ஈரவிழிகள் 4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குமாரனுக்குப் பார்த்திருக்கும் பெண் மகாலஷ்மியோட பூர்வீகம் மதுரை. அவர்களும் நல்ல சொத்து பத்து என்று வாழும் பண்ணையார் குடும்பம் தான். B.ed வரை படித்திருக்கும் அவளும், இரண்டு அக்கா.. ஒரு அண்ணன்.. ஒரு தம்பி. ஒரு தங்கை என்று பெரிய குடும்பத்தில் பிறந்தவள் என்பதை அறிந்ததால்.. தன் புகைப்படத்தை மட்டும் பெண் வீட்டாருக்கு கொடுத்தவன்.. இவன் மட்டும் அவள் முகத்தைக் கூட காணாமல் திருமணத்திற்கு சரி என்று சம்மதித்திருந்தான்.

இரு வீட்டாரும் பேசி.. அனைத்திலும் ஒத்துப்பட்டு திருமண நாளும் குறிக்கப் பட.. அப்போது மட்டும் ஒருமுறை மகாவின் தந்தை கைப்பேசி மூலம் அவளிடம் பேசினான் குமரன்.

“எங்க வீட்டுக்கு வந்ததும்.. வேலைக்குப் போகனும்னு பிடிவாதம் புடிக்காத. அதுக்காக உன் படிப்பை வீணாக்க மாட்டேன். நிச்சயம் ஒரு நாள் உன் படிப்புக்கான அங்கீகாரம் கெடைக்கும். அதேமாதிரி கடைசி வரைக்கும் என் அக்கா நம்ம கூடத் தான் இருப்பாங்க. அவங்கள நீ அனுசரிச்சிக்கோ... உன்னைய நான் அனுசரிச்சிக்கிறேன். நான் சொன்னதிலே உனக்கு இஷ்டம் இல்லனா... இந்த கல்யாணத்தை நிறுத்திடு..” இது தான்.. இவ்வளவு தான் அன்று பேசினான்.

அதற்கு மகா “ஹ்ம்ம்...” என்று சொன்னதைக் கூட கேட்க நேரமற்றவனாக... அழைப்பைத் துண்டித்திருந்தான் இந்த காட்டான்.

‘தான் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால்.. அக்காவின் வாழ்வு இப்படி மாறி இருக்காதே!’ இதை நினைக்காத நாள் இல்லை குமரன். அப்படி ஒரு குற்ற உணர்வாலே மீனாட்சியை இறுதிவரை தன் வாழ்வில் பிணைத்துக் கொள்ள நினைத்தான் இவன்.

இன்னும் பெண்ணை அழைத்து வந்து மணமேடையில் அமரச் சொல்லவில்லை. குமரன் மட்டும் மேடையில் அமர்ந்து ஐயர் சொன்னதைச் செய்து கொண்டிருக்க... ஒரு பக்கம் அரசாணி கொம்பை சில பெண்களிடம் கொடுத்து அதற்குடைய சடங்கைச் செய்து நடச் சொல்ல.. தம்பியின் திருமணம் என்பதால் மீனாட்சி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய... அதைப் பார்த்த பெண் வீட்டு உறவுக்கார.. வயதில் முதிர்ந்த ஒரு பெண்மணி,

“ஏன்ம்மா... நீ என்ன தான் வயசுலே பெரியவளா இருந்தாலும்.. ஒனக்கு கல்யாணம் ஆகாததால நீ இன்னும் கன்னி தான் ம்மா... அதுவும் தனி மரமா நிக்கற... வாழ்க்கையிலே தோப்பா இருக்கறவங்க செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் நீ என்னம்மா முன்ன முன்ன வந்து செய்ற...” இப்படியான வார்த்தையால் அவளை வலிக்க வைக்க

துடித்துப் போனவள்... அவளையும் எட்டிப் பார்க்க நினைத்த கண்ணீரை அடக்கிக் கொண்டு இவள் நின்றிருந்த நேரம்.. அங்கு வந்த கார்மேகம், “மீனாட்சி... குடிக்க கொஞ்சம் தண்ணீ கொண்டு வந்து தா ம்மா...” வழக்கம் போல மகளிடம் அவர் கேட்க

எதுவும் நடவாதது போல் விரைந்து சென்று தந்தை கேட்டதைக் கொடுத்தவள்... மேற்கொண்டு அங்கு சென்று பேச்சு வாங்க மனமில்லாமல்... தம்பியைப் பார்த்த படி ஒரு தூணை ஒட்டியவாறு இவள் நின்று விட

அந்நேரம் தான் கேட்டது அப்பெண்ணின் குரல்.. “இந்த கல்யாணத்தை நிறுத்துங்க... நான் உயிரோட இருக்கும் போது.. என் புருஷனுக்கு எப்படி நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணலாம்?” என்று அங்கு ஓங்கி ஒலித்தது... ஒரு இளம் பெண்ணின் குரல்.

மேளதாளங்களின் ஒலியையும் மீறி... திருமண நிகழ்வுக்கே உரிய இரைச்சலையும் மீறி ஒலித்தது அப்பெண்ணின் குரல். எல்லோரும் அதிர்ச்சியோடு குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்க்க.. குமரனும், மீனாட்சியும் குழப்பத்தோடு அத்திசையை நோக்கியவர்கள்.. ஒரு சேர இருவரும் முதலில் மனதில் நினைத்தது...

‘ஓஹ்... யார் கல்யாணத்தையோ நிறுத்த வந்து... இடம் தெரியாம இந்தக் கோவிலுக்கு வந்துடுச்சு போல இந்தப் பொண்ணு...” என்று தான்.

இருவரும் அப்படி நினைக்க காரணம் இருந்தது.. அது வந்து நின்ற அப்பெண்ணின் கையில் இருந்த குழந்தையால் தோன்றியது. கையில் குழந்தையுடன் இப்படி ஒரு பெண் வந்து நின்றால்... அது நிச்சயம் அந்தப் பெண்ணின் குழந்தையாகத் தானே இருக்க வேண்டும்..

“என்ன? உன் புருஷனா! எங்க வந்து யாரப் பார்த்து... இப்படி சொல்ற?” முதலில் இப்படி கேட்டது கார்மேகம் தான்.

“இது என்ன டா புது கூத்தா இருக்கு!” என்று சில பெண்களும்
“மண்டபம் மாறி வந்திருக்கும் போல...” என்று சில ஆண்களும் தங்களுக்குள் சொல்லிக் கொண்டிருந்த நேரம்... அப்பெண்ணின் பின்னே உள்ளே நுழைந்தார்கள் சில காவல் அதிகாரிகள். அதில் ஒருவர்,

“ஏன்ம்மா... வண்டியை ஓரம் கட்டி நிறுத்தறத்துக்குள்ள... பிள்ளைய கையிலே வச்சிசிட்டு.. உன் பாட்டுக்குன்னு ஜீப்பிலிருந்து குதிச்சு ஓடியாரயே.. பூட்ஸ் காலோட உன் வேகத்துக்கு நாங்க ஓடி வர முடியுமா?” பெரிய தொந்தியுடன் தன் காக்கி பேண்டைத் தூக்கி விட்ட படி மூச்சு வாங்க.. வந்த அந்த அதிகாரி கேட்கவும்

“ஆஹ்... என் அவசரம் எனக்கு... நீங்க ஆடி அசைந்து வர்றதுக்குள்ள என் புருஷன் தாலி கட்டிட மாட்டாரா...” வந்த பெண் தைரியமாய் பதில் தர

“அதுக்கு உன் புருஷனை நீ உன் முந்தானையிலே முடிஞ்சி வச்சிருந்துருக்கணும்....” வயதில் பெரியவர் என்பதால் அவரே அடுத்த கேள்வி கேட்டார்

“அப்டி எல்லாம் இல்லாம போக்கத்தவளா... இல்ல போய்ட்டேன்... அம்புட்டு சூதானமா நான் நடந்திருந்தா என் வாழ்க்கை ஏன் இப்டி நிக்கப்போகுது...” வந்தவள் ஒப்பாரி வைக்க

“இந்தாம்மா.. கொஞ்சம் நிறுத்து.. என் மகனுக்கு கல்யாணம் நடக்கற நேரத்துலே ஒப்பாரி வச்சிகிட்டு... நீ தேடி வந்த ஆளு யாரு என்னன்னு கேட்டுப் பார்த்து அங்க போய் உன் பஞ்சாயத்து வச்சிக்க...” சாட்சாத் கார்மேகம் தான் தன் மகனுக்காக வந்தவளை அதட்டினார்.

“ஆஹ்.. அதுக்கு ஏன் எங்கேயோ போய் பஞ்சாயத்தை வெக்கணும்.. என் புருஷன் இங்க இருக்க.. நீங்க நாட்டாமை தானே.. எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க. அதுக்கு முன்னாடி அழகுமலை பேரன்... ஆண்டிப்பட்டி நாட்டாமை.. தலைவர் கார்மேகத்தோட மூணாவது மகன்.. திருநிறை செல்வன் இளங்குமரன்.. அவருக்கு நடக்கிற கல்யாணம் தானுங்க இது?” வந்த பெண் கொஞ்சமும் பயமில்லாமல் கேள்வி கேட்க

“ஆமா...” இது கார்மேகம்.

“அப்போ அவர் தான்... அதோ அங்க மணமேடையில் உட்கார்ந்து இருக்காரே அவர் தான் என் புருஷன்..” வந்த பெண் கோவில் மணி ஓசையாய் முழங்க

அவள் சொன்ன வார்த்தையில் அதிர்ச்சியுற்ற குமரன்.. ஒரு வினாடி திகைத்தவன்.. பின் இயல்பில், “இல்ல... இல்ல.. இந்தப் பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது...” முதல் முறையாக வாயைத் திறந்தான் அவன்.

“ஆஹ்... அது என்ன மச்சான்.. என்ன தெரிலன்னு சொல்றீங்க! தெரியாம தான் ரெண்டு பேரும் குடும்பம் நடத்தி இதோ ஒரு பொண்ண பெத்து வச்சிருக்கோமா?” இவள் தன் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காட்டவும்

மணவறையை விட்டு எழுந்தே விட்டான் குமரன். ‘இது ஏதோ சாதாரண விஷயம்னு நெனச்சா இந்தப் பொண்ணு என்ன குழந்தை வரை சொல்லுது!’ அவன் இப்படி மனதில் நினைத்த நேரம்... அங்கிருந்த அனைவரும் இதையே தான் நினைத்திருந்தார்கள்.

வந்திருந்த போலீஸ் அதிகாரிகளில்.. உயர் அதிகாரி போலிருந்த ஒருவர் சற்றே முன்னே வந்து கார்மேகத்திடம், “ஐயா... அந்த பொண்ணு தகுந்த ஆதாரத்தோட... நேத்தே உங்க மகன் மேல பிராது கொடுத்திருக்குதுங்க... நான் நேத்து லீவு... அதான் உங்களுக்கு தகவல் சொல்ல முடியல.

இன்னைக்கு கூட கருக்கல்லயே... போலீஸ் ஸ்டேஷன் வந்து உட்கார்ந்துடுச்சு... நான் தான் இன்னைக்கு டுயூட்டிங்கிறதால... அடிச்சி புடிச்சி இங்க கூட்டி வந்தேன். இல்லன்னா... இந்த பொண்ணு பெருசா பிரச்சனை செய்திருக்கும்... அதுவும் கையில வேற பிள்ளைய வச்சிகிட்டு இருக்கு...” என்று அவர் நிஜத்தை உரைக்க

அங்கிருந்த ஊர் தலைகளில் ஒருவரோ, “அப்படி என்னம்மா ஆதாரம் வச்சிருக்க?” என்று கேட்க

“ஆஹ்.. ஆதாரம் தானே.. எடுத்து காமிக்கிறேன்.. சரியானு பாத்துக்கோங்க.. இதோ...” தான் தோளில் மாட்டி இருந்த தோல் பையைத் திறந்தவள், “இதோ.. இது நானும் அவரும் எடுத்துகிட்ட போட்டோ...”

“இப்போ எல்லாம் முகம் தெரியாதவங்களோட போட்டோவை வச்சு கூட போட்டோ ஷாப் பண்ணலாம்...” இது சேரன்

“பொறுங்க சின்ன அத்தான்... அதுக்குள்ள ஏன் முந்துறீங்க...” வந்த பெண் பதில் கொடுக்கவும்... சேரனை அவன் மனைவி முறைக்கவும், அவன் அடுத்த வார்த்தை பேசுவானா என்ன..

“சரியான வாயாடி தான் போல!” அங்கிருந்தவர்கள் வந்திருந்தவளுக்கு பட்டம் கொடுக்கவும்

அதையெல்லாம் காதில் வாங்கியும் வாங்காதவள் போல் இருந்தவள் “இது.. எங்க கல்யாணத்தை பதிவு செஞ்ச சர்டிபிகேட்.. அதுல யாரு சாட்சி கையெழுத்து போட்டதுனு பாருங்க... எல்லாம் இவரு சகா கீர்த்திவாசன் தான் கையெழுத்து போட்டுருக்கார். இது.. இவரு மதுரையிலே என்னை கொடக்கூலிக்கு வீடு எடுத்து தங்க வச்சதுக்கான பாண்டு. தாலி மட்டும் தான் கட்டல.. மத்தபடி மாலை மாத்தி கல்யாணத்தை பதிவு செஞ்சு வாழ்ந்து.. தோ.. ஒன்னரை வயசுல குழந்தையே எங்களுக்கு இருக்கு...” வந்தவள் படபட என பொரிய...

தந்தையிடம் வந்து அவர் கையில் இருந்த ஆதாரங்களை வாங்கி பார்த்த குமரன்... “இல்ல.. இல்ல... இந்த பொண்ணு பொய் சொல்லுது... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...” அவன் ஆணித்தரமாய் மறுக்க

“என்ன மச்சான்.. என்ன சம்பந்தம் இல்ல... நம்ம ரெண்டு பேருக்கும் எவ்வளவு தூரம் சம்பந்தம்னு நான் சொல்லவா...” என்று இன்னும் குரலை உயர்த்தி... பீடிகையுடன் வந்தவள் ஆரம்பிக்க

“இவ்வளவு தூரம் சொல்லிட்ட... அதையும் என்னனு தான் சொல்லு...” இது புருஷோத்தமன். அவன் குரலில் ஏதோ சிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

“பெரிய அத்தான்... இந்த குடும்பத்துலயே நீங்க தான் நல்லவர். எனக்கு நீங்க தான் நியாயம் சொல்ல முடியும்” என்றபடி குழந்தையுடன் அவனிடம் சென்றவள்... பின் சபையோரைப் பார்த்து,
“இங்க பாருங்க.. இப்போ நான் சொல்லப் போறது கொஞ்சம் அந்தரங்கமான விஷயம்.. எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும் அவங்க அவங்க துணையைப் பத்தி உடல் அளவுல தெரிஞ்சு தான் வச்சிருப்பாங்க.. அப்படி தான் நானும் இதை சொல்றேன்.

அது... என் மச்சான் உடம்பில்... அதான் என் புருஷன் உடம்பிலே... தோ.. இவர் அந்தரங்க பகுதியான வலது தொடையில ஒரு இடத்திலே ஒரு ரூபா அளவுக்கு சிகப்பு மச்சம் இருக்கு. இது உண்மையா இல்லையான்னு கேளுங்க.

அப்புறம்.. அவர் தலையில் வலது பக்கம் கிரிக்கெட் மட்டை பட்டு.. ஏழு தையல் போட்ட தழும்பு இருக்கும். இது நடந்தது என்னமோ சின்ன வயசுலே தான்... முடி வளர்ந்து அந்த இடம் மறைந்தாலும்... தழும்பு என்னமோ இன்னும் அப்டியே தான் இருக்கு. இதுவும் நிஜமா இல்லையான்னு கேளுங்க....” வந்தவள் பிட்டு பிட்டு வைக்க...


அதைக் கேட்டு சுற்றி இருப்பவர்களுக்கு குழம்பம் என்றால்... குமரனின் குடும்பத்தார்களுக்கோ அதிர்ச்சி. உண்மை தான்.. குமரனின் வலது தொடையில் அப்படி ஒரு மச்சம் இருக்கிறது தான். விவரம் தெரியா வயதில்... அந்த மச்சம் தெரிய ஆடை அணிந்து திரிந்தவன் தான் குமரன். அதன் பிறகு இன்று வரை அந்த மச்சம் மறையும் படி தான் ஆடை உடுத்துவான்.

அதை, வந்த பெண் சரியாய் சொல்லவும்.. அதிர்ச்சியை விட... அவமானமாய் போனது அவனுக்கு. பின்ன.. முகம் தெரியாத பெண்ணொருத்தி சபையில் அவனுக்கு இருக்கும் மச்சத்தைப் பற்றி சொன்னால் எப்படி சகிப்பான். கை முஷ்டி இறுக.. பொறுக்க முடியாமல் வெடித்தவன்..

“உன்னைய பொலி போட்டுடுவேன் பார்த்துக்க.. என்னைய பத்தின எல்லா விவரமும் தெரிஞ்சு வெச்சுகிட்டு.. இங்க வந்து வித்த காமிக்கிறியா.. நீ யாருன்னே எனக்கு தெரியாதுன்னு சொல்றேன்... இதுவரைக்கும் நான் உன்னைய பார்த்ததே இல்ல.. இதுல நீ என்னைய அசிங்க அசிங்கமா வேற சபையிலே பேசுற?” என்றவன் அவளை அடிக்க எகிறிக் கொண்டு போக, அவன் தந்தை அவனைப் பிடித்து இழுக்க..

அங்கிருந்த காவலர்களும்,
“என்ன தம்பி.. பொம்பள பிள்ளைய அடிக்க எகிறிகிட்டு வர.. அதுவும் நாங்க இருக்கும்போதே.. செத்த அமைதியா இரு.. அந்த புள்ள என்ன தான் சொல்லுதுனு முதல்ல கேளு.. பெறகு நீ உன் தரப்பு நியாயத்தை சொல்லு” எனவும்.. பற்களைக் கடித்துக்கொண்டு அமைதியாக நின்றான் குமரன்.

இம்முறை எகிறிக்கொண்டு வந்த கோபத்தில் குமரனின் குரல் ஓங்கியே ஒலிக்கவும்.. வந்ததிலிருந்து தாயின் தோளில் சாய்ந்து அரை உறக்கத்தில் விழிப்பதும்... உறங்குவதுமாக இருந்த குழந்தை இவன் போட்ட சத்தத்தில் வீறிட்டு அழவும்...

“அச்சோ.. பட்டு.. அப்பா சத்தம் போட்டாறா... சரி சரி தூங்குங்க...” என்று குழந்தையை சமாதானம் செய்தவள்... பின் குமரன் பக்கம் திரும்பி

“இதுல அசிங்கப் பட என்ன இருக்கு மச்சான்... பொண்ணு தைரியமா நானே நாம வாழ்ந்ததையே சொல்றேன் உங்களுக்கு என்ன... உங்க அக்கா கல்யாணம் முடிஞ்சதும்.. வீட்டுல சொல்லி என்னைய கூப்டுகிட்டு போறேன்னு சொன்னதாலே தான் அமைதியா இருந்தேன்... இப்டி நீங்க செய்வீங்கன்னு நான் என்ன கனாவா கண்டேன்? அதான்.. நியாயம் கேட்டு இங்க வந்துட்டேன்...” வந்தவள் விடுவதாய் இல்லை.

“என்ன கார்மேகம்.. உன் மகன் இப்படி எல்லாம் செஞ்சி வச்சிருக்கான்...” கூட்டத்தில் ஒருவர் கேட்க

“அப்பா.. இதெல்லாம் பொய்.. கட்டுக் கதை.. இந்த பொண்ணு யாருனே எனக்கு தெரியாது ப்பா... இந்த ஆதாரங்கள் எல்லாம் பொய்யானது ப்பா...” குமரன் ஆணித்தரமாய் மறுக்க

அந்நேரம் குழந்தை இன்னும் அதிகமாய் வீறிட்டு அழவும்... குழந்தையை கீழே நிற்க வைத்து விட்டு... அந்த பெண் தன் கையில் உள்ள பையில் பால் புட்டியைத் தேட..

அத்தனை பேர் சபையில் இருக்க... ஏன் தாய் இருந்தும் அவளை நெருங்காமல் அந்த ஒன்றரை வயது சின்ன வாண்டோ... நான்கே அடியே என்றாலும் தன் கால் கொலுசுகள் சத்தமிட... தத்தி தத்தி நடந்து சென்று குமரனின் காலைக் கட்டிக் கொண்டது மட்டுமில்லாமல்... சொன்னதே ஒரு வார்த்தை..

“ப்ப்பா.. ப்ப்பா...” என்று சொல்லி சிரித்து.. அவனைத் தூக்கச் சொல்லி கைகளைத் தூக்க.. இந்த காட்சியைக் கண்ட இன்றைய நாயகன் அதிர்ந்தான் என்றால்... மொத்த சபையுமே ஸ்தம்பித்துப் போனது.

இனி குமரன் என்ன சொன்னாலும் அவன் வார்த்தைகள் சபையில் எடுபடுமா..
 

சாந்தி கமல்நாத்

Guest
அட என்னடா ?கிணறு வெட்ட பூதம் வந்த கதையா இருக்கு ?
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN