ஈரவிழிகள் 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு சரியான தூக்கம் இல்லாமல் விடியற்காலையில் தான் தூங்கினான் குமரன். விடிந்த பிறகும் அவன் தன் தூக்கத்தைத் தொடர முடியாமல் அவனைக் கலைத்தது அஸ்மியின் அழுகை. குழந்தை பெரும் குரலெடுத்து அழவில்லை... ஆனால் அவளுடைய சிணுங்கலே இவன் தூக்கத்தைக் கலைக்கவும்... தீ என எரிந்த இமைகளைப் பிரித்து... இவன் தலை திருப்பி அறை பக்கம் காண.... அங்கு அறை கதவோ ஒருக்களித்து இருந்தது.

“புள்ளைய அழ விட்டுட்டு இது எங்க போச்சு.... ப்ச்சு… இனி தினமும் இத வேற நான் கேக்கணுமா...” என்ற முணுமுணுப்புடன் இவன் அறைக்குள் சென்று பார்க்க... வள்ளி அங்கு இல்லை. அஸ்மி தான் தூக்க கலக்கத்திலேயே தாயைத் தேடி... படுக்கையில் கையால் துழாவியபடி சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டவன் குழந்தையிடம் நெருங்காமல்.. இவன் குளியல் அறைக்குள் புகுந்து சிரமபரிகாரங்களை முடித்து வெளியே வர.. இப்போதும் சிணுங்கலோடு அஸ்மி அழுகையைத் தொடர... அதுவே இவன் தலைவலியைக் கூட்ட... அதில் பெரும் சத்தத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியேறியவன் வள்ளியைத் தேட... அவளோ பின்புறம் ஓங்கி வளர்ந்திருந்த முருங்கை மரத்தில் இருந்த பூவை... சொரட்டுக்கோலால் ஒடித்துக் கொண்டிருந்தாள்.

அவளை நெருங்கியவன், “தா... இந்தா.....” என்று அழைக்க... முதுகுபுறம் கேட்ட குரலில்... திரும்பி பார்க்காமலே கணவன் தான் என்பதை அறிந்தவளோ அவன் ஏதோ ஆட்டை... மாட்டை அழைப்பதைப் போல் தன்னை அழைப்பதில் முகம் சுருங்கியவள்...

‘அது என்ன தா… ஏன் எனக்கு பெயர் இல்லையா…’ என்ற நினைப்பில் இவள் அவன் அழைப்பை காதில் வாங்காதவள் போல் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர..

அதை உண்மை என்று நினைத்தவன்... சிறிதே குரலை உயர்த்தி... “தா... உன்னைய தான்...” என்று இவன் மறுபடியும் அழைக்க... பெண்ணவளுக்கோ கோபம் பொங்கியது.

அதில் அவள் திரும்பாமல் நின்றதில் இவனுக்குள் கோபம் துளிர... “காலங்காத்தாலயே என் உசுர வாங்குது இது” என்று வாய்க்குள் முணுமுணுத்தவன்... அங்கிருந்த மண் குடத்தை தூக்கிப் போட்டு இவன் உடைக்க... அந்த சத்தத்தில் இவள் திரும்பிப் பார்க்கவும்...
“நீ என்ன செவிடா... போ... உன் புள்ள மேல அழறா...” என்று இவன் சொல்லிவிட்டு நகர

எதற்கோ அழைக்கிறான் என்ற நினைப்பில் நின்று இருந்தவள் அவன் குழந்தையைப் பற்றி சொல்லவும்... “என்னது பட்டு அழறாளா... எனக்கு கேட்கலயே.. சரி நீங்க அவளை தூக்கிட்டு வந்திருக்கலாம் இல்ல?” கேள்வி என்னமோ கணவனிடம் இருந்தாலும் இவள் உள்ளே விரைய எத்தனிக்க

சொடக்கிட்டு அவளை நிறுத்தியவன், “எவனுக்கோ பெத்த குழந்தைக்கு வெக்கமே இல்லாம நீ என்னைய அப்பான்னு கைய காட்டலாம். ஆனா நான் ஒண்ணும் உன்னைய மாதிரி ஈனப் பொறப்பு இல்ல...” அவன் தோள் நிமிர்த்தி அழுத்தமாய் சொல்ல... இவளுக்குள் சுளீர் என்றது.. அதில் அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள்

“இப்படியான வார்த்தைக்கு எல்லாம் ஒரு நாள் நீங்க ரொம்பவே வருந்துவீங்க..” இவள் அறிவிக்க...

“ஹா... ஹா... நானா? அதிலும் உன் விஷயத்துல... நீ சாகவே கிடந்தாலும்... என் கை உனக்கு உயிர் தண்ணீ ஊத்தாது... இதுல வருந்துவேனா? போ... போய் உன் நாடகத்த தொடரு. கூடிய சீக்கிரம் அதுக்கு முடிவுரை எழுதுறேன்...” என்று நையாண்டியாய் மொழிந்தவன்... பின் அங்கிருத்து விலகி விட... ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றாள் வள்ளி.

இவள் மேலே செல்வதற்காக கீழ் படியில் கால் வைக்க... குழந்தையோ அழுகையின் ஊடே... முதல் படியின் நுனியில் நின்று கண்களைப் புறங்கையால் கசக்கி கொண்டிருந்தது.

“அச்சோ! பட்டு நகராத... இதோ அம்மா வரேன்...” என்றவள் மேலே தாவி ஏற... அதற்குள் சதீஷ் வந்து குழந்தையைத் தூக்கியிருந்தான். அதில் சிறிதே நிம்மதியானவள்,

“அப்பா! கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன். நன்றி கொழுந்தனாரே...” வள்ளி சொல்ல

சதீஷ், “என்னங்க அண்ணி எனக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு... சரிங்க அண்ணி நான் கெளம்புறங்க...” பட்டும் படாமல் பேசியவன் அஸ்மியை அவளிடம் கொடுத்து விட்டு விரைய...

அழுது... அழுது... குழந்தைக்கு தேம்பல், விக்கல் வைத்து விட அவனை மறந்து அஸ்மியைக் கவனித்தாள் இவள். “அச்சோ! பட்டு.. அம்மாவ தேடினீங்களா... இனி அம்மா உன்னை விட்டுப் போக மாட்டேன் டா... அழாத” மகளைத் தேற்றிய படி அவள் பின்புறம் வர

“என்ன வள்ளி... என்ன ஆச்சு... எதுக்கு அஸ்மி இப்படி அழறா...” அங்கு வந்த மீனாட்சி கேட்க

“பட்டு தூங்கறாளேன்னு நான் கீழ வந்துட்டேன் அண்ணி. ஆனா குழந்தை எழுந்து அழுதுகிட்டே படி...”

அவள் முடிப்பதற்குள் “ஐயோ! குழந்தை படில இருந்து விழுந்துட்டாளா?” பதறிய பெரியவள்.... அஸ்மியின் தலையையும் முதுகையும் வருடி விட

“இல்ல அண்ணி.. அதுக்குள்ள சதீஷ் கொழுந்தன் வந்து தூக்கிட்டார்...” இவளும் கண்ணீருடன் சொல்ல

“அதான் அஸ்மிக்கு ஒண்ணும் ஆகலையே.. பெறகு எதுக்கு வள்ளி இப்படி அழற?” சின்னவளின் கண்ணீரைக் கண்டவள் கேட்க

“போங்க அண்ணி... விழல என்றதை விட... என் பட்டு விழுந்திருந்தா...” கேட்கும் போதே வள்ளி கேவ

“இப்போ நீ குழந்தையா... இல்ல அஸ்மி குழந்தையான்னு எனக்கு தெரியல...” மீனாட்சி அவளை சமாதனம் செய்து கொண்டிருந்த நேரம்

“அக்கா.. பலகாரம் எடுத்து வை” என்ற படி அங்கு வந்து நின்றான் குமரன்.

அந்நேரம் அஸ்மி மீனாட்சியிடம் தாவ.. குழந்தையைத் தன் கையில் ஏந்தியவள், “வள்ளி.. அவனுக்கு பலகாரம் எடுத்து வை” இவள் சின்னவளிடம் சொல்ல

“அக்கா...” குமரன் முறைத்த முறைப்பில்

“சரி டா... நானே வெக்கிறேன் வா..” என்றவள் அஸ்மியுடன் உள்ளே வந்து தம்பிக்கு உணவைப் பரிமாற... கையிலிருந்த அந்த சின்ன வாண்டோ... மீனாட்சியின் கன்னத்தை தன் பிஞ்சு கரங்களால் தட்டி...

“ஊப்... ஊப்...” என்று சொல்ல...

“என்னடா... உனக்கு பசியா... அத்த உனக்கும் பலகாரம் தரவா...” என்று கேட்டவள் டேபில் மேலிருந்த ஆப்பத்தில் சிறிதே பிட்டு பாலில் தொட்டு இவள் அவளுக்கு ஊட்டப் போக... அஸ்மியோ அத்தையின் கையைத் தட்டி விட்டு... மறுபடியும் முன்பை மாதிரியே செய்ய...

அதில், “வள்ளி இங்க வா... பாப்பா.. ஏதோ சொல்றா... என்னனு பாரு...” பெரியவள் வள்ளியை அழைக்க

மூக்கை உரிந்த படி வந்தவள்.... மகளின் செய்கையைக் கண்டு, “அவளுக்கு.... நீங்க உங்க வாய்க்குள்ள பலூன் ஊதணுமாம். அதை அவ தன் கையால்... உங்க கன்னத்தை தட்டி உடைப்பாளாம். எல்லாம் உங்க தம்பி காட்டின பழக்கம். பட்டு அழுதா... இவள சமாதானப்படுத்த இப்படி தான் நடந்துப்பார் அண்ணி...” என்று அறிவிக்க

அதில் இவள் தம்பியை திகைப்புடனும்... பயத்துடனும் காண... அவனோ வள்ளியை தீ பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். நிஜம் தான்.. இப்படி ஒரு பழக்கம் குமரனுக்கு உண்டு. அதனால் தான் மீனாட்சி திகைப்புடன்... இதற்கு தம்பி என்ன சொல்லப் போகிறானோ என்று பயத்தில் பார்த்தாள்.... அவள் நினைத்தது போலவே வள்ளியை முறைத்துக் கொண்டிருந்தான் அவன்.

அதில், “சரி வள்ளி நீ போ... நான் அஸ்மியை பாத்துக்கிறேன். பலகாரமும் நானே அவளுக்கு ஊட்டிடறேன் சரியா...”

மீனாட்சி என்னமோ எதார்த்தமாகத்தான் சொன்னாள்.. ஆனால் வள்ளி விடுபவள் இல்லையே... அதனால் அவளோ மறுபடியும் அதே வட்டத்திற்குள் வந்து நின்றாள்.

“ஊட்டி விடுங்க அண்ணி... ஆனா அதுக்கு முன்ன அவளுக்கு கொஞ்சம் தண்ணீ கொடுங்க. இல்லனா அவ அப்பா மாதிரி.. அதான் உங்க தம்பி மாதிரி அவளுக்கு விக்கிக்கும்...” இவள் விடுவேனா என்று ஆரம்பிக்க

கடுப்பான குமரன் உணவு உண்ட கையினூடே,
“ஏய்..” என்றபடி அமர்ந்தருந்த இடத்தில் இருந்து எழுந்திருக்க,

“குமரா... குமரா.. நீ ஒக்கார்ந்து சாப்புடு...” என்று தம்பியை அவசரமாக சமாதானம் செய்த மீனாட்சி பின்

“இங்க பார் வள்ளி... அஸ்மி என் தம்பியோட மக தான். இத நானும் எங்க வீட்டுல இருக்கிறவங்களும் நம்பிட்டோம் போதுமா... இனி அடிக்கொரு தடவ இப்டியே பேசிகிட்டு இருக்காத.. என்ன புரிஞ்சுதா? போ... போய் வேற சோலிய பாரு...” இவள் வள்ளியை அதட்ட.. அவளோ முகம் சுருங்க, குழந்தையுடன் அங்கிருந்து விலகி இருந்தாள்.

“அக்கா நீயும் சாப்டுட்டு மாடிக்கு வா... நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..” குமரன் சொல்ல அதன்படியே பெரியவள் வேகமாய் உணவை முடித்துக் கொண்டு அவன் எதிரில் வந்து நிற்கவும்...

“உனக்கு அறிவே இருக்காதா க்கா... எப்போ தான் நீ இந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து மாறுவ?” இவன் எடுத்த எடுப்பிலேயே அவளைச் சாட, தமக்கையோ ஒன்றும் புரியாமல்.. முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு நிற்கவும்...

“எல்லாத்துக்கும் இப்படியே பச்ச புள்ள மாதிரி முகத்தை வச்சிக்கோ. நீ தான் பாசம்ங்கிற பேர்ல அடிமையா இருக்கனா... என்ன அதே பாசத்தால முட்டாளா இருக்க சொல்ற...”

இவள் வாயே திறக்காமல் நான் என்ன தப்பு செய்தேன் என்பது போல் பார்க்க... “நேத்து என் அறையில் என்ன செய்து வச்சிருந்த? என் வாழ்க்கை நல்லா இருக்க பாடுபடறதா நினைப்போ... இனி நான் இந்த வீட்டில் இருக்கணும்னா... அந்த புள்ள என் அறைக்கு எல்லாம் வரக் கூடாது. அறைக்கு என்ன.. என் கண்ணெதிரவே வரக் கூடாது. மீறி வந்தா.. நீ என்னைய இந்த வீட்டுல பாக்க மாட்ட...” இவன் உறுதியாய் மொழிய...

“இல்ல டா...”

“நீ பேசாத க்கா... வேணும்னா உனக்காக ஒரு உறுதிய தரேன்... அந்த புள்ள கொலைகாரியாவே இருந்தாலும் இந்த ஜென்மத்துல அது தான் என் பொஞ்சாதி.. போதுமா?” இவன் முன்பை விட அழுத்தம் திருத்தமாய் சொல்ல

சிறிதே மிரண்ட பெரியவள், “என்ன டா கொலைகாரின்னு எல்லாம் சொல்ற… நிசமா அப்படி இருப்பாளா!” கேட்க...

“கொலைகாரியா இருக்கலாம்னு தான் சொல்றேன். பின்ன.. நமக்கு என்ன தெரியும்? அத கண்டுபுடிக்கவாது எனக்கு செத்த அவகாசம் குடு. திரும்பவும் சொல்றேன்.. உண்மையா அந்த புள்ள கொலைகாரியா இருந்தாலும் இந்த உலகத்துக்கு உன் பட்டோட பொஞ்சாதி அவ தான்!” இவன் தீர்க்கமாய் சொல்ல

பெரியவளுக்கு கண்கள் கலங்கியது... “என்ன மாதிரி நீயும் ஒத்தையா நின்னுடுவியோன்னு பயந்து தான் டா... எத பத்தியும் யோசிக்காம அந்த புள்ள கழுத்துல தாலிய கட்ட சொன்னேன். நீ என்னமோ இப்போ இப்டி எல்லாம் சொல்ற...” இவள் கலங்கிய குரலில் சொல்ல

“அந்த புள்ளைய பத்தி எதுவும் தெரியாம உனக்காக நான் பொய்யான உறுதி எல்லாம் தர முடியாது க்கா... புரிஞ்சிக்கோ” என்றவன் மதுரையில் அந்த பெரியவரை சந்தித்து பேசியது அனைத்தையும் இவன் சொல்ல வாயடைத்து நின்றாள் பெரியவள்.

“இப்போ கூட மதுரை ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு தான் போறேன். அந்த புள்ள அங்க தான் கல்யாணம் பதிவானதா சொல்லுது... போய் பாத்துட்டு வந்து என்னன்னு சொல்றேன்...” இவன் முடிக்க, மண்டையை மண்டையை உருட்டினாள் பெரியவள்.

“உன் அறைக்கு பக்கத்திலே இருக்கற அறைய... சுத்தம் பண்ணி அந்த புள்ளைக்கு குடு. அதுவும் அது குழந்தையும் அங்கயே தங்கட்டும். நல்லா கேளு... மறந்து அந்த புள்ள என் கண்ணெதிர வரவே கூடாது...”

அவன் முடிக்கக் கூட இல்லை.. “அந்த புள்ள பேர் வள்ளியாம் டா... நீயும் வள்ளினே சொல்லி பழகு...” பெரியவள் அது தான் அதி முக்கியம் என்பது போல் தம்பியைத் திருத்த

‘அப்போ இவ்வளவு நேரம் நான் சொன்னது எதுவும் உன் மர மண்டையில ஏறல.. அப்படி தானே?’ என்பது போல் இவன் பல்லைக் கடித்துக் கொண்டு அவளை முறைக்க... அவன் தமக்கையோ அப்பாவி முகத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள்.

அதன் பின் மதுரை பதிவாளர் அலுவலகம் கிளம்பிச் சென்ற குமரன் திரும்ப வீடு வந்து சேர இரவு ஆனது. மிகவும் சோர்ந்து போய் வீடு வந்தவனை மீனாட்சி சாப்பிட அழைக்க
“நான் சாப்டேன் க்கா... நீ போய் தூங்கு...” என்ற படி மாடி படி ஏறியவன் மொட்டைமாடிக்கு சென்றிருக்க

சிறிது நேரத்திற்கு எல்லாம் அங்கு வந்தவள், “என்ன டா... போன காரியம் என்ன ஆச்சு... ஏன்... ரொம்ப களைச்சுப் போயிருக்க...” பரிவாய் கேட்க

“ப்ச்சு...” என்று சலித்தவன் “என்னத்த க்கா சொல்ல சொல்ற... நான் கூட வந்தவ கொலைகாரியா தான் இருப்பாளோன்னு நெனச்சேன். ஆனா அவ தீவிரவாதியா இல்ல இருப்பா போல!” குமரன் சொல்லி முடிக்கவில்லை... அதிர்ச்சியில் “தொப்பென...” தரையில் அமர்ந்து விட்டாள் பெரியவள். அவளுக்கு கண்கள் எல்லாம் இருட்டியது.

அதில் பதறி இவன், “அக்கா!” என்ற அழைப்புடன் அவளை நெருங்கி... அவள் குடிக்க தண்ணீர் கொடுத்தவன்

“உனக்கு நான் ஆதங்கத்திலே ஒரு வார்த்தை சொல்லிட கூடாதே... உடனே மூச்சை பிடிச்சிகிட்டு இப்படி உட்கார்ந்துடுவியே. ஒரு வேகத்தில் நான் சொன்ன வார்த்தை க்கா அது...” என்று தமக்கையை சமாதானம் செய்தவன்

“பதிவாளர் ஆபீஸ்ல நமக்கு வேண்டிய விஷயம் கெடைக்கல க்கா... இப்படி ஒரு கல்யாணம் நடக்கவே இல்லன்னு அங்க இருக்கறவங்க சாதிக்கிறாங்க. அப்போ சாட்சிக்கு வாங்கனு கூப்ட்டா... எங்களுக்கு எதுக்கு வம்புன்னு... வர பயப்படுறாங்க. சரி.. வெறும் காகிதத்தால் மட்டும் என்ன செய்துட முடியும்னு விட்டுத தள்ள முடியாத அளவுக்கு... இப்போ நான் வேற அந்த புள்ள கழுத்துல தாலியைக் கட்டி தொலைச்சிட்டேன்.

ஆனா ஒண்ணுக்கா.. அந்த புள்ள பின்னாடி யாரோ பெரிய ஆளுங்க தான் இருக்கனும். அது நம்ம குடும்பத்து எதிரியா இருக்கலாம்... இல்ல பஞ்சாயத்துல அசிங்கப்பட்டவனா இருக்கலாம்... என் தொழில் விரோதியா இருக்கலாம்... இல்ல கல்லூரியில என் கிட்ட மூக்கறுபட்டவனா இருக்கலாம்.

அது யாரோ ஆணோ பெண்ணோ. ஆக மொத்தத்துல... எனக்கும் நம்ம குடும்பத்துக்கும் ரொம்ப நெருங்கிய உறவா இருக்கணும். அதுலயும் நான் செய்யப் போறத எல்லாம் கூடவே இருந்து கண்காணிக்கற கருப்பு ஆடு.. அது மட்டும் நிச்சயம். ஏன்னா, நான் மதுரை பதிவாளர் அலுவலகம் போனப்போ... என்ன சரியா பேச விடாம அலைக்கழிச்சானுங்க... அப்பவே நான் தெரிஞ்சிகிட்டேன்...”

“அப்போ முத்தரசியும் அவங்க தம்பியும் தான் காரணும்னு சொன்னியே டா...”

“அதுங்க இருக்கு க்கா... ஆனா அதுங்க பின்னாடியும்... வேற யாரோ இருக்கற மாதிரி எனக்கு தோனுது. பாப்போம்.. இன்னும் எத்தன நாளைக்கு இந்த களவானியோட ஆட்டம்னு...”

“வேற எப்டியும் நாம நெசத்த கண்டு புடிக்க முடியாதா குமரா?” தமக்கை சோர்ந்து போய் கேட்க

“ஏன் முடியாது... வந்திருக்கிற அந்த களவானியோட கையை காலை முறிச்சா தெரியும். அத விட... கோழி கழுத்தை திருகுற மாதிரி அது தலையை திருகி போட்டா... முடிஞ்சது சோலி.. ஆனா இதெல்லாம் வன்முறைன்னு சொல்லுவ? அப்போ இப்படி எல்லாம் வேணாம்... ஒரு நாலு நாள் அந்த களவாணியையும் அது பெத்த குழந்தையையும் பிரித்து வச்சு... நாலு நாளைக்கு அந்த கொலைகாரிக்கு சோறு போடாம இருந்தோம்னா... எல்லா உண்மையும் தானா தெரிஞ்சிடப் போகுது...” குமரன் அடுக்கிக் கொண்டே போக

கண்ணில் பீதியுடன்... இரு கையாலும் வாயைப் பொத்தியபடி... அசைவற்று அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தாள் மீனாட்சி.

தமைக்கையைப் பார்த்தவன், “இதோ இப்படி பேய் முழி முழிப்பேன்னு தான்... நான் எதுவும் அப்படி செய்யல... செய்யவும் மாட்டேன்... அப்படி நான் செய்தா என்னை போலீஸில் பிடிச்சு கொடுக்கிற முதல் ஆளு நீயா தான் இருப்ப… அதுவும் எனக்கு தெரியும்…” அவன் விளக்கம் தர

அதில் ஆசுவாசமாய் தன் மூச்சை வெளியிட்டவள், “நான் வளர்த்த பொறப்பு... நீ இப்டி எல்லாம் யோசிப்பியாடா... அதுவும் ஒரு பொட்ட பிள்ளைய இப்டி எல்லாம் செய்யலாம்னு சொல்ற... பாவம் டா... அந்த பாவம் உனக்கு வேணாம் டா...” பெரியவள் இந்த நிலையிலும் அறிவுரை சொல்ல

“பாவம்... அப்படி பாவ புண்ணியம்… நீதி நேர்மையினு நான் பாத்ததாலே தான்... அந்த களவாணி என் வாழ்க்கையில கும்மி அடிச்சிகிட்டு இருக்கு. சரி விடுக்கா... நான் பாத்துக்கிறேன்... இப்போ நீ போய் தூங்கு க்கா...” என்றவன் அத்துடன் இப்பேச்சை முடிக்க... மேற்கொண்டு தம்பி வாழ்வு என்னாகுமோ என்ற பயத்தில் உடல் தளர... மனதில் பாரத்துடன்… சோர்வுடன் வெளியேறினாள் மீனாட்சி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN