ஞாபகங்கள் தாலாட்டும் 3

Avira

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் கணவனின் வருகை நந்தினியின் முகத்தில் புன்னகை பூக்கச்செய்தது, அவளது ஞாபகங்களை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு தன் கணவனை கவனிக்கத்தொடங்கினாள்.
" என்னங்க.. இன்னைக்கு இவ்ளோ லேட்டு? உங்களுக்காக நம்ம மது எவ்ளோ நேரம் காத்திருந்தா தெரியுமா? இப்பத் தான் தூங்குனா," என்று கோபமாக அவனை கடித்துக்கொண்டு அவன் கைகளை தன் மேலிருந்து நீக்க முயற்சித்தாள்.
ஆனால் அவனது பிடியோ இரும்பாக இருந்தது," என்னடா பண்ண சொல்ற? நான் பாக்குற வேலை அப்படி , நியூஸ் ரிபோர்டர் வேலை நேரம் காலம் இல்லாம உழைக்கனும்," இன்னும் அவளை விடுவிக்காமல் பேசிய தன் கணவனின் கைகளை ஆறுதலாக பற்றிய நந்தினி," சரிங்க புரியுது நீங்க போய் டிரஸ் மாத்திட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்," என்று கூறி அவனை அறைக்குள் அனுப்பிவிட்டு ஒரு சிரிப்புடன் சமையல் கட்டை நோக்கி விரைந்தாள்.
இரவு உணவை முடித்துவிட்டு தன் மனைவியுடன் அன்று நடந்தவைகளை பகிர்ந்துகொள்ளும் பழக்கமுடைய சிவா இன்றும் அது போல பேசிக்கொண்டிருந்தான்.ஆனால் அவன் பேச்சை கேட்கும் மனநிலையில் இல்லாத நந்தினி அமைதியாக உதட்டில் புன்னகையுடன் தலையை அசைத்துக்கொண்டிருந்தாள்.
அவளின் நினைவுகள் மெது மெதுவாக பின்னோக்கிச் சென்றது, நிகழ்கால சந்தோஷங்களை அனுபவிக்க விடாமல் சில நேரங்ஙளில் நம் மனது புதைந்து போன நினைவுகளை மனதின் ஆழத்தில் தேடும் அந்த நிலையிலே இப்பொழுது நந்தினியும் இருந்தாள்.
அவள் மனம் பெசன்ட் நகர் பீச்சிற்கு சென்றது.அங்கு அவள் தன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.காதலுக்காக காத்திருப்பது ஒரு சுகம் தரும், அந்த காதலனுடனான முதல் சந்திப்பு சுகத்திலும் இன்பம் சேர்க்கும், ஆனால் காதலன் யாரென்று தெரியாத நிலையில் தன்னை கடந்து செல்லும் நூற்றுக்கணக்கான ஆடவர்களில் தன் மனதிற்கினியவன் யாரென்று தேடும் பெண்ணின் நிலை வார்த்தைகளால் வர்ணிப்பதற்கு அப்பாற்பட்டது.
நந்தினியின் தேடுதலை கலைத்தது அவளது கைப்பேசி, அதில் அழைத்தது அவளின் எண்ணத்தின் நாயகனே தான்,அந்த அழைப்பை ஏற்ற நந்தினி," எங்க இருக்கீங்க கௌதம்??" என்று வினவினாள்.
அந்த பக்கம் எந்தவித சத்தமும் இல்லாமல் போன் வைக்கப்பட்ட சத்தம் கேட்க, நந்தினி குழப்பமடைந்தாள்.
திடீரென்று அவள் முன்னாள் , " ஹாய் நந்து டியர், வில் யூ மேரி மி??" என்று கைகளில் ரோஜாக்களுடன் ஒரு அழகிய வாலிபன் அவள் முன் நின்றான்.
அவனை பார்பதற்கு கல்லூரி மாணவன் போல் இருந்தான் உயர்ரக கரு நீல நிற ஜீன்ஸும் வெளிர் நீல நிற டி சர்டும் அனிந்து கொண்டு ஆணழகனாக காட்சியளித்தான்.
அவனை பார்த்து ஒரு நிமிடம் திகைத்த நந்தினி பின் தன்னை சுதாரித்தவளாய்," யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்? " என்று வினவினாள்.
அவளை பார்த்து மந்தகாச புன்னகை பூத்தவன்," ஓஓஓ என்னை அறிமுகப்படுத்தலை ல மறந்துட்டேன், என் பேரு கௌதம் சக்கரவர்த்தி , நான் உன்னை விரும்புறேன் நந்து, உங்கூட இருக்கும்போது உணராத காதலை உன் பிரிவு உணர்த்திடுச்சு, என்னை ஏத்துக்குவியா??" என்று கூறி அவளது பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தான்.
கௌதமின் இந்த செய்கையை நந்தினி சற்றும் எதிர்பார்கவில்லை என்பது அவளது முகபாவனையிலிருந்தே அறிந்துகொண்ட கௌதம்," என்னாச்சு நந்து என்னை உனக்கு பிடிக்கலையா??" என்று வருத்தத்துடன் வினவினான்.
அவனை இடைமறித்த நந்தினி," அப்படிலாம் இல்லை ஆனால் ஏதோ ஒரு தயக்கமும் பயமும் என்னை தடுக்குது," என்று தலை குனிந்தாள்.
அவளை ஆளமாக நோக்கிய கௌதம் ," உனக்கு என்னை பிடிக்கலையா, நந்து??" என்று தன் மனதின் வலி வெளித்தெரியாமல் வினவினான்.
அவனை வேகமாக இடை மறித்த நந்தினி," எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் கௌதம், உன்கிட்ட பேசாம இருந்த இவ்வளவு நாளும் நான் நானா இல்லை, அப்பதான் உன் மேல நான் வச்சிருக்குறது வெறும் அன்பு இல்லை அதையும் விட அதிகமான ஒரு உறவு அப்படீனு புரிஞ்சது, ஆனால் திரும்பவும் நீ என்னை விட்டுட்டு போய்டீனா??? அதை தாங்குற சக்தி எனக்கு இல்லை , நம்ம நல்ல நண்பர்களா மட்டும் இருக்கலாம் , அதுக்கு மேல இந்த உறவு ல எனக்கு விருப்பம் இல்லை," என்று கண்ணீர் மல்க கூறினாள்.
நந்தினியிடமிருந்து வந்த பதில் கௌதமை திகைக்க வைத்தது, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் சக்தியை இழந்த கௌதம் தொப்பென்று ஏமாற்றத்துடன் மணலில் அமர்ந்தான்.
கௌதமின் அதிர்ச்சியை கண்டு வருந்திய நந்தினி செய்வதறியாதவளாய் அவனின் அருகில் சிறு இடைவேளை விட்டு அமர்ந்தாள்.
" கௌதம்........ என் மேல கோபமா??? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா??
" ம்ம் நீ எங்க தப்பா சொன்னா?? எல்லாம் சரியா தான் சொன்ன , என்ன பண்றது எல்லாம் என்னோட தப்பு தான், சரி நான்.அப்ப கிளம்புறேன்," என்று கூறி வேக வேகமாக அந்த இடம் விட்டு நகர்ந்தான் நந்தினி எத்தனை முறை கூப்பிட்டும் திரும்பாமல் அந்த கூட்டத்துக்குள் சென்று மறைந்தான்.
அவனது காதலை மறுத்தவளோ அவள், வருந்த வேண்டியதோ அவன், ஆனால் இங்கேயோ காதலை மறுத்தவள் சோகத்தில் ஒன்றும் புரியாமல் தவித்திருக்க. ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியவன் அமைதியாக அந்த இடம்விட்டு நகர்ந்தான்.
கண்களில் நீர் மல்க அங்கே அமர்ந்திருந்த நந்தினி திடீரென்று நினைவு வந்தவளாக தன் கைபேசியை எடுத்து கௌதமின்.என்னிற்கு முயற்சித்தாள், அவளது எண்ணத்தை போலவே அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை. சோர்ந்த மனதுடன் வீடு நோக்கி பயனித்தாள் நந்தினி.
கௌதமிடம் பேசி ஒரு வாரம் சென்ற நிலையில் நந்தினியின் மனம் வெகுவாக சோர்ந்து இருந்தது, அவளது அழைப்பை கௌதம் ஏற்கவுமில்லை அவளது மெசேஜிற்கு பதிலலிக்கவும் இல்லை, இப்பொழுதுள்ள வைஃபை(wifi), வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உலகம் அன்று இல்லை, அன்று இருந்தது வெறும் மொமைலும் எஸ். எம்.எஸ் சும் மட்டுமே.
அந்த யுகம் காதலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது என்று கூறினால் அது மிகையாகாது.
அதனால் கௌதமை நெருங்கும் வாய்ப்புகள் நந்தினிக்கு மிகவும் குறைவாகவே இருந்தது.மனமும் உடலும் செயலற்றதுபோல தோன்ற ஒரு வாரம் முன்பு கௌதமை சந்தித்த இடத்திற்கு சென்றாள் நந்தினி.
அந்த இடம் அவனது நினைவை அவளுக்கு அதிகமாக்கியது, சோகமே உருவான மோனாலிசா ஓவியம் போல் அங்கு அவள் அமர்ந்திருக்க அவளது மோனநிலையை கலைத்தது ஒரு பரீட்சயப்பட்ட குரல். குரல் வந்த திசையில் நோக்கிய நந்தினி திகைத்தாள், அங்கே அவள் கண்டது தன் மகள் மதுராவுடன் சந்தோஷமாக நீரில் விளையாடிக்கொண்டு தன்னையும் வருமாறு அழைக்கும் தன் கணவனை.
நேற்று இரவு தன் கணவனுடன் பேசியவரை மட்டுமே அவளின் நினைவில் நிற்க மறுநாள் காலை எழுந்து இயந்திரமாய் தன் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்தது வரை அவளின் மூலையில் பதியவில்லை ,அந்த அளவு அவளது மனது கௌதமின் நினைவில் மூழ்கி இருந்திருக்கிறது என்பது நினைக்கையில் குற்ற உணர்வில் தலை குனிந்தாள்.
இது எப்படி சாத்தியம் என்று பலமுறை முயன்று யோசித்தும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை.தன் செயலை குறித்து வெட்கிய நந்தினி எழுந்து தன் குடும்பத்தின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
முகத்தில் புன்னகை தவழ கணவனின் அருகே நந்தினி நின்ற கோலத்தில் இருந்த செயற்கை தனத்தை புரிந்த கொண்ட இரு விழிகள் அவளது இந்த நிலைக்கு காரணமான தன்னை வெறுக்கத் துவங்கியது.
 

Author: Avira
Article Title: ஞாபகங்கள் தாலாட்டும் 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN