6. என் பார்வை உனக்கும் இரகசியமா?

Sankaridayalan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பறவைகளின் ரீங்கார நாதம் அலாரம் சப்தத்தைப் போல என்னை மெது மெதுவாக உறக்கத்தில் இருந்து எழுப்பியது. இன்னும் நான் என் ஹரியின் கைவளைவிலையேதான் படுத்துக்கொண்டு இருந்தேன்.


என் இடையைச் சுற்றி கெட்டியாக தன் கைகளால் பிடித்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார். அவரின் நெற்றியில் புன்னகையுடன் இதழ் பதித்து அவரின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக அவரின் கைகளை என் மீதிருந்து எடுத்தேன்.


அப்படியே எங்களின் கட்டிலுக்கு அருகிலிருந்த டேபிளில் வைத்திருந்த என் அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். மணி ஆறு அடிக்க பத்து நிமிடம் இருப்பதாகக் காட்டியது. எங்களின் திருமண வரவேற்பிற்கு புடவை புதுத்துணிமணிகள் எடுப்பதற்காக பத்து மணிக்கு ஜவுளிக்கடைக்கு செல்ல வேண்டும் என அத்தையின் உத்தரவு…


குளியலறைக்குச் சென்று முகம் கழுவிவிட்டு வெளியே வந்தேன். எனக்கு சாதாரணமாகவே இந்த அதிகாலை வேளையில் எழுந்து கொள்ள மிகவும் பிடிக்கும்… மாசுபாடில்லாத காற்றினை சுவாசிக்க யாருக்குத்தான் பிடிக்காது… அதுவும் இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளையாக இருக்கும் இந்த கோத்தகிரியின் விடியற்காலை அழகை பார்க்கும் ஆவலில் சாளரத்தின் திரைச்சீலையை விலக்கி விட்டேன். அந்த காலை வேளையில் உதயமாகும் ஆதித்யனின் இளஞ்சிவப்பு வண்ணம் ஏதோ என் மனதில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது.


இந்த நேரத்தில் சூடாக தேநீர் குடிக்க என் நாவின் சுவையரும்புகள் விரும்பின. சமையலறையோ கீழே இருக்கிறது. சரி நானே என்னுடைய தேநீரை தயாரித்துக் கொள்ளலாம் என எண்ணியபடியே தலைமுடியை ஒழுங்காக சீவிக்கொண்டேன். ஒரு முறை கண்ணாடியைப் பார்த்து உடையைத் திருத்திக்கொண்டு சமயலறையை நோக்கிச் சென்றேன்.


நல்ல விஸ்தாரமான சமையலறை… பார்க்கவே சமைக்க ஆசையாக இருந்தது. அவ்வளவு சுத்தம். நான் சமையலறைக்குள் நுழையும்போதே வேலைக்காரப் பெண் என்னைப் பார்த்துவிட்டாள்.


என்னைப் பார்த்தவுடன் மடமடவென ஒரு கப் அன்ட் சாசரை எடுத்து சூடு பறக்க தேநீரைக் கலந்து தந்தாள்.ஒரு சிநேகப் புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டேன்.


"அம்மா… சின்ன அய்யா எழுந்துட்டாரா… அவருக்கும் டீ கலந்து எடுத்துட்டு வரவா?" அவளிடமிருந்து பவ்யமான குரல் வந்தது.


"இல்ல வேண்டாம்… அவர் இன்னும் எழுந்துக்கலை …கொஞ்ச நேரம் தூங்கட்டும்… " என வேலைக்காரப் பெண்ணிடம் கூறிவிட்டு என் தேநீர்க் கோப்பையுடன் சமயலறையிலிருந்து வெளிவந்தேன்.


அப்படியே வெளியே சென்று தோட்டத்தில் போடப்பட்ட ஊஞ்சலில் சென்று அமர்ந்தேன். அதிகாலை வேளை, ஊஞ்சள், தோட்டத்தின் வண்ண மலர்களின் வாசம், இளஞ்சூரியனின் ஸ்பரிசம், மலைப் பிரதேசம்,கையில் தேநீர்… ஆஹா… அது ஒரு அலாதியான சுகத்தை எனக்குத் தந்துகொண்டிருந்தது…


" ஹாய் அக்கா…இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்கீங்க…? இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்களே… எங்களுக்கு இந்த குளிர்ல எழுந்து பழக்கமாகிடுச்சு… நீங்க கொஞ்சம் தூங்கிருக்கலாம்ல" என்றபடி ஒரு கையில் தேநீர்க் கோப்பையையும் மறு கையில் தி ஹிண்டுவையும் எடுத்துக்கொண்டு மஞ்சு வந்து நின்றாள்.


நானும் புன்னகை மாறாமல்"பரவாயில்லை மஞ்சு… இன்னைக்கு ஜவுளி எடுக்க போகனும்னு அத்தை சொல்லியிருந்தாங்கல்ல அதான் சீக்கிரமே எழுந்துட்டேன். இங்க வியூவ்ஸ் நல்லா இருக்குன்னு வந்து பார்த்துட்டு இருக்கேன்…" என்று அவளின் கேள்விக்கு பதிலளித்தேன் நான்.


"ஹாஹா…எங்க கோத்தகிரியோட அழகை இரசிக்காம போனாதான் அதிசயம்…"என்று தங்களது ஊரைப் பற்றி பெருமையாகக் கூறியவள் திடீரென்று "பத்து மணிக்குதான நாம கடைக்கு கிளம்பறோம்... இப்ப நீங்க ஃபீரீயா தானே இருக்கீங்க… உங்க லவ் ஸ்டோரி பத்தி சொல்லுங்களேன்... ப்ளீஸ்…" ஏறத்தாழ கெஞ்சிக்கொண்டிருந்தாள் மஞ்சு.


அவள் அப்படி கேட்டவுடன் எனக்கும் பழைய நினைவுகள் வந்து ஆட்கொண்டது. மஞ்சுவும் அடிக்கடி இதைப் பற்றி கேட்டுக்கொண்டிருப்பதால் அவளிடம் எங்களின் காதல் கதையைப் பற்றிக் கூற ஆரம்பித்தேன் அந்த நிகழ்வுகளெல்லாம் அப்படியே என் கண் முன் காட்சிகளாக விரிந்துகொண்டிருந்தன.


சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு…

எங்களின் கல்லூரி சென்னையில் மிக புகழ் பெற்ற கல்லூரி… நான் அப்போதுதான் பன்னிரென்டாம் வகுப்பு முடித்து B.sc முதல் வருடம் சேர்ந்திருந்தேன். இதுவரையில் சீருடையிலேயே பள்ளிக்கு சென்று வந்துகொண்டிருந்த எங்களுக்கு வண்ண வண்ண உடைகளை அணியும் வாய்ப்பு…நானும் என் தோழி மயூராவும் கல்லூரி செல்லும்போது அணிய பிரத்யேகமாக பல சுடிதார்களைத் தேடி தேடி வாங்கினோம். மயூரா… வாயாடிப் பெண் என் சிறுவயதிலிருந்தே இருவரும் இணைபிரியாமல் சுற்றிக்கொண்டிருப்போம்… ஒரே பள்ளி , ஒரே வகுப்பு ,எங்களின் வீடுகளும் அருகருகே தான் இருக்கும் … இதுபோதாதா எப்போதும் இணைபிரியாமல் இருப்பதற்கு.


எங்களின் சுடிதாரின் வண்ணங்களைப் போன்றே பல வித கனவுகளுடன் நானும் மயூராவும் கல்லூரிக்குச் சென்றோம்.அது ஒரு வண்ண உலகம் என்னதான் அசைன்மென்ட்,டெஸ்ட்,பிராக்டிகல்ஸ்,

எக்ஸாம் என இருந்தாலும் எங்களின் கேளிக்கைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்தது.


எங்களுக்கு முதல் பருவத்தேர்வு நடந்து முடிந்து இரண்டாம் பருவத்திற்கான பாடங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது தான் வரும் வெள்ளிக்கிழமை ஒரு செமினாருக்காக தரமணியில் உள்ள ஒரு ஆய்வு மையத்திற்கு செல்ல எங்களின் துறைத் தலைவர் சுற்றறிக்கையை விட்டிருந்தார்.


செமினாருக்கான நாளும் வந்தது நானும் மயூவும் செமினாருக்காக பேருந்து எடுத்து தரமணிக்கு சென்றுவிட்டோம். ஆனால் அந்த ஆய்வு மையம்தான் எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை… யாரிடமும் வழி கேட்கவும் கொஞ்சம் அச்சம்… நேரமும் விரயமாகிக்கொண்டு இருந்தது. மயூவோ "வா வானு ஏதாவது ஆட்டோக்காரர் கிட்ட வழி கேட்கலாம்… இங்கேயே சுத்திட்டு இருந்தா வேலைக்கு ஆகாது" என்று எரிச்சல் மண்டிய குரலில் கூறினாள்.


இப்படியே நாங்கள் அங்கேயே சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்க நல்ல வேளையாக அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோ அங்கு நின்றது. அந்த ஆட்டோக்காரரிடம் அந்த குறிப்பிட்ட ஆய்வு மையத்தின் பெயரைச் சொல்லி வழி கேட்க அவரும் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார்.


அப்போதுதான் அந்த ஆட்டோவிலிருந்து ஒரு இளைஞன் இறங்கினான். அவன் எங்களிடம் " நான் அந்த ரிசர்ச் சென்டருக்குத்தான் போய்ட்டிருக்கேன்… வேணும்னா என் கூட வாங்களேன்" என சாதாரணமாக கேட்டான்.


நானும் மயூவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.என் மனதிலோ முன் பின் தெரியாத ஆடவனுடன் எப்படிச் செல்வது… அவன் நல்லவனோ கெட்டவனோ என பலவித எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.


அவனுக்கு நான் பதிலளிக்கும் முன்னரே என்னை முந்திக்கொண்டு " ஓகே அண்ணா… அங்க ஒரு செமினார் இருக்கு… சீக்கிரம் போகனும்னா… "என ஒப்புக் கொண்டாள் மயூ.


அவனும் புன்னகையுடன் "ஓகே… வாங்க போகலாம்" என்றபடி எங்களை அழைத்துக் கொண்டு சென்றான்.


நான் அவனுக்கு கேட்காதபடி மயூவினிடம்"ஏய் மயூ… இவன் யாருன்னே தெரியலை… இப்படி முன்ன பின்ன தெரியாத ஆளு அட்ரெஸ் சொல்றேன்னு சொல்லி கூப்பிட்டா உடனே ஓகே சொல்லிடுவியா…" கோபத்துடன்தான் கேட்டேன்.


"அடியேய் இந்த பட்ட பகல்ல யாரு என்ன பண்ணிட முடியும்… சும்மா எல்லாரையும் சந்தேகப்பட்டுட்டு இருக்காத… அவனைப் பார்த்தா அப்படி ஒன்னும் தப்பா தெரியலை…பாவம் வலிய வந்து ஹெல்ப் பன்றாரு…"


அவள் கூறக் கூற அவளையே முறைத்துக் கொண்டிருந்தேன் " தாயே பத்ரகாளி ஏன் இப்படி முறைக்கிற… இது முக்கியமான செமினார்னு உனக்கு தெரியும்ல… இப்ப என்ன ஆச்சு? இவன் ஏதாவது இடக்கு பண்ணாண்ணா அதான் கையில எப்பவுமே வச்சிருப்பியே பெப்பர் ஸ்ப்ரே, மிளகாப் போடி , பாக்கெட் நைஃப், கராத்தே எல்லாம் சேர்ந்து நம்மளைக் காப்பாத்தும் இப்ப அமைதியா வா " எனக் கூறி என்னைச் சமாதானப்படுத்தினாள் மயூ.ஐ


ஒரு பத்து நிமிட நடைப் பயணத்தில்

Go green national research institute என்ற பெயர் பலகையைத் தாங்கி அந்த ஆய்வு மையம் தெரிந்தது. அந்த பெயர்ப் பலகையைப் பார்த்ததும்தான் என்னிடம் ஆஸ்வாசப் பெருமூச்சு எழுந்தது.


அந்த ஆய்வு மையத்தின் வளாகத்தை அடைந்ததும் மயூ அவனிடம் " ரொம்ப தேங்கஸ் அண்ணா… இன்னைக்கு ரொம்ப முக்கியமான செமினார் இருக்கு… நீங்க கரெக்ட் டைம்க்கு வந்து ஹெல்ப் பண்ணலைன்னா இன்னும் அங்கதான் இருந்துருப்போம்... தேங்க்யூ சோ மச் அண்ணா" என அவனுக்கு நன்றி தெரிவித்தாள்.


நானும் ஒரு மரியாதைக்காக அவனிடம் "தேங்க் யூ சொ மச் ஃபார் யுவர் ஹெல்ப்"என்று கூறினேன். அதற்கு அவனோ "நீங்க ஏன் தேங்கஸ் சொல்ரீங்க என் மேல பெப்பர் ஸ்ப்ரே , மிளகாய்ப் பொடி இதெல்லாம் யூஸ் பண்ணாததுக்கு நான் தான் தேங்கஸ் சொல்லனும்" என்று கூறி அதிர்ச்சி அளித்தான்.


நானும் மயூவும் பேசியது அவனுக்கு கேட்டிருக்கும் போல, உடனே நான் "இல்ல இல்ல… அதெல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான் … ப்ளீஸ் நாங்க பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்" என மன்னிப்பு கேட்டேன்.


"ஹாஹா … இல்ல… நான் தப்பா எதுவும் நினைக்கலை… இந்த திங்க்ஸ்லாம் கண்டிப்பா எல்லா பொண்ணுங்க கிட்டயும் இருக்கனும்…நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன்" எனக் கூறி புன்னகைத்தான்.பின் "ஓகே… எனக்கும் டைம் ஆகுது… நான் கிளம்பறேன்" எனக் கூறி அந்த ஆய்வு மையத்திற்குள் சென்று மறைந்தான் அவன்.


அதற்குள் செமினாருக்கு நேரம் ஆகிக்கொண்டிருப்பதை உணர்ந்து நானும் மயூவும் அந்த ஆய்வு மையத்தின் செமினார் ஹாலுக்குச் சென்றோம்.


பல கல்லூரிகளில் இருந்தும் மாணவர்களும் விரிவுரையாளர்களும் அங்கு குழுமியிருந்தனர். இரண்டு மூன்று பேர் உரையை நிகழ்த்தி முடித்திருந்தபோது தேநீர் இடைவேளை விடப்பட்டது.


நானும் மயூவும் தேநீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டு அங்கு காலியாக இருந்த ஒரு டேபிளில் சென்று அமர்ந்தோம்.அங்கு அமர்ந்த சில நொடிகளில் என்னை யாரோ உற்று நோக்குவது போன்று உள்ளுணர்வு சோல்லவே சுற்றும் முற்றும் பார்த்த எனக்கு எதிர் டேபிளில் அமர்ந்து கையில் வைத்திருக்கும் கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த அவன்தான் கண்களில் அகப்பட்டான்.


"ச்ச.. ச்ச… இவன் ஏதோ பேப்பர்ஸ செக் பண்ணிட்டு இருக்கான்… நம்மளை ஏன் பார்க்கப்போறான்" என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.பின் தேநீர் இடைவேளை முடியவும் மீண்டும் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குச் சென்றோம்.


அனைவரும் அமர்ந்ததும் செமினாருக்கான தலைப்பில் இப்போது உரையாடப்போவது ஹரிஹரன் …மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல் என்று அழைத்தார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்.


நானும் மயூவும் பரவாயில்லையே 3rd இயர்லயே செமினாருக்கு ரெடி பண்ணிருங்காங்களே… பெரிய அறிவு ஜீவிதான் என்று எண்ணிக்கொண்டு இருக்கையில்தான் மேடையில் அந்த ஹரிஹரன் பிரசன்னமானான். என் ஹரி… அவனைப் பார்த்த உடனே மயூ " ஏய் வானு …நமக்கு ஹேல்ப் பண்ண அண்ணா டி…அவர்தான் செமினார் எடுக்க போராரு போலடி" எனச் சொல்லியபடி அவனின் உரையை கவனிக்கலானாள். அவளுடன் நானும்.


அது ஒரு அற்புதமான உரை அந்த கருத்தரங்கம் எனும் கிரீடத்தில் வைரமாய் ஜொலித்தது அவனின் உரை. அந்த கருத்தரங்கு முடிந்ததும் அவனிடம் ஏராளமானோர் சென்று அவனின் உரைக்காக வாழ்த்து தெரிவித்தனர். மரியாதை நிமித்தமாக நானும் மயூவும் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க அவனிடம் சென்றோம்.


மயூ குதூகலத்துடன்"அண்ணா செமினார்ல உங்க ஸ்பீச் ரொம்ப சூப்பர் அண்ணா…"என மகிழ்ச்சி பொங்க கூறினாள்.


"ஆமா ஆமா நிறைய விஷயங்களைப் பத்தி நாங்க இன்னைக்கு கத்துகிட்டோம்… எல்லா விஷயத்தையும் ரொம்ப ஈஸியா சிம்பிளா விளக்கிட்டீங்க...எங்களுக்கு அடுத்த செமஸ்டர்ல இந்த டாபிக் தான் சிலபஸ்ல வரப்போகுது… உங்க ஸ்பீச்ச வைச்சே நாங்க எக்ஸாம் எழுதிடலாம் போல...ரொம்ப தேங்கஸ்" எனக் கூறினேன்.


நான் அவனைப் புகழ்ந்ததும் அதுவரை அவனிடம் இருந்த புன்சிரிப்பு இன்னும் அதிகரித்து முகம் இன்னும் பிரகாசமாகியது. அது எனக்கு மட்டுமே தோன்றிய பிரமையோ என்னவோ என நான் முதலில் அதைக் கவனியாமல் விட்டுவிட்டேன்.


பிறகு அவனை அந்த கருத்தரங்கத்திற்கு வந்த மற்ற மாணவர்கள் சூழ்ந்துகொண்டனர்.


நானும் மயூவும் அங்கிருந்து எங்களின் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.அப்போது மயூ திடீரென"ஏன்டி வானு… அந்த செமினார் எடுத்தானே ஹரி… அவன நீ விஷ் பண்ண உடனே அவனுக்கு முகமே மாறிடுச்சு பார்த்தியா" எனக் கேட்டாள்.


ஓ.. அப்போது அது உண்மை தானோ...எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றியது என்றல்லவா நினைத்துவிட்டேன் என மனதிற்குள் எண்ணியபடி "இல்ல இல்ல … நான் அதையெல்லாம் கவனிக்கலை "என்று உடனே மறுதலித்தேன் நான்.


"ஏய் இல்லடி… நாம மார்னிங் அவன் கூட வந்தோம்ல அப்பவே அவன் பார்வை அடிக்கடி உன் மேலேயே இருந்துச்சு…அப்புறம் டீ ப்ரேக்ல கூட உன்னை அடிக்கடி பார்த்துட்டு இருந்தாரு... இப்போ நீ விஷ் பண்ண உடனே ஃபேஸே பிரகாசமாகிடுச்சு…அதான் நீ இதெல்லாம் நோட் பண்ணியான்னு கேட்டேன்" என்றாள் சாவகாசமாக…


"அம்மா தாயே நான் எதுவும் நோட் பண்ணலை… அவன் நாம வழி தெரியாம நின்னப்போ ஹெல்ப் பண்ணான், செமினார்ல நல்லா ஸ்பீச் கொடுத்தான்… அவ்ளோதான் … அத்தோட அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் எதுவும் இல்ல… சும்மா அவனுக்கு முகம் மாறிடுச்சு, மூக்கு கோணிக்குச்சுன்னு சொல்லிட்டு என்கிட்ட வராத…"என கடுப்புடன் சொன்னேன் நான்.


"இப்போ ஏன் இப்படி கோபப்படுற… நான் பார்த்ததை தானே சொன்னேன்… அதுக்கு இப்படி எரிஞ்சு விழறியே…இனி அவனைப் பத்தி பேச மாட்டேன்மா… இப்படி கண்ண கண்ண உருட்டி காமிக்காத பத்ரகாளி… பயமா இருக்கு " எனக் கூறி என்னை சமாதானப்படுத்தினாள்.


"ஹ்ம்ம்… அது… அந்த பயம் இருக்கனும் என்னைப் பார்த்தா…சில்லி கேர்ள்"என்று அவளை கிண்டல் செய்யும் தொனியில் கூறியவுடன் என்னை முறைப்பது அவளின் முறையாயிற்று… இப்படி சண்டையும் கேலியும் மாறி மாறி எங்களின் பேச்சில் இருக்க அடுத்த சில நிமிடங்களில் பேருந்து வந்து எங்களை அள்ளிக்கொண்டு சென்றது.


மறுநாள் காலை கல்லூரி சென்றவுடன் நேற்று நடந்த கருத்தரங்கத்தைப் பற்றித்தான் மாணவர்களிடம் ஒரே பேச்சு… அதிலும் அந்த ஹரி யைப் பற்றித்தான்…பேச்சு செமினாரின் தலைப்பைப் பற்றியது அல்ல… அவனின் வசீகரத் தோற்றத்தைப் பற்றியது. ஒரே நாளில் எங்கள் வகுப்பு மாணவிகளுக்கு கனவு நாயகனாகவே மாறிவிட்டான்.


இதைப் பற்றியெல்லாம் அதிகம் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் என் புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன் நான், விரைவிலேயே அவன் எனக்கு கதாநாயகன் ஆகப் போகிறான் என்று அறியாமல்...
 

Author: Sankaridayalan
Article Title: 6. என் பார்வை உனக்கும் இரகசியமா?
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN