mm-4

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
MM-4


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ!
சிவந்த கன்னங்கள் ரோஜாப்பூ!
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ!
சிரிப்பு மல்லிகைப்பூ!


பாடலும் இசையும் மனதை வருடும் பொழுதெல்லாம் நம்மையும் அறியாமல் இனிய உணர்வொன்று நம் மனதில் ராஜாங்கம் கொண்டுவிடும்.

வெளியே ஒலிப்பெருக்கியில் ஊரையே ஆண்டு கொண்டிருந்த இசையோ பாடலோ என் மனதில் நுழைய வேண்டி பேராசை கொண்டிருந்தது போல் ஒவ்வொரு எழுத்தாக வார்த்தையாக வரியாக இதயங்களில் செருக ஆரம்பித்தது.

நிச்சயமாய் இவள் பெண்ணல்ல.மௌனமாய் மனதுக்குள் புகுந்து விளையாட துடிக்கும் மாய மோகினி. அடி முதல் நுனி வரை அப்படி என்ன தான் அளக்கிறாளோ தெரியவில்லை.

இவள் பக்கவாட்டு பார்வைக் கோணம் முழுதிலும் என் பிம்பத்தை மட்டுமே வாரிக் கொண்டிருக்கிறாள். இது எனக்கு பெரும் தவிப்பை தரும் என்பது கொஞ்சமாவது புரிகிறதா இவளுக்கு.

'இந்த நிலை உனக்கு பிடித்திருந்தால் ரசித்து தொலையேன். ஏன் புலம்பி தவிக்கிறாய் 'என்று என் மனம் மூலையில் முசுமுசுக்கிறது.

உண்மை தான்.ரசிக்கலாம் தான். இப்படியாகப்பட்ட நிலையில் முதல் முறை இருந்த போது ரசித்த என்னால் இப்பொழுது ரசிப்பதும் தவிப்பதும் பெரும் தவறென்றே தோணுகிறதே.

அம்சவேணி என்னை பார்ப்பது தெரிந்தும் நான் அவள் புறம் திரும்பாமல் கையில் இருந்த செண்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவள் புறம் தலை சாய்த்தேன்.

"ஏன் இப்படி பார்த்து வைக்கிறாய்? என்ன வேண்டும் உனக்கு?"என்று கேட்க நினைத்தேன். கேள்வி என் வாயை அடையும் முன் பாலை குடுத்து விட்டார்கள் அவள் கையில்.மனம் திக்கென்றது.

'இப்படியாகப்பட்ட சம்பிரதாயத்தை எல்லாம் எவன் கண்டு பிடித்தது. அவனுக்கு கொண்டு போய் ஊட்டுங்கள் இந்தப் பாலையும் பழத்தையும் '

பிடிக்கவே செய்யாத ஒரு பொருளை பிடிக்கவும் நினைக்காத சூழலில் எப்படி சாப்பிட முடியும். நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே என் வாயில் வைத்து விட்டாள் டம்ளரை.

மூக்கை பிடித்து டாணிக்கை குடிக்கும் மன நிலையில் குடித்து விட்டேன். இந்த மிச்சத்தை அவள் வேறு குடித்தாக வேண்டும். அதை நான் ஊட்ட வேறு செய்யணும்.

ஆயிற்று ஊட்டி முடித்தாயிற்று. அந்த சடங்கையும் செய்தாயிற்று. ஆனால் அதை செய்யும் போது மிக நெருக்கமாக அவள் முகத்தை பார்க்க நேரிட்டதில் இதயத்தில் 'திம் திம் ' மத்தள சத்தம்.வெளியில் சலனமற்ற பாவம்.

அப்படியான ஒரு பாவத்தை நாள் முழுதும் முகத்தில் வைத்திருக்க நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும். உணர்வுகளை வெளிக்காட்டா தோற்றத்திற்கு நிறைய மெனக்கெட்டேன்.

வரவேற்பில் புன்னகை முகமாய் அருகில் நின்றவளை ஸ்பரிசிக்கும் பொழுதுகளில் ஒற்றை வார்த்தையாவது பேசிவிடு என்று துடிக்கும் மனதினை அடக்கும் போதெல்லாம் 'நிச்சயமாய் இந்த பெண்ணுக்கு அநீதி செய்கிறாய் ஆனந்த் நீ 'என்று மனசாட்சி குத்தியெடுக்கிறது.

என் எண்ணங்களுக்கும் மனசாட்சிக்கும் நடுவில் போராடியே கலைத்து போனேன்.

வரவேற்பும் மற்ற வேலைகளும் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அம்சவேணியைப் பார்த்தேன். அவள் முகம், அவள் கண்கள், அவள் உடல் மொழி ஏன் இத்தனையாய் கசங்கி போகிறது?

ஆனால் அதை துளியும் வெளிக் காட்டாமல் வம்பிலுக்கும் தோரணையில் நீலாவிடம் விடை பெரும் போது 'அழுகை வந்தால் அழுது தொலையேன். ஏன் இப்படி உள்ளுக்குள் அடைத்து வைக்கிறாய்?' என்று எனக்கு கோவம் வந்தது.

இதோ இப்பொழுது கூட விழியில் மின்னும் பளபளப்பை மறைத்து கண்ணை சுழற்றி என்னை பார்த்தாளே ஒரு பார்வை. அதை எப்படி எதிர்கொள்வேன்.

'அம்சா!' என்று ஆழ்ந்து அழைத்து அவளையும் மலரையும் என் கை வளைவிற்குள் கொண்டு வராமல் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு ஒரு குற்றவாளி போல் நிற்கும் நான் எப்படி அவளை பார்ப்பேன்.

அம்சா விடைபெற்ற பின் காரில் ஏறி அமர்ந்தோம். ஜன்னலில் பற்றியிருந்த அவள் கையை பார்த்தேன். பற்றிக்கொள்ள வேண்டும் போல் தோணியது. அவளைப் பார்த்தேன். பின்னால் அவள் வீட்டை பார்ப்பாள் என்று தோன்றியது.

பாதியளவு நீண்ட என் கையை பார்த்தேன் . 'அவள் எதாவது தவறாக நினைத்து விட்டால்?' என்று மனதில் தோன்றியதும் நீண்ட கைகள் நடுங்கியது.சட்டென இறக்கி கொண்டேன் கையை. இரு கையையும் இறுக பிடித்து மடியில் வைத்துக் கொண்டேன். என்னையும் மீறி நீண்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்.

அம்சா காருக்குள் பார்வையை திருப்பிய நொடி வெளியில் பார்த்திருந்தேன். வீடு வரும் வரையிலுமே அவள் புறம் திரும்பவில்லை.ஆரத்தி முடிந்து மலரை படுக்க வைத்து நானும் குளிக்கவென குளியல் அறைக்குள் நுழைந்தவன் ஆசுவாசமாய் மூச்சை இழுத்து விட்டேன்.

கண்களை மூடி ஷவரின் அடியில் நின்ற பொழுது மனம் மெல்ல கரையும் உணர்வை கொண்டேன். திண்டாட்டம் கொண்டிருக்கும் மனம் கொண்டாட்டம் கொள்ளும் வரையிலும் இந்த விலகல் எனக்கு அவசியம் என்று தான் தோன்றியது.

குளித்து முடித்து அம்மாவிடம் சொல்லிவிட்டு மொட்டை மாடியில் இருந்த அறைக்குள் லேப்டாப்பும் கையுமாய் அமர்ந்து விட்டேன். என்னுடைய படிப்பு சம்பந்தமான ஆய்வுக் கட்டூரையில் நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருந்தது.

வெளியே மேகம் தூரல் போட, அந்த குழுமையும், மழையின் சத்தமும் என்னை தட்டி தூங்க வைக்க போதுமானதாக அமையவே சற்றே கண்ணயர்ந்து விட்டேன்.

கருமை நிற அடர்ந்த வானவில்லின் கீழே துள்ளும் மீனாய் இரு கண்கள் காந்தமென என்னையே ஈர்க்கிறது. எச்சில் விழுங்கி அவஸ்தையாய் தவிர்க்கப் பார்க்கிறேன். அங்கும் இங்கும் அலை பாய்ந்து மீண்டும் அந்த மீன்களிடமே சரணடைந்தேன் நான்.

அந்த கருப்பு வானவில்லின் மீது என் கட்டைவிரல் மென்மையாய் பயணிக்கிறது. முடிவில் மீனின் அடர்ந்த வாலாய் இமை முடிகள் ஈரத்தில் ஒட்டி பட படக்கிறது. அந்த ஈரத்தை என் கன்னம் கொண்டு துடைக்க எண்ணி முகத்தை அருகில் கொண்டு செல்ல கண்களை என் கன்னம் தீண்டும் முன்னே முந்திரிக் கொட்டையாய் முன்னேறியிருந்தது என் அதரங்கள்.

சிலிர்த்து விழித்தேன் நான். 'நல்ல வேளை கனவு' என்று நினைத்துக்கொண்டே திரும்ப எதிரில் அம்சா நின்றிருந்தாள். அந்த நேரத்தில் அவளைக் கண்டதும் எழுந்து நின்றுவிட்டேன்.அவள் கண்களை பார்த்தேன் ஈரமில்லாமல் படபடத்தது. எனக்கோ உள்ளுக்குள் குழைந்தது. 'அடேய் மடையா எதாவது பேசித் தொலை'.

"என்ன வேணும்"சாதாரண கேள்வி தான். ஆனால் இதை என் வாயில் இருந்து தள்ளி விடுவதற்குள் பத்து விக்ஸ் மிட்டாயாவது சாப்பிட்டுருக்க வேண்டும். தொண்டையில் அப்படி ஒரு கிச் கிச். பின்னே கண்ட கனவு அப்படி.

அம்மா என்னை சாப்பிட வரச்சொன்னதாக அவள் இயல்பாய் பதில் அளித்து விட்டாள். நான் தான் அவள் கண்ணையே அதன் இமைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மேலன்னம் வேறு வேர்க்கிறது.அவள் என் முகத்தையே பார்க்கவில்லை.

நல்லவேளை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் என் விழுங்கும் பார்வைக்கு நிச்சயம் ஒரு முறைப்பு கிடைத்திருக்கும்.

"நீ போ வரேன் "என்றுவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டேன். குளிர்ந்த நீரை முகத்தில் சுள்ளென அடித்துக் கொண்டே 'நிதானமா இரு ஆனந்த்' எனக்கே நான் சொல்லிக்கொண்டேன்.

முகத்தை துடைத்து விட்டு வெளியே வரும்பொழுது அம்சவேணி அங்கு இல்லை. போ என்றதும் உடனே போய் விடறதா? எனக்குள் சின்னதாய் ஒரு ஏமாற்றம் குமிழ் விட்டது.

'அவளுக்கு ஏற்றதாய் ஒரு துரும்பைக் கூட நீ அசைக்காத பட்சத்தில் உன்னுடைய எதிர்பார்ப்பில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை ஆனந்த்'

என் மனமே இத்தனை நியாயமாய் கேட்கும் பொழுது நானும் ஏற்கத்தானே வேண்டும். ஒரு பெருமூச்சுடன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.

சுவரில் சாய்ந்து நீல மயிலென நின்றிருந்தவளை இமை கொட்டாமல் பார்த்தேன். வெளியே பெய்து கொண்டிருந்த மழையைவிட இந்த பெண்ணின் செயல் அத்தனை இதமாய் என்னை நனைத்துப் போயிருந்தது.

புடவை முந்தியையும் கொசுவத்தையும் ஒரு சேர தூக்கிப் பிடித்தபடி குடையை ஆட்டி ஆட்டி விளையாடுகையில் கையிலிருக்கும் குடையாய் மாறிப்போனது என் இதயம்.

ப்பா! மழையும் இவளும் நம்மை நொடியில் மலர வைப்பதில் கில்லாடிகள் என்று நினைத்துக்கொண்டேன்.

" நீ இன்னும் போகலையா?" என்று நான் கேட்டதும் என்னை திரும்பிப்பார்த்தாள்.

"இன்னொரு குடை இல்ல. அதான் வெயிட் பண்ணேன். வாங்க போலாம்" என்று அவள் சொல்லவும்,

"இல்ல பரவாயில்ல போ. நான் வேகமா இறங்கி வந்துருவேன்." என்று சட்டென சொல்லியிருந்தேன்.

"இல்ல வாங்க இதுலயே போலாம்'' என்ற அவள் பதிலில் இந்தப் பெண்ணுக்கு சற்று பிடிவாதம் அதிகம் என்றே தோன்றியது. ஒரே குடையில் ஒன்றாக செல்ல இன்னமும் என் மனம் தயங்கிக்கொண்டிருந்த வேளையில் அவள் என்னை முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவளின் பொறுமையை நிறைய சோதிக்கிறோமோ என்று தோன்றவும்' நானும் வருகிறேன்' என்றவாரு அவளுடன் இணைந்து கொண்டேன்.என் தோளுக்கும் கீழான உயரத்தில் இருந்தவள் எனக்கும் சேர்த்து குடை பிடிக்க சற்று சிரமப்படுவதை கண்டதும் அவள் கையிலிருந்த குடையை நான் வாங்கிக்கொண்டேன்.

'தேவியை விட இவள் குட்டை' சட்டென மனதில் தோன்றிய ஒப்பீட்டில் என் கைகள் இறுகியது. இந்த எண்ணம் எப்பொழுது விட்டொழியுமோ அப்போதுதான் அம்சவேணியை முழுமனதோடு ஏற்க முடியும் என்றே தோன்றியது.

தெரிந்தோ தெரியாமலோ கூட அம்சவேணியை காயப்படுத்தி விடக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் என்னால் காயப்பட்டுப் போவாள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

என் மனதுடன் நான் போராடிக்கொண்டிருக்கும் போதே அம்சவேணி என்னை விட்டு வேகமாய் இறங்கிப் போயிருந்தாள். குடையை வெளியே வைத்து உள்ளே வந்தேன். மலருக்கு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்த என் அத்தை சீதாவைப் பார்த்தேன்.

மனதிற்குள் ஒரு சங்கட உணர்வு எழுவதை தடுக்க முடியவில்லை. அமைதியாக சாப்பிட்டு முடித்துவிட்டு எங்கள் அறைக்குள் நுழைந்தேன். மேஜையின் ஓரத்தில் இருந்த பழத்தட்டு என்னைப் பார்த்து சிரித்தது.

திருமணத்திற்கு தேதி குறிக்கும்போதே இதற்கும் சேர்த்து குறித்து தந்துவிடுகின்றனர். என் மனநிலை பற்றி அவனுக்கென்ன கவலை என்று எண்ணிக் கொண்டே தரையில் தலையணையை போட்டு படுத்து விட்டேன்.

வெளியே மழை கொட்டித் தீர்த்து அமைதியாகியிருந்தது. என் மனதிற்க்குள்ளோ இடியும் மின்னலும் ஆரம்பம் ஆனது. சற்று.நேரத்தில் அம்சவேணியின் வரவை உணர்த்தும் விழி திறக்கவில்லை. எனக்குள் நான் போட்டுக்கொண்ட பூட்டுகளுடனே உறங்கியும் போனேன்.

மிகவும் இறுக்கத்துடன் தூங்கியதாலேயே ஒரே நிலையிலேயே இருந்திருப்பேன் போல. இரவின் இடையில் எழும்போது கை விருத்துப் போயிருந்தது. எழுந்து அமர்ந்து கையை உதரும் போதுதான் அம்சவேணியைப் பார்த்தேன். சேரில் அமர்ந்த வாக்கிலேயே உறங்கிப் போயிருந்தாள்.

மணியைப் பார்த்தேன் இரண்டாகியிருந்தது. 'இவ்வளவு நேரம் இதிலேயே தூங்கிவிட்டாளா?' எழுந்து அவளிடம் சென்றேன். எழுப்ப நினைத்தால் நன்றாக தூங்கிக்கொண்டிருப்பவளை எழுப்பி விட மனது வரவில்லை. அப்படியே விடவும் மனதில்லை.

அவள் எழுந்துவிடாதவாறு மெல்ல தூக்கி படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நான் கீழே வந்து படுத்துக்கொண்டேன். மழைத்தூறல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இதயத்தில் இடறிவிழ ஆரம்பித்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN