உறவாக வேண்டுமடி நீயே 11

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 11

எல்லோரின் மனநிறைவோடும் சந்தோஷத்தோடும் ஆரம்பித்த விழா இப்படி களேபரத்தில் முடிய யார் காரணம்? சாட்சாத் புகழே தான் காரணம். ஆமாம், அவன் தான் பாரதி நந்திதாவிடம் வேலை செய்வதால் அவளை ஹோட்டலுக்கு வரவழைக்கத் திட்டம் போட்ட அன்று நந்திதாவால் அவளுக்கு உதவி கிடைக்கும் என்பதை அறிந்து நெடுஞ்சாலையில் அவள் வண்டியைப் பஞ்சர் செய்து பாட்டிலால் அவள் மண்டையை உடைத்து படுக்க வைக்க நினைத்தான். ஆனால் அதிலிருந்து அவளைக் காப்பாற்றி விட்டான் அபி. அவளை மட்டுமில்லாமால் பாரதி துருவன் விஷயத்தையும் ஒன்றுமில்லாமால் செய்துவிட்டான் அபி.

புகழ் அனுப்பிய சாதாரண போலீஸ் எல்லாம் அவனுக்கு எம்மாத்திரம்? இப்படி அடுத்தடுத்து தோல்வியைக் கண்டு புழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு பாரதியின் திருமண செய்தி பேரிடியாய் விழ, அதையெல்லாம் தூக்கித் தூரப் போடுவது போல் அவன் நினைக்காததை அவனுக்கு கொடுத்தான் அபி. புகழ் வண்டியில் அவனுக்கே தெரியாமல் போதைப் பொருளை வைத்து அவனை உள்ளே தள்ள நினைக்க, புகழின் நேரம் அந்த வண்டியிலிருந்த அவன் நண்பன் மாட்டிக் கொண்டான்.

அசால்டாக இது போல் பல போதைப் பொருட்களைக் கடத்தியவனான புகழுக்கு முதல் முறையாக பயத்தையும் நடுக்கத்தையும் காட்டினான் அபி. இதை அபி செய்ய, இதற்கு காரணம் நந்திதா என்று புகழ் நினைக்க, அதனால் அவளை அசிங்கப் படுத்தவும் இந்த விழா நல்ல முறையில் முடியாமல் போகவும் அவனுடைய ஆட்களை ஏவி விட்டு இப்படி எல்லாம் களேபரத்தை நடத்தினான் புகழ்.

அவன் நினைத்தது எல்லாம் நடந்தாலும் அவன் நினைக்காதது, அவன் மட்டுமா? யாரும் நினைக்காதது அபி நந்திதாவின் திருமண பந்தம் அதுவும் அபி வாய் மொழியாக அறிவித்தது தான்!

அபி சொன்னதைக் கேட்டு தங்கம் நிம்மதி அடைந்தார் என்றால் பாரதியும் போதும்பொண்ணுவும் அப்படியா! என்று ஆச்சரியம் அடைந்தார்கள். துருவனோ இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல் இருந்தான். பப்ளுவோ அன்று என் குயீன் வாழ்வில் வந்து போனவன் நீ தானா? என்ற பார்வையில் நின்றான்.

ஆனால் நந்திதாவோ ‘இதைத் தான் நான் உன்னிடமிருந்து எதிர் பார்த்தேன். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் இல்லை. அவர்கள் என்னை என்ன சொல்லியிருந்தால் நீ இவ்வளவு ஆவேசமாக என்னை உன் மனைவி என்று சொல்லியிருப்பாய்?” என்று யூகித்தவளால் அவள் உடல் தகித்து இரும்பாய் இறுக, அதிலும் அபியின் கைப் பிடியில் இருக்கப் பிடிக்காமல் அவள் இறுக, அவள் தோள் மேல் கை போட்டிருந்த அபிக்கும் அது தெரிய, அதை அலட்சியமும் செய்தான் அவன்.

இப்படி அவரவர் அவர்களின் மனநிலையில் இருக்க, மேகலை தான் அதிர்ந்து நொறுங்கி நிலைகுத்திய பார்வையுடன் நின்றார். ‘என் மகனா இப்படி? அதுவும் என் தந்தைக்கு சமமாக அபிப்பா என்றழைத்து நான் போற்றி வளர்த்த மகனா எனக்குத் தெரியாமல் திருமணம் செய்ததை என்னிடமே மறைத்தான்!’ பெற்ற தாய் இல்லையா? அவரால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

அவரின் நிலையைப் பார்த்தவன் பயந்த படி அவசரமாக ஓடி வந்து “அம்மா” என்று அபி தாயை உலுக்க,

“நான் இன்னும் சாகவில்லை டா” மகனின் வெளிறிய முகத்தைப் பார்த்து அப்படி சொன்னாரா இல்லை நீயா திருமணம் செய்யும் அளவுக்கு நான் ஒன்றும் சாகவில்லை என்பதாக சொன்னாரா என்பது அவருக்கே தெரியவில்லை.

அபி, “ம்மா…” என்று ஏதோ சொல்ல வர, “எனக்கு டயர்டா இருக்கு அபிப்பா. நான் ரூமுக்குப் போறேன். விழா முடிந்ததும் உன் மனைவியை அழைச்சிகிட்டு ரூமுக்கு வா” என்ற சொல்லுடன் விலகிச் சென்றார் அவர்.

என்ன தான் அவருக்குத் துணையாக போதும்பொண்ணை அனுப்பியிருந்தாலும் விழா முடியும் வரை அவ்வப்போது தாயை வந்து பார்த்துச் சென்றான் அவன். எல்லாம் முடிந்து கையில் பழச்சாறுடன் அவர் எதில் மண்டியிட்டு அமர்ந்தவன், “ம்மா! இதைக் குடிங்க” என்று சிறு அதட்டல் இட, அந்த குரலில் ‘நீயா அபிப்பா இப்படி?’ என்பது போல் அவர் மகன் முகம் பார்க்க, “ம்மா... அப்படி பார்க்காதிங்க ம்மா... நான் என்ன நடந்தது என்று முதல்ல இருந்தே சொல்றேன்” என்றவன் நான்கு வருடத்திற்கு முன்பு நடந்த சகலத்தையும் சொல்ல ஆரம்பித்தான் அபி.

அதற்கு முன் நந்திதாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜமீன் வம்சத்தில் பிறந்த துரைசிங்கம் வெளிநாட்டில் படித்தவர். அவர் பார்க்காத அழகிகள் இல்லை. ஆனாலும் அவருக்கு சலனம் ஏற்பட்டது என்னமோ அவர் எஸ்டேட்டில் வேலை செய்த ஒரு பெண்ணிடம் மட்டும் தான். அந்த சலனத்தையும் காதலாக வளர்த்துக் கொண்டவர் தன் தெய்வீக காதலை தந்தையிடம் சொல்ல, அவர் ஒற்றுக் கொள்ளாததால் அந்த பெண்ணிடம் சொல்லி அவள் சம்மதத்துடன் இரு வீட்டின் பெற்றோருக்குத் தெரியாமல் ஊராருக்கும் தெரியாமல் காதலித்தவளையே மணந்து கொண்டார்.

இது அவர் தந்தைக்குத் தெரிய வர, மகனை அந்த பெண்ணிடமிருந்து பிரிக்க நினைத்து, மகனை வெளிநாட்டிலே தங்கி சில பல வேலைகளை செய்ய வைக்க துரைசிங்கத்தை வெளிநாடு அனுப்பி விட்டார். பயணம் முடித்து வந்த பிறகு தந்தையிடம் திருமணத்தைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் துரைசிங்கம் சென்றார்.

ஆனால் அவர் திரும்பி வந்து பார்க்கும் போது மண் சரிவில் சிக்கி அவர் மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி தான் கிடைத்தது. பின் ஒரு வருடம் சோகத்திலிருந்த மகனை குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று பேசி தங்கள் அந்தஸ்துக்கு ஏற்றமாதிரி ஒரு பெண்ணை மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் அவர். கட்டின மனைவியுடன் அதிக ஒட்டுதல் இல்லாமால் தான் வாழ்ந்தார் துரைசிங்கம்.

மகனுக்கு திருமணம் செய்த கையோடு தன் சங்கல்பம் முடிந்தது என அவரின் தந்தையும் இறந்து விட, பிறகு முழு முதல் பொறுப்பும் துரைசிங்கத்திடமே வந்து சேர்ந்தது. அப்பொழுது தான் அந்த உண்மை தெரிய வந்தது துரைக்கு. அவர் காதலித்து மணந்த அவர் மனைவி மண் சரிவில் இறக்கவில்லை என்றும் அவருடைய மகளைப் பெற்றெடுக்கும் நேரத்தில் பிரசவத்தில் தான் இறந்தார் என்றும். இதைக் கேட்டு தந்தையின் சூழ்ச்சியில் நடை பிணம் ஆனார் என்றால் அந்த மகள் உயிரோடு தான் இருக்கிறாள் என்ற செய்தி தான் அவரை உயிர்ப்புடன் நடமாட வைத்தது. பின் மனைவிக்குத் தெரியாமல் அவர் மகளைத் தேட, ஒரு காப்பகத்தில் அவளுடைய நான்காவது வயதில் தான் மகளாக அவருக்குக் கிடைத்தாள் யுகநந்திதா.

அது தான் அவர் மகளை முதலும் கடைசியுமாக தூக்கி உச்சி முகர்ந்தது. பின் தன் கவுரவத்திற்கு அஞ்சி அவரிடம் விசுவாசமாய் இருந்த தங்கத்தின் கணவரிடமும் தங்கத்திடமும் மகளை கொடுத்து வளர்க்கச் சொல்ல, தங்கத்தின் கணவரோ நந்தித்தாவின் ஆறாவது வயதில் இறந்து விட்டார். பின் நந்திதாவின் எட்டாவது வயதில், துறைசிங்கத்தின் மனைவிக்கு கருப்பையில் ஏதோ கோளாறு இருப்பது தெரிய வர, அதனால் அதை அவரிடமிருந்து எடுக்கும் படி ஆனது. வேறு குழந்தைகள் இல்லாததால் யாருக்கும் தெரியாமல் வளர்க்க பட்ட யுகநந்திதாவே அந்த ஜமீன் வம்சத்திற்கு வாரிசு என்று ஆனாள்.

இதையும் தன் மனைவிக்குப் பயந்து வெளியே சொல்லவில்லை துரைசிங்கம். அதனாலேயே அவளை வெளிநாடு அனுப்பி வளர்க்க ஆரம்பித்தார். யாரிடமும் இந்த உண்மையை ஏன் நந்திதாவிடம் கூட அவர் சொல்லவில்லை. தான் ஒரு அநாதை, ஒரு ஜமீன் வம்சம் தான் தன்னை தத்தெடுத்து வளர்கிறார்கள் இது தான் நந்திதாவுக்கு அவளுடைய இருபத்தி மூன்றாவது வயது வரை தெரியும்.

அதுவும் அப்பொழுது துரைசிங்கத்தின் மனைவி இறந்து விட, அந்த வயதில் மகளை கூப்பிட்டு நடந்த அனைத்தையும் சொல்லி அவள் தான் அவருடைய உண்மையான வாரிசு என்று சொல்லியவர், அதை மறைத்து தன் ஜமீனுக்கு அடுத்த வாரிசு அவள் தான் என்று சொல்லி ஊரறிய அவளை தத்து எடுக்கப் போவதாக அவர் அறிவிக்கப் போவதை சொன்னார். இதுவரை அவர் தத்து எடுத்தது யாருக்கும் தெரியாது மகள் சந்தோஷப் படுவாள் என்று அவர் நினைத்தற்கு எதிர் மறையாக பேசவும் நடந்து கொள்ளவும் செய்தாள் நந்திதா.

தாய்க்கு ஊரறிய அவருடைய மனைவி என்று அங்கீகாரம் இல்லை இவளுக்கும் தான் பெற்ற மகள் தான் யுகநந்திதா என்ற அந்தஸ்து இல்லை. சிறு வயதிலிருந்து தந்தையின் கண்டிப்போ கனிவோ அரவணைப்போ இல்லை. எப்பொழுதோ நான்கு வயதில் அவரைப் பார்த்ததோடு சரி அது கூட அவர் சொல்லித் தான் தெரியும். நினைவு கூட இல்லை. பணம் காசுக்கு குறைவு இல்லை நல்ல படிப்பு இருந்தது. ஆனால் தந்தை என்ற அங்கீகாரம்? இப்போ சொன்னதை அவர் மனைவி இறப்பதற்கு முன்பே அழைத்து சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.

இப்பொழுது கூட வாரிசாகத் தத்து எடுப்பதாக அறிவிப்பாரே தவிர சொந்த மகள் என்ற குறியீடு இல்லை. எத்தனை முறை அவள் தாய் தந்தையர் யாரென்று தெரியாமல் தவித்திருப்பாள்? இந்த ஜமீன் வம்சம் ஏன் தன்னை வளர்ப்பதை வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள் என்று குழம்பி இருப்பாள்? இதையெல்லாம் மறந்து விட்டு இப்பொழுது இவர் சொன்ன உடனே பணம் காசுக்கு ஆசைப்பட்டு அரியணை ஏறவேண்டுமா என்ற எண்ணம் அவளுக்கு எழ, தயவு தாட்சனை எதுவும் பார்க்காமல் அவருடைய உறவையே முறித்துக் கொண்டு சாதாரண யுகநந்திதாவாக தங்கத்தின் பூர்வீகமான வயநாடு சென்று விட்டாள் நந்திதா.

அப்படி சென்ற யுகநந்திதாவின் வாழ்வில் அபி எப்படி நுழைந்தான்? என்ன நடந்தது இதோ...

இந்தியாவில் இயற்கை என்ற அன்னை பல குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும் அவள் சீவி சிங்காரித்து அழகு பார்த்துக் கொஞ்சுவது என்னமோ கேரளாவை மட்டும் தான் போல! அப்படி ஒரு எண்ணத்துடன் அதன் அழகிலும் குளுமையிலும் மெய் மறந்து வயநாட்டில் நின்றிருந்தான் அபிரஞ்சன். ஆம், இப்பொழுது வெறும் அபிரஞ்சன் தான். AR என்ற அடையாளத்தை எட்டிப் பிடிக்க பல அடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான் அவன்.

உற்ற நண்பர்கள் என்று அவனுக்கு இல்லாதவன் இன்று தொழில் துறையில் அவனுக்கு சில காரியம் ஆக வேண்டும் என்பதற்காக ஒரு சில நண்பர்கள் அழைக்கவே, கேரளாவைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறான். கூட வந்தவர்களில் ஒருவனின் தந்தை மத்திய அமைச்சர். இப்பொழுது தெரிகிறதா அபி இங்கு வரக் காரணம் என்னவென்று.

கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் நண்பர்கள் குடிமகன்கள் வேலையைப் பார்க்க, அபிக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் வெளியே சுற்ற ஆரம்பித்தவனின் கண்ணில் நலுங்கிய ஆடையுடன் சோர்ந்த முகத்துடன் ஒருவித நிமிர்வுடன் கண்ணில் தீச்சன்யத்துடன் காபித் தோட்டத்திற்குள் அந்த ஊர் பெண் என உலாவிக் கொண்டு இருந்தாள் நந்திதா. ஆம்! நம் நாயகி யுகநந்திதா தான்!

அவளைப் பார்த்தவனுக்கு, ‘கொஞ்ச நேரத்திற்கு முன் குடிமகன்களின் அறையிலிருந்த டிவியில் ஓடிய கார்த்திக் நடித்த பழைய படத்தில் ஹீரோயின் இப்படி தானே நடந்து உலவுவாள்! என்ன ஒன்று? அவள் பாடினாள் இவள் பாடவில்லை. மத்தபடி சீன் எல்லாம் ஒன்று தான்’ என்று நினைத்தவன் அந்த பாடலை யோசிக்க,

சோலைக் குயில் நெஞ்சிக்குள்ளே

சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ திருமலை காற்றே…என்ற வரிகள் நினைவில் வந்தது. வரிகள் மட்டுமா நினைவில் வந்தது? அந்த ஹீரோ ஹீரோயின் முன்னாடிச் சென்று நிற்க, அதில் அந்த நாயகி பயந்து ஓடுவாள். அதை செயல்படுத்த அதன்படியே இவனும் இவள் முன் போய் நிற்க, இங்கே நந்திதாவோ எந்த சலனமும் இல்லாமால் இவனை ஒரு பார்வை பார்த்தவள், பின் விலகிச் சென்றாள். என்ன டா சினிமால மட்டும் அப்படி பொண்ணுங்க பயந்து கேவி கேவி அழறாங்க இங்க என்னனா நிஐத்துல இவ நீயா என்பது போல விலகுறா என்று அந்த வினாடி யோசித்தவன் அவள் விலகலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதன் பின் நந்திதாவை மறந்தவன் தான் வந்த வேலையைப் பார்க்கச் சென்றான் அபி.

இருவரும் அவரவர் வேலையில் இருந்தாலும் விதி இருவரையும் விடுவதாக இல்லையே! அதன் பிறகு ஒரு நாள் இருள் சாய்வதற்கு முன்பே அந்தி வானம் இருண்டு மழை வருவதற்கு அறி குறியாய் கரு மேகங்கள் திரண்டு பரந்திருக்க, அந்த காட்டுப் பகுதிக்கு முன்பு ஒரு சில வீடுகள்அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க, ஆள் அரவமற்ற அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை நெருங்கியது ஒரு ஓநாய்.

பிள்ளைகள் அதைப் பார்த்து அலற ஆரம்பிக்க, அதே நேரம் அபியும் நந்திதாவும் வெவ்வேறு திசையிலிருந்து அந்த குரல் கேட்டு அவ்விடம் வந்தவர்கள் இதைப் பார்க்க, நந்திதா நொடிப்பொழுதில் ஓநாயின் கவனத்தை ஈர்க்காமல் அங்கிருந்த ஒரு கீத்துக் கொட்டகை உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த விறகில் துணியைச் சுற்றி தீப் பந்தம் போல் எரிய வைத்தவள் வெளியே வந்து குழந்தைகளுக்கும் அபிக்கும்மான இடையில் வேறு ஒரு திசையில் அந்த பந்தத்தைக் காட்டியவள் ஓநாய் அவளை நோக்கவும், துணிச்சலாய் அந்த இடத்தை விட்டு பந்தத்துடன் ஓட ஆரம்பிக்க, அந்த நெருப்பு சுவாலையை நோக்கி சிறுவர்களை விட்டு அவள் பின்னால் ஓட ஆரம்பித்தது ஓநாய்.

சிறிது தூரம் போனதும் இவள் வேறு திசையில் அந்த பந்தத்தைத் தூக்கிப் போட்டு விட்டு ஓரிடத்தில் மறைந்து கொள்ள, அதுவோ காட்டிற்குள் வேறு திசையை நோக்கி ஓடியது. அதை அறிந்து கொண்டவள் நிம்மதி மூச்சு விட்ட படி வெளியே வர, அப்பொழுது இவளைத் தேடி அங்கு வந்து நின்றான் அபி.

அவளுக்கு உடலில் எதுவும் இல்லையே என்று அவளை ஆராய்ந்தவன், “நல்லா பி.டி. உஷா ரேஞ்சுக்கு ஓடுற. அதனால் தான் பிள்ளைகளைக் காப்பாற்ற முடிந்தது. சரி தான், உன்னை அந்த மிருகம் தாக்கியிருந்தால் என்ன செய்திருப்ப?” ஒரு பெண் என்ற அக்கறையுடன் இவன் கேட்க, ‘நீ கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டுமா?’ என்ற பார்வையை செலுத்திய படி அவனுக்கு பதில் தராமல் அவனை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தாள் அவள்.

இந்த செயல் அபிக்குள் இருந்த தன்மானத்தைச் சீண்டி விட, அவளைப் பிடித்து வாயைத் திறக்கும் வரை கட்டி வைக்க வேண்டும் என்று எண்ணம் வர, இவன் அவளை நெருங்குவதற்குள் மின்னலென ஒரு திசையில் மறைந்திருந்தாள் அவள்.

‘ச்சே! இதுவரை என்னை யாரும் இப்படி அவமானப்படுத்தியது இல்லை. என்ன திமிர்!’ என்று கோபப்பட்டவன் ‘ஒரு வேளை அவளுக்கு காது கேட்காதோ?’ என்று நினைக்க, ‘அதுவும் இல்லை. அவள் தான் துல்லியமாக எல்லா சத்தத்தையும் உணர்ந்து கேட்கிறாளே’ என்று அதையும் நினைத்தவன் ‘ஒரு வேளை ஊமையாக இருப்பாள்’ என்ற முடிவிற்கு கடைசியாக வந்தான் அபி.

இதுவரை இது போல் எந்த பெண்ணிடமும் வலிய சென்று பேசாதவன் இவளிடமும் அப்படி தான் இருந்திருப்பான். ஒருவேளை அவள் பேசியிருந்தால்? எப்பொழுதும் நம் பக்கத்திலிருந்து பேசுபவர்களை விட நம் அருகில் இருந்த பேசாத நபர்களிடம் தான் நம் ஈர்ப்பும் கவனமும் செல்லும். இது உளவியல் உண்மை. அது தான் பேசாமலே விலகிச் சென்ற நந்திதாவிடம் அவனுக்கு எற்ப்பட்டது.

இன்று ஊமையோ என்று நினைத்தவனே ஒரு நாள் வாயை மூடு என்று கத்தும் அளவுக்கு அவள் நடந்து கொள்வாள் என்பது பாவம் அவ்வளவு பெரிய தொழிலை நடத்தும் அபிக்குத் தெரியவில்லை.

அடுத்த நாள் ஊர் திருவிழா வர அபியின் குடிமகன்கள் அங்கேயே மேற்கொண்டு நான்கு நாட்களுக்கு தங்கவேண்டி வர, அப்பொழுது அந்த மந்திரி மகன் அந்த ஊர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி வரம்பு மீறிப் பழகியவன் பிறகு அவளுக்கு டாட்டா சொல்லி கிளம்பப் பார்க்க, அதற்குள் ஊரார் ஒரு சிலருக்குத் அவ்விஷயம் தெரிந்து அபியையும் சேர்த்து அவனுடன் வந்த அனைவரையும் மடக்கிப் பிடித்து சிறை வைத்து விட, பஞ்சாயத்து கூடியது. அந்த பெண்ணோ தன் மானத்தை விட்டு நடந்த அனைத்தையும் சொல்ல, அந்த மந்திரி மகனோ எதற்கும் இல்லை என்றே சொல்லி கொண்டிருந்தான். ஆனால் அதை ஊர் பெரிய தலைகள் ஒற்றுக் கொள்ளவில்லை.

அபி இடையில் புகுந்தவன், “இங்கே பாருங்க அவன் யாருன்னு தெரியாம இப்படி எல்லோரும் அவனை நிற்க வைத்து மிரட்டுவது சரியில்ல. அவன் தான் அப்படி எதுவும் நடக்கவில்லைனு சொல்கிறானே? அவன் அப்பா ஒரு அமைச்சர். பிறகு பின் விளைவுகள நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்” என்று இவன் அங்கிருந்தவரை எச்சரிக்க, அபிக்கு நண்பனின் மேல் நம்பிக்கை. இந்த பெண் எதற்கோ பொய் சொல்கிறாள் என்ற எண்ணம்.

யாரும் தனக்காக பேசாத நேரத்தில் அபி பேசவும், “நல்லா கேளு அபி. இந்த பொண்ணு பொய் சொல்லுது. என் அப்பாவோட பதவியையும் பணம் காசையும் பார்த்துட்டு அதைப் பறிக்க இவ திட்டம் போடுறா. அதற்காகத் தான் நான் இவளை சீரழித்ததா நாடகம் போடுறா” என்று அந்த அமைச்சர் மகன் குரலை உயர்த்தி ஏற்றி விட, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த நந்திதா,

“ஷட் அப்” என்று அவனிடம் கட்டளையுடன் உருமியவள் பின் அபி பக்கம் திரும்பி, “அபி! உங்க பிரண்ட் சொ...”

“ஷட் அப் அண்ட் சே மிஸ்டர் அபிரஞ்சன்! நீ பெயரைச் சுருக்கி கூப்பிட நான் என்ன உன் நண்பனா இல்லை உன் கணவனா?” கண்ணில் ரவுத்திரத்துடன் அபி உறும,
‘இவள் பேசுவாளா? பிறகு ஏன் அன்று பேசவில்லை? இப்பொழுது ஊருக்குப் போகவேண்டிய நேரத்தில் என்னை நிறுத்திப் பேச இவள் யார்?’ என்ற கோபம் எல்லாம் அவனுக்கு உறுமலாக வெளி வந்தது.

அவன் உக்கிரத்தில் ஒரு வினாடி நிறுத்தி நிதானித்தவள், “இங்க பாருங்க மிஸ்டர். அபிரஞ்சன்! இந்த ஊர் பொண்ணுங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கு. அதை யாரும் மீற மாட்டாங்க. அப்படி மீறினா தைரியமா ஒத்துகிட்டு அதற்கான தண்டனையை ஏற்றுப்பாங்களே தவிர பொய் சொல்லி ஓடி ஒளிய மாட்டாங்க”

“அப்போ என் நண்பன் பொய் சொல்கிறானு சொல்றீயா?” இப்பவும் அபி எகிற

“பொய் மட்டும் இல்லை பச்ச நம்பிக்கைத் துரோகம் செய்தார். உங்க நண்பர் எங்க ஊர் பெண்ணோட வாழ்க்கையைக் கெடுத்துட்டு அவர் போய்டுவாரா இல்ல நான் தான் போக விட்டுவிடுவேனா?” நந்திதா எதிர் கேள்வி கேட்க

இவ யார் அதை கேட்க என்ற எண்ணத்தில் “உன்னால் என்ன செய்ய முடியும்?” நண்பனுக்கு வந்த பிரச்னையைத் தனக்கான கவுரவக் குறைச்சலாய் அபி பார்க்க,

“என்ன வேணாலும் செய்ய முடியும் மிஸ்டர். அபிரஞ்சன்” என்றவள் அங்கு ஊர் தலைவராய் இருந்தவரை ஒரு பார்வை பார்க்க, அவருக்கு மட்டும் தான் நந்திதா யார் என்பது தெரியும். தங்கள் முதலாளி துரைசிங்கத்தின் வளர்ப்பு மகள் தான் நந்திதா என்பது தெரியும் ஆதலால் ‘நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்க தயார்’ என்றபடி அவர் பவ்வியமாய் தலையாட்டி சம்மதம் சொல்ல, திரும்பி அபியைப் பார்த்தவள்,

“உங்க நண்பர் செய்த வேலைக்கு அவரோட சேர்த்து உங்க எல்லோரையும் கட்டி வைத்து தோலை உரித்திருக்கணும். அப்படி செய்யாமல் விட்டதால் தான் இப்படி எல்லாம் துள்ளறீங்க” என்று நிமிர்வுடன் சொன்னவள் “உங்க நண்பர் நாங்க சொல்லுகிறதை கேட்டு தாலி கட்டி எங்க பெண்ணை கூட்டிட்டு போய்ட்டா தப்பிச்சீங்க. இல்லை என்றால் உங்க எல்லோர் மேலேயும் சமூக விரோதிகள் என்ற குற்றத்தை சுமத்தி வெளிய வரமுடியாத அளவுக்கு எங்க ஊர் தலைவர் செய்திடுவார்.

நீங்க நினைக்கலாம் இதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் இல்லைனு. அமைச்சர் பையனோடு நீங்க வரும் போதே உங்க அந்தஸ்து எல்லாம் என்னனு தெரியுது. நாங்க பிரதமர்கிட்டவே போவோம். இவர் அப்பா எதிர் கட்சி அமைச்சர் தான். அதனால் ஒன்னும் பண்ண முடியாது. எப்படியோ எல்லோரும் வெளியே வந்திடுவீங்க. ஆனா அதுவரை நீங்களும் உங்க குடும்பமும் அனுபவிக்கப் போற அசிங்கத்திற்கு நாங்க பொறுப்பாக முடியாது” இவள் தெள்ளத்தெளிவாய் மிரட்டல் விட,

அதில் கூடயிருந்த நண்பன் நடுங்கிய படி அபியிடம் நெருங்கியவன், “டேய் எனக்கு அடுத்த மாதம் என் அக்கா பொண்ணோட கல்யாணம் டா. இது மட்டும் என் மிலிட்டரி அப்பாவுக்குத் தெரிந்தது என்னை உயிரோட எரித்துடுவார் டா. என் அக்கா தூக்கில் தொங்கிடுவாங்க டா. நீயும் பிசினஸ்ல பெருசா சாதிச்சு உயரந்த இடத்துக்கு வரணும்னு நினைக்கிற. ப்ளீஸ் டா எதுவும் பேசிக் கெடுத்துடாதடா” என்று பயத்துடன் அவன் காதைக் கடிக்க, நிதர்சனம் புரிந்ததால் அதற்கு மேல் அபியால் ஒன்றும் செய்யவோ பேசவோ முடியவில்லை. ஆனால் அவளிடம் தோற்றது மட்டும் அக்னியாய் அவனை எரித்துக் கொண்டிருந்தது.

கல்யாணம் முடிந்த பிறகும் தப்பு செய்தவன் சும்மா இல்லாமல் “என் அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? ச்சீ! ச்சீ! பணத்திற்காக இப்படி பொய் சொல்லி கல்யாணம் செய்துகிட்டாளே! ஒன்று வேணும்னா இந்த பொண்ணுங்க எந்த எல்லைக்கும் வேணும்னா போவாங்க போல!” அவன் பாட்டுக்குத் தன் தவறை மறைக்க தன்னை நம்பிய அபியிடம் புலம்ப,

சிறு வயத்தில் அவன் தந்தை சொன்ன ‘பெண்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்’ என்ற வார்த்தை தான் அபிக்கு அப்பொழுது நினைவு வந்தது. இதனூடே ஊருக்கு கிளம்ப தன் பெட்டி படுக்கையைக் கட்டியவன் ஒரு முடிவுடன் எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து விட்டு ஒரு வேலை இருப்பதாகவும் வழியில் வந்து ஏறிக் கொள்வதாக நண்பர்களிடம் சொல்லியவன், நந்தித்தாவைத் தேடிச் சென்றான்.

அவள் தானே இந்த நாடகத்திற்கு முழு முதல் காரணமாகிப் போனவள்? ‘ஆமாம், அவள் தான் அனைத்துக்கும் காரணம்! திருமணம் செய்து கொண்ட பெண்ணிர்க்கு பணம் அந்தஸ்து வேணும் அதற்கு நந்திதா வழி வகை செய்து துணை போய் விட்டாள்’ என்றுதான் நினைத்தான் அபி. ‘அவளுக்குப் பாடம் கற்பிக்கவில்லை என்றால் பிறகு அபிரஞ்சன் இவ்வளவு சாதித்து என்ன இருக்கு? என்ற எண்ணம் வர,

இவன் அவளைத் தேட, அவளோ அப்பொழுது தான் ஒரு பாழடைந்த கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தாள்.


இவனும் ஓசை எழுப்பாமல் அவள் பின்னே தொடர்ந்தவன், அங்கிருந்த அம்மன் சிலையை அவள் சுத்தம் செய்யவும் அவள் கையைப் பின்புறம் முறுக்கி தன்னிடமிருந்த கைக்குட்டையால் அவள் கையைக் கட்டியவன் அவள் உணர்ந்து திமிறி விலகுவதற்குள் கொண்டு வந்து இருந்த துணியை அவள் வாய்க்குள் திணித்து அவளை அணைத்து தன்னுடன் நெருக்கியவன், அங்கு அம்மன் கழுத்திலிருந்த மஞ்சள் கிழங்கு கோர்த்த தாலிக்கயிற்றைக் கழட்டி அவளை அணைத்துப் பிடித்த படியே அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சைப் போட்டான் அபிரஞ்சன்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 11
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN