ஈரவிழிகள் 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரண்டு தம்பிகளையும் வழி அனுப்பி விட்டு மீனாட்சி உள்ளே வர, எதிர்ப்பட்டனர்.. புருஷோத்தமனும் அவன் மனைவி உமாவும். புருஷோத்தமன்.. இந்த வீட்டின் முதல் ஆண் வாரிசு. அதாவது, மீனாட்சிக்கு அடுத்துப் பிறந்தவன். இருவரையும் கண்டவள் உள்ளே செல்ல எத்தனிக்க..

“இந்தாங்க...” உமாவின் குரல் தான் இவளைத் தடுத்து நிறுத்தியது.

நின்றவள், என்ன என்பது போல் தம்பி மனைவியை நிமிர்ந்து காண..

“நீங்க பாட்டுக்கு கீரை ஆயறேன்.. மாம்பழம் பிழியறேன்னு உட்கார்ந்துடாதிங்க. கொஞ்சம் சீக்கிரம் சமையலை முடிச்சு.. சாப்பாடு கட்டி... பிள்ளைங்களுக்கு நேரத்தோட அனுப்பி விடுங்க. எங்களுக்கு தான் காலையிலே... வெந்ததும் வேகாததுமா இருக்கிறதை டப்பாவிலே நீங்க அடைத்து கொடுக்கிறதை சூடு ஆறி திங்கணும்னு தலையெழுத்து. பிள்ளைங்களாவது நல்ல சாப்பாடா சாப்புடட்டும்.. அதான் சொல்றேன்..” என்று இப்படி நீட்டி முழங்கிய உமாவின் குரலில்... துளியும் ஆர்ப்பாட்டமோ, ஆணவமோ இருக்காது.. அது தான் உமா. பிறகு ஏன் இத்தனை பேச்சு? அதற்கு ஒரு கதை இருக்கிறது.

இதுவரை மனைவியின் பேச்சில் குறுக்கிடாமல் இருந்த புருஷோத்தமன்.. அவள் முடித்ததும், “அதெல்லாம் அக்கா செய்துடுவாங்க.. செய்துடுக்கா...” என்று கட்டளையிட்டவன், “சரி கெளம்பு.. நேரமாச்சுல...” என்று மனைவியை இவன் கிளப்ப

உமாவோ, “அப்டி நம்பினதுக்குத் தான் நேத்து இவங்க என்ன செய்தாங்கனு தெரியுமா உங்களுக்கு.. நேத்து லேட்டா தான் சாப்பாடு குடுத்து விட்டுருக்காங்க. வசந்த், வாணி ரெண்டு பேரும் சாப்பாடு வர்ற வரைக்கும் மத்த பிள்ளைங்க வாயை பார்த்துட்டு இருந்திருக்குங்க. என்ன தான் சொல்லுங்க.. நாமளும் நம்ம பிள்ளைங்களும் இவங்களுக்கு கொஞ்சம் கீழ தான்...” மீனாட்சி ஏதோ கொடுமைக்காரி போல் அவள் கணவனிடம் முழங்க

உமா சொன்ன குற்றச்சாட்டை விட.. ‘இந்தாங்க, இவங்க’ என்ற வார்த்தையில் அவள் தன்னை விளிப்பதை எப்போதும் வலிப்பது போல் இப்போதும் வலித்தது மீனாட்சிக்கு. அதில் என்றும் போல் இன்றும் இவள் வாயைத் திறக்காமல் நிற்க..

“அடி போடி... என் அக்கா அப்டி எல்லாம் செய்ய மாட்டாங்க.. நீ சும்மா இரு...” இப்படியான வார்த்தைகளை புருஷோத்தமன் சொல்லியிருப்பான் என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை... அவன் சொன்னதோ..

“என்ன க்கா இப்படி செஞ்சிட்ட... பிள்ளைங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு அனுப்பாம அப்டி என்ன வேலை உனக்கு.. இனி இப்டி நடந்துக்காதிங்க..” சுள்ளென்று சொன்னவன் தன் காரை எடுக்க நகர்ந்து விட... ஒரு குரூர புன்னகையுடன் அவன் பின்னே நகர்ந்தாள் அவனின் மணவாட்டி.

தம்பி மனைவி சொல்வது போல்... மீனாட்சி இவர்களைப் பாரபட்சத்துடன் பார்ப்பவள் கிடையாது. நேற்று சரியான நேரத்திற்கு உணவைக் கொடுத்தனுப்பியும் பாதி வழியில் கார் பஞ்சர் ஆகிவிட, பள்ளி செல்ல கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது.

என்ன ஏது என்று கேட்காமல்... இவளைக் குற்றவாளி போல் நிற்க வைத்து, கணவன் மனைவி இருவரும் பேசி விட்டுச் செல்லவும்.. மீனாட்சிக்கு வலித்தது. கோணல் சிரிப்புடன் மீனாட்சியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்லும் உமாவைக் கண்டவளுக்கு.. ‘திருமணம் நடந்த புதிதில் இருந்த தம்பி மனைவியா இவள்!?’ என்று இவளுக்குள் தோன்றியது.

புருஷோத்தமன்.. தன் பேருக்குப் பின்னால் பல டிகிரிகளைப் போட்டுக் கொள்ளும் மெத்தப் படித்த பீல்ட் ஆபிசர். கால் காசு என்றாலும் அரசாங்க வேலையிலிருந்து கிடைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவன்... அதில் வெற்றியும் பெற, இன்று அவன் பீல்ட் ஆபிசர். அவனுக்குப் பெண் பார்க்கும் தருணம் வர, அவனைப் போலவே அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவள் தான் வேண்டும் என்று இவன் நிபந்தனை இட... அதில் அமைந்தவள் தான் உமா.. வி.ஓ.ஏ ஆபீசர். சொத்து சுகம் எல்லாம் இவர்களுக்கு நிகர் தான் அவள் வீட்டிலும். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.. மூத்தவன் வசந்த்.. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அடுத்தது வாணி.. ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.

புருஷோத்தமன் சிறுவயதிலிருந்தே யாரிடமும் ஒட்ட மாட்டான்... முசுடு. அவனுக்கு அவன் தேவைகள், அவன் சுகங்கள் மட்டும் தான் முக்கியம். உமா அப்படி இல்லை. என்ன, அவள் கலகல பேர்வழி இல்லை என்றாலும்.. பார்ப்பவர்கள் எல்லோரிடமும் புன்னகை முகத்துடன் சகஜமாக பேசுவாள்.

திருமணம் முடித்து வந்த புதிதில்.. ‘மதனி மதனி’ என்று மீனாட்சியின் பின்னே சுற்றியவள் தான். காலை வேளையில் அவசரமாய் வேலைக்கு கிளம்பும் நேரத்தில் கூட சமையல் அறைக்கு வந்து உதவியாய்... மீனாட்சிக்கு சில வேலைகளைச் செய்து... உணவைத் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் டப்பாவில் போட்டு எடுத்துச் செல்வாள். இன்னும் சில வீட்டு வேலைகளையும்... பொறுப்பாய் செய்தவள் தான்.

இதெல்லாம் இரண்டாவது மருமகளாய் கல்பனா இந்த வீட்டிற்குள் வரும் வரை தான் நீடித்தது. பெரிய செல்வந்தரின் மகளான அவளுக்கு எதிலும் அலட்சியம்... ஆடம்பரம். எந்த வேலையையும் செய்யாமல் யாரையும் மதிக்காமல் ஏன், தன் அறையை விட்டுக் கூட வெளியே வராமல் இருப்பவள். உமா, இதை எல்லாம் பார்த்தவள் தானும் கற்றுக் கொண்ட பாடம் தான் இப்படி.

உலக வழக்கப் படி பார்த்தால்... முன்னேர் செல்வது போல தான் பின்னேர் செல்லும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இங்கு தான் அது வேறாக இருந்தது. கல்பனா, மதனி என்று அழைக்காமல் இந்தாங்க என்று அழைப்பது போல்.. உமாவும் மீனாட்சியை அப்படியே அழைக்க ஆரம்பித்தவள்.. பின் கல்பனா தன் மகள் ஷாலினியை மீனாட்சியின் பராமரிப்பில் விட்டு விட... உடனே உமாவும் தன் பிள்ளைகளை அவளிடம் விட... அதில் ஒன்று தான் இப்படி மதிய உணவை சுடச்சுட.. வசந்த், வாணிக்கு கொடுத்தனுப்புவது.

கார்மேகம் குடும்பத்தார் அசைவம் சாப்பிடுபவர்கள்.. கல்பனா சைவம் சாப்பிடுபவள். அங்கு ஆரம்பித்தது பிரிவினையும்.. மீனாட்சிக்கு வேலைகளும். ஆதிகாலத்தில் இருந்தே இந்த வீட்டின் சமையற்கட்டு.. பின்புறத்தில் தான். கல்பனா வந்த பிறகு புது சமையலறை முளைக்க.. அங்கு சைவம் சமைக்கத் தெரிந்த ஆட்களுடன் புது பாத்திரம் பண்டங்கள் குடியேற... மீனாட்சி தான் இந்த கட்டுக்கும் அந்த கட்டுக்கும் திரிய வேண்டிய நிலை..

விடுமுறை நாளில் கூட வீட்டு மருமகள்கள் யாரும் வந்து உதவி செய்வதில்லை. இதில் கல்பனா அதிகாரம் வேறு செய்பவள்... சைவ உணவை முடித்து தான் மீனாட்சி அசைவம் உள்ள கட்டுக்குச் செல்ல வேண்டும்... தவறி அங்கு முடித்து விட்டு இங்கு வந்தால் குளித்து விட்டுத் தான் வர வேண்டும். அவளுக்கு ஓட்டல்.. கேன்டீன் மற்றும் வெளி சாப்பாடு ஒத்துக்காது என்று சொல்லுவாள். ஆனால் பெரிய பெரிய மால்களுக்கு சென்றால் மூக்கு முட்ட கட்டுவாள். அதனால் சுடச்சுட வீட்டு சாப்பாட்டை மீனாட்சி நேரத்திற்கு கொடுத்தனுப்ப வேண்டும்.

இதைப் பார்த்த உமா சும்மா இருப்பாளா? ‘அப்போ நாங்க என்ன தக்காளி தொக்கா?’ என்று நினைத்தவள்... அவள் பிள்ளைகளுக்கும் மதிய உணவை சுடச்சுட அனுப்பச் சொல்ல... இதில் கணவன் மனைவி இருவரின் வேலை இடமும் தூரம் என்பதால்... இவர்களுக்கு வேறு தனியாக காலையில் சமைக்க வேண்டும். அதைக் கூட ஹாட் பாக்ஸில் போட்டுக் கொடுக்க வேண்டும்.

அப்படி வாங்கிச் சென்று தின்னும் அந்த உணவைத் தான் ஆறிப் போன உணவு என்று ஜாடையில் சொல்லி விட்டுச் சென்றாள் அவள். கல்பனாவுக்கு மட்டும் மீனாட்சி விட்டுக் கொடுத்துப் போவதாக உமாவின் வாதம். ஆனால் இங்கு கணவன் சேரனே அவள் பேச்சைக் கேட்கும் போது... மீனாட்சி எல்லாம் எம்மாத்திரம்? அதை அறியவில்லை உமா.

வாழ வந்தவர்களை அவரவர் கணவன்மார்கள் தான் அடக்க வேண்டும். அது இல்லாத பட்சம் வீட்டுப் பெரியவர் தான் தட்டிக் கேட்க வேண்டும். ஆனால் குடும்பம் உடைந்து விடும் என்ற பயத்தில்... கார்மேகம் அப்படி எல்லாம் வாயைத் திறக்க மாட்டார்.

இதில், “குடும்பம்னா அப்டி தான்.. நீ அனுசரிச்சுப் போ...” என்று மகளுக்கு அறிவுரை வேறு சொல்லுவார். போனஸா ஒரே நாளில் சைவம்.. அசைவம் என்று இரு வகை உணவு கிடைக்கும் போது மனுஷன் வாயைத் திறப்பாரா என்ன? அப்படியே திறந்தாலும்.. ரசத்தில் புளிப்பு இல்லை.... கூட்டில் உப்பு இல்லை... கறியில் காரம் இல்லை.. என்று இப்படி வக்கனையாய் சொல்லத் தான் வாயே திறப்பார். இதில் மீனாட்சி தான் திண்டாடிப் போனாள்.

கல்யாணத்திற்கு சமைப்பது போல் முப்பொழுதும்... சமையலறை தான் அவள் வாசம். இது இல்லாமல் வருவார் போவோரைப் பார்க்க வேண்டும்... தந்தையின் அழுக்கு துணியைப் பிரித்து வைப்பதிலிருந்து.. அவரின் கால் செருப்பு வரை துடைத்து வைக்க வேண்டும். ஷாலினியைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எத்தனையோ வேலைகளை இவள் செய்ய... இவளின் மனம் அறிந்து அவளின் தேவைகளை செய்யத் தான் இங்கு ஆட்கள் இல்லை... இளங்குமரனைத் தவிர. ஊர் உலகத்தில் நாத்தனார் தான் வீட்டுக்கு வந்த மருமகள்களை கொடுமை செய்வாள்... ஆனால் இங்கு வாழ வந்த மருமகள்களிடம் கொடுமையை அனுபவிக்கிறாள் இவள். இப்படியான குடும்பத்தில் தான் வாழ வர இருக்கிறாள் மகாலஷ்மி.

மாலை வேலை முடித்து குமரன், வீட்டுக்கு வரும் வழியில் எதிர்ப்பட்டார் அந்த ஊர் தமிழ் வாத்தியார் பரஞ்சோதி. அவர் தமிழ் புலமைக்கும்.. அவர் குரலுக்கும் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இளவட்டங்களும் நடுங்கித் தான் போவார்கள். அப்படி ஒரு கணீர் குரலில், கர்ஜனையோடு தன் வகுப்புகளை நடத்துவார் அவர். அவரை நெருங்கவும்... வண்டியை நிறுத்தி விட்டு பவ்வியத்துடன் இவன் அவர் அருகில் செல்ல...

இவனைக் கண்டவர், “வா டா.. குமரா... கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது?” என்று கேட்க

“அதெல்லாம் நல்லா போகுதுங்க ஐயா. அது விஷயமா தான் செத்த போயிட்டு வரேங்க ஐயா...”

“காங்கேயேன் காளை கணக்கா உன் அண்ணனுங்க ரெண்டு பேரு வளர்ந்து நிக்கறானுங்க... மதுரை வீரன் கணக்கா.. உன் அப்பன் மீசையை முறுக்கிட்டு திரியறான். ஆனா கல்யாண வேலையை மட்டும் எவனும் செய்ய மாட்டானுங்க. மணவறையில் உட்கார்ற வரைக்கும்... நீயே ஓடி ஓடி வேலை செஞ்சிட்டு பெறகு போய் தாலி கட்டுவ அப்படி தான...” இவன் தாத்தா அழகுமலையையே... வா டா போடா என்று அழைப்பவர் இவர். அவரை விட இரண்டு வயது மூத்தவர் இந்த பரஞ்ஜோதி... பதில் சொல்ல முடியாமல் இவன் கையைக் கட்டிக் கொண்டு தலை குனிய..

“நீ ஏன் டா.. தலை குனியற... வீட்டுப் பிரச்னையைப் பார்க்காம... காலையிலேயே மீசையை முறுக்கிட்டு உன் அப்பன்.. ஊர் பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்ல துண்ட உதறி தோளில் போட்டுட்டு கெளம்பிடறான். பெறகு வந்து சாப்புட்டு தூங்கி.. மறுக்கா எழுந்து வடக்கு தெருவுக்கு கெளம்பிடறான்... பெறகு அவன் திரும்ப வர்றத்து என்னமோ.. ரா பிச்சைக்காரன் வரும்போது தான். மருமகள்கள் வந்தாச்சு.. இன்னும் என்ன டா அவனுக்கு வடக்கு தெரு கேக்குது?” பெரியவர் கொஞ்சம் சூடாகவே கேட்க

சங்கடத்துடன் உடலை நெளித்தான் குமரன். இதே வார்த்தைகளை வேறு யாராவது கேட்டிருந்தால்... ‘உன் சோலியைப் பார்த்துட்டு போடா’ என்று மல்லுக்கு நின்றிருப்பான். ஆனால் கேட்பது அவன் தந்தைக்கே வாத்தியாராச்சே.. எப்படி நிற்பான்...

அவர் சொல்வது போல்.. மருமகள் வந்த பிறகும் கார்மேகத்துக்கு வடக்கு தெருவில் என்ன வேலை... அங்கு தானே அவர் மனைவி இருக்கிறாள். அதாவது தாலி கட்டாத மனைவி.. அப்போது நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன். இவன் மவுனமாய் நின்ற நேரம் அவன் போனுக்கு அழைப்பு வரவும்...

“சரி... சரி.. உனக்கு சோலி வந்துடுச்சு போல... கெளம்பு... நான் காத்தாட செத்த நடந்துட்டு போறேன்..” என்றவர், சுருக்க தன் நடையை எட்டிப் போட்டார் பரஞ்சோதி வாத்தியார். இவன் வீட்டில் உள்ளவர்களைத் தட்டி கேட்பவரும் இவர் மட்டும் தான்.

திருமண வேலைகள் வேகமாய் நடந்தேற... இதோ விடிந்தால் திருமணம் என்ற நிலை. இதே ஊரில் உள்ள கோவிலில் தான் திருமணம் நடைபெற இருப்பதால்.. குமரன் வீட்டில் சொந்தங்களும்.. உறவுகளும் புடைசூழ.. கிராமத்து மக்களுக்கே உள்ள நக்கல், நையாண்டியுடன் எங்கும் பேச்சும் சிரிப்பும் ஆர்ப்பாட்டமுமாய் இருந்தது. இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் நாளைய நாயகனோ... மொட்டை மாடியில் தலைக்குக் கீழே கைகள் கோர்த்து வானத்தை வெறித்த படி படுத்திருந்தான் அவன்.

திடீரென அங்கு கொலுசொலி கேட்க... வருவது அக்கா என்று அவனுக்குத் தெரிந்தது. இருந்தும் இவன் அசையாமல் படுத்திருக்க..

“குமரா.. நாளைக்கு கருக்கலே கோவிலுக்கு கெளம்பணும். நீ என்ன இப்டி மொட்ட வானத்தை வெறிச்சிட்டு கெடக்க... சீக்கிரம் தூங்குனா தானே... காலைல மாப்பிள்ளையா ஜம்முன்னு நிப்ப... போய் தூங்கு டா..” வந்தவள் தம்பியை விரட்ட

“ஹ்ம்ம்... சரிக்கா... நீ போ... நான் தூங்கறேன்...” என்று சொன்னவனின் பார்வை கூட அக்காள் பக்கம் திரும்பவில்லை...

என்ன நினைத்தாளோ.. தம்பியை நெருங்கி... அவன் கேசம் கோதியவள், “என்ன டா பட்டு.. ஏன் இப்டி இருக்க?” சின்ன வயதிலிருந்து.. இவனைப் பட்டு என்று தான் அழைப்பவள். குமரன் வளரவோ தான்.. அந்த வார்த்தையைப் பொது இடத்தில் தவிர்த்தாள். ஆனால் தனிமையில் அதிலும் ஒரு தாயாய் அவனை அரவணைக்கும் போது அவளையும் மீறி.. இந்த பெயர் இவள் வாயில் வந்து விடும். இவள் காட்டிய பழக்கம் தான்.. குமரன் குழந்தைகளைப் பட்டு என்று அழைப்பது.

தமக்கையின் கேள்வியில் எழுந்து அமர்ந்தவன், “நான் ஏன் இப்டி இருக்கேன்னு உனக்கு தெரியாதா க்கா?” எதையும் பிரித்து அறிய முடியாத குரலில் இவன் கேட்க

அவளோ தலை குனிந்து தன் விரல்களைக் காண, “போ க்கா... வந்தவங்களை கவனிக்கிறேன்னு நீ தூங்காம இருக்காத. போ... நீ போய் முதல்ல தூங்கு க்கா....” இவன் தன்மையாகவே சொல்ல

தம்பியின் தன்மையான குணம் இவளின் கண்ணில் கண்ணீரை வரவழைக்க முயல, அதில்,
“நான் என்ன குமரா செய்ய? என்னாலே என்ன செய்ய முடியும் சொல்லு...” இவள் ஆற்றாமையில் கேட்க

“ஏன்.. எதுவும் செய்ய முடியாது? உன் வாழ்க்கைக்கு பொருத்தமானவங்களை விரும்பி... வீட்டை எதிர்த்துட்டு ஓடிப் போய் கூடத் தான் கல்யாணம் கட்டிக்கலாம்...” இவன் ஆற்றாமையில் வார்த்தைகளை விட

“ச்சீ... பேச்சைப் பாரு பேச்சை... ஒரு அக்கா கிட்ட தம்பி பேசுற பேச்சா இது?”

“சரி.. அப்போ வேற மாதிரி பேசறேன். இப்போ நீ எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் கட்டி வெக்கிற மாதிரி நானும் உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து... சீக்கிரமே கல்யாணம் செஞ்சி வெக்கிறேன்... என்ன சொல்ற?” நேரம் காலம் தெரியாமல் அவன் டீல் பேச

“அட.. போ டா போக்கிரி... இந்த வயசுலே எனக்கு கல்யாணமாம்.. குசும்ப பாரு... நாப்பத்தி நாலு வயசு டா எனக்கு... இன்னும் நான் குமரினு நெனப்பா ஒனக்கு… இந்த பேச்சை எல்லாம் விட்டுட்டு... கல்யாணம் கட்டி.. சேரனைப் போல ஒரு குட்டி பட்டுவைப் பெத்துக் குடு.. நான் வளர்க்கறேன்...”

“கடைசி வரை நீ மாறவே மாறாத க்கா... இப்படியே இரு. அதான் உன்னை எல்லோரும் உழைச்சி கொட்டுற மிஷினா நெனைக்கிறாங்க” இவனிடம் வார்த்தைகள் வெடித்தது...

நிதர்சனம் உரைத்தாலும்... தம்பியிடம், “என்ன டா இப்டி எல்லாம் பேசுற... இது யார் வீடு... நான் பொறந்த வீடு டா... நீங்க எல்லாம் யாரு.. நான் தூக்கி வளர்த்த பிள்ளைங்க டா... ஒங்களுக்கு நான் செய்யக் கூடாதா?” ஆணித்தரமாய் கேட்க நினைத்தாலும் அவளின் குரலோ நலிந்து தான் ஒலித்தது.

“எது... நீயா செய்றியா... இங்க அப்படியா க்கா நடக்குது?” இவன் கேட்டுக் கொண்டிருந்த நேரம்

“அம்மா... மீனா... குடிக்க தண்ணீ எடுத்து வெக்கலையா மா...” என்று கீழே மாடி விளிம்பின் பக்கம் கார்மேகத்தின் குரல் கேட்டது

பாதி பேச்சிலேயே, “அச்சோ! அப்பாருக்கு தண்ணீ எடுத்து வெக்க மறந்துட்டேன்.. நான் போறேன் டா குமரா..” என்றபடி தமக்கை ஓடப் பார்க்க

“அக்கா நில்லு... இவ்ளோ தூரம் வந்து தண்ணீ கேக்குற அப்பாரே அதை எடுத்து வெச்சிகிட்டா என்ன?”

“டேய்... அப்பாரு யார கேக்குறார்.. பெத்த பொண்ணு என்னைய தானே? சின்ன வயசுலே... என்னை ஈ கடிக்காம... எறும்பு கடிக்காம... எப்படி எல்லாம் வளர்த்திருப்பாரு?”

“ஆமா... அவர் உன்னையும் என்னையும் தான் ஈ கடிக்காம...எறும்பு கடிக்காம வளர்த்தாரு பாரு... மத்த ரெண்டையும் என்ன சீனிப் பாகுலே முக்கி.. கரையான் புத்துல கட்டி வெச்சா வளர்த்தாரு?”

தம்பியின் கேள்வியில், “பட்டு.. ஒனக்கு இவ்ளோ பேசத் தெரியுமா? எங்க டா... இப்டி எல்லாம் பேச கத்துக்கிட்ட!” இவள் வியப்பாய் கேட்க

“அம்மா மீனா...” இன்னும் கொஞ்சம் மேலேறி ஒலித்தது கார்மேகத்தின் குரல்.

“சரி சரி.. நான் கெளம்பறேன். புது மாப்பிள்ளையா லட்சணமா.. ஒன் பொண்டாட்டி பத்தி கனா கண்டுட்டு இரு.. வெளங்குதா...” என்ற செல்லக் கட்டளையுடன் அவள் விலகி விட

“ஆமா... இப்போ அது ஒண்ணு தான் கொறச்சல்...” என்று முணுமுணுத்தான் நாளைய நாயகன்.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Meenakku yen kalyanam pannala ava yaraiyavathu virumbi nadakkalaiya 😲
Maha vathu meenakku support a irruppala
நிச்சயமா வர்ற பொண்ணு எல்லா வகையிலும் மீனாச்சிக்கு support இருப்பா சிஸ் ... நன்றிங்க... heart beat heart beat heart beat heart beat
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN