பூ 52

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

தேவா தாய்வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் சென்றிருந்தது. விசாகன் அங்கு ஏற்கனவே வாங்கியுள்ள நிலத்தில் வீடு கட்ட ஆரம்பித்து தன் கல்யாணத்தில் ஏற்பட்ட கசப்பால் பாதியில் நிறுத்தி இருந்தான்.


இப்போது அந்த வீட்டை மறுபடி கட்ட தொடங்கி இருந்தான், அதை காரணமாக வைத்து அவ்வப்போது அங்கு வரும் சமயங்களில், தேவாவை வெளி இடங்களுக்கும் கோவில்களுக்கும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்..


தில்லை வாரத்தில் இருண்டு மூன்று நாட்கள் அவளுக்கு பிடித்தமான உணவு வகைகளுடன் வந்து அளவளாவி செல்வார். அமுதா சுந்தரனுடன் வந்து சென்றாள். ஆக மொத்தம் அவள் வீட்டை விட்டு இங்கு வந்து விட்டாள், என்ற நினைவே இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.


இவளும் அனைத்தையும் மகிழ்வுடன் அனுபவித்தபடி அண்ணனின் வரவை எதிர்பார்த்து பிறந்த வீட்டில் வளைய வந்தாள் .


தேவாவின் விசேஷம் முடிந்து இரண்டு வாரங்கள் சென்றிருந்த நிலையில் ஜெயசந்திரன் ஊரிலிருந்து வந்திறங்கினான்.


மாலை வேளை என்பதால் கூடத்தில் டிவியை பார்த்தபடி அமர்ந்திருந்த தேவா ஜெயசந்திரன் வருவதை பார்த்ததும் உள்ளே எழுந்து சென்று விட அவனுக்கு முகம் வாடி விட்டது.


சந்திரன் வாசலில் வந்து நிற்கும் போதே நிறை மாத வயிறுடன் தங்கை அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சி பேசவில்லை என்றாலும், 'ஓரே வீட்டில் இனி கொஞ்ச நாட்கள் அவளுடன் சேர்ந்தே இருக்கலாம் என்று நினைத்திருக்க, தன்னை பார்த்தவுடன் அறைக்குள் சென்றதும் ஏதோ கை நழுவியதை போல உணர்ந்தான்.


சோர்ந்த முகத்துடனே வந்த மகனை கண்ட மரகதம் "வாய்யா சாமி" என்று அழைத்து காபியை கொடுத்தார். உடையை கூட மாற்றத் தோன்றாமல் அறைக்கும் செல்லாமல் தங்கை சென்ற அறையை பார்த்தபடி அவள் வெளியே வருவாளா என்று ஏக்கத்தோடு காபியை அருந்தினான்.


அரை மணி நேரம் ஆகியும் வெளியே வராமல் உள்ளயே அலுச்சாட்டியமாக அமர்ந்திருந்தாள் தேவா.


மகன் அமர்ந்து இருக்கும் தோரணையும் வாட்டத்தையும் பார்த்த மரகதத்திற்கு ஏதோ புரிந்தது போல் இருக்க, வேண்டுமென்றே


"அது.." என்று இழுத்து அவள் இருக்கும் அறையை பார்த்தவர் சின்னக் குரலில் "அவளுக்கும் யாருய்யா இருக்கா நம்மல விட்டா.. அதான் அப்பாரு இங்கயே கூட்டிட்டு வந்துடலாம்னு அழைச்சிட்டு வந்துட்டார்... உனக்கு... இதுல..." என்னும் போதே அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது அம்மா எங்கு வருகிறார் என்று அவசரமாக அவரை கை நீட்டி தடுத்தவன் உள்ளே எட்டிப்பார்த்து


"அம்மா நான் என்ன சொல்லிட்டேன்... வந்து ஒரு வார்த்தைக் கூட பேசலியே... அவ இருக்கறதுல எனக்கு என்ன கஷ்டம் யார் வந்தா என்னா?... யார் போனா என்ன ?" என்று கூறியவன் எங்கே அவளுக்கு கேட்டு விட பேகிறதோ என்ற பதட்டத்தில் தேவாவின் அறையின் வாசலை பார்த்தான்.


அவனது பதட்டம் கண்டு மரகதத்திற்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை அவருக்கும் தெரியும் தேவா வந்தது அவனுக்கு மகிழ்ச்சி தான்.... வாய் வார்த்தைக்கு தான் இதை எல்லாம் சொல்கின்றான்... என்று இருந்தும் மகனின் நிலையை அறிய இப்படி கேட்க அவன் செய்த பாவனையில் சிரிப்பு வந்துவிட்டது.


அரும்பாடுபட்டு அதை முகத்தில் காட்டாதவாறு "சரிய்யா நீ குளிச்சிட்டு வா... உனக்கு சாப்பிட எடுத்து வைக்கிறேன்" என்று சமயலறைக்குள் சென்று விட்டார்.


வேகமாக காற்றை உள்ளே இழுத்து மூச்சை வெளியிட்டவன் அடுத்த நிமிடம் தனது அறைக்கு சென்று விட்டான். அவளுக்காக பெங்களூரில் அலைந்து தேடி சேலை வாங்கி வந்திருத்தான். இப்போது அதை எப்படி கொடுப்பது என்று யோசித்தவன் முதல் வேலையாக அதை எடுத்து கப்போர்டில் வைத்து பூட்டினான்..


அறையில் இருந்தவளுக்கோ மனம் அடித்துக்கொண்டது. முழுதாக இரண்டு வருங்களுக்கு பிறகு அண்ணனை கண்டவளுக்கு கண்களில் நீர் நிறைந்து பளபளப்பை ஏற்படுத்தியது, என்றால் மனம் அவனிடம் பேச வேண்டும் என்று ஆசைக்கொண்டது. அதனாலேயே அவனை கண்டதும் வேகமாக அறைக்குள் வந்துவிட்டாள்.


இன்னும் சொல்லப்போனால் அவனை பற்றிய முழு விவரத்தையும் அறிந்துக் கொண்டவளுக்கு அவன் சட்டையை பிடித்து ஏன் என்கிட்ட பேசமாட்டுற என்று சண்டை போட வேண்டும் என்று வேகம் வர எங்கே தன்னையும் மீறி அது செயலில் வெளிப்பட்டு விடுமோ என்று தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தாள்.


வளைகாப்பு தினத்தன்று அமுதா கீழே செல்லவும் தேவாவும் மேகலாவும் தனித்து இருக்கையில் இன்றும் தன் அண்ணன் வரவில்லையே என்று வருத்தம் கொண்டு நின்றவளை பார்த்த மேகலாவிற்கு மனது கேளாமல் கல்யாணம் பிறகு தனியே தன்னிடம் அவளை பற்றி விசாரித்ததிலிரிந்து கடைசியாய் அவளுக்கு குங்குமப் பூ வாங்கி கொடுத்தது வரையும் கூறி அவ்வப்போது தன்னிடம் அவள் உடல் நிலை கேட்டறிவது பற்றியும் கூறிட கேட்டவளுக்கு நிலைக்கொள்ளவில்லை


வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் மேல் தன் தளிர் கரங்களை பதித்தவள் " அம்மா மேல கோவம் இருந்தாலும் உன் மாமா உன்னை விசாரிச்சி இருக்காங்க செல்லம்... உனக்காக குங்குமப்பூ வாங்கி கொடுத்து இருக்காங்க டா உன் மாமா நம்மளை ஒதுக்கல டா என்று சிரிப்பும் அழுகையுமாய் சொன்னவளை ஆதுரமாய் பார்த்த மேகலாவிற்கு சந்திரன் மேல் சற்றுக் கோவம் கூட வந்தது. இப்போதாவது சந்திரன் இந்த விசேஷத்திற்கு வந்து இருக்கலாமே என்று தான் தோன்றியது.


ஆனால் அவன் நிலையில் இருந்து பார்க்கும் போது அவன் கூறிய காரணங்களும் ஏற்றுக்கொள்ள கூடியதாய் இருக்க நடப்பது அனைத்தும் நாரயணன் செயல் என்று அத்துடன் அவளை சமாதப்படுத்தியிருந்தாள் மேகலா.


அண்ணனிடம் பேச வேண்டும் என்று இருந்தாலும் 'நான் தான் உண்மை எல்லாத்தையும் சொல்லிட்டேனே... அப்புறம் எதுக்கு இந்த வரட்டு பிடிவாதம்... என் மேல இருக்க பாசத்தை விட உனக்கு உருப்படாத கோவம் தான் பெருசா போச்சா...' என்று அவனை வறுத்தவள் நீ பேசுவ ணா உன்னையே பேச வைக்கிறேன் என்று உறுதியுடன் தான் வீட்டிற்கே வந்தாள்.


அவனை பார்க்காத போது இருந்த உறுதி அவனை பார்த்த பிறகு தளர்வது போல் இருக்க அதை இழுத்து பிடித்திருந்தாள்.


இரவு உண்ணும் போதும் கூட சரி அவனை பார்க்கவே கூடாது என்று விரைப்பாக இருந்தாள். அவன் அறைக்குள் இருந்தால் இவள் வெளியே நடமாடுவாள் அவள் வெளியே இருப்பதை பார்த்து ஜெயசந்திரன் வெளியே வந்தால் இவள் அறைக்குள்ளோ இல்லை கொள்ளை புறத்திலோ இருப்பாள்.


ஒன்று மேகலாவுடன் பேசிக்கொண்டு இருப்பாள் இல்லை விசாகனுடன் வெளியே செல்வாள். இரண்டு நாட்களாக தன் முகத்தை கூட சந்திரனுக்கு காட்டாது போக்கு காட்டியபடி இருந்தாள் தேவா.


மூன்றாம் நாள் சலித்து போய் வெளியே சென்றவன் அவளுக்கு சாப்பிட ஏதேனும் வாங்க வேண்டும் என்று கடைக்கு சென்றான். பழவகைகளில் சிலது அவள் இப்போது விரும்பி சாப்பிடும் வகைகளில் சிலது என்று அவளுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் பார்த்து பார்த்து வாங்கியவன் மதியத்திற்கு மேல் தான் வீடு வந்தான்.


ஜெயசந்திரன் கையில் பழங்களையும் தான் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளையும் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பரம சந்தோஷம் ஆனால் வெளியே முகத்தை உணர்ச்சியற்றது போல் இறுக்கமாக வைத்திருந்தாள்.


இப்படி மாசமா இருக்க பொண்ணு ஏன் இறுக்கமா இருக்கா அவன் வந்து பார்த்தானா இல்லையா எப்போ பாரு வேலை வேலைன்னு இருந்தா என்ன அர்த்தம் அதுக்குதான் சண்டை போட்டு கட்டிக்கிட்டு போனானா என்ற எண்ணம் தோன்ற தாயை கேட்போம் என்று நினைத்தவன் தயங்கியபடியே "என்னம்மா அவன் வந்தானா இல்லையா? மேடம் ஏன் இவ்வளவு வாட்டமா இருக்காங்க?" என்று நக்கலாக கேட்பது போல கேட்டான்.


"எல்லாம் வந்து வந்துதான் போறாக... என்னமோ தெரியலையே இரண்டு நாளா இப்படி இருக்கா சித்த இரு கேட்டு சொல்றேன்..." என்று சென்றவரை கைபிடித்து நிறுத்தியவன் "நீயா கேக்குறாப்போல கேளு என்னை எதுலையும் சேக்காதம்மா நான் அவ விஷயத்தில எதுலயும் தலையிட விரும்பல" என்று குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் கூறியிருந்தான்.


முகத்தில் ஈயாடது நின்றிருந்தவருக்கு அட இதுவேறயா என்று இருந்தது. இருந்தாலும் மகன் மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிடுவானோ என்ற பயத்தில் வாயை திறந்து கூறவில்லை


இப்போது ஒரு சில சமயங்களில் தேவாவினால் முழுவதுமாக அவனை தவிர்க்க முடியவில்லை... வேண்டும் என்றே தங்கையின் முன் உட்காருவது, பின்கட்டில் வேலை செய்கிறேன் பேர்வழி என்று அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பது, காய்கறி கீரை மீன் வகைகளை பார்த்து பார்த்து அவள் உடலுக்கு எது சேர்கிறது என்று தெரிந்து வாங்கிருவது என எல்லாம் அவன் பொருப்பாகி இருந்தது இந்த சில நாட்களில் ..


சௌந்தரலிங்கம் மகளிடம் அன்புடனும் பாசத்துடனும் இருந்தார். மகனிடமும் சிறிது தன்மையுடன் நடந்து கொண்டார்.


முழுதாய் ஒரு வாரம் சென்றிருந்தது. அவன் தான் இதையெல்லாம் வாங்கி வருகிறான் என்று தெரிந்து சாப்பிடாமல் சண்டித்தனம் செய்பவளை கடுப்புடன் பார்ப்பான். திட்டவும் முடியாமல் அன்பாய் கூறவும் முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டியது போல் நிற்பவனை பார்பவளுக்கு பாவமாய் இருந்தாலும் ஒரு வார்த்தையாவது கோவமாக கூட தன்னிடம் பேச மாட்டானா என்றுதான் அவள் மனம் ஏங்கும்.


அவளும் அவனை கடுப்பேற்றும் வேலையை செல்வனே செய்துக் கொண்டிருக்க பிரசவ தேதிக்கு இன்னும் ஐந்தாறு நாட்களே உள்ள நிலையில் விசாகன் ஒரு நாள் அவளை கோவிலுக்கு அழைத்து சென்றிருந்தான். அதை அறிந்த சந்திரன் அவன் அம்மாவிடம் ஆடி தீர்த்துவிட்டான்.


"உன் மாப்பிள்ளை மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் மா. அவன் பாட்டுக்கு வர்றான்... உடனே அவளை கூட்டிட்டு வெளியே போயிடுறான்... ஏன் அவன் பேசுறதை வீட்டுல இருந்து பேசமுடியாதாமா" என்று தாயிடம் சத்தமிட


"ஏன்ய்யா இப்படி கத்துற... அவரு பொஞ்சாதி அவரு கூட்டடிட்டு போறாரு இதுல உனக்கு என்ன சாமி" என்று மரகதம் புரியாது கேட்க


"என்னன்னு கேக்குறிங்க நிற மசமா இருக்கா மா நீங்களும் தானே அவ கூட போன வாரம் ஹஸ்பிட்டலுக்கு போயிட்டு வந்திங்க ஜாக்கிரதையா இருக்கனும்னு சொன்னாங்கன்னு சொன்னிங்கல்ல இப்போ இவ்வளவு அசால்ட்டா வெளியே கூட்டிட்டு போறான்.... ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்குமா?" என்றான் எரிச்சலாய்


"என்ன என்னய்யா பண்ண சொல்றிங்க???... அவர் மனசுல என்ன இருக்கோ!... மாப்புள்ளன்னு நீயும் கூப்பிட்டது இல்ல... இந்த ஒரு மாசத்துல அவரும் வந்து தங்கினது இல்ல..." என்று இதற்கு என்னால் எதவும் செய்ய முடியாது என்னும் வகையில் ஒரு காரணத்தை அடக்கிவிட்டு சென்றார் மரகதம். அவனுக்குத்தான் மண்டை காய்ந்தது. இன்று வரட்டும் பார்த்துக்க வேண்டியதுதான் என்று வீட்டில் சட்டமாய் அமர்ந்திருந்தான்.


.....


கோவிலில் சாமி முன் நின்றிருந்தவளுக்கு முகம் வழக்கத்திற்கு மாறாக வாடி இருந்தது. இரண்டு நாட்களாக மனதே சரியில்லை அவளுக்கு கண்களை முடி கை கூப்பி நின்றிருந்தவளின் மூடிய விழிகளுக்கு இடையே ஊடுருவிய நீர்திவளைகள் கன்னத்தில் வழிய மனமுருகி வேண்டிக்கொண்டு இருந்தாள்.


அருகில் நின்றிருந்தவனுக்கு எதற்காக இப்படி இருக்கின்றாள் என்று தெரியவில்லை... வரும் வழியெல்லாம் எவ்வளவோ கேட்டு பார்த்துவிட்டான். மூடிய வாயை திறக்காமல் ஏதோ யோசனையாய் வந்தவள் இப்படி அழும் போது இன்னும் துணுக்குற்றது அவனுக்கு


அமைதியாய் பிரகாரத்தை சுற்றியவளின் கையை பிடித்து மெதுவாய் அழைத்து வந்தவன் ஒர் இடத்தில் அமரவைத்தான்.


"என்ன சனா ஏதாவது சண்டையா உனக்கும் சந்திரனுக்கும்... ஏன் உம்முன்னு இருக்க... கேட்டா எதுவும் சொல்ல மாட்டுற.. பேச மாட்டுற.. என்ன உறுத்துது டி உன் மனசுல" என்றான் சரியாய் அவளை கணித்தவனாய்.


"மாமா இது உங்களுக்கு சிறு பிள்ளை தனமாத்தான் தெரியும்... ஆனா எனக்கு அமுதா டெலிவரி போது அவங்கப்பட்டது தான் கண்ணு முன்னாடி வருது... இப்போ எல்லாம் தூங்க கூட முடியல... கனவுல கூட அதுதான் வருது எனக்கு டேட் நெருங்க நெருங்க பயமா இருக்கு மாமா" என்றாள் கலங்கிய முகமாக


அவள் கண்ணீரைக் கண்டு பதறியவனாக அவள் கன்னங்களை துடைத்து விட்டவனுக்கும் அந்த காட்சிகள் மனகண்ணில் ஓட அவன் முகத்திலும் பயத்தின் சாயல் இருந்தது என்னவோ உண்மைதான்.


இருந்தும் அவளிடம் காட்டாது "ஹேய்..... இங்க பாருடா" என்றான் அவள் முகவாயை தன் புறம் திருப்பி "நீ வாய் திறந்து சொல்லிட்ட என்னால சொல்ல முடியல... நாள் நெருங்க நெருங்க எனக்கும் கலக்கமா தான் இருக்கு".


"ஆனா தைரியம் தானே நமக்கு பலத்தை தரும்... பயப்படாம இருக்கனும்... இப்போ பாரு அமுதா குழந்தையோட சந்தேஷமா தானே இருக்கு... நாங்க எல்லாம் உன் கூட இருக்கோம் டா... அப்புறம் என்னடா... நீ தைரியமா இருந்தா தானே, இந்த குட்டி வயித்துல இருக்க நம்ம குழந்தையும் தைரியமா இருக்கும்... இன்னும் கொஞ்ச நாள்ல அந்த குட்டி பாப்பா நம்ம கூட இருக்க போதுன்னு நினைச்சி பாறேன், இந்த பயம் எல்லாம் இருக்கும் இடமே தெரியாம ஓடி போயிடும்" என்று அவளுக்கு தைரியத்தை கூறுவது போல் தனக்கும் சேர்த்தே தைரியத்தை கூறிக்கொண்டான்.


இப்படியே இருந்தால் மனைவி மனது இதை சுற்றியே வட்டமிடும் என்பதை அறிந்தவன் "ஆமா உங்க அண்ணன் என்ன இன்னைக்கு ரொம்ப கடுப்பா தெரியறான்" என்றான் அவளை இளகுவாக்க


அண்ணனின் பேச்சு எடுக்கவும் சற்று சூழலை மறந்து இயல்பானவள் கண்களை துடைத்தபடியே "அப்படியாவது பேசுவான்னு பார்த்தேன் மாமா..


பேச மாட்டுறானே சரியான அழுத்தக்காரன்" என்று அண்ணனுக்கு ஒரு பெயரை வைத்தவள்


"நான் சரியா சாப்பிடலன்னா முகத்திலேயே காட்டுறான்... அன்னைக்கு முழுசும் ஒரே திட்டுதான் அம்மாவுக்கு, அவ்வளவு பாசம் வைச்சி இருக்கான் வாயை தொறந்து ஒரு வார்த்தை பேச மாட்டுறான்" என்று கடுப்புடன் கூறியவளை இளநகையுடன் பார்த்தவன்


"பாவம் டி அவன்.... கொஞ்ச நாள் விடு அவனே பேசுவான்... உன்னை பார்க்கவே ஆபீஸ் போகாம இங்க உட்கார்ந்து இருக்கான்டி". என்று அவனுக்காக பேசிட


"என்ன? மச்சானுக்கு மாப்பிள்ள சப்போர்ட்டா? செல்லது மாமா செல்லாது... இது எனக்கும் அவனுக்கும் இருக்க டீல்... பாக்குறேன் நானா? அவனான்னு?" என்று கூறியவளுக்கு கை கொடுத்து எழுந்துக்கெள்ள உதவியவன் அவளை கொண்டு போய் வீட்டில் பத்திரமாய் விட்டு ஆயிரம் பத்திரங்களை கூறிவிட்டு தன் வீட்டிற்கு பயணமானான்.


அவள் வீட்டிற்குள் நுழையும் போதே முகத்தை உர்ரென்று வைத்திருந்தான் சந்திரன். அவனை கண்டும் காணதது போல் சமயலறைக்கு சென்றவள் அன்னைக்கு பிரசாதத்தை வழங்கிவிட்டு பூஜையறையில் வைத்தாள்.


"அம்மா சூடா சுக்குமல்லி காபி தறியா தொண்டையெல்லாம் ஒரு மாதிரி இருக்கு" என்று முற்றத்தில் இருந்த உஞ்சலில் அமர்ந்தாள்.


வந்ததிலிருந்து அவள் செய்யும் செயல்களை பார்த்த வண்ணம் இருந்தவன் "ஏம்மா, இப்படி நேரங்கெட்ட நேரத்தில் வரலாமா? மாசம் ஏறிட்டே போகுது நியாபகம் இருக்கா... இல்லையாம்மா உனக்கு?" என்று தாயை வறுத்தெடுக்க ஓரக்கண்ணால் அண்ணன் வசவுகளை காது குளிர கேட்டவள் அன்னை கொடுத்த சுக்குமல்லி காபியை கையில் வாங்கி இருந்தாள்.


'எவ்வளவு மிதப்பா காபியை வாங்குறா?... இவ்வளவு கத்துறேன் ஒரு ரியக்ஷனையும் காணும்' என்று நினைத்தவன் அன்னையிடம் திரும்பி "எல்லாம் நீ கொடுக்குற இடம்மா... ஏன் பேசுறதை வீட்டுல வைச்சி பேசினா ஆகாதா? வெளியே கூட்டிட்டு தான் போய் பேசனுமா?" என்று தாயை பார்த்து கேட்டிட அவனுக்கு என்ன பதிலை கூறுவது என்று தெரியாமல் விழித்து நின்றார் மரகதம்..


"அம்மா, எப்பவும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். இனி வெளியே போகட்டும் அப்புறம் பேசிக்குறேன்". என்று கோபமாக பேசிட


அண்ணன் திட்டிய திட்டுக்களை எல்லாம் ரசித்துக்கொண்டே காபியை ஒரு மிடறு விழுங்கியவளுக்கு அடிவயிற்றில் சுரீர் என்ற வலி எழுந்து பின்பக்க இடுப்பு வரை சென்றது. உட்கார்ந்து இருப்பதால் இப்படியோ என்று நினைத்து சரி கொஞ்சம் நடப்போம் உடனே பயப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவள் ஊஞ்சலில் இருந்து எழுந்துக்கொள்ள மீண்டும் சுரிர் என்ற வலி அடிவயிற்றை தாக்க வலியில் நிற்க முடியாமல் கால் இடறி நிறைமாத வயிற்றை ஒரு கையில், தன்னிச்சையாய் பற்றியபடி அம்மா..... என்று விழ இருந்தவளை நொடி பொழுதில் "தேவா மா" என்று தன் இரு கைகளால் தாங்கி இருந்தான் சந்திரன்.


அண்ணன் தன்னை தாங்கவும் வலியில் இருப்பவள் சந்திரனின் கையைபிடித்துக் கொண்டு "வலிக்குது ணா... அம்மா... வலிக்குது..." என்று வலியில் கத்தினாள்.


"ஒன்னும் இல்லடா... ஒன்னும் இல்ல...என்று அவளிடம் தன்மையாய் கூறினாலும் "அம்மா இங்க வாம்மா... உள்ள என்னம்மா பண்ற... தேவா வலில கத்துறாமா... அம்மா..." என்று உரக்க கத்திய சந்திரனுக்கும் முகத்தில் பதட்டமும் பயமும் நிறைந்திருந்தது.


சந்திரனின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த மரகதம் அவள் நிலையை பார்த்து "அய்யோ என் பொண்ணு" என்று பதறியவர் "என்னய்யா ஏன் இப்படி இருக்கா?" என்று கேட்க,


"தெரியலம்மா விழக்கூட இல்ல வலிக்குதுன்னு கத்துற" என்றான் அவள் படும் வேதனையை காண சகியாதவனாய்.


அவளுக்கு எங்கேயாவது அடிப்பட்டு இருக்கிறதா அதனால் தான் வலி என்கிறாளோ என்று ஆராய தேவாவிற்கு வலி அதிகமாகியிருந்தது. "அம்மா முடியல அம்மா" என்று கலங்கியவளுக்கு கண்கள் இரண்டும் கொவ்வை பழமாய் சிவந்திருந்தது..


அவளின் நிலை புரிந்த மரகதம் "சந்திரா அவளுக்கு பிரசவ வலி வந்துட்டது போல சீக்கிரம் ஆஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம்" என்றார் விஷயம் அறிந்தவராய்..


அவர் கூறியதும் தன் இருகைகளால் அவளை தாங்கியவன் "கொஞ்சம் பொருத்துக்க டா... ஹாஸ்பிட்டல் போயிடலாம்..." என்று அவளுக்கு ஆறுதலை கூறியபடி "அம்மா அந்த கார் சாவிய எடு... வெளியே முருகன் இருப்பான் வண்டிய எடுக்கச் சொல்லு..." என்று அடுத்தடுத்து அவருக்கு கூறியவன் அவளை காருக்கு அழைத்து சென்றான்.


நொடிப்பொழுதில் மரகதம் பெண்ணிற்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மேகலாவின் அம்மாவிற்கு அழைத்து வீட்டை பார்த்துக்கொள்ள கூறியவர் போனில் கணவருடன் பேசியபடியே காருக்கு அருகில் சென்றிருந்தார்.


விசாகனுக்கும் அழைத்து விஷயத்தை கூறிட கிளம்பிய அரைமணி நேரத்தில் அவனும் மருத்துவமனைக்கு விரைந்து இருந்தவன், தில்லைக்கும் செய்தி சொல்லி அவரையும் மருத்துவமனைக்கு வரச்சொல்லி இருந்தான்.


இருக்கும் பதட்டத்தில் வண்டியை ஓட்ட முடியாது என்று முருகனை வண்டியை எடுக்க சொல்லி முன்பக்க இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் சந்திரன்.


முன்சீட்டில் சந்திரன் அமர்ந்து இருந்தாலும் பின்பக்கம் திரும்பி அவளின் கையை பிடித்து தைரியம் சொல்லியபடி வந்தான். அவள் துடித்த போதெல்லாம் அவனும் சேர்த்தே துடித்தான். அரைமணி நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து பிரசவ அறையில் அவளை அனுமதித்து இருக்க அவர்களுக்கு பின்னாலையே விசாகனும் சௌந்தலிங்கமும் வந்தனர்.


விசாகனுக்கு பயத்தில் முகமெல்லாம் வியர்த்து விட்டது மனைவியை காண வேண்டும் என பதட்டமாய் இருந்தவனுக்கு, வெளியே தவிப்புடன் நின்றிருந்த சந்திரனை பார்க்கவே பாவமாய் இருந்தது. அவள் சென்ற திக்கையே பார்த்து இருந்தான்.பிரசவ அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவரிடம் முந்தி சென்று "டாக்டர் தேவா எப்படி இருக்கா" என்றான் சந்திரன் பயத்துடன்.


"வொன்ட் வொரி மிஸ்டர் அவங்களுக்கு பெய்ன் வந்துடுச்சி 90 பர்ஸன்ட் நார்மல் டெலிவரி தான் நடக்கும்... இன்னும் ஒன் ஆர் 2 ஹவர்ஸ்ல குழந்தை பிறந்துடும்..." என்று தைரியம் கூறி சென்றார்.


அதன் பிறகுதான் ஆஸ்வாகமாக மூச்சே விட முடிந்தது விசாகனுக்கும் சந்திரனுக்கும்.


சௌந்தரலிங்கம் மகனின் நடவடிக்கையும் பார்த்து இருந்தவர் சாய்வாக நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார். அவரும் மகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். மனதில் அத்தனை வேண்டுதல்களுடன்.


அவரசமாகவும் பதட்டமாகவும் வந்த தில்லை "அம்மா, சாமுண்டி, என் பேத்தியையும் அவ வயித்துல இருக்க சிசுவையும் நல்லபடியா பெத்து எடுத்து வரனும் தாயே... உனக்கு பொங்க வைச்சி பாலாபிஷேகம் பண்ற தாயே..." என்று வேண்டிக்கொண்டவர் அனைவருக்கும் தைரியம் சொல்லியவராய் அங்கயே நின்றார்.


அவருக்கும் சந்திரன் அமர்ந்த கோலமே அவனின் மனதை உரைக்க தில்லைக்கு வருத்தமாய் இருந்தது. 'இவ்வளவு பாசம் இருக்கவன் அவளிடம் ஏன் கடுமையாக நடந்துக்கொண்டான்' என்று தான் அப்போது தோன்றியது.


சந்திரனின் நிலையை அறிந்து ஆறுதலாய் தோளின் மேல் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான் விசாகன். படற முடியாமல் கிடந்த கொடிக்கு பற்றுதலாய் ஒரு இடம் கிடைத்ததைப் போல விசாகனின் கரங்களை இறுக பற்றிக்கொண்ட சந்திரன்.


"அவளுக்கு இவ்வளவு வலியை எல்லாம் தாங்க முடியாது விசாகன்.. ஒரு முல்லு குத்தினாக் கூட வலிபொருக்காதவ, அவ கத்தினது கேக்கவே ஒருமாதிரியா இருக்குது..." என்று கண்ணீரை விடவும் ஒரு ஆண்மகனாய் இருந்தாலும் தங்கைக்காக அழும் சந்திரனை பார்க்க அவனுக்கு என்னவோப் போல் இருந்தது.


"ஒன்னும் ஆகாது மச்சான் நல்லபடியா அவ குழந்தையோட வருவா" என்று உள்ளுக்குள் தளர்ந்து போகும் தனக்கும் சேர்த்து ஆறுதலைக் கூறி இருந்தான்.


மரகதத்திற்கு மகளின் வேதனை ஒரு புறம் இருந்தாலும் எதிரும் புதிருமாய் இருந்தவர்கள் இன்று ஒன்றாய் இருப்பதை கண்டு மனம் நெகிழ்ந்து போனது. சௌந்தரலிங்கம் கூட சந்திரனை ஆச்சர்யமாய் பார்த்தார்.


இரண்டு மணி நேரமாய் வெளியே இருந்தவர்களை எல்லாம் தவிக்கவிட்டு தேவாவை ஒருபாடு படுத்தி அவளுடைய செல்வ மகள் இப்பூ உலகில் ஜனனம் எடுத்தாள். செவிலிப்பெண் வந்து குழந்தையை காட்டவும் இவ்வளவு நேரம் தவிப்புடனும் பயத்துடனும் அமர்ந்திருந்த சந்திரன் சட்டென சென்று "சிஸ்டர் தேவா" என்று சந்திரன் வார்த்தை வாரமல் திணறினான்.


"நல்லா இருக்காங்க சார்... மயக்குத்துல இருக்காங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல வார்டுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க போய் பாருங்க... என்று அவனுக்கு பதிலை கூறியவர் ரோஜா செண்டை போல இருந்த குழந்தையை அவனிடம் நீட்டினார்.


ஒரு நிமிடம் தயங்கி நின்றிருந்தவனை ஊக்கிய "விசாகன் இன்னும் என்ன தயக்கம்...


வாங்குங்க மாச்சான் உங்க மருமகள" என்று உரிமையுடன் கூறவும் கண்கள் மின்ன குழந்தையை வாங்கியவன் மகிழ்ச்சியுடன் அதனை பார்த்துப் பூரித்துப் போனான். "என் செல்லம், என் அம்மு என் தங்கம்" என்று குழந்தையை கொஞ்சியவன் விசாகனிடம் கொடுத்து அதன் பிஞ்சி பாதங்களை வருடி முத்தம் வைத்து, தங்கையை காண ஆவலாய் நின்றிருந்தான். அவன் குழந்தையே பார்த்த பிறகுதான் தில்லை மரகதம் சௌந்தலிங்கம் என்று அனைவரும் குழந்தையை பார்த்தனர்.


சிறிது நேரத்திற்கு பிறகு தேவாவை தனி அறைக்கு மாற்றிட வாடிய வெற்றிலை கொடியாய் துவண்டு போய் கிடந்தவளின் உச்சியில் முத்தம் வைத்த தில்லை, குழந்தைக்கு திருஷ்டியை கழித்து "அப்படியே உன்னைய உருச்சி வைச்சிருக்குத்தா" என்று குழந்தையை கொஞ்சிவிட்டு பத்திய சாதத்தை எடுத்துவர சென்றார்.


மரகதமும் சௌந்தலிங்கமும் மகிழ்ச்சியும் பூரிப்புமாய் குழந்தையின் அருகில் நின்றிருந்தனர். ஆதுரமாய் மகளின் தலையை வருடிய சௌந்தரலிங்கம், ரோஜா குவியலாய் பிறந்த குழந்தையின் பிஞ்சி கால் கைகளை தொட்டு முத்தம் வைத்து கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து இருவரும் வெளியேறியதும்


மனைவியின் அருகில் சென்றவன் அவள் முன் நெற்றியில் முத்தம் வைத்து "ரொம்ப படுத்திட்டா இல்ல டா பாப்பா" என்றவன் அவள் கரங்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். சந்திரன் தன் தவிப்பையெல்லாம் வெளியில் காட்டிவிட்டான். இவன் காட்டவில்லை அவ்வளவே வித்தியாசம். அவன் வெளியே நின்ற ஒவ்வொரு நிமிடமும் நகரகத்தை விட கொடிய இடமாக உணர்ந்திருந்தான்.


ம் என்னும் விதமாய் தலை அசைத்தவள் கணவனின் மனம் புரிய "இந்த பிஞ்சு முகத்தை பார்த்ததும், எனக்கு இப்போ அந்த வலி வலியாவே தெரியல மாமா... அவ்வளவு சந்தோஷமா இருக்கு... நமக்கு நமக்கேன்னு ஒரு குட்டி பாப்பா " என்று கண்கள் மகிழ்ச்சியில் மின்ன சந்தோஷமாய் கூறியவள் அவன் கரங்களுக்கு அழத்தமாய் ஒரு இதழொற்றலை கொடுத்து அவனை தேற்றினாள்.


அதன் பின் விசாகனுக்கு சந்திரனின் நினைப்பு வர "எங்க எல்லாரையும் விட உங்க அண்ணன் ரொம்ப தவிச்சிட்டான் சனா... அவன் முகத்தை பாக்கனுமே!! நீ நல்லபடியா இருக்கன்னு நர்ஸ் வந்து சொல்ற வரை அவனுக்கு உயிரே இல்ல... சரியான பாசமலரா இருக்கான் டி எனக்கே பொறாமையா இருக்கு உன் அண்ணங்காரன பார்த்தா" என்று சந்திரனை மனைவியிடம் கிண்டலாக கூறினாலும் அதில் பெருமையும் சேர்ந்திருந்தது..


"ரொம்ப பேசுறிங்க எங்க அண்ணனை... பாவம் அவன்... போங்க..." என்று அவனிடம் கூறினாலும் "எனக்கு அவனை பாக்கனும் போல இருக்கு வர சொல்றிங்களா?" என்றாள் தேவா.


"வெளிய தான் இருக்கான்... இரு கூப்பிடுறேன்... நீ பேசினா தான் அவன் தெளிவான்... அவ்வளவு பைத்தியமா இருக்கான் உன் மேல எனக்கே டப் கொடுக்குறான் " என்று சிரித்தபடி கூறிவிட்டு அவனை அழைக்க சென்ற, கணவனின் கூற்று அவளுக்கும் புன்னகையை தோற்றுவித்திருந்தது.


சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த சந்திரன் தங்கையின் அருகில் அமர்ந்தான். தன்னையே உறுத்து நோக்கும் தேவாவின் கண்களை காணமுடியாது , "தயக்கமாக என்னை மன்னிச்சிடு செல்லம்மா" என்றான் கரகரப்பான குரலில்.


அவன் பேசியதை கேட்டதும் உற்ச்சாக குரலில் "பேசிட்ட அண்ணா... என்கிட்ட பேசிட்ட... நீயா என்கிட்ட பேசிட்ட..". என்றவளுக்கு சிரிப்புடன் கண்களில் இருந்து கண்ணீர் துளிர்த்தது.


அவள் கண்ணீரை கண்டு துணுக்குற்றவன் "அழதடா செல்லம்மா இப்போ தான்டா நீ சரியாகி இருக்க அதுக்குள்ள இவ்வளவு சத்தமா பேசக்குடாது டா" என்று அன்புடன் கூறவும்


"எத்தனை நாள் ஆச்சி தெரியுமா நீ இந்த மாதிரி என்னை கூப்பிட்டு இவ்வளவு பாசமா, அன்பா பேசி, ஒவ்வொரு நாளும், நீ இப்போ கூப்பிடுவ அப்போ கூப்பிடுவன்னு ஆசைய இருந்தேன். ஆனா ஒரு முறை கூட என்னை பாக்க வரல... எங்கிட்ட பேசவே உனக்கு இத்தனை நாள் ஆச்சில்ல"


"தேவை இல்ல போ.... பேசாத வேணா நீ... உன் மன்னிப்பும் வேணா... நீ பாசமா பேச வேண்டாம் போ நான் உன் மேல கோவமா இருக்கேன் போ... போ.. போ..." என்று அழுதுக் கொண்டே கூறும் தங்கையின் சொற்கள் அவளை இன்னும் சிறுபிள்ளையாகவே காட்டியது


"ப்ளீஸ் டா.... அண்ணனை மன்னிச்சிடு டா..." என்று அவள் கைபிடித்து உறுக்கமாய் பேசியவன் "எனக்கும் உன்கிட்ட பேசனும்னு தாண்ட ஆசை... மனசு அடிச்சுக்கும் ஆனா உன்னை நான் தானே இந்த இக்கட்டில் தள்ளி விட்டேன்னு ஒரு குற்றவுணர்ச்சி.... உன் பேச்சை கேக்கலையேன்னு என் மேலேயே எனக்கு கோவம்... என்னை பேச விடாது... உண்மை தெரிஞ்சும் பேச முடியாம தவிச்சேன் டா" என்ற போது சந்திரனின் குரல் உடைய, அதில் தானும் கலங்கியவளாக அவன் கரம் பற்றி அவனை இளகுவாக்கியவள், இனி இதை பற்றி பேச வேண்டாம். என்று முடிவு எடுத்தவளாய்


" வேண்டாம் ணா இனி இது பத்தி பேச வேண்டாம் பேசி பேசி கஷ்டபட்டது எல்லாம் போதும்" என்று பெரியமனுஷியாய் பேசியவள்


"விடுண்ணே இந்த ரெண்டு வருஷத்துக்கும் சேர்த்து உன்னை படுத்தி எடுக்கப்போறேன் பாரு.... கூடவே என் பொண்ணும் சேர்த்து படுத்த போறா..." என்று சிறுபிள்ளையாய் மாறி அவனை மிரட்டினாள்.


அவனுக்கு தங்கையின் இந்த இலகுவான பேச்சிலும் பழசை பேசி ரணமாக்கிக் கொள்ளாமல் தற்போதைய நிகழ்வுகளை பேசி தங்களின் மனதை ஆற்றிக்கொள்ள, அதை அமோதித்திப்பது போல் "அதுக்கு தானேடா காத்திருக்கேன்" என்று சந்திரனும் சிரித்தான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN