங்களை ஒரு vazhi pannitaan.... அவன் அம்மா vuku semma shock 🤯... Super Super maa... Semma episode
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Ooooooo.... ஏன் இவங்க கல்யாணம் yaarukum sollamal இருக்காங்க.... Athuyum kuzhanthai vera இருக்கா..... Nalavelai abi ku therinjathu naala அந்த ஆளுங்களை ஒரு vazhi pannitaan.... அவன் அம்மா vuku semma shock 🤯... Super Super maa... Semma episode
அவன் சொல்ற மாதிரியா சித்து ம்மா.. திருமணம் செய்தான்... கேடி பயள்.... நேசங்கள் சித்து சிஸ்🤗🤗🤗💕💕💕
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN