உன்னுள் என்னைக் காண்கிறேன் 8

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 8
‘எப்படிப் பால் போட்டாலும் இவ தோனி மாதிரி சிக்ஸர் அடிக்கிறாளே. இவளை எப்படி க்ளீன் போல்டாக்கிறது...’ என்று மனதுக்குள் சலித்துப் போனான்தேவ்.

அன்று மித்ராவைத் தோட்டத்தில் சந்தித்துப் பேசித் திரும்பிய தேவ் அவளை எப்படித் தன் வழிக்குக் கொண்டு வருவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.

இங்கு மித்ராவின் குடும்பத்தைப் பற்றிச் சில வரிகள்…

சத்தியமூர்த்தி - மித்ராவின் தாத்தா. பெயருக்கு ஏற்றபடி சத்தியத்துக்கும், நீதி, நேர்மை, நியாயத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர். வாசுகி – மித்ராவின் பாட்டி. பெயரில் மட்டும் வாசுகியாகயில்லாமல் நிஜத்திலும் அந்த வள்ளுவன் மனைவி வாசுகி போலவே தன் கணவனுடன் ஒன்றி வாழ்ந்தவர்.

சத்தியமூர்த்தி பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது ஏன் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாம் பாண்டிச்சேரியில் தான். அவருடைய தாத்தா காலம் முதற்கொண்டு செய்து வரும் குடும்பத் தொழிலான மளிகைக் கடையைத் தான் இவரும் நடத்திவந்தார். அதை இப்போது அவர் பிள்ளைகள் மூர்த்தி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.

சத்தியமூர்த்தி - வாசுகி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். அனைத்தும் ஆண்பிள்ளைகள். மகள் வேண்டுமென்ற வாசுகியின் ஆசையால் இவ்வுலகிற்கு வந்தவர்கள் இவர்கள் நால்வரும். மூத்தவன் ராமமூர்த்தி, இரண்டாவது குருமூர்த்தி, அடுத்தது கருணாமூர்த்தி

வாசுகிக்கு சற்று காலம் தாழ்த்தி நான்காவது தங்க பிரசவத்திற்கு சிலநாட்களுக்கு முன்பு கால்இடறி வாசுகி விழுந்து விட கவனிப்பார் அற்றுயிருந்தவரை சத்தியமூர்த்தியே பார்த்து ஆஸ்பிட்டலில் சேர்க்க அன்றே பிறந்தார் தட்சிணாமூர்த்தி. அப்போது படுக்கையில் படுத்த வாசுகி பின் மகனின் பண்ணிரெண்டாவது வயதில் இறந்தேபோனார். தன் மனைவியை இழந்த சோகம் தனியாளாய் நான்கு பிள்ளைகளை வளர்க்கப் படும் கஷ்டம் என எல்லாம் சேர்த்து தட்சிணாமூர்த்தியிடமிருந்து விலகியே போனார். தனியாளாகயிருந்த அவருக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் வாசுகியின் அண்ணன் குடும்பம் இங்கேயே வந்து தங்கி விட அவர்கள் வாழ்வு அங்கு நீடிக்க அப்பா மகன் உறவை இன்னும் விரிசல்படுத்தினர். மற்ற பிள்ளைகளுக்கு செய்வதுபோல் தட்சிணாமூர்த்திக்கும் படிப்பு வேலைவாய்ப்பு என்று ஏற்படுத்திக் கொடுத்தாரே தவிர அன்பு பாசத்தைக் கொடுக்கவில்லை.

தட்சிணாமூர்த்தியோ தன் கூட வேலை செய்யும் வடநாட்டுப் பெண்ணைக் காதலிக்க அதற்கும் உன் வாழ்க்கை உன் இஷ்டம் என்பதுபோல் ஒதுங்கிக் கொண்டார் சத்தியமூர்த்தி. இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து வாழ்ந்த தட்சிணாமூர்த்தி – பிருந்தாவின் மகள் தான் மித்ரஹாசினி. அவர்கள் வாழ்ந்த வாழ்வின் ஆயுட்காலமும் ஐந்து வருடம் தான். குடும்பத்துடன் ஓர் திருமணத்திற்கு காரில் சென்றிருந்தபோது விபத்து ஏற்பட்டு மித்ரா மட்டும் பிழைத்துக்கொள்ள அந்த விநாடியே தாய் தந்தையரைப் பறிகொடுத்தாள் மித்ரா.

இறுதி காரியத்திற்குப் பிருந்தா வீட்டிலிருந்து யாரும் வராமல் போக சத்தியமூர்தியே ஓர் தந்தையாக கூடயிருந்து அனைத்தையும் செய்தவர் பின் பேத்தியைத் தன்னுடனே அழைத்து வந்துவிட்டார்.

வாசுகியின் அண்ணன் தாமோதரன் தன் பெண்களை சத்தியமூர்த்தியின் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்திருக்க அங்கு யாருக்குமே மித்ராவைப் பிடிக்கவில்லை. அதை அவர்கள் வெளிப்படையாவே காட்டியதைப் பார்த்த சத்தியமூர்த்தியோ தன் பேத்தியின் எதிர்கால வாழ்வை எண்ணி மித்ராவை ஹாஸ்டலில் சேர்த்து படிக்கவைத்தார். அன்று ஆரம்பித்த அவள் வாழ்வு இன்றுவரை ஹாஸ்டலிலேயே தொடர்கிறது. இன்று அவளும் ஒரு பொறியியல்பட்டதாரி ( B. E computer engineer ).

எந்த ஒரு அன்பு பாசமும் இல்லாமல் யாரும் அற்ற அநாதையாகவே கழிந்தது அவளின் நாட்கள். முழுமையாக அவள் அநாதை என்றும் சொல்ல முடியாது. அவளைத் தன் பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளவில்லையே தவிர அவள் தாத்தா அவளைச் சீராட்டிப் பாராட்டி அன்பை கொட்டியே வளர்த்துவந்தார். ஓர்வயதுக்குப் பிறகு எங்கோ எப்படியோ வளர வேண்டிய நான் இன்று இப்படி ஓர் நல்லவாழ்வு வாழத் தன் தாத்தா தான் காரணம் என்பதாலும் தன் தந்தையைப்போல் தன்னை விலக்காமல் இன்று தன்னை ஏற்று பாசத்தைப் பொழியும் அவரிடம் அதிகப்பாசமும் பிடிப்பும் ஏற்பட்டது மித்ராவுக்கு.

இனி இன்று
அன்றைய தினம் மதியமே தேவ் வரவேண்டியது! ஆனால் அவனுக்குச் சில தகவல்கள் கிடைக்கத் தாமதமானதால் மாலை தான் வந்தான். அவன் வரும்நேரம் மித்ரா தன் அறையிலிருந்தாள். எந்த ஓர் முன் அறிவிப்புமில்லாமல் அனுமதியும் கேட்காமல் வழக்கம்போல் அறையில் நுழைந்தவன் ஒரு பத்திரத்தை அவள் முன் நீட்டி, “இப்ப இதற்கு என்ன சொல்ற...” என்று கோபம் அடங்காதக் குரலில் கேட்க….

காலையில் எழுந்தது முதல் ‘தாத்தா ஏன் இன்னும் வரவில்லை? பணத்தைப் புரட்ட ரொம்ப கஷ்டப் படறாறோ இன்னும் ஏன் பேசவில்லை…’ என்று பலமன சஞ்சலத்திலும் குழப்பத்திலும் இருந்த மித்ராவுக்கு, அவன் அனுமதியில்லாமல் நுழைந்தது கருத்தில் படவில்லை. அவன் குரலைக் கேட்டுச் சிந்தனையிலிருந்து கலைந்தவள் ஒண்ணும் புரியாமல் திருதிருவென முழிக்க.

அவளைப் பார்த்தவனோ, “சும்மா நடிக்காத! என்னமோ நான் பணம் தந்துடுவேன் அப்படியே தர முடியலனா வேலை செய்தாவது தருவனு சொன்ன. அதுவும் மகாராணிக்கு என் கிட்ட வேலை செய்தா கவுரவ குறைச்சல்னு வெளியே வேலைப்பார்த்து என் கடனை அடைக்கறேனு சொன்னயில்ல. இப்ப தான் தெரியுது உன் லட்சனம். நீயும் ஃபிராடு உன் குடும்பமும் ஃபிராடுனு! என் கிட்ட ஆறுலட்சம் வெளிய என்பது லட்சம். இன்னும் எத்தனை பேர் கிட்ட எப்படி எல்லாம் எத்தனை லட்சம் ஏமாற்றியிருக்கிங்க நீயும் உன் தாத்தாவும்? நான் அப்பவே உன்ன சந்தேக...”

“வில் யூ ஸ்டாப் இட் மிஸ்டர் தேவேந்திர பூபதி” என்று மித்ரா கத்த, அப்படி அவள் கத்தியது ஆலயத்தில் எழுப்பப்படும் மணியோசையாக அந்த அறை முழுக்க நிரம்பி எதிரொலித்தது. அந்தச் சத்தத்தில் தேவ்வின் பேச்சு பாதியில் தானாகவே நின்று விட ஓர் நிமிடம் அவன் உடலில் தன்னை அறியாமலே ஒரு நடுக்கம் ஓடிச்சென்றதை அவனுமே உணர்ந்தான். இவை எல்லாம் விட பார்ப்பதற்கு கையில் சூலமில்லாத ஓர் காளியாக அவன் முன் நின்றிருந்தாள் மித்ரா.

“என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க? ஃபிராடு குடும்பமா நாங்க? ஆமாம் நான் கேட்கறேன் என்னைப் பற்றியும் என் தாத்தாவைப் பற்றியும் உங்களுக்கு என்னத் தெரியும்? சொல்லுங்க பார்ப்போம்” அவன் மௌனம் காக்க, “தெரியாது இல்ல? பிறகு எப்படிச் சொல்றீங்க நாங்க ஃபிராடுனு? அப்படி நானும் என் குடும்பமும் ஃபிராடாயிருந்தா எப்போவோ உங்களுக்குப் பணம் தராமல் ஆஸ்பிட்டலை விட்டு ஓடியிருக்க முடியும்.

அச்சச்சோ தப்பா சொல்லிட்டனே! நீங்க தான் என் காலை உடைத்து வச்சிட்டீங்களே பிறகு நான் எப்படி ஓட முடியும்? தவழ்ந்து தான் போகனும். சரி அங்கிருந்து தான் என்னால் ஓட முடியாது. ஆனா இங்க வரும் போது என் கால்கள் சரியாகிடுச்சி தானே. உங்க கூட உங்க கார்ல பின் சீட்டில் தானே உட்கார்ந்து வந்தேன்? அப்ப உங்களைத் தாக்கிட்டு கார் கதவைத் திறந்து குதித்து ஓட எவ்வளவு நேரம் ஆகும் எனக்கு? நீங்க நினைக்கலாம் ஓட்டுநர் மட்டுமே அதன் கதவுகளைத் திறக்கவோ மூடவோ முடியும் என்று. ஆனால் உங்களுக்கும் தெரியாதது இல்லை.

இன்று எங்கள் கைகளில் இன்டர்நெட் என்றொரு சிறிய உலகம் இருக்கிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எப்படி வெளியேற வேண்டும் என்பதை நாங்களும் படித்திருக்கிறோம். அதை நீங்களும் மறந்துவிட வேண்டாம். பிறகு இதோ இந்த இடம்... இங்கு எனக்குக் காவலுக்கு இருப்பவர்கள் வயதான தாத்தாவும் அவருடைய பேத்தி மட்டுமே” என்று கூறியவள் அவளுடைய உடமைகள் உள்ள பையிலிருந்து ஒன்றைத் தேடி எடுத்தவள், அதை அவன் முன் காட்டி “இது என்னனு தெரியுதா? தூக்க மாத்திரை. இதில் பாதியை அவர்கள் இரண்டு பேருக்கும் கொடுத்துட்டு நீங்க இங்கிருந்தா உங்களுக்கும் கொடுத்துட்டுப் பிறகு இங்கிருந்து நான் தப்பிச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் எனக்கு? இங்க எனக்குக் காவலுக்கு ஒரு நாயைக் கூட நீங்க வளர்க்கவில்லையே? அது என்னைப் பிடித்துக் கடிக்குமோ என்று நான் பயப்பட...

ஆனா இதையெல்லாம் நான் செய்யவில்லை செய்யவும் மாட்டேன். அப்படி நீங்க சொல்ற மாதிரி உங்களை ஏமாற்றணும்னு நினைத்திருந்தா இதையெல்லாம் செய்திருப்பேன். நான் அப்படி நினைக்கல. உங்க பணத்தக் கொடுத்துட்டுத்தான் போகணும்னு இன்றுவரை நினைக்கிறேன். இதோ இப்போகூட முன்னப் பின்னத் தெரியாத உங்கள நம்பி இவ்வளவு தூரம் வந்திருக்கேன். அதிலிருந்தே உங்களுக்குத் தெரியவேண்டாம்” என்று முதலில் கோபத்தில் ஆரம்பித்தவள் இறுதியில் தன்மையாகவே கேள்வி கேட்டவள்,

“பிறகு இதெல்லாம் எதற்குனு தான கேட்குறீங்க? என்று தன் கையிலிருந்த தூக்க மாத்திரையைக் காட்டிக் கேட்டவள் அவனிடம் பதிலை எதிர்பாராமலே, “ஓர் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை வந்தால் அதிலிருந்து தப்பிக்க என்னவெல்லாம் வழி இருக்கிறது என்று சிந்திக்குமாம் அவளின் மூளை. அப்படிப்பட்ட மூளைக்கு முன் இப்போதிருக்கும் உங்கள் கணிணிகளே தோற்றுப் போகும்” என்றால் கர்வத்தோடு.

அவள் ஆரம்பித்தது முதல் இறுதி வரை பேசியதைக் கேட்டுக்கொண்டு வந்த தேவ்வுக்கோ கோபத்திற்குப் பதில் மனதில் சந்தோஷமே பீறிட்டது. ‘என் முன்னால் என் தாத்தாவே நின்று பேச மாட்டார். ஆனா இந்தக் கோழிக்குஞ்சு என் எதிரில் நின்னு என்னையே கேள்வி கேட்குது. அதையும் மடையன் மாதிரி ரசிச்சிட்டு இருக்கேனே, என்னாச்சு எனக்கு? ஏதாவது புது வித வியாதியா இருக்குமோ...’ என்று மனதில் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.

இதை எதையும் வெளியில் காண்பிக்காமல் அவளிடம் கோப முகத்துடனே ”பேசி முடிச்சிட்டியா? இன்னும் ஏதாவது பாக்கியிருக்கா? என்னமோ நான் மட்டும் தான் உன்னையும் உன் தாத்தாவையும் ஃபிராடுனு சொன்ன மாதிரி குதிக்கற. இங்க ஊரே சொல்லுது உன் தாத்தா ஃபிராடுனு. நாளைக்கு இந்த உலகமே சொல்லப் போகுது. அப்ப என்ன செய்யப்போற?” என்று நக்கலடிக்க,

இப்ப என்ன சொல்ல வர என்பதை போல்அவள் அவனைப் பார்க்க

“முதல்ல இதை வாங்கிப் படிச்சிப் பாரு பிறகு தெரியும் உனக்கு” என்று தேவ் சில காகிதங்களை நீட்ட…

அவன் சொன்னதற்காக அதை வாங்கிப் படித்தவள் முதலில் அதில் உள்ளதை நம்பவேயில்லை. நம்பாத தன்மையுடன் “இது என் தாத்தாயில்லை, வேற யாரோ. இருக்காது நிச்சயம் அவர் இப்படி செய்து இருக்க மாட்டார்“ என்றாள் ஆவேசமாக.

அவனோ நிதானமாக “சத்தியமூர்த்தி தானே உன் தாத்தா பெயர்? பாண்டிச்சேரி தானே உங்க ஊர்? இவர் தானே உன் தாத்தா” என்று தன் பிரீஃப்கேசிலிருந்து சிலப் புகைப்படங்களை எடுத்துக் காட்டியவன்“இன்னும் உனக்கு சந்தேகம் தீரலனா அந்தப் பத்திரத்தில் இருப்பது உங்க வீட்டு அட்ரஸ்தானானு நீயே பாரு. உன் தாத்தா கையெழுத்து உனக்குத் தெரியுமில்ல? அப்ப அதிலிருக்கும் கையெழுத்தையும் பாரு உனக்கே புரியும்”

அவன் காட்டிய அனைத்தும் பார்த்தவள் ‘ஆமாம் இவன் சொல்வது உண்மை தான், தாத்தா தான். ஆனால் இது எப்படி சாத்தியம்? இதை அவர் செய்திருக்க வாய்ப்பேயில்லையே. இதில் ஏதோ சூழ்ச்சியிருக்கு’ என்று தன் மனதளவில் அவள் பேசிக் கொண்டிருக்க அதில் இடை புகுந்தது தேவ்வின் குரல்.

“நாளைக்குக் காலையில் உன் தாத்தாவைக் கைது செய்யப் போறாங்க” என்றொரு அணு குண்டைத் தூக்கிப் போட
ஏற்கனவேஅந்தப் பத்திரத்தைப் படித்த அதிர்ச்சியிலிருந்து மீளாத மித்ராவுக்கு இதைக்கேட்டதும் தரையே நழுவுவது போலிருந்ததுதலைசுற்றியது. எனினும் மறுநொடி சுதாரித்தவள், “இதை என் தாத்தா செய்யவேயில்லைனு சொல்றேன். நீங்க என்னனா கைது வரை போறீங்க. ஒண்ணும் இல்லாதவங்கனு எங்ககிட்ட உங்க கெத்தக் காட்றீங்களா? இந்தப் பூச்சிக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்” என்றாள் அனல் பறக்கும் பார்வையுடன்.

இப்படி ஒரு பதிலை தேவ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனே ஓர் நொடி அவளின் பதிலைக் கேட்டு அசந்து தான் போனான். ‘ச்சே.. என்ன ஒரு தன்னம்பிக்கை, தைரியம், புத்திக்கூர்மை? உண்மையில் இவள் உருவத்திற்கும் குணத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. நான் ஊதினாலே பறந்துவிடும் காத்தாடிபோல் இருந்துகிட்டு எப்படியெல்லாம் சளைக்காமல் எனக்குப் பதில் கொடுக்கிறாள். உண்மையில் பாரதி கண்ட புதுமைப்பெண் நீதான் மித்ரா’ என்று உள்ளுக்குள் அவளைப் பாராட்டினான். ஆனால் அதைப் புதைத்துவிட்டு…
“மேடம் ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க ! இதை நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம். அப்புறம் என்ன சொன்ன? உன்னை சரியா கண்காணிக்கலையா? உன்னை நான் கண்காணிக்க ஆயிரம் கண்கள் வச்சிருக்கேன் மேடம். இந்த தாத்தாவையும் அவர் பேத்திய மட்டுமே உனக்குப் பாதுகாப்புக்கு வைக்க நான் என்ன கேனையினா? ஓகே அதை விடு இப்ப உன் தாத்தா விஷயத்துக்கு வருவோம்.”

இருக்கலாம், உன் தாத்தா இதையெல்லாம் செய்யாமலிருக்கலாம். ஆனால் சாட்சிகள் உன் தாத்தாவுக்கு எதிராயிருக்கு. ஸோ கைது செய்வது உறுதி. ஆனால் என்னால் இதைத் தடுக்க முடியும். ஆனா அதற்கு நீ நான் சொல்ற படி கேட்க வேண்டும். சொல்றதுக்கு நான் ரெடி கேட்கறதுக்கு நீ ரெடியா...” என்று நிதானமாகக் கூறி முடித்து மித்ராவைப் பார்த்து ஒரு வில்லத்தனமானப் புன்னகையை வீசினான் தேவ்.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN