என்னடி மாயாவி நீ: 13

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 13

வர்ஷித்தும் ஆதிகாவும் சகஜமாக வாய்விட்டு பேசும் நிலையில் இருந்தனர். வர்ஷித்திற்கு ஆதிகா கூட இருக்கும் வரை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என எண்ணம் இருந்தது. அவளின் தனிமையை போக்குவதற்கு வேலைக்கு போக சொன்னான். ஆனால், அவளோ வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமென்றாள்.

இரவு சாப்பிடும் வேளையில் வர்ஷித், "ஆதிகா என்ன செய்யணும்னு சொல்லு, நான் செய்றேன்" என கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான். ஆதிகாவிற்கு இவ்வளவு ஆர்வமா என்று அதிசயமாக பார்த்தாள். "நீங்க சாப்பிட்டு முடிங்க நான் சொல்றேன்" என ஆதிகா கூறினாள் உணவு பரிமாறிக்கொண்டே. நான் ஆசையை சொல்ல வர்ஷித் கோபம் கொண்டு சாப்பிடவில்லை என்றால் என்ன செய்வது என ஒரு பயம் இருந்தது அவளுக்கு, அதனாலே இப்படி கூறினாள்.

ஆனால் அவள் எண்ணத்திற்குரியவனோ, "இப்பவே சொல்ல வேண்டும்" என பிடிவாதம் கொண்டான். அவளும் வழியின்றி சொல்ல ஆரம்பித்தாள்.

வர்ஷித் அருகில் அமர்ந்து, "நான் சொல்றத பொறுமையாக கேளுங்க, கோபப்படக்கூடாது, எக்காரணம் கொண்டும் சாப்பாட்டிலிருந்து பாதியில் எழ கூடாது" என பல கட்டுப்பாடுகள் இட்டு அதற்கு வர்ஷித்தையும் ஒத்துக்க வைத்த பின்பே ஆரம்பித்தாள் அவனின் கோபத்தை படித்து வைத்திருக்கும் அவனவள்.

அத்தை, மாமாவை அழைச்சிட்டு வாங்க, எவளோ நாளைக்கு உங்க இல்லாத கோபத்தை பிடிச்சு வச்சிக்க போறீங்க, அவுங்களுக்கும் நம்மள தவிர யாரு இருக்காங்க? நம்மதானே பாத்துக்கணும். அங்க தனியா கஷ்டப்படுவாங்க ப்ளீஸ் ரெண்டுபேருக்கிட்டயும் பேசி அழைச்சிட்டு வாங்க" என முன்னால் நிபந்தனை போட்டு பேசியவள் இப்போது கெஞ்சிக்கொண்டு இருந்தாள். வர்ஷித்தும் இதை கேட்டு கோபப்படாமல் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தான். அவளும் அவனின் முகத்தை ஆராய்ந்தாள். அந்த ஆராய்ச்சியின் முடிவாக கோபம் இல்லை குழப்பமும் சோகமும் இருப்பதை அறிந்துகொண்டு அவன் யோசிக்க தனிமை வழங்கினாள்.

அவள் சொல்ல சொல்ல அவனுக்குள் மனதில் அறை வாங்கியதுபோல் ஓர் உணர்வு எழுந்தது. 'அவ வைக்குற அக்கறை கூட நாம வைக்கலையே' என வருத்தம் கொண்டான். 'எப்படி நாம அம்மாவை மறந்தோம். ஏற்கனவே, விஷ்ணு இறந்த கவலையில இருந்தாங்க, நான்தானே இப்போ துணையா இருக்கணும். ஆனால், நானே கஷ்டத்தை கொடுத்துட்டேனே, எவளோ வேதனை பட்டிருப்பாங்க ' என தன் தவறு உணர்ந்தவுடன் கோபத்தில் கட்டிலின் முனையில் தன் கையால் குத்தினான்.

தன் கையாலாகாத தனத்தை நினைத்து மனதுக்குள் துடித்துப்போனான். தன் துயரை நீக்கி பாசத்தை பொழிந்து தன்னை ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வளர்த்த தாய்க்கு தன்னால் ஒரு துன்பம் நேர்ந்ததை எண்ண, கண்ணீர் கூட கன்னத்தில் தடம் பதித்தது. கட்டிலில் கண் மூடி படுத்தவனுக்கு நிம்மதியான தூக்கம் கூட வர மறுத்து சதி செய்தது.

'ஆதிகா கஷ்டப்படுவானு நினைச்சி அவளை இங்க அழைச்சிட்டு வந்தோம் அது போல அம்மாவும் அங்க கஷ்டப்படுவாங்கனு நமக்கு தோணாம போச்சே' என நினைக்க நினைக்க நொந்துபோனான். 'ஒருவேள, அம்மா சொல்ற மாதிரி நானும் பொண்டாட்டி பின்னாடி சுத்துறேனோ' என நினைத்த மறு நொடி ஆதிகா அன்று காரில் பதில் சொன்னது நியாபகம் வர உதட்டில் அழகாக ஒரு புன்னகை தவழ்ந்தது. அவளின் அந்த குறும்புத்தனம் வர்ஷித்தின் மனதில் அழியா சுவடாக இடம்பெற்றது. அப்போதுதான் அவனுக்கு
தான் வழக்கமாக செய்வது நினைவில் எழ, ஆதிகாவின் அறைக்கு சென்று பார்த்தான், அவள் மன நிறைவோடு தூங்குவது போலிருந்தது அவனுக்கு. நன்றியோடு ஒரு பார்வையை செலுத்திவிட்டு, ஹெட் செட்டை கழட்டி வைத்துவிட்டு அவளுக்கு போர்வையை நன்றாக போர்த்திவிட்டு நகர மனமில்லாமல் அவளருகிலே மண்டியிட்டு அமர்ந்து அவள் தூங்கும் அழகை ரசித்துக்கொண்டிருக்கும்போது அவளின் தூக்கம் கலைவதை உணர்ந்தவன் இனிமேல் இருந்தால் ஆபத்து என சுதாரித்து தன்னை நினைத்து சிரித்துக்கொண்டு அவனறைக்கு சென்று கட்டிலில் படுத்தவனை பல சிந்தனைகள் சூழ்ந்துகொண்டது.

'ஏற்கனவே, எனக்காக யோசிச்சு தான் நியூ யார்க் சென்று விஷ்ணுவை இழந்துட்டேன். இப்போ, அம்மாவை பத்தி யோசிக்காம இங்க வந்துட்டோம். இனிமேல் யாரையும் இழக்கக்கூடாது. நாளைக்கே நம்ம வீட்டுக்கு சென்று அம்மா அப்பாவை கூட்டி வந்து நம்மகூட வைத்து பாத்துக்கணும்' என முடிவோடு நித்திரையை தழுவினான்.

காலையில் ஞாயிறு கிழமை என்றாலும் வேகமாக துயில் எழுந்தான். அம்மாவை பார்க்க போகும் மகிழ்ச்சியில் அவனுக்கு தூக்கம் வந்ததே பெரிய விஷயமாகி போனது. சீக்கிரமாக கிளம்பி தூங்கும் ஆதிகாவை எழுப்பாமல் வீட்டை திறந்து அம்மாவை பார்க்க சென்றான்.

வர்ஷித்திற்கு தான் அவளுக்காக செய்றோம் என ஒரு துளி கூட நினைக்கவில்லை. அவன் அவனுக்காகவே சென்றான். இதை ஆதிகா நியாபக படுத்தியதாகவே தான் அவன் நினைத்தான். ஏனெனில் அவனே இதை பற்றி முன்னாடியே யோசித்திருந்தான். அவளின் நிபந்தனைக்காக வர்ஷித் செல்லவில்லை என்பதே உண்மை.

வீட்டிற்கு முன் கார் நின்றவுடன் ஒரு வித தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். சத்தம் கேட்டு வசந்தாவும் வெளியே வந்தாள். அம்மாவை பார்த்த உடனே கட்டியணைத்து மன்னிப்பு கூறி கண்ணீர் வடித்தான். இரவிலிருந்து தவித்த தவிப்பும், தான் இப்படி செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வும் தாயை கண்ட நொடியே அகன்றது. மனமும் லேசாகியது.

வசந்தாவும் முதுகை நீவி விட வர்ஷித்தும் ஒரு கட்டத்தில் அழுது முடித்தான். வயது வளர்ந்து கொண்டே போனாலும் அம்மாவிற்கு பிள்ளை தானே. வசந்தா வர்ஷித்தை கூட்டி வந்து சோபாவில் அமரவைத்து தண்ணீர் கொடுத்தார். இவை நீங்களும் போதே, சுப்பிரமணியனும் அவ்விடத்தை அடைந்திருந்தார். அப்பா அம்மாவின் நடுவில் குழந்தை போல அமர்ந்திருந்தான். ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிருங்க. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். ஏதோ ஒரு கோபத்துல உங்ககூட பேசாம இருந்துட்டேன். ஆனால் இப்போ தான் எவளோ கஷ்டப்பட்டிருப்பீங்கனு புரியுது என மறுபடி மறுபடியும் மன்னிப்பு வேண்டினான் இருவரிடமும். வசந்தா,"நீ எங்க புள்ள எங்ககிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கக்கூடாது"என கூற சுப்பிரமணியோ, " சரி இனிமேல் இத பத்தி பேச வேணாம்", அவரே பேச்சை மாற்ற நினைத்து வசந்தவிடம், "நீ என்ன சும்மா உட்காந்துருக்க, புள்ளைக்கு டீ போட்டு கொண்டு வா" என்றார்.

வசந்தா டீ கொண்டு வந்தவுடன் அதை பருகிக்கொண்டே , "என்னப்பா நீ மட்டும் வந்திருக்க மருமகள அழைச்சிட்டு வரலையா? "என கேட்க வர்ஷித், "இல்லப்பா, நான் வந்ததே உங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போகத்தான் ப்பா. நீங்களும் அம்மாவும் மறுபேச்சு பேசாமல் என்கூட கிளம்பி வாங்கப்பா ப்ளீஸ். நீங்க சொன்னா அம்மா மறுக்காம கேப்பாங்கப்பா சொல்லுங்கப்பா" என கேட்கவும் சுப்பிரமணியனோ வசந்தாவை நோக்க அவரும் சம்மதித்தார். "சரி நாங்க வரோம் சமைச்சி சாப்பிட்டு போகலாம்" என வசந்தா கூற வர்ஷித்தோ, "இல்லம்மா அங்க ஆதிகா உங்களுக்காக சிறப்பா பண்ணிக்கிட்டு இருப்பா, நீங்க கிளம்புங்க "என்ற வர்ஷித் தான் ஆதிகாவுடம் எங்க போகிறோம் என கூட சொல்லமால் வந்திருந்தான். ஆனால் இங்கு அவனையும் மறந்து வாக்களித்திருந்தான். அம்மாவ பாத்ததுல பொண்டாட்டிய மறந்துட்டான் போல...

ஆதிகா இதனை நிபந்தனையாக சொல்லாமல் இருந்திருந்தால் கூட வர்ஷித் இதை செய்திருப்பான். ஆனால், கொஞ்சம் தாமதமாக நடந்திருக்கும்.

காரில் இருவரையும் தன் வீட்டிற்கு அழைச்சிட்டு வந்தவன், வாசலில் நின்று கதவை தட்டினான். அப்போதுதான் நியாபகம் வந்தது வர்ஷித்திற்கு, ஆதிகாவிடம் சொல்லாமல் அம்மா அப்பாவை அழைக்க சென்றது. 'அவ வேற என்ன பண்றனு தெரியலையே ஒருவேள லீவுனு தூங்குறாளோ? அம்மா அப்பாக்கு நேரத்துக்கு சாப்பாடு தரணுமே என்ன செய்றது 'என சிந்தனை ஓட்ட பந்தயம் வைத்து ஓடியது. அவ்வேளையில் கதவை திறந்தாள் அவனின் சிந்தனையின் நாயகி.

ஆதிகாவும் ஏதோ ஒரு உந்துதலில் கண்விழித்து காலை கடன்களை முடித்து சமையல் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளும் வர்ஷித்தை தேடி, காணவில்லை என்றதும் எங்கயாவது வெளியில் வேலை இருக்கும்போல என யோசித்தவள் அத்தை மாமாவை அழைக்க சென்றிருக்க கூடும் என்பதை அவள் யோசித்தும் பார்க்கவில்லை.

'அப்பாடா' என இருந்தது வர்ஷித்திற்கு இவள் முழித்ததற்காக கடவுளிடம் நன்றியும் கூறினான். ஆதிகாவிற்கு சொல்ல அளவில்லாத ஆனந்தம் இருவரையும் பார்த்ததில். நாள் முழுதும் ஆதிகா வர்ஷித்தை கண்டுகொள்ளவே இல்லை அத்தை மாமாவுடன் தான் இருந்தாள். இதனால் கொஞ்சம் பொறாமையும் கொண்டான் வர்ஷித்.

இரவு அறையில் படுத்த ஆதிகா, அந்த நாள் முழுதையும் நினைத்து ரொம்ப நாட்களுக்கு பிறகு சந்தோசமாக உணர்ந்தாள்.இதற்கு காரணம் வர்ஷித்தா அல்ல அவனின் பெற்றோர்களா என்பது தெரியவில்லை. காரணம் தேடி அலைந்து மகிழ்ச்சியை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. அதற்கு அவள் மூளையில் இடமும் இல்லை. ஏனனில், எல்லா இடமும் மகிழ்ச்சியால் நிரப்பபட்டிருந்தது.

வர்ஷித் அப்போது உள்ளே நுழைய, " என்னங்க மேடம் என்ன நியாபகம் இருக்கா? "என வினாவ, அவளோ அவனிடம் பதில் சொல்லாமல் விழித்தாள். அவனே தொடர்ந்தான், "இப்படி முழிக்காதம்மா சரி இன்னைக்கு நீ சொன்னதெல்லாம் செய்தேன் அதுக்கு ஒரு நன்றி கூட இல்லையா? "என வம்பிழுக்கவேனே தலையை சாய்த்து கேட்க, அவனின் அவள் அந்த அழகில் தன்னை தொலைத்து மீட்டவள், "இங்க பாருங்க சார், முதல கேட்ட கேள்வி கூட நான் ஒத்துக்குறேன். ஆனால், உங்க ரெண்டாவது கேள்வி நியாயமானு உங்க மனசுகிட்ட கேளுங்க, நீங்க எனக்காகவா பண்ணிங்க" என சொன்னவுடன் வர்ஷித் நன்றியோடு அவளை நோக்கி, " உண்மைதான். இப்போ அம்மா அப்பா சந்தோசமா இருக்க நீதான் காரணம், இது நடந்துருக்கும் கொஞ்சம் தாமதமா நடந்துருக்கும். ஆனால், நீ சொன்னதால்தான் இப்போ நடந்துச்சு ரொம்ப தேங்க்ஸ் நானும் சந்தோசமா இருக்கேன்" என கேட்க அவளோ அவனின் மகிழ்ச்சியில் இவள் மேலும் மகிழ்ச்சி கொண்டு, " பரவாயில்லை, அத விடுங்க, என்ன விஷயமா இப்போ இங்க வந்துருக்கீங்க? "என கேள்வியோடு நோக்க, "அந்த ரூமை அம்மா அப்பா எடுத்துகிட்டாங்க அதான் இங்க வந்துட்டேன். அவுங்களுக்கு சந்தேகம் வரக்கூடத்துல அதான், இங்க சோபால படுத்துக்குறேன்" என்றான் வர்ஷித். இதுல மட்டும் கரெக்டா இரு, சரியான சாமியார் என மனதில் அவனை பலவாறு அர்சித்தவள், சரி என தலையை ஆட்டினாள். இருவரும் நிம்மதியக இரவை கடந்தனர்.

இவர்கள் உறவு இதேபோல் மகிழ்ச்சியாக அமையுமா? என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
OP
Aarthi Murugesan

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நன்றி சகோ முழுவதும் படித்துவிட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN