பூ 45

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

"இது நல்லாவே இல்ல... கலர் ஒருமாதிரி அடிக்குது…."


"அப்ப இது எடுத்துக்க... உன் நிறத்துக்கு எடுப்பா இருக்கும்".


"அய்யே இது அதை விட இது மோசம்…. எவ்வளவு ஜரிகை ப்பபா….."


"அப்போ இது?..." என்று மேகலா ஒரு புடவை காட்டி கேட்கவும்,


"சே.… என்னடி ஒரே கசகசன்னு பூவா இருக்கு"... என்று ஒவ்வொரு புடவைக்கும் ஒவ்வொன்றை கூறி வேண்டாம் என்று தட்டிக்கழித்தாள் தேவா.


"ஏய் இது நல்லா இல்லையா? நீ செமத்தியா வாங்கத்தான் போற... எதையாவது எடேன் புள்ள... வந்த ஒரு மணி நேத்துல நானும் எடுத்துட்டேன்... இதோ கல்யாண பொண்ணு, இவங்களும் எடுத்துட்டாங்க... உன் அக்கப்போரு தான் தாங்கல புள்ள... எதை எடுத்தாலும் ஒன்னு சொல்ற" என்று அவள் செயலில் கடுப்பாகி பேசினாள் மேகலா


"விடு மேகலா... அவளுக்கு எது இஷ்டமோ அதை வாங்கட்டும்... இது அமுதா


அவளும் பார்த்து கொண்டு தான் இருந்தாள். இந்த அக்கப்போறை, ஆனாலும் அவளுக்கு பிடிக்கவில்லை, என்னும் போது ஏன் கட்டயப்படுத்துவானே விருப்பப்படி எடுக்கட்டும் என்று கூறியிருந்தாள்.


"வாங்கட்டும் கா, நல்லா வாங்கட்டும்… ஆனா, எத்தனை மணி நேரத்துக்கு... இது நமக்கு ஆகாத காரியம்…" என்று சலிப்பாக பேசி இவர்களை தாண்டி சிறிது தூரத்தில் நின்று சுந்தரனுடன் பேசிக்கொண்டு இருந்த விசாகனை கண்டவளின் முகம் விடையை கண்டுபிடித்தது போல பிரகாசமாகி "அண்ணா" என்று அழைத்து அவனை அருகில் வர சைகை செய்தாள்.


அதுவரையிலும் பெண்களே எடுக்கட்டும் என்ற எண்ணத்தில் இருவரும் தள்ளி இருக்க மேகலா அழைக்கவும் இருவருமே அவர்களது அருகில் வந்தனர்.


விசாகனிடம் திரும்பிய மேகலா "அண்ணா, இவ அலும்பல் தாங்க முடியல, எதை எடுத்தாலும் ஏதாவது ஒரு நொட்டை சொல்றா... அதனால உங்க பொண்டாட்டிக்கு நீங்களே செலக்ட் பண்ணுங்க... அவளுக்காக தேடி தேடி ரொம்ப டயர்ட் ஆகிடுச்சி" என்று சோர்வாய் கூறிட அவளை முறைத்தாள் தேவா


"முறைக்காத புள்ள" என்று கண்களால் விசாகனை சுட்டி காட்டி "இதுக்குதானே இவ்வளவு எடுத்துப்போட்டும் பிடிக்கலன்னு சொல்லிட்டு இருந்த…" என்று சரியாய் அவளின் குட்டை உடைக்க


தோழி தன்னை கண்டுக்கொண்டளே என்று அவளது முகம் சட்டென நாணியது, முயன்று அவர்களின் முன்பு சாதரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டவள் "அப்படி ஒன்னுமில்ல, எனக்கு பிடிக்கல அதனால எடுக்கல... இந்த கடையில அவ்வளவா நல்லா இல்லன்னு நினைக்கிறேன்... வேற கடைக்கு போவோமா?...." என்றாள் அந்த பேச்சினை மாற்றி


அதுவரை அமைதியாக இருந்த அமுதா "அட என் மாமா பொண்டாட்டியே, இது உனக்கே அநியாயமா தெரியல? மலைய போல சேலைய குவிச்சி வைச்சிருக்காங்க…" என்று போறாய் குவிந்த சேலையை காட்டி "இதுல ஒன்னுக்கூட நல்லா இல்லங்கற?" என்று அவள் கூறவும் தேவாவின் முகத்தில் அசடு வழிந்தது.


"பச்" என்று சப்தமிட்டு சலித்துக்கொண்டவள், "அதான் ஏன் பிடிக்கலன்னு நானும் பாக்குறேன்" என்ற படி புடவையை தேடுவது போல் திரும்பிக்கொண்டாள்.


இதையெல்லாம் மெல்லிய இதழ் முறுவலோடு பார்த்துக்கொண்டு இருந்த விசாகன் "நான் பாத்துக்குறேன். நீங்க எல்லாம் வேற ஏதாவது எடுக்கறதுன்னா போய் எடுத்துட்டு வாங்க…" என்று அவர்களை அனுப்பியவனுக்கு மனைவியின் மேல் கண்கள் ரசனையாய் பதிந்தது.


தூரத்திலிருந்து பார்த்து கொண்டு இருந்தானே அவள் செய்யும் அடாவடியை எதை எடுத்தாலும் வேண்டாம் என்பவளின் உள்ளம் புரிந்த போது அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு வர. தன்னையறியாமல் இதழ் வளைந்தது... எவ்வளவு நேரம் தான் நாடகம் இந்த நாடகத்தை தொடர்வாள், என்று பார்த்தவனுக்கு அவளின் செயலில் பொறுமை இழந்த மேகலாவின் புண்ணியத்தில் இனிதே முடிய.


"என்ன சனா? எதுவும் பிடிக்கலையா? என்றான் கள்ளச்சிரிப்புடன்.


"ம்கீஹூம்" இதழை வளைத்து இல்லை என்று கட்டியம் கூறினாள்


"நிஜமா ?"


"நிஜமா…"


"பார்த்தா அப்படி தெரியலையே?"


"என்ன தெரியல?"


"புடவை பிடிக்கலன்னு"


"அப்புறம் வேற என்ன தெரியுதாம் ஹீரோவுக்கு" என்றாள் வம்பு பேசுவது போல


அவளிடம் வம்பு செய்வது சுவரஸ்யமாக தான் இருந்தது இருந்தும் இருக்கும் இடம் உணர்ந்து "நான் எடுக்கனுமுன்னு ஆசைபடுறா மாதிரி இருக்கு"


"அதான் தெரியுதுல அப்புறம் என்ன அங்க நின்னுக்கிட்டு சிரிச்சி கேளி பண்ணிட்டு இருக்கிங்க... வந்து எடுத்துக்கொடுக்க வேண்டியது தானே"


"உனக்கு பிடிச்சதை எடுடி" என்றான் இதழில் தோன்றிய இளம் நகையுடன்


"ம்கூம் என் ஹீரோக்கு பிடிச்சதை தான் எடுக்கனும்" எடுங்க சிணுங்கிய கிங்கினியாய் வந்தது அவள் குரல்


"கட்டப்போறது நீ டி" என்று கூறினாலும் மலைபோல் குவிந்து இருந்த புடவைகளில் எந்த நிறம் மனைவிக்கு எடுக்கும் என்று தேடியது அவனது கரங்கள்.


"பாக்கப்போறது நீங்க…" என்று அவன் செவிகளில் ரகசியம் பேசவும் முதன்முதலாய் முதுகு தண்டில் ஒரு சிலிர்ப்பு வந்து போனது அவனுக்கு,. காலை முதலே தேவாவை சுற்றியே வட்டமடித்த மனதை முயன்று கட்டுக்குள் வைத்து வேலையை பார்த்து கொண்டிருந்தவனுக்கு நண்பனின் அழைப்பு அவளை நினைவுக்கு கொண்டு வந்திருந்தது.


அவளாக கொடுத்த இதழொற்றலும் இதில் ஒரு முக்கிய காரணமாகி போக, சுந்தரன் கூறிய இடம் அதற்கு மேல் அவனை அங்கே நிற்க விடவில்லை... உடனே அவளை காண வந்தவன் இதோ சேலை எடுத்து கொண்டு இருந்தான்.


பன்னீர் ரோஜா வண்ணத்துடன் இருபக்கமும் அடர் பிரவுன் நிற கரையிட்ட புடவையில் தங்க நிற ஜரிகையில் அங்காங்கே அன்னப்பறவையின் உருவம் பதித்த புடவையை அவளுக்காக எடுத்தவன், கூடவே வெந்தய நிறத்தில் வைர ஊசி ஜரிகை வேளைபாடுகள் கூடிய காஞ்சி பட்டையும் எடுத்தான்


"ரெண்டு புடவை எதுக்கு எனக்கு ஒன்னு போதும்". என்றவளை இடைமறைத்தவன்


"இத்தனை எடுத்து போட்டு இருக்க பாவம், அவங்களுக்கும் வியாபாரம் பண்ண சந்தோஷம் வரனுமில்ல…." என்று கூறியவன் "நீங்க போங்க" என்று கடை ஊழியரிடம் கூறியதும் அவன் எடுத்து கொடுத்த புடவையை ஆசையாய் தொட்டு பார்த்தாள் தேவா


சிறிது நேரத்திலேயே பொருட்கள் வாங்க சென்ற மூவரும் தேவாவும் விசாகனும் இருக்கும் இடம் வந்துவிட அவள் கைகளில் இருந்த புடவையை பார்த்த மேகலா "ஏய் புடவை நல்லா இருக்குடி... சரியான அமுக்குணி தாண்டி…. நீ நினைச்சதை முடிச்சிட்ட ம்…". என்றவள் விசாகனிடம் திரும்பி


"அண்ணா உங்களுக்கு கோவிலை கட்டி கும்பிடனும் ணா... வந்த பத்து நிமிஷத்துல எடுத்துட்டிங்க... அதுவும் செமையா, சூப்பரா எடுத்து இருக்கிங்க... உங்க பொண்டாட்டிக்கு... நாங்களே சேலை எடுக்கறதுல தோத்துடுவோம் போல இருக்கு... அம்புட்டு அழகா இருக்கு…" என்று அவன் எடுத்திருந்த புடவையை பார்த்து பாராட்டை வழங்க


"சூப்பரா இருக்கு மாமா... நல்ல செலக்ஷன்... தேவாவுக்கு அழகா இருக்கும்". என்று சுந்தரனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே கூறினாள் அமுதா.


அவள் பார்வை புரிந்ததோ என்னவோ "மாப்ள உனக்கு புடவை எடுக்க வந்துடுச்சி னா அதை நீ தனியா எடுத்து உன் திறமையை தங்கச்சிக்கு காமிக்கனும்…. இந்த மாதிரி கூட்டத்துல எடுத்து கும்மியடிச்சிட்டா, நாளைய பின்ன என் நிலமையெல்லாம் யோசித்து பாத்தியாடா?... எனக்கே எனக்கு எடுத்துக்க வராது... இதுல இதுவும் லிஸ்ட்டுல சேர்ந்துட்டா!!! நான் எல்லாம் என்னடா செய்றது?" என்றான் பரிதாபமான குரலில்.


அமுதா சுந்தரனை முறைக்கவும


"அதெல்லாம் உங்களுக்கும் சேர்த்து எங்க அமுதாவே எடுப்பாங்களாக்கும்... உங்களையே சரின்னு தேர்ந்தெடுத்து இருக்காங்க நீங்க எடுத்துக் கொடுக்கறதையா வேண்டாம்பாங்க" என்று தேவா அமுதாவின் தோள்களை இடித்தபடி பேசிட வெட்கத்துடன் சிரித்தாள் அமுதா..


தேவாவின் பேச்சில் சிரிப்புடனே இருந்த விசாகன் "போதும் இங்க இருந்து பேசினது... நேரம் ஆகுது போய் வாங்கினதுக்கு எல்லாம் பில்லை போடாவோம் வாங்க" என்று அழைத்துச் சென்றான் விசாகன்.


…...


"நீ சொல்றதை என்னால நம்பவே முடியல கலா!!!…. உண்மையாவா சொல்ற?


"பின்ன பொய்யா சொல்றேன்... எனக்கு என்ன கிறுக்கா உங்க அண்ண மேல சொல்ல!!"


"பச், நீ பொய் சொல்றேன்னு சொல்லல எருமை.. என்னால தான் அவன் பண்றதை நம்பமுடியலன்னு சொன்னேன்... அவன் உன்கிட்ட இப்படி நடந்துக்கிறது பேசுறது எல்லாம் எனக்கு ஆச்சர்யமா இருக்கு" என்றாள் வியப்பை வெளிப்படுத்திய குரலில்.


"எனக்கு கிறுக்கு தனமா இருக்கு புள்ள... சம கடுப்பாகுது... உன் அண்ணன்னு பாக்குறேன் இல்ல கல்லை கொண்டு மண்டைய உடச்சிடுவேன்... என்று ஜெயசந்திரனின் மேல் உள்ள கடுப்பை எல்லாம் தோழியிடம் கொட்டிக்கொண்டு இருந்தாள் மேகலா.


எவ்வளவு அழைத்தும் கோவிலுக்கு வருவதை மறுத்து விட புடவை எடுத்த கையுடன் தொழிற்சாலைக்கு புறப்பட்டு விட்டான் விசாகன்,. அமுதாவுடன் சிறிது நேரமாவது கிடைக்காதா என்று ஏக்கத்துடன் இருந்த சுந்தரனின் முகத்தை வைத்தே கண்டுக்கொண்ட தேவா, அமுதாவிடம் பேசி அருகில் இருக்கும் ஆற்றங்கரையோரம் அவர்களை விரட்டி விட்டவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் பிரகாரத்தை சுற்றியபடி வர, மேகலா ஜெயசந்தரனின் போக்கை விவரித்து கொண்டு இருந்தாள்.


கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு ஏதோ உள்ளுணர்வு இப்படியும் இருக்குமோ என்று அண்ணன் மேல் முதல் முறை சந்தேகம் எழுந்தது… இருந்தும் எதுவும் முழுமையாக தெரியாமல் தோழியிடம் கூற வேண்டாம் என்று எண்ணியவளுக்கு சிந்தனை பலவாறாக ஓடிக்கொண்டு இருந்தது.


"தேவா…"


"………"


"ஏய் புள்ள…."


……


" நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ என்ன புள்ள முழுச்சிக்கிட்டே கனா காணுற?" என்ற மேகலாவின் தொடுகையில் தன்னிலைக்கு மீண்ட தேவா


"நான் காணுற கனா மட்டும் பலிச்சிதுன்னு வைய்யேன் இந்த அம்மனுக்கு 108 தேங்காய உடைச்சி பொங்க வைச்சிட மாட்டேன்". என்று பூடகமாய் தோழியின் கைப்பிடித்து பெருமூச்சிடன் கூறியவளை ஏற இறங்க ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் மேகலா.


இருவரும் பேசியபடியே கோவில் கொடிமரத்தை விழுந்து வணங்க 2 வயது மதிக்க தக்க ஒரு குழுந்தை தேவாவின் மேல் மோதி நின்றது


"ஏய் பாப்பா டீ… யாரு பாப்பா நீ?" என்று தேவா குழந்தையை தூக்கிக்கொண்டதும்


அந்த குழந்தை மலங்க மலங்க முழித்து அழ ஆரம்பித்தது.


"அம்மு... அம்மு... என்று அந்த குழந்தையை தேடி வந்த நபரை பார்த்தும் தேவாவின் முகம் கல்லாய் இறுகிவிட.


"அம்மு நீ இங்கதான் இருக்கியா?" என்றபடி குழந்தையிடம் வந்த அக்ஷரா தேவாவை கண்டதும் அதிர்ச்சிம் கலந்த பார்வை பார்த்தாள்.


கையில் இருந்த குழந்தையை இறக்கி விட்ட தேவா ஆணி அடித்தார்போன்று அதே இடத்தில் நின்றிட


"யாரு புள்ள உன்ன பார்த்ததும் இப்படி ஷாக்கடிச்சா மாதிரி நின்னுடுச்சி... நீயும் ஒரு மாதிரி இருக்க? என்று ரகசியமாக அவள் காதில் கேட்க அவளுக்கு மட்டும் கேட்கும் தோணியில் "ம் என் புருசனோட எக்ஸ் போதுமா" என்று சீற்றத்துடன் கூறியதும் மேகலா ஸ்தம்பித்து போனாள்.


தேவாவிற்கு தன்னை அடையாளம் தெரியவில்லையோ என்று நினைத்த அக்ஷரா தன்னை அறிமுகபடுத்திக்கொள்ளும் நோக்கில் "அன்னைக்கு ஆஸ்பிட்டல் ல கூட பார்த்தோமே" என்று கூறி "என்னை தெரியலையா?" என்றாள் ஏமாற்றமுகமாக


அந்த கேள்வியில் அக்ஷராவை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்த தேவா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்


அவள் அமைதியாக நின்றதை அசட்டையாக நினைத்தவள் விசாகனை விசாரிக்கும் பொருட்டு "அவர் அவர் எப்படி இருக்காரு?" என்றாள் சிறு தயக்கத்துடன்


அவள் கேள்வியில் அழுத்தமாக பார்த்தவள் "நல்லா இருக்காரு" என்றாள் தேவா முதல் முறையாக வாயை திறந்து.


"அவர்... அவர் ரொம்ப நல்லவர் தேவாசேனா…. எங்க அப்பா அம்மா பேச்சை கேட்டு நான் தான் அவரை மிஸ்பண்ணிட்டேன். நீங்களாவது அவரை சந்தோஷமா பாத்துக்குங்கோங்க… நீங்க லக்கி" என்றவள் முடிக்கும் முன்னரே போதும் "நிறுத்துங்க" என்று உரக்க கத்தி இருந்தாள் தேவா.


தேவாவின் கோபம் கண்ட மேகலாவோ "ஏய் வேணாம் தேவா வா போகலாம்…" என்று ஒரு சிலர் தங்களை வேடிக்கை பார்ப்பதை பார்த்து அவளை அழைத்துச் செல்ல எடுத்த முயற்சி எல்லாமே தேவாவின் உஷ்ண பார்வையில் கை விட்டாள் மேகலா .


தேவாவின் தீடீர் அவதாரத்தில் ஆடிபோன அக்ஷரா சுற்றும் முற்றும் தங்களை பார்ப்பதை அறிந்த சங்கடம் கொண்டு அவளை பரிதாபமாக பார்க்க


"அம்மா அப்பா பேச்சை கேட்டு மிஸ் பண்ணிட்டேன்னு சொல்றிங்களே, இந்த வார்த்தைய சொல்ல உங்களுக்கு வாய் கூசல" அப்படி "அப்பா அம்மா தான முக்கியம்னு நினைச்ச பொண்ணு லவ் பண்ணி இருக்கவே கூடாது"


"அவர் ரொம்ப நல்லவர்னு சொல்ற? ஆமா எப்படி நல்லவரா இல்லாம போவாரு நீ வேண்டாம்னு சொன்னவுடனே ஒதுங்கி உனக்கு ரூட் கிளியர் பண்ணி கொடுத்தாரே, அவர் எப்படி நல்லவரா இல்லாம போவாரு"


" உனக்கு எல்லாம் உண்மையா காதலிக்கிற ஆள் கிடைச்சி இருக்க கூடாது... சும்மா டைம் பாஸக்கு லவ் பண்ணிட்டு ஏமாத்திட்டு போயிருக்கவன் கிடைச்சி இருக்கனும்" என்றாள் கோவமாய்…. கோவம் கொண்ட மனது அவளை ஒருமையில் அழைக்கிறோம் என்பதை கூட அறியவில்லை.. தன் நேசித்தவன் எவ்வளவு வலியை அனுபவித்து இருப்பான் என்ற எண்ணத்திலேயே இருந்துவிட்டவள் அக்ஷராவை கண்ணாலையே எரித்திருப்பாள் அவ்வளவு உக்கிரமாய் இருந்தாள் தேவா.


அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் விக்கித்துப்போய் நின்றாள் அக்ஷரா


"இப்போ பாவம் பண்ணிட்டேன், மன்னிச்சிடுன்னு.... வந்து பேசி உங்களை நல்லவங்களா காட்டிக்க முயற்சி பண்ணாதிங்க அக்ஷரா" என்று கடுப்புடன் கூறவும்


"தேவாசேனா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க" என்று இடைமறைத்த அக்ஷரா "அன்னைக்கு நிலைமை அப்படி... ஒரு வேலை இல்லை... சொந்தம்னு யாரும் இல்லை... எப்படி கல்யாணம் செய்து கொடுப்பாங்க... அதுவும் இந்த கிராமத்துல... அப்போ எங்க அப்பா அம்மா சொன்னது எனக்கு சரின்னு பட்டது... வேற வழி தெரியல" என்று கேவலுடன் கூறியவளை வெறுப்பாய் பார்த்தவள்


"இது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? ஒருத்தர் நீதான் உலகம்னு இருக்கும் போது ஒன்னுத்துக்கும் உருப்படாத உப்பு, சப்பு இல்லாத காரணத்தை சொல்லி அவரை நோக அடிச்சிருக்க அது உயிரோட கொலை பண்றதுக்கு சமம் இல்லையா…"


"தெரியாமத்தான் கேக்குறேன்... இத்தனை வருஷம், அந்த மனுஷன் இருந்தானா? இல்லையான்னு? பாக்காதவ... இப்போ வந்து பாக்குற... எனக்கு வாழ்க்கைல கிடைச்ச வைரத்தை இழந்துட்டன்னு கதை சொல்ற... உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க?..." என்று அவள் பொறிய


கலங்கிய கண்களுடன் நின்றிருந்தவளுக்கு மறுவார்த்தை பேச நா எழவில்லை... தவறு தானே இன்னொருத்திக்கு சொந்தமானவனை நினைத்து மறுகுவது எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும் அவனுக்கு செய்த பாவம் கட்டிய கணவன் ரூபத்தில் தினம் தினம் சித்தரவதை அனுபவிப்பது போததாத அவன் வாழ்க்கையை வேறு படுகுழியில் தள்ள வேண்டுமா? என்று நினைத்தவளிடம்


"உன் காதல் அவரை உயிரோட கொன்னுடுச்சி அக்ஷரா… கல்லா இருந்தவரை கரைச்சி என் காதல் அவரை மீட்டு வந்துருக்கு… என் காதல் உயர்ந்ததுன்னு சொல்லல ஆனா அதுக்காக போராடாம அவரையே வேண்டாம்னு ஒதுக்கின உன்னை எப்பவும் பாக்க விரும்பல... இனி எங்க இரெண்டு பேர் முன்னாடி எப்பவும் வந்துடாத" என்று கூறியவள் விடுவிடுவென அவ்விடத்தை விட்டு அகல நிலைகுத்திய கண்களுடன் சுந்தரன் அங்கு நடந்த சம்பவத்தை பார்த்தான்…..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN