பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 12

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

பூ 12

அவன் கண்களைச் சந்தித்த தேவாவிற்குக் கோடி மின்னல் வெட்டியது போல் ஒரு சிலிர்ப்பு வந்து அடங்கியது… ஈர்ப்பு, பிடித்தம் என்பதையும் தாண்டி அவனிடம் ஏதோ ஒன்று இவளைக் கட்டுவிக்கின்றது என்று உணர்ந்தாள்.


அவன் பார்வையே மனதிற்கு அவ்வளவு இதத்தைக் கொடுத்தது… அதே மனநிலையுடன் கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள் தேவசேனா.


வகுப்புக்குள் நுழைந்தத் தோழியைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மேகலா


“ஹேய் கலா. நீ எப்போ புள்ள வந்த???” என்றக் கேள்வியுடன் அவளருகில் வந்து அமர அவளிடம் பேசாமல் சற்றுத் தள்ளி அமர்ந்துக் கொண்டாள் மேகலா


மேகலாவின் செயலுக்கு முதலில் காரணத்தை அறியாதவள், முகத்தை தொங்கப் போட்டுக் கொண்ட தேவசேனா “என்ன புள்ள ஏதோ மாதிரி நடந்துக்குற???” என்று பாவமாக அவள் முகத்தைத் திருப்பினாள்.


“இவ எதுக்கு இப்படிக் கோவப்படுறா இன்னைக்கு நாம ஹீரோவ பாத்தது யாருக்கும் தெரியாது… ஒரு வேல நம்ம முகத்துல லைட் எரிஞ்சத வச்சி இவ கண்டுபிடிச்சிட்டாளோ….!!!” என்று மேகலாவை உற்றுப் பார்த்தாள் தேவா


அவள் கையை எடுத்து விட்ட மேகலா “இப்போ தான் உன் கண்ணுக்கு நான் தெரியுறனா டி… அண்ணனும் தங்கச்சியும் காலையில பார்த்துட்டு பாக்காதமாதிரி போனீங்களே!!! அப்போ உன் கண்ணுக்கு நான் ஃப்ரெண்டுன்னு தெரியலையாடி” என்று கடுகடுத்தாள் மேகலா…


“அப்பா…. இப்போ கோவம் உனக்கு நான் சொல்லிட்டு போகலன்னு தானா. நான் வேற என்னவோன்னு பெருசா நினைச்சிட்டேன்” என்று மனதிற்குள் கூறுவதாக நினைத்து வெளியே கூறிவிட்டாள் தேவா


தேவாவின் வார்த்தைகளைக் கேட்டவள் கோபத்தை மறந்தவளாக “பெருசுன்னா என்னடி அப்போ எனக்குத் தெரியாம வேற ஏதாவது இருக்கா நான் கோபப்படுறா மாதிரி???” என்றாள் சற்றே குரலில் அழுத்தம் கொடுத்து.


மேகலாவின் அழுத்தமானக் குரலில் சற்று சுதாரித்தவள் “ச்சே.. ச்சே… உனக்குத் தெரியாம ஒரு குண்டூசியையாவது நான் நகர்த்துவேனா” என்று தேவா பச்சைப் பிள்ளைப் போல் முகத்தை வைத்துக்கொள்ள


“நீ என்னவேணா பண்ணு புள்ள. தயவுசெய்து இந்தப் பாவப்பட்ட பச்சைப்புள்ள ரியாக்ஷ்னை மட்டும் குடுக்காத… அதுக்கு ஏமாற நான் தயாராயில்ல. அப்படியே காண்டாகுது….” என்றவள்.


மறுபடியும் ஞாபகம் வந்தவளாக அதே விட்ட இடத்திலிருந்து கோபத்துடன் “இன்னைக்கு ஒரு நாள் அவன் கொண்டு வந்து விட்டான் நாளைக்கு என் கூடத் தானே வரனும். அது ஞாபகம் இருந்துதா டி உனக்கு. ஒத்த வார்த்தை….. ஒத்த வார்த்தை சொல்லிட்டு வந்தா என்ன உன் அண்ணன் கிரீடம் கீழே இறங்கிடுமோ!!!” என்று அவள் அண்ணனையும் ஏகத்திற்கு வறுத்தாள்.


மேகலாவின் கோலத்தைப் பார்த்துப் பெரூமூச்சு ஒன்றை வெளியிட்டவள் “அம்மா தாயே இந்தக் காளி அவதாரத்தைக் கலைச்சிடுமா. முடியல. எங்க அண்ணன் கெட்ட நேரம் உன் கண்ணுல பட்டுட்டான். அதுக்காக அவனையும் என்னையும் இப்படிப் போட்டுப் படுத்தாத. இனி அவன் கூட வர்றதுக்கு முன்னாடியே உனக்குத் தகவல் சொல்லிடுறேன்” என்று அவளை மலை இறக்குவதற்குள் “அப்பாடா” என்று இருந்தது தேவாவிற்கு.


_____


“டேய் பார்த்துடா கொஞ்சம் மெதுவா போ. அந்தாளு மேல இருக்க கோவத்தை வண்டியில காட்டாத. முன்னாடி பின்னாடி வர்றவன் எல்லாம் தலைத்தெறிக்க ஓடுறான் டா” என்றான் சுந்தரன் விசாகனைச் சற்றே அமைதிபடுத்தும் நோக்கில்.


எரிச்சலுடனே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த விசாகன் “அந்த ஆளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே சவால் விடுவான் டா அவன் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு…. நான் ஒதுங்க ஒதுங்க இந்தாளோட ஆட்டம் அதிகமா இருக்கு” என்றான் கோவத்துடன்.


“விடு மாப்ள அவன் மப்புல சொல்றான்… அவன் சொல்றது எல்லாம் நடக்குமா சொல்லு. ஏதோ குடிச்சிட்டு உளறுறான்னு விட்டுட்டுப் போவியா. அதையே நினைச்சிக்கிட்டு இருக்க. இன்னைக்கு உனக்கான நாளு நீ நினைச்சது நடக்கறதுக்கு முதல் அடிய எடுத்து வைக்கப் போற நாள் அதை மட்டும் நினை. கண்டதையும் நினைச்சி மனசைக் குழப்பிக்காத. நீ முன்னேறனும் ஜெயிக்கனும் அதை மட்டும் பாரு” என்றான் நண்பனின் மனதை திசைத் திருப்ப அது கொஞ்சம் வேலை செய்தது.


“ம் நேத்தே சௌந்தரலிங்கம் ஐயாக்கு பேசிட்டேன். பத்திரம் எல்லாம் ரெடி பண்ணியாச்சி இனி அமௌண்ட் செட்டில் பண்ணிட்டு ரெஜிஸ்டர் பண்ண வேண்டியதுதான். இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிஞ்சிடும்” என்றபடி பேசிக்கொண்டே வந்தவன் “நீ இங்கயே இரு சுந்தரா. நான் வண்டிய பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்று சுந்தரனை இறக்கி விட்டுச் செல்ல, வழியில் அவன் செல்ஃபோன் சிணுங்கவும் திடீரென வண்டியை நிறுத்தி மோபைலை எடுத்து காதில் பொருத்திட, பின்னாடி வந்த கார் அவனின் பைக்கை இடித்து ஃபோன் கீழே விழுந்துவிட அவனும் பைக்குடன் கீழே சாய்ந்தான்...


கார் இடித்தவுடனே கீழே சாய்ந்தவன் பேலன்ஸ் செய்து வண்டியை நிறுத்தி எழுந்து நின்றவன் காரில் இருந்து இறங்கிய நபரைக் கண்டதும் கோபம் பலமடங்கு உயர சட்டையைப் பிடித்து “கண்ணு என்னடா புரணியிலையா வச்சிருக்க. முன்னாடி வண்டி நிக்குறது கண்ணுக்குத் தெரியல!!!” என்று கத்திட.


காரிலிருந்து இறங்கியவன் முதலில் மன்னிப்பைக் கேட்கத் தான் வந்தான். விசாகன் கத்தியதிலும் சண்டையைப் பிடித்ததிலும் தன்மனம் சிண்டப்பட்டு விட, கோவம் கொண்ட ஜெயசந்திரன் “அந்தக் கேள்விய உன்ன பாத்து நீயே கேட்டுக்கோ. போற வழியில வண்டிய நிறுத்தி எவனாவது ஃபோன் பேசுவானா. இடியட் காமன் சென்ஸ் கூட இல்லமா நீயெல்லாம் வண்டி ஓட்ட வந்துட்டியா. இதுல நீ என் சட்டைய பிடிக்கிறியா. எடுடா கைய” என்று அவனும் பதிலுக்கு அவனுடைய சட்டையைப் பிடிக்க. இருவரையும் சுற்றி ஒன்று இரண்டு ஆட்கள் கூடவும் அங்கு எழுந்த சலசலப்பில் அவ்விடம் வந்த சுந்தரனுக்கு அதன் பிறகே விஷயம் பிடிப்பட்டது.


நிலமை கை மீறி செல்வதை உணர்ந்த சுந்தரன் “விசா… டேய் மாப்ள. வேணாம் டா” என்று அவனைத் தடுக்க, அதே சமயம் காரிலிருந்து இறங்கிய சௌந்தரலிங்கம் “ஜெய்சந்தரா என்ன இது. எடு கையை” என்று விலக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.


தகப்பனின் குரல் கேட்டதும் கட்டுக்குள் வந்த ஜெயசந்திரன் அவன் சட்டையிலிருந்து கையை விடுவித்து இருக்க சௌந்தரலிங்கத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியைக் காட்டிய விசாகனும் நண்பனின் குரலுக்குச் செவிமடுத்து அவன் சட்டையிலிருந்து கைகளை விலக்கி இருந்தான்.


விசாகனின் அருகில் வந்தவர் “மன்னிச்சிடுங்க தம்பி. பையன் தெரியாம இடிச்சிட்டான். மன்னிப்புக் கேட்கத்தான் இறங்கினான். என்ன ஆச்சுன்னு தெரியல இப்படி நடந்துக்கிட்டான்” என்று விசாகனிடம் மன்னிப்பை வேண்டியவர்… பின்பு “அடி ஒன்னும் பெருசு இல்லையே” என்று அவனின் உடலை ஆராய்ந்து “வாங்க தம்பி அப்படிப் போய் பேசலாம்” என்று அவனை அழைத்துக்கெண்டு வேறிடம் சென்றார்.


அதற்குள் காரிலிருந்த மரகதமும் இப்படி நடந்து விட்டதே என்ற தவிப்புடன் “என்ன சாமி இது இப்படி நடந்துடுச்சி. தங்கமான புள்ள தம்பி. நமக்கு ரொம்ப தெரிஞ்ச புள்ள வேற” என்று மகனிடம் பதைபதைப்புடன் கூறியவர் அவன் இருந்த இடத்தை நோங்கி வந்தவர் “தம்பி உங்களுக்கு ஒன்னும் ஆகலையே!!!” என்று கேட்டார்..


“இல்ல மா ஒன்னுமில்ல” என்று அவருக்கும் பதிலை உதிர்த்தவன் முகத்தில் அவன் யார் என்ற கேள்வி தொக்கி நின்றது. அவனுடைய தந்தை விசாகனிடம் நன்றாக பேசவும் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வேறிடம் நின்றவனைப் பார்த்த சௌந்தரலிங்கம் “அவன் என் பையன். சென்னையில வேலை செய்றான். பெயர் ஜெயசந்திரன். அவனுக்காக உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று அவர் கூறவும்.


“ஐயா… என்ன இது நீங்க போய். அப்போ கோவம்…. இரெண்டு பேர் மேலயும் தான் தப்பு இருக்கு” என்றவன் “வாங்க வாக்கீல் காத்துட்டு இருக்கார்” என்று அவர்கள் இருவரையும் பத்திரப்பதிவு அலுவலகத்தின் உள் அழைத்துச் சென்றான்.


இதுவரையுலும் அவன் யார் என்ற சுந்தனின் பெரிய கேள்விக்கு விடை இப்போது கிடைத்தது. அவன் ஜெயசந்திரனின் முகத்தையே ஆராய்ந்தவனுக்கு அப்படியே அண்ணன் தங்கை ஜாடை ஒத்துப் போவதை அப்போதுதான் பார்த்தான். “ச்சே.. நாம கண்டு பிடிக்காம போயிட்டோமே….” என்று இருந்தது அவனுக்கு.


ஜெயசந்திரனுக்கு மிகுந்த கோவம் “தவறை அவன் மேல் வைத்துக்கொண்டு ஒரு காரணமும் இல்லாமல் தன் சட்டையையே பிடித்துக் கேள்விக் கேட்கிறானே என்று… இந்தச் சண்டியருக்கு அம்மாவும் அப்பாவும் வேற சப்போர்ட் பண்றாங்களே” என்ற கோவத்துடன் அலுவலகத்திற்கு உள்ளே கூடச் செல்லாமல் கண்களை மூடி காரில் அமர்ந்து கொண்டு இருந்தான்.


ஏனோ முதல் பார்வையில் ஜெயசந்திரனுக்கு விசாகனைப் பிடிக்காமல் போனது. அவனது கண்களிற்கு விசாகன் ஒரு முரடன், முன்கோபி, சரியாகச் சொல்ல வேண்டுமானால் சண்டியர் ரேஞ்சிற்கு தெரிந்தான்.


(தங்கைக்குப் பிடித்த மணாளனே இவன் தான் என்னும் செய்தி தெரியாமல் இரவரும் பகையை வளர்த்துக்கொண்டனர். தெரியவரும் பட்சத்தில் தங்கையின் முடிவு )


____


“ஹே… ஆடாம நில்லுடி” என்று தேவாவின் தலையினை இழுத்து பூவைச் சூட்டிய மரகதத்தினைப் பார்த்து நொந்தபடியே தேவா நிற்க “இங்க பாரு புள்ள அந்த ஜோசியர் வேற உனக்குக் கிரகம் சரியில்ல. அது நல்லா இல்ல இது நல்லா இல்லன்னு வயித்துல புளிய கரைச்சிட்டார்… அவரு சொன்னா மாதிரி மாவிளக்கு போட்டுட்டு வந்துடு..” என்று தேவாவிற்குப் பத்தாவது முறையாய் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார் அவளுக்கு விளங்கும் வண்ணம்


“அம்மா நான் பாத்துக்குறேன்” என்று சொல்லியும் மகளின் விளையாட்டு தனத்தைத் தெரிந்தவராய் “அங்க பொங்கள் கொடுக்குறாங்க அதை கொடுக்குறாங்க இதை கொடுக்குறாங்கன்னு அண்ணனை விட்டு போகாத” என்று அறிவுறைகளையும் வழங்கியவர்,


கூடையைக் காட்டி “இதுல மாவை இடிச்சி வைச்சிருக்கேன்… இதோ இதுல நெய் தீப்பெட்டி இருக்கு. இதுல பூ பழம் தேங்காய் எல்லாம் இருக்கு. கவனமா சாமிய கும்பிடு” என்று கூறியவர்.


மகனிடம் திரும்பி “சாமி இவ நம்ம ஊருக்கு வடக்காலே இருக்க சாமுண்டி அம்மனுக்கு மாவிளக்கு போடனும். பாத்து பத்திரமா கூட்டி போயிட்டு வாங்கய்யா” என்று ஜெயசந்திரனிடம் கூறியவர் தேவாவிடம் திரும்பி “விளையாட்டுத் தனமா இருக்காத புள்ள. அண்ணன் கூடவே போயிட்டு அண்ணன் கூடவே வரணும்… அய்யா பாத்து போயிட்டு வாய்யா” என்று இருவரையும் பக்கத்து ஊரில் இருக்கும் சாமூண்டி அம்மன் கோவிலுக்கு அனுப்பி வைத்தார்.


*அண்ணா…. அண்ணா….”


“என்ன தேவா….” என்றான் வண்டியைச் செலுத்தியபடியே ஜெயசந்திரன்.


“நீ இது எல்லாம் நம்புறியா???” என்றாள் வேண்டுமென்றே.


“நம்புறியானா என்ன கேக்க வர்ற???” என்றான் அவனும் எதுவும் புரியாமல்


“அதாவது ஜாதகம் ஜோசியம் பரிகாரம் எக்ஸட்ரா எக்ஸட்ரா”


என்றாள்


“அம்மா நம்பறாங்க அவங்க மனசு கஷ்டப்பட வேண்டாம்னு செய்றேன். மத்தப்படி நடக்கறது தான் நடக்கும்” என்றவன் “திடீர்னு என்ன இந்தக் கேள்வி”


“அதே தான் எனக்கும் நான் என்னதான் விழுந்து விழுந்து செய்தாலும் விதின்னு ஒன்னு இருக்கே அது வேலையை காட்டாம போகுமா!!!” என்றாள் தேவா சிரித்தபடியே.


“அந்த விதியை மதியால் வெல்லலாம் தேவா. அதுக்குத்தான் இதைச் செய்யச் சொல்றாங்க அம்மா.. அம்மா என்ன சொன்னாங்களோ அதைத் தவறாம செய் நம்பிக்கை வேணும் தேவா நம்பிக்கையோட செய்” என்று பேசிக்கொண்டே வர அவர்களும் கோவில் வந்து சேர்ந்தனர்.


அதற்கு முன்னரே அப்பத்தாவைக் கோவிலில் இறக்கி விட்டவன் ஃபோன் பேசியபடி தெப்பக்குளக்கரையில் நின்றிருந்தான் விசாகன். கோவிலுக்குக் கிளம்பி இருந்த தில்லையைப் பார்த்தவன் கேள்வியாய் அவரைப் பார்க்க “அம்மன் கோவிலுக்கு யா சும்மா ஒரு எட்டு போயிட்டு வரலாமேன்னு. மனசு என்னமோ படபடன்னு இருக்கு அந்த வேலனை வரச்சொல்லேன் வட்டிய எடுக்க” என்று வாசலில் ஒரு கூடையுடன் வந்து நின்றார் அவர்.


“எப்படி சொன்னாலும் கேட்க மாட்ட” என்றபடியே ஃபோனை எடுத்து காரின் டிரைவர் வேலனுக்கு அழைக்க அவனோ "அய்யா பிள்ளைக்கு உடும்பு சுகமில்லைங்க ஆஸ்பிட்டல்ல இருக்கேன்" என்று கூறிட “சரி பார்த்துக்க பணம் இருக்கா???* என்று விசாரித்தவன்கொடுத்து அனுப்புவதாக கூறிவிட்டு நண்பன் சுந்தரனுக்கு அழைக்க அவன் வெளிவேலையாகச் சென்றிருப்பதாகக் கூறிட ஓரக்கண்ணால் பேரனையே பார்த்திருந்தார் தில்லை. வேறு வழியில்லாமல் அப்பத்தாவை அவனே காரில் அழைத்து வந்திருந்தான். வேலனையும் சுந்திரனையும் விசாகனின் கண்ணில் படாமல் அவர் தானே வெளியே அனுப்பி வைத்திருந்தார். தான் நினைத்தது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் கோவிலுக்குப் பேரனுடன் வந்திருந்தார்.


கோவிலின் உள்ளே நுழைந்தவர்களின் கண்களுக்கு அம்மன் சன்னதியின் முன் விளக்கை செய்து கொண்டிருந்த தில்லைதான் தெரிந்தார். கொஞ்சம் பெரிய கோவில் தான் சாமுண்டி அம்மன். பிச்சாலி ஈஸ்வர், பிள்ளையார், பைரவர், முருகன், துர்கை, நவகிரகங்கள் என ஆங்காங்கே சந்நிதிகள் இருந்தது. 70 களில் இருந்த தில்லையைக் கண்டவள் முகமன்னாக சிறு புன்னகையுடன் அம்மன் சந்நிதியில் விளக்கைச் செய்ய ஆரம்பித்தாள்… பேரன் உள்ளே வரவில்லை என்றாலும் அவனுடைய சட்டையைக் கொண்டு வந்த தில்லை அதை கவருக்குள் அவனுக்குத் தெரியாமல் மறைத்து வைத்து இருந்தார். விளக்கை ஏற்றியவுடன் பிரதட்சணம் செய்ய இதையும் கொண்டு செல்ல வேண்டும் என. வயோதிக காலம் அல்லவா உட்கார்ந்தவர் விளக்கை ஏற்றி எழ முயற்சிக்கவும் அதைப் பார்த்த தேவா அவருக்கு உதவிட தலையில் கைவைத்து ஆசிர்வதிப்பது போல் சிரித்தவர் அதன் பிறகு பிரகாரம் சுற்றக் கிளம்பிட, விளக்கை ஏற்றி பூ பழம் வைத்து அம்மனை வணங்கியவள் அப்போதுதான் பார்த்தாள் தில்லை விட்டுச் சென்றிருந்த கவரை…. அதை எடுத்தவள் அவரைத் தேடி அவளும் பிரகாரத்தைச் சுற்றி வந்தாள் அவன் சட்டையை வைத்துக்கொண்டு பரிகாரம் என்னவோ தில்லை தான் செய்தார்... ஆனால் அவனுடைய சட்டையை வைத்து சுற்றிக்கெண்டு இருந்தவள் தேவசேனாவாயிற்றே. முழுதாய் மூன்று சுற்றுகளின் முடிவில் அப்பத்தாவைக் கண்டு கொண்டவள் “பாட்டி பாட்டி” என்று அழைக்க.


“என்ன தாயி” என்று அனுசரணையுடன் கேட்க, கையிலிருந்த கவரை நீட்டியவள் “அங்க விட்டுட்டு வந்துட்டிங்க இந்தங்க பாட்டி” என்று கொடுத்தாள் தேவா ஏனோ அவருக்குப் பார்தத முதல் பார்வையிலேயே தேவாவைப் பிடித்து இருந்தது. அவளின் முகவடிவம் அவரை ஏனோ கவரந்தது. அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆசைப்பட்டவர் “எந்த ஊரு தாயி???” என்றிட.


“பக்கத்து ஊருதான் பாட்டி‌. இங்க அடிக்கடி அம்மா கூட வருவேன். இன்னைக்கு அண்ணா கூட வந்தேன். அதோ அண்ணன் அங்க நிக்குது ஃபோன் பேசிக்கிட்டு. ஏதோ முக்கியமான ஃபோனாம். எங்க போனாலும் இது நம்மல விடாது போல. சாமிய கூட கும்பிட முடியாம நிக்குறான்” என்று சிரித்தவள் “சரிங்க பாட்டி. தெப்பகுலத்துகிட்ட அம்மா பொறி வாங்கிப் போடச் சொன்னாங்க இதோ வர்றேன்” என்றவள் நொடிப்பொழிதில் அங்கிருந்து சிட்டாய் பறந்தாள்.


தெப்பகுளத்தின் கரையில் கூடையை வைத்தவள் பொறியுடன் படிகளில் இறங்கி இருந்தாள். முதல் படி இரண்டாம் படி மூன்றாம் படி என ஒவ்வொன்றிற்கும் அவளின் கொலுசொலி ஓசை எழுப்ப குளக்கரையில் நின்றிருந்தவனை அசைத்துப் பார்த்தது அது... அவன் யார் என பார்க்க திரும்பும் சமயம் படியில் இருந்த பாசி வழுக்கி குளத்தில் விழுந்து இருந்தாள் அவள்…. விழுந்தவள் பதட்டத்திலும் பயத்திலும் மூச்சிற்கு தத்தளிக்க யாரென்று தெரியாமலேயே பாய்ந்தோடி உள்ளே குத்தித்து இருந்தான் விசாகன்.


அதே நேரம் ஃபோன் பேசிவிட்டு வந்த சந்திரன் அவளைத் தேடிக்கொண்டு தெப்பகுளம் வர அவளைக் கையில் ஏந்தியபடி படியேறிக்கொண்டு இருந்தான் விசாகன்.


இதைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அவன் அருகில் ஓடி வந்தவன் “தேவா…. தேவா….. இங்க பாருமா. என்ன ஆச்சு??” என்று அவளின் கன்னத்தைத் தட்ட.


அவளைக் குளக்கரைப் படியில் படுக்க வைத்தவன் கை கால்களைச் சூடுபரக்கத் தேய்த்து “தேவா.. தேவா.. இங்க பாருமா” என்று அவளின் கன்னங்களைத் தட்டி அவன் வாயிலிருந்து முதல் முதலாக அவளுடைய பெயரை உதிர்த்தான் விசாகன்…


இவன் யார் என்னுடைய தங்கையின் பெயர் இவனுக்கு எப்படித் தெரியும் என்றக் கேள்வி எழுந்தாலும் படுத்து இருப்பது தன் தங்கை என்று உணர்ந்தவன் விசாகனிடமிருந்து தங்கையை நகர்த்தி தன் புறம் அவளைத் திருப்பியவன் “தேவா மா..” என்று அழைக்கச் சிறிது நேரத்திற்குப் பிறகே கண் விழித்தாள் தேவா.. அதற்குள் கோவிலிலிருந்த ஆட்களும் வந்துவிட விசாகனுடைய அப்பத்தாவும் அந்த இடத்தை நோக்கி வந்தார்.


“என்னய்யா.. என்ன ஆச்சு???” என்றிட அவரது கேள்விக்கு விடைக் கொடுத்த விசாகன், “முடிஞ்சிச்சா போகலாமா???” என்று விரைப்புடன் வினவியவன் முதலில் சென்று காரில் அமர்ந்து கொண்டான். அவளின் அருகே வந்த அப்பத்தா கையில் இருந்த குங்குமத்தை அவளின் நெற்றியில் வைத்து “பெரிய ஆபத்துல இருந்து மீண்டு இருக்க தாயி இனி நல்லதா நடக்கனும்” என்று கூறி பேரன் இருக்கும் இடம் சென்றார்.


மெல்ல தங்கையினை எழுப்பி நிறுத்திய சந்திரன் காரில் அமர்ந்து இருப்பவனை முறைத்தபடியே தனது பைக்கிற்கு அருகில் அழைத்து வந்தான் தேவசேனாவை.


“எனக்கு ஒன்னுமில்ல ண்ணா. நீ ஏன் இப்படி உம்முன்னு இருக்க???” என்றாள் அவன் மனம் அறியாது.


“ம்கூம். ஒன்னுமில்ல. உனக்கு எப்படி இருக்கு... இப்போ பரவாயில்லையா... வண்டியில உட்கார முடியுமா?...” என்றான் சந்திரன்.


“ப்ச் ஒன்னுமில்ல ண்ணா. நல்லாதான் இருக்கேன் ஆனா நான் எப்படி விழுந்தேன் எனக்கே தெரியல. ரெண்டு அடி தான் எடுத்து வைச்சேன். கால் வழுக்கிடுச்சி. சுதாரிக்கரத்துள்ள குளத்துக்கள்ள விழுந்துட்டேன்” என்றபடியே விசாகனின் கார் போவதைப் பார்ததவள், மனதிற்குள் “இப்பவும் அவர் தான காப்பாத்தி இருக்கார் இனி என்னை எப்பவும் அவர் தான் காப்பாத்துவார்” என்று சொல்லிக்கொண்டவள் “அது தான் எனக்கு ஒன்னுமில்லையே நீ தான் முகத்தை உம்முன்னு வச்சிருக்க” என்றாள் அவனிடம் சலுகையாக.


“எங்க போனாலும் என்னை விட்டு போகாத தேவா. அம்மா சொன்னது எவ்வளவு உண்மை பார்த்தியா. என்ன நடக்க இருந்துச்சு. ஒரு நிமிஷம் உயிரே நின்னுடுச்சு” என்றவன் அவளின் தலையை நெஞ்சில் சாய்த்து “நான் ஊருக்குப் போனாலும் கவனமா இருடா” என்றான் கரகரப்பான குரலில். பின் அண்ணன் மனம் அறிந்தவள் “சரி ண்ணா” என்று சமத்துப் பெண்ணாகக் கூறிப் பின்னால் அமர்ந்துக்கொண்டவள், விசாகன் கரம் தொட்டுத் தட்டியக் கன்னங்களைத் தொட்டுப் பார்த்து வெட்கம் கொண்டாள்.


(பார்த்துட்டு கமெண்ட் போடாம போனா சாமி கனவில் வந்து கண்ணை குத்தும்)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN