பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 11

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

பூ 11

அப்பொழுது தான் சூரியன் உதயமாகிய காலை வேளை பறவைகளின் கிரீச் கிரிச் சத்தம் செவிகளில் ரீங்காரமாய் ஒலியெழுப்ப இள சூரியனின் வெப்பம் அவன் கண்களைக் கூசச் செய்து இருந்தது. இரவு நெடுநேரம் உறக்கம் என்னும் ஒன்று அவன் கண்களை எட்டவே இல்லை…

லேசாகச் சிவந்திருந்த கண்களே கூறியது 'எனக்கு இன்னும் உறக்கம் வேண்டும்' என்று சற்று நேரம் அப்படியே கட்டிலில் கண்களை முடி இருந்தவனுக்கு அலைபேசி குரல் எழுப்பி அவனை அழைத்தது.

ஃபோனை எடுக்காமலேயே தெரிந்தது அது தன் நண்பன் தான் என்று இரண்டு மூன்று அழைப்புகள் சென்ற பிறகே அவன் ஃபோனை எடுத்து காதுக்குள் பொருத்தி இருந்தான்.

விசாகன் “ஹலோ” என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லும் முன்பே “டேய் விசா என்னடா இன்னும் நீ கிளம்பலையா???” என்றான் சுந்தரன்.

நண்பன் அழைத்ததில் எழுந்து மணியைப் பார்த்தவன் “ம் இதோ வர்றேன்” என்று ஒற்றை வரியில் பதிலளித்து ஃபோனை அணைத்து மேசையில் வைத்தவனுடைய மனது நிர்ச்சலமாகவே இருக்க இன்று ஏனோ மனது லேசாகவும் இருந்தது… கடந்த கால கசடுகள் எதுவும் அவனைப் பாதிக்கவில்லை என்பதே அதற்கு முக்கியக் காரணம்.

இன்று பத்திரப் பதிவிற்கு சில டாக்குமெண்டுகளைத் தயார் செய்ய வக்கீலைச் சென்றுச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்து இருந்த நாள்…. அது தொடர்பாக நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்ற போது தான் அந்தக் காட்சியைக் காண நேரிட்டது.

இது நாள் வரையிலும் யாரைத் தன் மனதாரக் காணவே கூடாது என்று நினைத்தானோ அவளையே இன்று கையில் குழைந்தையுடன் காண நேர்ந்தது அந்த இடத்தில்... 8 வருடங்களுக்கு முன் அவன் வாழ்க்கையில் தென்றலாய் வந்தவள் அவனுடைய சிரிப்பு சந்தோஷம் நிம்மதி என அனைத்தையும் புயலென அவளுள் சுருட்டிச் சென்று விட்டாள்.

குளியலறைச் சென்றவன் அரைமணி நேரம் கழித்தே வெளியே வந்தான்... அந்தக் காலத்து வீடு எனும் போதும் அவனுக்கு எற்றார் போல் நவீன மயமாகத்தான் இருந்தது அவனுடைய அறை... குளித்து முடித்து வெளியே வந்தவன் சந்தன நிறத்தில் சட்டையும் கருப்பு நிற வேட்டியையும் அணிந்திருந்தான்.

இறுகிய முகத்தோடு கருகருவென அடர்த்தியாக வளர்ந்தச் சிகையை, கையால் வாரியபடி மீசையை நீவி விட்டுக்கொண்டவன் ட்ரிம் செய்த தாடியுடன் வெளியே வந்தான்.

அவன் வரும் சத்தம் கேட்டவுடனே மேசையில் உணவு வகைகளை அடக்கிவிட்டார் தில்லை

தில்லையின் செயலில் லேசாய் சிரிப்பு வந்தாலும் அவருக்காகவே வந்து அமர்ந்தவன் அமைதியாக சாப்பிட்டான்.

அவருக்குத்தான் பேரனின் முகம் சரியில்லாதது போல் இருந்தது. சாப்பிடும் அவனையே உற்று உற்று பார்த்துக்கொண்டு இருந்தார் அவர்.

சாப்பிட்டு கொண்டே அடிக்கண்ணில் அதை நோட்டம் விட்டவன் “என்ன கேக்கணுமோ அதை நேரடியாவே கேக்க வேண்டியது தானே. என் முகத்துல என்ன கண்டு பிடிக்கிற அப்பத்தா” என்றான் குனிந்தத் தலையை நிமிர்த்தாமலேயே.

பேரனின் கேள்வியில் சற்று சுதாரித்தவர் அவன் தலையைக் கோதியவாறே “நேரத்திலிருந்து என் இராசா முகமே சரியில்லை ரொம்ப வாட்டமா இருக்கே அதான் என்னமோ என்ன பிரச்சனையோன்னு மனசு கலங்கிப் போயிருக்கேன்... என் சாமி உன்னை விட இந்தக் கட்டைக்குக் கொல்லி வைக்க யாரு இருக்கா” என்று கண்களில் இரு துளி நீர் துளிர்த்தது.

தில்லையின் கலங்கிய முகம் அவனுக்கு ஏதோ நெருட “ப்ச் அப்பத்தா நான் எப்பவும் போலதான் இருக்கேன்… கொஞ்சம் வேலை அதுவுமில்லாம ஃபேக்டரிக்கு இடம் பாத்திருக்கேன்ல அதையும் பதிவுப் பண்ணனும் உனக்குத் தெரியாததா??? சொல்லு?? ... அதுக்குள்ள என்ன என்னமோ பேசுற!!!" என்றான் கோபமாய்.

பேரன் கோபத்தில் எழுந்துக்கொள்ள அவனைக் கையைப் பிடித்து அமரவைக்க “இல்லை யா…. நான் ஒரு கிறுக்கச்சி என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் இனி எதுவும் கேக்கல நீ சாப்பிடு யா” என்று பேரனின் முன் படு சமத்தாக அமர்ந்து கொள்ள அங்கு வேலை செய்யும் பொன்னிக்கு அவர் மற்றவர்களிடம் ஆளுமையுடன் நடந்துகொள்ளும் தில்லை கண் முன் வந்து போனார்.

பேரனின் மனம் கூடக் கொஞ்சம் இளகித் தான் போனது. பாட்டி தனக்காகத் தான் எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைத்து.

இதோ விசாகன் சுந்தரனுடன் தனது இரு சக்கர வாகனத்தில் நகரத்தை நோக்கி கிளம்பி விட்டான்.

(உன்னையே நினைச்சிக்கிட்டு இன்னொருத்தியும் இதே கிறுக்குத்தானமா செய்ற வேலை எல்லாம் உன் கண்ணுல படலையோ)


"எலேய் எவண்டா அது காதுக்குள்ள குய்யுன்னு சத்தம் போடுறது" என்று குடியில் நிதானிக்க முடியாமல் பக்கத்தில் இருந்தவனை ஏசியபடியே "என்னைப் பணமும் கொடுக்காம, நிலத்தையும் கொடுக்காம ஏமாத்திட்டான்டா அவன்... அவனைச் சும்மா விடமாட்டேன்... அவனை என் கால்ல விழந்துக் கதற வைப்பேன்...” என்று கையிலிருந்த சரக்கு பாட்டிலை வாயிலூற்றி புறங்கையால் துடைத்துக் கொண்டான் ரத்தினம்.

டாஸ்மாக்கில் வாங்கிக் குடித்தது பத்தாது என்று விடிந்ததும் விடியாததுமாக காலை வேலையிலையே கையில் வாங்கி இருப்பு வைத்திருந்ததில் ஆரம்பித்து விட்டிருந்தான் ரத்தினம், கையிலிருந்த சரக்கு பாட்டிலை வாயில் ஊற்றிக்கொண்டு . தான் கொடுக்கும் சரக்கிற்கு கூடவே தனக்கு ஆமாம் சாமி போடும் சொக்கனுக்கும் ஊற்றிக் கொடுத்து இருந்தான்.

“ஆமா அண்ணே உன் கால் தூசிக்குப் பெருமா அந்தப் பெரிய வீடு. நீ யாரு உன் அழகு என்ன உன்னைய போய் இப்படி அம்போன்னு ஏமாத்திட்டு அந்தப் பய டவுன்ல இடத்தை வாங்கி ஃபாக்கடீரி கட்டப் போறானாம்” என்று குடிபோதையில் உளறிக் கொட்டிக்கொண்டு இருந்தான் அவன்.

“நீ நல்லவன்டா உனக்குத் தெரியுதுடா என் அருமை பெருமையெல்லாம். அந்தச் சல்லிக்காசுககு பெறாதா பயலுக்கு எங்க தெரியுது.. எங்கள ஏமாத்தி என் பொண்டாட்டி சொத்தை ஒத்தையால வச்சி அனுபவிக்கறான்” என்று வாய்க்கூசாமல் பொய்யை உரக்க கூறிக்கொண்டே வீதி வந்து சேர்ந்தார்கள் இருவரும்… ரத்தினத்தின் இடுப்பில் இருக்கும் வேட்டித் தலைக்கு குடிபெயர்ந்து இருந்தது…

பார்க்கவே படுகேலவமாக இப்படி ஒரு மனிதரை எங்கும் பார்க்க முடியாது எண்ணும் அளவிற்கு ரகளைகள் செய்துக் கொண்டு தெருவில் ஆடிக்கொண்டும் சென்றனர் இருவரும்.

வீட்டிலிருந்து கிளம்பிய விசாகன் டவுனிற்குச் செல்ல, தொலைவில் கேட்ட பைக் சத்தம் அருகில் வர வர “எவன்டா அவன் நானே என்னை அந்த வெறும் பையன் ஏமாத்திட்டானேன்னு சோகத்துல வரேன். ஒய்யாரமா பைக்கல உட்காந்து வரியோ!!!” என்று வண்டியின் முன்னால் பக்கை வழி மறித்தபடி நின்றான் ரத்தினம்.

“அச்சோ இந்த ஆளு எங்க இங்க தள்ளாடிட்டு நிக்கிறான். குடிச்சி வேற இருக்கான் வம்பு இழுப்பானோ!!!” என்ற நினைப்புடன் பின் இருக்கையில் சுந்தரன் யோசனையோடு இருக்க.

ஏற்கனவே கொஞ்சம் கடுப்புடன் வந்திருந்த விசாகனுக்கு எரிச்சலுடன் கோவமும் அதிகரிக்க, அப்படியே ஒரு ஏற்றாய் ஏற்றிவிடுவோமா என்று இருந்தது. அந்நேரம் வரும் கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு “யோவ் நகருய்யா ” என்றான் கோவமாய்.

அவன் குரலை வைத்தே அவனை அடையாளம் கண்டு கொண்ட ரத்தினம் வேண்டுமென்றே “யாரு எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கு. யாரு???” என்று கண்களைக் கசக்கிப் பின் உற்று அவனைக் காண “ஹோ… நீயா மாப்புள!!!…. எப்படி மாப்புள இருக்கீங்க??? நான் கேள்விப் பட்டேனே நீ டவுன்ல நிலம் வாங்க போறேன்னு உண்மையா மாப்புள???” என்று அவனின் பைக்கின் மீது தள்ளாடி விழ.

எங்கே நண்பன் அடித்து விடப் போகிறானோ என்று உடனே பைக்கை விட்டு இறங்கிய சுந்தரன் “யோவ் எந்திரி, எந்திரி இங்கிருந்து கிளம்பு. டேய் சொக்கா கூட்டிட்டுப் போடா. வீணா அவன் கோவத்தைக் கிளறி விடுறான் இந்த ஆளு... அவன எங்க இடம் வாங்கினா இந்தாளுக்கு என்னடா... கூட்டிட்டு போடா ” என்று ரத்தினத்தைப் பிடித்து நிற்க வைக்க.

“விடு என்னை விடுடா என் மாப்பிள்ளைக் கிட்ட நான் பேசுறேன் நீ போடா அந்தப் பக்கம் இது என் மருமக புள்ளைக்கும் எனக்கும இருக்கும் பிரச்சனை நாங்க பேசிதான் பைசல் பண்ணனும் நீ சொல்லு மாப்புள” என்று அவனை உதறி விட தலையில் கை வைத்து கொண்டு நின்றான் சுந்தரன்.

இழுத்துப் பிடித்தப் பொறுமை அவன் மாப்பிள்ளை மருமகன் என்று மாற்றி மாற்றி அழைக்கவும் காற்றில் பறந்து விட கோவம் கொண்ட விசாகன் “யாரு யா மாப்பிள்ளை உனக்கு??? யாரு மருமகன் போடா வாடான்னு கூட. ச்ச… அது கூட நீ ஏன்யா என்னைக் கூப்பிடனும் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல உன்னையெல்லாம் பார்க்கவே அறுவறுப்பா இருக்கு.. இருக்க கோவத்துக்கு ஏதாவது செய்துடுவேன் மரியாதையா வழிய விடு... டேய் நீ ஏறுடா வண்டியில ஒரே ஏத்தா ஏத்திட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்” என்று அறுவறுப்பாக் கூறிட.

விசாகன் அவ்வாறு கூறியதும் “டேய் யாருடா நீ??? நான் பார்த்துப் பொறந்த பைய நீ கோவப்பட்டா நான் அடங்கிடுவேனா!!! யாருகிட்ட ரத்தினம் நாகரத்தினம். நல்ல பாம்பு விஷத்துக்கு சமம்... மாப்பிள்ளை சொன்னதுக்கே உனக்கு கோவம் வருதோ!!! மருமகனே நிஜமாலே அது நடக்கும் டா நடத்திக் காட்டுவான் இந்த ரத்தனம்” என்று கையில் வைத்திருந்த சரக்கின் மீது சத்தியம் செய்ய

“யோவ்” என்று ஆத்திரத்தில் பைக்கில் இருந்து எழுந்துக்கொள்ள, “மாப்ள அந்த ஆளு போதையில் இருக்கான்டா நீ மேல கை வைச்சி செத்துக் கித்து போய்டுவான்டா வேணாம்‌. பைத்தியம் உளறுதுன்னு போய்டுவோம்” என்று அறிவுறுத்த.

“ச்சைக் எவன் மூஞ்சிய பாக்கவே கூடாதுன்னு இருந்தோமோ அவன் தான் முன்னாடி வந்து நிக்கிறான். இவனெல்லாம் நாட்டுக்கு எதுக்கு பாரமாய்” என்று நினைத்தவன் அறுவருத்தபடி கோவத்துடன் பைக்கை கிளப்பி இருந்தான்.

“பாத்து போ மாப்புள. டேய் சொக்கா மாப்புள்ளைக்குக் கைய காட்டுடா” என்று போதையில் உளறிய ரத்தினம் தள்ளாடியபடியே தெருவில் நிள அகலத்தை அளந்துக்கொண்டு நடந்தான்.

___

“அம்மா…. கிளம்புறேன்” என்று வாசலில் நின்று சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தாள் தேவா

“காலுல அடிப்பட்டும் புத்தி வரல. எந்த நேரத்துல வந்து பொறந்துதோ தெரியல. ஏய் இரு போய்டாதா புள்ள” என்று வாசலுக்கே வந்து உணவு டப்பாவைக் கொடுத்தவரை வைத்தக் கண்ணெடுக்காமல் பார்த்துக் முறைத்துக்கொண்டு இருந்தாள் தேவா.

“என்ன பாக்குற. கண்ணு முழிய நோண்டிருவேன். ஒழுங்கா போனோமா வந்தோமான்னு வர்ற வழிய பாரு. இத பாக்குறேன் அத பாக்குறேன்னு வம்பை இழுத்துக்கிட்டு வந்து நிக்காதே” என்று கரைந்துவிட்டு உள்ளே சென்றிருந்தார் மரகதம்.

“சே… இந்த ஊர்ல வந்து பொறந்தது என் குத்தமா இல்ல நீங்க டவுன்ல இல்லாதது என் குத்தமா… நீங்க ஏன் டவுன்ல இல்ல. இங்க எதுக்கு எடுத்தாலும் நம்ம ஊரு அப்படிப் பேசிடும் நம்ம ஊரு இப்படிப் பேசிடும்னு இந்தப் பேச்சுக் கேட்டுக் கேட்டு எனக்கு இந்த ஊரையே பிடிக்காம போயிடுச்சு” என்று அலுத்துக்கொண்டு கேட்டை திறந்து வெளி வந்தாள் தேவா.

அண்ணன் கொடுத்த மொபைலைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லக் கேட்க, நேற்று கொஞ்சம் அர்ச்சனை வாங்கி இருந்தாள். இன்று அதன் சொச்சத்தையும் வாங்கி கட்டிக்கொண்டு முகத்தை எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவிற்கு வைத்துக்கொண்டு இருந்தாள்.

வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்கவும் தலையை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலையைக் குனிந்து அண்ணனைக் கடந்துச் சென்றாள்.

“ஏய் செல்லம்மா…” என்று ஜெயசந்திரன் அழைக்க,

காதில் வாங்காதது போல் சென்றாள்.

பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்தியவன் தங்கையின் கோபமுகம் தாங்காதவனாய் “ஹேய் செல்லம்மா என்ன ஆச்சு… ஏன் கோபமா போற… ???” என்றான் கூடவே நடந்துக்கொண்டு‌.

“ஒன்னும் வேணாம் போ….. நான் போறேன்…. யாரும் என்கிட்ட எதுவும் கேட்காதிங்க….” என்று மூக்கு விடைக்க உதடுகள் துடிக்க விறுவிறுவென கண்கலங்கியபடி சென்றாள்.

அதுவரையிலும் தங்கையின் கோபத்தை ரசித்தபடி வந்தவன் அவள் கண் கலங்கவும் மனது ஏனோ பொறுக்கவில்லை. அவளின் கையின் மணிக்கட்டைப் பிடித்து நிறுத்தி இருந்தவன் “கொஞ்சம் இரு இதோ வந்துடுறேன்” என்று சென்றவன் இரண்டு நிமிடங்களில் பைக்குடன் வந்து அவள் முன் நின்றான்.

கையில் பேகுடன் நின்றிருந்தவள் அவன் ‘ஏறு’ என்று சொல்லும் முன்பே அவன் பின் இருக்கையில் ஏறி அமர்ந்திருந்தாள். மேகலாவை வழியில் பார்த்தவன் அவளிடம் எதுவும் சொல்லாமல் தங்கையை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அவனைப் பார்த்த மேகலாவிற்கு தான் வயிறு திகுதிகு என்று எரிந்தது... “துறைக்கு மனசுல பெரிய இதுன்னு நினைப்பு. நின்னு சொல்லிட்டுக் கூடப் போறதுக்கு நேரம் இல்லையோ…. அண்ணன் கூப்பிட்டான்னு பின்னாடியே இடிச்சப் புளி மாதிரி உட்கார்ந்துட்டு போறத பாரு…

நீ மதிச்சா தானே டி உங்க அண்ணன் என்னை மதிக்க… ரெண்டும் எக்கேடோ கெட்டு ஒழிங்க..” என்று மனதில் அவர்களைப் போட்டு வறுவறுவென்று வறுத்தவள்…. பேருந்தில் ஏறிய போதும் அவளது கோவம் மட்டும் அடங்கவில்லை… “காலேஜுக்கு வாடி உனக்கு அங்க வச்சிக்கிறேன். இன்னைக்கு உங்க அண்ணன் உனக்குத் துணைக்கு வருவான். நாளைக்கு நான்தானே வரணும்” என்று மனதில் நினைத்துக் கொண்ட பின்னே கொஞ்சம் மட்டுப்பட்டது அவளது கோபம்.

தங்கையை இழுத்துக்கொண்டு வந்தவன். சிறிது சிறிதாக அவளைப் பேச வைத்திருந்தான். வழியில் ஹோட்டலைப் பார்த்தவன் வண்டியை அங்கு நிறுத்திவிட்டு அவளை அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

“எதுக்கு?? எனக்கு எதுவும் வேணாம். வா போகலாம்” என்று அவள் திரும்ப.

“எனக்குப் பசிக்குதே. உன் கூடவே வந்துட்டேன். சாப்பிடலையே செல்லம்மா. சரி எனக்கும் வேணாம் வா போகலாம்” என்று எழுந்து கொள்ள.

“இல்ல எனக்குப் பசிக்குது” என்று அமர்ந்துக்கொண்டாள் அவள்.

சிரித்தபடியே அவளுக்கும் தனக்கும் உணவுகளை ஆர்டர் செய்து வரவைத்தவன் அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாகவே இருந்தான். பின் பேச்சை ஆரம்பித்தான்.

“என்னடா உனக்கு கோவம்???”

“அது ஒன்னுமில்ல ண்ணா. சும்மாதான்” என்றாள் தனக்கே தன் கோபம் இப்போ ரொம்ப கேவலமாக தெரிந்தது அப்போது...

“செல்லம்மா நான் ஒன்னு சொன்னா கேட்டுக்குவியா!!!” சிறிது இடைவெளி விட்டு அவள் அமைதியாய் இருக்கவும் தானே தொடர்ந்தான்

“உனக்கு மெச்சூரிட்டி வந்துடுச்சு டா. நீ இன்னும் சின்ன புள்ள இல்லை” அவள் அவனை ஏறிட்டுப் பார்க்கவும் “இரு இரு. நோ கோவம். எப்போவுமே நீ நம்ம வீட்டுக்குக் குட்டி தேவதைதான். இப்பவும் நீ என் கையில இருந்த குட்டிப் பாப்பாவா தான் என் கண்ணு தெரியுற ஆனா பாக்குறவங்க அப்படி நினைக்க மாட்டாங்கல…

கொஞ்சம் யோசி. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியும். உன் கோவம் தப்பு டா ஆயிரம் இருந்தாலும் உன் நல்லதுக்குத் தானே அம்மா சொல்லுவாங்க… நம்ம இருக்குறது கிராமம். ஒன்னுன்னா அப்படியே பத்தா திரிச்சி பேசும். உன்னை ஒருத்தரும் ஒரு சொல் சொல்லக் கூடாதுன்னு தான் பயப்புடுறாங்க”.

கண்களில் நீர் பளபளத்தது அவன் பேச்சிலே அவளுக்கு. “என்ன இது என் செல்லம்மா அழலாமா!!!” என்றான் அவள் கண்ணங்களைத் துடைத்து விட்டு

பின் அவனே “செல்ஃபோன் கேட்ட வாங்கி கொடுத்துட்டேன்… அது இனி உனக்குத்தான் இப்போ அது உனக்கு வேணாம்னு நினைக்கிறாங்க அம்மா. ஒரு ரெண்டு நாள் போகட்டும் நானே பேசி அம்மாவுக்குப் புரிய வைக்கிறேன். அம்மா இந்தக் காலத்து ஆளு கிடையாது. அவங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாதான் புரிய வைக்க முடியும்… அது வரையும் நாம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். என்ன ஓகே-வா. இப்போ கோவம் போச்சா???” என்றான்.

“ம்” என்றவள் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்திருந்தது.. “எஸ்... இது தான் எனக்கு வேணும்..” என்று அவளின் தலையைப் பிடித்து ஆட்டி விட்டவன், கைக்கடிகாரம் பார்க்க நேரம் கடந்திருந்தது. “வா டா உன்னை காலேஜ்ல விட்டுட்டு அப்பா கூட வெளியே போகனும்” என்றவன் அவளை பைக்கில் கூட்டிச்செல்ல, தெளிந்த முகத்துடன் வந்த தேவாவின் சிந்தனையில் விசாகன் வந்து அமர்ந்து கொண்டான். பைக்கின் பின்புறம் அமர்ந்து இருந்தவள் ‘இன்று எங்காவது தன் கண்களில் அவன் சிக்குகிறானா!!!’ என்று ஏக்கத்துடனே கண்களை அலையவிட அவளை ஏமாற்றாமல் அவளுடைய பார்வை வட்டத்தில் விழுந்தான் விசாகன்.

வக்கீலைப் பார்க்க வந்த விசாகன் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்க, அவனைப் பார்த்துவிட்டாள். அண்ணன் உடனிருக்க அவனருகில் செல்ல முடியாத நிலை. இல்லையென்றாலும் என்னவென்று கூறி அருகில் சென்று இருக்க முடியும் ஆனால் அவள் கண்களில் அவ்வளவு பிரகாசம். முகத்தில் அத்தனை மகிழ்ச்சி இதழ் வரை வந்த அவனை அழைக்கும் சொற்கள் அப்படியே தடைப்பட்டு போயின

அவள் பார்த்துக்கொண்டிருந்த நேரம் விசாகனும் பார்த்துவிட்டான்… கண்கள் அவளுடனிருக்கும் அவன் யார் என்று அளவிட்டது. பின் நேராக அவளின் பாதங்களைத் தான் பார்த்தான். அதன் பின் என்ன நினைத்தானோ சட்டென பார்வையை விலக்கிக் கொண்டவன். அந்த இடத்திலிருந்து வேகமாய் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து விட்டான்.

பின்னால் வந்த சுந்தரன் இதைக் கவனித்தாலும் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்து விட்டான்… ஒரு நிமிடமே என்றாலும் தேவாவின் கண்களில் வந்து போன மாற்றம் அவனை அவ்வாறு இருக்க வைத்தது. சுந்தரனுக்கும் முன்னால் அமர்ந்து இருந்தவன் யார் என்ற கேள்வியே முன் நின்றாலும் விசாகனின் மேல் விழும் தேவாவின் ஆர்வம் கலந்தப் பார்வை அவனை முன்னுக்குப் பின் முரணாக யோசிக்க விடவில்லை... அவனும் சாதாரணமாகவே தான் இருந்தான்…

(இவன் மனசு மாறுமா!!!!!. கல் மாதிரி இறுகிப் போயிட்டேன்னு வெளியே மட்டும் தான் பீலா விடுவானா!!!!!…

விசாகனின் தேவசேனா அவன் இதயம் என்னும் தோட்டத்தில் காதல் பூக்களைப் பறிப்பாளா).

_______________
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN