உன்னுள் என்னைக் காண்கிறேன் 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 7

மூன்று நாட்களுக்கு முன்பு அன்று மித்ராவை மருத்துவமனையில் சந்தித்துப் பேசிய பிறகு விஷ்வாவைப் பார்த்து அவள் உடல் நிலையைப் பற்றி ஒரு முறைக்கு இருமுறையாக கேட்டுத் தெரிந்து கொண்டு அவள் பூரணமாகக் குணமடைந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்தினப் பிறகே அங்கிருந்து சென்றான் தேவ்.

தன்னுடைய தொழில் வேலைகளுக்கு இடையில் மறுபடியும் அன்று மாலையே அவளை வந்து சந்தித்த தேவ் “கிளம்பு” என்றான். ஸோஃபாவில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்த மித்ரா முதலில் அவன் வந்ததை உணரவேயில்லை. திடீர் என்று கேட்ட அவன் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவன் சொன்னதைக் கேட்கவே இல்லை.

“------“ இவள் என்ன என்று புரியாமல் முழிக்க,

“கிளம்பு” என்றான் தேவ் மறுபடியும்.

அவள் எங்கே ஏன் எதற்கு என்று யோசித்து அசையாமலிருக்கவே “அட... உன்கிட்ட தான் சொல்றேன் கிளம்பு” என்றான் அதட்டலாக.

அதில் அவளுக்குக் கோபம் வர “கிளம்பு கிளம்புனா எங்க கிளம்ப? எங்கனு சொன்னா தானே கிளம்ப முடியும்” என்றாள் அவளும் அதட்டலாக.

“அதான் காலையிலேயே சொன்னனே நீ என் கண்காணிப்பில் இருக்கனும்னு. ஸோ உன்ன வேற இடத்துக்கு மாற்றனும்” என்றான் இப்போது அவசரக்குரலில்.

“இதை நர்ஸ் கிட்ட சொல்லியிருந்தா நீங்க சொன்ன ரூமுக்கு அவங்க என்ன மாற்றி இருப்பாங்க. இதைச் சொல்லவா நீங்க வந்தீங்க? என்று அவள் கேலி செய்ய.

தேவ்வுக்கு இப்போ ஒரு தொழில் முறை மீடிங்குடன் விருந்தும் இருந்தது. அதற்கு இப்போது அவன் சென்றால் திரும்பி வர இரவு பதினொன்று ஆகும். அவன் சென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் மித்ராவை இங்கிருந்து மாற்றிவிட்டு அவன் அங்கு செல்லவிருந்தான். அந்த அவசரத்தில் இங்கு வந்தால் இவள் என்ன இப்படி செய்கிறாள் என்று கோபத்தில் இருந்த தேவ் தன்னை நிலைபடுத்திக் கொள்ள ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன் இடது கையால் தன் தலைகோதிக் கொண்டே நிதானமாக,

“நான் சொன்னது, நீ என் கண்காணிப்பில் நான் சொல்றயிடத்துல இருக்கனும்னு. இப்படி இதே ஆஸ்பிடலில் வேறு ஒரு அறையிலில்ல! எனக்குப் பலத் தொழில்கள் இருக்கு. அதெல்லாம் கவனிக்கவே எனக்கு நேரமில்ல. இதுல இருபத்திநாலு மணி நேரமும் என்னால் இங்கேயிருந்து உன்னை கண்காணிக்க முடியாது. என்ன புரிஞ்சிதா கிளம்பு” என்றான் அதிகாரமாக.

“என்ன அதிகாரம்? முன்னாடி இவன் சொன்னதுக்கெல்லாம் சரினு நாய்குட்டி மாதிரி தலையாட்டினது தப்பாப் போச்சு.”

“நான் உங்களுக்கு சரினு சொன்னது நீங்க சொல்ற இடத்துக்கெல்லாம் வந்து தங்கயில்ல. இதே ஆஸ்பிடலில் சாதாரண அறையில் தங்கதான்” என்றாள் இவளும் அதிகாரமாக.

“ஏய்! எனக்கு நிறைய வேலையிருக்கு. அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு இங்கு வந்திருக்கேன். ஸோ நேரம் கடத்தாம கிளம்பு”

‘என்னது ஏய்யா? எவ்வளவு திமிர் இவனுக்கு? இவன சும்மா விடக்கூடாது. வந்ததிலியிருந்து கிளம்பு கிளம்பு என்று குதிக்கறான். இவன...’ என்று மனதுக்குள் கருவியவள்…

“ஹலோ மிஸ்டர் நீங்க என்ன லூசா? உங்க மனசுல என்ன நினைச்சிகிட்டுருக்கிங்க? முன்னப்பின்னத் தெரியாதப் பொண்ணுகிட்ட வந்து என்னமோ உங்க வீட்டுப் பொண்ணு மாதிரி உரிமையா கிளம்பு கிளம்புனு குதிக்கறீங்க” என்று இவள் சூடாகக் கேட்க, அவள் கேட்ட பிறகே தான் செய்த தவறு புரிந்தது தேவ்வுக்கு.

‘ஆமாம் என்ன மடத்தனம் இது? எந்த உரிமையில் நாம் அவளைக் கிளம்பச்சொல்றோம்’ என்று ஒரு நிமிடம் தன்னிலை விளக்கம் கேட்டுக் கொண்டவன் பின் அடுத்த நிமிடமே,

“அப்ப நான் சொன்னது தான் சரி. எனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்காம என்னை ஏமாத்திட்டு ஓடப்பார்க்கற அப்படித்தானே...”

“உங்க பணத்தைக் கொடுக்காம நான் எங்கேயும் ஓடிடமாட்டேன். அதற்காக நீங்க சொல்ற இடத்துக்குயெல்லாம் வரமுடியாது” என்றாள் நிதானமாக.

“ஏன் என்னைப் பார்த்தால் பயமா? உன்னை ஏதாவது செய்துடுவேனு?” கோணல் சிரிப்புடன் அவன் கேட்க….

‘ச்சே..என்ன பேச்சு பேசறான் இவன்' முகம் சற்றே சூடேறக் கோபத்தில் குரல் உயர்த்தி, “ஆமாம் என்மேல் எப்படி உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ அதே மாதிரி உங்க மேலையும் எனக்கு நம்பிக்கையில்லை” என்றாள் அவனுக்குப் பதிலாக அவன் சொன்ன அதே கேலித் தோரணையிலே.

“அப்படினா...” கண்ணில் கூர்மையுடன் அவன் கேட்க

‘மாட்டினியா லம்பா என்னை என்ன எல்லாம் பேசின? உனக்குயிருக்குடி’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டே “உங்க கண்காணிப்பில் வைக்கறனு சொல்லி கூட்டிட்டுப்போய்ட்டு கடைசியில் யார் கிட்டனா என்னை வித்துட்டீங்கனா?...” என்று கூலாக இவள் கேட்க….

“ஏய் என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட...”என்று சிங்கத்தின் கர்ஜனையோடு கையை ஓங்கிக் கொண்டே அவளை நெருங்கினான் தேவ். கண்களில் தெரிந்த கோபத்தின் சிவப்பையும் முகத்தில் தெரிந்த ரௌவுத்திரத்தையும் பார்த்த மித்ரா, ‘ஐய்யோ இவன் நிஜமாகவே நம்பல அடிச்சிடுவானோ...’ என்று உள்ளுக்குள் நடுக்கத்துடன் அமர்ந்திருந்த நேரத்தில்...

உள்ளே நுழைந்த விஷ்வா ஓரே எட்டில் தேவ்வை நெருங்கி, “டேய் தேவ் என்னடா செய்யப் போற” என்று ஓங்கிய அவன் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுக்க,

“என்ன விடுடா விடுடா... என்ன வார்த்தை சொல்லிட்டாடா இவ என்னப் பார்த்து! இவள…” மீண்டும் கர்ஜித்தான் தேவ்.

‘ச்சே...தரம் தாழ்ந்து இப்படி ஓர் வார்த்தை சொன்னோமே’ என்று மனதால் மித்ரா தன்னைத் தானே அருவருத்துக் கொண்டிருந்த நேரம் விஷ்வாவின் குரல் ஓங்கி ஒலித்தது.

“டேய்! நான் தான் வெய்ட் பண்ணு வர்றேனு சொன்னேனில்ல? ஒரு கேஸ் பார்த்துட்டு வர்றதுக் குள்ள உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்” என்று கேட்டு அவனை அமைதிப்படுத்த முயன்றான் விஷ்வா.

அப்போதும் அவன் கோபம் தணியாமலிருக்க, “தேவ் நான் சொல்லுறதக் கேளு. இப்போ மித்ராவோட உதவி நமக்கு தேவை. ஸோ உன் கோபத்தால் அதைக் கெடுத்துக்காத” என்று அவன் காதில் முணுமுணுக்க

விஷ்வாவின் பிடியிலிருந்த தன் கையை விலக்கிக் கொண்டு இடது கையால் தலையைக் கோதிக்கொண்டே மித்ராவைப் பார்த்தவன், “இங்க பார் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம்! அதற்குள்ள சீக்கிரம் ரெடி ஆகிடு” என்ற கட்டளையுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான் தேவ்.

அவன் சென்ற பின் விஷ்வா, “சாரி மித்ரா அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கறேன்” என்று தணிந்துபோக

“ம்ம்ம்” என்று தலையசைத்தாள் மித்ரா.
“நானே உங்ககிட்ட பேசனும்னு நினைச்சிட்டிருந்தேன்” என்று சொல்லிக் கொண்டே மித்ராவின் எதிரில் வந்து அமர

“சொல்லுங்க டாக்டர் என்ன பேசனும்.”

“அது வந்து, நீங்க முழுசா குணம் ஆகிட்டீங்க. ஸோ நோ பிராப்ளம். ஆனா, இன்னும் நீங்க உங்க பில்லை செட்டில் பண்ணல”

அவள் ஏதோ சொல்ல வருவதற்குள் கை உயர்த்தி அவளைத் தடுத்தவன் “எனக்குத் தெரியும் நீங்க பே பண்ணிடுவீங்கனு. அப்படிப் பே பண்றவரை நீங்க இங்க இருக்க இருக்க பில் அமௌண்ட் தான் அதிகமாகும். அதுவுமில்லாம இந்த ஆஸ்பிடலுக்கென்று சில ரூல்ஸ்இருக்கு. அதையெல்லாம் தாண்டி தான் நான் உங்கள இங்க சேர்த்தேன்.

“இப்ப நீங்க இங்கயிருக்கறதுக்கு நாங்க மற்ற பாட்னர்ஸ்க்கு பதில் சொல்லனும். அதனால நீங்க இங்கயிருந்து போங்கனு வெளிய துரத்தல. நீங்க பணம் கொடுக்கற வரை தேவ் சொல்ற இடத்துலயிருங்கனு தான் சொல்றேன்.”

“நீங்க அங்க போகறதால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் தொந்தரவும் வராது. இன்னும் சொல்லப் போனா உங்களுக்குப் பாதுகாப்பும் கூட. என்னை நம்பிப் போங்க. தி இஸ் மை விசிட்டிங் கார்டு. நீங்க எப்போ வேணா எந்த நேரத்திலும் கால் பண்ணலாம். தி இஸ் மை பெர்சனல் நம்பர்” என்று அதை மட்டும் குறித்துக் கொடுத்துத்தான் பேச வேண்டிய அனைத்தையும் பேசி முடித்தான் விஷ்வா. எங்க பத்து நிமிடம் என்று சொன்ன தேவ் மறுபடியும் வந்துவிடுவானா என்ற பயம் அவனுக்கு.

“சரி டாக்டர் அதற்கு நான் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக்கிறனே ஏன் அவர் வீடு….” என்று மித்ரா இழுக்க.

“இல்ல இல்ல... நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. அவன் வீட்டுக்குயில்ல அவனுடைய தாத்தா காலத்து வீடு ஒன்றுயிருக்கு. அங்க தான் போறிங்க. அதுவுமில்லாமல் நீங்க அவனுடைய மேற்பார்வையில் தான் ஹாஸ்டலில் தங்க வேண்டியிருக்கும். அங்க நீங்க நிறைய பேருக்கு பதில் சொல்ல வேண்டிவரும். ப்ளீஸ்! நீங்க என்னை நம்பிப் போங்க” என்று கெஞ்ச.

கோபம் கொண்டு சண்டை போடுபவரிடம் எதிர்த்துப் பேசலாம். ப்ளீஸ் என்று கெஞ்சுபவரிடம் என்ன பேச’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், வேண்டா வெறுப்புடன் ”சரி டாக்டர் நான் கிளம்புகிறேன்” என்றாள் அரைகுறை மனதுடன்.

விஷ்வா சொன்ன மாதிரியே தேவ்வின் தாத்தா அந்தக் காலத்திலேயே அவருடைய உறவினர்கள் தங்குவதற்காகக்கட்டிய வீட்டில் மித்ராவை தங்க வைத்தான் தேவ். அதுவோ அவனுடைய மஹாபலிபுரம் பண்ணை வீட்டிற்கு மிக அருகே உள்ள கடம்பாடி கிராமம்.

அப்போதுதானே அவனால் மூன்று வேளையும் அவளைப் பார்க்கமுடியும்!..

போகும் வழி நெடுகிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான வயல்வெளிகளைக் கண்டு மித்ரா உண்மையில் மனம் குளிர்ந்தாள். ‘ச்சே.. இந்த லம்பா மட்டுமில்லாம வேற யாராவது இருந்திருந்தா இந்நேரம் காரை விட்டுக் கீழே இறங்கி குதித்து ஓடி பம்பு செட்டில் குளித்து குத்தாட்டம் போட்ட பிறகு வீட்டுக்குப் போயிருக்கலாம். ஆனா அது தான் முடியாதே’ என்று நினைத்தவள் ஏக்கப் பெருமூச்சுவிட.

இப்போது ஏன் இந்தப் பெருமூச்சு என்பது போல் தேவ் அவளைத் திரும்பிப் பார்க்க, அதற்கும் ‘டேய் முன்னாடி பார்த்து ஓட்டு லம்பா’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள். ஆனாலும் அவள் மனதில் கற்பனை செய்து மகிழ்ந்ததை இங்கிருந்து கிளம்பும் முன் நிறைவேற்ற யோசித்து, ‘ஆமாம் மித்ரா பிளான் பண்ணு எப்படியாச்சும் பிளான் பண்ணி எஸ்கேப் ஆகி என்ஜாய் பண்ணனும்’ என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் பேசிக்கொள்ள.

காரை ஓட்டினாலும் தன் கண்கள் இரண்டையும் மித்ரா மேல் வைத்திருந்த தேவ் ஒரு கேலிப்புன்னகையுடன் “சரிதான்! உனக்கு மோனோ ஆக்டிங் தெரியும்போல! அதான் அடிக்கடி நீயே தனியா டயலாக் பேசிக்கிற” என்றான்.

கடுப்பான மித்ரா சதா ஸ்டைலில் கையை உயர்த்தி “போயா போ” என்று சொல்ல,

உள்ளுக்குள் அதை ரசித்துச் சிரித்த தேவ் “ஏய்... ஓகே ஓகே கூல்” என்று சமாதானப்படுத்தியவன் கடைசியாக ஒரு வீட்டின் முன்பு காரை நிறுத்த, அந்தக் காலத்திற்கே உரிய பெரிய திண்ணை மற்றும் தூண்களோடு அழகாகயிருந்தது அந்த வீடு. அனைத்தும் பர்மா தேக்கு. பளபளப்பே அதன் பராமரிப்பை பறைசாற்றியது. பார்த்த உடனேயே அந்த வீட்டை மிகவும் பிடித்து விட்டது மித்ராவுக்கு.

மிகுந்த ஆர்வத்துடன் அவனுக்கு முன்பு காரிலிருந்து இறங்கி வேக வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள். நடுவில் விசாலமான தாழ்வாரம் வைத்து மரத்தாலான படிகளுடன் கட்டப்பட்டு இருந்தது. உள்ளேயும் நிறைய தூண்கள் இருந்தன. அதைப் பிடித்துக்கொண்டு சுற்றி வந்தாள். சிறுகுழந்தையின் ஆர்ப்பாட்டம் அவளிடம். அவளையே ரசித்து கொண்டு நின்றிருந்தான் தேவ்.

அங்குப் பணிபுரியும் பெண் “ஐயா” என்று அழைக்கவும் சூழ்நிலை உணர்ந்து மித்ராவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் அவளையும் வீட்டையும் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிச் சென்றான் தேவ்.

மறுநாள் மதியம் தேவ் அவளைப் பார்க்க வர, அவளோ தோட்டத்தில் வேப்பமரத்தின் நிழலின் கீழ் கட்டப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்திருப்பதை அறிந்து அங்கு வந்தவனோ, தான் வந்ததுக்கு அறிகுறியாக “க்கும்“ என்று தொண்டையைச் செருமினான். அந்த சத்தம் அவளுக்கும் கேட்டதும் நான் நிம்மதியா இருந்தா இந்த லம்பாவுக்குப் பிடிக்காதே? அதைக் கெடுக்கத் தான் என்னைத் தேடி இங்கேயும் வந்துட்டான். இப்ப என்ன அதிகாரம் பண்ண போறானோ’ என்று நினைத்தவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் அமர்ந்திருக்க.

அப்போதும் அவளைப் பெயர் சொல்லி அழைக்காமல் மீண்டும் “க்கும்” எனவும் உள்ளுக்குள் கடுப்பானவள், ‘ஏன் இந்த லம்பா வாய்திறந்து கூப்பிடாதாமா? நீ கூப்பிடும் வரை நானும் திரும்ப மாட்டேன்’ என்ற பிடிவாதத்துடன் அவன் வந்ததை அறியாததுபோல் மித்ரா அமர்ந்திருக்க. இறுதியில் அவனே, “உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்“ என்று ஆரம்பித்து அவள் அருகிலிருந்த இன்னொரு மரபெஞ்சில் அமர்ந்தான்.

‘இப்ப வழிக்கு வந்தியா லம்பா’ என்று மனதில் நினைத்துக் கொண்டே “சொல்லுங்க என்ன பேசனும்” மித்ரா.

“நீ சொன்ன அட்ரஸ்ஸில் போய்ப் பார்த்ததில் உன் தாத்தா அங்கில்ல. அங்கிருந்தவர்களும் உன்னைத் தெரியும் என்று சொல்லல. ஸோ நீ ஒழுங்கான அட்ரஸ் தான் கொடுத்தியா இல்ல என்னை ஏமாற்றனும்னு பொய்யான அட்ரஸ் கொடுத்தியா” என்று தேவ் கேட்க.

‘இவனுக்கு என்ன தான் பிரச்சினை? ஆரம்பத்திலிருந்தே இவன் ஏன் என்னை நம்ப மாட்டேங்கிறான்? இவனுக்கு ஏன் என் மேல் நம்பிக்கை வரமாட்டுது’ என்று மனதால் நொந்துப் போனவள்

“ஏன் சார்? ஏன் உங்களுக்கு என்மேல் நம்பிக்கை வரமாட்டுது? நான் அப்படி என்ன துரோகம் செய்தேன் உங்களுக்கு? இப்போது தான் நாம் இருவரும் முதன் முதலில் பார்க்கறோம். ஆனாநாம் முதலிலிருந்தே பழகின மாதிரியும் அதில் நான் செய்யக் கூடாத நம்பிக்கைத் துரோகத்தைச் செய்த மாதிரியில்ல பேசறீங்க. உங்களுக்குப் பணம் தராமல் அப்படி எங்கேயும் நான் போகமாட்டன். நான் படிச்சிருக்கேன்.ஸோ வேலைக்குப் போய் சம்பாதித்து உங்க கடனை அடைச்சிடுவன்” மித்ரா ரோஷமாகச் சொல்ல….

“அதாவது என் கிட்டயே வேலைப் பார்த்து என் கடனை அடைக்கிறேனு சொல்ற. அப்படித் தானே...“என்று கண்களில் ஒளியுடன் தேவ் கேட்க, திடுக்களுடன் நிமிர்ந்தவள் ‘இந்த லம்பாவுக்கு இப்படி வேற ஒரு நினைப்பிருக்கா’ என்று மனதில் கருவிக்கொண்டே, “அதற்கு வாய்ப்பேயில்லை. நான் வெளியில் வேலைக்குப் போவேனு சொன்னனே தவிர உங்ககிட்ட வேலை செய்வனு சொல்லல” என்றாள் மிடுக்காக. “அப்படிக் கொடுக்க முடியலனா...” என்று தேவ் ஆரம்பிக்கும் போதே அவனை மேலே பேச விடாமல் கை உயர்த்தித் தடுத்தவள்,

“இப்ப என்ன உங்களுக்குப் பணம் தானே வேண்டும்? சரி நான் வேறு ஒரு நம்பர் தறேன். அவங்க என் அக்கா தான். அவங்ககிட்ட பேசுங்க உங்களுக்கு ஆறுலட்சம் என்ன பத்துலட்சம் கூட தருவாங்க. வேணும்னா என்னையும் கூட்டிட்டிப் போங்க கூட நீங்களும் வாங்க. அந்த நிமிடமே உங்களுக்குப் பணம் வாங்கித்தர்றேன். அவங்க கொஞ்சம் வசதியானவங்க அவங்களால கொடுக்க முடியும்” என்று பெருமை பொங்கக் கூறினாள் மித்ரா.

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டு வந்த தேவ்வின் முகத்தில் எந்த மாற்றமுமில்லை என்றாலும் கண்களில் அதிர்ச்சியுடன் ‘அப்படி ஓர் ஆள் உனக்குயிருக்காங்களா? இதுதப்பாச்சே அப்படியாருமே இருக்கக்கூடாதே...’ என்று தன் மனதில் குறித்துக்கொண்டவன்,

“ஸோ நீ என் கிட்ட வேலை செய்ய மாட்ட…”

“நோ நெவர்... நான் பணம் தரலனா தான வேலை செய்யனும்? நான் தான் தந்துடுவனே. அப்படியே நீங்க சொல்றபடி தரமுடியாமப் போனாவேணா உங்க கிட்ட வேலை செய்து கடனை அடைச்சிடறேன்” ‘அப்படி தான் நடக்காதே என்று நினைத்துக் கொண்டே‘ கூறினாள் மித்ரா.

“ஆனால் நீ என்கிட்ட தான் காலம் முழுக்க வேலை செய்யப் போற” என்றான் புதிராக. அப்படி என்ன வெச்சு என்னடா செய்யப் போற என்பது போல் இவள் தேவ்வைப் பார்த்தாள்.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN