ஈரவிழிகள் 23

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தமக்கை சொன்ன ஒரு வார்த்தைக்காக.. வள்ளிக்கு தாலி கட்டினான்... அவளின் நிம்மதிக்காக தன் வாழ்வில் இணைந்தவளுடன் அனுசரித்துச் சென்றான்.. இப்படி எல்லாமே நிர்பந்தத்துடன் நடந்து கொண்டவனுக்கு... எந்தவொரு நிர்பந்தமும் இல்லாமல் குமரனின் இதயத்துக்குள் நுழைந்தாள் வள்ளி. தனக்கே தனக்காக தன்னவளை விரும்பினான் அவன். அதை விட... அவளைப் பற்றி எதையும் அறியாமல் மனைவியாய் வள்ளியை ஏற்றுக் கொண்டது இவன் மனது.

நண்பனைக் கண்காணிக்க ஆட்களை வைத்தவன்... மறந்தும் மனைவிக்கு மட்டும் அதை செய்யவில்லை. செய்தால் அவன் நல்லதோர் ஆண்மகன் அல்லவே.. முன்பு தமக்கைக்காக மனைவியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் இருந்தவன்... பின் இவள் தன்னவள் என்று ஆன பிறகு... மனைவியே சொல்வாள் என்ற நிலையில் அவளைப் பற்றி ஆராயவில்லை. ஆனால் விதி அவனை அப்படியே இருக்க விடாமல்.. மனைவியின் மறுபக்கத்தை இவனுக்கு காட்டியது.

இன்று குமரனுக்கு மதுரையில் வேலை... அதற்காக கிளம்பியவனை.. மேகமலையில் இவர்களுக்கென இருக்கும் எஸ்டேட்டின் மேனேஜர் இவனை போனில் அழைத்து சில விவரங்களைச் சொல்ல... அதை சரி செய்ய அங்கே சென்றவன்.. பின் அனைத்தையும் முடித்து இவன் கிளம்ப... வழியில் கண்டு கொண்டான் அவளை.

முரட்டு ஜீன்சும் அதற்கு தோதாய் ஒரு டாப்பும் உடுத்தி.. கேசத்தை விரித்து விட்டு... தலையில் தொப்பி மற்றும் கண்ணில் கூலர் சகிதம் இருந்தாள் அவள். அவளிடம் ஒரு பதட்டம்... அதே பதட்டத்துடன் அவள் ஒரு வீட்டினுள்ளே செல்ல... அந்த யுவதியின் ஒவ்வோர் அசைவிலும்... இவள் தன்னவள் என்பதை குமரனுக்கு காட்டிக் கொடுத்தது... அவளுக்கு தெரியாமல் தானும் அவ்வீட்டினுள்ளே நுழைந்தான் இவன்.

வாயில் காவலாளியிடம் விசாரித்ததில்... இவ்விடம் மலேசியாவில் இருக்கும் சுந்தரம் என்பவரின் பங்களா என்றும் தோட்டக்காரரும் அவர் பேத்தி தேவிகா என்றொரு சிறுமியும் இங்கு வேலை செய்வதாக சொல்ல... அனைத்தையும் கேட்டு கொண்டவன்.. இதோ உள்ளே பிரவேசிக்க.. ஆளரவமற்ற கூடமே அவனை வரவேற்றது. மனைவியை எதிர்பார்த்து அங்கேயே அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு நிச்சயமாக தெரியும்... உள்ளே சென்றது அவன் மனைவி வள்ளி தான் என்று. அவள் எந்த அறையில் இருக்கிறாள் என்று இவனுக்கு தெரியவில்லை. ஆக மொத்தம் அவளின் வருகைக்காக இவன் காத்திருக்க... ஓர் அறையின் கதவைத் திறந்து கொண்டு, “தேவி.. நான் கிளம்பறேன்...” என்ற வாக்கியத்துடன் வெளியே வந்தவள் அங்கு கணவனைக் காணவும் அதிர்ச்சி... அதிர்ச்சி... அதிர்ச்சி... மட்டும் தான் அவளிடம்.

இப்படி கையும் களவுமாய் மாட்டுவோம் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் ஜாக்கிரதையாக தான் வருவாள் போவாள்... இன்றைய பதட்டத்தில் தற்போது கணவனிடம் அகப்பட்டுக் கொண்டாள். அதிர்ந்து நின்றவளின் உதடுகளோ அவளையும் மீறி “இளா...” என்று முணுமுணுத்தது... அவளின் முக பாவங்கள் அனைத்தையும் ஊடுருவும் பார்வையுடன் அவதானித்துக் கொண்டான் இவன். முரட்டு ஜீன்சுடன்... உள்ளே சென்றவள் தற்போது... அவன் வீட்டில் புழங்கும் வள்ளியாய் சேலை கட்டில்... வெளியே வந்திருந்தாள்.

“இப்போதாவது நீங்க யாருன்னு சொல்றீங்களா மிஸஸ். ஏழிசைவள்ளி...” காவலாளியின் உதவியுடன் மனைவியின் முழு பெயரையும் அறிந்து கொண்டிருந்தான்.

கணவனின் கூர்மையான கேள்வியில் பீதியுடன் கையில் வைத்திருந்ததை மறைத்தபடி இவள் பின்னடைய...

அவளின் கள்ளத்தனத்தில்... கோபமூச்சுடன் இரண்டே எட்டில் தன்னவளை அணுகியவன், “என்ன டி.. மறைக்கிற..” அவளின் தோளைப் பற்றி உலுக்கியவன் கேட்க

அவளுக்கோ இவனின் பிடியில் வலி கண்டது.. அதில் இவள் முகத்தை சுருக்கவும்... சட்டெனே மனைவியை அறையினுள்ளே தள்ளி... கதவை அடைத்தவன், “என்னத்த டி... மறைக்கிற...” இவன் மறுபடியும் உறும

அவளோ வலது கை விரல்களை இருக்க மூடி மறைப்பதிலே குறியாக இருந்ததால்... அதில் மூர்க்கமானவன் “நான் கேட்டுகிட்டு இருக்கேன்... வாயே திறக்காம... என்ன டி... மறைக்கிற.. ம்ஹும்... என் பலத்தை கொண்டு வம்படியா... உன் விரலைப் பிரித்து அதை பார்க்கிறதற்க்கு எனக்கு எவ்வளவு நேரமாகும்... அப்படி நான் செய்தா உன் கை விரல் எல்லாம் நொறுங்கிடுமேன்னு பார்க்கிறேன்...” என்று எச்சரித்தவன் “இன்னும் வேற என்னவெல்லாம் எங்கெல்லாம் ஒளிச்சு வச்சிருக்க டி...” ஏதோ அவள் குற்றவாளி போல் தன்னவளின் மேனி எங்கும்... இவன் தன் விரலால் சோதிக்கவும்...

“அச்சோ இளா.. என்ன செய்றீங்க... என் கிட்ட வேற எதுவும் இல்ல... ச்சே... எங்கெங்கையோ கை வைக்கிறீங்களே விடுங்க...” என்றவள் அவனை பிடித்துத் தள்ள முயல...

“புருஷன்காரன் தானே.. தொட்டா தான் என்ன டி...” என்றவன் அவளின் கையை பின்புறம் முறுக்கி அழுத்தி தன் நெஞ்சில் அவளை சாய்த்துக் கொண்டு... அனலாய் வெளிவரும் கோப மூச்சை... அவளின் கழுத்தில் படரவிட்டவன் “ஒரு தட்டு தட்டுனேன் வை... பெறகு நீ எழுந்திருக்க பத்து நாளாகும்... நீயா சொல்லுவேன்னு தான் உன்னைய விட்டு புடிச்சேன். ஆனா இப்போ எனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும் யார் நீ...”

கணவனின் ஆவேசத்தில் “ஷ்.. ஆஅ.. இளா... வலிக்குதுங்க...” இவள் திணற

அதில் தன்னவளை இவன் விட, “ஷ்.. முரடா..” என்றவள் வலி மிகுதியில் கையை தேய்த்துக் கொள்ள

அப்போது தான் தன் மூர்க்கத்தனத்தை உணர்ந்தவன்... அவளின் கையைப் பற்றி நீவி விட்டவன், “கோபம் வந்தா நான் இப்படி தான் டி...” என்றவன் அவளை நிமிர்ந்து பார்க்க

அவள் விழிகளோ கலங்கி இருந்தது. அதில் பதறி தன் நெஞ்சோடு மனைவியின் முகத்தை புதைத்துக் கொண்டவன், “இன்னும் என்ன டி.. உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா...” இவன் வருத்தமான குரலில் கேட்க

“நம்பிக்கை இல்லாம இல்லை.. நான் சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்களோன்னு...” மனைவியின் குரலில் அச்சத்தையும்.. தயக்கத்தையும் கண்டவன், “நீ சொன்னா தானே தெரியும்.. முதலில் நீ சொல்லு...” இவன் அதட்டல் குரலில் உத்தரவிட.. தயங்கித் தயங்கி அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள் வள்ளி.

மலேசியா...
கோலாலம்பூரின் தெற்கே அமைந்துள்ளது. புத்ரஜாயா நகரம் பெரும் செல்வந்தர்களின் வசிப்பிடம்... மொத்தத்தில் சொர்க்கபுரி. அங்கு ஒரு பங்களாவில் காலை நேர உணவுக்காக உணவு மேஜை அருகில் சுந்தரம் அமர்ந்திருக்க...

“செலாமட் பாகி (குட் மார்னிங்) ணா....” என்றபடி நடையில் துள்ளலுடன் படியில் இறங்கி வந்தாள் அவள். லெக்கினுடன் டாப் அணிந்திருந்தவளின்... கேசமோ.. தூக்கி ஒற்றை குதிரைவாலிட்டு இருந்தது. அது அவள் நடக்கையில் துள்ளி குதித்து அவளின் பின்னங் கழுத்தை முத்தமிட்டது.

“செலாமட் பாகி டா பாயி கெசில் (குட்டி பாப்பா).. வாங்க சாப்பிடலாம்...” சுந்தரம் புன்னகையுடன் தங்கையை வரவேற்க

“அண்ணா நான் பாயி கெசில் இல்ல... நான் ஒரு வெட்னரி டாக்டர் ஆக்கும்...” இவள் செல்ல கோபத்துடன் அண்ணனுக்கு நினைவுபடுத்த

“அப்படியா.. ஆனா இது எனக்கு தெரியாம போச்சே... பாருங்க இந்த வருஷம் உன் படிப்பு முடிந்தா தான் நீங்க டாக்டர்.. என் பாயி கெசில்...” அவர் வேண்டுமென்றே இவளை சீண்ட

“போ ண்ணா.. என்ன பாயி கெசில் சொல்லாதன்னு சொன்னா நீ கேட்குறியா...” இவள் செல்ல சண்டையிட

அதில் புன்னகைத்த சுந்தரம், “நீ எனக்கு எப்போதும் பாயி கெசில் தான் டா...” அதையே அழுத்தி சொல்ல

“நல்லா இருக்கு தம்பி உங்க பேச்சு... இன்னும் ரெண்டு மூணு வருசத்தில் வள்ளிக்கு கல்யாணம் கட்டி கொடுத்தா.. அவளுக்கே ஒரு பாப்பா வந்திடும்... ஆனா நீங்க என்னன்னா இன்னும் வள்ளியை குட்டி பாப்பான்னு சொல்லிகிட்டு இருக்கீங்க...” அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மனி உரிமையாய் சுந்தரத்தை அதட்ட

“பேரட்..” ஓடிச்சென்று அவரை கட்டிக் கொண்ட வள்ளி.. “நீங்க சொன்ன கல்யாணம் எல்லாம் எனக்கு மெதுவா நடக்கட்டும்... ஆக மொத்தம் நான் குட்டி பாப்பா இல்லை.. அப்படி தானே...” இவள் கேட்க

“உன்னை யாராவது அப்படி சொல்லுவாங்களா பாப்பா... அண்ணா உன்னைக் கொஞ்சறார்... நீ தான் தகப்பனுக்கே புத்தி சொன்ன.. அந்த சுப்பிரமணியசாமியின் அம்சமாச்சே...” கிளியம்மா இவளை சிலாகிக்க

“பார்த்தியா ணா...” புன்னகையுடன் பெருமையாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டாள் வள்ளி எனும் ஏழிசைவள்ளி.

இது சுந்தரத்திற்கு தெரியாதா... சிறுவயதிலிருந்தே தங்கையை பார்க்கிறானே... பொறுப்பும்.. அனுசரணையும் அவளிடம் அதிகமாச்சே… இதோ இப்போது கூட ஹாயாய்... உட்கார்ந்து கொண்டு வேலையாட்களை அதிகாரம் செய்து சாப்பிடாமல்... கிளியம்மாவுக்கு உதவ சென்று விட்டாளே. கிளியம்மாவுக்கு வயது எப்படியும் எண்பது இருக்கும். முதிர்ந்த மனுஷி... அவருக்கே அவர் வயது சரியாக தெரியாது. சுந்தரத்தின் மூன்று தங்கைகளையும் பேணி பாதுகாத்து பராமரித்தவர். சுந்தரத்திற்கு அவர் இன்னோர் தாய் என்றால்... கிளியம்மாவுக்கு மூத்த மகனே சுந்தரம் தான்.

கிளியம்மா தமிழர் தான்.. கணவர் இழந்த பிறகு தன் ஒரே மகளை கட்டிக் கொடுத்த கையோடு மலேசியாவுக்கு வந்தவர் தான்.. திரும்பி போகவே இல்லை. பெண்ணும் நீ பணத்தை மட்டும் அனுப்பு நீ வராதே என்ற நிலையில் தாயை தூரவே நிறுத்திவிட்டாள்... அதனால் சுந்தரத்தின் குடும்பம் தான் அவரின் குடும்பம்.

இங்குள்ள முக்கால்வாசி பேர் விரும்பி சாப்பிடும் காலை உணவான…
அண்ணனுக்கு பிடித்த நாசி லெமாக் (தேங்காய் பால் சாதம்) எடுத்து வந்து பரிமாறியவள்... தனக்கு மட்டும் பீகூன் (நூடுல்ஸ்) தட்டில் வைத்துக் கொண்டாள்.. காலை வேளையில் சாப்பிட அவளுக்கு அது தான் பிடிக்கும்.

இருவரும் உணவை முடித்துக் கொண்டு கிளம்ப.. அவர்களை வழியனுப்பினார் கிளியம்மா.. அவர் தான் இந்த வீட்டின் வேலையாள் அல்லவே.. எப்போதோ அவர் இந்த வீட்டின் மனுஷியாய் மாறி விட்டாரே... அந்த உயர் ரக காரை வள்ளி... லாவகமாய் ஒடித்து வளைத்து ஓட்ட... தங்கையையே பெருமையாய் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.

“வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்” என்று காரில் உள்ள மியூசிக் சிஸ்டத்தில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்க... அதை கண்ணை மூடி கேட்டுக் கொண்டு வந்தார் சுந்தரம்.

இது கடந்த நான்கு வருடங்களாக தினமும் நடக்கும் செயல் தான். காலையில் தான் கல்லூரிக்கு செல்லும்போது... அண்ணனை தங்கள் கம்பெனியில் இறக்கி விட்டு செல்வாள் வள்ளி. முன்பெல்லாம் தானே காரை ஓட்டிச் சென்றவர் தான்... ஆனால் இப்போது தங்கை அதற்கு தடை உத்தரவு போட்டு விட்டாள். மாலையில் வரும்போது நேரத்தைப் பொறுத்து... இவளுடனோ அல்லது வேறு காரில் டிரைவருடனோ வீடு திரும்பி விடுவார் சுந்தரம்.

இவள் மாலை வீட்டிற்கு நுழைய.. இவர்கள் வீட்டு போர்டிகோவில் சுந்தரத்தின் இரண்டாவது தங்கை ரேகாவின் வீட்டு கார் நின்றிருந்தது... அவள் வீட்டு கார் என்றால் ரேகாவோ அவள் கணவனோ சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய கார் அல்ல.. சுந்தரம் தங்கைக்கு சீதனமாக தந்த கார். அதுவும் டிரைவரோடு! பின்னே.. அவர்கள் வீட்டு காரோட்டிக்கு சம்பளம் தருவது அண்ணன் சுந்தரம் தானே..

“என்னத்தை சொல்ல சுந்தரம்.. ஆயி... அப்பன் இல்லாத வீட்டில் பொண்ணு எடுத்தா.. இது தான் நிலைமை...” என்ற பர்வதத்தின் குரல் வெளிவாசல் வரை ஓங்கி ஒலித்தது... அவர் ரேகாவின் மாமியார்.

“ஏன்... அத்த இப்படி சொல்றீங்க... எந்த விதத்தில் என் தங்கையை நான் விட்டுட்டேன். இதோ கிளியம்மா இருக்காங்க.. அவங்க பார்த்துக்க மாட்டாங்களா...” சுந்தரம் அவரை சமாதானம் செய்து கொண்டிருக்க

“என்ன சுந்தரம்... வேலை செய்ய வந்தவ எல்லாம் பெத்தவ ஆகிட முடியுமா...” பர்வதத்தின் குரல் நொடித்தது.

சுந்தரத்தின் முகமும்.. கிளியம்மாவின் முகமும் ஒரு சேர கூம்பி விட... அந்நேரம் உள்ளே நுழைந்த வள்ளி... “அடடே... பர்வதம் அத்தையா... வாங்க அத்தை வாங்க... எப்படி இருக்கீங்க... என்ன அத்த இது... கிளியம்மா உன் கை பக்குவமே பக்குவம்னு சொல்லி... என் அம்மா கிட்ட உங்க மக சீமந்தத்துக்கு அண்டா அண்டாவா பலகாரம் செய்து வாங்கிட்டு போனீங்களே... அந்த அத்தையா இப்படி சொல்றது... நான் கூட உங்க குரலில் வேற யாரோன்னு நினைச்சிட்டேன் அத்த...” வார்த்தைக்கு வார்த்தைக்கு அத்தை போட்டு அவரை குத்திக் காட்டினாள். இது தான் வள்ளி.. யாராக இருந்தாலும் நியாயம் என்றால் பட்.. பட்.. பட்டாசு தான்

அவரோ முகத்தை வெட்டியவர், “வாடி மாட்டுக்கு வைத்தியம் பாக்கிறவளே... நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ டி...” அவர் நொடிக்க

“கொஞ்ச நேரம் இருங்க அத்த.. நான் போய் பிரெஷ் ஆகிட்டு வரேன்.. பிறகு நாம பேசலாம்..” என்றவள் சிட்டாய் அங்கிருந்து பறந்திருந்தாள் வள்ளி.

பின் அவள் கீழே வர, “நீ ஆயிரம் தான் சொல்லு சுந்தரம்... இப்படி பொம்பளை இல்லாத வீட்டில் பொண்ணு எடுத்திட்டு நான் படுற பாடு எனக்கு தான் தெரியும். உனக்கு என்ன பொண்டாட்டியா.. பிள்ளைங்களா.. உனக்கு எங்கே என் கஷ்டம் தெரியப் போகுது... என் மகனை சீராட்ட கூட மாமியார் வீடு இல்ல” பர்வதம் தான் கொடுக்காய் கொட்டிக் கொண்டிருந்தார்.

“அப்போ ஒண்ணு செய்யலாமே அத்த.. நீங்க தான் எங்க குடும்பத்துக்கே மூத்தவராச்சே... பேசாம என் அண்ணாவுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கட்டி வச்சிடுங்க... உங்க கஷ்டம் என்னனு அவருக்கும் தெரியட்டும்...” வள்ளி துடுக்காய் பதில் தர

“பாயி கெசில்...” அண்ணன் அதட்ட

“ஆமா டி இப்போ தான் உன் அண்ணனுக்கு பதினாறு வயசு பாரு... நான் பொண்ணு பார்த்து கட்டி வைக்க.. அவனுக்கு நாற்பத்தைந்து வயசாகுது டி... அதுவும் இல்லாம.. முடி எல்லாம் கொட்டிப் போய் முன் மண்ட வழுக்கை விழுந்து... காதோரம் எல்லாம் வெள்ளை முடி எட்டிப் பார்க்க... தொப்பையும் தொந்தியுமா இருக்கான்.. எப்போ அவனை காடு வா வான்னுமோ.. இதிலே இவனுக்கு கல்யாணம் வேறயா...” பெரிய மனுஷி என்ற இங்கிதம் இல்லாமல் அவர் வார்த்தையைக் கொட்ட...

அவர் சொன்ன கடைசி வார்த்தையில், “அத்தை...” என்ற அதட்டலுடன் இருக்கையிலிருந்து எழுந்து விட்டாள் வள்ளி, “உங்களுக்கு மட்டும் என்ன அத்த குமரி வயசா.. ஏற்கனவே காடு வா வான்னு உங்களை கூப்டுகிட்டு இருக்கு.. அது தெரியலையா உங்களுக்கு” இவள் கேட்ட கேள்வியில் பர்வதம் முகத்தில் சவக்களை ஓடியது.

“ஈபூ (அம்மா).. பாயி கெசிலை உள்ள அழைச்சிட்டுப் போங்க...” நடக்கும் விபரீதத்தை உணர்ந்து சுந்தரம் கிளியம்மாவுக்கு உத்தரவிட

“நான் போகலை ண்ணா.. ஆனா இனி நான் எதுவும் பேசல ண்ணா...” என்று உத்திரவாதம் அளித்தாள் வள்ளி.

“நீங்க சொல்லுங்க அத்த...” சுந்தரம் பொறுமையாய் கேட்க

“என்னத்த சுந்தரம் என்ன மறுபடியும் சொல்ல சொல்ற.. ஒரு பொண்ணை மருமகளா எதுக்கு கட்டி அழைச்சிட்டு வர்றது... மாமியாரை உட்கார வைத்து எல்லா வேலையை செய்யவும்... புருஷனுக்கு ஒண்ணுன்னா பொறந்த வீட்டிலியிருந்து பணத்தை வாங்கிட்டு வரவும் தான...”

அவரின் கேள்வியில் ‘இவங்க இன்னும் எத்தனை நூற்றாண்டுக்கு முந்தி இருக்காங்க’ என்று தான் வள்ளிக்கு தோன்றியது. ஆனால் நினைத்ததை இவள் வாயைத் திறந்து கேட்டு விடவில்லை.

“எனக்கு உடம்பில் சுகரு... பி.பின்னு ஆயிரத்தெட்டு நோய்... அதுவும் ‌இல்லாமல் ஒரு கிட்னி வேலை செய்யல... இதிலே என்னை உன் தங்கச்சி பார்த்துப்பான்னு நெனச்சா... அவ என்னமோ இப்போ உண்டாகி இருக்கா.. அதுவும் ரெட்டை பிள்ளைங்க. இப்போ அவளை நான் கவனிப்பேனா.. அவ என்ன கவனிப்பாளா...” அவர் ஒரு நெடுமூச்சை வெளியிட

கேட்டுக் கொண்டிருந்த வள்ளி, “ஹை! ரேகா உண்டாகி இருக்காளா...” என்று இந்த சூழ்நிலையிலும் மனதிற்குள் சந்தோஷித்தாள்.

“நான் தான் பெரிய டாக்டர் நர்சுன்னு வச்சு.. பார்த்துக்கிறேன்னு சொல்றனே அத்த... நான் செய்வேன் கவலை படாதிங்க...” சுந்தரம் தைரியம் தர

“அதெல்லாம் நீ செய்வேன்னு எனக்கு தெரியாதா சுந்தரம்.. உனக்கென்ன பொண்டாட்டியா பிள்ளையா... நீ சம்பாதிக்கிறது எல்லாம் யாருக்கு.. உன் மூணு தங்கச்சிங்களுக்கு தானே..” வந்தவர் அழகாய் புள்ளி வைத்தார்.

“அதென்ன இந்த அம்மா எப்போ பாரு பொண்டாட்டி.. பிள்ளைக்குட்டி இல்லன்னே சொல்லுது... அப்படி இல்லைனா இவங்களுக்கே உழைத்து கொட்டணுமா” இப்படி தனக்குள் கேட்ட வள்ளியால் பல்லை மட்டும் தான் கடிக்க முடிந்தது.

இன்னும் பர்வதம் விடுவதாய் இல்லை. “இங்க பார் சுந்தரம்... இந்த பணம் காசு எல்லாம் உனக்கு இப்ப தான் வந்தது... நீ சாதரண தொழில் செய்யும் போதே உன் தங்கச்சியை பொண்ணு கேட்டு கட்டுனவ நானு... அப்போ நீயும் உன் தகுதிக்கு தகுந்த மாதிரி சீர் செய்த... நானும் அதை மறுக்கல... அப்போ நீ ஏதோ கிள்ளி செய்த...”

‘எது.. நூறு பவுன் உங்களுக்கு கிள்ளியா...’ மனதிற்குள்ளே கேட்டுக் கொண்டாள் வள்ளி.

“இப்போ தான் உன் கிட்ட நிறைய இருக்கே.. அள்ளி செய்தா தான் என்ன... இப்போ எல்லாம் ரெண்டாவது.. மூணாவது குழந்தை தங்கினா கூட... வளைகாப்பு எல்லாம் செய்யறது பழக்கம் ஆகிடுச்சு... அதனாலே ஒரு வளைகாப்பு நடத்தி... நீ செய்ய வேண்டிய சீரை எல்லாம் நிறைக்கவே செய்துடு...”

‘எது.. வளைகாப்பை நாங்க வைக்கிறதா..’ கேட்டது சாட்சாத் வள்ளி தான்.. அதுவும் மனதிற்குள் தான்.

“உனக்கு சொல்ல வேணாம்.. நீ யாருக்கு செய்யப் போற...”

“பிள்ளையா குட்டியா... அதானே அத்த... சொல்லப் போறீங்க...” இப்போது வள்ளி நேரடியாகவே அவரை கேட்க, சுந்தரம் கண்ணாலேயே தங்கையை அணை கட்டினார்.

“என்ன செய்து என்ன சுந்தரம்... ஆயி அப்பன்... இல்லாத...” பர்வதம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கவும்

“நான் வேணும்னா வந்து என் அக்காவை கவனிச்சிகிறேன் அத்த...” வள்ளி முழுமனதாய் முன்வர

“நீ என்னத்த டி கவனிப்ப.. இதென்ன மாட்டுக்கு பார்க்கிற வைத்தியம்னு நெனச்சியா... வாந்தி எடுத்தா மசக்கைகாரியை தாங்கணும்... அவ வாய்க்கு தோதா சமைச்சு தரணும்... குழந்தை பொறந்தா அதை குளிக்க வச்சு... கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும்.. ராவுல குழந்தை அழுதா... நாம் கண்ணு முழுத்திருந்து தாயை எழுப்பி பசியாற வைக்கணும்... மருந்து குழம்பை அரைச்சு பக்குவமா கொடுக்கணும்... இதெல்லாம் நீ செய்வியா...”

அவர் கேட்ட தொனியில் எரிச்சல் வர, “இதையெல்லாம் தட்சன் பிறந்தப்போ கிளியம்மா தானே ரேகாவுக்கு செய்தாங்க அத்த... இப்போ அவங்களே அவளுக்கு செய்வாங்க...” வள்ளி சொல்ல

“யாரு அவளா.. அவ கை நடுக்கத்தை குறைக்கவே நான் வைத்தியம் பார்க்கணும்...” பர்வதம்மா கொக்கா என்று வந்தவர் தன் பேச்சிலேயே கொக்காய் நிக்க

‘இதுக்கு மேல என்ன ணா செய்ய சொல்ற?’ என்பது போல வள்ளி தமையனைப் பார்க்க... நீ பேசாம இரு என்று கண்ணாலேயே பதில் சொன்னான் அவன்.

“சரி சுந்தரம்.. அப்போ நான் கிளம்பறேன்.. ஹாங்... சொல்ல மறந்துட்டேன் பாரு... உன் தங்கச்சிக்கு நீ சீதனமா தந்த காரில்தான் நான் வழக்கமா ஆஸ்பத்திரிக்கு போறேன்... உன் தங்கச்சி இப்போ ஆஸ்பத்திரி போக கார் இல்ல... நீ வேற ஒரு காரை வாங்கி தந்துடு...”

அவரின் கட்டளையில், “அதுக்கு என்ன அத்த... இதோ வீட்டிலே இருக்கிற இந்த காரை கூட என் தங்கச்சி பயன்படுத்தட்டும்... அனுப்பி வைக்கிறேன்...” சுந்தரம் முழுமனசாய் சம்மதித்து இதமாய் பதமாய் தான் சொன்னார்.

அதற்கு பர்வதம், “இது எந்த ஊரில் அடுக்கும் சுந்தரம்... என்னமோ வீட்டு மாப்பிளைக்கு நீ ஓட்டின காரை தரேன்னு சொல்ற... ஏதோ வாயில் நுழையாத பேரில் எல்லாம் புதுசு புதுசா காரு வந்திருக்காமே.. அதிலே ஒன்னு வாங்கி தந்துடு...” வந்தவர் உத்தரவிட

“ஆகட்டும் அத்த...” சுந்தரம் பணிந்து போக... இப்பவும் சும்மா செல்லாமல் ஆயி அப்பன் இல்லாத வீடு என்ற பல்லவியுடன் தான் நடையைக் கட்டினார் பர்வதம். இது தான்... குடும்பத்திற்காகவும் தங்கைகளுக்காகவும் மாடாய் உழைத்து தன் வாழ்க்கையையே பணயம் வைத்த அப்பாவி மனிதனான சுந்தரத்தின் இன்றைய நிலை!
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN