ஈரவிழிகள் 11

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்ன தான் குமரனுக்கு வள்ளி மேல் கோபம் இருந்தாலும்... ஒரு விஷயத்தில் மட்டும் அவனால் அவளைக் குறை சொல்ல முடியவில்லை. அது.. அவளிடம் அனாவசியமான பேச்சோ... அசட்டு சிரிப்போ அல்லது மற்றவர் கவனத்தைக் கவரும் வகையில் அதிலும் அவன் கவனத்தைக் கவரும் வகையில் அநாகரிகமான அங்க வளைவுகள் அவளிடம் இருந்தது இல்லை. அந்த ஒரு காரணமே வள்ளியைத் துணி கடைக்கு அழைத்துச் செல்ல அவனை உந்தியது.

மற்றுமொறு முக்கிய காரணம், அவளுக்குப் பிடித்ததை செய்து தன்மையாக நடந்து கொண்டால்... அவளைப் பற்றிய உண்மையை எல்லாம் அவள் ஒப்பித்து விடுவாள் என்ற எண்ணம் இவனுக்கு. ஆனால் அதற்கு இந்த கில்லி என்ன செய்யப் போகிறாளோ?..

மீனாட்சி தம்பியிடம், “பாத்து பத்திரமா கூப்டுகிட்டு போய்ட்டு... பத்திரமா கூப்டுகிட்டு வா டா. நீ ஒரு எடம்... அவ ஒரு எடம்னு போக... வள்ளி தவிச்சு நிற்கப் போறாடா.. அப்புறம் கோபத்துல அவளை எங்கயாச்சும் விட்டுட்டு வந்துடாத டா” என்று எல்லாம் எடுத்துச் சொல்ல

“யாரு நானு... ஏன் க்கா... அப்படியே நான் விட்டுட்டு வந்தாலும்.... நாட்டாமை கார்மேகம் வீட்டு மருமகள்னு சொல்லி எனக்கு முன்ன பஸ்ஸை பிடிச்சு இங்க வந்து நிக்கும் அந்த களவாணி... அவ்வளவு வெவரம் அந்த புள்ள...” குமரன் சிலாய்க்க... கப் சிப் என்று மாறிப் போனாள் மீனாட்சி.

குமரன் சொன்ன நேரத்திற்கு இவள் டான் என்று கிளம்பி இருக்க... மீனாட்சி, “வள்ளி.. அஸ்மி என் கிட்ட இருக்கட்டுமே... உனக்கு ரொம்ப சிரமமா இருக்கும்.. இவளை வச்சிகிட்டு நீ எப்டி கடை கண்ணிய பார்ப்ப...”

அப்போது அங்கு வந்த குமரன், “அது எல்லாம் வேணாம் க்கா... இந்தா புள்ள நீ குழந்தையோடவே வா...” அக்காவிடம் ஆரம்பித்து இவன் வள்ளிக்கு உத்தரவிட

அதில் அஸ்மிக்கு வேண்டியதை இவள் எடுத்துக் கொண்டு வெளியே வர... கிளம்ப தயாரான நிலையில் காரினுள் டிரைவர் காத்திருக்கவும்.. வள்ளி அதில் ஏறி அமர... கார் புறப்பட்டது. ஆனால் குமரன் அதில் அமரவில்லை. இது குறித்து இவள் டிரைவரிடம் ஏதோ கேட்க வரும் நேரம்... இவர்களின் காரை முந்திக் கொண்டு புல்லட்டில் பறந்தான் குமரன்.

அதைக் கண்ட பெண்ணவளோ பல்லைக் கடித்தபடி, ‘அதாவது இவரு என் கூட எல்லாம் வர மாட்டாராம்... க்கும்... பாவம்! இவரு மண்டையை மறைச்சாலும் மேல இருக்கிற கொண்டையை மறைக்க முடியாதே! அது எங்க தெரியப் போகுது இவருக்கு?’ இப்படி தான் எண்ணத் தோன்றியது இவளுக்கு.

மதுரையில் பிரபலமான கடைகள் நிறைந்த பகுதியில் கார்களை நிறுத்தும் இடத்தில் டிரைவர் காரை நிறுத்த... இவள் இறங்க எத்தனித்த நேரம், “சின்னம்மா... சின்னவர் வந்த பிறகு இறங்குங்க...” அவர் தடுக்க

“இல்லங்க.. வெயில்... அதான்... சின்னவர் தாங்க சொல்லி அனுப்பினார்...” இவள் அவரைப் பார்த்த பார்வையில் அவர் குமரன் சொன்னதாகச் சொல்லவும் அதில் அமைதியாக காரினுள்ளேயே அமர்ந்து விட்டாள் வள்ளி. அவளை அதிக நேரம் காக்க வைக்காமல்... சிறிது நேரத்திற்கு எல்லாம் அங்கு வந்த குமரன் அவள் பக்க கார் கண்ணாடியைத் தட்டி.. அவளை இறங்கச் சொல்ல.. அந்நேரம் சற்று தள்ளி நின்றிருந்த டிரைவர் இவனை நெருங்கி வரவும்,

“நீங்க இங்கேயே இருந்து.. துணி வாங்குன பைகள் வந்தா வாங்கி வச்சிடுங்க ணா...” என்று அவரிடம் சொன்னவன் இவளிடம் எதுவும் பேசாமல் தன் வேக நடையுடன் முன்னே நடக்க... அவனைப் பின் தொடர்ந்தாள் வள்ளி.

ஒரு தோளில் குழந்தையை சுமந்திருக்க... இன்னொரு தோளில் அந்த குழந்தைக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பையை இவள் சுமந்து கொண்டிருக்க... இது எதுவும் அவள் கருத்தில் படவில்லை. ஆனால் கருநீல நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து.. அதற்கு தோதாய் இறுக்கிப் பிடித்த டி ஷர்ட் சகிதம் ஹாயாய்... கை வீசிய படி நடந்து செல்லும் கணவனின் மிடுக்கைத் தான் அவள் மனதோ அவளை ரசிக்கச் சொல்லியது. அது சொன்னதைத் தான் தற்போது தவறாமல் செய்து கொண்டிருந்தாள் இவளும். பொதுவாக கழினி காடு என்று அந்தப் பக்கம் சென்றால் தான் குமரன் வேட்டி சட்டை அணிவான். மற்ற படி எப்போதும் பேண்ட் சட்டை தான். அதே இப்படி வெளியே என்றால் ஜீன்ஸ் தான் உடுத்துவான். இன்று முதல் முறையாக கணவனை இவள் இந்த உடையில் காணவும்... அவனை சைட் அடிக்கத் தோன்றியது வள்ளிக்கு. இவள் அவனை ரசித்துக் கொண்டே வர.. அதில் அவன் ஒரு இடத்தில் நின்றதைக் கூட அறியாமல் இவள் சென்று கணவன் புஜத்தில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள...

“ஹேய்.... கண்ண எங்க வச்சிகிட்டு வருவ... குழந்தையைக் கையில் வச்சிகிட்டு பிராக்கு பார்த்துட்டு வருது பாரு...” கொஞ்சம் உஷ்ணமாய் கேட்டவன்... அடுத்த நொடியே குரலைத் தணித்து, “ஆமாம்.. இங்க மதுரையில் எந்த கடையிலே நீ ஜவுளி எடுப்ப... அந்த கடை பேர சொல்லு நாம அங்கயே போகலாம்... உனக்கு பழக்கமான கடையா இருந்தா எடுக்க சுலபமா இருக்கும் இல்ல...” இவன் தேனாய் கேட்க

அந்த தேன் பெண்ணவளை இனிக்கச் செய்யவும், “அதுவா.. அது... இங்க தான்...” என்று முதலில் ஆரம்பித்தவள் பின் கணவன் கண்ணில் ஆர்வத்தைக் கண்டவள், “எனக்கு என்ன தெரியும் மச்சான்... எல்லாம் நீங்க எடுத்து தர்றது தானே...” இவள் பழைய வள்ளியாய் மாறி பதில் தர

அதில் அவளை ஆழ்ந்து நோக்கியவன், “சரி... அப்போ வா... நாம இந்த செட்டியார் கடையிலே எடுத்துக்கலாம்...” என்றவன் முன்னே நடக்க.. அதற்கு சம்மதமாய் தலையை ஆட்டியபடி பின்னே நடந்தாள் இவள்.

இவர்கள் எப்போதும் எடுக்கும் ஜவுளி கடை தான் இது. குமரனைக் கண்டதும் அங்கு வந்த இவன் நண்பனான கடை முதலாளியின் மகன், “வா டா குமரா... வாம்மா தங்கச்சி. என்ன மாதிரி துணி பாக்கறீங்க?” என்று வரவேற்று... பின் இருவரையும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றவன், “இதெல்லாம் புது சரக்கு... இன்னைக்கு தான் வந்துச்சு... உனக்கு என்ன புடிக்குதோ அதை எடும்மா தங்கச்சி... நான் பெறகு வந்து பாக்கிறேன்...” என்றவன் நண்பன் குடும்பத்துக்கு குளிர் பானம் கொடுக்கச் சொல்லி வேலையாளிடம் பணித்து விட்டு அவன் விலகி விட

ஜமுக்காலத்தின் மேலே அடுக்கி வைத்திருந்த புடவைக் குவியலின் அருகே அமர்ந்த வள்ளி.. மடியில் குழந்தையை இருத்திக் கொண்டே இவள் புடவைகளை ஆராய.. இப்படி தேர்வு செய்வதில் அவளுக்கு சிரமமாய் இருக்கவும், “இந்தாங்க பட்டுவைப் புடிங்க... நான் புடவையைப் பார்க்கறேன்...” இவள் இயல்பாய் சொல்ல...

அங்கு கொஞ்சம் தள்ளி நாற்காலியில் அமர்ந்து கைப்பேசியை பார்வை இட்டபடி இருந்தவனோ.. அவளின் வார்த்தைகளைக் காதில் வாங்கிய பிறகும் கொஞ்சமும் அசையாமல் அதே நிலையில் அமர்ந்திருக்க... அவன் வேண்டுமென்றே இப்படி செய்வது இவளுக்குப் புரிய.. “ஹய்ய.. ரொம்ப தான்…” என்று வாய்க்குள் முணுமுணுத்தவளோ அதன் பிறகு அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஒரு வேலையாள் சில புடவைகளைப் பிரித்து இவளிடம் காட்டிக் கொண்டிருக்க... இவளும் அதில் பிடித்த ஒன்று இரண்டைத் தேர்வு செய்து தனியாய் எடுத்து வைத்திருக்க... அந்நேரம் அங்கு நுழைந்தார் அக்கடையின் முதலாளி.

அதாவது... சற்று முன் இவர்கள் இருவரையும் வரவேற்ற நண்பனின் தந்தை.. “என்ன குமரா.. உன் பொஞ்சாதி பிள்ளையோட... கடைக்கு வந்திருக்க... சொல்லியிருந்தா நானே வீட்டுக்கு தேவையான சரக்க அனுப்பி இருப்பனே...” என்று கேட்டவரின் குரலோ.. வாப்பா என்று வரவேற்கவில்லை. ஏன் டா வந்த என்பது போல் ஒலித்தது.

அதில் இவன் நாற்காலியை விட்டு எழும்பாமல்... சட்டமாய் அதில் அமர்ந்தபடி குமரன் அவரிடம் ஏதோ சொல்ல வந்த நேரம்... அங்கு வந்த அவர் மகன், “அப்பா... நான் தான் குமரனை வரச் சொன்னேன்... இன்னைக்கு புது சரக்கு வந்திருக்கு இல்ல.. அதான்...” மகன் சொல்லி முடிப்பதற்குள் மகனின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது தந்தையின் விரல்கள்.

‘இது என்ன பேசும்போதே அடிக்கிறது... அதுவும் மூணாவது மனுஷங்க முன்னாடி...’ இப்படி நினைத்த வள்ளி படக்கென்று எழுந்து கணவனிடம் சென்று நின்று கொள்ள

குமரனுக்குள்ளும் அதே கேள்வி தான். இருந்தாலும் இவன் சட்டமாய் அமர்ந்து கொண்டு அவரை முறைக்க... ஏற்கனவே குமரன் அங்கு வந்தது அவருக்கு பிடிக்கவில்லை. இதில் அங்கிருந்த ஒரே நாற்காலியையும் அவருக்கு தராமல் அவன் அமர்ந்திருக்கவும்.. கோபத்தின் உச்சிக்கே போனவர்..

“என்ன டா மருவாதை தெரியுது உனக்கு? ஹும்... என்ன மருவாதை இது? யார் வர்றதா இருந்தாலும் என் கிட்ட முன்னமே சொல்லணும்னு உனக்கு தெரியாதா? ஏது.. இதுல ஆரம்பிக்கிறது.... நாளைக்கு எனக்கு தெரியாம எவளோடவோ குடுத்தனம் பண்ணி கையில் கொழந்தையோட வந்து நிப்ப... அதுக்கு தானே பாக்கிற...” ஏற்கனவே தந்தை அடித்ததில் திகைத்துப் போய் நின்றிருந்த மகனை அவர் இப்படி எல்லாம் கேட்கவும்.. அவன் அவமானத்தில் தலை கவிழ... குமரனுக்குள் கோபம் தலைக்கு ஏறியது.

‘இந்த மனுஷனுக்கு என்னைய புடிக்காதுனா... குத்தி காட்டுற மாதிரி... அவனை என்ன வேணா பேசுவாரா?’ இப்படி நினைத்ததும் அவரிடம் வாக்கு வாதம் செய்ய இவன் நாற்காலியை தள்ளிக் கொண்டு எழுந்து நிற்க.. அவனின் வேகத்தைக் கண்டு மிரண்ட வள்ளி... அதில் கணவனின் மனநிலையை யூகித்தவளோ அவன் கையைப் பிடித்து கொஞ்சம் பொறுமையாய் இருக்கும் படி தன் விரல்களாலேயே இவள் கட்டளை இட...

அதில் அவன் இன்னும் எரிமலைக்கே சென்றவன் நண்பனிடம் நெருங்கி “உனக்காக தான் டா... சும்மா விட்டுப் போறேன். இல்லனா இந்த குமரன் யாருன்னு காட்டியிருப்பேன். எனக்கு சாடமாட பேச்சு எல்லாம் தெரியாது. எதுவா இருந்தாலும் நேரா தான் பேசுவேன். வயசாகிடுச்சு.. இனி ஹம்... இருக்க சொல்லு” அதாவது அவரை வாயை மூடிக்கொண்டு இருக்க சொல் என்பது போல் தன் வாய் பொத்திக் காட்டியவன் பின்,

“வா புள்ள போகலாம்...” என்றபடி வள்ளியைத் தரதரவென அவன் இழுத்துக் கொண்டு செல்ல...

கணவனின் கோபம் அவன் பிடியில் தெரிய... அதைவிட அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் “ஸ்... ஆஆ...” என்று இவள் திணற

அதில் ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்திற்கு வந்ததும் தன் பிடியை விட்டவன்... கண்களில் சிவப்பேற, “சந்தோஷமா... நிம்மதியா... இப்போ அப்படியே உனக்கு மனசுகுள்ள குளுகுளுன்னு இருக்குமே... ஆனா ஒண்ணு.. இப்படி நான் வாங்கற பேச்சுக்கு எல்லாம் நீ என் கிட்ட ஒரு நாள் வசமா வாங்காம போக மாட்ட.. கணக்கு வச்சிக்கோ...” அவளைத் தன் முகத்தருகே இழுத்து... தன் உஷ்ணமான மூச்சுக்காற்று அவள் முகத்தில் மோத.. இவன் ஆழ்ந்த குரலில் கர்ஜிக்கவும்... பயத்தில் முதுகு தண்டு சில்லிட்டுப் போனது பெண்ணவளுக்கு.

அவள் கண்ணில் பயத்தைக் கண்டவன் என்ன நினைத்தானோ... “ச்சீ...” என்றபடி அவளை உதறி விட்டு இவன் முன்னே நடக்க... அவன் உதறலில் சற்றே தடுமாறியவளோ தன்னை சமாளித்துக் கொண்டு மனம் வலிக்க கணவன் பின்னே ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் வள்ளி.

பின் அவன் கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்பி விட... அவளை ஒரு மாலுக்கு அழைத்துச் சென்றவன்.. அவளுக்கு வேண்டியதை பிடித்த படி எடுத்துக் கொள்ள சொன்னவன்... மறந்தும் அஸ்மியையும்... அவள் தோளில் வழிந்த பையையும் இவன் வாங்காமல் இருக்க... பெண்ணவள் தான் துவண்டு போனாள். இதில் அஸ்மி வேறு தந்தையிடம் செல்ல ஒரே அடம்... அவளையும் சமாளித்து… அவளுக்கு அப்போ அப்போ வேண்டியதை கவனித்து.. மிகுந்த சிரமத்தின் இடையில் தான் துணிகளை எடுத்தாள் இவள். இவ்வளவு சிரமத்திலும் அட நீ வாங்கி தர உடையும் வேணாம்... ஒன்றும் வேணாம் என்று வள்ளி போய் இருக்கலாம் தான். ஆனால் அதை அவளால் செய்ய முடியவில்லை... முதன் முதலில் கணவன் வெளியே அழைத்து வந்து எடுத்து தருவதாயிற்றே... எப்படி விடுவாள் பெண்ணவள்?

இவள் தனக்கும் அஸ்மிக்கும் மட்டும் எடுக்காமல்... வசந்த்... வாணி... ஷாலினிக்கும்... சேர்த்து எடுக்க... இது எதற்கும் மறுப்பு சொல்லவில்லை குமரன். அதேபோல் கணவனுக்கு.. அவளுக்கு... அஸ்மிக்கு என்று காம்போ செட்டில் ஒரே நிறத்தில் ஆடைகளைக் கண்டவள்... அதை வாங்கவும் தவறவில்லை அவள்.

அதிலும், “இந்த நிறம் நல்லா இருக்குமா... இந்த அளவு... அப்புறம்... இது ஓகேவா...” இப்படியான மனைவியின் கேள்விகளுக்கு ஏனோ ஆதர்ச கணவன் போல் பொறுமையாகவே பதில் தந்தான் இந்த காளை.

பிள்ளைகளுக்கு முடியவும் இவள் மறுபடியும் புடவை பக்கம் சென்று... மங்களகிரி... பனாரஸ்... கிரேப் சில்க்... மற்றும் காட்டன் சில்க்... என்று இவள் வகை வகையா ரக ரகமா புடவைகளைத் தேடி வாங்கி குவிக்கவும்.. அதைக் கண்டவன், “ஹேய்... என்ன இது.. நீ பாட்டுக்கு இப்படி வாங்கி குவிக்கிற...” அவன் சன்னமாய் அவளிடம் கேட்க

“ஏன்.. உங்க கிட்ட பணம் இல்லையா?” இவள் சீண்டலாய் மறு கேள்வி கேட்க

“எல்லாம் இருக்கு... எவ்வளவு வேணா எடுத்துக்கோ... ஆனா.. ஏன் ஒரே நேரத்திலே இவ்வளவுனு தான் கேட்கிறேன்...” இவன் இயல்பாகவே கேட்க

“மறுமுறை நீங்க என்னை கடை கன்னிக்கு கூப்டுகிட்டு வருவீங்களோ என்னமோ.. அதான் இப்பவே எடுத்துக்கறேன். அப்புறம் இப்போ எடுத்தது எதுவும் எனக்கு இல்ல.. மீனாட்சி அண்ணிக்கு..”

அவளின் பதிலில், “என்னது அக்காவுக்கா? இது எதையும் அக்கா கட்டாதே...”

“வாங்கி கொடுத்தா தானே கட்டுவாங்க.. வாங்கியே தராம இப்படி சொன்னா எப்படி?” என்றவளின் வார்த்தையில் இருந்த நியாயம் உரைக்க.. அமைதியானான் குமரன். தன் அக்காவுக்கு அவள் பார்த்துப் பார்த்து நிறைய எடுத்ததில்.... இவனுக்கு மனது சுட்டதோ...

ஏதோ ஆதர்ச கணவன் போல், “உன் வீட்டுல இருக்கிறவங்க... அதான் உனக்கு வேண்டியவங்களுக்கு எல்லாம் சேர்த்து எடுத்துக்கோ...” என்று இவன் சொல்ல

அதில் ஆர்வமாய், “ஆமாங்க எடுக்கணும்..” என்று வழக்கம் போல ஆரம்பித்தவள்... பின் சுதாரித்து, “அப்படி எனக்கு யாருங்க இருக்கா... உங்களை விட்டா...” இவள் பாவம் போல மாற்றி சொல்லவும்..

அதில் கடுப்பானவன் அவளை நெருங்கி, “ரொம்ப நடிக்காத களவாணி...” என்று கிசுகிசுக்க..

இதற்கு ஒரு மெல்லிய புன்னகையை கணவனுக்கு பதிலாய் தந்தவள், “சரி சரி... பட்டுவைத் தூக்கிட்டுப் போய்... அப்படி உட்காருங்க... நான் போய் இன்னும் சிலதை வாங்கிட்டு வரேன்..” உடல் சோர்ந்தாலும் அவள் இன்னும் வாங்குவதில் குறியாய் இருக்க

“என்னது! இன்னும் வாங்கப் போறியா... அதிலும் உன் பிள்ளைய நான் வச்சிக்கவா... என்ன திமிரா? எது எடுக்கிறதா இருந்தாலும்... எடுத்து தொலை... நான் கூடவே இருக்கேன்...” என்றவன் பல்லைக் கடிக்க

“எனக்கு ஒண்ணும் இல்ல ப்பா... நீங்க பக்கத்துல இருந்தாலும் நான் அந்த உடுப்புகள வாங்குவேன். ஆனா நீங்க தான் விளக்கெண்ணைய குடிச்ச கணக்கா... பேய் முழி முழிப்பீங்க...” என்று குரலில் கேலி இழையோட மனைவி சொன்ன தினுசில் அவன் உஷாராகி இருக்க வேண்டும்.

ஆனால் அவனோ ஒன்றும் புரியாமால் முழிக்க.. அதில் கண்ணில் குறும்புடன் கணவனிடம் இன்னும் நெருங்கியவள்.. பெண்களுக்கான உள்ளாடைப் பிரிவைக் கண்களால் சுட்டிக் காட்டியவள்.. அதே கண்களாலேயே ‘இதைத் தான் வாங்கப் போகணும்... வாரீகளா?’ என்று கேட்கவும்..

இவனோ பேய் அறைந்தார் போல “அச்சோ...” என்ற நிலையில் உள்ளுக்குள் அலறினான் என்றால்... நிஜத்தில் சங்கடத்த்தில் நெளிந்தவனோ பின் பெண்ணவளிடம் எதுவும் தர்க்கம் செய்யாமால் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக விலகியிருந்தான் குமரன்.

கணவனின் செயலில் சின்ன சிரிப்புடன் விலகினாள் வள்ளி.. அவள் எல்லாம் வாங்கி வந்த பிறகும் வள்ளியை நேருக்கு நேர் காண முடியாமல் இவன் சங்கடத்துடனே தவிக்க... அதைக் கண்ட பெண்ணவளோ, ‘நீங்க இம்புட்டு நல்லவரா? அப்படியே என் இளா... 90s kids தான்.. எப்போதும் என் இளா.. சோ ஸ்வீட் தான்!’ என்று கணவனுக்குப் பட்டையம் வழங்கி மனதிற்குள்ளே தன்னவனைக் கொஞ்சிக் கொண்டாள் இவள்.

அதன் பிறகு இவன் இவளை உணவகத்துக்கு அழைத்து வர... அந்நேரம் அவன் கைப்பேசிக்கு அழைப்பு வரவும்.... வள்ளியை உள்ளே போகச் சொன்னவன் பின் அழைப்பை எடுத்துப் பேசியவன் பேசிக் கொண்டே இருக்க... களைப்பிலும் உடல் சோர்விலும் பெண்ணவளுக்கு பசி எடுத்தது. பொறுத்துப் பார்த்தவள் கணவன் வருவதாக இல்லை என்றதும் இது வேலைக்கு ஆகாது என்று முடிவுடன்.. தானே சென்று உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி வந்து உண்ணவும் ஆரம்பித்தாள் அவள்.

நேரம் சென்று வந்தவனும் பசியில் இருக்க... அங்கு அவன் முன் மேஜையில் அவனுக்குப் பிடித்த.. எப்போது இங்கு வந்தாலும் அவன் விரும்பி உண்ணும் உணவு வகைகள் இருப்பதைக் கண்டவன் மனதிற்குள்ளே வள்ளிக்கு நன்றியைச் சொல்லி விட்டு உண்ண ஆரம்பித்தவனின் வயிறுக்குள்... கொஞ்சம் உணவுகள் சென்ற பிறகு தான்.... அவனால் வள்ளி என்ன சாப்பிடுகிறாள் என்பதையே காண முடிந்தது. அதில் அவளும் பசியில் அவசரமாய் சாப்பிடுவதும்… பின் குழந்தைக்கும் பார்த்து ஊட்டி விடுவதையும் கண்டவன்..

“சாரி... முக்கியமான கால்...” என்றான் குற்ற உணர்ச்சியில்.

“பரவாயில்ல பரவாயில்ல... எனக்கு தான் கொலப் பசி.. அந்த பசியிலும்... சோர்விலும்... எங்க மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு...” அவள் கோபப் படாமல் இயல்பாய் சொல்லவும்... அந்த இயல்பு ஏனோ முதல் முறையாக அவனுக்குப் பிடித்திருந்தது..

பெண்ணவளின் பதிலில் இவனுக்குள் குற்ற உணர்ச்சி அதிகமாக, “இன்னும் ஏதாவது வேணுமா?” இவன் கேட்க

“இல்ல இல்ல... இது போதும். நீங்க சாப்பிடுங்க...” என்றவள் உணவை விழுங்க...

இப்போது தான் மேஜை மேல் இருக்கும் உணவு வகைகள் அவன் கருத்தில் பட.. இதெல்லாம் தனக்குப் பிடித்த உணவுகள் என்பது இவன் மனதிற்குள் பதிந்தது. அதில், “நீ சைக்காலஜி படிச்சிருக்கியா? எப்படி இந்த நேரத்துல.... என் கொலப் பசிக்கு.. நான் இதத் தான் சாப்புடுவேன்னு உனக்கு தெரியுது?” அவன் உணவை விழுங்கியபடி கேட்க

என்ன தான் பசியில் உணவை உண்டாலும் கணவன் தன்னுடைய படிப்பைத் தெரிந்து கொள்ளத் தான் இப்படி கேட்கிறான் என்பதைக் கண்டு கொண்ட பெண்ணவளோ, “க்கும்... நான் எல்லாம் மழைக்கு தான் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினவ... அப்போ என்ன பெருசா படிச்சிருப்பேன்... எல்லாம் பன்னெண்டாம் கிளாஸ் தான் மச்சான்...” என்று இவள் ராகத்தோடு சொல்ல.. அவனோ வழக்கம் போல பல்லைக் கடித்தான்.


அதில், ‘நீங்க இப்படி பல்லைக் கடிக்கும் போது கூட சோ ஸ்வீட் இளா மச்சான்...’ என்று கணவனை மனதிற்குள் கொஞ்சிக் கொண்டிருந்தாள் பெண்ணரசி.
 
Last edited:
R

Rukkuraj

Guest
அம்மா வள்ளி நீ யாரு மா. இளா ன்னு செல்லமா வேற கூப்டற.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அம்மா வள்ளி நீ யாரு மா. இளா ன்னு செல்லமா வேற கூப்டற.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அப்படி கேளுங்க ம்மா....
அன்புகள் ம்மா heart beatheart beatheart beatheart beat
 

சாந்தி கமல்நாத்

Guest
அச்சோ ...முடியல ..எனக்கு மண்டை காயுது 😠😠
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN