ஈரவிழிகள் 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீனாட்சிக்கு அன்று கோவிலில் நடந்தது எதுவும் நினைவில்லை. தம்பியிடம் வள்ளி விஷயமாய் ஏதோ கோபத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்... அப்போது நினைவு தப்பியது... பிறகு அவள் திரும்ப கண் விழித்த போது... மருத்துவமனையில் இருந்தாள்... இது தான் அவளின் நினைவில் உள்ளது. இதைத் தான் அவள் உடன்பிறப்பும் அவளிடம் சொல்லியிருந்தான். அன்று அவள் கொட்டிய குமுறல் எல்லாம் அவளையும் மீறி அவள் அடி மனதிலிருந்து வெளி வந்தவைகள்... அதுவும் அவளுக்கே தெரியாமல்.

இப்படி தமக்கை தன் மனவலிகளை எல்லாம் குமுறலாய் கொட்டிய பிறகு அதை கேட்ட எந்த தமையனாவது அமைதியாக இருப்பானா... அதுவும் குமரன்? அதான்.. மீனாட்சிக்கு திருமணம் செய்து அழகு பார்க்க கிளம்பி விட்டான். இங்கு அவனைப் பெற்றெடுக்காத தாயை மணக்கோலத்தில் காண... மகனாய் அவனுக்குள் கட்டாறு வெள்ளமே பிரவாகமானது.. அதுவும் அவன் வீட்டில் உள்ளவர்களுக்காகவே. இவ்விஷயத்தில் அதிகம் எதிர்ப்பை தெரிவிக்கப் போவது... தன் தமக்கை என்பதால் தான் அப்படி ஒரு விஷம் தோய்ந்த சொல் அம்பை அவன் எய்தது.

அவன் உதிர்த்த வார்த்தைகளின் வீரியத்தை அவன் அறியாமல் இல்லை. அதனுடைய ஆழமும் எப்படி வலிக்கும் என்பதும் அவனுக்கு நன்கு தெரிந்து தான் இருந்தது.. வலிக்கவும் தான் செய்தது. ஆனால் என்ன.. அவன் தமக்கையை விட உயிரும்... உணர்வும்... ரத்தமும்... சதையுமாய் அவன் வீட்டில் உலா வந்தும் அவனின் கண்ணிலும் கருத்திலும் படாமல் அவனை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும்... அவனின் சரிபாதியாய் இருக்கும் வள்ளியை தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகியது.. அதிலும் அவள் உயிர் துறக்கும் வலியை!

குமரன் இப்படியான வார்த்தைகளைச் சொல்லி மீனாட்சியை கிடுக்குப் பிடி போடவும் காரணம் இருந்தது. அவனுடைய இருபத்தி மூன்றாவது வயதிலேயே... தானே சுயமாய் செயல்பட்டு... தமக்கைக்கு ஒரு மாப்பிள்ளையை இவன் கொண்டுவர.. அப்போது மீனாட்சிக்கு வயது நாற்பது. வந்திருக்கும் ஆண்மகனுக்கும் இவளுக்கும் ஐந்தாறு மாதங்கள் தான் வயது வித்தியாசம். முன்பே திருமணம் நடந்து... மனைவியை ஒரு விபத்தில் இழந்தவன் அவன். பத்து வருடம் சென்று மனைவியின் நினைவுகளில் இருந்து வெளி வந்து இன்று தான் தனக்கென்று ஒரு துணையை அமைத்துக் கொள்ளவிருந்தவன். எல்லா வகையிலும் மீனாட்சியைப் பார்க்க வந்தவனுக்கு பிடித்திருந்தது. மற்றவை எல்லாம் பேசி முடிய வேண்டியது தான் மீதம்.

கார்மேகம்... முத்தரசியின் துர்போதனையால் மீனாட்சியைக் கட்டிக் கொடுக்க விருப்பமில்லாமல்... ஆயிரத்தெட்டு சாக்குபோக்குகள் சொல்லிக் கொண்டிருக்க... அது போதாதென்று சேரனின் மனைவி வேறு அப்போது தான் உண்டாகி இருந்தாள் என்பதால்... இதில் எதிலும் அவன் அதிகம் கலந்து கொள்லாமல் விலகியே இருக்க.... மீனாட்சிக்கு தான் என்ன முடிவு எடுப்பது என்று புரியாத நிலை. இத்தனைக்கும் முடிவை அவளிடம் கொடுக்கவில்லை குமரன்... அதற்கே அவளுக்குள் தயக்கம்.

இந்த வயதிற்கு மேல் திருமணம் தேவையா என்ற தயக்கம்... உற்றார் உறவினர் முதல் ஊரார் வரை கேலி செய்வார்களோ என்ற அச்சம்... எல்லாவற்றையும் விட ஒரு பெண் திருமணம் செய்து தான் ஆகணுமா... தனித்து வாழ முடியாதா.. போன்ற பல கேள்விகளுடன் கூடிய குழப்பம். இதெல்லாம் சேர்த்து அவளை அலைக்கழிக்க... அவளின் மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் அவளின் தம்பி புருஷோத்தமன்.

திருமண ஏற்பாட்டை அறிந்தவன்... தந்தையிடம் பேச முடியாமல் தமக்கையை சந்தித்தவன், “என்ன உனக்கு கல்யாணம் பேசுறாங்களாம்... இத்தனை வயசுக்கு மேல் உனக்கு இது தேவையா... இதுங்களுக்கு தான் அறிவு இல்லன்னா... உனக்காவது அறிவு வேணாம்?” எடுத்த எடுப்பிலே இவன் இப்படி கேட்க அதிர்ந்து போனாள் மீனாட்சி.

புருஷோத்தமன் எங்கும் அதிகம் பேச மாட்டான்... அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பவன். அவனுக்கு ஏதாவது தேவை என்றால் கூட, ‘மீனா, எனக்கு இது தேவை.. அப்பா கிட்ட சொல்லு... நாளைக்கு காலேஜ் டூர்.. அப்பா கிட்ட சொல்லிடு மீனா..’ இப்படி ஒவ்வொரு தேவைக்கும் மீனாட்சி தான் அவனுக்கு தேவைப்படுவாள். ஏன்.. அவனுக்குப் பெண் பார்க்கும் போது கூட இப்படியான பெண் தனக்கு வேண்டும் என்று இவளிடம் தானே அவன் சொன்னான்... அவனை விட நான்கு வயதே இவள் பெரியவள் என்பதால் நீ.. வா.. போ.. மீனா என்று இப்படி எல்லாம் தான் தமக்கையை அழைப்பான் அவன்... அக்கா என்றெல்லாம் அவனுக்கு அறவே வராது.

அதிர்ச்சியில் இருந்து மீண்டவள், ‘நான் தான் திருமணத்திற்கு சம்மதம் தரவில்லையே...’ என்ற எண்ணத்தில்...
“அது வந்து டா...” என்று இவள் தன் தரப்பைச் சொல்ல ஆரம்பிக்க

“என்ன… அது வந்து… இது வந்து.... ஹும்... எனக்கு அசிங்கமா இருக்கு. என் பொண்ணே இன்னும் நாலு வருஷம் போனா.. பெரிய மனுஷியா ஆகிடுவா... அப்போ அவளுக்கு அத்தையான நீ இப்போ போய் கல்யாணம் செய்துக்குவியா... ச்சீ! உருண்டு புரள... இவ்வளவு வெறியா?”

அப்பப்பா! எவ்வளவு அருவருப்பான வார்த்தைகள்! அவன் சொன்ன தினுசில்.. மீனாட்சி காது இரண்டையும் பொத்தி... அந்த அரக்கனைப் பார்க்கப் பிடிக்காமல் கண்கள் இரண்டையும் இறுக்க மூடிக் கொள்ள... அதில் அவளையும் மீறி அவள் விழிகளிலிருந்து கண்ணீர் உருண்டது.

அதைக் கண்டும் மனம் இறங்காதவனாக, “ஏற்கனவே அப்பாரு... சொத்தைப் பிரிச்சு தர மாட்டேனு நிக்கறாரு... என் குடும்பத்தோட என்னை இந்த வீட்டை விட்டுப் போக விட மாட்டேங்கிறார். இதுல இந்த பொடிப் பயல் வேற உன் கல்யாணத்துக்கு இதை.. அதை.. செய்யணும்னு பெரிய இவன் மாதிரி பட்டியல் போட்டுகிட்டு இருக்கான்.

பெண் பிள்ளையான உன்னைய எல்லாம் கட்டிக் கொடுத்துட்டு... பின்னவே உனக்கு சொத்து வேற தரணுமா நாங்க?” அதிகாரத்துடன் கேட்டவன் “நீ எல்லாம் விலை போகணும்னு இருந்திருந்தா எப்பவோ விலை போயிருக்க மாட்டியா... இது அந்த குமரன் பொடிப் பயலுக்கு தெரியுதா... பெருசா திட்டம் போடறான். இந்த வயதிலே நீ கல்யாணம் செய்துகிட்டா... உனக்கு அவமானமா இருக்குமோ இல்லையோ... எனக்கு அவமானமா இருக்கும். வெளியில் என்னாலே தலை காட்ட முடியாது.... அதுக்கு நான் கயித்த கழுத்திலே சுறுக்கிட்டி தொங்கிடுவேன். அது தான் உனக்கு வேணும்னா கல்யாணத்தை நடத்த சொல்லு....”

வார்த்தைகளை தீ பிழம்பாய் கொட்டியவன்.. கூடப் பிறந்தவளின் மனநிலையைக் கொஞ்சமும் யோசிக்காமல் வந்த வேலை முடிந்ததில்.. அங்கிருந்து விலகியிருந்தான் தம்பி என்ற உருவில் இருக்கும் சுயநலவாதியான புருஷோத்தமன்.

எவ்வளவு அழுக்கு... என்ன மாதிரியானா சாக்கடை புத்தி.. அதைவிட எவ்வளவு கேவலமான மனது... எவ்வளவு குரோதம்... அப்படி இவனுக்கு நான் என்ன கெடுதல் செய்துவிட்டேன்... மேனி முழுக்க தணலில் இட்ட சருகாய் எரிந்தது அவளுக்கு. அவன் கொட்டிய வார்த்தைகளை மீனாட்சி யாரிடமும் சொல்லவில்லை. தெரிந்தால் குமரனும்... கார்மேகமும்... நிச்சயம் சும்மா விடமாட்டார்கள் என்று இவளுக்குத் தெரியும். நம்மால் குடும்பத்தில் எதற்கு பிரச்சனை என்று இவள் யோசிக்க.. அவளும் இந்த குடும்பத்தில் ஒருத்தி என்பதையே அவள் தெரிந்தே மறந்து போனாள்.

புருஷோத்தமன்... வார்த்தையால் தேளாய் கொட்டினான் என்றால் கல்பனா... தேன் தடவிய வார்த்தைகளால் இவள் இதயத்தில் தணலை வாரிக் கொட்டினாள். அப்பப்பா! போதும்... இந்த பிறவிக்கு இதுவே போதும் என்ற நிலையில் இவள் உறுதியாய் திருமண பேச்சை மறுக்க.. ஏதும் அறியாத குமரன் தன் பிடிவாதத்தில் நிற்க... இறுதியில் செய்வதறியாது இவள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல... முழுதாய் ஒரு நாள் முழக்க அனைவரையும் பதறியடித்தவள் பிறகு தான் மீண்டாள்.

மீனாட்சி நடந்தவைகளை யாரிடமும் சொல்லவில்லை என்றதின் விளைவு... புருஷோத்தமன் கல்பனா இருவரின் கையும் ஓங்கியது என்றால்... மீனாட்சி சொந்த வீட்டிலேயே அடிமை ஆக்கபட்டாள். அதுவும் அவள் விரும்பியே...

தமக்கையின் தற்கொலை நிகழ்வு திரும்ப நடக்கக் கூடாது என்ற முடிவில் தான் இன்று குமரன் இப்படியான வார்த்தைகளை உதிர்த்தது.

நாட்கள் அதன் போக்கில் நகர... விவசாய சங்க கூட்டமைப்பு ஒன்று ஓசூரில் நடக்கவிருப்பதால்... குமரன் அதில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. தற்போது அதற்கு சென்றால் அவன் திரும்ப வர ஒரு வாரம் ஆகும். அங்கு இவன் சென்றிருக்க... அதில் ஒரு நாள் வள்ளியைத் தேடி வந்த கீர்த்திவாசன்... அவள் மும்முரமாய் வேளையில் ஈடுபட்டு இருப்பதைப் கண்டவன்,

“என்னம்மா நீ இன்னும் கிளம்பலையா... இப்ப‌ தான் வேலை செய்துட்டு இருக்க...”

அவன் இப்படி கேட்கவும்... “எங்க ணா கிளம்பணும்... என்ன விஷயம்...” இவள் ஒன்றும் புரியாதவளாய் கேட்க

“என்ன ம்மா மறந்துட்டியா... இன்னைக்கு ரேகா சகோதரிக்கு திருமண நாள் ம்மா... அது கூடவா உனக்கு நியாபகம் இல்லாம போச்சு…?”

மனதிற்குள் ‘அட ஆமாம்’ என்றவளாய் இவள்.. தப்பு செய்த குழந்தையாய் மருள... “இப்பவும் ஒண்ணும் நேரம் கடக்கலை வள்ளி... நீ கிளம்பி வா... நான் பின்பக்கம் அந்த ஒத்தையடி பாதையில் காரோட நிக்கறேன். இப்போ அஸ்மியை டிரெஸ் பண்ணி என் கிட்ட குடு.... நான் வெளித் தெருவுக்கு கூட்டிகிட்டு போறதா சொல்லி கூப்டுகிட்டு போறேன்... நீ சீக்கிரம் வந்துடு...” வந்தவன் கடகடவென்று யோசனை சொல்ல...

“சரிங்க ணா... அப்போ நீங்க பட்டுவோட கிளம்புங்க... எனக்கு தலை வலி.. கொஞ்ச நேரம் தூங்கப் போறேன்னு அண்ணி கிட்ட சொல்லிட்டு நானும் பின் கட்டு வழியா வந்திடுறேன்...” என்று இவளும் அவன் யோசனையை ஆதரிக்க, அஸ்மியுடன் கிளம்பினான் அவன்.

பின் சொன்னார் போல் இவள் வந்து காரில் ஏற... கார் ஒரு அத்துவான இடத்தை நோக்கிப் பயணித்தது. அதன் பின் மரங்கள் சூழ்ந்த ஒரு பண்ணை வீட்டினுள் காரை நுழைத்து நிறுத்திய கீர்த்தி.. “இறங்கி உள்ள போமா... டேபிள் மேலே உன் லேப்டாப் இருக்கும்... wifi on செய்துக்கோ மா....” என்க

அவனுக்கு பதிலாய் தலையை உருட்டியவள்... உள்ளே வந்து அவன் சொன்ன மாதிரியே அனைத்தும் செய்து இவள் ஸ்கைப்பை ஆன் செய்ய... லேப்டாப்பின் திரையில் ஒளிர்ந்தாள் ரேகா. “ஹாய் வள்ளி.. எப்படி இருக்க...” என்று ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்தவள்… பின் ஸ்ருதி ஏறி “என்ன டி இது.. இப்படி மெலிந்து போயிருக்க... ஒழுங்கா நேர நேரத்திற்க்கு சாப்பிடுறீயா இல்லையா... முகம் கூட வாட்டமா இருக்கு” பரிவுடன் கூடிய வார்த்தையில் கோபப்பட...

அவளின் பரிவான வார்த்தையில் யாரும் இல்லாமல் அனாதையாய் நிராதரவான நிலையில் நிற்கும் குழந்தையையாய் இவள் கேவ.. அதில் வள்ளியின் கண்களிலிருந்து உருண்டோடும் கண்ணீரைக் கண்ட ரேகா... “என்ன டி என்ன நடந்தது... நான் தான் உன்னை அங்க போக வேணாம்னு சொன்னேன் இல்ல? ரமேஷ், இங்க பாருங்க.. இவ எப்படி அழறா பாருங்க...” ரேகாவும் கண்ணீருடன் கணவனை அழைத்து பரிதவிக்க...

அங்கு திரையில் வந்த ரமேஷ்... “என்ன வள்ளி என்ன நடந்தது... நாங்க எல்லாம் இருக்கும் போது நீ இப்படி அழலாமா... சகலை ஏதாவது திட்டினாரா?”

அவன் கேள்வியில்.. ‘திட்டினாரா? தினந்தினம் வார்த்தையால் என் மனசை குத்திக் குத்திக் கிழிக்கிறார் மாமா..’ இதை மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் அதில் இன்னும் ஓவென்று இவள் அழ...

“இது வேலைக்கு ஆகாது. நீங்க.. நாம் இந்தியா கிளம்ப ஏற்பாடு செய்யுங்க ரமேஷ். நாம போய் இவளை அழைச்சிட்டு வந்திடலாம்...” ரேகா கணவனுக்கு உத்தரவு இட

“வள்ளி நீ இப்படி அழுதுட்டே இருந்தா... இவ சொன்னத தான் நான் செய்வேன். உன் அக்கா கூட வர வேணாம்... நான் மட்டுமே போதும். உன் மாமாவா உன் வாழ்க்கை மேலே எனக்கு அக்கறையும் இருக்கு உரிமையும் இருக்கு. குமரன் எனக்கு தம்பி தான்... நான் வந்து பேசுறேன். இனி நீ அங்கே இருக்க வேணாம்.. கிளம்பி வந்திடு. நான் அதற்கான ஏற்பாடு செய்றேன்...” ரமேஷும் மனைவிக்கு ஒத்து ஊதியபடி கறாராய் பேசி தன் அக்கறையை வெளிப்படுத்த

மாமனின் அன்பிலும்... கனிவிலும்... இவளின் அழுகை கொஞ்சம் மட்டுப்படவும்... தன்னை சமாளித்தவள், “நான் இங்க நல்லா இருக்கேன் மாமா... எனக்கு ஒண்ணும் இல்ல.. ரொம்ப நாள் கழித்து உங்க எல்லோரையும் பார்க்கவும் சட்டுனு கண்ணுல தண்ணீ வச்சிட்டேன்... அதுக்கு போய் இவ என்ன திட்டுறா...” இவ புகார் படிக்க

“என்னத்த உன்னை திட்டுறேன்... நான் மட்டும் அங்க இருந்திருந்தனா... உன் கையைப் பிடிச்சு... தரதரன்னு.. உன்னை இழுத்துட்டு வீட்டுக்கு வந்திருப்பேன். எனக்கு பின்னாடி பிறந்த உனக்கு ஏன் டி இவ்வளவு பிடிவாதம்? எப்படி எல்லாம் வாழ வேண்டியவ நீ.. அங்கே போய் இப்படி எல்லாம் கஷ்டப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?” ரேகா சடசடக்க

“இங்க எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல ரேகா... நான் நல்லா தான் இருக்கேன். அப்புறம் இப்போ நீ சொன்ன இல்ல அது மாதிரி நீ என்னை இழுத்துட்டு எல்லாம் போக முடியாது. ஏன்னா...” சற்றே நிறுத்தியவள்… தமக்கையிடம் இருந்து கேள்வி வரவில்லை என்றதும்.. “ரேகா.. ஏன்னு கேளு…” என்று இவள் அவளிடம் விளையாட

அவளோ பிடிவாதமாய் அமைதி காக்க.. “க்கும்…” என்று உதட்டை சுளித்தவள் “என் வீட்டுக்கும் உன் வீட்டுக்கும் நடுவுல பரந்து விரிந்த.. ஆளையே முழ்கடிக்கிற சமுத்திரம் இருக்கு டி. அதை எப்படி நாம இரண்டு பேரும் தாண்டுவோம்... இது கூட தெரியல.. இன்னும் மக்காவே இருக்கியே ரேகா...” இவள் சூழ்நிலையை சகஜமாக்க நினைக்க

“அப்படி சொல்லு வள்ளி.. ஆனாலும் என் மனைவி சாதாரண மக்கு இல்ல ம்மா.. புளி போட்டு விளக்கினாலும்... வெளுக்காத பித்தளை சொம்பு.. ம்ஹும்.. குடம்.. ச்சேச்சே அதுவும் இல்ல.. ஆங்.. அண்டா...” ரமேஷும் இவளுடன் சேர்ந்து மனைவியின் காலை வார... அதில் ரேகா கணவனை முறைக்க... அவன் பயந்தது போல் நடிக்க... வள்ளி சிரிக்க...

“அஹ்... சொல்ல மறந்துட்டனே... இனிய திருமண நாள் வாழ்த்துகள் மாமா... ரேகா...” வள்ளி மனதார வாழ்த்த...

“ஆமாம்... இது ஒண்ணு தான் குறைச்சல்...” ரேகா சலித்துக் கொள்ள... ரமேஷ் அவளை பொய்யாய் முறைக்க... இருவரின் செல்ல ஊடலைக் கண்டு இவள் புன்னகைக்க..

“குழந்தை தூங்கிட்டா போல.. அவ முகத்தைக் காட்டு வள்ளி.. ரொம்ப நாளாச்சு அஸ்மியைப் பார்த்து” ரேகா ஆசையாய் கேட்க, அவளுக்கு குழந்தை முகத்தைக் காட்டியவள் பின்..

“தர்ஷன் எங்க மாமா...” இவள் அவர்கள் ஆறு வயது குட்டி மகனைக் கேட்க

“இதோ இருக்கேன் சித்தி...” என்றபடி திரையில் வந்தவன் “அஸ்மி தூங்கிட்டாளா?” இவளின் தோளில் தூங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்டவன்... “இங்கே அதிதியும் தூங்கிட்டா சித்தி. அப்புறம் ஒரு பாப்பாவுக்கு... காட்டுக்குள்ள மொட்டை அடிச்சிங்க இல்ல... அதே மாதிரி அஸ்மிக்கு செய்யும் போது நான் வரவா?” ஷாலினிக்கு மொட்டை அடிக்கும் வைபவத்தை கீர்த்திவாசன்... வீடியோவாக பதிவானதை இவர்களுக்கு அனுப்பியிருக்க... அதைப் பார்த்து அவன் கேட்க

“ஹும்...” இவள் தலை அசைக்கவும்...

“சித்தி.. குமரன் சித்தப்பா என் கிட்ட எப்போ பேசுவார்... எனக்கு அவர் கிட்ட பேச ஆசையா இருக்கு...” சின்னவன் கணவனைப் பற்றி கேட்கவும்... வள்ளிக்கு மறுபடியும் விழிகள் கலங்கியது. அதன் பிறகு கொஞ்சி குலாவி... எல்லாம் பேசி முடிக்க..

ரமேஷ், “மறுபடியும் உன் கிட்ட ஒண்ணு சொல்லிக்கிறேன் வள்ளி… உனக்கு அங்கே ஏதாவதுனா என்னை கூப்பிடு.. அடுத்த நொடி வந்து நிற்பேன்…” அவன் அன்பாய் கட்டளையிட..

அவனின் அன்பிலும்… கணவனிடம் பேச மொத்த குடும்பமும் ஆர்வமாய் இருப்பதில் வெளியே வந்த இவளுக்கு விழிகள் கலங்கியது...

அவளின் அழுது வீங்கிய முகத்தைக் கண்ட கீர்த்திவாசன், “நீ வேணும்னா ஒரு எட்டு மலேசியா போய் வரியா வள்ளி? அவன் வர எப்படியோ மூணு நாள் ஆகும்... அவன் வந்தாலும் நான் இங்க சமாளிச்சிக்கிறேன்...” இவன் அவளின் மனநிலையை உணர்ந்து சொல்ல

“வேணாம் ணா.... நான் இப்போ போகல... நான் வந்த காரியம் முடியாம... நான் போக விரும்பலை ணா...”

“இல்ல வள்ளி... நீயும் கஷ்டப்படற... அங்கே இருக்கிறவங்களுக்கும் உன்னையும் அஸ்மியையும் பார்க்காம தவிப்பாயிருக்கும்... அதான்...”

“தெரியுது ணா... ஆனா நான் பின் வாங்கறதா இல்ல. எனக்கு முடிவு தெரியும்னுனா.. அது கூட எனக்கு சாதகமான முடிவா இருக்கணும்னா... அதற்காக நான் எவ்வளவு வேணா போராட தயாரா இருக்கேன் ணா...” என்று தன் முடிவில் உறுதியாய் இருந்தவள்... விரைந்து சென்று காரினுள் அமர்ந்து கொள்ள... அவளின் பிடிவாத குணம் அறிந்தவனாக வேறு வழியில்லாமல் காரை எடுத்தான் கீர்த்தி.


இங்கு இவர்கள் இருவரும் சந்தித்தது முதல் காரில் பயணித்து... பின் பண்ணை வீட்டிற்கு சென்றது வரை நண்பனைக் கண்காணிக்க என்று குமரன் வைத்த ஆட்கள் மூலம் ஓசூரில் இருக்கும் குமரனுக்கு பகிரப்படவும்.... ஒரு முடிவுடன் ஊருக்கு வரும் நாளுக்காக காத்திருந்தான் அவன்.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN