பூ 23

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீசும் தென்றல் காற்றில் இருந்த ஈரம் உடலை துளைத்தாலும், மனதில் புழுக்கமாய் இருந்ததது போன்ற, உணர்வுடன் ஜன்னல் கம்பிகளில் கண்களை படறவிட்டு இருளை வெறித்து இருந்தாள். பிறை மதியாய் இருந்த வெண்நிலவும் முழுமதியாய் உருபெற்று உச்சியில் தன் எழிலை பறைசாற்றி கொண்டு இருக்க கண்களில் நிறைவு மனதை நிறைக்கவில்லை மாறாக கண்ணீரை நிறைத்து இருந்தது.

காதலித்தவன் ஏற்கவில்லையே என்று கலங்கி நிற்பதா இல்லை உடன் பிறந்தவன் புரிந்து கொள்ளவில்லையே என்று கலங்கி நிற்பதா எதை நினைத்து கண்ணீரை உகுப்பது என்று நிலவை வெறித்து இருந்தவளின் மனம் அடித்து சொன்னது என் ஹீரோவை தவிர வேற ஒருத்தரை என்னால நினைத்து பாரக்கக்கூட முடியாது என்று நிச்சயம் அவன் மனதில் எனக்கான இடம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தவளுக்கு கதவு தட்டும் ஓசை காதில் விழுந்து கருத்தை கலைத்தது.

"தேவா… ஏ புள்ள தேவா... கதவை தொற டி" என்று தாயின் சத்தம் நினைவை இவ்வுலகத்திற்கு திருப்பிட கன்னத்தை துடைத்தவள் சுரத்தை இன்றி கதவை திறந்து சலிப்பாக "என்னம்மா?" என்றாள்.

"இரா சாப்பட்டையும் வேண்டான்னுட்ட ,மதியமும் சரியா சாப்பிடல இப்படியே வயித்த காய போட்டினா, இன்னும் இருக்க இருக்க உள்ளுக்கு போயிடுவ டீ" என்று அவளை வைதவர் கையோடு கொண்டு வந்த பால் டம்பளரை அவள் கையில் கொடுத்து "குடி புள்ள வெறும் வயித்தோட படுத்தா தூக்கம் வராது" என்று கரிசனையாய் கூற அந்த சொல்லில் மலுக்கென்று கண்ணீர் உருண்டது.

மகளின் கண்ணீரை பார்த்த மரகதமோ "என்ன புள்ள இன்னும் கை வலிக்குதா" என்று கையை மெதுவாக தொட்டவர் அவளின் தலையை ஆதுரமாக வருடியபடி "ஒன்னுமில்ல புள்ள எல்லாம் சரியா போயிடும்". என்று அவளை சமாதானபடுத்திட்ட அன்னையை கட்டிலில் அமரவைத்தவள் "அம்மா" என்றபடி அவர் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.

மனம் முழுக்க அண்ணனின் பாரமுகம் உலா வந்தது அன்னையின் கைகள் தேவாவின் தலையை வருடி விட்டபடியே 'என்ன ஆச்சி இவளுக்கு தம்பி முகமும் சரியில்ல இவ முகமும் சரியில்ல ஒருவேளை என்கிட்ட ஏதாவது மறைக்கிறாங்களோ! பச் அப்படி எதுவும் இருக்காது உடன் பிறந்தவளுக்கு இப்படி ஆகுதேன்னு அவனுக்கு கலக்கமா இருக்கும், இவளுக்கும் நமக்கு இப்படி ஆகுதேன்னு வருத்தமாக இருக்கும். அம்மா தாயே வர்ற ஆடி திருவிழால பூக்குழி இறங்குறேன் தாயே என் மக்கள நல்லா வைச்சிரு அம்மா' என்றபடி சிந்தனையில் இருந்தார்.

…..

"அடி ஆத்தா மருமகளே சித்த காபி தண்ணிய கொண்டாடி" என்று வாசலில் இருந்த திண்ணையில் அமரந்து சாந்தலட்சுமி தேவசேனாவிற்கு வேலையை ஏவிக்கொண்டு இருந்தார். இரண்டு நாட்களுக்கு மேல் அழகன்பெருமாள் அங்கு தங்கியது இல்லை கோவிலில் இருந்து வந்த மாலையே அவரும் ஊருக்கு சென்று விட தனியே தெருவை பார்த்தபடி அமர்ந்து இருந்தார் சாந்தலட்சுமி.

'அடகிரகம் இதுகிட்ட மாட்டிக்கிட்டேனே! என்னை காப்பாத்த யாரும் இல்லையா?' என்று மனம் கூப்பாடு போட கடுகடுவேன முகத்தை வைத்தபடியே தாயை முறைத்த தேவசேனா "இதோ வறேன் அத்த" என்று குரலை கொடுத்தவள் "இந்தா பாரும்மா இந்த காபிலையே வெசத்தை கலக்கிகொடுத்துடுவேன். எப்ப பார்த்தாலும் மருமக மருமகன்னுட்டு கடுப்பகிளப்புறாக" என்றபடி சமயலறையில் அன்னையின் காதை கடிக்க

"அடியேய் ராட்சசி எதையும் வாய திறந்து சொல்லிபுடாதே... அவ ஏதாவது கிடைக்குமான்னு பார்த்துட்டு இருக்கா, ஒரு புள்ளி கிடச்சாலும் உன்னைய தட்டிக்கிட்டு போயிடுவா பார்த்து பதுவுசா நடந்துக்க" என்று அவளுக்கு பீதியை கிளப்பிட

தாயின் வார்த்தையில் வாயை இருக்க பூட்டி சாவியை கிணற்றில் விட்டெறிந்தவள் அமைதியின் மறுவடிவாய் மகள் தன் சொல் கேட்டு பதிவிசாய் சென்றதை பார்த்த மரகதம் உள்ளுக்குள் 'உன்னையும் ஆட்டி வைக்க ஒருத்தி' என்று நினைத்து நகைத்தபடி விட்ட சமையலை தொடர்ந்தார்

"மரகத அக்கா…" என்றபடி வாசலில் நின்ற அன்னத்தை பார்த்த சாந்தலட்சுமி "அட யாரு நம்ம அன்னமா இது, என்னடி ஆத்தா இத்தா பெரிய உருவமா ஆகிட்ட வக்கனையா வடிச்சி போடுதோ உன் மாமியா" என்று ஏற்ற இறக்கத்துடன் கேட்க

'கண்ணுல கொள்ளிய வைக்க நான் எப்படி இருந்தா இவளுக்கு என்ன வந்தது… வந்து பாத்தா எம் மாமியா எனக்கு வடிச்சி கொட்டுறத, வந்துட்டா ஊரு பஞ்ஞாயத்துக்கு… நீ இருக்கறது தெரிஞ்சி இருந்தா இந்த வாசப்படிய மிதிச்சி இருக்க மாட்டேன் கடங்காரி' என்று மனதில் சாந்தலட்சுமியை வறுத்து கொட்டியவள் "அட நீ வேறக்கா வேலை செய்து செய்தே உடம்பு பெருக்குது... உனக்கென்னக்கா கைதட்டினா பத்து ஆளுக கூட வருவாக 4 ஆள் கணக்கா இருக்க" என்று அவர் மூக்கை உடைத்தவர் வெளியே வந்த தேவாவை பார்த்து "என்ன புள்ள கை எப்படி இருக்கு ஒன்னு போனா ஒன்னு வருது உனக்கு புது வருஷத்தன்னைக்கு ஆரம்பிச்சது புள்ள இன்னும் தொடறுது" என்று தொடர்ந்து பேசிக்கொண்டே வந்த அன்னம் சாந்தலட்சுமி அவளை கவனித்துக்கொண்டே ஆராய்ச்சியாய் பார்த்ததை பார்த்து நாக்கை கடித்துக்கொண்டாள்.

"அத்த இந்தங்க காபி" என்று தேவா காபியை நீட்ட "அது கடக்கட்டும் மருமகளே... அது என்ன புது வருஷத்துக்கு அன்னைக்கு நடந்தது? அப்படி என்ன நடந்தது?" என்று கேட்க கையை பிசைந்தபடி நின்றிருந்தவளை ஒரு பார்வை பார்த்தவர் "அன்னம் இப்போ நீ சொல்ல போறியா இல்லையா?" என்று குரலை உயரத்தவும் மரகதம் வெளியே வரவும் சரியாய் இருந்தது.

மரகதம், "என்ன அன்னம் என்ன வேணும்" என்றிட

வந்த வேலை நினைவு வர "அக்கா அந்த மனுசன் வர இரவாயிடும் நான் இப்போ என் அம்மாவீட்டுக்கு கிளம்பனும் அவசரமா கூப்பிட்டு இருக்காங்க அவர் வந்தா இந்த சாவிய கொடுத்துடுங்க" என்றவள் ஒரு சங்கடபார்வையுடனே நிற்க,

"சரி புள்ள நான் தந்துடுறேன் நீ போயிட்டு வா" என்று அனுப்பியவர் உள்ளே செல்ல எத்தனிக்க

"நில்லுங்க மதனி எனக்கு தெரியாம தேவாக்கு புதுவருஷத்துல என்ன நடந்தது?" என்றாள் கேள்வியாக

இந்த வார்த்தையை கேட்டதும் சற்று திடுக்கிட்டு தான் போனார் மரகதம் "பெருசா எதுவும் இல்ல சாந்தா சாதரண விஷயம் தான் அதை பேசியே ஏன் பெருசாக்கனும் அதை விடு நீ உள்ள வா" என்று கையை பிடித்து உள்ளே அழைக்க

அவர் கையை உதறியவர் "விடுங்க மதன, இல்ல தெரியாமத்தா கேக்குறேன் நான் கட்டிக்கிட்டு போயிட்டா இந்த வீட்டுக்கும் எனக்கும் உறவு இல்லன்னு ஆகிடுமா? இல்ல நான் தான் வேத்து மனுஷி ஆகிடுவேனா?" என்று வார்த்தைகளை உரலில் இட்ட அரிசியாய் இடிக்க

"நீ ஒன்னுமில்லாத விஷயத்தை பெருசா ஆக்குற சாந்தா" என்று பதட்டமான குரலில் கூறிட

"சரி பரவாயில்ல அந்த ஒன்னுமில்லாத விஷயத்தை தான் சொல்லுங்களேன்". என்று பிடிவாதம் பிடிக்க அன்று நடந்த விஷயத்தை சுருக்கமாக கூறிட முடித்திட்டார் மரகதம்.

மரகதம் சொல்ல சொல்ல வாயில் கை வைத்திட்டவர் "இம்புட்டு நடந்து இருக்கு எனக்கு ஒத்த வார்த்தை சொல்லல" என்றபடி மூக்கை உறிஞ்சி

"ஏலேய் அருணு, உன் பொஞ்சாதிக்கு எது நடந்தாலும் நமக்கு சொல்ல மாட்டங்கய்யா... இந்த நியாத்தை யாரும் கேட்பாரு இல்லையா? கூட பொறந்தவா நான் குத்துகல்லு மாதிரி இருக்கேன், அவளை கட்டிக்க போற என் புள்ள ராஜாவாட்டாம் இருக்கான், எங்களுக்கு தெரியல மூனாம் மனுஷிக்கு தெரிஞ்சி இருக்கு... அப்படி இருக்கு எங்க உறவு" என்று மூக்கை முந்தாணையால் சிந்த சௌந்தரலிங்கமும் ஜெயசந்திரனும் வீட்டுக்குள் வந்தனர்.

சாந்தலடசுமியின் சத்தம் வெளி வாசல் வரை கேட்க என்னவோ என்று படபடப்புடன் உள்ளே வந்தவர்கள் "என்ன லட்சுமி ஏன் இப்படி அழுதுக்கிட்டு இருக்க?" என்று சௌந்தரலிங்கம் கேட்டதுமே

வேகமாக இடத்தை விட்டு இண்டு நாடி உடம்பை வைத்து எழுந்தவர் "நான் யாரு அண்ணே? நான் யாரு? மூனாம் மனுசி சொல்றா என் மருமகள நடுராத்திரி ஒரு பையன் கூட்டிட்டு வந்து விட்டான்னு, அவ பஸ்ஸை தவற விட்டான்னு, என் கிட்ட ஒத்தை வார்த்தை சொன்னியா? அவளையே பொஞ்சாதியா நினைஞ்சி இருக்க என் மகனுக்கு ஒத்த வார்த்த சொன்னியா? உன் மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்ல... அதானே என்னை தூரமா வைச்சி பாக்குற" என்று வார்த்தைகளை கொட்டிட

சாந்தாவின் ஆட்டத்தில் தேவா பேயறைந்ததை போல் வெலவெலத்து போய் இருந்தாள். இதுவரை அவள் கற்பனை செய்து கூட பார்த்திராத விஷயங்களை அத்தையின் வாயில் இருந்து வெளிப்பட உறைந்து நின்றவளின் கைகள் சில்லிட்டு போய் இருந்தது.

'அத்த ஏன் இப்படி அவசரப்படுறிங்க அவளுக்கு ஒன்னுமில்ல அது ஏதோ தற்செயலா நடந்தது அதை சொல்லனுமான்னு நினைச்சி இருப்பாரு அப்பா... சொன்னா நீங்க இப்ப பயப்புடுறா மாதிரியே அப்போ பயந்து இருப்பிங்க" என்று அவரை சமாதானம் படுத்த முயன்றான் ஜெயசந்திரன்.

"நான் நம்பல பா... நான் நம்பவே மாட்டேன். உன் அப்பாருக்கு நான் வேண்டாதவளா பேயிட்டேன், என்னை யாரு மதிக்கிறா முன்னமெல்லாம் இருந்தா போலவா என் அண்ணன் இருக்காரு... இப்போ நான் தேவை இல்ல இப்போ அவரு மனைவி, மக்கா இருந்தா போதும் நான் எதுக்கு தண்டமா எப்போ உங்க அம்மா அடி எடுத்து வைச்சாங்களோ அப்போவே நா வேண்டதவதானே" என்று கண்ணை கசக்கிட

"அத்த, லட்சுமி" என்று இரு குரல்கள் எழுந்தது... ஜெயசந்திரன் உணர்ச்சிவசப்பட சௌந்தரலிங்கம் அவனை அமைதிபடுத்தியவர் என்ன லட்சுமி இப்போ என்ன செய்யனுங்குற என்றார் சமாதானகுரலில்

சௌந்தரலிங்கத்தை பாத்தவர் "என் மகனுக்கு தான் உன் பொண்ணுன்னு இப்போவே என் கையில அடிச்சி சத்தியம் பண்ணு வர தையில கல்யாணத்தை வச்சிப்போம்" என்று கூறிட

சௌந்தலிங்கத்திற்கு தூக்கி வாரி போட்டது, ஜெயசந்திரனும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, மரகதத்திற்கு மயக்கமே வராத குறைதான். தேவா சொல்லவே வேண்டாம் இடிந்துப்போய் அமர்ந்துவிட்டாள்.

-----

ஓங்குதாங்காய் உயர்ந்து வளர்ந்த மரங்களின் இடையினிலும் கிளைகளிலும் தன் கிரணங்களை பாய்ச்சிய செங்கதிரோனின் வெப்பம் இதமாய் மேனியில் படர அந்த காலை வேளை இதமாய் இருந்தது விசாகனுக்கு, சந்திரனுக்கும் விசாகனுக்கும் மோதல் நடந்ததில் இருந்து இதுவரையில் பள்ளி வேலைக்கு சுந்தரனையே அனுப்பி வைத்தவன் ஃபாக்டரி, வயக்காடு தோப்பு ரைஸ்மில் என்று இவைகளை சுற்றியே வர ஆரம்பித்தான்.

தேவாவை மருத்துவமனையில் சேர்ப்பித்ததோடு சரி அதன் பிறகு ஒருமுறை கூட அவளை சந்திக்கவில்லை, அப்படி சந்திக்கும் வாய்ப்பையும் அவளுக்கு கொடுக்கவுமில்லை இன்று ஃபாக்டரி கட்டுமான பணிகளை மேற்பார்வையிட

செல்ல வேண்டுமாதலின் காலையிலையே கிளம்பிட சுந்தரனிமிடமிருந்து போன் வந்தது. அவசரமாக பள்ளிக்கூடம் கிளம்பி வரச் சொல்லி

என்ன விஷயம் என்பதற்கு |உடனே புறப்பட்டு வா" என்றதோடு அவனும் போனை வைத்துவிட ஒரு உஷ்ணமூச்சை வெளியேற்றியவன் கடுப்புடனே பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தான்.

காலையில் சோகமே உருவாய் கல்லூரி கிளம்பி இருந்தவள் சுரத்தையே இல்லாமல் அன்னையிடம் இருந்து மதிய உணவை வாங்கிக்கொண்டவள் கேட்டை திறந்து வெளியே செல்ல அப்போதுதான் பைக்கை எடுக்க வந்த சந்திரன் பார்த்தும் பார்க்கதது போல் செல்ல அவள் மனதில் ஒரு பெரும் வலி எழுந்தது.

கால்கள் தன் போக்கில் நடக்க இரண்டு நாட்கள் முன்பு அத்தை செய்த அழிச்சாட்டியம் கண் முன் விரிந்து கலங்கிய நீர் கன்னத்தை தொட்டது தெருவில் நடக்கிறோம் என்ற நினைவு கூட இல்லாமல் நடந்து வந்தவள் பேருந்து நிறுத்ததில் நின்றாள் பழக்கப்பட்ட இடம் அல்லவா கால்கள் அதன் போக்கில் தன் இடம் சேர்ந்து கொண்டது.

இவனோ அவளை காணவே கூடாது என்ற சபதத்தோடு வருபவன் போல் பாதை மேலயே கண்ணாய் இருந்தவன் அன்னிச்சை செயலாக அவள் நிற்ப்பதை பார்த்து விட்டான். அவன் பார்த்தான் ஒழிய இவள் ஏறெடுத்தும் அவனை பார்க்கவில்லை... பார்க்கவில்லை என்ன அவள் கருத்திலையே தான் எங்கு இருக்கிறோம் என்று பதியவில்லையே தன் தந்தை சரி என்று சத்தியம் செய்தது மட்டுமே அவளுக்கு நிழலாடிக்கொண்டு இருந்தது. ஒரு நிமிடமே அவளை கண்டான் என்றாலும் அவளின் முகம் இருந்த போக்கை வைத்தே ஏதோ சரியில்லையோ என்று நினைத்தான் நினைத்த அடுத்த நிமிடமே பச் எதுவா இருந்தாலும் 'அவன் அண்ணன் பார்த்துப்பான்'. என்று எண்ணத்தோடு தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.

பேருந்துக்கு காத்திருந்த தேவா மேகலா வராதது கூட உறைக்காமல் வந்த பேருந்தில் ஏறி அமர்ந்தவள் கண்களை மூடி தலையை சன்னல் கம்பிகளின் மேல் சாய்த்து இருந்தாள். அவசரமாக யாரோ அருகில் வந்து அமர்வது உறைக்க கண்களை திறந்து பார்க்க மனம் இல்லாதவள் அப்படியே இருக்க "ஏய் தேவா பாருடி என்னடி செய்து உடம்பு ஏன் இப்படி இருக்க" என்றிட

பிரிக்க முடியாமல் கண்களை பிரித்தவளின் கண்கள் கோவை பழமாய் சிவந்து கலங்கி போய் இருக்க பயந்து போய் விட்டாள் மேகலா

"என்னடி இப்படி இருக்க?"என்றதும்

"வேற எப்படி இருக்கறது, இன்னும் சாகலை அது மட்டும் பாக்கி" என்று விரக்தியோடு கூற

"வாயிலையே போட்டேன்னா... என்ன பேசுற புள்ள" என்று சுல்லென அவள் மேல் கோபம் கொள்ள

"அப்புறம் வீட்டுல நடந்தத எப்படி எடுக்கறது, ஒருத்தனை மனசுல பதிய வைச்சிக்கிட்டேன். அவனுக்கு சுத்தமா என்னை பிடிக்கல... எனக்கு கொஞ்சமாச்சும் சப்போட்டா என் அண்ணா இருக்கும் நினைச்சேன்... ம்கூம் என் கூட பேச கூட மாட்டுறான் சரி கொஞ்ச நாள் எல்லாம் மாறுன்னு நம்பிக்கையா இருந்தேன்.... அதுக்கும் அத்தை ரூபத்துல சதி செய்துடுச்சி" என்று அன்று நடந்தவைகளை கூறியவள் "எங்க அண்ணன் என் அப்பாவை சம்மதிக்க வைச்சிடுச்சி" என்று கூறிட அவள் அழாமலேயே கண்ணீர் வழிந்தது.

அதை துடைத்து விட்டபடியே "அழாத தேவா எனக்கு கஷ்டமா இருக்கு உன் நொண்ணன் ஏன் இப்படி பண்றான். சுத்த பட்டிகாடா இருக்கான். அவன் சென்னைக்கு போய் என்னத்த படிச்சி கிழிச்சி வேலைய பாக்குறான்". அவனை என்று பொருமியவளை கை பிடித்து அழுத்தம் கொடுத்து நிறுத்தியவள் |என் தலை எழுத்து படி தான் நடக்கும். ஆனா நான் கல்யாணம்னு பண்ணா அந்த ஆளைத்தான் பண்ணுவேன்". என்று ஆணித்தரமாக கூறியவளை வியப்புடன் பார்த்தவள் பக்கத்தில் ஜன்னல் புறம் பார்க்க விசாகன் வண்டியில் வருவது தெளிவாக தெரிந்தது…

"ஏய் அங்க பாரு புள்ள" என்றிட அவள் திரும்பிய திசையில் அவனை கண்டவளுக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு உற்சாகம் மனதில் எழுந்த உற்சாகம் கண்களில் பிரதிபலிக்க அவனையே தொடர்ந்து அவள் பார்வை சற்று நேரத்திற்கெல்லாம் பேருந்தை முந்திக்கொண்டு அவன் போக கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியவள் உள்ளே செல்வது போல் போக்குகாட்டி கல்லூரியை விட்டு வெளி வந்து ஆட்டோவில் ஏறிவிட்டாள் தேவா, அவள் அனுமானம் எப்படியும் அவன் வேலை நடக்கும் இடத்திற்கு வருவான் என்று இருந்தது. மேகலாவிற்கு சொன்னால் விடமாட்டாள் என்று அறிந்து வைத்திருந்தவள் அவளை ஏமாற்றி வெளியே வந்துவிட்டாள்.

முன்பு வந்த இடம் தான் இப்போது கட்டிங்கள் எல்லாம் வளர்ந்து விட்டிருந்தது… வேலை ஆட்கள் அதிகமாக இருந்தனர். அவள் நினைத்தபடியே கட்டிட வேலையை மேற்பார்வை பார்த்தபடி போனில் பேசிக்கொண்டு இருந்தவன் பின்புறம் வந்து யாரோ நிற்பது போல் இருக்க பேசியபடியே திரும்பி இருந்தான். நின்றிருந்தவனின் விழிகளில் வந்து போனது என்ன? நொடிக்குள் நடந்த நிகழ்வில் அவளால் இனம் காண முடியவில்லை குரலில் இறுக்கம் கண்களில் வெறுப்பு உடலில் ஒரு விரைப்புடன் இருந்தவன் "இங்க உனக்கென்ன வேலை?" என்றான் அழுத்தமான குரலில்

"அது வந்து உங்கள பார்க்க"

"என்னை எதுக்கு பார்க்கனும்?"

"உங்களுக்கு நிஜமாவே புரியலையா?"

"சத்தியமா புரியல என்ன விஷயம் எதுக்கு என்னை பார்க்க வந்த" என்றான் ஏதோ முதல் முறை கேட்பது போல்

அவன் மேல் கோவம் வந்தாலும் கண்களை இறுக்க மூடி திறந்து தன்னை கட்டுபடுத்தியவள் "எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்தா என்ன பண்றது எங்க அண்ணனுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சி" என்றாள் சட்டென

"ம் என்ன விஷயம்" என்னவன் "சரி அவனுக்கு தெரிஞ்சா எனக்கு என்ன" என்றான் கேள்வியாய்.

'என்ன பொசுக்குன்னு எனக்கென்னன்னு கேக்குறான் புரிஞ்சிதான் பேசுறானா?' என்று அவளுக்கு சந்தேகம் எழுந்தது.

"என்னை ரொம்ப திட்டிட்டான் உங்க கூட எந்த பேச்சும் இருக்க கூடாதுன்னு கோபப்படுறான்". என்றாள் அவனுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து

"ம் குட் இப்படி தான் இருக்கனும்... அண்ணன் வேலைய கரெக்டா செய்றான்… நீ அவன் சொல்ற மாதிரியே நடந்துக்க வேண்டியதுதானே" என்றான் மெச்சுதலாக

அவன் கூற்றில் சுருசுருவென கோபம் வர

"யோவ் யோவ்" எற்று சீறியவள் "உன்னையெல்லாம் லவ் பண்ண பாரு அந்த செவுத்துலயே போய் முட்டிக்கனும்... என்னக்கென்னன்னு கேக்குற உன்கிட்ட நான் என்ன கதையா சொல்றேன். என்று பொறிந்தவள் எனக்கு மாப்பிள்ள பிக்ஸ் பண்ணிட்டாங்க" என்றாள் உள்சென்ற குரலில்.

இந்த விஷயம் அவனுக்கு புதியது ஓரளவு எதிர்பார்த்து தான் அதை கேட்டதும் "குட் உங்க அண்ணன் நல்லதுதானே செய்து இருக்கான். உன் அண்ணன் சொல்றா மாதிரியே வீட்டுல பார்த்த பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா வாழு" என்று கூறிட

அவேசமாக அவனை நெருங்கியவள்

"என்னது வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கனுமா? அதுக்கு நீ பொணமா போன்னு சொல்லி இருந்தா கூட சந்தோஷமா போயிருப்பேன் யா" என்று கூறவும் கன்னம் திகுதிகுவென எரிந்தது… அவன் அறைந்ததில் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.

பச் என்று சலிப்பாய் அவள் புறம் திரும்பியவன் "யாரு பார்த்து வாயா போயான்னு பேசுற? வாய் கொழுப்பு கூடி போச்சா? மரியாதை இல்லாம பேசுற! முதல்ல இங்க இருந்து கிளம்பி போடி" என்று அவளை தள்ளி விட

"என்னங்க" என்று அவள் திரும்பி அழைக்க

"இன்னொரு அறை விட்டென்னா செவில் திரும்பிடும்... என்னடி பொண்ணு நீ... உனக்கு எத்தனை முறை சொல்றது உன் வயசு என்ன என் வயசு என்ன காதல் கீதல்னு சுத்திக்கிட்டு கடுப்பு ஏத்தறடி... உன்னை அவ்வளவு வெறுக்குறேன் உன் முகத்தை பார்க்க கூட புடிக்கல பச் அதென்னடி முகத்தை, உன் பேரை கேக்க கூட பிடிக்கல இங்க இருந்து முதல்ல கிளம்பி தொலை என் கண்ணுல இனி பட்டுடாத வெறுப்பா இருக்கு... செம டார்ச்சர் டீ நீ கால சுத்தின பாம்பு மாதிரி இருந்துட்டு இப்போ கழுத்தை இறுக்குற உன்னாலயே என் உசிறு போகுது" என்று வார்த்தைகளை அம்பாய் எறிந்திட

அது சரியாய் அவள் இதயத்தை கிழித்தது

உறைந்து போய் நின்றவள் அவன் கடைசி வார்த்தையில் நிமிர்ந்து அவனை பார்த்தவள் "போதும்" என சைகையால் நிறுத்தியவள் "இதுக்குமேல பேசினா சத்தியமா என்னால தாங்கமுடியாது... இங்கயே என் இதயம் வெடிச்சிடும் அந்த அளவுக்கு காயப்படுத்திட்டிங்க இனி ஒரு போதும் உங்கள தேடி நானா வரமாட்டேன்". என்று ஆவேசமாய் பேசியவள் "இது நான் உங்க மேல வைச்ச காதல் மேல சத்தியம்" என்றவள் திரும்பியும் பாராது விறுவிறுன சென்றுவிட்டாள். அவள் சென்ற திக்கை சில நிமிடங்கள் பார்த்தவன் பின் தன் வேலையை கவனிக்க சென்று விட்டான். அடுத்த பத்து நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பியவன் வீட்டிற்கு அவள் கல்லூரி வழியிலேயே சென்றிட ஆட்டோவில் இருந்து இறங்கியவள் தன்னை கடந்து செல்லும் அவனை ஒரு வெறுமையான பார்வையால் பார்த்தவள் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டாள்.

__

"அம்மா... அம்மா" எங்க இருக்கிங்க என்று அமுதாவின் குரலில் கொள்ளையில் இருந்த அலமேலு "இதோ வறேன் இருடி" என்று ஆட்களுக்கு வேலையை செய்ய சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

"என்னடி அம்மாவை ஏலம் போட்டுக்கிட்டு வர?" என்ன விஷயம் என்றபடி கையை முந்தானையால் துடைத்துக்கொண்டு வர

"இந்தம்மா" என்று அவர் கரங்களில் தன் சம்பளத்தை கொடுத்தவள் அவர் கால்களில் விழவும் நெஞ்சம் நிறைந்து போன அலமேலு "கட்டின புருஷன்கிட்ட எதிர்பார்த்து இருந்ததை என் பொண்ணு இன்னைக்கு என் கையில கொடுத்து இருக்கா... என் ராஜாத்தி நீ எப்பவும் நல்லா இருக்கனும்". என்று கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர் "இந்தாடா கன்னு இதை எடுத்துட்டு போய் சாமிக்கிட்ட வைச்சிட்டு முகம் கழுவிக்கிட்டு வந்து விளக்கேத்து"என்றவர் 'இப்பவாவது எம் மகளுக்கு அந்த ஆண்டவன் கண்ணை தொறந்தானே' என்று பூஜை அறையை பார்த்து ஒரு கும்பிடை போட்டவர் "போட கன்னு நானு கொள்ளையில இருக்கவங்களுக்கு காபிதண்ணிய போட்டாறேன்" என்று அடுக்களைக்குள் சென்றார்.

அதுவரை திண்ணையில் அமர்ந்து இருந்த ரத்தினத்தின் கை அரிப்பெடுத்தது விசாகனும் பணத்தை தரமாட்டேன் என்று கூறிவிட மனைவியும் வெளியே துரத்தி விட்டு இருக்க கால் காசை பார்க்க முடியாத வெறுப்பில் வந்து அமரந்தவனுக்கு மனைவியும் மகளும் பேசும் உரையாடல் காதில் விழ அடித்தது ஜாக்பார்ட் என்று அவன் உள்ளம் துள்ள மெதுவாய் பூஜை அறை சென்று பணத்தை எடுத்துக்கொண்டு போக கதவில் இருந்த மணியின் சத்தம் ஆள் இருப்பதை அலமேலுவிற்கு உணர்த்தி விட சமையலறையில் இருந்து எட்டி பார்த்தவருக்கு சட்டென அனைத்தும் விளங்கிட்டது.

"யோவ் யோவ் வை யா… அது என் பொண்ணு சம்பாரிச்சது யா" என்று அவனுடன் சண்டையிட

"நான் இல்லாம பொண்ணு எங்க இருந்து வந்தா டி? அவ எனக்கும் பொண்ணுதான்... அவ சம்பாரிச்சதுல எனக்கும் உரிமை இருக்கு.. சரிதான் போடி மனுசனோட நிலமை புரியாம, ஆறு மணியானா தன்னால உடம்பு நடுங்குது டி அவனும் காசு கொடுக்குல உன் பொறந்த வீட்டுலயும் கொடுக்க மாட்டுறானுங்க நீயும் தரல எப்புடி நான் வாழறது" என்று சண்டை போட

"நீ எதுக்குடா வழற செத்து தொலை" என்று அவேசமாக கூறிய அலமேலுவை அடித்து கீழே தள்ளிய ரத்தினம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

குளியலறையில் இருந்து வெளியே வந்த அமுதா அன்னை பேச்சு மூச்சி இல்லாமல் இருப்பதை பார்த்து பதறியபடியே அம்மா அம்மா என்று அழைக்க பின் மண்டையில் இருந்து ரத்தம் வந்தது உடனே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து தேனி பெரிய மருத்துவமனையில் சேர்க்க

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட அலமேலு சுவாசம் கொள்ள சிரமப்பட ஆக்சிஜன் மாஸ்குடன் படுத்து இருந்தார்.

சுந்தரன் மூலம் விஷயம் அறிந்த விசாகனும் தில்லையும் வர ஒரு வித இறுக்கத்துடனே அறைவாசலில் அமர்ந்து இருந்தவள் தில்லையை பார்த்ததும் "அம்மத்தா" என்று அவரை கட்டிக்கொண்டு அழுதாள்.

அவருக்கும் அவளை கண்டு மனம் கலங்கிதான் போனது, படுக்கையில் இருந்த மகளை கணணாடி தடுப்பின் வழியே எட்டி பார்த்தவரின் கண்களிலும் நீர் வெளியேறியது. அறுதலாய் அமுதாவின் கையை பற்றியபடி சாய்ந்து இருந்தவர் மனதும் மகளை கண்டு தவித்துப்போனது

சிறிது நேரத்திற்கெல்லாம் பரபரப்பாய் டாக்டர்கள் உள்ளே நுழைய அரைமணி நேர காத்திருப்பிற்கு பின் வெளியே வந்த மருத்துவர் "சாரி அவங்கள காப்பத்த முடியல, பின் மண்டையில் அடி பட்டதாலும் அதிக ரத்த போக்கு மற்றும் உயர் ரத்த அழுத்ததாலும் எங்க சிகிச்சை அவங்களுக்கு பலன் அளிக்கல" என்றதும் மயக்கத்தில் சரிய இருந்த அமுதாவை தாங்கி தன் தோள் மீது சாய்த்துக்கொண்டார் தில்லை, விசாகன் மற்றும் சுந்தரனும் சூழ்நிலையை கணம் உணர்ந்து நாமும் இப்படியே இருந்தால் எப்படி என அறிந்தவர்கள் அடுத்து அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் ஈடுபட்டனர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN