ஈரவிழிகள் 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குமரன் கார் பயணமாகத் தான் ஓசூர் சென்றிருந்தான். இதோ.. போன வேலைகள் முடிய... அதே காரில் திரும்ப வந்து கொண்டிருக்கிறான். ஏதோ சிந்தனை வயப்பட்டவன் போலவே இருந்தது அவன் முகம். திடுமென ஓரிடத்தில் காரை நிறுத்தியவன்... தன் கைப்பேசியை எடுத்து நண்பனுக்கு அழைக்க... முதல் அழைப்பிலேயே கீர்த்திவாசன் இவனின் அழைப்பை ஏற்று.. பதட்டத்துடன்

“ஹலோ...” என்க

“டேய்... மச்சான்... நான் ஊருக்கு வெளியே தான் இருக்கேன். கார் பஞ்சர்.. நீ வந்து என்னைய கூப்டுகிட்டு போடா... வரும்போது உன் பைக்கை எடுத்துகிட்டு வா டா...” இவன் நண்பனிடம் அதிகாரமாய் சொல்ல

அந்த அதிகார தோரணையில் ஒரு நிமிடம் விழித்தவனோ... பின் சுதாரித்து, “இதோ வரேன் டா...” என்றவன்... பின் தன் ஸ்பெலென்டரை முடுக்கி விட.. அது பறந்தது.

இவன் நண்பன் சொன்ன இடத்தை அடைந்து... பைக்கை நிறுத்தி விட்டு.... கார் மேல் சாய்ந்து நின்றிருந்த குமரனை நெருங்க... “ஏன் டா மன்னாரு.. தோ இங்க இருக்கிற இடத்திலியிருந்து வருவதற்கு உனக்கு இவ்வளவு நேரமா...” என்று வந்தவனை சாடியவன் பின் நண்பனின் சட்டைப் பாக்கெட்டுக்குள் கை விட்டு துழாவி இவன் எதையோ தேட...

“என்ன டா...” வந்தவன் ஒன்றும் புரியாமல் கேட்க

“சிகரெட் டா...” குமரன் அலட்டிக்காமல் சொல்ல

“என்ன டா நீ... இது மட்டும் அக்காவுக்கு தெரிஞ்சது டின்னு கட்டிட்டும்.....” கீர்த்தி மீனாட்சியை நினைவுபடுத்தவும்

“ப்ச்சு… நான் தப்பு செஞ்சு டென்ஷன் ஆனா... சிகரெட் பிடிப்பேன்னு உனக்குத் தெரியாதா... பேசாம குடு டா...”

இடையில் நடந்தது எல்லாம் கனவு போல்... குமரன் சகஜமாய் பேசவும்... அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்த கீர்த்தி, “டேய் மச்சான்... இப்போ என்ன டா தப்பு செஞ்ச... ஏதாவது பெரிய தப்பா செஞ்சுட்டியா டா.....” பரிவாய் நண்பனிடம் விசாரிக்க

சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை இழுத்தவன் பின்... அதை நண்பனிடம் கொடுத்தபடி, “ஆமா டா... பெரிய தப்பு தான் செஞ்சிட்டேன். அது.. என்னனா என் ஆருயிர் நண்பனை அடி பின்னிட்டேன் டா... அதான்...”

நண்பன் கொடுத்த சிகரெட்டின் புகையை உள்ளிழுத்து வெளியிட்ட கீர்த்தி, “அடப்பாவி! எவன் டா அவன்... நீ எல்லாம் அடிச்சா வெளுத்து வாங்காம விட மாட்டியே...” என்று சொல்லிக் கொண்டு வந்தவனின் கை அப்படியே அந்தரத்தில் நின்றது. இவ்வளவு நேர பேச்சில்... நண்பன் தன்னைத் தான் சொல்கிறான் என்பது அவனுக்குப் புரிபட... அதிர்ச்சியில் இவன் மூச்சு விடாமல் நிறுத்தி இருந்ததில் சிகரெட்டின் புகை அவனைத் துன்புறுத்த... அதில் “லொக்கு... லொக்கு...” என்று இரண்டு முறை இருமியவன்..

“மச்சான்.. அப்போ என்னைய மன்னிச்சிட்டியா டா...” என்று ஆவலே வடிவாய் கேட்க

“நான் உன்னைய அடிச்சதுக்கு நீ என்னைய மன்னிச்சிட்டியா டா...” குமரன் பதில் கேள்வி கேட்க

“அது.. நீ என் நண்பன் டா... உனக்கு எல்லா உரிமையும் இருக்கு...”

“அப்போ நீ என் நண்பன் இல்லையா டா...” மன்னிப்பு என்ற வார்த்தையை குமரன் சொல்லாமல் சொல்லிய விதத்தில்

“மச்சான்...” என்று ஆர்ப்பரித்தபடி... குமரனின் தோளில் கைபோட்டு தன்னுள் அணைத்துக் கொண்ட கீர்த்தியின் முகமோ... அடுத்த நிமிடம் தீவிரத்தைத் தத்தெடுக்க, “அது வந்து மச்சான்...” அவன் ஏதோ சொல்ல வர

“விடு மச்சான்... எனக்கு எதுவும் தெரியவும் வேணாம்... நீ எதுவும் சொல்லவும் வேணாம். அப்படி நீ சொன்னாலும் அது எதையும் உன்னால் முழுசா சொல்ல முடியாது. எனக்கா எப்போ தெரிய வரணும்னு உனக்கு தோணுதோ.. அப்போ சொல்லு... நான் அப்போ கேட்டுக்கிறேன்...” என்றவன் உறுதியாய் மறுத்து விட

கீர்த்தியின் முகமோ மலர்ந்தது... அதில் இவன் முகமும் மலர, “நீ எது செஞ்சாலும்... அதுல காரண காரியம் இருக்கும்னு நான் யோசிச்சு இருக்கணும் டா. அன்னைக்கு யோசிக்கல... இன்னைக்கு நிதானமா யோசிச்ச பெறகு தான் தெரியுது... கூடவே நான் உன் கிட்ட நடந்து கிட்ட விதமும்..” இவன் உணர்த்து சொல்ல...

“விடு மச்சான்...” கீர்த்தி நண்பனை சமாதானப்படுத்தியவன், “சரி.. கார் பஞ்சருக்கு... சரி செய்ய ஆள் சொல்லிட்டியா...” இவன் நடப்பு விஷயத்துக்கு தாவ..

“கார் எல்லாம் ஒண்ணும் பஞ்சர் இல்ல டா... உன்னைய இங்க வர வைக்க தான் அப்படி பொய் சொன்னேன். எம்புட்டு நாளாச்சு நாம ரெண்டு பேரும் பைக்கில் ஊரைச் சுற்றி! அதான்... தமிழை வரச் சொல்லி.. காரை வீட்டில் விடச் சொல்லிட்டேன்.... அவனும் வந்து சாவியை வாங்கிட்டு போய்ட்டான். ராவுக்குள்ள கார் வீட்டுக்கு வந்துடும்... நீ வா...” என்றவன் நண்பனின் பைக்கை நெருங்க

கீர்த்தியும் வந்து பைக்கை எடுக்க... குமரன் வண்டியின் பின்னாடி அமர்ந்ததும்... இருவரையும் சுமந்து சென்ற அந்த வாகனமோ.. சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது... நண்பனின் கண்களை கண்ணாடி வழியே சந்தித்த குமரன்... “இனிமே உன் தங்கச்சிக்கு ஏதாவது உதவி செய்யணும்னா.. நம்ம வீட்டுக்கு நேரா வந்தே கூப்டுகிட்டு போ... இந்த ஒத்தையடி பாதை எல்லாம் வேணாம்...” என்று இவன் இலகுவாய் பச்சை கொடியைக் காட்டவும்

‘அச்சோ..’ இவனுக்கு தெரிந்து விட்டதா.. என்று தவித்த கீர்த்திவாசன்... பின் நண்பனின் கண்ணில் வழிந்த நம்பிக்கையிலும்... நம் நட்பு அப்படி ஒரு மாசு மருவற்ற நட்பு டா என்று சொன்ன செய்தியில் அசடு வழிய... பெருமை பொங்க இவன் தலையை அசைக்க.

“போதும் டா.. ரொம்ப வழியாத... வண்டிய.. நாம எப்பவும் சந்திக்கிற டீ கடையில் நிறுத்து... ஒரு டீயை குடிச்சிட்டு போவோம்...” என்று இவன் ஆணையிட... அதன்படியே டீ கடை முன் நின்றது வண்டி.. அங்கும் மற்ற நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரியில் கலந்து கொண்டவர்கள்... பின்னும் பல கதைகளைப் பேசிக் கொண்டு வண்டியில் பவனி வந்தார்கள் இந்த ஆருயிர் நண்பர்கள்.

இவன் வீட்டுக்கு வந்து அன்றைய இரவு உணவுக்குப் பின்... விவசாய கூட்டத்தில் எடுத்த சில முக்கிய முடிவுகளை அறிக்கையாய் அவனுடைய லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டிருந்த நேரம் அவன் அறை கதவை யாரோ படபடவென தட்ட... ‘இந்த நேரத்தில் யாரு இவ்வளவு அவசரமா கதவைத் தட்டுறது..’ என்ற யோசனையில் இவன் கடிகாரத்தைப் பார்க்க.. அது நடுசாமம் ஒன்று என்று காட்டியது.

‘தாத்தாவுக்கு மறுபடியும் ஏதாவது..’ அந்நினைவில்.... உடனே இவனுக்குள்ளும் பரபரப்பு தொற்றிக் கொள்ளவும் அதில் இவன் விரைந்து சென்று கதவைத் திறக்கவும். வெளியே ஓவென்று அலறலுடன்... கண்ணீரை சிந்திக் கொண்டிருந்தாள் மீனாட்சி. அவளால் பேச முடியவில்லை.

“என்ன க்கா... என்ன ஆச்சு... தாத்தாவுக்கு ஏதாவது...” இவன் படபடப்பாய் கேட்க

இல்லை என்பதாய் தலையை அசைத்த பெரியவள், “அஸ்மி... அஸ்மி...” என்று தேம்ப...

“பட்டுக்கு.. பட்டுக்கு என்ன க்கா ஆச்சு...” என்ற கேள்வியுடன் அடித்துப் பிடித்து... படிகளில் தாவி இறங்கியவன்... அதே வேகத்துடன் வள்ளியின் அறைக்கு சென்று காண...

குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு செய்வதறியாமல்... அழுது கொண்டிருந்தாள் அவள். என்னவோ என்ற பதைபதைப்புடன்... இவன் குழந்தையை நெருங்க... அங்கு அஸ்மியின் கோலத்தைக் கண்டவனுக்கு ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்று விட்டது.

அழகான பார்பி பொம்மை போல் எப்போதும் மிளிரும் குழந்தை தற்போது.. அவளின் உடல் முழுக்க சிவப்பு நிற தடிப்புகள் நிரம்பியிருக்க... உதடு மற்றும் கண்கள் வீங்கியிருக்க... அதனால் அவளின் விழிகள் மூடி பென்சிலால் வரைந்த ஒற்றைக் கோடு போல் விழிகள் அவள் முகத்தில் காட்சியளிக்க.. தான் கண்ட காட்சியில் பயந்தே போனான் இவன்.

குழந்தை முன் மண்டியிட்டவன், “பட்டு...” என்று அவளைக் கண்ணீர் குரலில் அழைக்க... உடலின் மாற்றத்தால் அலறிக் கொண்டிருந்த குழந்தை.. இவன் குரலைக் கேட்டு அந்த நிலையிலும் அவனை நோக்கி கையை உயர்த்த... முதல் முறையாக அஸ்மியை வாரி தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டான் குமரன். தான் கண்டும் காணாமல் போகும் போது எல்லாம்... உதட்டை மட்டுமே பிதுக்கி வெம்பும் என் குழந்தைக்கா இந்த நிலை என்று அவனால் மனதிற்குள் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன ஆச்சு... க்கா..” இவன் தமக்கையைக் கேட்க

“தெரியல டா... நல்லா தூங்கிட்டிருந்த பிள்ள... திடீர்ன்னு அலறி எழுந்து அழறதா சொன்னா.. வந்து பார்த்தா... பட்டு உடம்பு எல்லாம்...” மீனாட்சியால் மேற்கொண்டு எதையும் சொல்ல முடியவில்லை...

வள்ளியின் புறம் திரும்பியவன், “குழந்தை அந்தியிலே எங்க விளையாடினா... நைட் என்ன சாப்பிட்டா... படுக்கிறதுக்கு முந்தி... பட்டுக்கு உடம்பு கழுவி விடுற பழக்கம் இருக்கா...” இவன் அடுக்கடுக்காய் அவளை நோக்கி கேள்விகளை வீச

அவளோ குழந்தையின் நினைவில்... அவன் கேட்டது எதுவும் மூளையில் ஏறாமல்.. ஒன்றும் புரியாமல் முழிக்க... இவனுக்குள் கோபம் துளிர்ந்தது. “அடிச்சி... பல்லை எல்லாம் உடைச்சிடுவேன்... குழந்தையப் பார்க்கறது விட உனக்கு என்ன வேலை... எது கேட்டாலும் இப்படி மரம் மாதிரி நிக்கற...” இவன் அவளிடம் எகிற...

அவளோ அதே சிலை நிலையில் அமர்ந்திருக்க... “டேய்... பட்டுக்கு சிறுசா ஏதாச்சும் ஒண்ணுன்னாலே... அவ துடிச்சுப் போய்டுவா டா... இப்போ குழந்தைய இப்டி பார்த்த பெறகு அவ எப்படி டா இருப்பா சொல்லு” என்று எடுத்து சொல்லிய மீனாட்சி... “ பூச்சி... ஏதாவது கடிச்சிருக்கும்னு நெனைக்கிறேன் டா. மருத்துவச்சியை கூப்டுகிட்டு வந்து காட்டுனா சரியா போய்டும்...” அவள் சொல்லிக் கொண்டே போக..

“ஒரு மண்ணும் வேணாம்... குழந்தையை கவனமா பார்த்துக்க துப்பு இல்லாததுங்கலாம்... எதுக்கு குழந்தை பெத்துக்கணும்... நான் ஆஸ்பத்திரி போறேன். பட்டுக்கு தேவையானது எல்லாம் ஒரு பையில் எடுத்துக் கொடு க்கா” என்றவன் தானும் தமக்கையோடு சேர்ந்து அனைத்தையும் எடுத்து வைத்தவன்...

வள்ளியின் கரம் பற்றி இழுத்து வெளியே வந்து காருக்குள் தள்ளியவன்... “அக்கா நீ இங்கேயே இரு... அந்த பையை பின்னாடி சீட்டில் வை...” என்று அவசரமாய் தமக்கைக்கு உத்தரவிட்டவன்... அதே அவசரத்துடன் காரினுள் அமர்ந்து... அதை உயிர்ப்பித்தவனோ... பின் தன் தோளிலிருந்த அஸ்மியை இம்மியும் விடாமல் அணைத்தபடியே இவன் காரை ஓட்ட.... தன் பார்வை வட்டத்தின் உள்ளே... வெளிப்புற தோற்றங்கள் ஓடி மறைவதைக் கண்ட வள்ளிக்கு அப்போது தான் நிஜம் உரைத்தது. அதுவரை கண்ணில் நீருடன் எங்கோ வெறித்திருந்தவள்... இப்போது ஓ வென்று கதற....

“ஷ்... ஷ்... ஷ்... அழறதுனா எவ்வளவு வேணா அழுதுக்கோ. ஆனா... மூச்! சத்தம் மட்டும் வெளியே வரக் கூடாது....” என்று குமரன் போட்ட அதட்டலில்... இவள் வாயை... இரு கைகளாலும் பொத்திக் கொண்டு அழ...

‘ஹும்... அஃது!’ என்ற பார்வையை அவளை நோக்கி வீசினான் இவன்.

பின் நொடிக்கு ஒரு முறை “பட்டு அப்பா கழுத்தை இறுக்க கட்டிக்கோங்க... பட்டு அப்பா தோளில் சாய்ந்துக்கோங்க... பட்டு கால் வலிச்சா... அப்பா மடியில் உட்கார்ந்துக்கோ டா... பட்டு தூங்க கூடாது... பட்டு இதோ நாம சீக்கிரம் போயிடலாம்... என் பட்டு சமத்து தானே... எங்க.. அப்பா சொல்லுங்க...” பூச்சி கடித்தால்... கடி பட்டவரை மருத்துவரிடம் காண்பித்து அது என்ன ஏது என்பது தெரியும் வரை தூங்க விடக் கூடாது என்பது அவன் ஊரில் கடைப்பிடித்து வரும் பழக்கம். அதன்படியே இவன் குழந்தையிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வாகனத்தை ஓட்ட..

அந்த சின்ன வாண்டோ... தன் உடல் உபாதையையும் மீறி... தகப்பன் தன்னிடம் முதல்முறையாக பேசுவதில் உவகை கொண்டு பேச எத்தனித்தாலும்.. இயலாமையில் வெறும் “ஹும்...” மட்டும் கொட்டிக் கொண்டு வர... அஸ்மியின் பாசத்தில் இவனுக்கு கண்கள் கலங்கியது.

அஸ்மி வள்ளி பெற்ற குழந்தை என்பதாலேயே.. ஒதுங்கிச் சென்றவன்... இன்று பயணம் செய்த இந்த அரைமணி நேரமும்... பட்டுவை தன் கை அணைப்பில் வைத்து... மூச்சுக்கு முன்னூறு தடவை... தன்னை அப்பா என்று அவளை அழைக்கச் சொல்லி கேட்டுக் கொண்டு பயணிக்கிறான். இதை என்னவென்று சொல்ல!

மருத்துவமனையில் நுழைந்து... குழந்தையை அவசர பிரிவில் சேர்த்ததும்... இரவு பணியிலிருந்த மருத்துவர் பரிசோதித்துப் பார்த்து.. பூச்சிக்கடியாய் இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற நிலையில் அவர் மருத்துவத்தை ஆரம்பிக்க... அதன் பிறகு தான் ஆசுவாசம் ஆனார்கள் கணவன் மனைவி இருவரும்.

வெளியே வந்த மருத்துவர்... “ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கேன்... அப்சர்வேஷன்ல இருக்கட்டும்... மார்னிங் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்த பின் அழைச்சிட்டு போங்க... சீக்கிரமே குழந்தை நார்மலுக்கு வந்துடுவா” என்று அவர் சொல்லிச் செல்ல....

இருவரும் பின்னிரவு முழுக்க குழந்தையின் அறையிலேயே தங்கிக் கொண்டனர். வள்ளியாவது... தன்னை மீறி அமர்ந்திருந்த சேரில் கண்ணயர்ந்தாள். ஆனால் குமரன் சற்றும் இமை மூடவில்லை.. அந்தளவுக்கு சிணுங்கிக் கொண்டே இருந்தாள் அஸ்மி. ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அவள் சிணுங்கும் போது எல்லாம் “ப்பா... ப்பா..” என்று இவனையே அவள் தேட... குழந்தையின் கரம் பற்றி.. தன் இருப்பைக் காட்டிக் கொண்டேயிருந்தான் இவன்.

விடிந்ததும் இவன் சென்று டீ வாங்கி வந்து... வள்ளிக்கும் கொடுத்து இவனும் குடிக்க... அதன் பின் குழந்தையைப் பார்த்தபடியே இருவரின் பொழுதும் கடந்தது. காலை வழமை போல் குழந்தை நல மருத்துவர் வந்து... அஸ்மியைப் பரிசோதித்து விட்டு... இனி குழந்தைக்குப் பிரச்சனை இல்லை... எதற்கும் மாலைக்கு பின் அவளை அழைத்துப் போகச் சொல்லவும்...

இதுவரை இருந்த இறுக்கம் விலக... நிம்மதி பெருமூச்சில்.... உடல் தளர... நாற்காலியில் அமர்ந்தான் குமரன். பின் அவன் வெளியே செல்ல எத்தனிக்க... அப்போது அவன் கருத்தில் பதிந்தது... வள்ளியின் செயல். நெற்றி சுருங்க இவன் அவளையே காண... அவளோ அவனிடம் ஏதோ சொல்ல வருவதும்.. பின் தயங்கி திணறுவதுமாய் இருந்தவள் பின் ஒரு முடிவுடன்... இவள் நிமிர்ந்து கணவனின் முகம் காண...

அவனோ ஒற்றைப் புருவத்தை உயர்த்தி... என்னவென்று கேட்க, “அது... பட்டுக்கு இப்படி ஆனதிலிருந்து... அதான் இரவிலிருந்து அண்ணி இப்பவரை தவிச்சுப் போயிருப்பாங்க... இப்ப பாப்பா சரியானதை அண்ணிகிட்ட சொல்லணும்... கொஞ்சம் போன் போட்டு தரீங்களா...” இவள் கணவனிடம் தயங்கி தயங்கி கேட்க

இவனுக்கு தமக்கையின் மேல் இல்லாத அக்கறையா.. இரவும் சரி... இதோ இப்போது டீ வாங்கி வந்தபோதும் சரி... மீனாட்சியை அழைத்து தகவல் சொல்லி விட்டுத் தான் வந்தான் குமரன். ஆனால் அது வள்ளிக்கு தான் தெரியாதே... தன் அக்காவின் தவிப்பைப் புரிந்து கொண்டு... தமக்கைக்காக வள்ளி பேசவும்... இவனுள் இதம் பரவியது. அப்போது தான் அவன் ஒன்றை அறிந்தான்... வள்ளியிடம் கைப்பேசி இல்லை என்பதை..

உடனே தன் கைப்பேசியை எடுத்தவன்... அக்காவின் எண்ணுக்கு அழைப்பு விடுத்து விட்டு... அவளிடம் நீட்ட... அதை வாங்கியவள் எதிர் சரிவில் மீனாட்சி அழைப்பை ஏற்றதும், “அண்ணி... பட்டுக்கு பெருசா பிரச்சனையில்லைனு டாக்டர் சொல்லிட்டார். பாப்பா நல்லா இருக்கா... நாங்க வீட்டுக்கு சாயங்காலம் வந்துடுவோம்....” அவளைப் பேச விடாமல் இவள் படபடப்பாய் சொல்ல நினைத்ததை சொல்லவும்...

அவளின் செயலிலும்... வார்த்தையிலும்... உள்ளம் மகிழ்ந்தது இவனுக்கு.
.....

“ஓஹ்... உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அண்ணி... ஓ... அவர் சொல்லிட்டாரா...” இவள் சுதி இறங்கி கேட்க

மனைவியையே கண்ணிமைக்காமல் சுவாரசியமாக பார்த்ததுக் கொண்டிருந்தான் குமரன்.

“ஆமா அண்ணி.. எனக்கு தெரியாது. என்ன.. வந்துட்டு இருக்கீங்களா...” சன்னமான குரலில் கேட்டவள்

பின் அழைப்பைத் துண்டித்து விட்டு கணவனை நிமிர்ந்தும் பார்க்காமல் கைப்பேசியை அவன் முன் நீட்ட.. அவனோ அதை வாங்காமல் இருக்கவும்... இவள் நிமிர்ந்து கணவனின் முகம் காண... அங்கு அவனோ கண்ணில் கேலியுடன், “அக்கறை...” என்று ஒற்றை வார்த்தையில் கேட்க... கணவன் கேட்ட விதமோ... அல்லது குரலோ ஏதோ ஒன்று இவளை என்னை விட என் அக்கா மேல் உனக்கு அக்கறையா... என்று கேட்பது போல் இருக்கவும்...

அவசரமாக தன் விழிகளைத் தாழ்த்தியவள், “அண்ணியும்... மாமாவும்... பட்டுவைப் பார்க்க வந்துட்டு இருக்காங்களாம்...” இவள் அவசரமாய் தகவல் சொல்ல

இதுவும் தான் எனக்கு முன்பே தெரியுமே என்பது போல் அவளைப் பார்த்து வைத்தான் இவன். இரவு அஸ்மிக்கு நடந்தது எதுவும் கார்மேகத்துக்கு தெரியாது. விடிந்ததும்... மகனிடம் விசாரித்து கிளம்ப எத்தனித்தவரை குமரன் தான் தடுத்திருந்தான்.. ஆனால் அவரோ பிடிவாதமாய் இருக்கவும்... தம்பியிடம் பேசிய மீனாட்சி... தானும் அப்பாருவும் வருவதாகவும்.. வரும்போது அவனுக்கும் வள்ளிக்கும் மதிய உணவு எடுத்து வருவதாகவும் சொல்ல... வேறுவழியில்லாமல் இருவரும் வர சம்மதித்தான் இவன். ஆனால் இது எதுவும் வள்ளிக்குத் தெரியாது... அவன் தான் இங்கு வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட மனைவியிடம் பேசவில்லையே..

அவள் அசடு வழிய கைப்பேசியை கொடுக்கவும்.. அதை வாங்கியவன் வெளியே செல்ல திரும்ப, தற்போது அவன் கைப்பேசியில் அழைப்பு வரவும் எடுத்துப் பார்த்தவன் அழைப்பது கீர்த்திவாசன் எனவும், “சொல்லு டா மச்சான்...” அறையில் நின்று தான் பேசினான். ஒருவேளை.. நண்பன் வள்ளியிடம் பேச நினைத்தால்...

கீர்த்தி, “பட்டுக்கு இப்போ எப்படி டா இருக்கு... நான் நேத்து ராவே குளித்தலை வந்துட்டேன்... இப்போ தான் விஷயம் தெரிந்தது.... குழந்தை எப்படி இருக்கா...” விசாரிக்க

நண்பனுக்கு இங்கு நடந்த அனைத்தையும் சொல்ல... எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட கீர்த்தியோ, “ஹும்... சரிடா மச்சான்... நான் ஊருக்கு வந்ததும் வீட்டுக்கு வரேன்...” என்றவன் சற்றே தயங்கி, “மச்சான்... வள்ளியையும்... பட்டுவையும்... கொஞ்சம் கவனமா பார்த்துக்க டா...” நண்பனின் குணம் தெரிந்து இவன் அக்கறையுடன் சொல்லவும்

இவனோ அவன் சொன்ன வள்ளியை கிடப்பில் போட்டவன், “என் பொண்ணை கவனமா பார்த்துக்க சொல்லி என் கிட்டவே சொல்றியா... நீ அடங்கு டா...” என்றவன் வள்ளியிடம் கைப்பேசியை கொடுத்து அவள் நண்பனிடம் பேசி முடித்ததும் வெளியே சென்று திரும்பி வந்தவனின் கையில்... காலை உணவோடு சேர்த்து புது கைப்பேசி ஒன்றிருக்க.. அதை வள்ளியிடம் தந்தவன், “இது உனக்கு... என் நம்பரிலிருந்து உனக்கு அழைச்சிருப்பேன்... பதிவு செய்துக்க...” என்றவன்... மறுநொடி குழந்தையுடன் ஐக்கியமாகிவிட...

கணவன் வாங்கித் தந்த கைப்பேசியை ஆச்சரியத்துடனும்... மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளி. பின் கார்மேகமும்... மீனாட்சியும் வந்து குழந்தையை நலம் விசாரித்து விட்டு அவர்கள் செல்ல... மாலை மருத்துவர் வந்து சொன்ன பின்னரே... கணவன் மனைவி இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

கணவன் சோர்ந்து போய் இருப்பதைக் கண்டவள், “சாவியை... என் கிட்ட கொடுங்க... காரை நான் டிரைவ் செய்றேன்...” என்று வள்ளி இலகுவாய் சொல்ல

ஒரு ஆழ்ந்த பார்வையுடன் மறுக்காமல் இவன் சாவியை அவளிடம் கொடுக்க... அவளோ வீட்டுக்குப் போக கைப்பேசியில் GPRS உதவியுடன்... வீட்டு முகவரியை இவள் பதிக்கவும்...

இதையெல்லாம் கண்டவனோ கண்டும் காணாதவனைப் போல... குழந்தையுடன் கண் மூடி இவன் சீட்டில் தலை சாய்த்துக் கொள்ள... காரோ வள்ளியின் கையில் பறந்தது. வீட்டை நெருங்கும் நேரம் குமரனின் கைப்பேசிக்கு அழைப்பு வர... அதில் தன் உறக்கம் கலைந்து அவன் எழவும்... இவள் வீட்டு வாசலில் காரை நிறுத்தவும் சரியாக இருந்தது.

அவன் குழந்தையுடன் இறங்க எத்தனிக்க, “ஒரு நிமிஷம்...” இவள் கணவனைத் தடுக்க

அவனோ அவள் புறம் கூட திரும்பாமல் என்ன என்பது போல் அமர்ந்திருக்கவும்... அவன் செயலில் திணறியவளோ... “தாங்க்ஸ்...” என்க...

மணவாளனுக்கு எதற்கு சொல்கிறாள் என்று புரிந்து தான் இருந்தது. இருந்தாலும் அவளை மேலும் திணறவைக்க நினைத்தவன், “எதுக்கு..” என்று கேட்டு வைக்க

“பட்டுவை அவ்வளவு தூரம் பார்த்துக்கிட்டீங்களே...”

இப்போதும் இறுகிய முகத்துடன் நேர்கொண்ட பார்வையில் அமர்ந்து இருந்தவனின் பார்வை கழுத்தில் கை கோர்த்தபடி தன் நெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் மகளிடம் விழ, “உனக்கு பட்டு மகள்னா... எனக்கும் மகள் தான். ஏன்னா நீ என் மனைவியாச்சே! இந்த ஜென்மத்திலே இது தான் என் வாழ்க்கை... இப்ப கூட நான் ஆஸ்பிட்டல் போயிருந்தப்போ DNA டெஸ்ட் எடுத்திருக்க முடியும்… அப்படி நான் செய்திருந்தா யாருக்கும் தெரியப் போறதும் இல்லை.. என்னைய தடுக்கவும் யாருமில்ல… ஆனா செய்யல.. இனியும் அதை செய்ய மாட்டேன் ஏன்னா.. என் அக்காவோட நிம்மதி எனக்கு முக்கியம்.. எல்லாம் அக்காவுக்காக...” சொன்னவன் படக்கென்று கார் கதவைத் திறந்து கொண்டு வெளியேறி விட...

கணவனின் புறக்கணிப்பில் இவ்வளவு நேரமிருந்த இதம் மறைய... இவளுக்குள் வலித்தது. “இந்த.. இந்த வார்த்தை தான் உங்களிடமிருந்து வரக் கூடாதுன்னு நான் நினைத்தேன் இளா...” என்று வாய்விட்டே சொல்லிக் கொண்ட பெண்ணவள் கார் ஸ்டியரிங்கிலேயே தலை சாய்த்து கண்ணீர் விட...

அங்கு வந்த சதீஷ், “அண்ணி இறங்குங்க... உங்களுக்காக தான் அக்கா வெயிட்டிங்...” கார் கண்ணாடியைத் தட்டி அவளை அழைக்க...

அதில் அவசரமாய் கண்ணீரைத் துடைத்தபடி இவள் இறங்கவும், “வாவ்! சூப்பர் அண்ணி.. உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?.. ஆனா நீங்க சொல்லவே இல்லயே” என்று அவன் சுட்டிக்காட்டிய போது தான் இவளுக்கு தான் செய்தது உரைத்தது..

‘ஆஹா.. ஆமால்ல! அவசரத்தில் மண்டை மேலே இருக்கிற கொண்டையை மறைக்க மறந்துட்டனே! அது தான் அவர் சாவியைக் குடுக்கும் போது நக்கலா பார்த்துகிட்டே குடுத்தாரா?.. ஆனா.. இதுக்கு மேலே யோசிச்சு ஒண்ணும் ஆக போறதில்லை.. அதான் தெரிஞ்சிடுச்சே!’ என்று அவள் மனதுக்குள் யோசிக்க..

“அண்ணி, என்ன அப்படியே நின்னுட்டீங்க.. பாப்பாவுக்கு தான் எல்லாம் சரியாச்சிடுச்சே... இன்னும் எதுக்கு கலங்குறீங்க...” வள்ளி அஸ்மிக்காக கலங்குகிறாளோ என்று இவன் நினைக்க...

அப்போதுதான் தன் யோசனையிலிருந்து வெளிவந்தவள்.. அவனுக்கு ஒரு தலை அசைப்பை கொடுத்து விட்டு வீட்டு வாசலுக்கு வர.. வாசலிலேயே அவளை பிடித்துக் கொண்ட மீனாட்சி... தம்பி குடும்பத்திற்கு ஆரத்தி சுற்றி முடித்த பின்னே மூவரையும் உள்ளே அனுப்பினாள் அவள். உள்ளே வந்த குமரன் அடுத்த நிமிடம் வேலையாட்களை உண்டு இல்லை என்று செய்து விட்டான்.


“வீட்டை என்ன தான் பராமரிக்கிறீங்க... குழந்தைக்கு இப்படி ஆகியிருக்குனா... அப்போ உங்க வேலையிலே சுத்தம் இல்லன்னு தானே அர்த்தம். இனி இதுபோல நடந்தா.... யாரா இருந்தாலும்.. என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..” என்று அவன் போட்ட அதட்டலிலும்.. கர்ஜனையிலும் எல்லோரும் பயந்து நடுங்கினார்கள் என்றால்... வள்ளியின் மனமோ சந்தோஷத்தில் மிதந்தது. பின்னே.. கணவன் மிரட்டுவது அவளின் மகளுக்காக அல்லவா...
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN