பூ 30

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

பூ 30


"என்ன தான் இருந்தாலும் அவ நம்ம பொண்ணு இல்லன்னு ஆகிடுமா… தனிப்பட்ட முறையில உங்களுக்கு பிடிச்ச பையன் தானே!! நீங்களே எத்தனையோ முறை அந்த தம்பிய பத்தி பெருமையா தானே பேசி இருக்கிங்க!!" என்று கணவரின் கோபத்தை குறைக்க முயன்றார் மரகதம்.


"நான் அந்த புள்ளைய ஒன்னும் சொல்லலியே... உன் பொண்ணை தான் தப்புன்னு சொன்னேன்.. அவ செய்த காரியம் தப்பு காதல் கீதல்னு கண்ட கருமத்தையும் பண்ணி ஊர் ஜனங்க முன்னாடி தலைய குனிய வைச்சிட்டு போயிட்டா…" என்று பேசியவரை என்ன செய்து சமாதனப்படுத்துவது என்று தெரியாமல் நின்றார் மரகதம்.


"அண்ணா அதுக்குன்னு பெத்த பொண்ணை யாரும் இல்லாம அப்படியேவா தனியா அனுப்பி வைப்பிங்க" என்று துரைலிங்கம் ஆதங்கம் கொண்டு கேட்டதும்.


துரை நீ ஒன்னு மறந்துட்டியா…. அதை சொல்லி தானே இந்த கல்யாணத்துக்கே சரின்னு சொன்னேன். இனி அவ என் பொண்ணு கிடையாது... அவளுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த ஒட்டும் இல்ல... உறவும் இல்ல… இதுக்கு சம்மதம் சொல்லிதானே கல்யாணம் நடந்தது" என்றதும் மரகதம் முந்தானையால் வாயை பொத்தியபடி அழுதார்.


மாமா அதுக்குன்னு அனாதை மாதிரி யாரும் இல்லாம அவ பொறந்த வீட்டை விட்டு போறது கொடுமை மாமா... எப்படி அழுதுகிட்டே போன தெரியுமா" என்ற அருண் "நீங்க கோவத்துல பேசுறிங்க ஆனா பொறுமையா யோசிங்க மாமா" என்றான்.


"சொல்லுவ டா இன்னும் பட்டு உனக்கு புத்தி வரல… உன்னை ஏமாத்திட்டு போனவளுக்கு பரிந்து பேசுற" என்று பேசியவரை தீப்பார்வை பார்த்த அழகன் பெருமாளின் பார்வையில் அடங்கி போன சாந்தா வாயை இறுக்க மூடி அதன் மேல் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.


"அண்ணா அருண் சொல்றது கூட ஒரு விதத்துல சரிதானே இப்போ அந்த வீட்டுல உங்க பொண்ணுக்கு நீங்க கொடுக்குற சீர் தானே கௌரவம்... வெறும் கையோட யாரும் இல்லாதவ மாதிரி போய் இருக்கா… என்று கூறிய துரைலிங்கத்தின் கருத்து ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்க "அவளுக்கு சேர வேண்டியது அவ துணி மணி நகை எல்லாம் வண்டில ஏத்தி கொண்டு போய் இறக்கிடு" என்று வீட்டு வேலையாளிடம் கூறினார் சௌந்தரலிங்கம்.


"மாமா உங்களுக்கு வேணா வேலையாள்கிட்ட கொடுத்து அனுப்பறது சரியா இருக்கலாம் ஆனா எனக்கு தப்பா படுது...வேற யாரும் பெரியவங்க போகலன்னா பரவாயில்லை அவளுக்கு சொந்தம்ன்ற முறையில நான் போறேன். என்ற அருண் தேவாவின் புகுந்த வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.


சிலுசிலுவென உடலை தழுவி செல்லும் மாமர காற்றின் இதம் மனதையும் லேசாக்கி இருந்தது. எப்போதும் அழுத்தம் நிறைந்த உதடுகளில் இன்று மென்மை தாக்கியதோ என சந்தேகம் கொள்ளும்படியாக லேசாய் உறைந்த புன்னகையுமாயும், கடந்த 20 நிமிடங்களாய் ஒரு வார்த்தையை கூட உதிர்க்காமல் கைகளை தலைக்கு பின்னால் வைத்துப்படுத்து வானத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தவனை வியப்பும் ஆராய்ச்சியும் கலந்த பார்வை பார்த்திருந்தான் சுந்தரன்.


தோப்பு வீட்டிற்கு வந்து 20 நிமிடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. அவனுக்கு நேர் எதிர் நாற்காலியில் அமர்ந்து இருந்த சுந்தரனுக்கு இருக்கும் பொறுமை காற்றில் கரைந்து விட "அங்க என்னடா தெரியுது?.... வந்ததுல இருந்து மேலேயே பாக்குற?" என்றான் கடுப்புடன்.


ஏதோ கனவில் இருந்து முழித்தவன் போலவே திடுக்கிட்டு பார்த்து வைத்தவன் "என்னடா என்ன கேட்ட?" என்றபடி எழுந்து அமர்ந்தான் விசாகன்.


அவனை கூர்ப்பார்வை பார்த்த சுந்தரன் சலிப்புடன் "ஸ்ப்பா முடியல என்னடா நடந்தது? வந்ததுல இருந்து அமைதியா இருக்க ஒன்னும் புரியல தேவாவுக்கு இன்னைக்கு அருண் கூட கல்யாணம். ஆனா உன் கூட எப்படி நடந்தது" என்றவனது குரலில் படபடப்பும் குழப்பமும் நிறைந்து இருந்தது.


நண்பனின் பாவனையை பார்த்த விசாகன் "என்கூட கல்யாணம் நடந்ததுக்கு ரொம்ப வருத்தப்படுற மாதிரி இருக்கு" என்றான் சற்றே கேலியான குரலில்.


விசாகனின் பதில் கேள்வில் அசராத சுந்தரன் "தேவாவை தான் உனக்கு பிடிக்காதே மாப்ள அப்புறம் நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா என்ன நினைச்சிக்குறது. அவளை வேண்டாம் வேண்டாம்னு சொன்னவன் திடீர்னு பண்ணிட்டு வந்து நிக்குற எங்களுக்கு ஷாக்கா இருக்காத" என்றான் குற்றம் சாட்டும் குரலில்.


"ம்… அப்புறம் சொல்லி முடிடா" என்று கதை கேட்பது போல் சாவகாசமாக தலையை இடவலமாக ஆட்டி சோம்பல் முறித்து கைகளை பின்னால் பரப்பி வைத்து சாய்ந்து அமர்ந்தவனின் தோரணை அவனுக்கு புதிதாக இருந்தது…


'ஆளே ஒரு மார்க்கமா இருக்கான் தேவா காத்து அடிச்சிடுச்சோ எது எப்படியோ கல்யாணம் நடந்துடுச்சி என்ன நடந்ததுன்னு சொல்லாம கடுப்படிக்கிறான்' என்று நினைத்தவன் "எல்லாம் சொல்லிட்டேன் முதல்ல நீ நடந்தத சொல்லு" என்றான் கறாரான குரலில்.


அதே நேரம் தில்லை அனுப்பியதும் அறைக்கு தேவாவை அழைத்து வந்த அமுதா "இது அம்மத்தா அறைங்க.. ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க நான் இங்க தான் இருப்பேன்". என்றாள் புன்னகை முகமாக.


ஒவ்வொரு முறையும் அமுதாவை காணும் பொழுது எல்லாம் அவளின் வாழ்க்கையை தட்டி பறித்தது போன்ற குற்ற உணர்வில் இருந்தவளுக்கு இவ்வாறு அமுதா அக்கறையாய் கூறியதும் கண்கள் கலங்கிவிட்டது.


தேவாவின் விழியில் நீரைக்காணவும் "என்னங்க ஏன் கண்கலங்குறிங்க வீட்டு ஞாபகம் வந்துடுச்சா... எல்லாம் சரியா போயிடும் கவலைபடாதிங்க.. மாமா உங்க கூடவே இருப்பார்" என்று கூறியவள் ஆதரவாய் அவளின் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்து அமைதிப்படுத்த முயன்றாள்.


சீக்கிரமே தன்னை சமாளித்துக்கொண்ட தேவா இறுக்க கண்களை மூடி திறந்தவள் ம் என்ற தலையாட்டலோடு "என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க" என்று கூறிட்டதும் "சரி தேவா நீங்க ரெஸ்ட் எடுக்க சாப்பாடு ரெடியானதும் வந்து கூப்பிடுறேன்.. உங்க கல்யாணத்துக்கு இன்னைக்கு ஊருக்கே கறிவிருந்து போட்டு அசத்துறாங்க அம்மத்தா" என்று உற்சாகமாக கூறியவள் வேலையை பார்க்க நகர்ந்துவிட்டாள்.


கட்டிலின் மேல் வந்து அமர்ந்தவளுக்கு காலை நடந்தது அனைத்தும் கனவு போல இருந்தது…. தன் கைகளால் தாலியை தொட்டு அது உண்மை தான் என்று உணர்ந்தவளுக்கு 'இதுக்கு நீ சம்மதிச்சி இருக்கவே கூடாது தேவா தெரிஞ்சே இந்த தப்பை பண்ணி இருக்க ஒரு பொண்ணோட வாழ்க்கைய பறிச்சி நீ அனுபவிச்சிக்கிட்டு இருக்க' என்று மனதில் ஊசியாய் ஒரு குரல் ஒலித்தது.


சாய்ந்து அமர்ந்து இருந்தவளின் மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் சுரந்தபடி இருக்க வீட்டில் இருந்து வெளியேறிய பின் அவனை கண்ட காட்சிகள் மண கன் முன் ஓடியது.


விடிந்தால் பெண்ணை கட்டிக்கொடுக்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்த பெற்றவர்களுக்கும், தன்னை கட்டிக்கொள்ள போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அருணுக்கும் பெரிய துரோகத்தை செய்யும் குற்றவுணர்வுடன் இருந்தவள் கடிதத்தை எழுதி வைத்த கையுடன் வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள். நட்டநடு ராத்திரி இருட்டு என்றாலே பயந்து நடுங்கியவள் அதை உணர்ந்து கொள்ளாமலேயே நடந்துச்சென்றாள்… ஊரை தாண்டி இரண்டு மணி நேரமாக நடந்துக் கொண்டு இருக்கிறாள்… ஊரை கடந்து விட்டதால் வீடுகள் இல்லை சுற்றிலும் வயல்வெளிகள் தான் அதற்கு அடுத்து அடுத்த ஊரை இணைக்கும் சாலையாக இருந்தது உயிரை மாய்த்து கொள்ள எண்ணம் வரவில்லை... அவனிடமும் கெஞ்சி வாழ்க்கை பிச்சை கேட்க மனம் ஒப்பவில்லை… அதனால் ஏதாவது வெளியூர் பேருந்துகளில் ஏறி எங்காவது சென்று விடலாம் என்ற யோசனையில் வந்தவளுக்கு அதிக மன அழுத்தம் மற்றும் கோவம் வெறுப்பு என்று அனைத்தும் வாட்ட ஒரு கட்டத்தில் உடலும் மனமும் சோர்ந்து போக கால்கள் தள்ளாடியது...


போகும் வழியில் ஏதாவது வண்டி தென்படுகிறதா என்று பார்த்தபடி வந்தவள் நடக்க முடியாமல் போக வழியில் தென்பட்ட கோவிலில் அமர்ந்தவளுக்கு அங்கே ஏதோ பேச்சு சத்தம் கேட்டது.


டேய் இருடா சத்தம் கேட்க போகுது மெதுவா சத்தம் வராம இந்த ஈர துணிய சுத்தி அப்புறம் உடை என்றது ஒரு குரல்.


சரி அண்ணே என்றவன் தடப் தடப் என்று இரண்டு அடி அடுக்கும்போதே கோவிலில் உண்டியலை திருட வந்து இருக்கிறார்கள் என்று புரிந்து போனது இந்நேரத்தில் அங்கிருப்பது நல்லதாக படவில்லை அவளுக்கு மெல்ல இடத்தை விட்டு எழுந்தவள் அந்த கும்மிருட்டில் மெதுவாய் அடி வைத்து நடந்து வர இருட்டில் கல்லின் மேல் மோதிக்கொண்டவள் ஆ.. அம்மா என்று கீழே விழுந்தாள்.


திருட வந்தவர்களுக்கு பெண் குரல் கேட்டிட "டேய் யாரோ இருக்காங்கடா" என்றவன் கையில் இருந்த டார்ச்சை கோவிலின் வெளிப்புறம் அடித்தான்.


சாப்த நாடியும் பயத்தில் நடுங்கியது அவளுக்கு, வாய் மூடி மூச்சை இழுத்து பிடித்தவள் எழுந்து ஓட முயற்சிக்கவும் "ஏய் அவ ஒடுறாடா பிடி அவளை" என்று மற்றொரு குரல் அவளை துரத்தியது… பார்பதற்கு இளவயது போல இருந்தனர்… மிஞ்சி மிஞ்சி போனால் இருபது வயது தாண்டி இருக்காது…


உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்திருந்தாள் தேவா.


சுந்தரனின் கேள்வியில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து இருந்தவன் "இன்னைக்கு விடிய காலையில ஊருக்கு வரும்போதுதான் அவளை பார்த்தேன்" என்றான்.


"அப்ப நேத்து நைட்டு நீ வீட்ல இல்"இல்ல" என்று இடவலமாக தலை ஆட்டியவன் "நேத்து நைட்டு ஊருக்கு வரும்போதுதான் அவளை பார்த்தேன்…. அதுவும் நல்லவிதாமா இல்ல இரெண்டு திருட்டு பயலுக துரத்திட்டு வரும்போது பார்த்தேன் ஏற்கனவே நம்ம ஊர்ல கோவில் உண்டியலை உடைச்சவனுங்க தான் என்னை பார்த்ததும் பயந்து ஓடிட்டானுங்க" என்றான் நிதானமாக


"அப்படியா" என்று அதிர்ந்தவன் "தேவா தேவாக்கு ஒன்னும் ஆகலள்ள என்றான் பதட்டமாக


"ஒன்னும் ஆகல அவனுங்க துரத்திட்டு வந்த பயத்துல தான் இவ மயக்கம் போட்டு விழுந்துட்டா" என்றான் அவளுக்கு ஒன்றும் இல்லை என்று சுந்தரனுக்கு விளக்கும் நோக்கில் கூற அப்பாடா என்று நெஞ்சில் கை வைத்து சற்று இளைப்பாறிய சுந்தரனின் நெஞ்சை மேலும் திடுக்கிட வைக்க "அதுக்கு அப்புறம் தான் மாப்ள தலையே எனக்கு சுத்திடுச்சி" என்றான் விசாகன் அயர்ச்ச்சியாக


"என்னடா மாப்ள? என்ன ஆச்சு?"


"வந்தவ வீட்டுல என்னை தேடாதிங்கன்னு லெட்டர் எழுதி வைச்சிட்டு வந்து இருக்கா அதுலயும் திரும்பவே மாட்டேன்னு எழுதி வைச்சிருக்கா வந்த கோவத்துக்கு செவுல மேலேயே இரெண்டு அறை விட்டா என்னன்னு இருந்தது…"


"அப்புறம் எப்படி தான் அழைச்சிட்டு வந்த" என்று சந்தேகத்தை கேட்ட சுந்தரனுக்கு அங்கு நடந்ததை விளக்கினான்.


"தேவசேனா கிளம்பு"


"எங்க?"


பற்களை கடித்தபடி "வீட்டுக்குதான்" என்றான்..


"எதுக்கு"


"இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி"


"என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி தான் இருக்கும் அப்புறம் என் கேள்வி மட்டும் எப்படி தெரியும் உங்களுக்கு நீங்க கிளம்புங்க"


"சொல்றதை கேளு தேவா கிளும்பு" என்றான் பொறுமையாக


"வரமுடியாது... வந்திங்களா.. பாத்திங்களா.. உங்க வேலைய பாத்துகிட்டு கிளம்புங்க... எங்க போகனும் போக கூடாதுன்னு நான் முடிவு எடுத்துக்குறேன்" என்று விட்டேத்தியாக கூறியவள் மறுபடி அந்த கோவிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.


"தேவா நீ என்ன பண்ணிட்டு வந்து இருக்கன்னு உனக்கு தெரியல உடனே வா வீட்டுக்கு போகலாம்" உன்னை காணும்னு எல்லாரும் பயப்புடுவாங்க என்றான் சற்றே அதட்டலாக


"நான் வரல... நான் வரல.... நான் வரல"


"இப்ப நீ வர வந்துதான் ஆகனும்" என்று விடாப்பிடியாக கூறியவன் அவளின் கையை பிடித்து அழைத்து செல்ல


அவனிடம் இருந்து கையை உருவியவள் "எந்த உரிமையில என் கைய பிடிக்கிறிங்க அதான் வேண்டாம் உங்களுக்கு பிடிக்கலன்னு சொல்லியாச்சே... என் மேல என்ன கரிசனம் வேண்டி கிடக்கு.. நான் எங்கேயோ போறேன்.இல்ல எதுலயோ விழுந்து சாகுறேன்". என்று முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றவளை போக விடாமல் தடுத்து நிறுத்திய விசாகன் ஓங்கி ஒரு அறை அறைந்தான்..


மீண்டும் மீண்டும் அடம் செய்தவளை அவள் திமிற திமிற பைக் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தவன் "ஒன்னு போட்டேன்னா... உட்காரு…" என்று அவளை அதட்டி உருட்டி பைக்கில் அமர வைத்தவன் நேரே அவளின் வீட்டின் முன்பு தான் இறக்கினான்.


"இவ்வளவு நடந்து இருக்கா?" என்று தன் முகத்தில் வியப்பை கூட்டி இருந்த சுந்தரனிடம் மேலும் தேவாவின் வீட்டில் நடந்தவைகளை கூறி இருந்தான்.


"அது சரி மாப்ள அந்நேரத்துல உனக்கு என்ன அங்க வேலை இருந்தது? கரெக்டா நீ எப்படி அங்க வந்த?" என்றான் சந்தேகம் கொண்டு


"ஏய் என்னடா உன் பிரச்சினை நான் அவளை கல்யாணம் பண்ணதா? இல்ல அங்க போனதா? வேலை இருந்துச்சின்னு சொல்றேன்ல இப்போ என்னங்குற?" என்றான் பேச்சை மழுப்பியவனாக


"இல்லையே எலி ஏன் அம்மனமா ஓடுதுன்னு தெரியலையே!! நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே... நாம ஒன்னு கேட்டா இவன் ஒன்னு பேசறான்... கேழ்வரகுல நெய் வடியுதுன்னா கேக்குறவனுக்கு மதி எங்க போச்சி என்ற பழமொழிய எனக்கே அடிச்சி விட்டாப்போல இருக்கு... கல்யாணம் பண்ணது பிடிக்கலையான்னு கேக்குறான்.. நாம வேலைய பத்தி தானே கேட்டோம் சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுறான்.. சம்திங் ராங்' என்ற முடிவிற்கு வந்த சுந்தரன் "சரி மாப்ள நீ ஏதோ கோல்மால் பண்ற சரி விடு எது எப்படியோ இப்போ தான் என் மனசுக்கு சந்தோஷமா இருக்கு…." என்று கூறினான் சுந்தரன்.


"என்னவோ நெனச்சிக்கிட்டு போ" என்று விட்ட விசாகன் சற்று நேரம் ஆசுவசமாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவன். எனக்கு கொஞ்சம் வெளி வேலை இருக்கு நான் முடிச்சிட்டு வீட்டுக்கு போறேன். நீயும் கிளம்பு மாப்ள நாளைக்கு வந்து வேலையை பாரு என்று கூறியவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்…


வெளி வேலையே முடித்துக்கொண்ட விசாகம் ஊர் திரும்ப நேரம் அந்திமாலையை தொட்டுக்கொண்டு இருந்தது... தில்லையின் அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க அழைப்பை ஏற்று காதில் பொறுத்திய விசாகன் கிளம்பிட்டேன் அப்பத்தா வந்துட்டு தான் இருக்கேன்" என்று போனை அணைத்து பாக்கெட்டில் வைத்தவன் வீட்டிற்கு சென்றான்…


வீட்டிற்கு முன்னால் பைக்கை நிறுத்திய விசாகன் சீர் சாமன்களோடு நின்ற வண்டியை பார்த்தபடியே உள்ளே நுழைந்தான்.
அவனை பார்த்ததும் இருக்கையில் அருணோடு உரையாடிக்கொண்டு இருந்த அப்பத்தா இதோ ராசாவே வந்துடுச்சி என்று அருணிடம் கூற அவனை கண்டதும் எழுந்து நின்றான் அருண்.


யோசனையோடே உள்ளே வந்தவன் அருணை கண்டதும் சம்பிரதாயமாக வணக்கம் வைத்து உட்காருங்க உட்காருங்க என்று கூறியவன் எதிரில் இருந்த பொன்னியிடம் சில பைகளை கொடுத்து அப்பத்தா அறையில் வைக்க சொன்னவன் அருண் அருகில் தானும் அமர்ந்தவன் குடிக்க ஏதாவது என்றான்.


"அதெல்லாம் ஆச்சிங்க" என்று கூறியவன் "கல்யாணம் தான் அவசரகதியில முடிஞ்சிடுச்சி ஆனா முறையா அவளுக்கு செய்யவேண்டியது எல்லாம் எங்க கடமை இல்லையா அதான் இதை மாமா உங்ககிட்ட கொடுத்துட்டு வர சொன்னாங்க" என்று சில பத்திரங்களை நீட்டியவன் "வெளியே இருக்கும் சீறும் தேவாக்கு சேர வேண்டியது தான்" என்றான்.


"இந்த அளவுக்கு நீங்க பெருந்தன்மையா வந்து பேசுறது ரொம்ப நிறைவா இருக்கு" என்ற விசாகன் அதை வாங்காமல் அமைதியாய் சுற்றும் முற்றும் திரும்பி தன் மனையாளை தேடினான். கதவின் ஓரத்தில் குனிந்த படி நின்றிருந்தவள் கண்ணில் பட்டதும் "தேவா" என்று அழைத்தான்.


அவன் ஒற்றை சொல் செவியை தாக்கிட நிமிர்ந்து பார்த்தவள் தயங்கியபடியே அவன் எதிரே வந்து நின்றாள். "அவர் கொண்டு வந்ததுல உன் புக்ஸ் மட்டும் எடுத்துக்க" என்று கூறியதும் அந்த இடத்தை விட்டு அகன்றவள் வெளியே நின்ற வண்டியில் இருந்து புத்தகத்தை எடுக்க சென்றாள்.


அவள் செல்வதை பார்த்த அருண் அவசரமாக "இல்ல எல்லாமே தேவாக்குதான் அவளுக்கு சொந்தமானதைதான் கொடுத்து விட்டு இருக்காங்க" என்றவனிடம் "இல்லங்க அது எனக்கு சரியா படலை இப்போ அவ என் மனைவி….அவளுக்கு வேண்டியதை என்னால செய்ய முடியும்.. அவ உறவே வேண்டான்னு சொல்லிட்டாங்க இந்த பொருள் மட்டும் எதுக்கு... அவ படிப்பு சம்மந்தமா இருக்குறதுனாலதான் அந்த புக்ஸ் கூட எடுக்க சரின்னு சொன்னேன் என்றவன் நீங்களாவது அவளை புரிஞ்சிக்கிட்டிங்க அதுவே போதும்" என்று கையெடுத்து கும்பிட்டவன் "அவ சார்பா அவ சொந்தமா நீங்க ஒருத்தராவது வந்திங்களே அதுவே சந்தோஷம் இருந்து விருந்து சாப்பிட்டுதான் போகனும்" என்று கூறினான்.


அப்போதுதான் உள்ளே நுழைந்தாள் தேவா அவனுடைய அழைப்பை ஏற்று அருணும் அவனுடன் சாப்பாட்டு அறைக்கு செல்வதை பார்த்தவள், கொண்டு வந்த பெட்டியோடு தில்லையின் அறையில் நுழைந்தாள்.


அருண் வந்ததும் அவளிடம் சாதரணமாக நலம் விசாரித்தான் கவலைபடாமல் இருக்க சொன்னான். தான் ஏமாற்றியது போல் ஒரு சதவீதம் கூட தன் மேல் கோபப்படாதது அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. இருந்தும் அவன் முகத்தை பார்க்கவே தயங்கியவள் கதவின் ஓரமே நின்று விட்டாள். விசாகனுடன் விருந்தை முடித்தவன் அவர்களிடம் கூறிக்கொண்டு கிளம்பிவிட்டான்.


இன்று பேரனுக்கு திருமணம் நடந்த சந்தோஷத்தில் ஊருக்கே கிடா வெட்டி விருந்தை வைத்து அசத்தி இருந்தார் தில்லை… இரவு நெருங்கி விட அவளையும் விசாகனையும் ஒன்றாக அமரவைத்து உணவை உண்ண வைத்தார்கள். அமுதா தான் பார்த்து பார்த்து பறிமாறிக்கொண்டு இருந்தாள். தில்லையோ இல்லை மற்றவர்களோ பறிமாறி இருந்தாள் சாப்பிட்டு இருப்பாளோ என்னவோ அமுதா வைக்கவும் தொண்டைகுழியில் உணவு சிக்கியது போல் உணவை உட்கொள்ளவே சிரமப்பட்டு போனாள். அவளுக்காவே மிகவும் மெதுவாக சாப்பிட்டான் விசாகன். அமர்ந்ததிலிருந்து அவளை கவனித்துக்கொண்டு தான் இருந்தான். பெயருக்கு சாப்பிட்டவள் போல் பசாங்கு செய்து இலையிலிருந்து எழுந்துக்கொள்ள அவளின் கையை இறுக்க பிடித்து அமர வைத்த விசாகன் சாப்பிடு என்று சற்று அதட்டி கூறவும் வேறு வழியின்றி அனைத்தையும் முழுங்கி விட்டே எழுந்தாள்.


தில்லை வீட்டின் உறவுப்பெண்கள் சிலரை அழைத்து தேவாவிற்கு அலங்காரம் செய்ய சொல்லி இருந்தார் அமுதா கல்யாணம் ஆகாத பெண் என்பதால் அவளை சென்று படுக்க சொல்லியவர் பெண்களிடம் தேவாவை விசாகனின் அறைக்கு அழைத்து செல்ல சொன்னார்.


விசாகனின் அறைக்கு செல்ல தயங்கியபடியே இருந்தவளை உச்சி முகர்ந்த தில்லை "என் ராசாத்தி எம்முட்டு அழகா இருக்க தங்கம்.. உன்னைய முதல் முதல்ல பார்த்தப்போவே என் மனசுல விழுந்த ஆசை கன்னு, அது நடக்குமோ நடக்காதோன்னு கொஞ்சம் கவலையா கூட இருந்துச்சி... நான் கும்பிட்ட சாமி என் வேண்டுதலை நிறவேத்திடுச்சி தாயி" என்றவர் "உன்னைய பாக்க அன்னைக்கு உன் ஊட்டுக்கு வந்தேனே நினைவிருக்கா? அப்போவே உனக்கு பொட்டு வைச்சி இந்த வீட்டு மருமகளா ஆக்கிடுச்சி அந்த சாமி "என்று நெகிழ்ந்து கூறியவர். "என் ராசா ஆயீ அப்பன் இல்லாதவன் தாயீ... இனி நீதான் அவனுக்கு எல்லாம் தாயீக்கு தாயீ தாரத்துக்கு தாரம்" என்று மொழிந்து அனுப்பி வைத்தார்.


கையில் இருந்த பால் சொம்பை கெட்டியாக பிடித்து பதட்டத்தை மறைத்து அறைக்குள் நுழைந்தவள் அவன் கட்டிலின் மேல் சாய்ந்து ஒய்யாரமாக காலை நீட்டி அமர்ந்து இருப்பதை பார்த்தாள். அறைமுழுவதும் பூ வாசம் மணத்தது… ஏனோ அவளுக்கு தான் சுகிக்கவில்லை அவனை நோக்கி அடியை போட்டவள் அவன் அருகில் சென்று நின்றாள். அறைக்குள் நுழைந்ததில் இருந்து அவளையே பார்த்துக்கெண்டு இருந்தவன் தேவா அருகில் வரவும் எழுந்து நின்றான் விசாகன்.


சன்ன கரையிட்ட வெண்நிற காஞ்சி பட்டு உடலை அலங்கரித்தது என்றால் தில்லை அணிவித்த வைர வளையல்கள் அவள் கரங்களில் மின்னி ஜொலித்தது, அவள் சங்கு கழுத்தை அலங்கரித்தது வைர அட்டிகையுடன் பொன்மஞ்சள் தாலி , அவள் அசைவுக்கு ஏற்ப காதோரத்தில் இருந்த கம்மல்கள் அவள் கன்னத்தை தொட்டு முத்தமிட்டு கொண்டு இருந்தது… கொலுசொலியோடு போட்டி போட்டுக்கொண்டு மெட்டி ஒலி எழுப்ப தங்க சிலைப்போல் காட்சி தந்த தேவசேனாவின் . மனம் வெம்பிக்கொண்டு இருந்தது.. கையில் கொடுக்க வந்த பாலை டேபிளின் மேல் வைத்தவள் இரு கைகளையும் கோர்த்து தலையை குனிந்து நின்றாள். அவள் நாணத்தால் நிற்பதாக எண்ணியவன் தேவா என்று அவளின் தோளினை தொட


அவன் கைகளை விலக்கிவிட்டு எட்டி நின்றவள் "எப்படி கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம என்னை தொடுறிங்க" என்றாள் கோவமாக


"ஏய் நீ என் பொண்டாட்டி டி உன்னை தொட நான் ஏன் உறுத்தலா நினைக்கனும்" என்றான் சற்றே கேலியான குரலில்.


அவனின் கேலி குரல் மேலும் ஆத்திரத்தை தூண்ட "ஒரு பொண்ணை காதலிச்சிட்டு இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டும் போதே இல்லாத. உறுத்தல் இப்போவா உறுத்த போகுது" என்றாள் அதே எல்லளான குரலில்.


"தேவா" என்று குரலை உயர்த்தியவனை நேர்க்கொண்டு பார்த்தவள் "மெல்ல... மெல்ல... அறையில் நீங்களும் நானும் தானே இருக்கோம்.. நான் பேசறது உங்களுக்கு கேக்குதா? நீங்க பேசுறுது எனக்கு கேக்குது.. அப்புறம் எதுக்கு ஊருக்கே கேக்குறா மாதிரி கத்துறிங்க" என்றாள் நிறுத்தி நிதானமாக


"மனசால ஒருத்தி கூட வாழ்ந்துகிட்டு நிஜத்துல ஒருத்தி கூட வாழ உங்களால முடியும் ஆனா.இந்த ரெட்டை வாழ்க்கை வாழ என்னால முடியாது" என்றதும் பழைய காதல் தெரிந்து விட்டதால்தான் இந்த துள்ளல் துள்ளுகிறாள் உண்மையை விளக்கி கூறினால் தெளிந்து விடுவாள் என்று நினைத்தவன் "தேவா" என்று மென்மையாக அழைத்தான்.


அவன் குரல் கேட்கவும் இருகாதுகளையும் பொத்தியவள் தயவுசெய்து "எதையும் சொல்லாதிங்க அதை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்ல" என்றவள் ஒரு பெட்சீட்டை தரையில் விரித்து அப்படியே படுத்துக்கொண்டாள்.


அவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் 'எல்லாத்துலேயும் அவசரம் சொல்றது கேட்க ஒரு பொறுமை வேணும் அது இப்போ உன் கிட்ட இல்ல' என்று தனக்குள்ளே நினைத்தவன் கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN