ஈரவிழிகள் 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நண்பன்.. தனிமையில் ஒரு பேச்சு... பொதுவில் ஒரு பேச்சு... என்று பேசாமல் இருந்திருந்தால் குமரனின் வன்மம் இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்திருக்காதோ! என்ன சொல்ல.. அவனும் தான் என்ன செய்வான்.. அவனுக்கே தெரியாமல் அவனைச் சுற்றி துரோகத்தால் பின்னப்படும் சூழ்ச்சி வலைகளை அறியும்போது அவனின் மனநிலையோ செயலோ பிறகு எப்படி தான் இருக்கும். அவன் ஒன்றும் ஏதும் அறியாத சிறுவன் அல்லவே!

நகையை மறைத்து வைத்தால்... இப்படியான பூகம்பங்கள் வெடிக்கும் என்பதை நன்கறிந்த இருப்பத்தியேழு வயது ஆண்மகன் தானே. என்ன.. அவனுடைய கோபத்தால் இந்த வினாடி... இப்படியெல்லாம் நடக்கும் என்பதை சிந்திக்காமல் விட்டு விட்டான். விளைவு.. வள்ளி... அதாவது பெயருக்கென்று அவன் மனைவியாய் இருப்பவள் அவன் கண்ணெதிரே அவமானப் பட வேண்டியதாகி விட்டது.

மார்த்தாண்டத்திற்கு அரசல்புரசலாய் சில விஷயங்கள் குமரனையும்... வள்ளியையும் பற்றி தெரியும் என்பதால் அவர் இந்த விஷயத்தைப் பெரிதாக்கவில்லை. அவருடைய நகை என்பதாலும் அவருடைய வார்த்தையில் அங்குள்ளவர்களுக்கு பெருத்த செல்வாக்கு உண்டு என்பதாலும் தான் யாரும் எதுவும் மேற்கொண்டு தோண்டித் துருவாமல் இவ்விஷயத்தை இப்படியே விட்டு விட்டார்கள். அதனால் குமரன் செய்த செயல் பூதாகரமாக்காமல் தடுக்கப்பட்டது.

அவன் நினைத்தது போலவே வள்ளி அவமானப்பட்டாள் தான். ஆனால் அவன் நினக்காத வேறு ஒன்றும் நடந்தது. அது.. அவன் தான் இதைச் செய்தான் என்பது தெரிய வர வாய்ப்பில்லை என்பதை உறுதியாக நம்பினான். அந்த அளவுக்கு கணக்கச்சிதமாகத் தான் காயை நகர்த்தினான் அவன். ஆனால் நடந்தது...

குழந்தையைக் கட்டிக் கொண்டு கதறும் வள்ளியைக் கண்டவனோ, ‘நீ ஏன் என் வாழ்க்கையில் வந்த... நீ வந்ததால் தானே... நமக்குள்ள இம்புட்டும் நடக்குது?’ இதை தன் மனதால் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் வள்ளி தன் வாழ்வில் வரக் காரணமான தமக்கை அங்கில்லை என்பதே அவனுக்கு உறைத்தது.

இவன் தமக்கையைத் தேட... அவளோ... எங்கோ ஆள் அரவமற்ற ஓரிடத்தில் உறைந்து போனவளாக ஆகாயத்தை வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள். தமக்கையை நெருங்கியவன், “அக்கா...” இவன் சன்ன குரலில் அவளை அழைக்க

“பேசாத டா... பேசாதா. நீ என்னைய அப்டி கூப்ட கூடாது. இந்த நிமிஷத்துலயிருந்து உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்ல.. உறவும் இல்ல போடா...” என்று குமுறியவள் தன் வேகத்தை எல்லாம் கையில் கூட்டி தம்பியை அடிக்க... நிலைகுலைந்து போனான் குமரன்.

மீனாட்சி அவனை வளர்த்த வளர்ப்புக்கு... அவன் இன்று செய்த செயலுக்கு... நிச்சயம் தமக்கை தன்னை மன்னிக்க மாட்டாள் என்று குமரனுக்குத் தெரிந்து தான் இருந்தது. ஏதோ திட்டுவாள்... கண்ணீர் சிந்துவாள்... சண்டை போடுவாள் என்று இவன் நினைத்திருக்க... அவளோ உறவே இல்லை என்று சொல்கிறாள். அப்படியான வார்த்தைகளை பொய்யாக என்றாலும் தாங்குபவனா குமரன்?

தமக்கை கொடுக்கும் அடிகளை எல்லாம் சிறகொடிந்த பருந்தாய் வாங்கிக் கொண்டவன்... அவள் உதிர்த்த கடைசி வார்த்தையில் அப்படியே அவள் முன் மண்டியிட்டு மண்ணில் அமர்ந்து அவளின் இரு கால்களையும் கட்டிக் கொண்டவன், “நான் செய்தது தப்பு தான் க்கா... பெரிய தப்பு தான்... யோசிக்காம செஞ்சிட்டேன்... அதுக்காக நீ எனக்கு குடுக்கற தண்டனை ரொம்ப ரொம்ப பெருசு க்கா. என்ன வார்த்தை சொல்லிட்ட! நீ என் அக்கா இல்ல க்கா.. அம்மா! உன்னோட கோபம் தீர்ந்து போகற வரை என்னைய எவ்வளவு வேணா அடி க்கா...” என்றவன் தமக்கையின் கையைப் பிடித்து... தன் தோள்.. புஜங்கள் என்று அவளை அடிக்க வைக்க...

தம்பியின் கண்ணீரும் அவன் சொன்ன வார்த்தையும் இவளை தன்னிலை உணர்த்த... அப்போது தான் தான் அவனை அடித்ததை உணர்ந்தாள் இவள். அதிலும் இதுவரை தம்பியை ஒரு அடி அடிக்காதவளுக்கு எப்படி இருக்கும்... அவனைவிட இவள் தான் துடித்துப் போனாள்.

அதில் அவனை வலுக்கட்டாயமாய் தன்னிடமிருந்து விலக்கியவள், “எனக்கும் உனக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்றனே... பெறகு நான் யாருப்பா உன்னைய அடிக்க? அச்சோ! இப்போ உன்னைய அடிச்சது கூட தப்பாச்சே. அதுக்கு எனக்கு தண்டனை தரணுமே...” என்று வாய் விட்டே சொல்லிக் கொண்டவள்... பின் அங்கிருந்த செடியிலிருந்து கொம்பை உடைத்தவள்... அதால் தன்னைத் தானே அடித்துக் கொள்ள..

அவள் கையில் உள்ள கொம்பு வீசப்படும் சத்தத்தில் நிமிர்ந்த குமரன்.. அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்தவனாக, “அக்காஆஆஆ....” என்ற கூச்சலுடன் இவன் ஓடிச் சென்று அவளைத் தடுக்க... ஆனால் மீனாட்சியோ தம்பியை வெறி கொண்டவள் போல் பிடித்துத் தள்ளியவள்....

“யா.... யா... யாரு... உ... உன.. உனக்கு.. அக்கா... நானா?” அவளுக்கு மூச்சு வாங்கியது. அதில் தன்னை நிலைப்படுத்தியவள், “நான் உனக்கு அக்கா வா? எப்டி.. கூடப் பொறந்ததால நான் உனக்கு அக்கா ஆகிட்டனே .. அதால சொல்றியா... அப்டியா என்னைய உங்க வீட்டுல நடத்துறீங்க... நீங்க காலிலே போட்டுகிட்டு போற செருப்பு அறந்தா கூட அதை கையிலே எடுத்து.. அதுக்கு என்ன ஆச்சு... எப்டி அறந்ததுன்னு.. நிதானமா பாத்துட்டு தானே தூக்கிப் போடுவீங்க. ஆனா அந்த செருப்புக்கு குடுத்த எடத்தையாச்சும் யாராவது எனக்கு உன் வீட்டுல குடுத்தாங்களா?” என்று குமுறலுடன் கேட்டவளோ பின் மடிந்து தரையில் அமர்ந்து...

“ஆத்தா! என் கூடப் பொறந்த பொறப்பு இன்னைக்கு செய்த காரியத்தைப் பாத்தியா.. என் கையிலே இவன குடுத்துட்டு என்னைய தனியா தவிக்க விட்டுட்டு நீ நிம்மதியா போய் சேர்ந்துட்டியே மா.... இதெல்லாம் பாக்கறதுக்கு தான் நான் இப்படி பொறந்த வீட்டுலயே கெடக்குறேனா.. இன்னும் என்னென்ன பாக்கப் போறேனோ தெரியலயே.. எனக்கு பயமா இருக்கு மா” என்று தெய்வமாகிப் போன தன் தாயிடம் சொல்லி கதறி அழ.. அதைக் கண்ட குமரனுக்கோ..

‘எனக்கு தெரிஞ்சு அக்கா மொத முறை இப்படி செத்துப் போன ஆத்தாகிட்ட சொல்லி அழறதைப் பார்க்கறேன்’ என்று மனதில் நினைத்து கலங்க..

“யய்யா சாமி! நான் கும்பிடற தெய்வமே... உனக்கு கண்ணு இல்லையா. என்னைய தான் பொறந்த வீட்டுல... வேத்து ஆளா... வேலைக்காரியா வெச்சிட்ட. இவனாச்சும் நல்லா இருக்கணும்னு நான் உன் கிட்ட வேண்டுன வேண்டுதல் எல்லாம் உன்னைய வந்து சேரலையா? அப்போ நீயும் என்னைய கைவிட்டுட்டியா?” அவள் எங்கோ வான்வெளியை நோக்கி தன் மனக்குமுறலைக் கொட்ட... குமரனுக்கோ பயம் பிடித்துக் கொண்டது.

‘இதென்ன.. அக்காவோட செய்கை எல்லாம் வேற மாதிரி இருக்கே!’ அவன் மனதில் நினைத்த நேரம் மீனாட்சியே தொடர்ந்தாள்.

“என்னைய பெத்தவ மட்டும் இருந்திருந்தா... என் வாழ்க்கை இப்டி நாதியில்லாம போகுமா... நீயும் அப்படி போயிடக் கூடாதுன்னு தான டா... என்ன நடந்தாலும் பரவாயில்ல... எதுவா இருந்தாலும் பரவாயில்லன்னு... உன்னைய அந்த பொண்ணு கழுத்திலே தாலியைக் கட்டச் சொன்னேன். ஆனா நீ இப்போ என்ன காரியம் டா செஞ்சி வச்சிருக்க.

அந்த புள்ளைய பத்தி செத்த நெனச்சு பாத்தியா டா.. உனக்கு புடிக்கலனாலும் அவ தான் உன்னோட பொஞ்சாதி. இனிமே அத மாத்த முடியாது.. புரிஞ்சிக்கோ. நான் மாத்தவும் விட மாட்டேன். அவளை உன் வாழ்க்கையில இருந்து பத்தி விடுறதுக்கு இம்புட்டு தூரம் போவியா டா நீ? நான் வளர்த்த புள்ளையா நீ இருந்திருந்தா இப்டி பட்ட கேவலமான யோசன உனக்கு வந்திருக்குமா சொல்லு.. அப்போ என்னோட வளர்ப்பு சரியில்லனு தானே அர்த்தம்? நீ ஆசப்பட்ட மாதிரி அந்த புள்ளையையும் பழிவாங்கிட்ட.. எனக்கும் நல்ல பேர வாங்கி குடுத்துட்ட.. இங்க அவளையும் யோசிக்கல.. என்னையும் யோசிக்கல.. ரொம்ப சந்தோஷம் பா.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்!” என்று கையெடுத்து கும்பிட்டவள்

“நான் ஒருத்தி குணம் கெட்ட.. பொறுப்பில்லாத அப்பாவுக்கு மகளா பொறந்து அடிமையா வாழறது பத்தாதா... சுயநலவாதியான தம்பிங்களுக்கு அக்காவா பொறந்துட்டு நான் ச்சீ... முழிக்கறது போதாது? அந்த எடத்துக்கு நீ வரக் கூடாதுன்னு நான் நெனச்சது தப்பா?” கேட்டவள்

“நான் செத்தா அநாதைப் பொணமா தான் போவேன் போல! அதுல என்ன சந்தேகம்... சத்தியமா!” என்ற வார்த்தையைக் கூறி இவள் மண்ணில் அடித்து சத்தியம் செய்யப் எத்தனிக்க... தமக்கையின் செயலையும் வேகத்தையும் அறிந்து கொண்டவனாக

“அக்கா...” என்ற கூவலுடன் ஓடிச் சென்று அவள் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டான் குமரன். அவளுக்காக அவன் கடைசி வரை அவளுடன் கூட இருப்பான் என்றாலும்.. ஏனோ இப்படி கோவில் வளாகத்தில் வெறும் வாய் வார்த்தைக்காக கூட தன் தமக்கையை இப்படி ஒரு சத்தியத்தை செய்ய வைக்க அவனால் முடியவில்லை.

“என்ன பயந்துட்டியா... எனக்கு பேராசை தான் இல்ல? அநாதை பொணமா போக கூட ஆசை படறனே.. இவனுங்க எல்லாம் என்னைய அநாதை பொணமா கூட போக விடமாட்டானுங்க... அப்போ பேராசை தானே… பெறகு என்ன செய்வானுங்கன்னு கேக்குறியா?”

“அக்கா...”

“உயிரே இல்லாதப்ப... இந்த பொணத்தை எதுக்கு ப்பா அவனுங்க அநாதையா வழியனுப்ப போறானுங்க... உயிரோட இருக்கும் போதே நான் அவனுங்க கண்ணுக்கு தெரியல.. இதுல.. மண்ணுக்குள்ள போகப்போற இந்த உடம்பை நாய் தின்னா..”
‘நாய் தின்னா என்ன.. நரி தின்னா என்னன்னு தூக்கிப் போட்டுடுவானுங்க’ என்று சொல்ல வந்தவளின் வாயை

“ஐயோ!” என்ற அலறலுடன் அவசரமாய் பொத்தினான் குமரன்.

தம்பி கையை விலக்கியவள், “அப்படி நாய் நரி என்னைய தின்னா கூட என் துடிப்பு அடங்காது டா... நீ நல்லா இருக்கிறேன்னு தெரியற வரைக்கும் அடங்கவே அடங்காது டா...”

பெரியவள் தேம்ப... “அக்கா.. அக்கா.. அக்கா...” அதற்கு மேல் அவனுக்கு வார்த்தைகள் வெளி வரவில்லை… சொல்லாத வலியோடு கண்ணீரோடு தமக்கையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் குமரன்.

திருமண பந்தத்தில் இணையும் ஆண்... பெண்... என்று இருவருடைய வாழ்வும் வெற்றியில் முடிவது இல்லை. திருமணம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வுக்கு பரிபூரணத்தைக் கொடுப்பதாக அவள் சொல்ல வரவும் இல்லை. அவளைப் பொறுத்த வரை அவளுடைய நிலை அவள் தம்பிக்கு வரக் கூடாது.. அது மட்டும் தான் அவள் எண்ணம்.. சுவாசம் எல்லாம். அதைத் தான் இன்று அவள்.. தன் இத்தனை வருட மனக் குமுறலில் சொல்லித் தீர்த்தாள். அதை விட அவளின் குமுறலைக் கொட்டினாள் என்றே சொல்ல வேண்டும்.

கண்கள் சொருக... தம்பியின் நெஞ்சிலிருந்து அவளின் முகம் சரியவும்... இவன் “அக்கா... அக்கா...” என்று பதற

அந்நேரம் அங்கே வந்த கார்மேகம், “குமரா, என்ன ஆச்சு ப்பா...” இவரும் பதட்டத்துடனே கேட்க

“அக்கா.. மயக்கமாகிடுச்சுப்பா...”

“நான் மீனாவை பார்த்துக்கிறேன்... நீ போய் தண்ணீ எடுத்துட்டு வா. அப்படியே காரை தயார் பண்ணு.. நாம ஆஸ்பத்திரி போகலாம்...”

தந்தை சொன்னதைச் செய்ய இவன் ஓட... தற்போது கார்மேகத்தின் மடியில் தலை சாய்த்திருந்தாள் மீனாட்சி. எதுவும் பேச முடியாத நிலையில் அவர் தன் தோளில் இருந்த துண்டால்... மகளின் முகத்தைத் துடைத்து விட... அந்த மயக்கத்திலும் அவளுக்கு தந்தையின் ஸ்பரிசம் தெரிய “ப்பா...” என்று அழைத்தது அவள் உதடுகள்.

“யம்மாடி... மீனா... உன் அப்பாரு தான் ம்மா. உனக்கு என்னம்மா செய்து?” இவர் பரிவுடன் கேட்க...
ஆனால் மனதுக்குள், ‘தங்கம்.. உன் மனசுல இம்புட்டும் சுமந்துகிட்டு எப்படி வெளிய எங்ககிட்ட சிரிச்சு பேசுன தாயி? ஒரு பொண்ணான உனக்கும் மனசு இருக்கும்.. அதுக்குள்ள ஆயிரம் ஆசைகள் இருக்கும்னு இந்த சுயநலவாதி தகப்பன் யோசிக்கல ம்மா. உன் கஷ்டத்தை சொல்ல கூட உனக்கு ஒரு துணை தேவைன்னு நான் நினைக்கலையே.. இந்த வயசுல கூட எனக்கு ஒரு துணை தேவைப்பட்டுச்சு. ஆனா என்னைய விட உனக்கு தான் அது அவசியம்னு எனக்கு உறைக்காம போயிடுச்சு.. உனக்கு தகப்பன்னு சொல்லிக்கிற அருகதை கூட கூறு கெட்ட எனக்கு இல்ல ம்மா’ என்று மானசீகமாய் வருந்த.. அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

பின்னே.. இன்று மகள் கொட்டிய குமுறலை எல்லாம் அவரும் கேட்டுக் கொண்டு தானே இருந்தார். பெத்த தகப்பனாக அவருக்கு எப்படி இருந்திருக்கும்... தந்தையின் கண்ணீர் உருண்டோடி வந்து இவளின் கன்னத்தில் தெறிக்கவும்... மீனாட்சி அதை உணர்ந்தாலும்.. கண்ணைத் திறக்க முடியாத நிலையில் இருந்த அந்த நாற்பத்தி நான்கு வயதான குழந்தையோ தன் உடலைக் குறுக்கிக் கொண்டு... ஆதரவைத் தேடி தன் தந்தையின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்ள...

“யம்மாடி... மீனா...” என்ற பதைபதைப்புடன் அழைத்து.. நடுங்கும் விரலால் மகளின் கேசத்தைக் கோதிய... கார்மேகத்தின் மனமோ... முதன் முதலாக மகளை நினைத்து கலங்கியது.

குமரன் வந்ததும்... ஈரத்தால் தமக்கையின் முகம் துடைத்து... அவளுக்கு நீரைப் புகட்ட... அவளோ கண் விழித்த பாடில்லை. உடனே தமக்கையைத் தன் கைகளில் அள்ளியவன், “அப்பா... நீங்க போய் காரை எடுங்க...” மகனின் உத்தரவில்... கார்மேகம் பதறியவராய் நகர...

குமரனின் கையில் பேத்தியைக் காணவும்... அழகுமலை என்ன ஆச்சோ என்று பதறியவர்.. கலக்கத்தில் நெஞ்சைப் பிடித்தபடி மண்ணில் சரியவும்... ஒரு நிமிடம் யார் யாரை முதலில் கவனிக்க வேண்டும் என்று... புரியாத ஒரு நிலை அங்கு உருவானது.

வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள் தூரவே விழாவுக்கான பந்தி நடக்கும் இடத்தில் இருக்க... எப்போதும் போல... நண்பனுக்குத் தோள் கொடுக்க குமரன் முன் வந்து நின்ற கீர்த்திவாசன்... “நீ வள்ளியை கூப்டுகிட்டு அக்காவோட அந்த காரில் ஆஸ்பிட்டல் போ டா. நான் அப்பவோடவும்... வாத்தியாரோடவும்... தாத்தாவை அழைச்சுகிட்டு என் காரிலே வரேன்...” என்று அவன் அவசரப்படுத்த...

அவனின் நட்பில் இவனுக்கு கண்ணைக் கரித்தது. எப்போதும் இவன் இப்படி தானே.. சூழ்நிலை உணர்ந்து முதல் ஆளாய் வந்து நிற்பானே..

வள்ளி, அவசரமாய் கார் கதவைத் திறக்க... இவன் காரினுள்ளே தமக்கையைப் படுக்க வைக்க எத்தனிக்க, “ஒரு நிமிஷம் இருங்க...” அவசரமாய் சொன்னவள் அதை விட அவசரத்துடன் உள்ளே அமர எத்தனிக்க...

அவளின் நோக்கம் புரிய எங்கிருந்தோ வந்த சதீஷ்.. “அண்ணி.. பாப்பாவை என் கிட்ட விடுங்க… நான் அஸ்மியோட முன்னாடி உட்கார்ந்துகிறேன்…” என்று அவன் சொல்லவும்..

குழந்தையை அவனிடம் தந்தவள்.. உள்ளே அமர்ந்து மீனாட்சியின் தலையை இவள் தன் மடியில் ஏந்திக் கொள்ள..
இதுவரை… அவளைத் தேற்ற யாரும் இல்லாமல் அநாதையாய் அழுது கொண்டிருந்த அவளின் நிராதரவான நிலையிலும் வள்ளியின் உண்மையான பாசத்தைக் கண்டு இவனுக்கு குற்ற உணர்ச்சி அதிகமானது.

பின் எல்லோரும் அமர... இரு கார்களும் அதிவேகமாய் ஆஸ்பிட்டலை நோக்கிப் பறந்தது.

மீனாட்சியைப் பரிசோதித்ததில் சாதாரண மயக்கம் தான் என்று சொன்னார்கள். அதில் கொஞ்சமே எல்லோரும் ஆசுவாசமாக.. ஆனால் அழகுமலை தாத்தாவுக்கு மாரடைப்பு என்பதோடு... எதுவாக இருந்தாலும் இருபத்தி நாலு மணி நேரத்திற்குப் பிறகு தான் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட... மொத்த குடும்பமும் மருத்துவமனையில் தான் பழியாய் இருந்தது. மீனாட்சி விரைவிலேயே கண் விழித்து விட... அன்று முழுக்க அந்த மருத்துவமனை படுக்கையில் அவளை ஓய்வெடுக்க வைத்து விட்டான் குமரன்.

மறுநாள் அழகுமலை தாத்தா அபாயத்தைக் கடந்து விட... அதன் பிறகு வந்த இரண்டு நாட்களில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்கள் மருத்துவர்கள். பின் அனைவர் வாழ்வும் சகஜ நிலைக்குத் திரும்பியது.

மீனாட்சி.. குமரன்... வள்ளி... கார்மேகம்.. இப்படி அனைவரும் தாத்தாவை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்ள... அவரோ சதா சர்வ காலமும் ஏதோ சிந்தனையிலே இருந்தார். ஒரு முறை அவரைக் கண்ட கார்மேகம், “இப்போ எதுக்கு எந்த நேரமும் ஏதோ யோசனையிலே இருக்கீங்க... டாக்டர் நீங்க அதிக வெசனப்பட கூடாதுன்னு சொல்லியிருக்கார். பெத்த புள்ள... நான் பக்கத்திலே இருந்து உங்களைப் பார்த்துக்கப் போறேன்... பெறகு எதுக்கு சர்வ காலமும் உங்களுக்கு வெசனம்?” இவர் கோபப்பட...

மகனை ஒரு பார்வை பார்த்த அழகுமலை, “பெத்த கடமைக்கு என்னைய கவனிச்சிக்க நீ இருக்க டா... அதே என் பேத்திக்கு யாரு டா இருக்கா?” அவர் கேட்ட கேள்வியில் உறைந்து போனார் கார்மேகம். அதில் அவர் தந்தையை உற்று நோக்க, “என் பேத்தி ஒண்ணும் இந்த வீட்டுல.... இஷ்டப்பட்டு இருக்கல டா... நீ பெத்ததுனால தான் ஒரு சாமியார் மாதிரி தவ வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கா டா. அந்த வாழ்க்கைக்கு அவளை யாரு அப்படி தள்ளினதுன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு கார்மேகம்..” அவர் சொல்ல... அதை செய்தது நான் தானே என்ற குற்ற உணர்ச்சியில் குனிந்த தலையுடன் அங்கிருந்து விலகினார் கார்மேகம்.

மீனாட்சியின் அன்றைய குமுறலை மறைவாய் இருந்து… கார்மேகத்தைப் போல்.. அழகுமலை தாத்தாவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தார். ஆக.. அவளின் குமுறல் ஒவ்வொருவரையும் ஒவ்வோர் விதத்தில் பாதித்தது என்றால்.... குமரனை சுத்தமாய் புரட்டியே போட்டது. அதன் விளைவு... தன் தமக்கையின் ஜாதகத்தை தூசி தட்டி மறுபடியும் கையில் எடுத்திருந்தான் அவன்.

எடுத்தது மட்டுமில்லாமல் தந்தையிடம் வந்தவன், “மறுபடியும் அக்கா ஜாதகத்தைக் கையிலே எடுத்திருக்கேன் . போன முறை மாதிரி... உங்க மறுப்பைக் காட்ட நெனைக்காதிங்க.. பிறகு நான் மனுஷனா இருக்க மாட்டேன். நான் பார்க்கறவருதான் என் அக்காவுக்கு மாப்பிள்ளை. எப்போதும் தயாராவே இருங்க...” தந்தையிடம் இவன் பகிரங்கமாகவே அறிவிக்க... அவரோ தன் சம்மதத்தை மவுனத்தாலே தெரிவித்தார்.

அதே இடத்திலேயே மீனாட்சியும்... வள்ளியும் நின்றிருக்க... கலவரத்துடன் அவன் முகம் பார்த்து நின்றிருந்த தமக்கையிடம் வந்தவன், “முன்ன மாதிரி எதுவும் செய்ய நெனைக்காத க்கா... அப்ப நான் தனி ஆள்.. ஆனா இப்போ...” வாய் பேச்சு தமக்கையிடம் இருக்க.. சட்டெனே அங்கிருந்த வள்ளியின் கையைப் பிடித்து இழுத்து தன்னை நெருங்கினார் போல நிற்க வைத்தவன்..

அவள் கழுத்திலிருந்த மஞ்சள் சரடை தொட்டுக் காட்டி, “இதைக் கட்டுனவன் உயிரோட இருக்கும் போதே... இதை அறுத்து... இவளுக்கு அமங்கலிக்கு செய்கிற சடங்கை செஞ்சு... இவளைப் பத்தி விட்டுடுவேன். நான் செய்ய மாட்டேன்னு நெனைக்காத... கார்மேகம் மகன் செய்ய மாட்டான்... ஆனா மீனாட்சி தம்பி செய்வான்... நெனவுல வச்சிக்க...” என்று அழுத்தம் திருத்தமாய் அறிவித்தவன் அங்கிருந்து விலகியிருக்க..

மீனாட்சியோ ஒரு நிமிடம் விக்கித்து நின்றவள்.. ‘என்ன டா.. வார்த்தைய இப்படி நெருப்பா கொட்டிட்டு போறியே.. எனக்காக அந்த புள்ளைய பலிகடாவா மாத்துறியே.. ஐயோ! நான் என்ன செய்வேன்?’ என்று மனதுக்குள் துடிக்க...
வள்ளிக்கோ அவளுள் ஏதோ ஒன்று நொறுங்க... கண்ணில் உயிர்ப்பையே இழந்திருந்தாள் அவள்.


எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல்... தன் அக்காவை மிரட்ட என்றே... குமரன் சொன்ன வார்த்தைகள் தான் இவைகள். ஆனால் அவன் கட்டிய தாலியைக் கழுத்தில் சுமந்திருப்பவளைப் பற்றி கொஞ்சமும் அவன் சிந்திக்கவில்லை. எங்கே.. அவன் தான் அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகவே நினைக்கவில்லையே! ஆனால் அவனைத் தன் நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பெண்ணவளுக்கு.. தன்னவன் சொன்ன வார்த்தைகள் உயிர் வலியையே கொடுத்தது.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN