ஈரவிழிகள் 25

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்று ஞாயிற்றுக்கிழமை அரசினர் விடுமுறை.

கைப்பேசியை கையில் எடுத்தவள், “த்தானியா (வாழ்த்துகள்) ரேகா.” என்று சகோதரியை வாழ்த்தினாள் வள்ளி.

“போடி இப்போ எனக்கு அது தான் குறைச்சல்...” மறுபுறம் இருந்தவளோ சலித்துக் கொள்ள

“என்ன ரேகா ஏன் இவ்வளவு சலிப்பு...”

“நாங்க எதிர்பார்க்கல டி இப்படி ஒன்று நடக்கும்னு... எங்களுக்கு தட்சன் மட்டும் போதும்னு இருந்தோம். ஆனால் இப்போ... அதுவும் இரண்டு குழந்தை டி. டாக்டர் எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்றாங்க..” ரேகா வருத்தத்துடன் நிறுத்த

“அட டா... இப்போ என்ன.. தட்சனுக்கு தான் நாலு வயசாகிடுச்சு இல்ல... பிறகு என்ன பெத்துக்கோ ரேகா...” இவள் இதமாய் சொல்ல

“க்கும்... நான் பெற்றுக் கொடுத்த உடனே என் மாமியார் அப்படியே என்னை தலையிலே துக்கி வச்சு சீராட்டப் போறாங்க பாரு... அவங்களுக்கு பயந்தே ஜாக்கிரதையா இருந்தேன் டி.. எல்லாம் இந்த ரமேஷ் தான்... கண்ணும்மா... பொன்னும்மான்னு... கொஞ்சி கொஞ்சியே...” ஆரம்பிக்கும் போது மாமியாரை நினைத்து அலுத்துக் கொண்டவள்.. முடிக்கும் போது.. கணவனின் காதலில் கரைந்தது அவள் குரல்.

ரேகாவும்... வள்ளியும் சகோதரிகள் என்பதை விட நல்ல தோழிகளாக இருந்தனர். பெரியவளின் பதிலில் இவள் வாய்விட்டே சிரிக்க... “சிரிக்கிறீயா சிரி.. சிரி.. நல்லா சிரி.. யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வராதா.. உனக்கும் கல்யாணம் ஆகும் இல்ல அப்போ நானும் சிரிக்கிறேன்...” ரேகா கோபம் என்ற பெயரில் தங்கையை வாழ்த்த

“தாங்கள் கொடுத்த வரம் விரைவில் நிறைவேறும் மகளே...” தமக்கையை சீண்டிய வள்ளி பின், “சரி சொல்லு.. சந்தோஷமான விஷயத்துக்கு ஏன் இப்படி சலித்துக்கிற...” என்று கேட்க

“அண்ணனை நினைத்தா தான் டி எனக்கு கவலையா இருக்கு... இப்பவே என் மாமியார் முழ நீளத்துக்கு பட்டியல் போடுறாங்க டி. ரமேஷும் இந்த குழந்தை வேணாம்னு தான் சொல்றார்.. ஆனா… இரண்டு குழந்தை நான் எப்படி வளர்க்கப் போறேன்னு எனக்கே தெரியல... பயமா இருக்கு..” பெரியவள் தன் மனப்போராட்டத்தை சொல்ல

“என்னமா... உன் மாமியார் வீட்டில் இல்லையா.. மாமா பேரை இப்படி ஏலம் விடுற...” என்று கேட்டவள் “இப்போ என்ன பிறக்கப் போற இரண்டு குட்டிஸையும் வளர்க்கணும்.. அவ்வளவு தானே... இரண்டு பேரும் பிறந்ததும் என் கிட்ட தந்துடு.. நான் வளர்த்துக்கிறேன்... இன்னும் நாலு மாதத்தில் எனக்கு பிராக்டீஸ் முடியப் போகுது ரேகா.. பிறகு என்ன” இவள் நான் இருக்கிறேன் என்று அன்புக்கரம் நீட்ட

“நீ யாரு.. என் பாட்டிக்கே பிரசவம் பார்த்து... அவங்க பேத்தியவே வளர்ப்பியே... உனக்கு சொல்லியா தரனும்...” இதை சொல்லும் போது ரேகாவுக்கு தங்கையை நினைத்து பெருமையாகத் தான் இருந்தது.

வள்ளி தன்னுடைய ஆறாவது வயதில் கிளியம்மாவிடம் வந்தவள்... அதன்பின் கிளியம்மா தான் அவளுக்கு அம்மா. அவரிடம் வேலையில் ஒரு நறுவிசு இருக்கும். பொறுப்பாய் மக்களை அரவணைத்து அனுசரித்துப் போகும் குணம் அவருடையது. அவரின் வளர்ப்பு என்பதால் இதெல்லாம் வள்ளியிடம் சிறுவயதில் இருந்தே குடிகொண்ட ஒன்று. கூடவே அவரின் வாயும்... தப்பு என்றால் அவர் எப்போதும் சுள்ளென்று தான் பேசுவார். அதே பேச்சு இவளிடம்.. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் வயதுக்கு மீறிய பேச்சு வள்ளியிடம் காணப்படும்

“ஹா... ஹா.. இதை எந்த பாட்டிம்மா சொல்றாங்க பார்த்தீயா..” என்று தமக்கையை கேலி செய்தபடியே தன் அறையிலிருந்து கீழே வந்தவள், “இரு அண்ணா கிட்ட தரேன்...” என்றவள் ஹாலில் அமர்ந்திருந்த சுந்தரத்திடம் கைப்பேசியை நீட்ட

அதை வாங்கிய சுந்தரம், “சொல்லு சின்ன பாப்பா... நீ எப்படி இருக்க... தட்சனும்... மாப்பிள்ளையும் எப்படி இருக்காங்க...” என்று விசாரிக்க

“எல்லோரும் சுகம் ண்ணா... அது வந்து ணா... இந்த குழந்தை வேண்டாம்னு அவர் சொல்றார் ண்ணா...” ரேகா தயங்கியபடி சொல்லவும்

“என்ன பேச்சு இது சின்ன பாப்பா... நான் ரமேஷ் கிட்ட பேசுறேன்... இதனால் உனக்கும் பாதிப்புன்னு தெரிய வேணாம்... அங்கெங்கே.. குழந்தை இல்லாம எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க...”

அதற்குள் ரேகா என்ன சொன்னாளோ “சரி.. சரி... அழாத எனக்கு எந்த கஷ்டமும் இல்ல டா... நான் பார்த்துக்கிறேன்.. உனக்கு நான் இருக்கேன் அண்ணனுக்கு அண்ணனா அப்பாவுக்கு அப்பாவா...” சுந்தரம் அனுசரணையாய் பேசிக் கொண்டிருந்த நேரம் அவரிடமிருந்து போனை பிடிங்கிய வள்ளி..

“என்ன ரேகா இது இந்த நேரத்தில் அழறியா.. நான் எதுக்கு இருக்கேன்... நான் உனக்கு அம்மாவுக்கு அம்மா... மாமியாருக்கு மாமியார்... ஜாக்கிரதை இனி இப்படி அழுவ...” சின்னவள் மிரட்ட.. இவர்களின் பாசத்தில் அவளுக்கு கண்ணீர் நின்றது.

அதில் அவள் இதமாய் பேச, “ம்ம்ம்... இது சரி சமத்து.. இப்படியே சிரிச்சிகிட்டே இருக்கணும் சரியா...” என்று கட்டளையிட்டவள் இறுதியாய், “செலமாட் திங்கால் (பாய்) ரேகா...” என்றபடி அழைப்பைத் துண்டித்தாள் இவள்.

ரேகாவுக்கு அண்ணன் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் பட்ட கஷ்டம் எல்லாம் கூட இருந்து பார்த்தவள் என்பதால் அவருக்கு சிரமம் தர கூடாது என்று நினைப்பவள். அதனாலேயே சுந்தரத்திற்கு அதீத சுமையையோ... சிரமத்தையோ தரமாட்டாள். நன்கு படித்து தற்போது மலேசியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறாள். கணவன் ரமேஷும் அப்படியே... அவன் குணமும் எல்லோரையும் அரவணைத்துப் போகும் குணம். என்ன.. தாய் பேச்சை மட்டும் மீற முடியாத பிள்ளை.

வரன் பார்த்து நடத்தி வைத்த திருமணம் தான் இவர்களுடையது. அப்போது சுந்தரம் இப்படி தொழிலில் கொடி கட்டிப் பறக்கவில்லை. ஆனால்.. போதும் என்ற அளவில் தொழில் இருந்தது. பர்வதமும் அப்போது நல்லா தான் இருந்தார். இப்போது தான் பணத்தைப் பார்க்கவும் மாறிப் போனார்.

மதியம் உணவுக்குப் பிறகு அண்ணனும்.. தங்கையும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. சீறி பாய்ந்தபடி இவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார். அதிலிருந்து கலா உக்கிர பிசாசாய்... இறங்கியவள் மேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்க சுந்தரத்தின் முன் வந்து நிற்க, “வா.. பெரிய பாப்பா... மகேந்திரன்... அப்புறம் பசங்க வரலையா...” என்று இவர் பெரிய தமக்கையை விசாரிக்க

“உனக்கு எத்தனை தடவை சொல்றது ண்ணா.. உன் மரமண்டைக்கு ஏறாதா.. அவர் இந்த வீட்டு மாப்பிள... என்னமோ நீ பேரு வச்ச மாதிரி தலையிலே அடிச்சி அழைக்கிற...”

பெரியவளின் பேச்சில் வள்ளிக்குள் சுரு.. சுரு... என்று கோபம் ஏறியது. ஆனால் அவள் வாயே திறக்கவில்லை... திறந்தாள் இவளுக்கும் சேர்த்து அண்ணனை தான் அவள் பேசுவாள். அதனால் வள்ளி அமைதி காக்க

“சரி.. பாப்பா... தப்பு தான்... இனி சொல்லலை... முதல்ல உட்காரு... என்ன சாப்பிடற சொல்லு...” சுந்தரம் அன்பாய் கேட்க

“நான் ஒன்னும் இங்க சீராட வரல... அப்படி என்னை சீராட்ட என்ன பெத்த ஆத்தா இருக்கா... இல்லை அப்பன் தான் இருக்கா... நான் தான் அனாதையாச்சே...” வந்தவள் கண்ணைக் கசக்க

“ஏன் பாப்பா இப்படி சொல்ற... அண்ணன் நான் இருக்கனே...”

“என்னத்த இருந்த சொல்லு... பேருக்கு தான் அண்ணன்… நீ எப்போதும் ஒரு கண்ணுல வெண்ணையும்... இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் தான வைப்ப... இன்னும் சொல்லணும்னா ரேகாவும்.. வள்ளியும்... உனக்கு தங்க கட்டினா.. நான் உனக்கு உப்பு கட்டி தானே..”

“ஆரம்பிச்சிட்டா... நீ துரு பிடித்த பித்தளைக்கு கூட ஈடாகாதவ டி...” வள்ளி மனதிற்குள் கவுன்டர் கொடுக்க

“இவளுங்களை மட்டும் படிக்க வச்சு நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்த... அதே என்னைய ஒரு கூலிக்காரனுக்கு தானே கட்டி தந்த...” வந்தவள் தொடர...

“ஒஹ்.. கணக்குபிள்ளை வேலை எல்லாம் இப்போ கூலி வேலையில் சேர்த்துட்டாங்களா..” மறுபடியும் வள்ளி தான்

“நான் எதை பார்த்தேன்... எனக்கு என்ன செய்த.. இப்போ ரேகா உண்டாகி இருக்காளாம்... உடனே பத்து வண்டி கட்டி சீர் செய்யப் போறியாமே... காத்து வாக்கில் என் காதுக்கு சேதி வந்துச்சு... அப்போ எனக்கு ஒன்னும் இல்லையா... இப்போ இவளுங்களை வைரத்திலும்.. வைடூரியத்திலும் இழைக்கிற… ஆனா அதே என் காலத்தில் ஒரு துளி தங்கத்துக்கு கூட வழியில்லாமல் போச்சே… இவளுங்க சூட்சுமம் எனக்கு இல்லையே…” கலா கண்ணீருடன் கேட்க

அவளின் அழுகையை முதல் முறை பார்ப்பவர் யாருமே.. அய்யோ பாவம் இந்த பொண்ண இப்படி ஏமாத்திட்டாங்களே என்று தான் எண்ணத் தோன்றும்.

“ஏன்.. ணா உனக்கு இந்த கெட்ட புத்தி.. இந்த புத்திக்கு தான் உனக்குனு ஒரு வாழ்க்கை இல்லாம நீ இப்படி இருக்க… இவளுங்க எல்லாம் உனக்கு சோறு போடமாட்டாளுங்க.. உன் கடைசி காலத்திலே அம்மா.. தாயே.. ஒரு வேளை சோறு தாம்மான்னு நீ என் கிட்ட தான் வந்து பிச்சை வாங்கணும்... அதற்காவது இவளுங்களை விட எனக்கு நிறைய செய்யணும்னு உனக்கு தோணலையில்ல...” வந்தவள் மூச்சு விடாமல் வார்த்தையைக் கொட்ட

வள்ளியால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை. “நீ திருந்தவே மாட்டியா... உனக்கு இப்போ என்ன குறை... உன் புருஷன் கட்டிக்கிற கோமணத்தைக் கூட நம்ம அண்ணன் தான் வாங்கி தராரு. அதையும் அந்த மனுஷன் வெட்கமே இல்லாம... ஈஈஈன்னு இளிச்சிட்டு வாங்கி உடுத்திக்கிறாரு. உன்னை படிக்க வைக்கலையா.. உனக்கு படிப்பு ஏறலனு சொல்லு... அப்புறம் நீ என்ன பெரிய எலிசபெத் ராணியா.. உன் குணத்துக்கும்... கெட்ட எண்ணத்துக்கும்... அந்த ஆள் தான் ஏத்தவன்.

ரேகா படிச்சா.. அவ குணத்திற்கு நல்ல இடத்தில் போய் வாக்கப்படுறா... எல்லாம் எண்ணம் போல தான் வாழ்க்கை. என்னமோ உனக்கு ஒண்ணுமே அண்ணன் செய்யாத மாதிரி பேசுற... இப்படியே சொல்லிட்டு இரு ஒரு நாள் அந்த நாக்கு அழுகி தான் போகப்போகுது. யாராவது பன்னிரண்டு வயசு ஆம்பள பிள்ளைக்கு காது குத்து வைப்பாங்களா... நீ வச்ச... ஏன்... சீருக்காக. அப்போ என் அண்ணன் செய்த சீர் உன் வீட்டு முன்னாடி நூறு வண்டியில நின்னுச்சு... அதையெல்லாம் மறந்துட்டியா. இப்படியே சொல்லிட்டு இரு.. ஒரு நாள் ஒண்ணும் இல்லாம தான் போக போற. அப்போ அம்மா தாயேன்னு நீ தான் பிச்சை எடுக்கப் போற...” வள்ளி விடுவேனா என்று வெளுத்து வாங்க..

உண்மையை சொல்லவும் மேற்கொண்டு இன்னும் உச்சத்தில் ஏறியது கலா என்னும் பிசாசு... “அட ச்சீ... நீ யார் டி... இதை எல்லாம் கேட்க அநாதை நாய்.. என் அப்பாவையும்.. அம்மாவையும் முழுங்கின காட்டேரி டி நீ...”

இது தான் இப்படி தான் வள்ளியின் மனம் நோக கலா எப்போதும் பேசுவது. இது இப்போது இல்லை வள்ளியின் சிறுவயதிலிருந்தே அவள் அப்படி தான் பேசுவாள்… இதனால் கிளியம்மவுக்கும் அவளுக்குமே கைகலப்பு வரை சண்டை வளர்ந்தது. ராஜகுமாரி மாதிரி வாழவில்லை என்றாலும்.. ஏதோ சுகபோக வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த கலாவின் வாழ்வை நாசம் செய்தவள் வள்ளி என்றே அவள் நம்பினாள்.

அப்படி இல்லையென்றால் வள்ளியின் ஐந்தாவது வயதில் எதற்கு நன்றாக இருந்த தாய் தந்தையர் மரணிக்க வேண்டும்... அதன் பிறகு கண் தெரியாத மாமியாரும்... இரண்டு தங்கைகளுமே ஏன் இவள் பராமரிப்பில் வர வேண்டும்.. கலாவின் கணவன் மகேந்திரனுக்கு சிங்கப்பூரில் வேலை. அதனால் திருமணம் முடிந்த இரண்டாவது மாதமே அவன் வெளிநாடு செல்ல... அதை தாங்க முடியாத அளவுக்கு வயிற்றெரிச்சலில் இருந்தவளுக்கு... இவர்கள் மூவரின் கவனிப்பும் வந்து சேரவும்... எல்லோரையும் போல் கணவனுடன் தானும் வாழ முடிவில்லையே என்ற பொறாமையில் சிறு வயதில் அதிக சேட்டைகள் செய்யும் வள்ளியை இவள் துன்புறுத்த... அதை கண்ட ஒரு உறவுக்கார பெரியவர் சுந்தரத்திற்கு கடிதம் எழுதினார்..

“யப்பா.. சுந்தரம்... உன் ரெண்டு தங்கச்சிங்க உயிர் போகறதுக்குள்ள... வந்து கூட்டிகிட்டு போப்பா...” இப்படி ஒரு கடிதத்தைக் கண்ட உடன்.. தாய் தந்தையரின் இறப்புக்குப் பிறகு அடுத்த ஆறாவது மாதம் சுந்தரம் இந்தியா வந்து இறங்க... அப்போது அவன் பார்த்தது வள்ளியின் கையிலும் காலிலும் உள்ள தழும்புகளைத் தான்.

“என்ன பாப்பா.. குழந்தை புள்ளையை இப்படி படுத்தி வச்சிருக்க...” இதை கூட அதட்டலாய் கேட்காத சுந்தரத்தின் குணத்தை என்ன சொல்ல... பாசம் இருக்கலாம்... அதற்காக இப்படி எல்லாம் இருக்க கூடாது. ஆனால் சுந்தரம் இப்படி தான்.

அன்று ஆறு வயது தங்கைக்கு கலா செய்ததை எல்லாம் பதினோரு வயது ரேகா பிட்டு பிட்டு தன் அண்ணன் முன் வைக்க, அன்று முதல் கலாவுக்கு ஜென்ம விரோதிகளாவே ஆனார்கள் தங்கைகள் இருவரும்.

பின் தன் முதலாளி சொக்கலிங்கத்திடம் பேசி தங்கைகள் இருவரையும் சுந்தரம் மலேசியா அழைத்துச் சென்று விட... அங்கு வேலை செய்த கிளியம்மா இருவரையும் அரவணைத்துக் கொண்டார்.

அதற்கு பிறகும் கலா ஆடாத ஆட்டம் ஆடி... கணவனுக்கு நல்ல வேலை கிடைக்க வைத்து.. அவளும் சிங்கப்பூருக்கே வந்து அமர்ந்து கொண்டாள். எல்லாம் சொக்கலிங்கம் ஐயா தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சுந்தரத்திற்காக இதை எல்லாம் செய்தார். அந்த நன்றி கணவன் மனைவி இருவருக்குமே இன்று வரை இல்லை. ஏனெனில் இரண்டும் ஜாடிக்கேத்த மூடிகள்.

தமக்கையின் வார்த்தையில், “பாப்பா இப்போ உனக்கு என்ன வேணும்... ஏன் இப்படி எல்லாம் வள்ளிய பேசுற...” சுந்தரம் கேட்க... ஒரு அதட்டல் கூட அவரிடம் இல்லை... இது திருத்தாத ஜென்மம் என்று அவரே மனம் நொந்து போய் விட்டார்.

“என்ன.. என்ன வேணும்னு கேட்கிற.. நான் சொல்லனுமா இப்போ ரேகாவுக்கு என்ன செய்யறீயோ அதை விட ரெண்டு மடங்கு எனக்கு செய்... ஏன்னா நான் தான் இந்த வீட்டுக்கு மூத்த பொண்ணு... அன்னைக்கு என்னை நம்பி இந்த கழுதைகளை விட்டு நீ மலேசியா வந்த அப்போ இவளுங்களை நான் தானே வளர்த்தேன்… அந்த நன்றி இவளுங்களுக்கும் இல்ல.. உனக்கும் இல்ல… இன்னும் சொல்லப் போனா... இவளை இன்று உட்கார வச்சு நீ சோறு போடுற பார்... அதுக்கான பணத்தை எண்ணி நீ என் முன்னாடி வைக்கணும்... என் புருஷன் தான் அதையெல்லாம் கேட்காதேன்னு பெரிய மனதோட சொல்லிட்டார்... அதனாலே இதையாவது செய்...” ஒ

‘என்ன ஒரு அதிகாரம்!’ இப்படி தான் நினைத்தாள் வள்ளி.

ஆனால் சுந்தரம், “அதுக்கு என்ன பாப்பா.. தரேன்...” இதை சொன்ன அண்ணனை வள்ளி முறைக்க, அவரோ கண்ணாலேயே “பெரிது படுத்தாம போடா...” என்று வள்ளிக்கு பதில் அளிக்க.

“என்ன சமைச்சீங்க... எங்க இந்த வேலைக்கார நாய்ங்க.. நான் வந்து இவ்வளவு நேரம் ஆகுது… இன்னும் ஜூஸ் வரல.. என்ன பெத்தவ இருந்தா இப்படி விடுவாளா… நைட் என் வீட்டுக்கு டின்னர் இங்கயிருந்து தான். மீனு.. கறின்னு சமைக்க சொல்லு... எடுத்துகிட்டு போறேன்..” கலாவின் உத்தரவில் அதற்கான வேலைகள் நடந்தது.

“க்கும்.. மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சோத்து மூட்டைய கட்டுறா.. அப்படியா டி நீ காஞ்சிப் போயிருக்க...” இப்படி நினைத்தது வள்ளி தான்.

ஆனால் அங்கு காணாததைக் கண்ட மாதிரி இங்கிருந்து அள்ளிக் கொண்டு போக தான் கலாவுக்கு எப்போதும் தோன்றும். அதற்கு அவள் சொல்லும் பதில்.. இதெல்லாம் என் உரிமை... இது என் பிறந்த வீடு… எதுக்கு அண்ணன்.. தம்பிங்க நம்ம கூட பிறக்கறானுங்க… பிறந்த வீட்டுக்கு நாம வந்து சீராடவும்… வருடம் தவறாம நமக்கு சீர்வரிசை செய்யவும் தானே… என்பாள்.. இதெல்லாம் எத்தனை வீட்டில் நடந்து நீ பார்த்த.. முதல்ல உன் கணவன் இதை எல்லாம் செய்தானா வள்ளி இப்படி தான் கேட்பாள்.. ஆனால் அதே உரிமை தனக்கு இல்லை என்பாள்... எல்லாம் ஒரு வழிப்பாதையில் வயிற்றை நிரப்பிக்கொள்ளும் ஜென்மங்கள்.

எல்லாம் முடித்து பின் இரவு உணவுடன் கிளம்ப இருந்தவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது போல, “ஆமா.. போன வாரம் தங்க முக்கோணம் வளாகத்துக்கு வள்ளி போய் பதினைஞ்சாயிரத்திற்கு ஏதோ வாங்கினாளாமே. என் வீட்டுக்காரர் சொன்னார். அது எதுவோ.. என்ன பொருளோ.. அது எனக்கு வேணாம்.. ஆனா அவ செலவு செய்த பணத்தை மட்டும் எனக்கு இப்போ கொடுத்துடு...” போகும் போது பிச்சைக்காரி இதையும் கேட்டு வாங்கிக் கொண்டு தான் போனாள்.

தங்க முக்கோணம் என்பது மலேசியாவில் பல மால்களை உள்ளடக்கிய வணிகவளாகம்... வள்ளியின் பேராசிரியர் ஒருவரின் திருமணத்திற்காக அவள் வாங்கிய பொருளுக்கான தொகையை தான் எண்ணி வாங்கிக்கொண்டு போகிறாள் இவள். இதெல்லாம் தங்கைகளின் வாழ்க்கை மேல் கொண்ட பொறாமை. தான் மட்டுமே உயர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம்.

இதையெல்லாம் பார்த்து கண்ணீர் சிந்திய கிளியம்மா, “என் பிள்ளைக்கு மட்டும் நல்ல மாதிரி திருமணம் நடந்து இந்த வீட்டுக்கும் ஒரு மருமக வந்து என் புள்ள வாழ்ந்திருந்தா இவ எல்லாம் இப்படி ஆட்டம் போட முடியுமா... சாகுற வரை இவ இப்படியே தான் என் பிள்ளையை கொத்துவா போலவே...” அவர் வாய்விட்டே புலம்ப...

சுந்தரம் வள்ளி இருவருக்குமே என்னமோ போலானது. அதில், “இப்போ மட்டும் என்னங்க ம்மா.. அண்ணனுக்கு கல்யாணம் செய்து வச்சிடுவோம்... பிறகு இவ எப்படி ஆடுறான்னு பார்ப்போம்...” வள்ளி கவலையுடனே அவரை சமாதானப்படுத்த..

“என் ராசாத்தி.. உனக்கு கோவில் கட்டுவேன்.. அதை முதல்ல செய் டி ஆத்தா...” கண்ணீருடன் அவர் இவளின் முகத்தை நெட்டி முறிக்க

ஏற்கனவே அண்ணனுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த வள்ளியின் மனதில் தற்போது அவர் சொல்லிய சொல் இன்னும் ஆழப்பதிந்தது.

அதில் சுந்தரம், “என்ன பேச்சும்மா இது.. போய் வேலையைப் பாருங்க...” என்று கண்டித்தபடி விலக...

“அப்போ நீ கடைசிவரை இப்படியே தான் இருப்பியா..” கேட்கும் போதே தற்போது மூச்சுத்திணறலுடன்... அழுகை கேவலாக வெளிவந்தது அவரிடமிருந்து.. வயதானதால் இப்போதெல்லாம் அவருக்கு சில நேரத்தில் மூச்சுத்திணறல் உண்டாகிறது.

“அய்யோ அம்மா...” சுந்தரம் அவரை அமர வைத்து அவரின் முதுகை நீவி விட.. வள்ளி ஓடிச் சென்று அவருக்கு வேண்டிய மருந்தை எடுத்து வந்து தர, அதை விழுங்கியவர்...

“தாயா பிள்ளையா பழகிட்டோம் சுந்தரம். உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா..” அவர் கெஞ்சலாய் கேட்க

“சும்மா இருங்க ம்ம்மா... இப்போ எனக்கு வயசு நாற்பத்தைந்து... இப்போ போய்.. இப்படி பேசிட்டு...” மகன் மறுபடியும் கண்டிக்க...

“அப்போ அந்த கொத்தும் கழுகு உன்னைய கொத்திகிட்டே இருக்க நான் பார்த்துகிட்டு இருக்கவா...”

“இதற்கும் அதற்கும் என்னம்மா சம்பந்தம்.. எப்படி இருந்தாலும் என் தங்கைகளுக்கு நான் தானே செய்யணும்.. அதை கொஞ்சம் அதட்டலா பெரிய பாப்பா கேட்டு வாங்கிட்டு போகுது... நீங்க எதையும் காதிலே போட்டுக்காதீங்க ம்மா...”

‘அவ பெரிய பாப்பா இல்ல.. பெரிய பீப்பா..’ மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் வள்ளி.

“உனக்கு தெரியாது சுந்தரம்... அவ என்ன சொல்லிட்டு போறா பார்த்தயில்ல.. ஒரு வேளை சோற்றுக்கு... நீ வந்து நிற்பேன்னு...” இதை சொல்லும்போதே கிளியம்மாவுக்கு தொண்டை அடைத்தது.

“அப்படி நான் நின்னா யாரு கிட்ட.. நிற்பேன் என் தங்கச்சி கிட்ட தானே ம்மா...” சுந்தரத்தின் பதிலில்..

‘அப்படி ஒண்ணும் என் அண்ணனை நான் விட்டுட மாட்டேன்னு சொல்ல வள்ளிக்கு நாக்கு துடித்தது. ஆனால் இதை சொன்னால் அண்ணன் அதையே பிடித்துக் கொள்வார் என்பதால் அமைதி காத்தாள்.

“நீ யாரையாவது விரும்பியிருந்தா… எங்களுக்கு அண்ணி வந்து இருப்பாங்க ண்ணா...” அப்போதைய சூழ்நிலையை மாற்ற வள்ளி இதை சொல்ல..

தங்கையை வியப்பாய் பார்த்த சுந்தரம், “பாயி கெசில்.. என்ன பேச்சு இது...” கண்டிப்பு என்ற பெயரில் அவனின் குரல் மென்மையாக தான் ஒலித்தது. கூடவே சிறு நகை… தங்கைக்கு பேச்சை பாரேன் என்று நினைத்து.

“சரி எங்களுக்காக நீ யாரையும் விரும்பல... ஆனா உன்னை யாராவது விரும்பியிருப்பாங்க தானே ண்ணா...” வள்ளி விடுவதாய் இல்லை.

“என் மகனை ஒருத்தியா விரும்பி இருப்பா... அவன் கம்பீரத்துக்கும் குணத்துக்கும்... அழகுக்கும்.. நீ நானுன்னு பொண்ணுங்க வந்து நின்னுருக்க மாட்டாளுங்க...” கிளியம்மா பூரித்துப் போக

அதில் வாய்விட்டே சிரித்த சுந்தரம், “அது எப்படி தான் தெரியல... இந்த அம்மாக்கள் எல்லாம் கூஜாவா இருக்கிற மகனை கூட ராஜாவா பெருமை பேசுறீங்களோ...” அவரை கேலி செய்ய

மகனின் வார்த்தையைத் தவிர்த்தவர், “ஏன் ராசா.. எப்பவாது இந்த பொண்ணு நமக்கு மனைவியா வந்தா நல்லா இருக்கும்.. இப்படி எல்லாம் உனக்கு ஒருத்தியை கூடவா பார்த்தும் தோணாம போச்சு... எங்க இந்த ஆத்தா முகத்தை பார்த்து சொல்லு...” நடுங்கும் தன் கை விரல்களால் மகனின் நாடி பிடித்து கிளியம்மா கெஞ்சலாக கேட்க..

சுந்தரம் என்ன நினைத்தாரோ.. அப்போது அவர் மனதில் என்ன இருந்ததோ... கொஞ்ச நேரம் விழி மூடிய சுந்தரம், “அப்போ எனக்கு வயசு பதினேழு.. மேகமலை எஸ்டேட்டில் நான் வேலை செய்யும் போது... அந்த எஸ்டேட் முதலாளி கார்மேகம் அய்யா பொண்ணு.. அவங்களை பார்க்கும்போது இப்படி தோனுச்சு... வெளிநாடு வந்து கை நிறைய சம்பாதித்து அவருக்கு இணையா தகுதியானவனா உயர்ந்த பிறகு.. அவர் கிட்ட போய் பொண்ணு கேட்கணும்னு நினைத்தேன்...”

சொல்லி முடித்தவர் இமை திறக்க.. அவர் முகத்தில் அப்படி ஒரு லஜ்ஜை. வள்ளி வியப்பில் விழி விரித்தாள் என்றால்... கிளியம்மா அது நடக்கவில்லையே என்ற துக்கத்தில் மகன் கன்னத்தோடு தன் கன்னம் பதித்தார்.

அப்படி அன்று சுந்தரத்தின் மனதில் நுழைந்து இடம்பிடித்த பெண்.. தற்போது ஆண்டிப்பட்டியில் கார்மேகத்தின் மகளாய்.. இளங்குமரனின் தமக்கையாய்.. வாழ்ந்து கொண்டிருக்கும் மீனாட்சி தான் அவள்.
 

shankamal68

New member
சரிதான் .ஜாடிக்கேத்த மூடிய தான் ஜோடி சேர்த்திருக்கிங்க .ரெண்டுமே ஏமாந்த சோணகிரி 😃😃
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN