உன்னுள் என்னைக் காண்கிறேன் 12

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 12
என்ன தான் மித்ரா காலை எழுந்ததிலிருந்து மனம் முழுக்க குழப்பத்திலிருந்தாலும் அவள் தாத்தா வீட்டுக்குப் போன பிறகு அதிர்ச்சியோடு சேர்த்துக் குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. இதில் இறுதியாகக் கிளம்பும் முன் அவர் தாத்தா அவளிடம் பேசிய வார்த்தைகளைக் கேட்ட பிறகு இப்போது குற்ற உணர்ச்சியும் அதிகமாகி விட்டது.

‘அவர் என்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்? அந்த நம்பிக்கையை இப்படிக் கெடுத்துக்கிட்டோமே? அவர் சொல்வது போல் புத்தியில்லாமல் சிறு பிள்ளைத் தனமாக யாருடைய வழி நடத்தலும் இல்லாமல் யாரிடமும் இதைப் பற்றி தெரிவிக்காமல் நாம் இப்படி நடந்து கொள்வது சரியா? நான் இப்படி நடிக்க சம்மதித்தது தப்போ? நான் ஒரு மக்கு! மட்டி! இதையெல்லாம் நான் நடிக்க சம்மதிப்பதற்கு முன் யோசித்து இருக்கணும். இப்போ யோசித்து என்ன பயன்?’

அவள் மனசாட்சி அவளிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவளால் பதில் சொல்லவே முடியவில்லை. இப்போது அவள் மனமோ அவள் தாய் தந்தையற்காக மிகவும் ஏங்கியது.

அதிலும்,‘நீ செய்தது மிகப் பெரிய தவறு . எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத ஒரு செயலை செய்துட்டு வந்திருக்கியே? என்று கை வலிக்க நாளு அடி அடிக்கவோ அல்லது உன்னை வளர்த்த தாத்தா சாகாமலிருக்கவும் அவர் மேல் வைத்த பாசத்தால் தானடா இப்படியெல்லாம் செய்த? தப்பு தான்! நீ செய்தது தப்பு தான்! எல்லாம் செய்து முடிந்தபிறகு உன்னை ஏன்டா நீயே வருத்திக்கிற? உனக்கு நான் இருக்கேன்டா மித்துமா!’ என்று கூறி தன்னை மடியில் படுக்க வைத்து என் முகத்தை அவர் வயிற்றில் அழுத்தி என் தலைக்கோதி ஆறுதல் சொல்ல எனக்கு ஒரு தாய் இல்லையே? என்று அவள் மனது மிகவும் ஏங்கித் தவித்தது.

ஊமை நெஞ்சின் வார்த்தைகள் மேடை ஏறாது என்பது போல் என்ன தான் அவள் அரண்டு புரண்டு கதறி அழுதாலும் அவளைத் தேற்ற இவ்வுலகில் யாருமேயில்லை என்பதை அறிந்து கொண்டவளின் கண்ணில் அவளையும் மீறி கண்ணீர் பெருக அதை வெளிவராமல் தன்னுள்ளேயே புதைத்துக் கண்களை இருக்க மூடிக் கொண்டவள் அந்தக் கார் பயணம்முழுக்க அப்படியேயிருந்தாள்.

முதன் முதலில் மித்ராவை எங்குத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு வந்தானோ அதே கடற்கரையை ஒட்டியிருந்த அவன் பண்ணை வீட்டிற்கே இப்போதும் அவளை அழைத்து வந்திருந்தான் தேவ். கண் மூடியிருந்தவள் வீடு வந்து விட்டதாக அவன் கூற மவுனமாக இறங்கினாள்.

மனதில் பல போராட்டங்களுடன் சுற்றி இருப்பது எதையும் உணரும் நிலையிலில்லாமல் இறங்கிய அவளை “அம்மா” என்ற அழைப்புடன் அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள் தேவ்வின் மகள் ருத்ரா. சகஜ நிலையில் இறங்கிய மித்ரா இப்படி ஒரு குழந்தை ஓடிவந்து தன்னை அணைப்பாள் என்று அறியாததால் நிலை தடுமாறி விழப் போனவள் பின் தன்னைச் சுதாரித்துக் கார் கதவின் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டு நிற்க…

அதற்குள் ருத்ரா “ஐய்!…. ஜெ..லி..யே!….. ஜெ..லி..யே!…. அம்மு வஞ்சி..ட்டா..ங்க! ஐய்!…ஜெலி..அம்மா வஞ்சி…ட்டா..ங்க! அம்மா வஞ்சி..ட்டா..ங்க குட்ச்சிமா! (குட்டிமா)…. அம்மா வஞ்சி..ட்டா..ங்க பாப்ப்பு!….. அம்மா என் அம்மா வஞ்சி..ட்டா..ங்க ஜெ..லி..யே… ஜெ..லி..யே…” என்று ஆர்ப்பரித்தவள் மித்ராவிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே “அம்ம்மு தூ..க்..கி” என்றாள். அப்போதும் அந்தச் சின்னவள் முகம் பார்க்காது மித்ரா அப்படியே நிற்க தன் உதடுகளைப் பிதுக்கிக் கண்களைச் சுருக்கி அழும் குரலில் மீண்டும் அவளைத் தூக்கச் சொன்னாள் ருத்ரா. ஏதோ தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்த மித்ரா அப்போது தான் அவள் முகத்தைக் குனிந்து உற்றுப்பார்க்க, அந்த வானத்து நிலவே இந்த மண்ணுலகில் இறங்கி வந்தது போல் குளுமையுடன் கண்ணைக் கவரும் அழகுடன் ஒரு குட்டி தேவதையாகவே மித்ராவின் கண்களுக்குத் தெரிந்தாள் அவள்.

பிறகு அவள் அம்மா என்றழைத்தது கருத்தில் பட ‘நான் அம்மாவா? இவனுக்கு மனைவி இருக்க என்னை ஏன் நடிக்கச் சொன்னான்? ஐயோ அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டோமோ? இவன் நல்லவனில்லையோ தாத்தா சொல்வது போல் எனக்குப் புத்தியில்லையோ?’ இப்படிப் பலவாறு யோசித்தவளை மேலே யோசிக்க விடாமல் தடை செய்தது ருத்ராவின் குரல்.

முன்பு உதடு பிதுங்கிச் சொன்னவள் இப்போது கண்களிலிருந்து கண்ணீர் வழிய அழுதுகொண்டே “அம்..ம்..மா தூக்..க்..கி அம்..ம்..மா தூக்..க்..கி அம்..ம்..மா அம்..ம்..மா அம்..ம்..மா அம்..ம்..மா” என்றாள் ருத்ரா. அதைக் கேட்டு மித்ராவோ ‘எனக்கே ஒரு அம்மா வேண்டும் என்ற மனநிலையில் நானிருக்க உனக்கு நான் அம்மாவா?’ என்று நினைத்தவள் அப்போதும் குழந்தையைத் தொடாமல் தூக்காமல் இருக்க


இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவ் மகளின் அழுகை அதிகமாகியும் அதை உணரும் நிலையில் மித்ராயில்லை என்பதை அறிந்தவன் “குட்டிமா அம்மா ஆஸ்பிட்டல்லயிருந்து இப்போ தானே வந்தாங்க. இப்படி எல்லாம் தொந்தரவு செய்யக்கூடாதுனு சொன்னேனில்லையா? குட்டி வா அப்பு உன்ன உய்ய தூக்குறேன்” என்று மகளை ஆசைக் காட்டி சமாதானப்படுத்தி அவளைத் தன்புறம் இழுக்க முற்பட வர மாட்டேன் என்பது போல் இன்னும் அழுத்தமாக மித்ராவிடம் ஒட்டிக் கொள்ள…

அதில் சற்றுப் பொறுமை இழந்தவனாக தேவ் சற்று பலமாகயிழுக்க, அச்சமயத்தில் ருத்ராவின் மன நிலையை உணர்ந்த மித்ரா சிறிதும் யோசிக்காமல் அவன் கையைப் பட்டென்று வேகமாகத் தட்டி விட்டவள் குழந்தையைத் தூக்கி வாரிக் கட்டி அணைத்துக் கொள்ள ருத்ராவும் தன் இரு கைகளையும் மித்ராவின் கழுத்தில் மாலையாக இட்டுத் தன் முகத்தை அவள் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள்.

அவள் தட்டி விட்டதில் விக்கித்து சற்றுத் தூரப் போய் நின்று விட்டான் தேவ். உள்ளே வந்தவள் குழந்தையுடன் அங்கிருந்த ஸோஃபாவில் அமரப் போக உடனே தேவ், “அது ருத்ரா ரூம். நீ அங்க கொஞ்ச நேரம் இருந்துக்கோ” என்று கூறி ஒரு அறையைக் காட்ட மறு பேச்சின்றி அந்த அறையினுள் சென்றாள். மித்ராவின் மனதில் பல கேள்விகள். ‘இவள் தேவ்வின் குழந்தை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அப்போ தேவ்வின் மனைவி எங்கே? அவள் இருக்கும் போது என்னை ஏன் மனைவியாக நடிக்கச் சொல்லி அழைத்து வந்தான்? ஒருவேளை இப்போ அவள் இவனுடன் இல்லையோ? ஆனால் குழந்தை என்னை அம்மா என்று அழைக்கிறாளே? அப்போ இவன் தான் என் போட்டோவைக் காட்டி அம்மா என்று சொல்லிக் கொடுத்திருக்கணும்.

குழந்தை என்னை அணைத்து இருப்பதையும் அவள் பிடிக்கும் அடத்தையும் பார்த்தால் தாய்க்காக ரொம்ப ஏங்கினது போல் தெரிகிறதே? பிறந்ததில் இருந்தே இவள் தன் தாய் முகம் பார்க்கவில்லையா? அடச்சீ… என்னமா என்னை ஏமாற்றி இருக்கான்! அவனுக்குத் திருமணம் நடந்து ஏற்கனவே ஒரு மகள் இருப்பதை மறைத்து என்னவோ நல்லவன் போல் எனக்குத் திருமணம் என்ற வார்த்தையே வெறுத்துப் போச்சு. நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்றெல்லாம் சொல்லி வேஷம் போட்டு ஏமாற்றி, அவன் நினைத்ததை எல்லாம் என்னைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி முடித்துக் கொண்டானா? வேறெதுவும் வேண்டாம். அவனுக்குக் கல்யாணம் ஆகி இந்தக் குழந்தை இருப்பதையாவது சொல்லலாம் இல்ல? என்னைப் பத்தி அவன் என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்? இருக்கட்டும் அவனை நான் கேட்காமல் விடப்போறதில்ல’ என்று பலவாறு சிந்தித்தவளின் சிந்தனையைத் தடை செய்தது ருத்ராவின் குரல்.

“அம்ம்மா என்கு சுச்சு வருது” என்று சொல்ல,

தன் மடியில் அமர்த்தி அவளைத் தன் மார்போடு அணைத்துச் சிலையென அமர்ந்திருந்த மித்ரா, பின் அவளைத் தன்னிடமிருந்து விலக்கிக் கீழே இறக்கி விட ருத்ராவோ பாத்ரூமுக்குச் செல்லாமல் மித்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என்ன போகலையா?” என்று மித்ரா கேட்க “நீயும் வாம்மா” என்று அவள் கைப்பிடித்து இழுத்தது குழந்தை. நீ மட்டும் போ என்று விரட்டவோ இல்லை முகம் திருப்பவோ மித்ராவால் முடியவில்லை. நீ வந்துதான் ஆகவேண்டும் என்று அடம் பிடிக்காமல் நீயும் வாம்மா என்று ஏக்கத்துடன் அழைக்கும் குழந்தையிடம் எப்படி அவளால் மறுக்க முடியும்?.

ஓர் பெருமூச்சுடன் எழுந்து அவளை அழைத்துச் சென்று காத்திருந்து அவள் கால்களை நனைத்து விட்டுத் திரும்ப அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள் மித்ரா.

பழையபடி தன் மடியின் மேல் அமர்ந்த ருத்ராவை அவள் விலக்காமல் “பாப்பா பெயர் என்ன?” என்று அவளைக் கேட்க,

“ருத்திர பாப்பா” என்று தன் கண்களை உருட்டிக் கொண்டே தன் நெஞ்சின் மீது கை வைத்துச் சொன்னாள். உடனே அடுத்தக் கேள்வியாக “ஆமாம் நான் தான் உன் அம்மானு உனக்கு யார் சொன்னா?”

”அப்பு” என்று சிறிதும் யோசிக்காமல் உண்மையை ஒப்புவித்தது குழந்தை.
“ம்ம்ம்… அப்போ அவன் முன்பே எல்லாம் தெரிந்து பிளான் பண்ணி செய்திருக்கான்“ என்று மனதில் கருவிக் கொண்டாள் மித்ரா.

மித்ராவே வலிய வந்து பேசவே இப்போ ருத்ராவே அவளிடம் பேச ஆரம்பித்தாள். ஏன் இத்தனை நாள் பாப்பாவைப் பார்க்கவரலை, உடம்புக்கு என்ன ஆச்சு, பாப்பாக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும். இனிமே அவ அம்மா கூட மட்டும் தான் இருப்பா அம்மா கூட தான் ஸ்கூல் போவா என்று பல கேள்விகளையும் கேட்டுத் தன் ஆசைகளையும் அவளிடம் சொன்னாள் ருத்ரா.

மித்ராவை வீட்டில் விட்ட பிறகு தேவ் ஏதோ வேலை என்று வெளியில் சென்று விட அந்த விஷயத்தையே வள்ளி மூலம் தான் தெரிந்து கொண்டாள் அவள்.

“எவ்வளவு அலட்சியம்? எவ்வளவுதிமிர்? கூட்டி வந்து இங்கு தள்ளி விட்டுட்டு அவன் பாட்டுக்குப் போய்ட்டான்“ என்று குமுறினாள்.

வள்ளி வந்து எவ்வளவு அழைத்தும் ருத்ரா நகரவில்லை. மித்ராவை இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட விடவில்லை. அவளிடம் கெஞ்சிப் பேசியப் பிறகே சம்மதித்தாள். அப்போதும் அந்த பாத்ரூம் வாசலிலேயே காத்திருந்தாள். இரவு உணவுக்குச் செல்லாமல் அடம் பிடித்தவளை வேறு வழியில்லாமல் உணவை இங்கு கொண்டு வந்து வள்ளி ஊட்ட, மித்ரா மடியில் அமர்ந்து கொண்டே அதை வாங்கிக் கொண்டாள் ருத்ரா.

அப்படி இப்படி என்று பாடாய்ப்படுத்தியப்பின் ஓர்வழியாக அவள் தூங்கினப் பிறகு அவளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு நிமிரும் நேரம் “வாங்கம்மா உங்க ரூமைக் காட்டுறேன்” என்று வள்ளி அழைக்க சரி என்று சொல்லிப் படுக்கையைச் சரி செய்துவிட்டு அவள் வெளியில் வரும்நேரம்

வெளியே சென்றிருந்த தேவ் அப்போது தான் வந்திருந்தான். வந்தவன் நேரே தன் மகளைக் காண உள்ளே வர, அதே நேரம் மித்ராவும் வெளியே வர இருவரும் நேருக்கு நேர் ஒன்றாக மோதிக் கொள்ள வேண்டியது.தேவ் கொஞ்சம் நிதானித்து நின்று விட, இருவருக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைவாக இருந்தது. அதாவது இருவரில் யார் ஓர்அடி எடுத்து வைத்தாலும் அவர்கள் இருவருரின் உடல்களும் மோதிக் கொள்வது உறுதி.

அதனால் அப்படி நேராமல் இருக்கத் தன் கண்களை இறுக்க மூடித் தன்னை நிதானித்தவள் முடியாமல் கொஞ்சம் தடுமாற, அவள் விழாமல் இருக்கத் தன் இடது கையால் அவள் வலது தோளை இறுகப் பற்றினான் தேவ். தன்னை நிதானித்து நின்றப் பின் கண்களை அவள் திறக்க,“சாரி கொஞ்ச அவசர வேலை. அதான் சொல்லிக்காமல் கிளம்பிட்டேன்” என்றான். மித்ரா அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தான் சரியாக நின்ற பிறகும் அவன் கையை விலக்காமல் இருக்கவே ஓர் வெட்டும் பார்வையால் அவனைப் பார்த்துவிட்டு அவன் கையையும் தட்டி விட்டு வேகமாக வெளியே சென்றாள்.

அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து தன் தாத்தா வீட்டிலிருந்து அவள் கொண்டு வந்தப் பையிலிருந்து ஓர் சாதாரண சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு தேவ் காலையில் கொடுத்த நகைகளைக் கழற்றி வைக்கும் நேரம் கதவு தட்டப்பட்டது. இவள் சென்று திறக்க வள்ளி தான் நின்றிருந்தாள். “அம்மா உங்கள ஐயா சாப்பிடக் கூப்பிடறார்” என்றாள். “எனக்கு இப்பப்பசிக்கல. எனக்கு எதுவும் வேண்டாம்” என்று கூறி அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் பட்டென்று கதவையும் சாற்றிக் கொண்டாள் மித்ரா.

சிறிது நேரத்தில் மீண்டும் கதவுதட்டப்பட்டது. வள்ளியாகத் தான் இருக்கும் என்று நினைத்து சிறிது நேரம் திறக்காமல் இருந்தாள். ஆனால் இம்முறை தேவ்வே “மித்ரா நான் தான், கதவைத் திற” என்று பலமாகத் தட்டினான். அதன் பிறகே மித்ரா கதைவைத் திறந்து “எனக்குப்பசியில்லை….” என்றவளை முடிக்க விடாமல் கதவைத் தள்ளி திறந்து கொண்டு உள்ளே வந்து “இல்லை ருத்ரா” என்று ஆரம்பிக்க,

ஏற்கனவே அவன் மேல் கோபத்தில் இருந்தவள் அவன் மிகவும் உரிமையாக உள்ளே வரவும், “ஹலோ சார் போதும் நிறுத்துங்க. உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? நீ கையில வச்சி விளையாடுற பொம்மையா போய்டுச்சில்ல என் வாழ்க்கை? நமக்கு ஓர் அடிமை கிடைச்சிட்டா, அவள எப்படி வேணாலும் மிதிச்சிக் காயப்படுத்தலாம் என்ன வேணாலும் செய்யாலாம்னு நினைப்பு உனக்கு.

ஏன்னா என் வாழ்க்கையைப் பத்தி ஆதி முதல் அந்தம் வரை எல்லாமே உனக்கு தெரிஞ்சிருக்கு. நீ என் வாழ்க்கையில் எப்படி விளையாடினாலும் என்னை என்ன செய்தாலும் உன்னைத் தட்டிக் கேட்க என் அம்மாவோ அப்பாவோ இல்லை கூடப் பிறந்த சகோதரர்களோ யாரு மற்ற அநாதை தானே இவள்னு நினைப்பு.

என்னைப் பற்றியும் என் வாழ்க்கையைப் பற்றியும் உனக்கு இவ்வளவு தெரிஞ்சி இருக்குனா, அப்ப என் குடும்பத்துக்கு ஏதோ ஓர் வகையில் நீயும் உறவா? என் அம்மா வீட்டுச் சொந்தமா நீ? இல்ல உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் ஏதோ ஓர் வகையில் முன் விரோதமா? அதனால் என்னைப் பழி வாங்குறியா? இல்லனா நான் தான் விளையாட்டுத்தனமா என்றோ உன் மனச நோகடிச்சனா? அதனால் தான் என்னப் பழிவாங்குறியா? இல்லையே... எனக்குஅப்படி நடந்ததா ஞாபகமே இல்லையே. ஏன் இதற்கு முன் உன்முகத்தப் பார்த்ததாகக் கூட எனக்கு ஞாபகம் இல்லயே.ஆமாம் என்ன யோசிச்சும் விடை தான் இல்ல.

ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம். ஏதோ ஒரு வகையில் என்னைப் பழி வாங்க தான் நீ இதெல்லாம் செய்ற. அது மட்டும் நிச்சயம்” என்றவள் திடீர் என்று வெறி கொண்டவள் போல் அவனை நெருங்கி, அவன் அணிந்திருந்த டீ ஷர்ட்டின் காலரைக் கெட்டியாகப் பற்றியவள் “உண்மையச் சொல்லு, நீ… நீ… நீ… அந்த ஷியாம் அனுப்புன ஆள் தான? அவன் தான் என்ன நிம்மதியாவே இருக்க விட மாட்டன்னு என் வாழ்க்கையை அழிப்பனு சொன்னவன். அப்ப நீ அவன் ஆளா?” சொல்லு என்று சட்டையைப் பற்றி உளுக்கினாள் மித்ரா.

“இல்ல! இல்ல! இல்லவே இல்ல… என் குழந்தை மேல சத்தியமா உன்னை இதற்கு முன் எனக்குத் தெரியாது. முன்னப் பின்னக் கூட உன்னப் பார்த்தது இல்ல. இப்போது தான் உன்ன முதன் முதலா பார்க்கறன். உன் குடும்பத்தைப் பற்றியும் எனக்கு ஒண்ணுமே தெரியாது. நீ சொல்ற ஷ்யாம் யாருன்னு கூடத் தெரியாது. உன்னைப் பழி வாங்கனும்ற நோக்கம் எதுவும் என் கிட்ட இல்ல” என்றான் தெளிவாக சற்றும் பிசிறில்லா குரலில்.

அடப்பாவி உனக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறதை மறைச்சிப் பிளான் பண்ணி என்னைப் பத்தி தெரிஞ்சி வச்சிகிட்டு செய்யறதைப் பார்த்து நீ என்ன ஏதோ பழி வாங்கறனுல்ல நினைச்சேன். கடைசியில் பார்த்தா உன் சுயநலத்துக்காக கௌரவத்துக்காக உன் வாழ்க்கைக்காக உன் குழந்தைக்காக என் குடும்பத்தின் தேவையை அறிந்து எனக்கு யாருமில்லை என்பதையும் தெரிந்துகொண்டு உன் பணத்தை வைத்து என்னை விலைக்கு வாங்கிட்ட.

அவன் ஏதோ சொல்ல வரத் தன் கை உயர்த்தி “போதும் நிறுத்து” என்று தடுத்தவள் நீ இப்ப என்ன சொல்லவரனு எனக்குத் தெரியும். அதே பணத்துக்கு ஆசைப்பட்டு தான நீயும் நடிக்க ஒத்துக்கிட்டனு தான கேட்க வர? ஆமாம் அதுதான் நான் செய்த தப்பு. ஒருத்தர் வாழ்வு நல்லா இருக்கணும்னா அதற்காக என்ன வேனா செய்யலாம்னு நினைக்கிறவ நான். இன்று என் வாழ்க்கையே அழிஞ்சி முடிஞ்சி போய்டுச்சினு நான் நினைத்திருந்த நேரத்தில் என்னால் என் தாத்தா ஜெயிலுக்குப் போகாமல் தடுக்க முடியும்னா, அதற்காக என் உயிரைக் கூடத் தருவேன்.

அதனால் தான் நீ சொன்னதைக் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே செய்ய சம்மதிச்சேன் உன் பணத்திற்காக இல்ல. அப்படிப் பட்ட என்னை ஒரு பெண்ணாகக் கூட நீ நினைக்க வேண்டாம். சக மனுஷியா நினைச்சி உன் சம்மந்தப்பட்ட அனைத்தையும் சொல்ல வேண்டாம்? உனக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு என்றதையாவது சொல்லி இருக்கலாம் இல்ல? அந்தளவுக்கு என் மேல் உனக்கு அலட்சியம் இல்ல?

அது மட்டுமா? திமிர்! திமிர்! எல்லாம் பணத் திமிர்! உன் பணத்தைப் பார்த்துட்டு உன் புத்தி மாதிரியே உன்னைப் பல பெண்கள் சுற்றுவார்கள். அவர்களிடம் காட்டு உன் பொறுக்கித் தனத்தை என்கிட்ட காட்டணும்னு நினைச்ச….”

“போதும் நிறுத்து…” என்று தன் கழுத்து நரம்புகள் புடைக்கக் கத்தினான் தேவ். சட்டையிலிருந்து அவள் கையை வேகத்துடன் தட்டி விட்டவன்.

“என்ன? போனாப் போகுதுனு பேச விட்டா நீ பாட்டுக்குப் பேசிட்டே போற? நான் பொறுக்கியா? நான் பொறுக்கித் தனம் செய்தத நீ பார்த்தியா? நான் பொறுக்கியா இருந்திருந்தா இந்நேரம் இப்படி நின்னு பேசிட்டு இருக்க மாட்டேன். உன்ன என்ன வேணாளும் செய்து இருப்பேன். அப்படி நீ சொல்ற பொறுக்கித் தனத்தை நான் உன் கிட்ட காட்டினா என்னைத் தடுக்கவோ இல்லை உன்னைக் காப்பாற்றவோ எவன் வருவான் சொல்லு? யாருமில்லாத அநாதை தான நீ? இங்க பார், எனக்கு ஒரு தேவை இருந்துச்சி. அதற்காகப் பணத்தை வாங்கிட்டு நடிக்க வந்தவள் நீ. அப்படிப் பட்ட உன் கிட்ட என் குடும்பத்தைப் பற்றி எல்லாம் சொல்லணும்னு எந்த அவசியமுமில்ல. வந்தோமா நடிச்சோமா பிறகு போய் கிட்டே இருக்கணும். வேற எதைப்பற்றியும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்காத. உனக்கு அந்தத் தகுதி எல்லாம் இல்ல. என்னைப் பொறுத்தவரை நீ சொன்ன மாதிரி பணத்துக்காக என் பின்னாடி சுத்துற பொண்ணுங்களும் நீயும் ஒன்று தான்” வார்த்தை என்னும் நெருப்புத் துண்டுகளை அவள் மேல் வீசிவிட்டுஅந்த இடத்தை விட்டு வெளியேறினான் தேவ்.

தான் செய்வது சரியா தவறா என்றும் அவனைப் பற்றி மறைச்சிட்டானே என்ற உளைச்சலில் தான் இருக்க காரணமானவன் என்பதால் மித்ரா அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க இவள் யார் என்னைக் கேள்வி கேட்டு அசிங்கப்படுத்த என்ற கோபத்தில் தேவ்வும் ஒருவரையொருவர் வார்த்தை என்னும் குத்தீட்டிகளால் குத்திக் கிழித்துக் கொண்டனர்.

அவன் சொன்ன வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அதே இடத்திலேயே மடிந்து அமர்ந்து கண்ணீர் விட்டாள் மித்ரா.

வெளியில் வந்தவனோ டைனிங் ரூமில் தங்களுக்காக வள்ளி காத்திருப்பதைப் பார்த்தவன் “எங்கள் யாருக்கும் சாப்பாடு வேண்டாம். நீங்க சாப்பிட்டுப் படுங்க” என்றவன் தன் அறைக்கு வந்து வழக்கம் போல் சிகரெட்டில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள என்ன புகைத்தும் மனசு ஆறவில்லை அவனுக்கு.

‘ச்சே… என்னெல்லாம் பேசிட்டா? என்னத் திமிர் இவளுக்கு? கடைசியில் என்னைப் போய் பணத் திமிர் பிடித்தவன்னு சொல்லிட்டாளே…’ என்று கோபத்தை அடக்க முடியாமல் தினறினான். இன்னோர் மனமோ ‘அவ தான் கோபத்தில் பேசறானா நானும் பேசிக் காயப் படுத்திட்டேனே’ என்று நொந்தவன் அவள் ஏதாவது தப்பான முடிவை எடுத்து விடுவாளோ என்று பயந்து திரும்ப அவள் அறைக்குச் சென்றுப் பார்க்க, அவன் பார்த்த அதே இடத்திலேயே தரையில் கால்கள் மடிய குழந்தையைப் போல் முகத்தில் கண்ணீர் கறையுடன் படுத்திருந்தாள் அவள். ஏசியை ஆன் செய்து போர்வையால் போர்த்தி விட்டவன்.

மகள் அறைக்குச் சென்று பார்க்க ருத்ராவோ படுக்கையில் புரண்டு படுத்துச் சிணுங்கிக் கொண்டிருக்க அவளைத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைக்க அவளோ மித்ரா என்று நினைத்து “அம்மா” என்றழைத்து அவனைக் கட்டிக் கொள்ள இது அம்மா இல்லை அப்பா என்று அறிந்தவள் அம்மாவைக் கேட்டு அடம்பிடிக்க எவ்வளவு சமாதானப் படுத்தியும் அழுகையை நிறுத்தவில்லை.

வேறு வழியில்லாமல் மித்ராவின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். உள்ளே ஓடியவள் தரையில் அமர்ந்து மித்ராவின் கன்னத்தைச் சுரண்டி “அம்மா அம்மா“ என்றழைக்க அதில் கண் விழித்த மித்ரா ருத்ராவைப் பார்த்துத் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் “என்னடா ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்று கேட்க “பாப்பு உன் கூட பத்துமா” என்று சொல்லிக் குழந்தை மித்ராவின் மடியில் தலை வைத்துப்படுக்க,

‘ஐய்யோ... குழந்தை தரையில் படுக்கிறாளே’ என்று பதறியவள் “வேணாம்டா இங்க வேண்டாம் கட்டிலில் படுத்துக்கலாம்“ “நீ?….” என்றது குழந்தை. “அம்மாவும் தான்” என்றவள் அவளைத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தவள் “ஆமாம் நீ தனியாவா வந்த?” “இல்லமா அப்பு கூட” என்று கதவு நிலையில் நின்றிருந்த தேவ்வைக் கைக் காட்டினாள் ருத்ரா.

அவனைப் பார்த்ததில் நிறுத்தியிருந்த அழுகை மீண்டும் வர, அதை அறிந்தவனோ அங்கிருந்து வெளியேறினான். தன் அறைக்கு வந்து படுக்கையில் படுத்தவனுக்கு மனசே சரியில்லை. ‘நாம் அவளை வார்த்தையால் குத்திக் கிழித்துக் காயப்படுத்தியதை மனதில் வைத்துக் கொண்டு தன் மகளிடம் வெறுப்பைக் காட்டுவாளோ? என்று பயந்து தான் கதவிடம் நின்றது.

ஆனால் அவள் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் சொல்லப் போனால் அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்ற மாதிரித் தன் மகளிடம் ஒட்டுதலாக இருப்பதைப் பார்த்தவனோ ரொம்பவே கூனிக் குறுகிப் போனான். அவள் கொஞ்ச நாள் தானே இருப்பா. அதனால் இனிமேல் அவள் மனசு காயப்படும் படியான வார்த்தைகளைச் சொல்லக் கூடாது’ என்று நினைத்துக் கொண்டே உறங்கிப் போனான் தேவ்.

அவன் சென்ற பிறகும் அழுகையை நிறுத்த முடியாமல் படுக்கையில் ருத்ராவை அணைத்தபடி அழுதுக் கொண்டிருந்தவளைப் பார்த்த ருத்ரா தன்னைப் போல் இவளும் அம்மாவுக்காகத் தான் அழுகிறாள் என்று நினைத்து “என்ன மாத்தி (மாதிரி) உன்கும் அம்மா வேணுமா” என்று கேட்க என்ன சொல்கிறோம் என்று தெரியாமலே ஆமாம் என்றாள் மித்ரா.

அதைக் கேட்டு எழுந்து அமர்ந்த ருத்ரா, தன் மடியைக் காட்டி “நான் அம்மா மாதி செய்றேன் பத்து” என்றாள். தனக்கு ஓர் தாயில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த மித்ரா அவள் அப்படிச் சொல்லவும் அவள் மடியிலேயே படுத்து அழுது ஆறுதலைத் தேடினாள். தன் தாயிடம் கூட இப்படி ஓர் ஆறுதல் கிடைத்திருக்குமோ என்னமோ? ஆனால் ருத்ரா மடியில் படுத்திருக்க அவள் தன் பிஞ்சுக் கைகளால் தன் கன்னத்தைச் சுரண்ட சுரண்ட அவ்வளவு ஆறுதலாக இருந்தது மித்ராவுக்கு…

காலையில் ஆபிஸ்ஸூக்குக் கிளம்பியவன் மணி எட்டாகியும் ருத்ராவைக் காணாமல் வள்ளியிடம் கேட்க, இருவரும் இன்னும் எழுந்திருக்கவில்லை என்றவளிடம் எழுந்ததும் போன் செய்யச் சொன்னவன் கிளம்பிவிட மித்ரா காலையில் சற்றுத் தாமதமாக எழுந்தாள்.

தன் வேலைகளையும் உணவையும் முடித்து ருத்ரா கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லி அவள் பிடித்த அடத்தையெல்லாம் சமாளித்து இறுதியாக ருத்ராவை மடியில் அமரவைத்து டிராயிங் புக்கில் உள்ள கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்குக் கலர் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

இது தான் மித்ரா! ‘ஐய்யோ.. என் வாழ்க்கைப் போச்சே!’ என்று கண்ணீர் சிந்தி மூலையில் உட்காராமல் அவன் பேசின வார்த்தைகளை நினைத்து நினைத்து தன்னையே வருத்திக் கொள்ளாமல் தன் தேவைகளைக் கூட கவனிக்கத் தோன்றாமல் ஏனோ தானோ என்று வாழாமல் ‘இது தான் எனக்கு விதிக்கப்பட்டது. எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் நான் இதை ஏற்று தான் ஆக வேண்டும். தன் ரசனைக்கு ஏற்ப வாழ்க்கை அமையவில்லை என்றாலும் தானாக அமைந்த வாழ்க்கையில் கிடைத்த எதையும் முடிந்த வரை ரசித்து வாழ வேண்டும்’ என்று எண்ணுபவள். இது அவளுடைய சிறு வயதிலிருந்தே தனக்குத் தானே அவளே கொண்டு வந்த பழக்கம்.

மதியம் இரண்டு மணிக்கு மித்ராவின் அறைக்கு வந்த தேவ்வைப் பார்த்தவுடன் ருத்ரா “அப்பு பாப்பா கலர் பண்ணுது” என்றாள். “அப்படியா என் குட்டிமா சுட்டிப் பெண்ணாச்சே. அதான் அழகா கலர் பண்றாங்க” என்றபடியே தன்னை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்தமித்ராவிடம் “இன்று மாலை முக்கியமான ஒரு பங்ஷன் இருக்கு. அதுக்கு நீ நான் குழந்தை போய் தான் ஆகணும்” என்றான் எதுவும் நடக்காததுபோல்.

அவனை நிமிர்ந்து பார்க்காமலே நான் வருகிறேன் என்பதற்குச் சம்மதமாக “எத்தனை மணிக்குக் கிளம்பணும்?” என்று அவளும் எதுவும் நடக்காதது போல் கேட்க “ஏழு மணிக்கு பங்ஷன் ஆனா ஆறரை மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பிடணும்” என்றவன் தான் கொண்டு வந்த பையைக் கட்டிலில் வைத்து விட்டுச்சென்றான்.

மாலை ஆறு மணிக்கே வீடு வந்தவன் குளித்துத் தயாராகி மித்ராவின் அறைக்குச் செல்ல அறையை நெருங்குகையில் உள்ளேயிருந்து ஓரே பேச்சும் சிரிப்பும் சத்தமாகக் கேட்டது. சிறிதுத் தயங்கிப் பின் கதவைத் தட்ட,

“வா வள்ளி” என்ற மித்ரா தேவ்வைக் காணவும் அவள் முகத்திலிருந்த சிரிப்பு காணாமல் போனது. ஆனால் அது தேவ் கண்ணில் படவில்லை. அப்போது தான் தலை குளித்துத் தன் இரண்டு பக்கக் காது ஓரத்து முடிகளைக் கொஞ்சமாக எடுத்து ஓர் கிளிப்பில் அடக்கி மீதியை லூஸ் ஹேர்ராக விட்டிருக்க அது இடைவரை நீண்டிருந்தது.

முழு வெண்மை இல்லாத ஆஃப் வொயிட் நிறத்தில் தங்க சரிகை இட்ட சுடிதார், பிளாட்டினம் மற்றும் வைரத்தால் ஆன புது டிசைனில் செய்த நகைகள் அவள் கை காது கழுத்தில் என்று வெள்ளி அருவியைப் போல் மின்ன, மிதமான ஒப்பனையில் தேவதையாக ஒளிர்ந்தாள் மித்ரா. அவளையே பார்த்தவன் பார்த்தவனாக அவள் மேல் வைத்தக் கண்ணை அகற்றாமல் மூச்சு விடவும் மறந்து நின்றிருந்தான் தேவ். பின் அவன் மனதில் ஓர் வெறுமை படர அது என்னவென்று யோசிப்பதற்குள்.. ஃபங்ஷனுக்கு நேரமாகிவிட அதை ஒதுக்கிவைத்தான்.

அவர்கள் அனைவரும் கிளம்பிச் சென்றது மந்திரி மகளின் திருமண வரவேற்பிற்கு. அவனுக்குத் தெரிந்த நண்பர்கள் கூடப் படித்தவர்கள் வி.ஐ.பிகள் சினிமா துறையினர் முக்கிய பிரபலங்கள் என்று அந்த ஹோட்டல் முழுவதும் ஆட்கள் நிரம்பியிருந்தனர். அவன் எங்கு சென்றாலும் அவனுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்தது. முதலில் ஒட்டாமல் ஏதோ என்றிருந்த மித்ரா போகப் போக அனைவரிடமும் சற்றுப் பழக ஆரம்பித்தாள். அவளுக்கு யாரையும் தெரியாது என்றாலும் ஏதோ வந்து பேசுபவர்களுக்கு மட்டும் பதில் கொடுத்தாள். முதலில் தேவ் தன் மனைவியுடன் வந்திறங்க சற்று விசித்திரமாகவும் சுவாரசியமாகவும் பார்த்தவர்கள் பின் அவர் அவர் பேச்சுகளில் மூழ்கிப்போனார்கள்.

இவள் தான் இவன் மனைவியா? இத்தனை நாள் பிரிஞ்சி இருந்தாங்க இப்ப ஒன்று சேர்ந்துட்டாங்க போல. தேவ் தொழில் கத்துக்க அமெரிக்கா போனப்ப அவங்க அப்பா அம்மாவுக்குக் கூட தெரியாமக் கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்று சொன்னாங்க. இவ அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளாம் இந்தியா பிடிக்காதாம். அதனால் தான் இந்தியா வரவில்லையாம். குழந்தையைக் கூட விட்டுட்டு இருந்தளாம். தேவ் அவப் பொண்ண இந்தியா கூட்டிகிட்டு வரும் போது பச்சக்குழந்தை. இன்று வளர்ந்துட்டா. இப்பதான் மகள் ஞாபகம் வந்திருக்கும். இப்பதான் இவங்க ஒன்று சேர்ந்து வாழணும்னு கடவுள் தீர்மானித்துயிருக்கார்.

அமெரிக்காவில் இருந்ததால் இவளை யாரும் பார்த்ததுக் கூட இல்ல. அட தேவ் வீட்டிற்கு நான் போய் இருக்கேன். அங்க ஒரு போட்டோ கூட இல்ல’ என்று என்ன தான் யாரும் நேரடியாகப் பேசவோ கேட்கவோ இல்லை என்றாலும் அவள் செல்லும் இடமெல்லாம் வம்பு பேசுபவர்கள் அவள் காது பட நுனி நாக்கு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசிக் கொண்டு தான் இருந்தனர். அதில் மித்ராவின் காதுகளில் விழுந்தவைகள் தான் இவையெல்லாம்.

யார் யாரிடம் தன் மனைவியையும் குழந்தையையும் அறிமுகப்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினான் தேவ்.

விஷ்வாவும் வந்திருக்க அவனிடம் “நீ எப்போடா கோவை வர?” தேவ்.

“இன்னும் இரண்டு நாள் எனக்கு மெடிக்கல் கான்ஃபிரன்ஸ் இருக்கு. ஸோ அதையும் முடிச்சிட்டு வரேன்” விஷ்வா.

“நீ எப்போ போற தேவ்?“

“நாளைக்குடா காலையில் பத்து மணிக்கு ஃபிளைட்”

“ஓகேடா அப்ப கோயம்புத்தூர்ல மீட் பண்ணுவோம். பைடா விஷ்வா” என்று விடைப்பெற்றவன்.

தூங்கி விட்ட மகளைக் காரின் பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு “நாளைக்குக் கோவைக்குப் போறோம். பத்து மணிக்கு பிளைட். ஸோ எட்டு மணிக்கெல்லாம் ரெடியா இரு“ என்றான் தேவ் அதிகாரமாக.

அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. காலையில் சீக்கிரம் எழுந்துக் கிளம்பி ஏர்போர்ட் வந்து அனைத்து ஃபார்மாலிடிஸ் முடித்துப் பிளைட்டில் ஏறி அமரும் வரையில் மித்ரா சகஜமாகத்தான் இருந்தாள். அதன் பிறகே அவளுள் சஞ்சலம் குடிகொண்டது. ‘ஊரில் அவன் வீட்டில் யார் யார் இருப்பாங்க? எப்படி நடந்துப்பாங்க? ஒரு வேளை இவன் மனைவி இருப்பாளோ? ஐய்யோ என்ன நடக்கப் போதுனு தெரியலையே?” என்று குழம்பிப்போனாள்.

தேவ்வின் மனைவி எப்படியிருப்பாள்? ஏன் இருவரும் சேர்ந்து வாழல? உடல்நிலை சரியில்லாமல் படுத்தப் படுக்கையாக இருப்பாளோ? அது தொத்தும் வியாதியா? அதனால் தான் அவகிட்ட தன் மகளைக் காட்டாமல் இருக்கிறானோ? ருத்ராவும் இதுவரை பார்த்ததாகச் சொல்லலையே? வேறு எங்கோயோ இல்லை அவள் அம்மா வீட்டுடன் தங்கவைத்திருக்கறானோ?


எது எப்படி இருந்தாலும் என்னை ஏன் நடிக்கச் சொன்னான்? அதுவும் சட்டப் பூர்வமா. நேற்று நடந்த அந்த விழாவில் இந்தச் சமூகத்தில் அவனுக்கு இருக்கும் மரியாதையைக் கண்கூடாகப் பார்த்தோமே? அப்படி இருப்பவனுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்? அதுவும் ஒருத்தி மனைவியாக நடித்தால் தான் சரி செய்ய முடியும் என்ற அளவுக்கு’ என்று பல கேள்வியிலும் குழப்பத்திலும் இருந்தது அந்த விமானப்பயணம்.

இறுதியாக கோயம்புத்தூர் தரையைத் தொட்டது விமானம்.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 12
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN