பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 10

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member


பூ 10

ஜோதிடர் வீட்டிற்கு வந்து சென்றதிலிருந்து தில்லை நாயகியின் மனம் அவர் சொன்ன வார்த்தைகளிலேயே சுற்றிச் சுற்றி வந்தது... ஒரு வருடத்தில் திருமணம் என்று கூறியதும் சந்தோஷமாய் இருந்த மனம் அதில் பல சிக்கலும் இருக்கும் என்று கூறியதும் ஏனோ சஞ்சலமாகவே இருக்க அதே சிந்தனையிலேயே உழன்றுக் கொண்டு இருந்தார் தில்லைநாயகி

இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பி இருந்தான் விசாகன். வரும்போதே மிகவும் கலைப்புடனும் சோர்வுடனும் தான் இருந்தது அவன் முகம். இன்று முழுவதும் வேலை அவனைப் பிழிந்து எடுத்து இருந்தது ஒரு புறம் என்றால், தொழில் தொடங்குவதற்கு என ஒரு புறம் அலையவேண்டி இருந்தது. இன்னும் இரண்டு மூன்று தினங்களில் பத்திரப்பதிவு வேறு செய்யவேண்டி உள்ளது. மேலும் அது தொடர்பான அடுத்தடுத்த வேலைகள் அவனைப் பம்பரமாய் சுழற்றி வைத்து இருக்க அதே அலுப்புடன் வீட்டிற்கு வந்தான்.

வீட்டிற்கு வந்தவனின் அரவம் கூட உணராமல் தன் எண்ணப்போக்கில் இருந்தவரின் அருகில் வந்து “அப்பத்தா” என்றான். இப்போதும் அதே நிலையில் இருக்க “அப்பத்தா. என்ன என்ன செய்து உனக்கு???” என்று அவரின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். ஏதோ உடல்நிலை சரியில்லையோ என்று

விசாகனை அருகில் பார்த்ததும் நினைவு வந்திட அவனின் கேள்வியைக் கவனியாதவர் “அய்யா ராசா நீ எப்ப யா வந்த??” என்று கேட்டவர் “கை கால் சுத்தப்படுத்திக்கிட்டு வாயா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று எழுந்து கொள்ள முயன்றவரைத் தடுத்து

அவரின் மனநிலை ஏதோ சரியில்லை…. இல்லையென்றால் தான் வந்தது கூடவா உணராமல் அமர்ந்திருப்பார் என்று ஊகித்தவன் “என்ன அப்பத்தா என்ன செய்யது??? உடம்புக்கு ஏதாவது முடியலையா!!” என்றான் அக்கரையுடன்.

“அது எல்லாம் ஒன்னுமில்லய்யா நீ எப்போ வருவியோன்னு நினைச்சிட்டு இருந்தேன். இந்தக் கிழகட்டைக்கு என்ன வரப்போவுது” என்றவர் “நீ எழுந்து வாயா ரெண்டு வாய் சாப்பிடுயா. என் ராசா திடமா இருந்தா தான் நான் நல்லா இருக்க முடியும்” என்று கூறியவர் பேரனிடம் ஜோசியர் கூறியதை எப்படி கூறுவது என்ற யோசனையோடு எழுந்துச் செல்ல

அவரை எழ விடாமல் அமரவைத்தவன் என்றுமில்லாத திருநாளாய் அவர் மடியில் தலை வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டான். பேரன் மடியில் தலை வைத்து படுத்ததும் பாட்டியின் கண்களில் தானாகவே கண்ணீர் துளிர்த்துவிட்டது. என்னதான் அருமை பெருமையாக தான் வளர்த்தாலும் பார்த்துக் கொண்டாலும் தாய் தந்தையரின் இடத்தை ஈடு செய்ய முடியுமா…. என்று ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓட மெல்ல தன் பேரனின் தலையை வருடி விட்டவாரே.

“என்ன ராசா முகமே வாடி இருக்கு. இப்படி நீ ஓயாம உழைக்கனுமா யா நமக்கு இருக்கும் சொத்துக்கு உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஏழேழு தலைமுறைக்கும் வரும் யா. நீ எதுக்கு ராசா இப்படி வருத்திக்கிற???” என்று வருத்த முகமாய் கூறிட.

யாருக்குத் தெரியும் சிறிது நேர ஓய்வைக் கூட விரும்பாமல் தான் இவன் இவ்வாறு உழைத்து தன்னை உறமேற்றி கொள்கிறான் என்று தான் மனதினில் எந்த எண்ணத்தையும் எழ விடாமல் ஆழப் புதைத்து விட்டதைத் தோண்டித் துருவக்கூடாது என்று தானே தன்னிலும் தன் மனதிலும் இருக்கத்தை வேண்டி விரும்பி வரவழைத்துக் கொண்டான்.

பாட்டியின் வருடலில் மெல்ல கண்களை மூடியவன் அவர் பேச்சினில் கண் திறந்தான். அவர் அவனுக்காகப் பேசியது ஏனோ மனதை இளகுவாக்கியது... இன்று அந்தக் காட்சியைத் தன் கண்கள் கண்ட போதும் தனக்கு ஏன் எந்த பாரமும் இல்லை என்று தான் நினைத்திருந்தான்.. ஒருவேலை அந்த உருவம் என் மனதில் இருந்து என்றோ அழிந்துப் போய்விட்டதோ என்று கூடத் தோன்றி இருந்தது அவனுக்கு, இரண்டு வருடங்களாக உருகி உருகி காதலித்த முகம் இன்று அன்னியபட்டது போல் பார்த்தும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை அவனுள், எப்போதும் போலவே இன்றும் சாதாரணமாகவே இருந்தது தான் அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது..

பாட்டி இன்னும் வருடலைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார். பேரனிடம் தன் பேச்சிற்குப் பதிலில்லை என்ற போதும் “அய்யா வாயா ஒரு வாய் சாப்பிட்டு படுத்துகோயா. வெறும் வயிறா இருக்க” என்று மறுபடி அவன் பசியறிந்து அவனை அழைக்க.

வேண்டாத எண்ணங்களில் மனதை ஏன் செலுத்த வேண்டும் என்ற நினைப்பு தோன்ற தன் நினைவிலிருந்து வலுக்கட்டாயமாக அதனை உதறித் தள்ளியவன் தில்லையின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் பதித்துக்கொண்டு “நீ சாப்பிட்டியா அப்பத்தா???” என்றான் கரிசனமாய்.

“நான் சாப்பிடலனா தான் உனக்கு கோபம் வருமே ராசா. அதெல்லாம் நேரத்துக்கு சாப்பிட்டேன்” என்று அவனுக்குப் பதிலைத் தந்தவரின் கனிந்த முகத்தில் தன் தாய் தந்தையரை ஒரு சேர கண்டவன் “எடுத்து வை அப்பத்தா. இதோ வந்துடுறேன்” என்று எழுந்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளச் சென்றான்.

யோசனையோடே அவனுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார் தில்லை. திருமணப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தபடியே விசாகன் வந்ததும் தட்டை வைத்து பரிமாற “நீ இரு அப்பத்தா நான் போட்டுக்குறேன்” என்றவனைச் சமாதானப்படுத்தி “அதை விட எனக்கு வேற என்ன வேலை இருக்கு. நீ உட்காருய்யா நான் போடுறேன்” என்று தானே பறிமாறி அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அவன் பசியாறும் வரை அமைதியாய் இருந்தார்.

அவன் கைக் கழுவி வரும் நேரம் “ராசா நம்ம ஜோசியர் வந்து இருந்தாரு” என்று மெல்லப் பேச்சை ஆரம்பிக்க

“ஜோசியரா!!” என்று குரலில் வியப்பை காட்டியவன் ‘இப்போ அவர் வர அவசியம் என்ன' என்று நினைத்து “எதுக்கு வந்தாரு???” என்றான் சாதாரண குரலில்

ஒருவாறு மனதில் அவனிடம் கூறவேண்டியதைச் சொல்லிப் பார்த்துக் கொண்டவர் “அது உனக்கு நேரம் சரியில்லையாம். ஒரு எட்டு நம்ம சாமூண்டிஸ்வரி அம்மன் கோவில்ல போய் விளக்கு போட்டுட்டு வர சொன்னாரு” என்று ஒருவாராகச் சொல்லி முடித்தார். பேரன் இதற்கு என்ன சொல்ல போகிறானோ என்ற அச்சத்துடனே.

அவர் அவ்வாறு கூறியதும் ஏதோ பேச வந்த விசாகனைத் தில்லையின் முகத்திலிருக்கும் அச்சம் சற்று நிதானிக்க வைத்தது. “அப்பத்தா பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நான் செய்வேன்னு எப்படி நினைக்கிறீங்க??” என்றான் சாதாரணமாகவே.

“ராசா……” என பேசவந்தவரைத் தடுத்தவன் “இதை நான் செய்வேன்னு எதிர்பாக்காதீங்க… சாமி பூஜை அது இதுன்னு எதுவா இருந்தாலும் அது உங்களோடவே இருக்கட்டும்…. எனக்கு இதுல துளியும் விருப்பம் இல்லை. நான் செய்யவும் மாட்டேன். எனக்கு என்ன ஆகுதுன்னு நானும் பாக்குறேன்...” என்று அழுத்தமாய் கூறியவன் நேரே தன் அறைக்குச் சென்று விட்டான்

‘தெரியும் தானே. அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது. பிடி கொடுக்க மாட்டான் என்று கோவில் என்றாலே வானத்துக்கும் பூமிக்கும் குதியாய் குதிப்பவனிடம் போய் விளக்குப் போடு சாமி கும்பிடுன்னு சொன்ன சும்மாவா இருப்பான் மேல விழுந்து குதறாமல் இருந்ததே அந்தத் தெய்வப் புண்ணியம்… அவன் இதையெல்லாம் செய்வான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்' என்று தன்னை நொந்து கொண்டவர் ‘பேரனுக்காக நாமே போய் விளக்குப் போடுவோம்' என்று எண்ணத்திற்கு மாறியிருந்தார். விளக்குப் போடுவதற்கே இப்படி எகிறிக்கொண்டு வருபவனிடம் கல்யாணத்திற்குத் தான் என்று சொல்லி இருந்தால் இந்நேரம் என்ன ரணகளம் நடந்து இருக்குமோ என்ற எண்ணம் எழ, தலைத் தப்பியது தம்புரான் புண்ணியம் என்று அத்துடன் அந்தப் பேச்சை கைவிட்டவராய் சமயலறையில் சென்று அனைத்து பாத்திரத்தையும் ஒதுக்கிவிட்டு அவரும் சென்றுப் படுத்துக்கொண்டார்.

--–---

தேவாவின் காலில் ஏற்பட்டக் காயம் தற்போது ஓரளவுக்குச் சரியாகி இருந்தது. அவன் வீட்டில் விட்டு சென்று இருநாட்கள் ஆகிறது ஏனோ இன்று நடந்தது போலவே அவன் செய்தச் செயலை நினைக்கும் போது எல்லாம் ஏதோ ஒரு குறுகுறுப்பு அடிநெஞ்சில் ஒட்டிக்கொண்டு அவளை வெட்கமுறச் செய்தது கொண்டு இருந்தது...

‘நீங்க என்னைப் பூப்போல தூக்குவீங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்லை. எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் நான் ஆகாயத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு…. உங்களுக்கு என்னைப் பத்தி ஏதாவது நினைவு இருக்கா!!!... காஃபி ஷாப்லயே என்னை யாருன்னு கேட்டீங்க. இப்போவாது என் முகத்தை ஞாபகம் வச்சிருக்கிங்களா என் மக்கு ஹீரோ…' என்று தன் போக்கில் மனதில் நினைத்துக் கொண்டு தனக்குத் தானே சிரித்தபடி இருந்தவள் மக்கு என்று மனம் சொல்லவும் நாக்கைக் கடித்துத் தலையில் தட்டி ‘நோ நோ… அப்படிக் கண்டபடித் திட்டக்கூடாது. என்ன இருந்தாலும் அவர் என் ஹிரோல்ல' என்று சொல்லிக் கொண்டு மீண்டும் சிந்தனையில் மூழ்கி விட

“ஏய் எருமை மாடு வெயில் சுள்ளுன்னு முகத்துல அடிக்கிறது கூடத் தெரியாம என்னத்தடி நினைச்சிக்கிட்டு சிரிச்சிட்டு இருக்க!!! விரசா எழுந்து வா. ஒத்தையாளா இங்க மாங்கு மாங்குன்னு அடுப்படியில செய்துக்கிட்டு இருக்கேன். மோட்டு வளையத்தா பாத்து காண கண்டுக்கிட்டு இருந்தா பசி ஆறிடுமா…!!!” என்று அர்ச்சனையைத் தொடங்கி இருந்தார் மரகதம்.

மரகதம் பேசப் பேச ஏதோ தன்னைப் பாராட்டுவதைப் போல சிரித்துக்கொண்டு இருந்தவளைப் பார்த்து மேலும் கடுப்பானவர் கையிலிருந்தக் கரண்டியால் ஒரு இழுவை இழுத்து வைக்கவும்

கரண்டியின் சூடு தாங்காமல் “ஆஆஆஆ…” என்று அலறித் தாயின் முகம் பார்த்தவள் “அம்மா நீயெல்லாம் தாயா இல்லை பேயா. இப்படி வந்து சூடு வைக்கிற” என்று அந்த இடத்தினை கையால் வீசிறிபடியே வார்த்தைகளை விட

“கேக்கமாட்ட…. உன்னை உட்கார வச்சி ஆக்கிக் கொட்டுறேன்ல இதுவும் கேட்ப இதுக்கு மேலயும் கேட்ப. ஸ்கூல் முடிச்சவுடனே கையில கரண்டிய கொடுத்து சமையல் அறையில உட்கார வச்சி இருந்தா இந்த வாய் பேசுற கொழுப்பு எல்லாம் அடங்கி இருக்கும்” என்று அவளை வறுத்துக் கொண்டிருக்க.

“போதும் ம்மா போதும் இனிமே என் காது தாங்காது. நீ கேட்குற அடக்க ஒடுக்கமானப் பொண்ணு எல்லாம் இப்போ சுடுகாட்டுலையும் உங்க காலத்தோடவும் போயிடுச்சு... இப்போ இருக்க காலக் கட்டத்துல எல்லாத்துலயும் தகர்த்து வெளியே வந்துட்டோம். நீங்க இந்த பாலசந்தர் பாரதிராஜா படம் எல்லாம் பார்த்தது இல்லையா. அதுல கூட ஒரு பாட்டு வருமே ‘ஒரு தென்றல் புயலாகி வருதே” என்று ராகமாக பாடவும்.

அதில் மேலும் கோபமானவர் “எடு அந்தத் தொடப்பக்கட்டைய. எப்ப பார்த்தாலும் ஏட்டிக்குப் போட்டிப் பேசிக்கிட்டு” என்று விளக்கமாறு கொண்டு வர பேசிக்கொண்டே இருந்தவளின் வாய் “டோர் லாக்” என்று கூறிக்கொண்டே படிகளிலிருந்து எழுந்து ஓட, கையில் பேகுடன் வந்து நின்ற ஜெயசந்திரனின் மேல் மோதி அவனை அண்ணார்ந்துப் பார்க்க. அவன் முகத்தைப் பார்த்ததும் “அண்ணா…. அண்ணா…” என்று பின்னாடி ஒளிந்துக் கொண்டு மரகதத்திடம் இருந்து தப்பித்து அவனிடம் ஒளிந்து கொண்டாள்.

கையில் ஆயுதத்துடன் வந்த மரகதம் மகனைப் பார்த்ததும் தேவாவை அடிப்பதை மறந்தவர் “சாமி வாயா வா….” என்று கையிலிருந்ததைத் தூர எரிந்தவர் மகனின் தோல்பையை வாங்கிக்கொள்ள

சிரித்தபடியே “இதோ வரேன். நீங்க போங்கமா” என்று அவரை உள்ளே அனுப்பியவன் தாயிற்குத் தெரியாமல் பின்னால் மறைந்து இருந்தத் தங்கையைக் கைப்பிடித்து முன்னால் வர வைத்து “ஏய் என்ன பண்ணி வச்ச. அம்மா இப்படி துடைப்பக்கட்டைய தூக்குற அளவுக்கு” என்று தங்கையே விசாரிக்க.

“ப்ச் அது அப்படித்தான் சும்மா இருந்தா போர் அடிக்கும்ல. அதான் இப்படி. இப்போ பாரு அம்மாவும் எக்சர்சைஸ் பண்ணா மாதிரி ஆச்சு. எனக்கும் நேரமும் போச்சு” என்று தன் இரவு உடையின் பைஜாமா காலரைத் தூக்கி விட்டளைக் கிண்டலாகப் பார்த்தவன் “இப்போ உள்ள எப்படி வருவ???” என்றான்.

“அதான் நீ இருக்கியே உன்னை சாக்கா வச்சே வந்துட மாட்டேன். நீ வா நாம போலாம்” என்று அவனைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவள் “மா…. மா…. இங்க வாயேன். இவனைப் பாரு மா. எப்படி வந்து இருக்கான்” என்று அதிர்ச்சியைப் போல் கூறிட…

அவளை முறைத்தபடியே மகனுக்குத் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தவரைப் பார்த்தவள்

“என்னை முறைக்கறது இருக்கட்டும்… நான் இங்க தான் இருப்பேன் கூப்பிட்டு வச்சிக்கூட முறைக்கலாம். தப்பில்ல. ஆனா இவனைப் பாரு” என்றாள் தேவா ஏதோ ஆராய்ச்சியாய் பார்ப்பவள் போல்

தேவாவின் பார்வையில் என்ன இருக்கிறதோ என்று மகனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவர் “என்னடி. என்னத்த பாரு பாருன்னு தண்டோரா போடற???” என்றார் கடுப்பாக.

“ப்ச் ப்ச் கொஞ்சம் நேரம் மூச்சு வாங்குமா” என்றவள் “பாருமா அவனை நேத்து நைட் கூட பேசினான் வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்லல…. எப்படி ஈறுக்குச்சி மாதிரி வந்து நிக்குறான்னு பாருமா….” என்றதுமே மகனை இன்னும் நன்றாக பார்த்தவர் “ஏன்யா உடம்பை இப்படி வச்சிருக்க நல்ல வயித்து வஞ்சை வைக்காம சாப்பிடுயா???” என்றிட தங்கையைப் பாவமாகப் பார்த்தான். முன்பை விட நல்ல திடகாத்திரமான உடலோடும் பார்ப்பதற்கு நல்ல அழகனுமாய் இருந்தவனை இவ்வாறு சொல்லிட அவள் கூறியது உண்மையோ என்ற ரீதியில் இவ்வாறு மகனுக்குச் சொல்லியவர்.

“வாயடக்கம் வேணும் புள்ள. உன்னை விட எம்புட்டு வயசு பெரியவன அவன் இவன்னு சொல்ற. ஒழுங்கா அண்ணன்னு கூப்பிட்டுப் பழகு. அவனுக்குன்னு ஒருத்தி வந்துட்டா உன் ஆட்டம் எல்லாம் அடங்கி போயிடும். மரியாதையா கூப்பிடு” என்று மகளைக் கண்டிக்க.

“அம்மா… இப்போ என்ன என் தங்கம தானே சொல்லுச்சு. விடு.அதுக்கு என்ன விருப்பமோ அப்படியே கூப்பிடட்டும். நீ எதுவும் சொல்லாத” என்றிட “என் அண்ணான்னா அண்ணா தான் நீயும் இருக்கியே, இதை.செய்யாத அதை செய்யாத அப்பப்பபா முடியல” என்று தலையில் கை வைத்துக்கொள்ள

“ம்கூம் நீ உறுப்பட்டுட்டாலும்” என்று மகளை ஒரு இடி முகத்தில் இடித்தவர் “அந்தக் கிறுக்கச்சி அப்படித்தான். நீ வாயா சாதம் ரெடியா இருக்கு சாப்பிட” என்று அழைத்து அவர் சென்று விட அவர் சென்ற திசையையே முறைத்தவளின் கண்களை ஒற்றை கையால் மூடியவன், அவளுக்காக வாங்கி வந்த செல்ஃபோனை முன்னாடி வைத்து கண்ணைத் திறக்கவும் ஃபோனை பார்த்தவள் “ஐய்…. ஃபோன் எனக்காக” என்று அதனை வைத்துக்கொண்டு சந்தோஷத்தில மிதந்தாள்.

“ம்… உனக்கே உனக்குத் தான்” என்று அவளின் தலையில கை வைத்து ஆட்டிட “தேங்க்ஸ் அண்ணா. தேங்க்ஸ்” என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடியவள் “நீ சனிக்கிழமை தானே வரேன்னு சொன்ன. தீடீர்ன்னு வந்து இருக்க???” என்றாள்.

“அது என் தங்கத்தைப் பாக்கனும்னு தோணிக்கிட்டே இருந்துச்சா. நீ வேற காலை உடைச்சிக்கிட்டு வந்து உட்கார்ந்து இருந்தியா. எனக்கு எப்படி அங்க வேலை ஓடும்!!! அதான் வேலைய வீட்டுல பாத்துக்கலாம்னு வந்துட்டேன். இதோட மண்டே தான் ஊருக்கு” என்றவன் “நாளு நாள் உங்களோட தான்” என்றான் மகிழ்வாய்.

“ஐய் எனக்காகவா. என் கூடவே இருப்பியா???” என்றபடி அண்ணன் கையைப் பிடித்துக்கொண்டவள் சாப்பிட அவனுடனே சென்றாள்.
 

Attachments

  • cf59e86967d61bd6c1157353380e4404.jpg
    cf59e86967d61bd6c1157353380e4404.jpg
    45 KB · Views: 138
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN