ஈரவிழிகள் 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வந்திருக்கும் வெளிநாட்டுக் குழுவினருடன் இன்று தம் தோட்டத்து மண்ணின் அருமை பெருமைகளை விளக்கிக் கொண்டிருந்தான் குமரன். அந்நேரம் அவன் கைப்பேசிக்கு அழைப்பு வர... எடுத்துப் பார்த்தவனின் நெற்றியோ சுருங்கியது. அது ஏனென்றால் கைப்பேசியில் “பட்டும்மா...” என்று ஒளிர்ந்தது தான் காரணம். அதாவது... தற்போது அவனை அழைப்பது அவனின் மனைவி வள்ளி. அவளின் பெயரைத் தான் பட்டுவின் அம்மா என்ற குறியீட்டில் “பட்டும்மா...” என்று பதித்து வைத்திருக்கிறான். அவளுக்கு போன் வாங்கித் தந்த இத்தனை நாளில் இன்று தான் முதன் முதலாக கணவனை அழைக்கிறாள்.

இப்படி ஒரு ஜீவன் தன் வீட்டில் இருப்பதையே மறந்திருந்த நிலையில் அழைப்பு வரவும்.. இவன் யோசனையுடனே அழைப்பை ஏற்க... “குமரா.. எங்க இருக்க.. செத்த வீட்டுக்கு வா...” என்று தமக்கை பரபரப்பாய் அழைக்கவும்

“நம்ம தோட்டத்துல தான் க்கா.. என்ன இப்படி பதட்டமா பேசுற.. என்ன நடந்துச்சு....”

“நீ வீட்டுக்கு வா... வள்ளி...”

இப்போது தான் வள்ளி போனிலியிருந்து தமக்கை பேசி கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டவன், “வள்ளி... வள்ளிக்கு என்ன க்கா... இதோ நான் வரேன்...” அதற்கு மேல் தாமதிக்காமல் அவசரமாய் அவளுக்கு பதில் தந்தவன்... அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு விரைந்தவன்.

தமக்கையின் அறையில் கால் பதிக்க அங்கு கண்ட காட்சியில்... அடுத்து செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க. அதெல்லாம் ஒரு நொடி தான்... அடுத்த நொடி, “வள்ளிக்கு என்ன க்கா...” என்ற கேள்வியுடன் இவன் மனைவியை நெருங்கியிருக்க

“தெரியல டா... எனக்கு பழம் எடுத்துகிட்டு வந்தா... அவ்வளவு தான் மயங்கி விழுந்துட்டா... பேச்சு மூச்சே இல்ல.. எனக்கு பயமா இருக்கு டா... குமரா...”

“ஒண்ணும் இருக்காது க்கா... பயப்படாத...” அதை தமக்கைக்கு மட்டும் இல்லாமல் தனக்குமாய் சொல்லிக் கொண்டவன்... மனைவியின் முகத்தை நீரால் துடைத்து பின் அவள் கன்னம் தட்டி அழைக்க.. ம்ஹும்... எதற்கும் அவளிடம் அசைவில்லை.

சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனை செல்ல.. மனைவியை இவன் தன் கைகளில் அள்ள... அவனால் ஒரு அடி கூட நகர முடியவில்லை... அவனையும் மீறி அவன் உடல் நடுங்கியது. அதிலும் பலமிழந்து அவன் கால்கள் துவண்டது... கரங்களின் நடுக்கம் அப்பட்டமாய் அவனுக்கே தெரிந்தது. ஏன்... ஏன் இப்படி.. அவனுக்கு புரியவில்லை.

தன்னை சமாளித்தவன், “அக்கா... நான் ஆஸ்பிட்டல் போறேன்...” இதை சொல்லும்போதும் அவன் குரல் நடுங்கியது. ஏன்... மீண்டும் தன்னையே கேட்டுக் கொண்டான்.

மீனாட்சிக்கு இன்னும் முறிந்த பாதம் சரியாகவில்லை என்பதால், “பார்த்து கவனமா... போ டா...” கலங்கிய குரலில் அவள் சொல்லி அனுப்ப

மனைவியை ஏந்திய படி வாசலுக்கு வரவே அவனுக்கு பிரம்மப்பிரயத்தனமாய் இருந்தது. நல்லவேளையாய் வந்திருந்த குழுவினருக்காக டிரைவரை வரச் சொல்லியிருந்தான்... இப்போது அவனிருக்கும் நிலையில் தன்னால் வாகனத்தை ஓட்ட முடியாது என்பதை அறிந்தவன்,

“அண்ணா.. ஆஸ்பிட்டல் போகணும் சீக்கிரம் வண்டியை எடுங்க..” அவசரமாய் அவருக்கு உத்தரவியிட்டவன்... பின்சீட்டில் மனைவியுடன் தானும் அமர்ந்து விட... பிறகு அவனுக்கு உலகமே மறந்து போனது.

தன் நெஞ்சோடு மனைவியை இறுக்கிக் கொண்டு அவளின் இதய துடிப்பை இவன் அறிய முற்பட்டானோ... அல்லது தன் வலியையும் வேதனையும்... கலக்கத்தையும் அவளுள் செலுத்த முற்பட்டானோ... எதுவோ ஒன்று... இதுவரை இப்படி ஒரு உணர்வு அவனை ஆட்கொண்டதேயில்லை. சொல்ல முடியாத ஏதோ ஒரு பாவம் அவனுள் குடிபுகுந்திருக்க.

விழி மூடி... மனைவியின் நெற்றியோடு தன் நெற்றி முட்ட... அவளைத் தன் கரங்களில் பற்றியிருந்த ஒவ்வோர் நொடியும் அவன் இதயம் முணுமுணுத்த வார்த்தைகள்.. “தாயி... என்னைய பாரும்மா... என்ன ஆச்சு தாயி உனக்கு... உன் முகத்தை கூட பார்க்காம போனதுக்கு... எனக்கு எதுவும் தண்டனை கொடுத்துடாத தாயி... என்னால தாங்கிக்க முடியாது....” அது ஏன் முடியாது... அதைப் பற்றி பிரித்து அறியும் நிலையில் தான் தற்போது அவனில்லை.

“சின்னையா ஆஸ்பிட்டல் வந்தாச்சுங்க...” டிரைவரின் வார்த்தையில் விழித்தவன் பின் நடப்பு புரிய... அவசரமாய்... உள்ளே சென்று மனைவியை அவசரப்பிரிவில் சேர்த்தவன்.. ஏதோ உயிரற்ற கூடாய் வெளியே அமர்ந்திருந்தவனுக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய் கழிந்தது...

‘நான் என்ன செய்து வச்சிருக்கேன்... என் வீட்டு ஆளுங்க என் அக்காவுக்கு செய்த அநியாயத்தையும், கொடுமையும் தானே... இன்னைக்கு நானும் இந்த புள்ளைக்கு செஞ்சிருக்கேன்... தாலி கட்டுன பொண்டாட்டியைக் காபந்து பண்றது கணவனோட கடமைதானே... எனக்கான கடமையிலும் ... கவலையிலும்... அவளுக்கான அக்கறையில் நான் கவனம் செலுத்தாம போனது என் தப்புதானே... அப்போ நானும் சராசரி புருஷனா நடந்துகிட்டனா...’ அவன் மனசாட்சியே இப்படியாக அவனை வாள் கொண்டு அறுக்க...

“சார்... டாக்டர்... உங்களை கூப்பிடுறார்...” நர்ஸ் வந்து அழைக்கவும்

ஒருவித பதட்டத்துடனே இவன் அறையினுள்ளே பிரவேசிக்க, “நீங்க இவங்களுக்கு என்ன உறவுங்க...” சற்றே அதட்டலுடன் கேட்டார் அந்த பெண் மருத்துவர்.

அவர் கேட்ட தொனியில் இவன் உதடுகளோ “she is my wife...” என்று ஆங்கிலத்தில் பதில் தரவும்

“ஒஹ்... படிச்சவர்னு நிரூபிக்கிறீங்களா.... என்ன படிச்சு என்ன சார்... பொண்டாட்டிக்கு நேரத்துக்கு வீட்டிலே உணவு தர மாட்டீங்களா... அவ்வளவு கல்நெஞ்சுக்காரரா நீங்க.. உங்க மனைவி ரொம்ப வீக்கா இருக்காங்க... அவங்க சாப்பிட்டே எத்தனை நாள் ஆகுதுன்னு தெரியல. ஒழுங்கா.. அவங்களுக்கு நேரத்துக்கு ஆகாரம் கொடுங்க சார்... மனைவி சாப்பிட்டாளா இல்லையான்னு தெரிஞ்சிக்காம கூட நீங்க எல்லாம் எந்த நாட்டை தூக்கி நிறுத்தப் போறீங்களோ...” காட்டமாக பேசிய அந்த மருத்துவர் வெளியே சென்று விட

ஏற்கனவே முதலுதவி செய்ய முற்பட்டபோதே... மயக்கத்திலிருந்து லேசாய் விழித்திருந்த வள்ளி... தற்போது மருத்துவரின் அதட்டல் குரலில்... முழுமையாய் விழித்துக் கொண்டவளோ.. கணவனைக் கண்டு அவசரமாய் எழ முயற்சிக்க.. “ஷ்ஷ்.... ஹாஆ...” அவளின் முணுங்களில்

“யெம்மா... கொஞ்சம் படுத்தே இருங்க ம்மா.. புருஷன் மேல பயம் இருக்க வேண்டியது தான் அதுக்காக... டிரிப்ஸ் ஏறிட்டு இருக்கும்போது எழலாமா...” அங்கிருந்த தாதி பெண் முகத்தை அஷ்ட கோணத்தில் வைத்துக் கொண்டு மிரட்டியவள் வெளியே சென்று விட

அதில் அவசரமாய் படுக்கையில் சாய்ந்தவள் கணவனைக் காண... அவனோ இவளைத் தீயாய் உறுத்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே இவளை சரியாய் கவனித்துக் கொள்ளவில்லையோ என்ற குற்றவுணர்வில் தவித்து கொண்டிருந்தவனுக்கு... தற்போது மருத்துவரும் தாதி பெண்ணும் பேசிய பேச்சுக்கள் அவனுக்குள் இன்னும் அதை அதிகரிக்க செய்ய.. தன்மேல் உள்ள கோபத்தில் இவ்வளவு நேரம் தவித்த தவிப்புக்கு வடிகாலாக,

“எது.. சோறு வடிக்க தெரிஞ்சவளுக்கு அதை நேரத்துக்கு சாப்புட தெரியாதா... என்ன நான் வந்து உனக்கு ஊட்டி விடணுமா... இல்ல மனசுல வேற ஏதாவது திட்டம் வச்சிருக்கியா... என்னைய எப்படி எப்படியோ அசிங்கப்படுத்தி பார்த்த... அதெல்லாம் ஓண்ணும் வேலைக்கு ஆகல. அதான்.. இப்போ நீ உன்னைய முடிச்சிகிட்டு என்னைய ஜெயிலுக்கு அனுப்ப பார்க்கறீயா... அதுக்கு தானே இந்த நாடகம்? நடத்து.. நீயும் எம்புட்டு தூரம் போறேன்னு நானும் பார்க்கறேன்...” அடக்கப்பட்ட கோபத்தில் வார்த்தை கங்குகளைக் கொட்டியவனோ... பெண்ணவளின் மனதை காயப்படுத்தியதை உணராமலே விருட்டென அங்கிருந்து விலகியிருந்தான்.

“சரியா ஆகாரம் எடுத்துக்கலையாம்... ஊருக்கே இவ புருஷன்.. நான் சோறு போடறேன்... என் பொஞ்சாதி இவ திங்காம பட்டினி கிடப்பாளாம்... அப்பறம் நான் எதுக்கு புருஷன்னு சொல்லிகிட்டு மீசையை முறுக்கிட்டு திரியணும்.. ஏன் டி... ஏன் டி... இப்படி செஞ்ச... உன்னைய அப்படி பார்த்ததிலிருந்து... என்னென்னமோ யோசித்து என் உசுரு என் கிட்ட இல்லையே டி... கடைசியிலே.. நீ ஆகாரம் எடுத்துக்கலன்னு இங்க சொல்றாங்க. எனக்கு எப்படி இருக்கும்... உனக்கு ஒண்ணுனா உன் புருஷனுக்கு வலிக்கும்னு உனக்கு தோணவே இல்லையா டி...” தலை குனிந்து… தலையை கரங்களில் பற்றியபடி அமர்ந்திருந்தவனின் உதடுகள் இப்படி எல்லாம் முணுமுணுக்க... அதில் தான் சொன்ன கடைசி வாக்கியத்தில் விளுக்கென்று நிமிர்ந்தான் இவன்..

“அப்.. அப்போ.. அப்போ... நான் இவளை என் பொண்டாட்டியா ஏத்துகிட்டேனா... அதுவும் என் உயிரானவளா... இது எப்படி சாத்தியம்...” அவனின் சிந்தனையை தடை செய்தது

“இந்தாங்க சார்... இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க... அப்படியே அவங்களுக்கு ஜூஸ் வாங்கிட்டு வந்து வச்சுக்கங்க சார்.. ட்ரிப்ஸ் முடிஞ்சதும் குடுங்க.. பொண்டாட்டி பசியிலே மயங்கிட்டான்னு சொல்றோம்... நீங்க என்னன்னா உட்கார்ந்துட்டு இருக்கீங்க... என்னமோ போங்க சார்...” தாதி பெண் அவனை விரட்ட.. தன் எண்ண ஓட்டத்தை நிறுத்தியவனாக அங்கிருந்து கிளம்பியிருந்தான் குமரன்.

அதன்பின் அவன் தன் உணர்வுக்கு என்னென்னமோ பெயரிட்டு மனதை அடக்க பார்த்தான்... ஆனால் அவன் எத்தனை முறை எத்தனையோ கோணத்தில் சிந்தித்தும் அவனுக்கு கிடைத்தது.. தான் மனைவியை விரும்புகிறோம். இது எப்படி சாத்தியம் என்றெல்லாம் யோசிக்க அவன் தயாராக இல்லை. யோசித்தும் தான் பயனில்லையே.. கிடைத்த விஷயம் மனதிற்கு உவர்ப்பானதாய் இருக்கவும்... அவனுக்கே அவஸ்தை தான்.

இவனிடம் தாலி வாங்கி அவள் வீட்டிற்கு வந்ததிலிருந்து தன் மனைவி என்ற நிலைப்பாட்டில் இவன் அவளைப் பார்த்ததில்லை. ஏன், இந்த ஒருமாத காலமும் அவள் நினைவேயில்லாமல் தான் இருந்தான். அவசியம் இருக்கும் பட்சத்தில் இவன் வீட்டிற்கு வந்த போது கூட இவன் மனைவியைக் காணவில்லை... காண விரும்பவில்லை.. அப்படி கண்ணிலும் கருத்திலும் படாமல் இருந்ததால் தான்... இன்று இவனுக்குள் புகுந்து விட்டாளோ? என்னமோ புகுந்துவிட்டாள்... சரி அவன் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தும் விட்டவளை இனி என்ன செய்யப் போகிறான்.. அவனுக்கு தான் தமக்கைக்காக செய்ய வேண்டிய கடமைகள் காத்திருக்கிறதே... இந்த நேரத்தில்.. அவன் மனதில் காதல் பூத்தால்...

“ஊஹும்... நான் இப்போ எதையும் அவகிட்ட வெளிக்காட்டிக்க மாட்டேன் கொஞ்ச நாள் எனக்குள்ளயே இருக்கட்டும்...” இது தான் குமரனின் தற்போதைய நிலைப்பாடாக இருந்தது... ஆனால் அவன் நினைப்பதா இங்கு நடக்கிறது...

முன்பே மனைவியை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்தியவன்.... தற்போது காதலே அறியாமல் இருந்தவனுக்கு காதலை கொடுத்தவளை சும்மா விடுவானா... அதிலும் உயிருக்கு உயிரானவளை..

இதோ மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த மறுநாளே தன் வேலைகளை ஆரம்பித்து விட்டாள் வள்ளி. மீனாட்சியும்... கார்மேகமும்... எவ்வளவோ தடுத்துப் பார்க்க... அந்நேரத்துக்கு சரி சரி என்று மண்டையை உருட்டுபவள்... பின் சத்தமில்லாமல் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அவளுக்குள் ஒரு தீ எரிந்து கொண்டிருந்தது... அது எப்போது அணையுமோ.. அன்று தான் அவளிடம் உள்ள பிடிவாதமும் விலகும்.

இவன் கையில் சின்னதாய் ஒரு மண் குடுவையுடன் மனைவி அறைக்குள் பிரவேசிக்க... அவளோ கணவன் வந்தது கூட அறியாமல் மும்முரமாய் கைவேலையில் இருக்க.. தன்னவளை ஊன்றிக் கண்டவனுக்கு அப்போது தான் அவனுள் பதிந்தது பெண்ணவளின் மெலிவு... ‘வந்ததுக்கு... இப்போ எப்படி மெலிஞ்சிருக்கா... அதனால தான்.. இவளை நான் கையில அள்ளும்போதும் குழந்தை கணக்கா... இருந்தாளோ...’ தனக்குள் கேட்டுக் கொண்டவன்

“க்கும்...” தான் வந்ததை அவளுக்கு தெரிவிக்க..

குரலுக்கு திரும்பிப் பார்த்தவள்.. அங்கு கணவனைக் காணவும், ‘இவர் எப்போ வந்தாரு...’ என்ற நினைப்பில் அவள் அமைதியாய் நிற்க

அவள் பேசுவாள் என்று இவன் நிற்க... அதிலே நேரம் நகரவும்.. ஒரு கட்டத்திற்கு மேல்... இவள் எதுவும் பேசாமல் தன் வேலையைக் காண நகர எத்தனிக்கவும்.. உடனே அவளை மறித்தார் போல குடுவையை இவன் நீட்ட

“என்ன இது...”

“மருந்து..” அவனின் பதிலில்...

‘ஓஹ்... அண்ணிக்கு போல..’ என்ற நினைப்பில்... அதை வாங்க... தன் கரத்தை இவள் உயர்த்திய நேரம்...

“உனக்கு தான்...” அடுத்து கணவன் சொன்ன வாக்கியத்தில்... இவள் கரங்களோ... தன்னிச்சையாய் பின்னுக்கு நகர்ந்தது.

அதில்.. புருவ மத்தியில் முடிச்சிட... “வாங்கிக்கோ...” இவன் அதட்டலிட

“இல்ல எனக்குன்னா வேணாம்...” இவள் உறுதியாய் மறுக்க

“ஏன்.. எதுக்கு வேணாம்... பாரு.. எப்படி மெலிஞ்சி இருக்கேன்னு... ஒழுங்கா வாங்கிக்க...” என்று மிரட்டலோடு சொன்னவன்... தன்னவள் கைப்பற்றி... குடுவையைக் கொடுக்க...

அவளோ வலுக்கட்டாயமாய் தன் விரல்களை இறுக்க மூடிக் கொண்டவள் “ம்ஹும்... வேணாம்... நான் சாக மாட்டேன்.. அப்படியே நான் செத்துட்டாலும்... உங்களுக்கு பிரச்சனை வராது... நான் செத்தா என் சாவுக்கு நீங்க காரணம் இல்லைன்னு லெட்டர் எழுதி வெச்சிட்டேன்.... கவலைப்படாதீங்க...” அன்று கணவன் சொன்ன வார்த்தைகளை நினைத்து இன்றும் தொண்டை அடைத்தது பெண்ணவளுக்கு. அன்று தான் இருந்த நிலையில் ஒரு அன்பான வார்த்தை கூட வேண்டாம் அதற்காக அப்படி நெருப்பை அள்ளி கொட்டலாமா...

மனைவி சொன்ன வார்த்தையில் பதறியவன்... கையிலிருந்த குடுவையை அவசரமாய் அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு... ஒருவித வேகத்துடன் தன்னவளை கட்டிகொண்டவன் “ச்சீ... பைத்தியம் என்ன வார்த்தை சொல்லிட்ட டி... நான் ஒரு வேகத்துல சொன்னதை எல்லாம் தலைல தூக்கி சுமப்பியா... அன்னைக்கு உனக்கு எம்புட்டு வலிச்சிருக்கும்னு இப்போ எனக்கு புரியுது டி.. அதுக்கு பெறகு நான் அத நெனச்சு வெசனப்ட்டது எனக்கு மட்டும் தான் டி தெரியும்.. ” இன்னும் இன்னும் அவன் அவளைத் தன்னுள் புதைத்துக் கொள்ள...

அதில் கணவனின் நடுக்கத்தை உணர்ந்தவளுக்கோ... ஆச்சரியம்! ‘இவரா.. இவரா இப்போ இப்படி பேசினார்... ஒருவேளை வழக்கம்போல கனவோ?’ சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இவள் அவனையே கிள்ள வைக்க...

“ஹாஹ்... என்ன டி...” இவன் தன்னவளின் முகம் நிமிர்த்தி கேட்க

‘என்னது.. டி.. யா...’ இன்னும் நம்ப முடியாமல்... இவள் தன் விழிகளை விரிக்க... அவள் பாவனையில்

“என்ன டா..” இவன் உருக.. இல்ல இல்ல கொஞ்ச.. இவள் இன்னும் விழிகளை விரித்தவள்... இன்பமாய் அதிர...

தன்னவளின் நினைப்பை அவளின் வதனம் அவனுக்கு காட்டிக் கொடுத்து விட.. அவளின் முகத்தை தன் நெஞ்சில் புதைத்து கொண்டவன்...

“அப்படி பார்க்காத டி... இது கனவு இல்ல... நெசம் தான்... நீ என் பொஞ்சாதி... நான் உன் புருஷன்... இப்படி எல்லாம் நடக்காதுன்னு நெனச்சிட்டு திமிரா இருந்த இந்த இளங்குமரன் தான் இப்போ அதையே செஞ்சுகிட்டு இருக்கான்.. இது நெசம் தான்...” தன்னவளின் உச்சந்தலையில் தன் கன்னம் தாங்கி அவன் சொல்ல சொல்ல... இவளுக்குள் எதுவோ புரிவதாய் இருந்தது... இருந்தாலும் நம்ப முடியாமல்.. அவன் அணைப்பில் கட்டுண்டு இருந்தாள்... மறந்தும் தன்னவனை இவள் அணைத்து கொள்ளவில்லை.

குமரன் தன் மனைவியைக் காதலிக்கிறான்... அந்த காதல் எப்போ... என்று... எப்படி வந்ததுன்னு... என்று அவளே அவனைக் கேட்டால்... “வந்துடுச்சு... விடுவியா...” இது தான் அவனின் பதிலாக இருக்கும். பின்ன.. அவனே ஆராயாத விசயத்தை... அப்படி ஆராய்ந்தாலும் விடை கிடைக்காத விஷயத்தை இவள் கேட்டால்..

“வந்ததுக்கு இப்ப ரொம்ப மெலிஞ்சி போய்ட்ட டி.. உன்னைய இப்படி பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு டி” அவன் தன் நிலையிலிருந்து சற்றும் விலகாமல் சொல்லிக் கொண்டிருக்க..

அந்நேரம் “ப்பா....” மகளின் குரல் மட்டும் இல்லாமல்... அவள் அவனின் காலையும் கட்டிக் கொள்ள.. இவன் அவசரமாய் தன்னவளை விட்டுப் பிரிய எத்தனிக்க...

அந்த குட்டி வாண்டோ, “ஹிஹிஹி” என்று இரு கைகளாலும் வாய் பொத்தி தந்தையைப் பார்த்து கேலியாய் சிரிக்கவும்.. அப்போது தான் சுயம் பெற்றவன் கவனித்தான்... தான் இதுவரை நடந்து கொண்டது... பேசியது எல்லாம் கனவில் என்று... அதிலும் வெறுமனே காற்றில் தன் கரத்தால் துழாவியிருக்கிறான் அதைப் பார்த்து தான் மகள் சிரித்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்.. மனைவியைக் காண அவளோ விழித்த படி எதிரே தள்ளி நின்றிருந்தாள்..

‘ச்சே! எல்லாம் கற்பனையா? சரியா போச்சு.. நமக்கும் இந்த வியாதி வந்துடுச்சே.. அதெப்படி காதல் வந்தா இதெல்லாம் தன்னாலே வந்துடும் போல.. ஆனா நல்ல வேளை.. அவகிட்ட எதையும் வெளிப்படுத்தல..’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் தானே தலையில் தட்டிக் கொள்ள..

‘என்னாச்சு இவருக்கு.. செய்கை எல்லாம் ஏதோ வித்தியாசமா இருக்கே.. அய்யய்யோ! காத்து கருப்பு ஏதாவது அடிச்சிடுச்சோ.. எதுக்கும் அண்ணிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவோமோ?’ என்று வள்ளியோ மனதில் யோசிக்கவும்..

தன்னிலை உணர்ந்தவனோ, “பட்டு...” என்ற படி மகளைத் தன் கரங்களில் அள்ளிக் கொள்ள... அவளோ தந்தையிடம் கதை பேச..

வாய் பேச்சு என்னமோ மகளிடம் இருக்க... மனைவியைத் திரும்பிப் பார்த்தவன்... அவள் இன்னும் திகைத்து நின்றிருப்பதைக் கண்டு... “எங்க ஊர் வைத்தியர் கிட்ட கேட்டு இந்த மருந்தை வாங்கிட்டு வந்தேன்... இதை காலையில வெறும் வயித்துல ஆட்டுப்பால் கலந்து குடிக்கணும். நாளையிலிருந்து ஆட்டுப்பால் கொடுக்க சொல்லியிருக்கேன்... ஒழுங்கா தினமும் அத குடி... புரியுதா.. குடிக்காம முரண்டு புடிக்கற சோலி எல்லாம் வச்சுக்காத... பெறகு நான் தான் பட்டுக்கு மருந்து கொடுக்கிற மாதிரி உனக்கு கொடுப்பேன்... சொல்லிட்டேன்” என்று வெளியே அதட்டியவனோ

‘திரும்ப உன்னைய பழைய மாதிரி பார்த்தா தான் டி எனக்கு நிம்மதி’ என்று உள்ளுக்குள் மருகிய படி மகளுடன் அங்கிருந்து விலகி இருந்தான்.

குமரன் இப்போதைக்கு மனைவியிடம் தன் காதலைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் மனைவியின் குமுறல்... அவனையும் மீறி கற்பனையாக தன்னவளுடன் ஒன்றவைத்தது. அவள் யார் என்று தெரியாமலே காதல் கொண்டவன்... வள்ளியைப் பற்றி தெரிந்தபிறகு... இதே காதல் அவனுக்குள் நிலைக்குமா?...
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super akka oru valia unga hero kumaranuku love vanthuruchi na Valli pakkam than
வேற option ah அவனுக்கு இல்லை டா😃😃😃 நானும் வள்ளி பக்கம் தான் டா🤗🤗💞💞🌹🌹🙌🙌
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN