ஈரவிழிகள் 30

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாட்கள் அதன் போக்கில் நகர... அனைவரும் சுந்தரத்தின் வரவுக்காக ஆவலோடு காத்திருந்தனர்.

இதற்கிடையில் ஒரு நாள் மீனாட்சிக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டது. எப்போதும் பெண்களுக்கு வரும் மாதாந்திர பிரச்சனை தான்... ஆனால் மீனாட்சிக்கு வயது நாற்பத்தைந்தை எட்டியதால்... மெனோபாஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டாள் இவள். கை... கால்களின் வலியிலும்... உடல் சோர்விலும்... அதீத உதிரப்போக்கிலும்.... அவதிப்பட்டவள்... தன் நினைவை இழந்து ஒரு நாள் மயங்கி விழுந்து விட... அச்சமயம் வீட்டிலிருந்த வேலையாட்களும் வள்ளியும் தான்... அவளைப் படுக்கையில் சாய்த்து... மயக்கம் தெளிய வைத்தார்கள்.

பிரச்சனை இது தான் என்று வள்ளிக்கு தெரியும் என்பதால்... மீனாட்சிக்கு முழு ஓய்வு கொடுத்து... அவளுக்கு சத்தான ஆகாரங்களைத் தந்து பார்த்துக் கொண்டாள். விஷயம் கேள்விப்பட்டு உமாவும்.. கல்பனாவும்... பெரியவளை வந்து பார்த்து நலம் விசாரிக்க... அப்போது படுக்கையில் இருந்தவளின் உடலில் ஒரு சில உபாதைகள் உண்டாக... அதில் மீனாட்சி மெல்ல எழுந்து பின் கட்டு செல்ல முனையும் நேரம் அவள் கண்ணில் பட்டது அது... உதிரக் கறைகள்.

அதைக் கண்ட மீனாட்சிக்கு பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது. அதில் பழையபடி படுக்கையில் அமர்ந்து கொண்டவள்.... உதவிக்கு அங்கிருந்த பெண்களைக் காண.. அவர்கள் இருவரும் ஏதோ காண கூடாத அசிங்கத்தைக் கண்டது போல... முகத்தை சுளித்து... மூக்கைப் பொத்திக் கொண்டு... ஒருவித அசூசையில் அங்கிருந்து விலகி ஓட... அச்செயலில் மரண அடி வாங்கினாள் மீனாட்சி. இது பெண்களுக்கே நிகழும் சாதாரண நிகழ்வு தான்... இதையே சக பெண்கள் புரிந்து கொள்ளாமல் ஓடினால் என்ன சொல்ல...

‘ஐயோ!... நான் இப்போ பின் பக்கம் போகணுமே... என்ன செய்ய...’ பெரியவளின் மனது ஓலமிடவும்... அந்நேரம் உள்ளே நுழைந்த வள்ளி.. விஷயமறிந்து... அவளுக்கு வேண்டிய உதவியைச் செய்து... புதிய படுக்கை விரிப்பை மாற்றி.. பழைய விரிப்பை எடுத்துச் செல்ல... அந்நேரம் அறைக்குள் நுழைந்தான் குமரன்.

“என்ன க்கா உடம்புக்கு என்ன செய்து...” என்ற கேள்வியுடன்...

ஒரு பெண்ணுக்கு பூப்பெய்தும் போது மட்டும்... உடலாலும்.. மனதாலும்.. ஹார்மோன்களாலும்... மனஅழுத்தம் உண்டாவது இல்லை. அதன் பிறகான மெனோபாஸ் நேரத்திலும் இப்படி நிகழ்வது இயற்கையே. அதன் தாக்கத்துடன் இன்று உமாவும்.. கல்பனாவும் செய்த செயலில்.. பெரியவளுக்குள் எதிர்காலத்தில் தன்னுடைய நிலை என்ன என்பது பற்றிய பயம் எழ... அவள் மன உளைச்சலிலும்... மன அழுத்தத்திலும் இருந்த நேரம்... குமரன் தமக்கையை இப்படி கேட்கவும்...

அந்த சாதாரண கேள்வியிலேயே, “குமரா.. கு.. மரா... எனக்கு... பயமா இருக்கு டா... என்னை விட்டுடாத டா... எனக்கு யாரும் இல்ல...” அழுகையின் ஊடே அவள் தம்பியின் கையைப் பிடித்து கதறவும்... அதிர்ந்தே போனான் குமரன். முதல் முறையாக தமக்கையை பயத்தின் சாயலோடு காண்கிறான்.

“அக்கா.. ஒன்னும் இல்ல.. நான் இருக்கேன்...” இவனின் சமாதானம் எதுவும் பெரியவளை எட்டவில்லை... ‘ஏன்... இப்படி..’ இவன் யோசித்த நேரம்... மனைவி இங்கிருந்து சென்றதையும்.. தற்போது தமக்கை அழுவதையும் சேர்த்து யோசித்த நேரம் உள்ளே நுழைந்தாள் வள்ளி. மீனாட்சியின் கதறலில் அவளுக்குமே அதிர்ச்சி தான்.

“என்ன ஆச்சு அண்ணி...” இவளின் பரிவான கேள்வி கூட பெரியவளை எட்டவில்லை..

அவளோ, “குமரா... என்னை விட்டுடாத குமரா பயமா இருக்கு...” என்று அதையே பிதற்றவும்... தமக்கையின் ‘பட்டு’ என்ற விளிப்பு மறைந்து போனதைக் கண்டவன்...

இதற்கு முழுக்க மனைவி தான் காரணம் என்ற எண்ணத்தில், “ஹேய்... உனக்கு என்ன திமிரா... என் அக்காவை என்ன சொன்ன... என் அக்கா இந்த வீட்டு மனுஷி... நீ வாழ வந்தவ... அதை மனசுல வச்சிகிட்டு நடந்துக்க....” அவனின் அதிகாரத்தில் தன் மனைவியை இவன் மிரட்ட...

வள்ளிக்கு சர்வமும் அடங்கியது... “நான் எப்போ அண்ணியை திட்டினேன்...” இவள் உதடுகள் முணுமுணுத்த நேரம்

“அக்கா அவ ஒரு ஆளுன்னு... அவ சொன்னதுக்காக அழுவியா... போக்கா... உன் தம்பி நான் இருக்கேன் க்கா உனக்கு...” என்று இவன் தமக்கையை சமாதானம் செய்ய

அப்போது தான் குமரனின் ‘அவ’ என்ற வார்த்தை மனதில் பதியவும் தன் நிலையிலிருந்து வெளியே வந்து.
“நீ யாரை சொல்ற குமரா...” என்று பெரியவள் கேட்க, அவன் வள்ளியைப் பற்றி தான் நினைத்தது எல்லாம் சொல்ல..
“ஐயோ!” என்று அரண்டவள்... தன் பயத்தைச் சொல்லி வள்ளிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று அனைத்தையும் மீனாட்சி சொல்லி முடிக்கவும்.

தற்போது விக்கித்து நின்றான் குமரன்... ‘என்ன சொல்லிட்டேன்... அதுவும் அவள் எதிரிலேயே...’ அடுத்த நொடி இவன் மருக... வள்ளியும் அங்கேயே தான் இருந்தாள்.

பின் மீனாட்சியிடம் இதமாய் பேசி... அவளை சமாதானம் செய்து தூங்க சொன்னவள்... தன் கணவனைத் திரும்பியும் காணாமல் வள்ளி வெளியே வந்து விடவும்...

அவளின் பின்னோடு தானும் மனைவியின் அறைக்குள் நுழைந்தவன்.. கதவை அடைக்க... கணவன் வந்தது தெரிந்தும்... அவன் கதவை அடைத்தது தெரிந்தும்.. தன் நிலையிலிருந்து திரும்பவில்லை இவள். வள்ளியின் பார்வையோ ஜன்னலுக்கு அப்பால் மையம் கொண்டிருந்தது.

‘ரொம்ப பேசிட்டோமோ... எதையும் அறியாமல் அவசரமாய் வார்த்தையை விட்டுட்டோமோ..’ இப்படியாக இவனுக்குள் குற்ற உணர்வு அதிகரிக்க... மனைவியை நெருங்கவே இவனால் முடியவில்லை. முகத்தில் அடித்தது போல் பேசி விட்டு இப்போது என்ன சொல்லி சமாதானம் செய்ய.. ஆனால் பேசினது தப்பு தானே? அதற்கு மன்னிப்பாவது கேட்க வேண்டுமே...

இப்படியாக தன்னுள் மருகிய குமரன்... ஒரு நெடு மூச்சுடன்... கேசத்தைக் கோதி கொண்டவனோ... ஒரு முடிவுடன் மனைவியை நெருங்கி அவள் இடையில் கைகோர்த்து... தன்னுள் அணைத்தவன், “ஹேய் இசை...” என்றான் மென்மையாக.. அதாவது ஒன்றுமே நடவாதது போல்…

“ப்ச்சு...” இவள் அவனின் கையை விளக்க.. இவனின் பிடியோ அழுத்தமாக இருந்தது.

முதலில் கணவனின் கையை விலக்கப் போராடியவள்... அது முடியாமல் போகவும்... “என் கிட்டயிருந்து தூர போங்க இளா..” என்று இவள் அழுத்தமாய் சொல்லவும்

“ம்ஹும்.. முடியாது டி இசை...” இவனும் அழுத்தமாய் சொல்ல.. எப்படியோ போ என்பது போல் அசையாமல் நின்றாள் வள்ளி.

ஏழிசைவள்ளியைத் தான்... இப்போதெல்லாம் இருவரின் தனிமையின் போது இப்படி இசை என்று அழைத்து மனைவியை சீண்டிக் கொண்டிருக்கிறான் குமரன்.

தன்னைத் தடுக்காமல் அதே சமயம்... தன்னவளின் மேனி இறுகியிருப்பதை உணர்ந்தவன், “உன் கிட்ட என்னை நிறைய முறை மன்னிப்பு கேட்க வைக்கிற டி...” தன் மூக்கை மனைவியின் தோளில் உரசியபடி இவன் சொல்ல.

கணவனின் குரலில் ஆதங்கத்தைக் கண்டவள், “அப்போ என் விஷயத்தில் நீங்க அதிகம் தப்பு செய்றீங்கனு அர்த்தம்...” பட்டென்று இவள் பதில் தர

அதை ஆமோதிப்பதாய் தன்னவளின் தோள் உரசி தலை அசைத்தவன்... “நீ வீட்டில் உள்ளவங்க எல்லாரையும் நல்லா கவனிச்சிக்கிற... உன்னால் முடிந்த வேலைகளை முன்னயிருந்து செய்ற. இதுவரை யாரையும் நீ குறை சொன்னது இல்ல... இதெல்லாம் எனக்கே தெரியும்.. நான் ஒண்ணும் கண்ணு இல்லாதவன் இல்ல.. ஆனா...”

அவனை முடிக்க விடாமல், “ஆனால்... உங்க வீட்டு மனிதர்கள்னு வரும் போது உங்களுக்கு நான் வேற்று ஆளா தெரியறேன்... அப்படி தான...” இவள் உஷ்ணமாய் கேட்க

“ஐயோ! அப்படி இல்ல டி...” மேற்கொண்டு இவனுக்கு வார்த்தை வரவில்லை... அப்படி தானே! அதான் பட்டவெளிச்சமாய் தெரிந்து விட்டதே...

கணவனின் மவுனத்தில், “வேற எப்படி... எனக்கு தெரியல... அதை நீங்களே சொல்லிடுங்க...” இவள் கோபமாய் கேட்க

“அச்சோ... ஏன் டி இப்படி கோபப்படுற...”

“ஏன்... பட கூடாதா...”

‘அவளின் கோபமும் நியாயமானது தானே...’ இதை தனக்குள் தான் கேட்டு கொண்டான். அங்கு கனத்த மவுனம் நிலவியது.. இருவரும் தாங்கள் நின்ற நிலையிலிருந்து மாறவில்லை. இவள் அதே ஜன்னலைத் தாண்டி வெறித்திருக்க... அவன் கைகளோ இவளின் இடையை வளைத்திருக்க... முகமோ பெண்ணவளின் தோளில் பதிந்திருந்தது.

தொண்டையை சீர் செய்தவன் தானே பேச ஆரம்பித்தான் குமரன்... “உன் குணம் எனக்கு தெரியும்... அக்கா என் கையை பிடிச்சுகிட்டு... என பேரைச் சொல்லி அழவும்... அதுவும் எதிர்காலத்தை நினைத்து பயந்து... ப்ச்சு... அப்போ அப்போ... எனக்கு என்ன நினைக்க தோணும்... அவசரத்திலே ஒரு வார்த்தையை விட்டுட்டேன்... அதுக்காக இப்படி முகத்தை திருப்பிட்டு வந்துடுவியா... நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் போனா என்ன டி...” முதலில் வருத்தத்தில் ஆரம்பித்தவனின் குரலோ.... இறுதியில் தப்பு செய்த குழந்தையின் குரலாய் மாறயிருக்க..

அவன் அசந்த நேரம் பார்த்து கையை விலக்கி விட்டவள்.. அதே வேகத்துடன் திரும்பி... அவன் கண்களை நேருக்கு நேர் நோக்கியவள், “முடியாதுன்னு சொன்னா என்ன செய்வீங்க...” இவள் அதிரடியாய் கேட்க

சரி என்று மேல் பூச்சாய் சொல்லாமல்... அதெல்லாம் என்னால முடியாது என்று அழுது வடியாமல்... அவள் கேட்ட பாவனையை உள்ளுக்குள் ரசித்தவனின் உதடுகளோ... ரகசிய சிரிப்பில் மலர்ந்தது... உடனே இதையெல்லாம் மறைத்துக் கொண்டவன் கெத்தாய் அவளின் கழுத்தில் தன் கைகளைக் கோர்த்தவன்... “சரி.. அப்போ நான் என்னைய மாத்திக்கறேன்...” என்று இவன் அசால்டாய் சொல்ல

ஏதோ பெரிதாக சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்திருந்தவள்... பின் கணவனின் பதிலில் விழி விரித்தவள்… பிறகு இவ்வளவு தானா என்பது போல் இவள் தன்னவனை முறைக்க... “ரொம்ப முறைக்காத டி... அதான் தப்புன்னு ஒத்துகிட்டேனே...” இவன் மொழிய....

அவளோ தன் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை... அதில் கடுப்பானவன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, “சாரி...” என்றான் எங்கோ பார்வையை பதித்து...

‘ஐயாவோட கை என் தோளில் இருக்குமாம்... விரல்கள் என் கழுத்தை வருடுமாம்... நானும் இவரை நெருங்கி நிற்கணுமாம்... ஆனா இவர் சாரியை மட்டும் எங்கோ பார்த்திட்டு சுவற்றுக்கு சொல்வாராம்...’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்.. கணவனின் முகத்தை தன் புறம் திரும்பி “நான் இங்கே இருக்கேன்…” என்றவள்.. “ஒன்னு மட்டும் நினைவில் வச்சிக்கங்க… உங்களுக்கு முன்னே அவங்க என் அண்ணி… அவங்களை நான் எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன்…” என்று அவனுக்கு அறிவித்தவள் பின் “நீங்க என் இளா தான?” என்று இவள் அடுத்து கேட்க

“என்ன டி திமிரா.. அதான் சாரி கேட்டுட்டனே...” இவன் கடுப்பாய் பதில் தர

“வேண்டா வெறுப்பாய் சாரி கேட்டாலும் அதை நான் ஏற்றுகிட்டேன். இது வேற.. சொல்லுங்க நீங்க என் இளா தானே...” இவள் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க

அவன் “ம்ம்ம்ம்...” என்க

“இல்ல நீங்க என் இளா இல்ல.. என் இளா குணம் எனக்கு தெரியும்.. இந்த வீட்டுலேயே நீங்க தப்பி பிறந்தவர்னு தாத்தா சொல்லுவார்.. ஆனா நீங்க ஏன் இளா அப்படி சொன்னீங்க? நான் வாழ வந்தா.. அப்போ இது என் வீடு இல்லையா?” பெண்ணவளின் குரல் கரகரத்து ஒலிக்கவும்

“ப்ச்சு...” தன் நெஞ்சிலே தன்னவளின் முகத்தைப் புதைத்துக் கொண்டான் இவன்.

“நான் தான் சொல்றேன் இல்ல... அக்கா அழவோ கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.. தப்பு தான்... நீ மட்டுமா வாழ வந்த.. காலம் காலமாக இதான் தொன்று தொட்டு நடந்து வருது... என் அம்மா இந்த வீட்டுக்கு வாழ வந்தாங்க... என் அக்கா அத்தான் வீட்டுக்குப் போகப் போறாங்க... ஏன் நாளைக்கு என் மகளும்... இன்னோர் வீட்டுக்கு வாழத் தான் போவா... இது நடைமுறை தானே... இதெல்லாம் அறிந்திருந்தும்... நான் எல்லோரையும் போல சாதாரண கணவனா பேசிட்டேன் இல்ல... என் கோபத்தை அனுசரித்துப் போற உன்னால் என் வார்த்தைகளை அனுசரிக்க முடியாது தான்... இனி மாத்திக்கிறேன் டி...” ஒரு நீண்ட விளக்கத்திற்கு பின் இவன் உணர்ந்து சொல்ல

கணவனின் வருத்தம் இவளையும் தாக்கவும்.. அவனிடமிருந்து விலகியவள், “இப்படி எல்லாம் பேசினா.. உங்களை சும்மா விட்டுடுவேனா...” இவள் பொய்யாய் கோபப்பட

தன்னவளின் மனம் புரிந்தவனாக, “வேற என்ன டி செய்யனும்...” இவனும் பயந்தவன் போல் கேட்க

“ஹும்ம்ம்... எல்லாம் தண்டனை தான்...”

“அப்போ அடிச்சிக்கோ...” அவளின் இடது கையைப் பற்றி தன் கன்னத்தில் வைத்து இவன் அழுத்திக் கொள்ள

“இதெல்லாம் ஒரு தண்டனையா மச்சான்...”

“பின்ன வேற என்ன...”

“கண்ணை மூடுங்க தரேன்...” மனைவியின் பதிலில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தன் கண்களை மூடியவன்... சற்று நேரத்திற்கு எல்லாம்

“ஹாச்...” என்று கண்ணில் நீர் தேங்க... முகம் சிவக்க.... அலறினான்.. பின்னே தண்டனை தரேன்னு... அவனின் மீசை முடியை அல்லவா இவள் தன் பல்லால் கடித்து இழுத்து விட்டாள்...

“ராட்சஷி... ராட்சஷி... மனுஷனுக்கு ஒரு நிமிஷம் உசுரே போயிடுச்சு...” இன்னும் தன் மனைவியை வைந்தவன்.... அவளின் முகம் பற்றி.. தனக்கு மருந்திட்டுக் கொள்ள.... தன் மீசையையும்... இதழ்களையும்... தன்னவளின் கன்னத்து கதுப்பில் இவன் உரச... அவனுக்கு இடம் தந்தவள்... பின் வாய்விட்டு சிரிக்க....

“எதுக்கு டி சிரிக்கிற...” இவன் கடுப்புடன் கேட்க

“நீங்க சாமியார் தான் மச்சான்.... நான் செய்த வேலைக்கு... இந்நேரம் நீங்க என் உதட்டுக்கு தண்டனை தந்திருக்கணும்... ஆனா பாருங்களேன்... நீங்க என் கன்னத்துல நண்டு பிடிச்சிட்டு இருக்கீங்க...” சொன்னவள் விழுந்து விழுந்து சிரிக்க

அதில் கோபம் போல் அவளின் முகத்தைத் தன் நெஞ்சில் புதைத்தவன், “பேச்சு... பேச்சு... ஓவரா பேசுற டி... நீ...” என்று இவன் மிரட்ட

“u know மச்சான்... வள்ளி குளிக்காம கூட இருப்பா... ஆனா பேசாம இருக்க மாட்டா...”

அவளின் பதிலில், “அய்ய... கப்பு...” என்றவன் இன்னும் இன்னும் தன்னவளின் முகத்தைத் தன் நெஞ்சில் புதைத்துக் கொள்ள... அதில் அவள் கலகலவென்று சிரிக்க... ‘ஐயோ... ஓவரா ஓட்டுறாளே...’ என்று நினைத்தவனின் வலது கை விரல்களோ... அவளின் பின்னங்கழுத்தை வருட... இதழிலோ அசட்டுப் புன்னகை ஒன்று குடிபுகுந்தது.

ஒருவாரம் கடந்திருக்கும்... அன்று மனைவியிடம் வந்த குமரன்.... தங்கள் அறைக்கு வருமாறு... அறிவித்து விட்டு செல்ல... கணவனின் குரலில் உள்ள பேதத்தை உணராமல் இவளும் அங்கு செல்ல... அவள் அறைக்குள் நுழைந்ததும் கதவை அடைத்தவன்... கூடவே தன்னவளையும் காதலோடு அணைக்க... அவனின் நெகிழ்ச்சியில் “என்ன இளா...’” இவள் ஆர்வமாய் கேட்க..

அவளின் கழுத்து வளைவில் வாசம் பிடித்தவன், “நாம இரண்டு பேரும்... சீக்கிரமே மலேசியா போறோம்... அத்தான் வந்த பிறகு... அவரை பார்த்து பேசிட்டு.. அவரோடவே இந்தியா வந்திடலாம்... அப்பா கிட்ட பேசிட்டேன்... ரமேஷ் அண்ணா... அதற்கான ஏற்பாட்டை செய்றார்... நானும் இங்க சில விஷயத்தை முடிச்சிட்டேன்...” மூச்சு விடாமல் கடகட என ஒப்புவித்தவன்… அவளின் “அப்படியா….”என்ற கேள்வியில் சந்தோஷத்தில் தன்னவளைத் தூக்கி சுற்ற

“அய்யோ... இளா... தலை சுத்துது... இறக்கி விடுங்க...” இவள் அலற...

“கத்தாத டி...” என்றவன் இறக்கி விட... படபடப்பில் அவனையே இறுக்க கட்டிக் கொண்டாள் இவள்.

“ஹேய்... இது இது தான் குட்...” என்று அவளின் செயலை சிலாகித்தவன், “மலேசியா போனா... இங்கே மாதிரி அங்கே நமக்கு தனி அறை எல்லாம் இல்ல.. சிங்கிள் ரூம் தான்... அங்கேயும் நீ இப்படி தான் இருக்கணும் சொல்லிட்டேன்...” இவன் கட்டளையிட

அதற்கு சம்மதமாய் புன்னகைத்தவள், “ஆனா பாருங்களேன்... முதல் நாள் நான் இந்த அறைக்கு வரும்போது... என்னை ஒருத்தர் துரத்தி விட்டார்... அதே இப்போ கட்டிட்டு நிற்கிறார்... நீங்க என்னை துரத்தினவரை எங்கயாவது பார்த்தீங்களா...” இவள் வியப்பு போல்... அவனுக்கு பழசை நினைவுபடுத்த

அதில் வசீகரமாய் புன்னகைத்த குமரன், “அப்போ இருந்தவன் குமரன்... இப்போ இருக்கறவன்... உன் இளா... நீ என்ன தேடினாலும் அவன் வர மாட்டான்....” இவன் சொல்ல

அந்த வார்த்தையில் மகிழ்ந்தவளாக... அவனுள் இவள் ஒன்ற... கீழே “வள்ளி...” என்று இவளை அழைக்கும் குரல் கேட்டது.

முதலில் அது பிரம்மையோ என்று இருந்தவள்.. பின் அதே குரல் மறுபடியும் அழைக்கவும்... உடல் இறுக.... “இளா... அண்ணா!” என்றாள் முகத்தில் கலவரத்துடன்.

இவனுக்கும் அந்த அழைப்பு எட்டியிருக்க... யோசனையுடன் அவளின் முகம் கண்டவன்... பின் அவளின் வார்த்தையில், “யாரு சுந்தரம் அத்தானா?” இவன் கேட்க

ஆமாம் என்பதாய் தலையை ஆட்டியவள்... அவசரமாய் வெளியே ஓடி வந்து காண.. அங்கு கீழே கூடத்தில் அவள் அண்ணன் சுந்தரம் தான் நின்றிருந்தார்... அவரைக் கண்டதும் எல்லாம் மறந்தவளாக பசுவைக் கண்ட கன்றாக... “அண்ணா...” என்ற அழைப்புடன் இவள் படிகளில் தாவி இறங்கி ஓட....

அவளின் ஓட்டத்தில், “ஹே.. மெல்ல டி...” இப்படி சொன்ன கணவனின் குரல் அவளை எட்டியதாகவே தெரியவில்லை. அப்படி ஒரு வேகத்துடன் இவள் அண்ணன் முன் சென்று நிற்க... அடுத்த நொடி சுந்தரத்தின் கரமோ... ஓங்கி வள்ளியின் கன்னத்தை அறைந்திருந்தது.

இது வரை ஒரு சுடு சொல் கூட யாரையும் கடிந்து பேசாதவர்... இன்று தன் மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்த தங்கையை அறைந்திருக்க.. இது நிஜமா.. அடித்தது அண்ணனா என்பதை நம்ப முடியாமல் உறைந்து நின்றாள் வள்ளி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN