ஈரவிழிகள் 27

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கிளியம்மாவின் மறைவிற்குப் பிறகு... சுந்தரம்... தன் துயரத்தில் தனிமையிலிருந்து உழல முடியாத அளவுக்கு... சொக்கலிங்கமும் அடுத்து இறைவனடி சென்று சேர.. அவரின் கம்பெனி கணக்கு வழக்குகளை... சீர் செய்யும் பொறுப்பு சுந்தரத்திற்கு வந்து சேர்ந்தது... தன் கம்பெனி தன் முதலாளியின் கம்பெனி என்று சுந்தரம் எப்போதும் பரபரப்பாக இருந்ததால்... தங்கை வள்ளியின் செயல்கள் அவருக்கு தெரிய வரவில்லை. அதிலும் முழுக்க முழுக்க... வள்ளி ரேகா வீட்டிலே தங்கி கொள்ளவும்... சுந்தரம் எதுவும் அறியாமல் போனார்.

மீனாட்சியின் வாழ்வை பற்றி தெரியும் முன்னரே.. அவளைத் தன் அண்ணியாக மனதில் வரையறுத்துக் கொண்ட வள்ளிக்கு... இப்போது அவளின் அவல நிலை அறிந்த பிறகு... சும்மா ஏதோ என்று... மீனாட்சியை கிடப்பில் போட முடியவில்லை சின்னவளால். அதிலும்... தனது மனதிற்கு இனியவனின் தமக்கை என்று அறிந்த பிறகு... அவள் அமைதியாய் இருந்தால் அது தான் அதிசயம்.

“ரமேஷ்... இவளுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க... தான் பிடித்த முயலுக்கு மூணே காலுன்னு இருக்கா.. அப்படி என்ன இவளுக்கு இவ்வளவு பிடிவாதம்...” ரேகா கணவனிடம் சத்தம் போட

“பேசலாம் ரேகா... நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு...” ரமேஷ் மனைவியை சமாதானப் படுத்த

“என்ன.. நான் அமைதியா இருக்கவா... விட்டா இவ ஆட்டத்துக்கு நீங்களே இவளுக்கு சலங்கையைக் கட்டி விட்டுடுவிங்க போல...” ரேகா இன்னும் பாய..

அதில் ரமேஷ் வள்ளியைக் காண... அவளோ எல்லா திட்டையும் திட்டி முடி என்பது போல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“இப்போ எதுக்கு இப்படி கத்தற...” கணவன் இப்படி கேட்டது தான் தாமதம்

“என்னது.. நான் கத்தறேனா... ஏன் ரமேஷ்... என் கத்தல் தான் உங்களுக்கு தெரியுதா... என் கோபம்... என் ஆதங்கம்... இவ வாழ்க்கையை நினைத்து நான் கொள்ளும் பயம் இது எதுவும் உங்களுக்கு தெரியலையா...”

“ரேகா... ரிலாக்ஸ்... எல்லாம் எனக்கு தெரியுது...”

“நீங்க பேசாதீங்க.. நான் இவ்வளவு சொல்றேன்... அவ வாயை திறக்கிறாளா பாருங்க... அப்படி என்ன பிடிவாதம்... இவங்க இல்லன்னா... வேறு ஒரு பொண்ணை பார்த்து அண்ணனுக்கு கட்டி வைக்கப் போறோம்.... அவங்க வீட்டில் தான் பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்களே... பிறகு எதற்கு இந்தியா போகணும்... இதில் இவ இந்தியாவிலே படிக்கப் போய் அந்த வீட்டில் இருக்கிற மனுஷங்க மனச எல்லாம் மாற்றணுமா... இவளுக்கு என்ன தலையெழுத்தா ரமேஷ்...” விட்டால் வள்ளியை அடித்து விடுவாள் போல.. அவ்வளவு மூர்க்கத்தனம் இருந்தது ரேகாவிடம்.

“சின்ன பொண்ணு தானே.. சொன்னா கேட்டுப்பா... நீ அமைதியா இரு ரேகா...”

ரமேஷின் வார்த்தைக்கு, “அப்படி எல்லாம் நான் கேட்டுக்க மாட்டேன் மாமா... நான் இந்தியா போவது உறுதி... அதே மாதிரி மீனாட்சி அவங்க தான் எங்களுக்கு அண்ணி... இதிலிருந்து நான் பின்வாங்குவதா இல்ல மாமா...” இவ்வளவு நேரம் வாயே திறக்காமல் இருந்தவள்.. இப்போது தன் உறுதியைக் குரலில் காட்டி சொல்லவும்...

தங்கையை அடிக்க கை ஓங்கி விட்டாள் பெரியவள். அவளைத் தடுத்த ரமேஷ், “வள்ளி உனக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்... பெரியவங்க எங்க யார் பேச்சையும் கேட்கக் கூடாதுன்னு இருக்கியா...” அவன் வள்ளியைக் கண்டிக்க

“அதே தான் மாமா நானும் சொல்கிறேன்... இந்த விஷயத்தில்.. உங்க பேச்சை நான் மீறினதா இருக்கக் கூடாதுன்னு தான்... நான் சொல்கிற விஷயத்திற்கு சம்மதிங்கன்னு சொல்கிறேன்...”

மைத்துனியின் சாமர்த்தியமான பேச்சில்... ரமேஷோ ஒரு நிமிடம் வாய் அடைத்துப் போனான். ‘அப்போ யார் என்னைத் தடுத்தாலும் நான் செய்ய நினைத்ததை செய்வேன்னு தானே இந்த பொண்ணு சொல்லுது’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

வள்ளி, முன்பே பரஞ்சோதி வாத்தியாரிடம் பேசிய போதே இது நடக்காத காரியம் என்று அவர் சொன்ன நிலையில்.. அப்போதும் மனம் தளராமல்... ரேகாவிடமும்... ரமேஷிடமும்... அண்ணனின் மனதில் முன்பிருந்தவர் மீனாட்சி என்று இவள் சொல்ல... கேட்ட அவர்களுக்கும் பரம சந்தோஷம்.

அதிலும் ரேகாவுக்கு, ‘அப்பா! என் அண்ணன் வாழ்வில் விடிவு வரப் போகுதா..’ என்ற நினைவில் அவள் அடைந்த நிம்மதியே தனி தான். ஆனால் மீனாட்சியின் குடும்பத்தைப் பற்றி எதுவும் முழுமையாக சொல்லாமல் ரேகாவை விட்டு பரஞ்சோதி வாத்தியாரிடம் வள்ளி பேச சொல்ல... அவரோ இவர்களின் பிடிவாதத்தைக் கண்டு... நான் பேசுகிறேன் என்றவர்... அதன்படியே கார்மேகத்திடம் மீனாட்சிக்கு ஒரு வரனை தான் பார்த்திருப்பதாக அவர் சொல்ல..

இத்தனைக்கும் அவர் சுந்தரத்தைப் பற்றியோ அவர் மலேசியாவில் இருப்பதைப் பற்றியோ எதையும் சொல்லவில்லை... ஏதோ ஒரு வரன் என்று தான் சொன்னார். ஆனால் தங்கராசுவை மனதில் வைத்துக் கொண்டு கார்மேகம் வாத்தியார் வார்த்தையை மறுக்க... அதை வருத்தத்துடன் ரேகா ஏற்றுக் கொண்டாள். ஆனால் வள்ளியால் அப்படி இருக்க முடியவில்லை... அதில் சின்னவளின் பிடிவாதம் தான் பெரியவளை இப்படி எல்லாம் கோபப் பட வைக்கிறது.

“வள்ளி நீ சின்ன பெண் இல்ல புரிஞ்சிக்கோ.. அவங்க தான் பெண் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. பிறகு நாம் ஏன் இந்தியா போகணும்...” ரமேஷ் வள்ளியிடம் வாதிட

“அது எப்படி மாமா... அவங்க என் அண்ணனுக்கு பெண் தர மாட்டேன்னு சொல்லலாம்... அந்த குடிகாரன் தங்கராசை விட என் அண்ணன் எந்த விதத்திலே கீழே போய்ட்டார்? எனக்கு தெரியாது.. என் அண்ணனுக்கு அவங்க தான் மனைவி...” வள்ளியின் பிடிவாதத்தில்

“நீ என்ன பைத்தியமா டி.. அவங்க பெண் தர மாட்டேன்னு சொன்னா.. அதில் நம்ம அண்ணன் எப்படி கீழேனு ஆகும்...” இது ரேகா

“இங்கே பார் வள்ளி... என் மச்சானுக்கு ஒரு வாழ்க்கை அமைந்து... அவர் குடும்பமா இருக்கணும்னு எனக்கும் ஆசை தான்... அதனால் தான் பரஞ்சோதி வாத்தியார் கிட்ட நானும் உன் அக்காவும் பேசினது. ஆனா உலகத்திலேயே அவங்க மட்டும் தான் பெண் என்ற மாதிரி நீ பிடிவாதம் பிடிக்கிறது தான் எனக்கு பிடிக்கல. இப்போ என்ன.. நாம வேற ஒரு பொண்ணை தேடினா முடிந்தது...”

ரமேஷின் வாதத்தில் “ஆனா அண்ணன் ஆசைப் பட்டது அவங்களை தானே மாமா...”

தங்கையின் பதிலில் ரேகா, “அறிவு கெட்டவளே... பதினேழு வயதில் ஏதோனு நினைத்திருக்கார் நம்ம அண்ணன்... இப்போ அவங்க முகம் கூட அவருக்கு நினைவிருக்காது... இதில் இன்னும் அண்ணா மனதில் அவங்க இருக்காங்கன்னு சொல்லப் போறீயா...”

“இல்ல தான் ரேகா... ஆனா நூற்றில் ஒரு பங்கா... அவங்களே அண்ணன் வாழ்வில் வந்து சேர்ந்தா.. அண்ணன் எவ்வளவு சந்தோஷப் படுவார்... எறும்பும் ஊற கல்லும் தேயும்னு சொல்லுவாங்க... நாம அழுத்தம் கொடுக்க கொடுக்க... அவங்க மனசும் மாறாதா... அதனால் நீங்க எனக்கு துணையா இந்தியா வந்தா வாங்க... இல்லன்னா நான் மட்டும் இந்தியா போய்... தனி ஆளா என்ன எப்படி செய்யணும்னு பார்த்துக்கிறேன்...”

மீனாட்சி தற்கொலைக்கு முயன்றாள் என்பது தெரிந்ததிலிருந்து.. ஏதோ அண்ணனுக்காக மட்டும் என்று தான் எடுத்த விஷயத்தை சும்மா விட இவளுக்கு மனதில்லை. தன் மனதில் இளங்குமரன் இருக்கும் விஷயத்தை... வள்ளி இன்னும் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் இதற்கு மேல் பூமிக்கும் வானத்துக்கும் ரேகா குதிப்பாள் என்று இவளுக்கு தெரிந்திருந்தது.

வள்ளியின் பிடிவாதத்தைக் கண்ட ரமேஷ், “சரி நாங்க வரோம்... அங்க வந்து நேரில் சென்று பெண் கேட்கிறோம்... அப்பவும் அவங்க மறுத்தா... நீ இந்த விஷயத்தையே மறந்து உன் ஆராய்ச்சியை மட்டும் பார்க்கணும். இதற்கு சம்மதம்னா கிளம்பலாம்… ... குழந்தைகளுக்கு ஒரு வயசு முடியட்டும். அதற்குள்ள பாஸ்போர்ட்... விசா... மற்றும் எங்க லீவ்னு... எல்லாத்துக்கும் நேர அவகாசம் வேணும்..” அரைமனதாய் அவன் ஒத்துக் கொள்ள

அதன் பிறகு எல்லாமே ரமேஷ் சொன்னபடி தான் நடந்தது. சுந்தரத்திற்கு எதுவும் தெரியாது... சொக்கலிங்கத்தின் மருமகன் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ள... அவர்களின் இருப்பிடம் தொழில் எல்லாம் தாய்லாந்தில் இருப்பதால் அவர்களுக்கு உதவ தன் தொழிலை நம்பகமானவர்களிடம் ஒப்படைத்து விட்டு சுந்தரம் தாய்லாந்து சென்று விட்டார்.

இவர் சென்ற நேரம் ஒரு உயிர்க்கொல்லி நோய் அந்நாட்டைத் தாக்க... அதில் யாரும் அந்த நாட்டை விட்டு வெளியே செல்லவோ.. உள்ளே வரவோ கூடாது என்று அந்த நாடு தடை விதிக்கவும்... இன்று வரை சுந்தரம் தாய்லாந்தில் தான் வசிக்கிறார். அதனால் இரண்டு தங்கைகளின் செயல் எதுவும் அவருக்கு தெரியாது.

மீனாட்சியும்.. இளங்குமரனும் உறவுக்காரர்கள் என்பது தெரிவதற்கு முன்பே... வள்ளிக்கு அவர்கள் இருவரும் அவளின் இரு கண்கள் என்று மாறிப்போனார்கள். அப்படி பட்ட அவர்கள் இருவரையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க இவளுக்கு மனதில்லை. எப்படியோ பிரம்மப் பிரயத்தனம் செய்து ரேகாவையும்... அவள் கணவனையும் இந்தியா அழைத்து வந்து விட்டாள். ஆனால் அவள் இந்தியா வந்த அன்றே அவளின் முதல் திட்டம் ஒன்றும் இல்லாமல் நொறுங்கிப் போனதில் அவள் அடைந்த மனவேதைனைக்கு அளவேயில்லை.

தன்னுடைய ஆராய்ச்சி சம்பந்தமாய் இவள்... இந்தியாவில் தங்க... குமரனிடம் உதவி கேட்பது போல்... அவன் மனதில் நுழைந்து... அதன் ஊடே மீனாட்சியிடம் நட்பு பாராட்டி... அவளின் மனதை மாற்ற வேண்டும் என்பது தான் வள்ளியின் திட்டம். இவளின் படிப்பை சுந்தரத்திடம் காரணம் காட்டி தான் ரேகாவும்... அவள் கணவன் ரமேஷும் தற்போது இந்தியா வந்துள்ளனர்.

ஆனால் இவள் நேரமோ... இந்த வருடம் அவள் படிக்க இடம் கிடைக்கவில்லை. இதன் பிறகு அடுத்த ஆண்டு தான் சேர முடியும்... இதை நினைத்தே மனவேதனையில் இருந்தவளுக்கு இன்னுமோர் குண்டைத் தூக்கிப் போட்டான் கீர்த்திவாசன்.

தன் நண்பனான இளங்குமரனுக்கு மகாலஷ்மி என்ற பெண்ணைப் பேசி முடித்து விட்டதாகவும்... இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் என்பது தான் அது. இந்த வேதனையும் அவளுள் சேர்ந்து கொண்டது.

இன்று மீனாட்சி விஷயமாய்... அனைவரும் அமர்ந்து பேசி ஒரு முடிவு எடுப்பது என்றிருந்தனர். அனைத்து விபரத்தையும் பரஞ்சோதி வாத்தியார்... தன் நண்பனும் மீனாட்சியின் தாத்தாவுமான அழகுமலையிடம் சொல்லியிருக்க... தன் குடும்பத்தின் சார்பாக இன்று பேச வந்திருந்தார் அவர். முதலில் அவர் தான் பேச்சை ஆரம்பித்தார்.

“பரஞ்சோதி எல்லாம் சொன்னான்... என் பேத்தியை உங்க அண்ணனுக்கு கட்டித் தர எனக்கு பரிபூரண சம்மதம். என் வீட்டில் இருக்கிறவங்க கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நடத்த எனக்கு ஆசை தான்.. ஆனா என் பேத்தியை நெனச்சா தான் பயமா இருக்கு...” அவர் நிறுத்த

மற்றவர்கள் கேள்வியாய் அவரைக் காண.. வள்ளிக்கு விஷயம் தெரியும் என்பதால் அவள் அமைதி காத்தாள்.

“ஒரு முறை அவ தம்பி புடிவாதம் புடிச்சதுக்கே... என் பேத்தி செத்துப் பொழச்சி வந்தா... இதுல மறுபடியும்னா... அது தான் எனக்கு வெசனமா இருக்கு... பயமும் கூட தான். என் பேத்திக்கு ஒரு வாழ்வு வேணும்... இந்த சமூகம் என்ன சொல்லும்னு நான் ஆராயல... அவ வயச பத்தியும் யோசிக்கல... அப்போ பொறுப்பில்லாம விட்டுட்டேன்... இப்போவாச்சும் அதுக்கு ஒரு நல்லது நடக்காதான்னு ஏங்குறேன்...” அவர் குரலில் உண்மையாகவே வருத்தம் தெரிந்தது.

“ஆனா என் பேத்தி இந்த சமூகத்துக்கு பயப்படுது... அதுவும் இல்லாம அதுக்கு வயசு தாண்டிடுச்சு இல்ல... மீனாட்சி கிராமத்திலே வளர்ந்த புள்ள ப்பா... சட்டுன்னு ஒத்த வார்த்தையிலே நாண்டுகிட்டு... போக நெனச்சிட்டா என்ன செய்யறது.. மீனாட்சிக்கு நல்லது நடக்கனுமேனு என் மனசு ஒரு பக்கம் அல்லாடுது..

அதே நேரத்துல என் பேத்திக்கு ஒரு நல்லது நடக்கலைனாலும்... பரவாயில்ல என் கண்ணெதிற்கேவாது இருக்கே.. அதுவே போதும்னு... ஒரு மனசு சொல்லுது. நான் இப்போ என்ன முடிவு எடுக்கிறதுன்னு எனக்கே தெரியல. அந்த குழந்தை மனசை புரிந்து.. அதை மாத்தி.. அதுக்கு ஒரு நல்லது செய்ய அந்த வீட்டில் யார் இருக்கா... அவனவன் அவன் பொழப்ப தான் பார்க்கறானுங்க...” முதல் முறை பார்ப்பவர்கள் என்ற கட்டுப்பாடு இல்லாமல் அழகுமலை தன் துயரத்தை எல்லாம் கொட்ட

“நான் இருக்கேன் தாத்தா.. நான் அண்ணி மனசை மாத்தறேன்...” இவ்வளவு நேரம் வாயே திறக்காத வள்ளி இப்படி சொல்லவும்...

இப்படியான ஒரு குடும்பம் நம்ப அண்ணனுக்கு தேவையா என்ற எண்ணத்தில் அமர்ந்திருந்த ரேகா தங்கையின் வார்த்தையில் அவளை முறைக்க

“நீ சொன்னதே போதும் ம்மா... ஆனா இது நடக்க வழி ஏது... நான் என் பேத்தி கிட்ட பேசி பாக்கறேன்...” அழகுமலை நம்பிக்கை இல்லாமல் முடிக்க

“வள்ளி சொல்வது நடக்கும் அழகு...” என்று தன் நண்பனுக்கு நம்பிக்கை தந்த பரஞ்சோதி வாத்தியார்... வள்ளி இங்கு தங்கி படிக்கப்போகும் திட்டத்தை சொல்ல..

“சந்தோஷம் வள்ளி.. நீ என் வீட்டிலே தங்கிக்க... அப்போ என் பேத்தி கூட பழக உனக்கு சுலபமா இருக்கும். என் சின்ன பேரனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க இருக்கு.. அந்த பொண்ணு வந்து என் பேத்தியை என்ன பாடு படுத்தப் போகுதோ... கல்யாணம் முடிஞ்சதும் பையனுங்க மூணு பேரையும்... தனிக் குடுத்தனம் வச்சிடுடான்னு... கார்மேகம் கிட்ட திட்ட வட்டமா சொல்லிடலாம்னு இருக்கேன்...” வந்ததிலிருந்து அழகுமலை மட்டும் தான் பேசி கொண்டிருந்தார். அவருக்கு அவர் குடும்பத்து கவலை.

இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த வள்ளி... அவர் கடைசியாய் சொன்ன வார்த்தையில்.. அவளையும் மீறி அந்த வார்த்தைகளை உதிர்த்திருந்தாள்..

“முடியாது தாத்தா... இந்த கல்யாணம் நடக்க நான் விட மாட்டேன்... அவர் என் இளா... அவர் என்னுடையவர்... என் அண்ணியையும் சரி... உங்க பேரனையும் சரி... என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. அதனால் நீங்களே இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க...” குரல் நடுங்க ஒருவித படபடப்போடு தான் இவை அனைத்தையும் சொன்னாள் வள்ளி. இன்னும் தன்னவனிடம் கூட தன் மன விருப்பத்தை சொல்லவில்லை இவள். ஆனால் இங்கு அனைவரிடமும் அதை உறுதியுடன் வெளிப்படுத்தினாள் வள்ளி.

அங்கு எல்லோருக்கும் அதிர்ச்சி... முதலில் வெளிவந்தது ரேகா தான். “பைத்தியக்காரி... பைத்தியக்காரி... என்னன்னு தெரிந்து தான் பேசுறியா.. இல்ல யாரையோ நினைச்சிட்டு... இப்படி உளறுனியா...” அவள் வெடிக்க

“நான் ஒன்னும் உளறல.. கீர்த்திவாசன் அண்ணாவோட நண்பர் இளங்குமரன்... நம்ம அண்ணியோட தம்பி இளங்குமரன். நாட்டாமை கார்மேகம் அவரோட மகன் இளங்குமரன்... இவங்க எல்லாம் இதோ என் மனதில் இருக்கிறவரும்.. இவர் தான் அவர்.. என் இளா... நான் இவரை தான் விரும்பறேன்... இவரை தான் கட்டிக்குவேன்... இப்போ நான் சொன்னவரும் இவர் பேரனும் ஒன்னான்னு கேட்டு வைக்காதே...

அப்படியும் சந்தேகம்னா... இதோ என் இளாவோட தாத்தா கிட்டவே கேட்டுக்கோ...” எப்படியோ தன் மனதில் இருப்பதை சொல்லிவிட்டோம்.. இனி சாண் போனா என்ன முழம் போனா என்ன.. என்ற நிலையில் இவள் தன் கைப்பேசியில் இருந்த குமரனின் புகைப்படத்தை எடுத்து காட்டி.. படபடவென்று அனைத்தையும் கொட்ட...

“அடி.. கழுத.. உனக்கு இவ்வளவு திமிரா... உன்னை...” ரேகா தங்கையை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு போக... ரமேஷ் தான் அவளைத் தடுத்தான்.

வள்ளி காட்டிய கைப்பேசியை வாங்கிப் பார்த்த அழகுமலை... “ஆமாம் இவன் என் பேரன் தான்...” என்று சொல்லி விட

இன்னும் குதித்தாள் ரேகா... “ஏன் டி... ஏன் டி.. உன் புத்தி இப்படி போகுது...”

“உனக்கு மாமா எப்படியோ... அப்படி தான் ரேகா எனக்கு இவர்... இந்த ஜென்மத்தில் இவர் தான் என் கணவர்னு நான் முடிவு செய்திட்டேன்... அஸ்மி கிட்ட கூட இவர் தான் அப்பான்னு சொல்லி தந்திருக்கேன்... எனக்கு வேற வாழ்க்கை இல்லை ரேகா புரிஞ்சிக்கோ...”

வள்ளியின் வார்த்தையில், “இதென்ன முட்டாள்தனமான பேச்சு வள்ளி...” இப்போது கீர்த்தி வெடித்தான்.

“இதுக்கு முன்ன நீ என் பேரனைப் பார்த்து பேசி இருக்கீயா வள்ளி...” அழகுமலை கேட்க

யாரையும் காண முடியாமல் தலை குனிந்தவள்... ‘இல்லை என்பதாய் தலையசைக்க மறுநொடி... ஓங்கி வள்ளியின் கன்னத்தை அறைந்திருந்தது ரேகாவின் கை விரல்கள்.

“திமிரா... இல்ல திமிரான்னு கேட்கிறேன்... உன்னையும் என்னையும் சோறு போட்டு.. பாசமா வளர்த்தார் பார்... நம்ம அண்ணன்... அவரு இல்லைன்னா நீயும் நானும் பிச்சை தான் டி எடுத்திருப்போம். ஆனா அவரை பற்றி கூட யோசிக்காம... எவனோ முகம் தெரியாத ஒருத்தனுக்காக... இப்படி முட்டாள்தனமா வாழ்க்கையே அவன் தான்னு சொல்லுவியா.. இதையே நம்ம அண்ணன் நினைத்திருந்தா... இன்னைக்கு நீ இப்படி நின்னு பேசுவ...”

ரேகாவின் வார்த்தையில் வள்ளிக்கு கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது... “எனக்கு அண்ணா மேலே பாசம் இருக்கு ரேகா... அதே சமயம் என்னால் என் இளாவை விட்டுக் கொடுக்க முடியாது டி...” என்று கேவிய படி அழகுமலையிடம் ஓடி வந்தவள்... அவர் முன் மண்டயிட்டு

“ப்ளீஸ் தாத்தா.. நான் பேசறது... செய்யறது.. எல்லாம் தப்பு தான்... எனக்கு தெரியுது. இதுவரை உங்க பேரனை நான் நேரில் பார்த்தது இல்ல... ஏன் அவர் குரலை கூட நான் கேட்டது இல்ல. கீர்த்தி அண்ணா அவரைப் பற்றி சொல்ல சொல்ல... அவர் என் மனசுக்குள்ள வந்துட்டார். புத்திக்கு தப்புன்னு படுது... ஆனா மனசு.. என்னை புரிஞ்சிக்கோங்க தாத்தா...” இவள் அவரிடம் கெஞ்ச... அங்கு கனத்த அமைதி நிலவியது. யாராலும் வள்ளியின் பேச்சுக்கு உடன் பட முடியவில்லை.

ஆனால் கீர்த்தி, “முதலில் நீ எழுந்திரு.. என்ன செய்துட்டு இருக்க நீ.. அவனுக்கு பொண்ணு பார்த்து கை தாம்பூலம் மாத்தி முடிவாகிடுச்சுனு சொல்றோம்.. ஏதோ தத்து பித்துன்னு உளர்ற.. இதே இந்த இடத்திலே உன்னை மாதிரியே ஒரு ஆண் மகன் வந்து... கல்யாண பொண்ணு என் மனசுல இருக்கா... அதனால் நடக்க இருக்கிற கல்யாணத்தை நிறுத்துங்கன்னு மட்டும் சொல்லி இருக்கனும்... அடிச்சு நொறுக்கி இருப்பேன். இதே நீ என் தங்கச்சி என்றதாலே தான் உன்னை சும்மா விடுறேன்...”

பின்ன.. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால்... இதுவே அவனுக்கு கோபம் என்றால்... தன் நண்பனைப் பற்றி சொல்லி சொல்லியே... இந்த அறியா பெண்ணின் மனதை தான் கலைத்துவிட்டோமே என்ற கவலை அவனுக்கு.

ரேகா பக்கம் திரும்பியவன், “குமரன் திருமணம் முடியற வரை கொஞ்ச நாள் சுந்தரம் அண்ணா பற்றிய பேச்சு நிறுத்தி வைங்க.. அவசியப்பட்டா பேசிக்கலாம்...” அவளிடம் சொன்னவன்

“இன்னும் இங்கே ஏன் உட்கார்ந்துட்டு இருக்கீங்க... கெளம்புங்க போகலாம்...” அழகுமலை மற்றும் பரஞ்சோதி வாத்தியாரை நோக்கி உத்தரவிட்டவன்... இவ்வளவுக்கு பிறகும் அமைதியாக போக முடியவில்லை கீர்த்திவாசனால்.

இறுதியாக வள்ளியிடம் திரும்பியவன், “நான் உன்னை சின்ன பொண்ணுன்னு நெனச்சேன் வள்ளி. ஆனா உன் மனசுல இப்படி ஒரு கபடம் வந்ததும் இல்லாம எங்களுக்கே... பாடம் சொல்லி தரீயா... என்ன ஆனாலும் நீ சொன்னது மட்டும் நடக்காது... ஒழுங்கா... எங்க வள்ளியா இரு. இப்போ போறேன்... பெறகு வந்து உன் கிட்ட பேசறேன்...” அந்த கடைசி வாக்கியத்தை இவன் உறுமலோடு சொல்லிவிட்டு செல்ல... முதல் முறையாக கீர்த்தியின் கோபத்தைக் கண்டு நடுங்கினாள் வள்ளி.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Neenga emathitinga akka kumarana intha epila kondu varave ila
அடுத்த epi la வந்துடுவான் டா😍
நன்றி ம்மா🤗💞
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN