பூ 25

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தோழியிடம் பேசியதில் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள் தேவசேனா, அவ்வப்போது மனதில் அவனை பற்றிய எண்ணங்கள் பாலாய் பொங்கினாலும் அவன் மேல் உள்ள கோவத்தை அதில் தண்ணீராய் ஊற்றி அடக்கிடுவாள். தன் கவனம் முழுவதையும் படிப்பில் திருப்பி இருக்க நாட்கள் அதன் போக்கில் அடித்து சென்றது. இப்போது எல்லாம் விசாகனே பள்ளி வேலைகளை மேற்பார்வையிட வந்துவிடுகிறான். காலையில் பள்ளியிலும் மாலைவேளையில் தொழிற்சாலை கட்டுமான பணி நடக்கும் இடத்திலும் சென்று வருகிறான்.

பேருந்து நிறுத்ததில் நிற்கும் போதோ, இல்லை மாலை திருப்பும் போதோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தினமும் அவனை காண நேருகிறது தேவாவிற்கு, அவனை கண்டதும் இறக்கை இல்லாமல் வானில் பறந்திடும் மனதை கடிவாளமிட்டு அடக்கியவள், முகத்தை திருப்பி கண்களில் கோபத்தை கூட்டி அவனை கடந்து விடுவாள்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு வெள்ளி அன்று ஜெயசந்திரன் வீட்டிற்கு வந்திருந்தான். எப்போதும் சிரிப்பும் பேச்சுமாய் இருக்கும் வீட்டில் அமைதி, அமைதி மட்டுமே நிறைந்திருந்தது. தேவாவின் பேச்சு நிறையவே அடங்கிப்போய் பார்க்கவே மெலிந்தது போல காணப்பட்டாள். எப்போதும் ஓயாமல் வாய்பேசி கொண்டிருப்பவள் இப்போதெல்லம் பேசவே யோசித்தாள்... கோவத்தை கூட மௌனமாக காண்பிக்க ஆரம்பித்து இருந்தாள்.

மரகதத்திற்கு கூட மகள் பழைய மாதிரி இருக்க மாட்டாளா, என்று மனம் தவித்தது கணவரிடமும் பிள்ளையிடமும் ஆதங்கத்தை அவ்வப்போது கொட்டி கொண்டு இருந்ததற்கு பலனாக தேவாவை காணவே ஜெயசந்திரன் வந்திருந்தான்.

அடுக்கலைக்குள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த மரகதத்தினை "அம்மா" என்று அழைத்து உள்ளே நுழைந்தான் ஜெயசந்திரன். மகனை கண்டதும் முகத்தை திருப்பிக்கொள்ள

"என்னம்மா நீயும் அவளை மாதிரியே முகத்தை திருப்பிட்டே போற... எதுவும் நான் வேணுன்னுட்டிட்டு பண்ணல சந்தர்ப்பம் சூழ்நிலை அமைஞ்சிடுச்சி" என்று தன்னிலை விளக்கம் கூறிட

"பேசாதைய்யா... எந்நேரமும் பேச்சும் சிரிப்புமா இருந்தவ, ஒரு மூளையில முடங்கி போய் இருக்கா... யார்கிட்டயும் பேசுறது இல்ல, எனக்கு மனசெல்லாம் பதறுது நாளைக்கு என் புள்ளை மனசொடிஞ்சி ஒன்னு கெடக்க ஒன்னு செய்துகிட்டா என்ன செய்றது... போன உசிறு திரும்ப வருமா? அந்த லட்சுமி வாய் தெரிஞ்சும், அவ குணம் தெரிஞ்சும், கல்யாணம் பண்ணி கொடுக்க நீயும் உன் அப்பாரும் சம்மதிச்சி இருந்திங்கன்னா என்ன அர்த்தம்... என் புள்ளைய நீங்க படுகுழியில தள்ளுறிங்கன்னு தானே அர்த்தம்... நான் ஒருத்தி தான் உரல்ல மாட்டின உலக்கையாட்டம் இடிபடுறேன் என் வயித்துல பொறந்த பாவத்துக்கு அந்த புள்ளையும் இதுல இடிபடனுமா?" என்று கலங்கிய கண்களை முந்தானையில் துடைத்துக்கொள்ள

"அம்மா" என்று அவரின் கையை பிடித்து "நீ அத்தைய ஏன் மா பாக்குற அவரோட பையனை பாரேன்... தேவா மேல உயிரையே வைச்சி இருக்கான். இவங்க தனியா தானே இருக்க போறாங்க!! அத்தை இதுல எங்க இருந்து மா வர்றாங்க? சரி இப்போ நாம ஒத்துக்கலனா சும்மா இருந்து இருப்பாங்களா அத்தை? அதுக்கும் ஏதாவது ஒன்னு பேசி பிரச்சனை பெருசா தானே ஆகி இருக்கும்" என்று தன் தரப்பை எடுத்து கூறிட்ட போதும்

"என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்... அவளுடைய சந்தோஷம் தான் முக்கியம்... அவ நல்லா இருக்க நான் என்னவேனாலும் செய்வேன். ஏன் நான் செத்தா தான் இந்த கல்யாணம் நிக்கும்னாலும் அதை செய்து என் பொண்ணு வாழ்க்கைய காப்பாத்துவேன்" என்று உறுதியாக கூறியவர் செய்த உணவினை மேசை மேல் அடுக்க சென்று விட்டார்.

'நான் என்ன வேணும்னா செய்தேன்... அத்தை கேட்கவும் சரின்னு சொல்ல வேண்டியதா போச்சி அதுக்காக இப்படி ஒரு வார்த்தைய சொல்லிட்டாங்களே' என்று மிகுந்த வேதனை கொண்டான் ஜெயசந்திரன்.

காலை உணவு வேளை மௌனமாகவே கழிந்தது தேவாவின் முகத்தை அடிக்கொரு தரம் பார்த்துக்கொண்டு தான் சாப்பிட்டான் ஜெயசந்திரன். இருந்தும் அவன் புறம் பார்வையை கூட திருப்பாமல் அமைதியாய் சாப்பிட்டவள் கல்லூரிக்கு கிளம்பிட அவசரமாக உணவினை விடுத்து எழுந்தவன் கையை கழுவிக்கொண்டு வெளியே வந்தான்.

"செல்லம்மா" என்று அழைக்க அவன் புறம் திரும்பியவள் தன் பின் புறம் யாரவது உள்ளார்களா என்று பார்த்துவிட்டு புரியாமல் அவனை பார்த்தாள். இரு மாதத்திற்கு பிறகு வந்த பாசமான அழைப்பு மனம் அண்ணன் பால் சாய்ந்தாலும் தன் தரப்பு நியாத்தை சிறிது கூட செவி சாய்த்து கேட்காத அண்ணன் மீது கோவத்தை காட்டிலும் வெறுப்பே முதன்மையாய் இருந்தது. "என்னையா" என்று கையை தன்மீது காட்டி கேட்கவும் "தேவாமா என்னடா இன்னும் கோவமா தான் இருக்கியா?" என்றான் பவமாய்

"நான் யாரு உன் மேல கோவ பட எனக்கு காலேஜிக்கு டைம் ஆச்சி பஸ் போயிடும்" என்று கூறி அவனை கடந்து செல்ல

"இருடா நான் அழைச்சிட்டு போறேன்". என்று வண்டியை எடுக்க சென்றான்.

"வேணாம் எனக்கு பஸ் வரும் அதுல போய்டுவேன்.. அப்புறம் இது பாசத்துனால வர்றதா, இல்லை நான் இன்னுமும் அவர் பின்னாடி சுத்தறேனா இல்லையான்னு தெரிஞ்சிக்கவா?" என்றதும் "தேவா" என்று அழுத்தமாக ஜெயசந்திரன் அழைக்கவும்

"சாரி ண்ணா உன்னை இப்பவும் கோப படுத்திட்டேன். நான் செய்தது தப்புதான் அதுக்கு என்னை அடிச்சோ திட்டியோ இருக்கலாம். ஆனா இப்படி ஒரு முடிவை எடுத்து என்னை காலம் முழுக்க தண்டிச்சிட்ட" என்று வெறுமையாக கூறியவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.

இன்றும் விசாகனை பார்த்தாள் அந்த பார்வையில் வெறுப்பு தவிப்பு கோபம் எல்லாம் கலந்து இருந்தது. அவளை கடந்து சென்றவனோ தனக்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பது போல் வெகு இயல்பாகவே செல்ல அவளுக்கு ஆத்திரமாக வந்தது 'அப்படியே என் கண்ணுல படாம எங்கயாவது போயிடவேண்டியது தானே... ஏன்டா என் கண்ணு முன்னாடியே சுத்திக்கிட்டு இருக்க, உன்னை பார்க்க பார்க்க நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நியாபகத்துல வந்து என்னை அழ வைக்குது' என்று மானசீகமாக மனதில் அவனை திட்டியவள் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தாள்.

அந்நேர தோழியின் பேச்சில் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிட மிகவும் பிரயத்தனப்பட்டாள்.

தங்கையிடம் பேசிட வந்தவன் அவள் முகத்தை திருப்பிக்கொண்டு பேசாமல் போகவும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனான். வெளியே இருந்து வந்த சௌந்தரலிங்கமோ சிந்தனையுடன் அமர்ந்து இருந்த மகனை பார்த்தவர் அவன் எதிரில் அமர்ந்தார். தந்தை வந்ததை கவனித்தவன் எழுந்துக்கொள்ள "உட்காருப்பா" என்று தோளில் கைவைத்து அமரசொல்லி தானும் அமர்ந்தவர் வருத்தமாகவே காண

"ஏன்ப்பா முகம் வாடி போயிருக்கு" என்று ஜெயசந்திரன் தந்தையை வினவிட

"எல்லாம் நம்ம தேவா கல்யாண விஷயமாகத்தான். புள்ள இப்போ எல்லாம் பேசுறதே இல்லப்பா எப்பவும் தனியா இருக்கா... நானா பேசினாலும் முகத்தை திருப்பிக்கிட்டு போயிடுது… தேவா பேசி சிரிச்சி பார்த்தே ரொம்ப நாள் ஆயிடுச்சி சந்திரா" என்று வருத்தத்துடன் கூறி "நாம இதை கொஞ்சம் ஆரப்பேட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன். தேவா மனசு தெரியாம அவசரப்பட்டு சத்தியம் பண்ணது தப்புன்னு தோனுது" என்றிட

மரகதம் காபியுடன் வரவும் பாதி பேச்சை கேட்டவர் "அது இப்பதான் தெரியுதாக்கும் அந்த நேரம் எவ்வளவு கதறி இருப்பேன் கொஞ்சம் யோசிச்சி பண்ணுங்கன்னு, எதுவும் கேக்கல யார் பேச்சையும் கேக்கல இப்போ குத்துதே குடையுதேன்னு அல்லாடுனா கொடுத்த சத்தியத்தை மறப்பாளா உங்க தங்கச்சி" என்று கடுகடுக்க

"சும்மா இருடி நீயும் எறியுற கொள்ளியில எண்ணெய் ஊத்தாத" என்றிட்டதும்

"ஆமா அப்படியே என் பேச்சை கேட்டு ஏதாவது செஞ்சிட்டா தானே அதிசயம்... இன்னும் என்னென்ன பார்க்க போறேனோ எல்லாம் என் பொண்ணுக்கு வந்து விடியுது" என்று பேசிக்கொண்டே செல்ல ஏற்கனவே கோவத்தில் இருந்தவர் "என்னடி வாய் நீண்டுக்கிட்டே போகுது" என்று கன்னத்தில் ஒன்றை வைக்க

"அடிங்க, அடிச்சி கொள்ளுங்க ஆனா சத்தியமா இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்... என் பொண்ணு காலம் முழுக்க என் வீட்டுலேயே இருந்தாலும் பாரவாயில்லை உங்க தங்கச்சி வீட்டுக்கு மட்டும் மருமகளா இடிபட அனுப்ப மாட்டேன்". என்று கூறிவிட்டு சென்றதும் ஆண்கள் இருவரும் ஆளுக்கு ஒரு யோசனையில் இருந்தனர்.

…..

கால சக்கரம் யாருக்கும் காத்திராமல் சூழல நாட்களும் மணிதுளிகளைப்போல கரைந்துக்கொண்டு இருந்தது இதற்கிடையில் தேவாவின் தேர்வும் நடைபெற மனதினை ஒருமுகப்படுத்தி பாடத்தில் கவனத்தை செலுத்தி இருந்தாள்.

தில்லையின் வீட்டில் இருந்த அமுதா கொஞ்சம் கொஞ்சமாய் தன் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள். தாயின் மறைவிற்கு பின் சற்று நேரம் கூட ஓய்வை எடுத்துக்கொள்ளாமல் வீட்டு வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்து கொண்டு இருந்தவளை பார்த்த தில்லையின் மனது வருத்தம் கொண்டது

"இப்படி வீட்டையே சுத்தி சுத்தி வர்ற எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்ற இதை செய்யதான் ஆளுங்க கிடக்காங்களே நீ ஓய்வெடு ஆத்தா" என்று கரிசனமாய் பேத்தியிடம் கூறிட,

"இருக்கட்டும் அம்மத்தா... நான் செய்ற வேலைதானே, நா எதுவும் பெரிசா செய்றா மாதிரி தெரியல ஏதோ என்னால முடிஞ்சது சாப்பிடுற சாப்பாட்டுக்காவது உழைக்க வேண்டாமா சும்மா உட்கார்ந்து சாப்பிட மனசு ஒப்பல அம்மத்தா" என்றவளை முகம் நிமிர்த்தி பார்த்த தில்லை

"என்ன தாயீ இப்படி ஒரு வார்த்தைய சொல்லிட்ட நீ என் பேத்தி இது உன் தாத்தன் வீடு உனக்கு உரிமை இருக்குடி நீ உட்கார்ந்து சாப்பிடுறதுல ஒன்னும் குறைஞ்சி போயிடாது என்று கண்டிப்பு பாதியும் பரிவு மீதியுமாய் கலந்து கூறியவர்

"வீட்டுக்குள்ளையே கிடந்தா இப்படி தான் கண்டதையும் நினைக்க தோனும்... நீ என் ரத்தம் டி ... யாரோ போல பேசாத" என்றவர் "நீ செய்துகிட்டு இருந்த பள்ளிகூட வேலைக்கு கூட போறதா இருந்தா போ மா... உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.ஆனா நீ உழைச்சி தான் சாப்பிடனும்னு இல்ல தா உன் திருப்திக்காக தான் இது எல்லாம்" என்று கூறிட

மாடி அறையில் இருந்து இறங்கி வந்தவனுக்கு தில்லையின் பேச்சு துல்லியமாய் காதில் விழ "யார் எங்க வேலைக்கு போகபோறா அப்படி என்ன கஷ்டம் வந்தது" என்றபடி வங்து நின்றான் விசாகன்

"அமுதா தான் ராசா போக போறா…. கஷ்டம்னு இல்லையா வீட்டுக்குள்ளையே கிடக்கால, அதான் அவ மனமாறுதலுக்காக பள்ளிக்கூட வேலைய பத்தி சொல்லிட்டு இருந்தேன்" என்றிட

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அப்படி பொழுது போகலன்னா சொல்ல சொல்லு மில்லு கணக்கை கொடுக்குறேன், வீட்டுல இருந்தபடி பார்க்க சொல்லு... அதுவும் பிடிக்கலன்னா மில்லுல வேலை எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு வர சொல்லு, சுந்தரன் இருக்கான் அங்க என்ன வசதி வேணுமோ செய்து கொடுப்பான்… இல்லன்னா நம்ம ஃபேக்டரி தொடங்குறோம் அங்க வந்து பாக்க சொல்லு அப்பத்தா வேற எங்கேயும் போக வேண்டாம்" என்றவன் வெளியே செல்ல முனைய வக்கீலிடம் இருந்து போன் வந்தது

அலமேலுவின் மரணத்திற்கு ரத்தினம் மீது வழக்கு பதிவு செய்து இருக்க அமுதாவை ஒரு முறை அலுவகத்திற்கு அழைத்து வருமாறு கூறிட அவளை தில்லையிடம் கூறி கிளம்ப சொல்லியவன் வழக்கமாக தான் செல்லும் ராயல் என்பில்டை விடுத்து அமுதாவை அழைத்து செல்ல மிகவும் அரிதாக அவன் பயன்படுத்தும் காரை எடுத்தான்.

தேர்வுகள் தொடங்கி விட இரு நாட்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. மூன்றாம் நாள் மதியம் தேர்வை முடித்துவிட்டு கல்லூரி பஸ்ஸிற்கு நடந்து சென்றுக்கொண்டு இருக்க வக்கீல் அலுவலகம் முன்பு காரை நிறுத்திய விசாகன் அமுதாவை அழைத்துக்கொண்டு செல்வதை பார்த்துவிட்டவள் அவனுடன் செல்லும் பெண்ணை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள்.

'யார் இவள் அதுவும் விசாகனுடன் காரில் வந்து இறங்கும் அளவிற்கு நெருக்கமாக… இதுவரை எந்த ஒரு பெண்ணுடனும் பார்த்திடாதவள் அமுதாவுடன் பார்க்கவும் மனம் பலவாறாக சிந்தித்தது... இவளை மனசுல வைச்சிக்கிட்டு தான் என்னை வேண்டாம் வேண்டான்னு சொன்னாரா... இவளை தான் கட்டிக்க போறாரா…" என்ற எண்ணம் மனதில் எழ அவனை நேரடியாக கேட்டிட வேண்டும் என்று மனம் கூக்குரல் கொடுக்க அவனை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தவள் குறுக்கே என்ன வாகனம் வருகிறது என்று கூட கருத்தில் கொள்ளாமல் சாலையை கடக்க போக பைக்கில் அடிபட இருந்தவளை இழுத்து நிறுத்திய மேகலா "என்னடி பைத்தியகாரி மாதிரி பண்ற... போறவன் எப்படி திட்டிட்டு போறான் பாரு கண்ணு எங்கடி வச்சிக்கிட்டு நடக்குற?" என்று கடிந்துக்கொள்ள

அப்போதுதான் சுயத்தை அடைந்தாள் தேவா, 'சே கொஞ்ச நேரத்துல எண்ண வேலை செய்ய இருந்தேன்… என்னையும் என் காதலையும் தப்பா பேசி காயப்படுத்திவன் கிட்டயே போய் என் காதலுக்கு நியாயம் கேக்க இருந்தேனே' என்று தன்னைதானே கடிந்துக்கொண்டவள் மேகலாவிடம் கூறினாள் தனக்காக வருத்தப்படுவாள் என்று அவளிடம் அதை மறைத்தவள் "ஏதோ நியாபகத்துல போயிட்டேன்... சரி நீ வா போலாம் எனக்கு தலை வலிக்குது ஒரு மாதிரியா இருக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகனும்" என்று ஏதோ ஒரு காரணத்தை கூறியவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

மனதில் ஓரத்தில் மட்டும் அவள் கண்ட விஷயம் அறித்துக்கொண்டே இருந்தது. இதை யாரிடம் கேட்பது என்ற கேள்வி மூளையை குடைய எதிலும் மனதினை செலுத்த முடியவில்லை படிக்கலாம் என்று புத்தகத்தை திறந்து வைத்தாலும் யார் அவள் திடீர்னு ஒரு பொண்ணுக்கூட வந்து இறங்குறாரு இதுவரை யாரையும் அவன் கூட அழைச்சிட்டு வந்தது இல்லையே என்று மனதில் ஓடிக்கொண்டு இருக்க இருநாட்களில் மிகவும் களைத்து விட்டாள் தேவா

சரி அவனிடமே கேட்கலாம் என்றால் அவன் கூறிய வார்த்தைகள் அதற்கும் இடம் கொடுக்கவில்லை இதற்கு ஒரே தீர்வு சுந்தரனை தனியாக சந்தித்து பேசுவது என்று முடிவை எடுக்க இவன் தான் அவனை தனியே விடாமல் ஒட்டுப்புல் போல ஒட்டிக்கொண்டு திரிகிறானே பின் எப்படி பேசுவது என்று யோசித்தவள் வெகுநாட்களுக்கு பிறகு அண்ணன் வாங்கி கொடுத்த அலைபேசியை இயக்கினாள்.

அவன் மேல் உள்ள கோவத்தில் அதை பயன்படுத்தாமல் வைத்திருக்க சுந்தரனிடம் பேசவேண்டும் என்று எடுத்தது இருந்தாள் அன்று ஞாயிற்று கிழமையாக இருக்கவும் வீட்டில் இருந்தவள் காலைவேலையே அவனை அழைத்தாள்.

அவனுக்கோ இவர்கள் இருவருடைய வாக்குவாதமோ இல்லை தேவாவை விசாகன் அடித்ததோ திட்டி அனுப்பியதோ எதுவும் தெரியாது தொழிற்சாலை கட்டுமான பணி தீவிரமாக நடைபெறுவதாலும் விசாகனே "இதுல தலையிடாத சுந்தரா" என்று கூறிய பின்னும் இதனை பற்றி பேசி தேவாவின் மனதில் மேலும் ஆசையை வளர்க்க வேண்டாம் என்ற எண்ணத்தில் பேசுவதை குறைத்து இருந்தான் சுந்தரன். அதனாலையே இந்த விஷயங்கள் அவன் செவிகளை எட்டவில்லை விசாகனும் கூறவில்லை திடீரென தேவாவிடம் இருந்து அழைப்பு வரவும் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன் அவன் திட்டினாலும் பரவாயில்லை பேசுவோம் என்று பேசியை உயிர்பித்தவன் "சொல்லு தேவா ரொம்ப நாள் ஆச்சு இந்த அண்ணனையெல்லாம் மறந்துட்ட போல" என்று வேடிக்கையாக கேட்க

"நான் ஒன்னும் மறக்கல நீங்க தான் இப்படி ஒரு தங்கச்சி இருக்கான்றதையே மறந்துட்டு சுத்திக்கிட்டு இருக்கிங்க" என்று சிடுசிடுத்தாள் 'இவர் கூட நம்மல எதுவும் கேட்கலியே' என்ற ஆதங்கத்தில்

"உன்னை மறப்பேனா தேவாமா கொஞ்சம் வேலையில பிஸியாகிட்டேன் மத்தபடி பேசக்கூடாதுன்னு இல்லலையே மா" என்று சமாதனகொடியை பறக்க விட

அதுவரை சுந்தரனிடம் எப்படி கேட்பது என்று வார்த்தைகளை தேடியவள் ம்கூம் என்று தொண்டையை செருமியபடி "நான் ஒன்னு கேட்பேன் உண்மையை மட்டும் தான சொல்லனும்" என்று பீடிகையுடன் ஆரம்பிக்க அவள் கூற்றில் என்னகேட்டு விடபோகிறாள் என்று இருந்ததால்

"நீ கேளு தேவாம்மா எனக்கு தெரிஞ்ச உண்மையை கண்டிப்பா சொல்றேன்" என்றான்.

"அது வந்து உங்க பிரெண்டு.. பிரெண்டு லைப்ல... இன்னொரு பொண்ணு இருக்காளா? அவளை இவர் லவ் பண்றாரா?" என்றாள் சட்டென

அந்த செய்தியை வாங்கியவனின் மனமோ அதிர்சசிக்குள்ளாகி பேச்சிழந்து இருந்தான் 'இது எப்படி தேவாவிற்கு தெரிந்தது?' என்று அவனுடைய அமைதியை உணர்ந்தவள்

"அண்ணா அண்ணா இருக்கியா? என்ன எதுவும் சொல்லமாட்டறிங்க? உண்மை தெரிஞ்சிடுச்சேன்னா… பரவாயில்ல சும்மா சொல்லுங்க இதுக்கு மேல அதிர்ச்சி என்னை ஒன்னும் செய்யாது?" என்றதும்

தன் எண்ணத்தில் இருந்து வெளியே வந்தவன் 'அது உண்மை தானே அவளை நினைத்துதானே இவளை வேண்டாம் என்று தள்ளி வைக்கிறான்... சரி இவ்வளவு தெரிந்துவிட்டது, இதற்கு மேல் ஏன் மறைத்து பேச வேண்டும் தெரியாமல் நினைத்து வலியை சுமப்பதை விட அனைத்தும் தெரிந்து விடட்டுமே' என்று நினைத்து சற்று நேர மௌனத்திற்கு பிறகு

"ஆமா தேவா மா அவன் காதலித்தான்…" என்று சொல்லியதை மட்டும் தான் அவள் கேட்டு இருந்தாள் "அவன் வாழ்க்கையிலும் ஒரு பொண்ணு இருந்தா" என்ற கடைசி வாக்கியத்தை முடிக்கும் முன்னரே அலைபேசியை துண்டித்து விட்டாள் தேவா. ஒருவேளை அது இறந்த காலம் என்று தெரிந்து இருந்தாள் பல கசப்பான சம்பவங்கள் நிகழாமல் இருந்து இருக்கும். சுந்தரனின் ஆம் என்ற ஒற்றை சொல்லே அவளை நிலைகுலைய செய்ய போதுமானதாக இருக்க அடுத்த வார்த்தைகளை கேட்கும் திராணியற்று அலைபேசியை அணைத்துவிட்டு அழுதபடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN