ஈரவிழிகள் 14

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காது குத்தும் நிகழ்வுகான வேலைகள் ஒரு பக்கம் துரித வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் கார்கள் அணிவகுத்து நிற்க... மறுபுறம் வெட்ட வெளியில் மணல் பரப்பில் பந்தல் அமைத்திருக்க... அதன் கீழ் சில உறவு முறைகள் அமர்ந்து சலசலத்துக் கொண்டிருக்க... கார்மேகமோ குமரனைக் காணும்போது எல்லாம் அவனை உறுத்து விழித்துக்கொண்டும்... பின் மற்றவரிடம் சகஜமாகப் பேசுவதுமாக இருந்தார்.. அதை கண்ட இவனுக்குள் கோபம் படர்ந்தது.

அதிலும் வள்ளியின் புன்னகை முகத்தைக் காணும்போது எல்லாம் இவனுக்குள் கொதித்தது. எப்பொழுதும் அவள் முகத்தில் புன்னகைப் பூ மலர்ந்திருக்கும் என்பதை ஏனோ அவன் அறியவில்லை. எங்கே.. அதற்கெல்லாம் அவன் அவள் முகத்தைக் கண்டால் அல்லவோ! இதில் நண்பன் செய்த துரோகத்தில் அவமான தீ அவனைப் பற்றி எரிக்க... அதே அவமான தீ வள்ளியையும் பற்றி எரிக்க வேண்டும் என்று நினைத்தவன்... சிறிதும் சிந்திக்காமல் அந்த செயலைச் செய்தான் குமரன்.

கல்பனாவின் பிறந்த வீடு பெரிய செல்வந்தர் வீடு என்பதால்... மருமகனுக்கு வைர கை கடிகாரம்... மகளுக்கு வைர ஆரம்... பேத்திக்கு வைரத்தில் தோடிலிருந்து கால் கொலுசு வரை தங்கத்தில் வாரி இறைத்து செய்திருக்க... அதை தன் பிறந்த வீட்டு சீதனமாய் பெருமை பொங்க... வெள்ளி தாம்பாளத்தின் மேல் பட்டுத்துணி விரித்து அதன் மேல் அணிவகுத்த நகைகளை கர்வத்துடன் உறவுமுறைகள் எல்லோரிடமும் காட்டிக் கொண்டிருந்தாள் கல்பனா. அதில், சில உறவுகள் வாய் பிளந்ததில்.. தாய் மகள் இருவரும் வாயெல்லாம் பல்லாக... ஏகத்துக்கு அலட்டல் அளப்பறையுடன் கர்வத்துடன் சுற்றிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரும்.

அந்நேரம், “பாட்டி, பாப்பாவுக்கு முடி எடுக்க நேரம் வந்துடுச்சாம்... தாத்தா உங்க ரெண்டு பேரையும் வரச் சொல்றாரு...” ஸ்ரீதரின் மகன் வந்து இருவரையும் அழைக்கவும்...

“டீ கல்பனா.. நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு போல.... மொட்டை அடிக்கிறதுக்கு முன்ன இந்த நகைகளை எல்லாம் வெளியே எடுத்துக் காட்டி பந்தா பண்ணோம்னு தெரிஞ்சா... உன் அப்பா சத்தம் போடுவார். இந்தா.. இதை சீக்கிரம் காரிலே வச்சுட்டு வா... அப்புறம் சீர் செய்யும் போது எடுத்துக்கலாம்..” கல்பனாவின் தாய் மகளுக்கு உத்தரவு இட்ட படி விலகிச் செல்லவும்....

மனைவியின் கையில் நகை இருப்பது தெரியாமல் சேரன், கல்பனாவையும் வேகமாய் வரச் சொல்லி தூரத்திலிருந்து அழைக்கவும்... இதற்கு மேல் தாமதித்தால் தந்தை திட்டுவாரே என்று பயந்தவள்... அங்கிருந்த வள்ளியை நெருங்கி, “இந்தா வள்ளி... இந்த நகையை எல்லாம் நகைப் பெட்டிக்குள்ள வச்சு பூட்டிட்டி... காருக்குள்ள வச்சிடு... கார் சாவி எங்க டிரைவர் கிட்ட இருக்கு...” என்றவள் வம்படியாய் வள்ளியின் கையில் தாம்பாளத்தைத் திணித்து விட்டு அவள் அங்கிருந்து விரைய... திகைத்துப் போனாள் வள்ளி.

‘என்ன இந்த அக்கா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம.. பல லட்சம் மதிப்புள்ள நகைகள காருக்குள்ள வைன்னு சொல்லிட்டுப் போறாங்க... எல்லோரையும் வேலை வாங்கிப் பழகனுதுல... இதையும் சாதாரணமா நெனைச்சிட்டாங்க போல. ஆனா முதல்ல எனக்கு இவங்க கார் டிரைவர் யாருன்னே தெரியாதே. இவங்க என்ன இப்படி பொசுக்குன்னு என் கையிலே கொடுத்துட்டுப் போய்ட்டாங்க... சரி அண்ணியைத் தேடி அவங்ககிட்டயாவது கொடுப்போம்...’ என்று நினைத்தவள்.

மீனாட்சியைத் தேடிச் செல்ல... இக்காட்சிகளை எல்லாம் கண்ட குமரனுக்குப் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகவும்.. மனைவி முன் வந்து நின்றவன், “அங்க உன் குழந்தை அழுதுகிட்டு இருக்கு.. நீ எங்க போற?” இவன் அதிகாரமாய் கேட்க

“இல்ல.. வாணி கிட்ட தான் விட்டுட்டு வந்தேன்.... அண்ணியைத் தேடி...” அவள் முடிப்பதற்குள்

“அக்காவை எதுக்கு தேடற? ஆமாம், அது என்ன கையில? ஒஹ்... இந்த நகைகளை அக்கா கிட்ட கொடுக்கணுமா? சரி நீ போ... நான் கொடுத்துக்கிறேன்...” கணவன் மென்மையாய் சொல்லவும் வள்ளிக்கு பக்கென்றது.

‘இவர் இப்படி எல்லாம் பேசுபவர் இல்லையே!’ இவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம்... அவள் கையிலிருந்து தாம்பாளத்தைப் பிடிங்கியவன்..

“போ.... நான் சேர்த்துடறேன்...” என்றவன் நகையுடன் அங்கிருந்து விலகியிருக்க...

‘ம்ஹும்... ஏதோ சரியில்ல..’ இவள் உள் மனது சொல்லிக் கொண்டே இருந்த நேரம்.. அங்கே மொட்டை அடித்து... எல்லாம் முடித்து... சீர் செய்ய நகையைத் தேடிய போது தான் கல்பனாவிற்குத் தெரிந்தது நகையைக் காணோம் என்று.

இவள் டிரைவரிடம் கேட்டு விட்டு படபடப்புடன் வந்து... தாயிடம் விஷயத்தைச் சொல்லி அவள் காதைக் கடிக்க... “என்ன டி சொல்ற... நகையைக் காணோமா! நல்லா தேடிப் பார்த்தியா? இதை மட்டும் உன் அப்பா கிட்ட சொன்னோம்.... இதென்ன பொறுப்பில்லா தனம்னு... அவர் வார்த்தையாலயே நம்ம ரெண்டு பேரையும் தாளிச்சிடுவார் தாளிச்சு. யாரு கிட்ட கொடுத்த.. நல்லா யோசிச்சிப் பார்...” அவள் மகளைச் சாட

“டாடி திட்டப் போறார்னு... வள்ளிகிட்ட கொடுத்து வைக்க சொல்லிட்டு வந்தேன் மாம்...”

“யாரு.. அந்த பஞ்சப் பரதேசி கிட்டயா கொடுத்த... விளங்கிடும்.. வைரம் வைடூரியத்தை எல்லாம் அவ பார்த்து இருப்பாளா… பார்க்காததை பார்த்ததும் அந்த ஒண்ணும் இல்லாதவ ஆட்டையப் போட்டுட்டு இருக்கா. இரு.. இப்போ அவளை என்ன செய்றேன் மட்டும் பாரு...” வீராப்பாய் முந்தியை இழுத்துச் சொருகிக் கொண்டு கிளம்பிய கல்பனாவின் தாய், வள்ளியிடம் வந்தவள்..

“ஹேய்... பஞ்ச பரதேசி... திருட்டு முண்டம்... எங்க கிட்டவே உன் வேலையை காட்டுறியா? நகையை எங்க டி ஒளிச்சு வச்சிருக்க?” எடுத்ததும் வள்ளியின் முடியைப் பிடித்துக் கொண்டு இவள் ஆங்காரமாய் கேட்கவும்... விக்கித்துப் போனாள் சின்னவள்.

கல்பனாவுக்கு உதறலே எடுத்தது. ‘ஐயோ! யாருக்கும் தெரியாம இந்த மாம் கேட்பாங்கன்னு பார்த்தா... இவங்க எல்லோரும் பார்க்க இப்படி கட்டப் பஞ்சாயத்து ரேஞ்சுக்கு மிரட்டிட்டு இருக்காங்களே... அதிலும் வள்ளியை...’ படபடப்பு அதிகமாக... யாரையும் நிமிர்ந்து பார்க்க திறன் இல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

மனைவி போட்ட சத்தத்தில் மார்த்தாண்டம் அங்கு வந்தவர், “என்ன யமுனா இது... சம்மந்தி வீட்டார் முன்னிலையிலேயே... அவங்க வீட்டு பொண்ண இப்படி நடத்துற... முதலில் வள்ளி மேலே இருந்து கைய எடு.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்...” மனைவியைக் கண்டிக்க

“இந்த ஒண்ணும் இல்லாதவ நகையத் திருடிட்டாங்க...”

“முதல்ல கைய எடு... குமரன் நம்மளை தான் பார்த்துட்டு இருக்கான்...” இவர் கடித்த பற்களுக்கு இடையே மனைவியை எச்சரிக்க..

கணவன் பெயரைச் சொல்லவும்.. அப்போது தான் வள்ளி என்ற சிலைக்கு உயிர் வந்தது. யமுனா அதிரடியாய் வந்து அவள் முடியைப் பிடித்து உலுக்கி நகையைப் பற்றி கேட்கவும்... அவள் அதிர்ச்சியிலும்... அச்சத்திலும் உறைந்து போய்விட்டாள். இப்போது கணவன் பெயரைச் சொல்லவும் அதில் இவள் கணவனைக் காண... இவர்கள் சொன்ன நகைக்கும்... கணவனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகப் பட்டது இவளுக்கு.

ஏன் என்றால் அப்படி ஒரு குரூர புன்னகையில்… எதையோ சாதித்து விட்ட மிதப்பில்… மகிழ்ச்சியுடன் தூரத்தில் நின்றிருந்தான் அவன்.

கணவன் அதட்டலில் வள்ளியின் கேசத்தின் பிடியை விட்ட யமுனா, “இந்த ஒண்ணும் இல்லாத பரதேசிக்கு நகை மேல ஆசை போல. அக்கா அக்கா... உங்க நகை எல்லாம் காட்டுங்க நான் கொஞ்சம் பார்க்கணும்னு... நம்ம பொண்ணு கிட்ட கேட்டுருக்கா. அதுக்கு... விழா ஆரம்பிக்கறதுக்கு முன்ன நகை எல்லாம் காட்ட முடியாதுன்னு நம்ம பொண்ணு நல்ல விதமாத்தான் இவ கிட்ட சொல்லியிருக்கா. ஆனா இவ கெஞ்சவும்... சரின்னு எடுத்து வந்து காட்டி இருக்கா... இப்போ பார்த்தா நகையைக் காணோம். அப்போ யாரு எடுத்திருப்பா... எல்லாம் இவ தான் நகைக்கு ஆசைப் பட்டு திருடி வச்சிட்டா...” யமுனா இன்னும் ஆங்காரமாய் வள்ளி மேல் குற்றத்தை வைக்க

வள்ளிக்கு அவமானத்தில் மேனி எல்லாம் தீயாய் எரிந்தது. கண்ணில் நீர் தேங்க அவள் கூனிக் குறுகி நின்ற நேரம்.. குமரனுக்கோ இப்போது தான் எதையோ சாதித்த உணர்வு ஏற்பட்டு உள்ளம் பரவசமாய் ஆனது. சொல்லப் போனால் மேற்கொண்டு வள்ளிக்கு நிகழப்போவதைக் காண அவன் கண்கள் ஆர்வத்துடன் காத்திருந்தது.

ஆனால் மீனாட்சி, “அத்த... இப்டி எல்லாம் பேசாதிங்க... குமரன் ஏதோ மாமாவுக்காக தான் அமைதியா இருக்கான். இல்லன்னா இதே அவன் பொண்டாட்டிய நீங்க பேசினதுக்கு... அவன் பதில் வேறயா இருக்கும்....” தன்னுடைய சன்னமான குரலில் அவள் எச்சரிக்க

“என்ன மீனாட்சி வாய் இல்லாத பூச்சியா இருந்த நீ எல்லாம் என்ன மிரட்டுற... இவ திருடினதால் தானே இவ புருஷன் பார்த்துட்டு அமைதியா நிற்கிறான். அதனால தான் நானும் இவ திருடிட்டான்னு சொல்றேன். எங்க.. இவ எப்போ பார்த்தாலும் தோளில் ஒரு பைய மாட்டிகிட்டே திரிவாளே... அதுல என்ன இருக்குன்னு நீயே கொஞ்சம் தொறந்து தான் பாரேன்...”

வள்ளியை இது போல எல்லாம் பேசி யாரும் இழிவாய் நடத்தியது இல்லை. அதனால் தான் அதிர்ச்சியில் இவ்வளவு நேரம் அவள் வாய் திறக்கவில்லை. திறக்கவும் முடியவில்லை.. தற்போது யமுனா சொன்ன வார்த்தையில் அவரைப் பார்வையாலேயே எரித்தவள்... எதுவும் பேசாமல் எப்போதும் குழந்தைக்கு வேண்டியதை வைத்திருக்கும் அந்த தோள் பையை எடுத்து திறந்தவள்... நிமிர்ந்த தலையுடன் இவள், “இந்தா நல்லா பார்த்துகோ…” என்ற பார்வையால்.. அதை கவிழ்க்க... அதன் உள்ளே இருந்து பட்டுத் துணி ஒன்று கீழே விழ... அதிலிருந்து கல்பனாவின் தாய் சொன்ன நகைகள் எல்லாம் மண்ணில் உருண்டு புரண்டது.

அதில்.. “யம்மா... யம்மா... முழு பூசணிக்காவையே மறைக்க பார்த்தாளே இந்த ஒண்ணும் இல்லாதவ... இப்போ இதுக்கு என்ன சொல்ற மீனாட்சி...” கல்பனாவின் தாய்... கோபத்துடன் முகத்தை சுளித்த படி சடசடக்கவும்... அங்கு ஒரு வித அமைதி சூழவும்... அந்த அமைதியிலும்... அவர் பேச்சிலும்... ஏதோ உறுத்த... வள்ளி குனிந்து பையிலிருந்து சிதறிய பொருட்களைக் காண... அதனூடே அங்கிருந்த நகைகளைக் காணவும்... அதிர்ச்சியில் தன்னிச்சையாய் ஒரு அடி பின்னே நகர்ந்தவளின் விழிகளோ கண்ணீரைப் பொழிய.. விக்கித்து நின்றாள் குமரனின் மனைவி.

அவ்வளவு தான்… யமுனா போட்ட கத்தலிலும் நடந்த நிகழ்விலும்.. அங்கங்கே நின்று சலசலத்துக் கொண்டிருந்த உறவுகள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் இவர்களிடம் குழுமியது.

ஆனால் யமுனா இதில் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. வள்ளியை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்த வேண்டும்.. இது மட்டும் தான் அவள் நோக்கம். அதனால் மிரட்டலாக... ஏதோ என்று தான் வள்ளியின் பையைப் பார்க்கச் சொன்னாள்... அதில் நகை இல்லை என்றால்... பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால் நிஜமாய் அதில் நகைகளைக் காணவும்... யமுனாவுக்குள் வெறியே உண்டானது. அதில் அவள் இன்னும் ஏதேதோ வள்ளியைப் பேச..

அங்கு தனக்கென்று யாரும் பேசாமல் போக... ஏன் தன் கணவனே தனக்கென்று இப்படி ஒரு அநீதியைச் செய்திருக்கவும்... கழிவிரக்கத்தில் துக்கம் தொண்டையை அடைக்க, “நான் எடுக்கல... எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்ல...” என்றபடி முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு கதறினாள் வள்ளி.

ஆனால் மறந்தும் கணவனைக் காட்டிக் கொடுக்கவில்லை அவள். தாய் கதறுவதைப் பார்த்து அங்கிருந்த அஸ்மியும்... தாயின் காலைக் கட்டிக் கொண்டு, “ம்மா... ம்மா...” என்று அழ... அங்கு ஓர் கனமான சூழ்நிலை உருவானது.

இவ்வளவு நடந்தும் இவை அனைத்தையும் தூரமிருந்து குமரன் கண்டானே ஒழிய... அவன் மனைவிக்காகத் தன் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால்.. அவனைப் பற்றி எறிந்த அவமான தீ ஏதோ கொஞ்சம் தணிந்தது என்றே சொல்லலாம்.

வள்ளியின் கண்ணீரில் மீனாட்சி உறைந்து போய் நிற்க... மார்த்தாண்டம் ஏதோ சொல்ல எத்தனித்த நேரம்... அங்கு வந்த பரஞ்சோதி வாத்தியார் தன் கையிலிருந்த போனை மார்த்தாண்டத்திடம் சுட்டிக் காட்டி அவர் காதில் எதையோ சொல்ல... மார்த்தாண்டம் புரிந்தது போல் தலையை அசைத்தார் என்றால்... அப்போது கைப்பேசியின் திரையில் ஓடிய காட்சிகளைக் கண்டு வள்ளி... மீனாட்சி இருவரின் பார்வையும் தெறித்து விழுந்தது மட்டும் இல்லாமல்.. இருவரும் திக்பிரம்மை பிடித்து நின்றிருந்தார்கள்.

“யமுனா.. வள்ளி நகையை எடுக்கல... யாரு எடுத்து இந்த பைக்குள்ள வச்சாங்கன்னு தெரிஞ்சி போயிடுச்சு... எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்... அதான் நகை எல்லாம் கிடைச்சிடுச்சு இல்ல... முதல்ல நகை எல்லாத்தையும் எடுத்துட்டு போ...” மார்த்தாண்டம் மனைவியை அதட்ட...

“இல்லங்க... அது வந்து...” யமுனா இழுக்க

“எல்லாம் எனக்கு தெரியும்னு சொல்றேன் இல்ல... உன் பொண்ணோட அஜாக்கிரதையாலே தான் இப்படி நடந்திருக்கு.. ஹம்.. எடுத்துட்டும் கிளம்பு...” என்று மனைவியிடம் சத்தம் போட்டவர்... பின் அங்கு குழுமியிருந்தவர்களை பார்த்து...

“எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்க... உறவானவங்க தான்.. எனக்கும் என் சம்பந்தி வீட்டுக்கும் பிரச்சனை வரணும்னு இப்படி எல்லாம் செய்திருக்காங்க... இதுக்கும் வள்ளிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எல்லோரும் விழாவைப் பாருங்க... யாரு அங்க.. பந்தி வேலையைப் பாரு” என்று கல்பனாவின் தந்தை ஓங்கிய குரலில் கட்டளை இடவும்... அவர் குரலும் ஒரு வித அழுத்தத்துடன் ஒலிக்கவும்... அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

‘தன் தாய் தான் ஏதோ சதி செய்திருக்கிறாள் போல’ என்று கல்பனாவும்... ‘தன் மகள் தான் இதற்கு காரணம் போல... அதான் கணவர் இதை இப்படியே விட்டுட்டார் போல’ என்று யமுனாவும் நினைத்தபடி இருவரும் அங்கிருந்து விலகினார்கள்.

அவர்கள் அப்படி நினைக்க காரணம் இருந்தது... அந்த திரையில் ஓடிய காட்சிகளைப் பார்த்தது... வள்ளி.. மீனாட்சி... மார்த்தாண்டம் மட்டும் தான். வேறு யாரும் அதைக் காண முடியாத படி தான் வாத்தியார் அக்காட்சிகளைக் காட்டினார். அதனால் அது யார் என்று இவர்களைத் தவிர... வேறு யாருக்கும் தெரியாமல் போனது.

“யாரு இதை செய்ததுன்னு நான் சொல்லவே வேணாம்... நீயே பார்த்திருப்ப... பார்த்து கவனமா இருந்துக்க ம்மா...” இப்படியாக வள்ளியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகிய மார்த்தாண்டம் குமரனிடம் வந்தவர்..
“நீ இப்படி செய்வேன்னு நினைக்கல குமரா. புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் மனஸ்தாபங்கள் வரலாம்.. அதுக்காக நம்மளை நம்பி வந்தவளை விட்டுக் கொடுத்துட கூடாது. உன் மனைவி திருடினு பெயர் வாங்கினா... அதனால அந்த பொண்ணுக்கு மட்டும் அவமானம் இல்ல... உனக்கும் அவமானம் தான். இனியாவது அந்த பொண்ணை பார்த்துக்கோ...” என்று அவனுக்கு அறிவுரை சொன்னவர் விலகி இருந்தார்… அதில் தான் தான் மனைவியின் பையில் நகையை வைத்தேன் என்பது அவருக்கு தெரிந்து விட்டதாக உணர்ந்தான் அவன்…

அது மட்டும்மில்லாமல் அப்போது தான் குமரனுக்கு ஒன்று புரிந்தது... வள்ளி பேருக்கு அவன் மனைவியாய் இருப்பதாலேயே... தன் அக்காவைப் போல் அடிமையாய் இருக்க விடாமல்... மற்றவருக்கு வேலை செய்ய விடாமல் அவளைத் தடுத்தவன் இவன்... ஆனால் இன்று அவனின் கோபம் ஆத்திரம் வன்மம்... அவமானம்... இப்படி எல்லாம் சேர்ந்து அவனை இந்த பாதகத்தை செய்ய வைத்தது. அதில் தற்போது அவனுக்குள் குற்ற உணர்வு குறுகுறுக்கவும்.. இவன் பரஞ்சோதி வாத்தியாரிடம் வரவும்... அதே நேரம் வாத்தியாரை நெருங்கிய கார்மேகம்.

“இதுக்கு யார் காரணம்... இந்த கார்மேகம் வீட்டு மருமகளை அசிங்கப்படுத்த நெனச்சது யாரு… அது யாரா இருந்தாலும் நான் சும்மா விடமாட்டேன்… யாரது சொல்லு...” கோபத்தில் மீசை துடிக்க நண்பனைப் பார்த்து அழுத்தமாய் அவர் கேட்கவும்

“அட... விடு கார்மேகம்...” வாத்தியார் சொல்லிக் கொண்டிருந்த நேரம்..

“நான் தான் ப்பா... அப்படி செஞ்சேன்...” என்று தான் செய்ததை ஒத்துக் கொண்டான் குமரன்.

அவருக்கு வந்த கோபத்திற்கு மகனை நாலு அரை விட்டவர், “என்ன டா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.. உன் இஷ்டத்துக்கு ஆட முடிவு செய்துட்டியா… இதென்ன சின்னப் பசங்க வெளையாடுற திருடன் போலீஸ் வெளையாட்டுனு நெனச்சியாடா? இதுல கார்மேகத்தோட குடும்ப மானம் அடங்கி இருக்கு டா. மார்த்தாண்டம் பெரிய தொழில் அதிபர்னா.. நான் நாட்டமை டா. எனக்கும் சமூகத்திலே பெரிய அந்தஸ்து இருக்கு. அத மனசுல வச்சிகிட்டு இனி எதுவா இருந்தாலும் செய்... இல்ல இப்படி தான் நீ இருப்பேனு எதையாவது செய்த.. பிறகு நான் சும்மா இருக்க மாட்டேன்.. பார்த்துக்கோ..” என்று மகனை எச்சிரித்தபடி உறுமியவர் அங்கிருந்து விலகி விட... குமரனோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.

“குமரா... நான் உன்னைய என்னமோன்னு நெனச்சேன். ஆனா நீ இப்படி செய்வேனு நான் நெனச்சு கூட பார்க்கல.. தன் எதிரில் நடக்கும் காட்சிகளைப் பார்க்க பிடிக்காத ஒருத்தன்... கோபத்தில் தன் கண்ணையே குத்திக் குருடாக்கிட்டானாம்... அப்படி இருக்கு உன்னோட செயல். வள்ளி உன் மனைவி.. இனி அந்த பொண்ணுக்கு ஒரு அவமானம்னா அது உனக்கும் தான்...” என்றவர்

“சின்னப் பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து... கையில் வச்சிருக்கற போனில் விளையாட்டுத் தனமா படம் பிடிச்சு... அதிலே யாருடைய படம் நல்லா வந்துருக்குனு ஒரு வாத்தியாரா... என் கிட்ட காட்டி மார்க் போட சொல்லுச்சிங்க. அதனால் தான் நீ செய்த களவாணித்தனம் தெரிஞ்சது.

எது என்னவா இருந்தாலும்... என் மாணவனா... நீ செஞ்சது கொஞ்சம் கூட சரியில்லாத ஒன்று குமரா.. அவ்வளவு தான் சொல்லுவேன். நான் கேட்டுகிட்டதாலே தான்... மார்த்தாண்டம் இந்த விஷயத்தை இப்படியே விட்டுட்டுப் போறார். இல்லன்னா... என்ன செஞ்சிருப்பாருன்னு நீயே யோசிச்சிக்கோ...” என்றவர் விலகியிருந்தார்.

உண்மை தான்.. இன்று நடந்த விழாவில் ஸ்ரீதரின் மனைவி வீட்டு வழிகளில் உள்ள சொந்தங்கள் அனைவரும்... கையில் ஹேண்டி கேமராவுடன்... அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்க... அதைக் கண்ட சிறுவர்களும்... ஆர்வத்தில் தங்கள் கைப்பேசிகளில் படம் பிடிக்க... அதில் போட்டி ஏற்பட்டு பின் அதுவே மதிப்பெண் கேட்கும் அளவுக்கு வர... அதனால் தான் குமரனின் குட்டு வெளிப்பட்டது.

குழந்தையைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழும் வள்ளியைப் பார்க்கவே அவனுக்கு என்னமோ போல் இருந்தது. அவன் செய்தது எப்படிப்பட்ட துரோகம்! அதுவும் கட்டின மனைவிக்கு செய்து விட்டானே! அவனால் அவளை நெருங்கி சமாதானம் செய்யவோ... மன்னிப்பு கேட்கவோ முடியவில்லை. இருந்தாலும் ஒரு முடிவுடன் இவன் மனைவியை நெருங்க... அப்போது தான் அங்கு தன் அக்கா இல்லாததையே அவன் காணவும்... அவனுக்குள் சுரீர் என்றது. அவன் செய்த கள்ளத்தனம் தமக்கைக்கும் தெரியுமே! அதனால் அவள் எடுத்த முடிவு…
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN