காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 51

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புயல் காற்றை போல் அலைபாய்ந்து கொண்டிருந்த வாழ்க்கை இன்று அமைதியாய் ஆர்பாட்டம் இல்லாத தென்றலாய் மாறியதை நினைத்தவளின் இதழ்களில் ஒரு வரட்டு புன்னகை உதயமாகி இருந்தது கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தபடி தலையை துவட்டிக்கொண்டு இருந்தவள். கதவு தட்டும் ஓசையில் தன்னுணர்வு பெற்று கதவை திறக்க, வாசலின் முன்னே கையில் ஃபோன் சகிதம் நின்றிருந்த கோபியை 'என்ன' என்ற கேள்வியோடு நோக்கினாள். யாரையும் நம்ப அவள் பிரியப்படவில்லை அஷ்வினின் நற்செயலை அறிந்ததில் இருந்து இந்த நிலைக்கு தள்ளபட்டவளின் மனது எதிரில் நின்றவனை கூட நம்ப மறுத்தது, மறுபுறமோ ஏதோ ஒருவனை நம்பி நாசமாக போக இருந்தால் ஊரில் இருக்கும் அத்தனை பேருமா அய்யோகியர்களாக இருப்பார்கள் என்று மறு மனம் அவனுக்காய் பேசியது இருந்தும் மனதில் நினைத்ததை முகத்தில் வெளிக்காட்டாமல் அவனை அன்னிய பார்வையுடனே "என்ன" என்று வாய்திறந்து கேட்டாள்.

அழகிய அடர் மார்பல் புடவை உடலை தழுவி இருக்க எலுமிச்சையும் சந்தனமும் சேர்ந்து கலந்த கலவை போல் முகம் பொலிவுடன் இருக்க நெற்றியில் வைத்த சிறிய வட்ட வடிவ மெரூன் பொட்டும் ஆங்காங்கே துளிர்த்து இருந்த நீர் முத்துக்களும் உத்ராவின் அழகை மேலும் அழகாய் காட்ட அவனை பார்த்ததும் தொண்டையில் பாதி வார்த்தைகள் சிக்கி நர்த்தனம் ஆடி அவனை பேச்சிழக்க வைத்தது. அவளின் அன்னியபார்வை கூட கவனிக்க மறந்தவனாய் அவளையே தன்னை மறந்து அவளை பார்த்து இருந்தான்.

தன்னை பார்த்தபடி நின்றிருந்தவனின் செய்கையில் சினம் துளிர்க்க தன் கைகளைகொண்டு கோபியின் முகத்துக்கு நேரே சொடுக்கிட்டு "ஹலோ... ஹலோ... சார் என்ன வேணும்?" என்றாள் சற்று எரிச்சல் கலந்த குரலில்.

"அது வந்து ஃபோன்" என்று கைகளில் இருந்ததை அவளுக்கு எடுத்து காட்டி தலையை ஆட்ட

தன்னிடம் உள்ள ஃபோனை மெத்தையின் மேல வைத்திருக்க அதை ஒரு முறை திரும்பி பார்த்தவள் வேண்டும் என்றே செய்கிறானோ என்ற ரீதியில் அவனை சந்தேக பார்வை பார்த்தபடியே "யார் லைன்ல இருக்காங்க?" என்று வினவினாள்.

உத்ராவின் பார்வையில் தான் தவறாக சித்தரிக்கப்பட்டு விடுவோமோ என்ற பதைபதைப்பில் இருந்தவன் "தயாபரன் சார் தான் பேசுறார். உங்க ஃபோனுக்கு ட்ரை பண்ணாராம் நீங்க எடுக்கலன்னு சித்துவுக்கு ஃபோன் போட அவன் என் நம்பர சொல்லி இருக்கான். இந்தாங்க ஃபோன்" என்று அவளிடம் ஃபோனை ஒப்படைத்தவன் விடுவிடுவென அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஃபோனை வாங்கியவள் தான் அவனை தவறாக நினைத்துவிட்டோமே என்று வருந்தினாள். ஒரு முறை சூடு பட்ட பூனை பாலை கண்டால் பயப்படுவது போல தன் கதையை கேட்டவளின் மனது யாரையும் நம்ப பயம் கொண்டது.

"ஹலோ.... ஹலோ" என்ற ஃபோன் அழைப்பில் அதை காதுக்கு பொருத்தி இருக்க "சொல்லுங்கப்பா" என்றாள் அவரசமாக.

"மகி... மகி... ஆர் யூ ஆல்ரைட் டா... நீ சேஃபா இருக்கியா..". என்று விசாரித்தவர் "உன் மொபைல் எங்க அதை எப்பவும் உன்னோடவே வச்சிக்கோ தானே சொன்னேன்" என்று கோபம் கொள்ள

"அப்பா அப்பா ஒன்னும் இல்ல பா" என்றவளை இடைவெட்டி பேசியவர் "ஏதாவதுன்னா உடனே ஃபோன் பண்ணு சொல்லி இருந்தேன்ல நீ போனதும் ஒரு ஃபோன் கூட பண்ணலையே அதான் நான் 2 முறை கால் பண்ணேன் நீ எடுக்கலன்னதும் பயம் வந்துடுச்சி" என்றார்.

"அய்யோ அப்பா எனக்கு ஒன்னும் இல்லை நான் நல்லா தான் இருங்கேன். இருங்க ஃபோன் என்ன ஆச்சின்னு பாக்குறேன்" என்றவள் அதை எடுத்து பார்க்க அப்போதுதான் ஃபோன் சைலன்டில் இருப்பது தெரிந்தது தன்னை தானே தலையில் அடித்துக்கொண்டவள் "சாரிப்பா ஏதோ தவறுதலா கைப்பட்டு ஃபோன் சைலண்டில் விழுந்து இருக்கு" என்று இறங்கிய குரலில் கூறி மன்னிப்பை கேட்க.

"பார்த்து மா கவனமா இரு... உன்னை அனுப்பிட்டேனே தவிற மனம் கிடந்து அடிச்சிக்குது" என்றவரை சமாதானப்படுத்தி மற்றவர்களை பற்றி விசாரித்தவள் சிறுது நேரம் கழித்து ஃபோனை அணைத்து கோபியிடம் கொடுக்க சென்றாள்.

சென்னையில் இருந்து கோயம்பத்தூர் வந்து இறங்கியவர்கள் கவியிடம் ஃபோனில் விஷயத்தை கூறிவிட்டு உத்ராவை கோபியின் வீட்டிற்கு அழைத்து சென்றவன் ஹாஸ்பிட்டலில் என்ன நிலவரம் என்று அறிந்துக்கொண்டு அதன் பிறகு உத்ராவை அழைத்துக்கொண்டு செல்வது என்று முடிவெடுத்து இருந்தான். அதனால் உத்ராவை கோபியின் பாதுகாப்பில் விட்டுச் சென்றான்.

ஆனால் இங்கோ கோபியினை தவறாக நினைத்ததில் அவனிடம் பேச உத்ராவிற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்க அறையை விட்டு வெளியேறியவள் கண்களை சுழற்றி அவனை தேட ஹாலில் காலை டீபாயில் வைத்தபடி டிவி சேனலை மாற்றிக்கொண்டு இருந்தவனை கண்டுகொண்டவள் அவனை நோக்கி நடக்க அவள் வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் கோபி.

"ம்..." என்று தொண்டையை செருமி "சா... சாரி" என்று அவள் தயங்கியபடி கேட்க

"எதுக்கு" என்பது போல் பார்த்தான் கோபி அவனின் செய்கையை புரிந்து கொண்டவள் "அது நான் உங்கள தப்பா......." என்று ஆரம்பித்தவள் அவன் கண்கள் இடுக்குவதை பார்த்ததும்

"இல்ல, இல்ல.. அப்படி இல்ல ப்ச்" என்று தலையில் தட்டிக்கொண்டவள் "எனக்கு என் கதையை கேட்டதிலிருந்து யாரை பார்த்தாலும் பயமா இருக்கு.. அதான் உங்களை தப்பா நினைச்சிட்டேன்" என்று உண்மையை உறைக்க

அவளின் நிலையை அறிந்தவன் "உன் மேல தப்பு இல்ல உத்ரா சாரிலாம் எதுக்கு சகஜமா இரு... ஒரு பொறுக்கி பண்ண தப்புல நீ இழந்தது அதிகம்.. வலியும் அதிகம்... பயமும் இருப்பதுதான் நியாயம் தான்... நான் எதையும் தவறா எடுத்துக்கல... பட் நான் அந்த ரகம் இல்ல" என்றான்.

"ரொம்ப தேங்கஸ் சார் என் நிலமைய புரிஞ்சிக்கட்டதுக்கு" என்றதும்.

"தேங்க்ஸ் சாரி இதை அப்படியே கட் பண்ணி ஓரமா போடுமா..." என்று கிண்டலுடன் கூறியவன் "என் பெயர் கோபி.. கோபின்னே கூப்பிடு" என்றான்.

"ம்." என்று தலையை ஆட்ட "சித்தார்த் அண்ணா எப்போ வருவாங்க சாருகேஷ் அண்ணா, கேஷவ் அண்ணாவ எப்போ பாக்கலாம்" என்றாள் ஆவளாய்.

"சித்து.... இன்னும் ஒன் ஹவர்ல வந்துடுவான்... கவிய பார்க்க போய் இருக்கான். இனிதான் உங்க அண்ணனுங்கள எப்போ பார்க்க போறேன்னே தெரியும்...." என்று சிரித்தவன்.... "மணி 2 ஆக போகுது வாங்க சாப்பிடலாம்" என்று அவளை அழைக்க அவளுக்கு இருக்கும் பசியில் அனைத்தையும் மறந்தவள் சாப்பிட சென்றாள்.

~

காலம் சென்ற பின் ஞானம் கிடைத்தென்ன பிரயோஜனம்.... அனைத்தும் தவறான பின்பு எப்படி சென்று பேசுவது அவனிடம். தான் உண்மை என்று நம்பியதும் அனைத்தும் பொய்யாய் ஆனதே என்று சந்தோஷப்படுவதா இல்லை தன் உயிர் நண்பனை வறுத்தியதை நினைத்து அழுவதா என்று தலையை தாங்கியபடி சோஃபாவில் அமர்ந்திருந்தவனின் எண்ணம் எல்லாம் கேஷவ் கேஷவ் மட்டுமே வியாபித்து இருந்தான்.

'உன்னை தப்பா நினைச்சிட்டேன் டா உன்னை வார்த்தையால கொன்னுட்டேன் டா நம்ம நட்பை சாகடிச்சிட்டேன் டா' என்று புலம்பிக்கொண்டு இருந்தான்... அவனுக்கு நேரத்திற்கு கொடுக்கப்படும் பழசாற்றுடன் வேலையால் வந்து அவன் முன்னே "சார்" என்று நீட்ட தன்மேலையே உள்ள உட்சபட்ச கோவத்தில் அதை கீழே தட்டி விட்டவன் பைத்தியகாரன் போல கத்தினான்

"போ.... இந்த இடத்தை விட்டு போ..." என்று கத்திட அவன் பயந்து போய் அங்கிருந்து ஓடியே விட்டான்.

கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் வீசி எறிந்தான். வீட்டையே அலங்கோலமாய் மாற்றினான்.... நினைக்க நினைக்க மனம் புழுங்கியது நண்பனிடம் பேச துடித்தது தான் செய்த வெறிபிடித்த செயல்களுக்கு எல்லாம் அவனிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று உள்ளம் தவிதத்து... வெறிபிடித்த வேங்கையாய் ஓவென கத்தி அப்படியே மடங்கி தரையில் அமர்ந்திருந்தான் சாருகேஷ்.

சந்தோஷமான மனநிலையுடன் சாருகேஷின் வீட்டிற்குள் நுழைந்த தேவராஜின் கால்களில் ஏதோ பட்டு தட தட சத்தத்துடன் உருண்டு போய் நின்றது... அப்போதுதான் வீட்டின் அலங்கோலத்தையே கண்டான் தேவராஜ். அதைகண்டவனின் மனது திடுக்கிட்டு தன் நண்பனை தேட சோஃபாவில் கீழே தரையில் அமர்ந்திருப்பவனை பார்த்தவனின் விழிகளில் அதிர்ச்சியை பிரதிபலிக்க அவன் நிலையை கண்டு பதறிய தேவராஜ் "சா.... சாருகேஷ் என்ன ஆச்சி ஏன் இப்படி இருக்க வீடு ஏன் அலங்கோலமா இருக்கு...? நீ ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க?" என்று அவன் கைகளை பிடித்து தூக்கிவிட எங்கே அவன் எழுந்தால் தானே தன்னிலை இல்லாமல் தலையை தொங்க போட்டுக்கொண்டு ஏதோ முனுமுனுத்தவாறே அமரந்திருக்க அவன் நிலை சற்று பயம்கொடுக்க வீட்டு வேலையாளை கத்தி அழைத்து "என்ன நடந்தது??" என்று கேட்டான். "வெளியில் சென்று வந்ததிலிருந்தே இப்படிதான் இருக்கிறார்" என்னும் பதில் வர குளிர்ந்த நீரை கொண்டு வர சொன்னவன் அவன் முகத்தில் ஓங்கி தெளிக்க தண்ணீர் பட்டதில் தன்னிலை அடைந்தவன் எதிரில் இருந்த தேவராஜை பார்த்ததும் கண்களை மூடிக்கொண்டான்.

"சா... சாருகேஷ் என்ன ஆச்சி ஏன் இப்படி இருக்க என்ன ஆச்சி?" என்று கேள்வி கனைகளை தொடுக்க "நான்.... நான் தப்பான முடிவு எடுத்துட்டேன் தேவா. ஒருத்தனை உயிரோட கொன்னுக்கிட்டு இருக்கேன்" என்று வருத்தமாக பேச

"நீயா... நீ என்ன தப்பு செய்த நீ யாரை கொன்ன" என்று சந்தேகமாக கேட்க

"வேற யாரு ஒருத்தன் மேல இல்லாத பழியை போட்டு அவனை நரகத்துல தள்ளி சாகடிச்சிட்டு இருக்கேனே என் உயிர் நண்பனை நான் கொஞ்ச கொஞ்சமா கொன்னுட்டுதானே இருக்கேன்". என்றதும் அதிரிச்சியுடன் இருக்கையில் இருந்து முன்னால் வந்த தேவராஜ் "என்ன... என்ன சொல்ற சாருகேஷ் அவன் அவன் உன் தங்கச்சிய நம்ப வைச்சி நாசமாக்கியவன்" என்று அவன் மறந்ததை ஞாபகபடுத்த

"ஷட்டப், ஷட்டப் தேவா. அவனை பத்தி எதுவும் சொல்லாத அவன் தங்கத்தை காட்டிலும் உயர்ந்தவன். நான்.... நான் அவன் பக்கத்துல கூட நிக்கமுடியாத கரித்துண்டா போயிட்டேன்" என்று நெஞ்சில் கை வைக்க கண்களில் இருந்து கண்ணீர் விழந்தது.

"சாருகேஷ் நீ எப்படி..... அவனை எப்படி" என்று கேட்க வந்தவன் அதை விடுத்து... "சரி என்ன நடந்துச்சி நீ ஏன் இப்படி பிதற்றிக்கிட்டு இருக்க"? என்று கேட்க அந்த ஷாப்பிங் மாலில் தான் ஒரு பெண்ணை சந்தித்த நிகழ்வை விளக்க ஆரம்பித்தான்.

தான் சந்தித்த அந்த பெண் இவனிடம் பேசிக்கொண்டே வந்தவள் "அண்ணா நீங்க நீங்க சாருகேஷ் அண்ணா தானே நான் என்னை தெரியலையா?" என்றதும் அவன் புருவம் சுருக்கி அவளை பார்க்க தன்னை நினைவில் இல்லையோ என்று நினைத்த அந்த பெண் நான் தான் ணா உத்ரா ஃப்ரெண்ட் அங்கீதா" என்று தன்னை அறிமுகபடுத்திக் கொண்டவள் "இது என் குழந்தை பேரு மீனாள்" என்றவள்

"நீங்க எங்க இருக்கிங்க? அண்ணா எப்படி இருக்கிங்க?" என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

அவளை ஞாபக அடுக்கில் கொண்டு வந்து கண்டு கொண்டவன் "நல்லா இருக்கேன் மா... நீ எப்படி இருக்க? பேபி சோ கீயூட். நேம் ரொம்ப பொருத்தமா வைச்சிருக்க" என்று அந்த குழந்தையை கொஞ்சியவன் "உத்ரா இருந்திருந்தா அவளும் இதே போலதான் குழந்தை குடும்பம்னு இருந்திருப்பா" என்று குழந்தையின் தலை வருடியபடியே கூற.

அவளின் நினைவில் அங்கீதாவிற்கும் கண்கள் கலங்க "நான் மட்டும் அவ கால் பண்ணிருந்தப்போ இங்கே இருந்து இருந்தேன்னா அவ நம்மல எல்லாம் வீட்டு போயே இருக்க மாட்டாண்ணா" என்று கண்ணீர் விட்டவளை வினோதமாக நோக்கியவன். அவளுக்கு ஏதோ தெரிந்து இருப்பதாக கருத்தில் பட.

"அப்போ அப்போ அவளுக்கு இருந்த பிரச்சனை உனக்கு தெரியுமா??? அவ கேஷவை லவ் பண்ணது உனக்கு தெரியுமா கீதா? " என்று கேட்க

ஏற்கனவே கேஷவின் மூலம் நடந்த குழப்பங்களை அறிந்து வைத்திருந்தவள் சாருகேஷிற்கு இன்று உண்மையை விளக்கியே ஆக வேண்டும் என நினைத்தவள்.

"அண்ணா அவ லவ் பண்ணது கேஷவ் அண்ணாவ இல்லை அஷ்வின்ற அய்யோக்கியனை தான் அவ லவ் பண்ணி தொலச்சிட்டா" என்று கூற பொங்கி வந்த எரிமலை ஒன்று அவன் இதயத்தில் பெரியதாய் வெடித்தது போன்ற வலியை உணர்ந்தவன் பக்கத்தில் இருந்த கண்ணாடி தடுப்பில் தன்னையும் அறியாமல் சாய்ந்திருந்தான். அவனுக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்பில் இருந்தவள் "அண்ணா அண்ணா" என்று அவனை உலுக்கினாள்

அவளின் விளிப்பில் அங்கீதாவை கண்டவன் "கீதா நீ நீ சொல்றது உண்மையா?" என்று கேட்டதும் "உண்மை அண்ணா சத்தியமான உண்மை" என்று உத்ராவின் வாழ்க்கையில் நடந்த கருப்பு பக்கங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவள் தன் தோழி ஃபோன் செய்த சமயம் தன் பாட்டியின் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் வர ஊருக்கு சென்றதும் எதிர்பாராத விபத்தில் சிக்கி 2 மாதம் சிகிச்சை பெற்று வந்ததையும் தெரிவித்தவள் சமீபத்தில் தான் உத்ராவினை பத்திய உண்மையை கேஷவிடமும் தெரிவித்தாக உறைத்தாள்.

மனதிலிருந்து ஏதோ ஒரு பெரிய பாரம் விலகியது போல் இருந்தது சாருகேஷிற்கு இதுநாள் வரை தன் உயிர் நண்பனே தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்து நினைத்து சித்தபிரம்மை பிடித்தவன் போல் நடந்துக் கொண்டு இருந்தவன் இன்று பெரிய விடுதலை பெற்றது போல் உணர்ந்தான்.

இவை அணைத்தும் தேவராஜிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே சிறிது சிறிதாக தேவாவின் முகம் மாறி இப்போது பெரும் தவிப்பில் இருப்பது போல் தெரிய "வாட் தேவா என்ன?" என்றான் சாருகேஷ்.

"அது.... அது வந்து.... சாருகேஷ் கேஷவ் மேல இருக்க கோவத்துல அவன் போற வண்டில பாம் ஃபிக்ஸ் பண்ணி பிரேக் ஓயரை கட் பண்ண சொல்லிட்டேன்... விஷயத்தை முடிச்சிட்டதா ஃபோன் பண்ணி சொல்லிட்டானுங்க... இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லனும்னு தான் இங்க வந்தேன்... இன்னும் அரைமணி நேரத்துல அந்த பாம் வெடிச்சிடும்" என்று கூற

"யூ.... யூ... இடியட் ... என்ன வேலை செய்திருக்க?? உன்னை யாரு என்னை கேட்காம இந்த வேலை பண்ண சொன்னது??? அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்று அவன சட்டையை பிடித்து ஆத்திரத்தில் கத்தியவன் நேரே தன் மொபைலில் இருந்து அவனுக்கு எண்களை அழுத்த அது தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என்று செய்தியை தாங்கி வந்தது...

"டேய்... டேய்... ஃபோனை எடுடா" என்று பேசியபடியே மறுபடி அவனுக்கு முயல இந்த முறை அது சுவிட்ச் ஆஃப் என்று செய்தியை வெளிப்படுத்தியது.

சடுதியில் வீட்டை விட்டு வெளியே வந்து காரை எடுத்தவன் மின்னல் வேகத்தில் அவனை தேடி புறப்பட்டு சென்று இருந்தான்.

மாணிக்கத்திற்கு ஆபத்து என்பது தெரிந்த பின்னர் சக்தியின் மூலம் கமிஷ்னரிடம் பேசி மாணிக்கத்திற்கு போலிஸ் பாதுகாப்பு செய்து அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே கவி வீட்டில் தனியாக இருப்பாள் என்று கிளம்ப அவனுடனே சித்துவும் கவியை காண கிளம்பினான்.

கண்களோ அவன் செல்லும் பாதையை பார்த்துக்கொண்டே இருந்தது. அவனை கண்டதும் வந்த தைரியமும் உறுதியும் அவன் கிளம்பும் சமயம் அவளிடம் இருந்து மொத்தம் வடிந்தது போல் உணர்ந்தாள். கண்கள் அவன் பிம்பத்தை முழவதும் உள் வாங்கி கொள்ள கண்களை சிமிட்டினாள் எங்கே மறைந்து விடுவானோ என்று அவன் இருக்கும் திசையையே பாத்து நின்றவளின் இருதயம் 'சித்து சித்து' என்று ஏங்கியது.

"சித்து ப்ளீஸ் என் கூடவே இருடா" என்று கூப்பாடு போட துடித்த அதரங்களை இறுக மூடியவள் தாயின் தோளில் தலை சாய்த்து தன் கைகளை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள். தன் மனம் என்னதான் அவனிடம் எதிர்பார்க்கின்றது தனக்கு ஒன்று என்றால் அவன் முகம் வாடுதே எனக்கு காயம் என்றால் அவன் கண்களில் வலியை பார்க்க முடிகிறதே.... எனக்குள்ளேயே இருந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாய் அறிக்கும் காதல் இன்று அவன் கண்களில் மொத்தமாய் காண முடிந்ததே கடவுளே மறக்க திடம் கொடு என்று கேட்டால் அவனை வாழ்நாள் முழுவதும் நினைக்கும் நினைவுகளையே எனக்குள் விதைக்கிறாயே உனக்கு இதயமே இல்லையா. என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இந்த கண்ணமூச்சி விளையாட்டை விளையாடுகிறாய் என்று உள் மனம் அழ திறந்த விழிகளுக்குள் கண்ணீர் இமை தாண்டி கீழ் இறங்கியது.

தியாவின் அதரங்கள் துடித்த துடிப்பை பார்த்துவிட்டவன் மனதை கட்டுபடுத்திக்கொண்டு கேஷவுடன் புறப்பட்டான். இங்கே இருந்து அவளை வதைக்க விரும்பம் இல்லை அவளை அணைத்து ஆறுதல் கூற முடியாமல் தவிப்பதை விட செல்வதே மேல் தன்னை பார்க்க பார்க்க அவளின் இயலாமை முகத்தில் வலியை தருவதை உணர்ந்தவன் வேண்டுமென்றே கேஷவுடன் புறப்பட்டு சென்றான் ஒருவருக்கு ஒருவர் வலிகளை மறைத்து மற்றவர்களுக்காக தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள அதுவே காதல் கொண்ட அவர்களின் உள்ளங்களை கீறி ரணமாய் காயங்களை ஏற்படுத்தியது.

"ப்ச் எங்கடா இருக்க??" என்று ஸ்டயரிங்கில் ஓங்கி குத்தி தன் கோபத்தை வெளிபடுத்தியவன் மணியை பார்க்க அது மொத்தமாய் இருபது நிமிடத்தை விழுங்கி இருந்தது. தவிப்போடு அவனை தேடியபடி சென்றவனின் கைகளில் கார், தார் சாலையில் சீறி பாய்ந்தது. கேஷவின் மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்க அவன் இருக்கும் இடம் தெரியாது விழி பிதுங்கி இருக்க மாணிக்கத்தினை பார்க்க வந்த கேஷவனின் கார் சாருகேஷின் எதிர் திசையில் பயணித்ததை கண்டான். சட்டென யூ டர்ன் அடித்தவன் அவனை தொடர்ந்து வேகமாக வண்டியை செலுத்தி கேஷவினை பிடிக்க முயன்றான்.

இதை அறியாதவர்களோ "ஹேய் நண்பா செம டெரர் தாம்பா நீ. என்ன ஸ்ரேந்த்" என்று கேஷவின் ஸ்டைலையும் அவன் சண்டையிட்டதையும் பாராட்டி பேசியபடி இருந்தான் சித்தார்த்.

இதழ்களில் தோன்றிய முறுவலுடன் "அட நீ வேற சித்து இதை எல்லாம் விட்டு ரொம்ப நாள் ஆச்சி... அம்மாவுக்கு நான் கோவப்படுறது ஃபைட் பண்றது எல்லாம் பிடிக்காது... அதை எல்லாம் விட்டு ஒதுங்கி இருந்தேன். மாமா பிரச்சனை வரவும் என் சுயரூபம் மொத்தமும் வெளியே வந்துடுச்சி" என்று தன் நிலையை விளக்கியவன் "நீ கூட நல்ல ஃபைட் பண்ற சித். உன் கண்ணுல நான் கோவத்தை பார்த்தேன்... ஏதோ உனக்கு உரிமையான பொருளை பிடிங்கி உடைச்சிட்டா வருமே கோவம் அந்த மாதிரி ஒரு கோவத்தை பார்த்தேன்... இவ்வளவு சாஃப்டா அமைதியா இருக்க சித்துக்குல்ல இப்படி ஒரு அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோ இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை..."என்று கேஷவ் கூற

சின்ன சிரிப்பை வெளிபடுத்தியவன் "அப்படி ஒன்னும் இல்ல கேஷவ் கண் முன்னாடி ஒரு கொலை செய்யறதை தடுக்குற வேகம் தான் அது..." தன் இதயத்தில் அமர்ந்திருந்தவளின் முகத்தில் காயத்தை பார்த்ததும் வந்த கோவம் அது.. தன் காதலை உறைக்காமல் தன் கண்களில் தெரிந்த வலியை மறைத்து வேறு காரணத்தை கூறியவன் பார்வையை ஜன்னல் புறம் பதித்திருந்தான்.

எதேட்சையாக பின்னால் துரத்தி வரும் காரை கண்ட சித்து "நண்பா நம்ம காரை யாரோ ஃபாலோ பண்றா மாதிரி இருக்கு" என்று பின்னால் பார்க்க சைட் வீயூ மிரரில் அதை பார்த்த கேஷவ் வண்டியை வைத்து அது சாருகேஷ் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டவன் "இது சாருகேஷோட காராச்சே ச்சே... நேரம் காலம் தெரியாம இவன் வேற டார்ச்சர் பண்றானே கடவுளே" என்று நொந்தவன் வேகமாய் ஒட்ட எண்ணி காரின் ஆக்சிலேட்டரை அழுத்த அது வேகம் கொண்டு பறந்தது.

"ஹே... வண்டிய நிறுந்துடா..... டேய் கேஷவ் வண்டிய நிறுத்து" என்று கத்திக்கொண்டு கையை ஆட்ட பின்னால் பார்த்து சித்தார்த் கேஷவ் "அவர் அவர் என்னமோ சொல்ல வர்ரார்". என்றான்.

அவன் தவிப்பை சைடு மிரரில் பார்த்த கேஷவ் சரி எதுவந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று காரை நிறுத்துவதற்காக பிரேகை அழுத்த அது பயனற்று போய் இருந்தது... பதற்றமாய் மறுபடியும் அழுத்த இப்போது சுத்தமாய் அது வேலை செய்யவில்லை என்று புரிந்தது.. காரின் வேகம் குறையவில்லை தாறுமாறாக சாலையில் ஓட அதில் பொருத்தபட்டிருந்த டைம்பாமும் இன்னும் ஐந்து நிமிடங்களில் தன் வேலையை முடிக்க காத்திருந்தது.

"கே.. கேஷவ் என்ன ஆச்சி" என்று வண்டியின் போக்கை வைத்து சித்து கேட்க "ப்ரேக் பிடிக்கல சித்து" என்றான் காரை செலுத்தியபடியே

"வாட் ப்ரேக் பிடிக்கலையா?" என்று தன் அதிர்வை வெளிபடுத்தியவன்... "இப்போ என்ன செய்றது" என்றான் "தெரியல சித் ஏதாவது பண்ணனும்" என்றவன் வண்டியை சாலையின் ஓரத்தில் அணைத்தபோல் ஓட்டிக்கொண்டு வர அதை ஒட்டியே கேஷவின் காரின் பக்கம் வந்த சாருகேஷ் "கார் கார்ல பாம் இருக்கு.... ஆள் இல்லாத இடத்துக்கு போ... கேஷவ் போ போ" என்று கத்தியவனை கேஷவ் நம்பாத பார்வை பார்க்க "நான் உண்மையதான் சொல்றேன் கேஷவ்... கார்ல பாம் இருக்கு.. ப்ளீஸ் கேஷவ் காரை யாரும் இல்லாத இடத்துக்கு கொண்டு போ.. டிரை டூ அண்டர்ஸ்டேன்ட் மீ ப்ளீஸ் பிலிவ் மீ" என்று கூற

"கேஷவ் அவர் சொல்றது உண்மையா கூட இருக்கலாம்... எதுக்கும் காரை நிறுத்த ட்ரை பண்ணி பாருங்களேன்". என்று சித்து கூற காரை நிறுத்த முயற்சித்தும் எதுவும் பயனற்று போக கடைசியாக யாரும் அற்ற வழியில் காரை செலுத்தி இருந்தான்.

அந்த கார் பின்னோடு சாருகேஷும் சென்றான் ஆள் யாரும் அற்ற பகுதிக்கு காரை செலுத்தியதால் தன் காரைக்கொண்டு அதில் முட்டி நிற்க வைக்க முயற்சி செய்ய, வந்த வேகத்தில் தாறுமாறக ஓடியவண்டி நிலையில்லாமல் சாருகேஷின் காரையும் இடித்து தள்ளியபடியே உருண்டு தலைகீழாக கிடக்க கேஷவ் சித்து இருவரும் அதில் இருந்து வெளியேற முயற்சித்து கொண்டு இருந்தனர்.

நிலைதடுமாறிய சாருகேஷும் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கி கேஷவின் வண்டியின் பக்கம் ஓடியவன் இருபுறமும் கதவை திறந்துவிட்டு அவர்கள் வெளியே வர உதவி செய்தவன் இருவரின் கையை பிடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வேறு திசையை நோக்கி ஓட 'தும்' என்று பெரிய சத்தத்துடன் காரில் இருந்த பாம் வெடித்து அந்த இடமே கரும்புகையும் அக்னி ஜீவாலையுமாக காட்சி அளித்தது கொண்டிருந்தது.

தப்பி வந்த இருவரும் அதிர்வோடு நின்றிருக்க சுயத்தை அடைந்த கேஷவ் சாருகேஷை வியப்பாக பார்க்க கலங்கிய கண்களுடன் நின்றிருந்த சாருகேஷோ "கே... கேஷவ் என்னை மன்னிச்சிடுடா" என்று அவனை இறுக அணைத்து கண்ணீர் வடித்தான்.

அவனின் இந்த மாற்றத்தை கண்டு பேச்சற்ற உறைந்த நிலையில் இருந்த கேஷவும் தன்னுனர்வு அடைந்து உணர்ச்சி மிகுதியில் தானும் கண்கலங்கி நண்பனின் அணைப்பில் இருக்க இதை பார்த்த சித்துவிற்கு தான் அங்கு நடப்பது கனவா நினைவா என்ற நிலையில் இருந்தான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 51
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN