அத்தியாயம் 23

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒன்பது குற்றால அருவிகளுள் ஒன்றான ஐந்தருவியை காண அனைவரும் குற்றாலம் வந்திருந்தனர். ஐந்து நீர்வீழ்ச்சிகள் குழுவாக இணைந்து வரும் பகுதி, ஐந்தருவி என பெயர்பெற்றது. அர்ஜூனின் பதவி உயர்வை கொண்டாட, சக்தி தான் வீட்டினர் அனைவரையும் குற்றாலம் அழைத்து வந்து இருந்தான். அதோடு நேற்று வீட்டினர் அனைவரும் சிவசக்தி பாட்டியின் நினைவில் சோகக்கடலில் மூழ்கி இருக்க, அவர்களை சமன் செய்யும் பொருட்டு தான் அவன் இந்த ஏற்பாட்டை செய்திருந்தான்.
அர்ஜூன், சிவா , சக்தி, ஸ்ரீதர், சூசன், சித்தார்த், லிங்கம், தனம் என அவ்வீட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் நிரஞ்சன், நிக்கிதா, நிரஞ்சனின் அம்மா ருக்மணி, அவர்களோடு இன்னும் சில உறவுகள் என அனைவரும் மூன்று கார்களில் அங்கு வந்திருந்தனர்.
ஸ்ரீதர் எட்டு இருக்கைகள் கொண்ட டொயோட்டா இனோவாவை எடுத்துக்கொண்டு, சூசனையும் சித்தார்த்தையும் உறவினர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட, சாமர்த்தியமாக மாருதி சுசுகி ஈக்கோ மாடலை நிரஞ்சன் பக்கம் தள்ளிவிட்ட சக்தி, மகேந்திரா ஸ்கார்பியோவை எடுத்து கொண்டு தன் குடும்பத்தாரையும் ருக்மணி மற்றும் நிக்கித்தாவையும் ஏற்றிக்கொண்டு விரைந்திருந்தான்.
நிரஞ்சனால் மாருதி ஈக்கோவின் டயரை தான் உதைக்க முடிந்தது. மனதில் மூண்ட எரிச்சலுடன் மற்ற உறவினர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். பலமுறை சக்தியுடன் வயது வித்தியாசம் பார்க்காமல் அந்த ஸ்கார்பியோக்காக சண்டையிட்டு இருக்கிறான். ஆனால் இன்று அவனால் எதிர்த்து பேச கூட முடியாத அளவுக்கு சக்தி நிரஞ்சனின் வாயை திருமணம் என்ற ஒரு விஷயத்தால் கட்டிப்போட்டு விட்டானே.
சிறுவயதில் இருந்தே கோபக்காரியாக வளர்ந்த நிக்கிதாவிற்கு, கடந்த ஆறு மாதமாக மாப்பிள்ளை தேடி பார்த்தார் ருக்மணி. ஆனால் உறவினர்கள் சாதி சனத்தினர் எல்லாரும் நிக்கியின் முன்கோபத்தை முன்னிருத்தி, அவளை விலக்க, சக்தி அவளை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதில் இருந்து, சக்தி ருக்மணியின் கண்களுக்கு தெய்வமாகவே மாறிப்போனான்.
இக்கல்யாணத்தில் எதாவது தடை வந்தால், நிச்சயம் தன் அன்னையின் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதை நிரஞ்சன் உணர்ந்து இருந்தாலும், தன்னை அர்ஜூனுக்கு எதிராக தூண்டிவிடும் நபர் மீது புதிதாக எழுந்த சந்தேகத்தாலும், இவ்வளவு நாள் தன்னுடைய தொழிற்களை கவனிக்காததால் ஏற்பட்ட பிரச்சினை ஒருபுறம் அழுத்தியதாலும், நிரஞ்சன் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக அவர்களுடன் சென்றான்.
நிரஞ்சனின் அமைதி மற்றும் எப்போதும் ஏதோ யோசனையில் இருப்பது எல்லாம் அர்ஜூனுக்கு சரியாக படவில்லை. புயலுக்கு முன் அமைதியோ என்று நினைத்து சிவாவை ஒரு நிமிடமும் அகலாமல் அவனுடனேயே வைத்துக்கொண்டான். ஆனால் சிவாவின் மனமோ அதை எதையும் அறியும் நிலைமையில் இல்லை. அதற்கு காரணம் சக்தி என்றால் அது மிகையாகாது.
நேற்று இரவு மும்பையில் இருந்த நிக்கித்தாவை இரவோடு இரவாக விமானத்தில் ஊருக்கு வரவழைத்தவன் அப்பொழுதிலிருந்து அவளின் பின்னால் சுற்றிக்கொண்டு இருப்பதே சிவாவின் கோபத்திற்கு காரணமாக அமைந்தது.
"சக்தி... உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா... அங்க ஒரு பொண்ணு உன்மேல உயிரையே வச்சுட்டு இருக்கா... நீ என்னடான்னா அந்த நிக்கி பின்னாடியே சுத்திட்டு இருக்க..." மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை இரசிக்கவென அங்கிருந்த டவர் ஒன்றில் ஏறிய சக்தியை தொடர்ந்து ஏறிய சிவரஞ்சனி அவனிடம் பொறிந்து தள்ளினாள்.
"ம்ச்.. ஷிவ் என்னதான் உன் பிரச்சினை... எந்த பொண்ணு என் மேல உயிரையே வச்சிட்டு இருக்கா..." கடுப்புடன் கேட்டவன் திரும்பிக்கொள்ள, அவனின் தாடையை பற்றி அவன் முகத்தை திருப்பியவள் "அர்ச்சனா தான்டா..." என கூற அவனின் கண்களில் எந்த சலனமும் இல்லை.
"அவகிட்ட நான் பேசியே பல வாரங்கள் ஆகுது. இப்போ ஏன் அவளை உள்ள இழுக்குற..." என்றவன் அவளின் கையை தட்டிவிட்டுவிட்டு மீண்டும் திரும்பி இயற்கையை ரசிக்க ஆரம்பிக்க,
"டேய்... அவகிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டு இப்போ நிக்கிய கல்யாணம் பன்னிக்கபோறேன்னு சொல்லற... நிக்கி பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி சுத்திட்டு இருக்க..."
"ஷிவ்... அவளுக்கு ஆக்சிடன்ட் ஆகி இரத்த வெள்ளத்தில் இருக்கும் போது அவ கேட்டா... அந்த நேரத்துல என்னால மறுக்க முடியலை... அவ்வளவு தான். மத்தபடி நான் அவள லவ் பன்னல. அவளும் என்ன லவ் பன்னல. அவளுக்கு இருக்கிறது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு தான்...." என்றான் கேஷூவலாக.
"அவள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னியேடா..." அவனின் மனதை அறிந்து வைத்திருந்தவள் அவனின் ஆசை காணல் நீராய் போய்விடுமோ என்று ஏக்கத்துடன் கேட்டாள்.
"ஷிவ்... என்ன நீ... எனக்கு ஆயிரம் பொண்ணுங்கள பிடிக்கும். அதுக்குன்னு எல்லாரையும் கல்யாணம் பன்ன முடியுமா... சும்மா துருவி துருவி கேள்வி கேட்காமல் நாளைக்கு ஊருக்கு கிளம்புறன்றத மனசுல வச்சிட்டு இருக்குற இந்த நேரத்தை நல்லா என்ஜாய் பண்ணு..." என்றவன் கைப்பேசியில் இயற்கையின் வனப்பை படம் பிடிக்க ஆரம்பித்தான்.
கூடவே இருந்த சிவரஞ்சனியை திடீரென காணவில்லையே என்று அவளை தேடி வந்த அர்ஜூன், அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான். அவனின் அமைதி அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து, அடுத்தநாள் காலை சென்னைக்கு கிளம்பும் வரையிலும் கூட நீடித்து இருந்தது.
"சக்தியே அர்ச்சனாவ மறந்துட்டு விலகி போறான்... அர்ச்சனாவுக்கும் செஞ்ச தப்பு புரிஞ்சு அவன் பக்கமே போகாம இருக்கா... நீ எதுக்கு இப்ப இரண்டு பேருக்கும் நடுவுல மாமா வேலை பார்க்குற..." விமானம் டேக்ஆப் ஆகும் வரையிலும் அவளிடம் பேசாமல் இருந்த அர்ஜூன்,
அதன் பிறகு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவளிடம் அழுத்தமாக கேட்டேவிட்டான்.
சிவரஞ்சனிக்கு 'சுருக்'கென்று இருந்தாலும் அவள் அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்ததோடு சரி... ஒன்றும் பேசவில்லை. அர்ச்சனாவின் மனதை ஒரு தோழியாக அறிந்து கொண்டவள், அர்ச்சனாவின் எதிர்காலத்தை கடவுள் கையில் ஒப்படைத்துவிட்டு அமைதி காத்தாள்.
குடும்பத்திற்காக அர்ச்சனா அணிந்திருந்த மகிழ்ச்சி என்னும் முகமூடியின் பின் ஒளிந்திருந்த சோகத்தை சிவரஞ்சனி கண்டுகொண்டிருந்தாள். அதன்பிறகு அவள் ஒருபுறம் முகத்தை திருப்பி கொண்டு இருக்க, அவன் ஒருபுறம் முகத்தை திருப்பி கொண்டு இருந்தான். வீட்டிற்கு வந்தடைந்தும் அவர்களின் முகத்திருப்பல் மாறாமல் சிலபல நாட்கள் தொடர்ந்தது. அன்று இருந்த இளகுத்தன்மை மாறி, அவர்களிடையே அமைதி குடிக்கொண்டது
அர்ச்சனா வீல் சேரில் அமர்ந்தபடியே எப்பொழுதும் எதாவது வரைந்து கொண்டே இருந்தாள். அவள் B.F.A ( Bachelor of fine arts) எனப்படும் ஓவியக்கலை சம்மந்தமான இளங்கலை பட்டம் படிக்க ஆசைபட்டதால், நுழைவுதேர்வுக்கான பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டு இருந்தாள்.
வீட்டினர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், அவள் விடாப்பிடியாக, நான் பெங்களூரில் தான் படிப்பேன் என்று கூறிவிட்டாள். கடைசியில் அர்ஜூன் தான் அவளுக்கு பக்கபலமாக நின்றான்... வீட்டினர் அனைவரிடமும் சம்மதத்தை பெற்றும் தந்தான்.
அர்ஜூனின் மனதின் ஓரத்தில் சக்தியின் திருமணத்தால் அர்ச்சனா வருந்துவாளோ என்று மனதை வாட்டிக்கொண்டு இருந்த கவலை நீங்கியது.
ஆனால் கடந்த சில மாதங்களாக அர்ச்சனாவின் உற்ற தோழியாக மாறியிருந்த சிவரஞ்சனிக்கு, அவளின் கண்களில் படிந்திருந்த சோகத்தை நன்றாக இனம் கண்டறிய முடிந்தது. அர்ச்சனாவின் நுழைவு தேர்வு தேதி, சக்தியின் நிச்சயதார்த்த தேதிக்கு முன்தினநாள் வந்திருந்தது. அதையடுத்த மூன்றாம் நாள் அர்ஜூனுடன் சிவரஞ்சனியும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்று இருந்தது.
சிவரஞ்சனியிடம் வருகிறியா என்றெல்லாம் அர்ஜூன் கேட்கவில்லை‌. நாம் செல்கிறோம் என்று ஒரு செய்தியாக தான் அறிவித்தான். அதுவே சிவரஞ்சனி என்னவோ போல் இருந்தது. அவன் கேட்டிருந்தால் மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவித்து இருப்பாள். ஆனால் கட்டளையிட்டது அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை. ஆனால் அவர்களுள் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, எங்கே கேட்டால் அவள் வரமாட்டேன் என்று சொல்லிவிடுவாளோ என்று நினைத்து அவன் கேட்கவில்லை.
அதோ இதோ என்று அர்ச்சனாவின் நுழைவு தேர்வுக்கான நாளும் வந்தது. நாளை நுழைவு தேர்வும், அதற்கு மறுநாள் சக்தியின் நிச்சயதார்த்த விழாவும் நடைபெற இருப்பதால் அர்ஜூன் மட்டும் அர்ச்சனாவை வான்வழி பயணமாக பெங்களூர் கூட்டி செல்ல முடிவு எடுத்து இருந்தான். மற்றவர்கள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க செல்லலாம் என்று அவன் தெரிவிக்க, அதை மறுத்த சிவரஞ்சனி தானும் அர்ச்சனாவுடன் வருவதாகவும், அவளின் கால்கள் இன்னும் சரியாகாததால் உதவிக்கு ஒரு பெண் இருப்பது நல்லது என்றும் கூறி அர்ஜூனுடன் கிளம்பினாள்.
******
மூன்று கட்டங்களாக நடைபெறும் அந்த தேர்வில் போட்ரேட்(portrait) எனப்படும் உருவப்படம் வரைதல் முதல் கட்டமாகவும், இரண்டாவது கட்டமாக ஒரு தலைப்பை அவர்கள் கூற அதற்கு தகுந்த ஒரு படத்தை வரையவேண்டும் எனவும், மூன்றாவது கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறும் என்றும் கூறியிருந்தார்கள்.
ஒரு பெரிய ஹாலில் நடுநாயகமாக ஒரு பாட்டி அமர்ந்து இருக்க, அவரை சுற்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல மாணவர்கள், அவரின் உருவத்தை தங்களின் முன் வைக்கப்பட்டு இருந்த வெள்ளை தாளில் வரைய ஆரம்பித்தனர். அர்ச்சனாவும் அவரின் முக சுருக்கம் முதற்கொண்டு அவரை அழகாக தத்ரூபமாக வரைந்து இருந்தாள். அவளின் திறமையை ஓரமாக நின்றிருந்து பார்த்து கொண்டு இருந்த அர்ஜூனும் சிவாவுமே வியந்தனர். அர்ச்சனா நன்றாக வரைவாள் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் இவ்வளவு தத்ரூபமாக வரைவாள் என்பதை அவர்களே சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டாம் சுற்றிற்கு தகுதி பெற்றவள், அங்கிருந்த ஆசிரியர் "நீங்கள் வரைய வேண்டிய தலைப்பு..." என்றபடி அங்கிருந்த கரும்பலகை ஒன்றில் காட் (God) என்று எழுதி, நேரம் ஆரம்பித்ததற்கான மணியோசை எழுப்ப அர்ச்சனாவும் மற்றவர்களும் விருவிருவென வரைய ஆரம்பித்தனர். அனைவரையும் கண்காணித்தபடியே அர்ச்சனாவிடம் வந்த ஆசிரியர், அவள் அழகாக வரைவதை பார்த்து விட்டு ஆர்வமாக அங்கேயே நின்றுவிட, அவர் பின்னால் தொலைவில் அர்ச்சனாவை பார்த்து கொண்டு இருந்த அர்ஜூன் மற்றும் சிவாவிற்கு அவளை பார்க்க முடியாமல் போனது.
மனதிற்குள் அர்ச்சனாவை மறைத்தவனை வைதபடி இருந்த அர்ஜூன், அவர் நகர்ந்தவுடன் அர்ச்சனாவ வரைந்த ஓவியத்தை பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.
அதில் ஸ்ட்ரெச்சரில் அர்ஜூனின் தந்தை ராஜரத்தினம் படுத்திருக்க, சக்தி வெள்ளைநிற கோட் அணிந்து, முகத்தில் பதட்டத்துடன் அவரை தள்ளிக்கொண்டு இருக்கும்படியான காட்சி இருந்தது... அதன் கீழே doctors are living god... என்று எழுதியிருந்தாள்....
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 23
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN