மூங்கில் நிலா -9

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அறைக்குள் நுழைந்தவளின் மனது அமைதியில்லாது தவித்தது. தான் உயிராய் காதலித்தவன் தான், உதறிவிட்டு போனவன் தான்.
பருவக் கிளர்ச்சி அது இதுவென்று கொன்று புதைத்த காதல் தான், இருந்தாலும் அதன் பின் ஒரு நாளும் அவள் நிம்மதியாய் உறங்கியதே இல்லையே. அவனை பழி வாங்கிவிட்டோம் என்று அப்போது மனதை திருப்தி படுத்திக் கொண்டாலும், அதன் பின் வந்த இரவுகள் அனைத்துமே துன்பத்தின் தொடர் கதையல்லவா? கண்களில் நீர் சுரந்தது. தன்மானத்தை விட்டு வசி முன் நிற்க அவள் என்றுமே விரும்பியது இல்லை.

மனம் குரங்குப் பிடியாய் அவன் அவளுக்கு செய்த காரியத்தையே நினைத்து தொலைத்தது. பட்டாம்பூச்சியின் சிறகை பிய்த்து போட்டது அவனல்லவா? ஏதேதோ சிந்தனையில் வனி உறங்கிப் போனாள். நள்ளிரவில் வனியின் உளறல் சத்தம் கேட்டு விழித்த வசி நேற்றிரவு போலவே வனி இன்றும் உறக்கத்தில் உளறுவதைக் கண்டு துணுக்குற்றான்.ஓடி சென்று வனியை தன் மார்போடு அணைத்துக் கொண்டவனுக்கு வனியின் இந்த மாறுபட்ட போக்கு குழப்பத்தை விளைவித்தது.

நேரில் சீறுபவள் இரவில் ஏன் இப்படி அனத்துகிறாள் என்பது அவனுக்கு புரியவில்லை. ஒருவாறு வனி ஆழ்ந்து உறங்கவும், அவளை மெத்தையில் கிடத்தியவன் நாசியில் மூலிகை நறுமணம் ஏறியது. அப்பொழுதுதான் வனியின் அறையை சுற்றிப் பார்த்தான்.
லாவண்டரின் வாசம் அறை முழுக்க பரவியிருந்தது. அறைக்கோடியில் தியானம் செய்வதற்கு எற்றாற்போல விரிப்புகளும் மஞ்சள் ஒளியை உமிழும் கிரிஸ்ட்டல் விளக்குகளும், வாசனை மலர்களுடன் மூலிகைகள் கலந்த பூ ஜாடியும் கண்ணில் பட்டது.
ஆழ்ந்து அதன் வாசத்தை சுவாசித்தவனுக்கு புரிந்தும் புரியாமலும் வனிக்குள் ஒளிந்திருக்கும் இரகசியங்களை அறிந்துக் கொள்ள தூண்டியது.

வீணே மனதை அலட்டிக் கொள்ளாமல் நிர்மலமாய் உறங்குபவளைப் பார்த்தான். உற்று நோக்கினால் மட்டுமே புலப்படும் அவள் குழந்தைத்தனம், அவள் உறங்குகையில் அழகாய் தெரிந்தது. முன்னுச்சி நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தவன் ஓசைப் படாது அறையை விட்டு அகன்றான். மறுநாள் விடிந்து எழுந்தவளுக்கு இரண்டு நாட்களாய் நிம்மதியான உறக்கமும் நெஞ்சில் எந்த கலக்கமும் இல்லாதிருப்பது அதிசயமாய் இருந்தது.

அழகான விடியலுக்கு நன்றி கூறியவள், காலை கடன்களை முடித்துக் கொண்டு செல்லம்மாவை வம்பு பண்ணக் கிளம்பினாள்.
இன்று பூவேலியை தன் கடையில் வேலைப் பார்க்கும் பூர்வக்குடி இனத்தை சேர்ந்த பொன்னியை பார்த்துக் கொள்ள சொல்லியிருந்தாள்.
அவர்கள் வீட்டு வேலைக்கு வந்திருந்த பொன்னிக்கு பூக்களின் மீது இருந்த காதலைக் கண்டு, வனி தன்னோடு வைத்துக் கொண்டாள்.பொன்னிக்கு எழுத படிக்கவும் கற்றுக் கொடுத்து, பூவேலைகள் செய்யவும் கற்றுக் கொடுத்தாள்.
பொன்னியும் வனியோடு வாகாய் ஒட்டிக்கொண்டாள். அவ்வப்போது காட்டு மலர்களையும், கொம்புத்தேனும் பொன்னி சார்பாய் பூவேலிக்கு வந்து விடும்.

பொன்னியின் சமூகத்திற்கும் வனி என்றால் பிரியமே. பலர் குலத் தொழிலை செய்தாலும் , சிலர் இவள் காய்கறி பண்ணையில் தொழிலாளர்களே. செல்லம்மா செய்து வைத்த இட்டிலியும் சாம்பாரும் உள்ளே இறங்கியவள், வசி இன்னும் உணவருந்த வராததை உணர்ந்தாள். செல்லம்மாவிடம் "ஆயா உங்க அருமை முதலாளிக்கு பசிக்கலயா? ஆளையே காணோம் "கேள்வி கேட்டவாறே கண்களால் மாடியை துழவினாள்.

"வனிக் கண்ணு தம்பி மொதலே சாப்பிட்டு ஆபிஸ்க்கு கிளம்பியாச்சு. இன்னிக்கு ஈவினிங் எங்கயோ போகணும்ணு சொல்லிட்டுப் போச்சுமா" செல்லம்மாவின் பதிலில் உற்சாகம் அடைந்தவள்,

"அந்த தடியன் வீட்லே இல்லையா ஆயா? இன்னும் ரெண்டு இட்லி வைங்க,தெம்பா சாப்பிடறேன்,
அவன் வந்திடுவானுதான் ரெண்டு இட்லியோட நிப்பாட்டிட்டேன், கொண்டு வாங்க ஆயா.சாப்பிட்டு நெறைய வேலைகள் செய்யணும். "

வனி பேச்சு ஆயாவுக்கு சிரிப்பை வரவழைத்தது.

"கண்ணு தாலி கட்டின புருஷன அப்படி சொல்லக்கூடாது தாயி, உம் புருஷன் என்ன தடியாவா இருக்கான்? டெய்லி உடற்பயிற்சி செஞ்சி நல்ல ஜம்முனு ராஜா கணக்கா தானே இருக்கான்? புள்ளைய அப்படி சொல்லாத தாயி " செல்லம்மாள் வசிக்கு பரிந்து பேசினார். பின்ன சிறு வயதிலிருந்து அவனை வளர்த்தவர் ஆயிற்றே.

"ம்ம்க்கும்.. ராஜா.. நீங்கதான் மெச்சிக்கணும் அவனை, சின்ன பிள்ளைணு பார்க்காம எனக்கு தாலி கட்டிடானே ஆயா.. நான் பாவம் இல்லையா? "வனி கண்ணில் வராத தண்ணியை துடைத்தவாறு சிணுங்கினாள். இவள் சின்னப் பிள்ளையாம் 🤦‍♀️.பாவம் இவள் நடிப்பைப் பார்த்து அவர்தான் பயந்து விட்டார்.இவள் ஜெகதால ப்ரதாயினினு வசிக்கு மட்டும் தானே தெரியும். அப்பாவி செல்லம்மா ஏமாந்தே போனார்.

"அழாதே கண்ணு, நடந்தது எல்லாமே நல்லதுக்கு எடுத்துக்கோ, வசியை உனக்கு சின்ன வயசிலேந்து தெரியும், அப்புறம் எதுக்கு பயப்படற. நாள் பட எல்லாம் சரி ஆயிடும் கண்ணு, வசி மாதிரி புருஷன் யாருக்கும் கிடைக்காது ஆத்தா.
உன் அதிர்ஷ்டம் தம்பிய கட்டிக்கிட்டு ராணி மாதிரி வாழுவே பாரு "
ஆயா வனியின் தலையை கோதியவாறு சொன்னார்.

"ம்ம்ம் யார் அதிர்ஷ்டசாலினு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம் ஆயா, இப்ப இந்த வீட்டை கிளீன் பண்ணனும், உதவிக்கு தோட்டக்காரரை கூப்பிடுங்க"வனி எஜமானியாய் உத்தரவிட்டாள்.திரைசீலைகளை மாற்றி, அழுது வடியும் பழைய ஓவியங்களை அகற்றி, பிளாஸ்டிக் பூக்களை எல்லாம் வீசி விட்டாள். முடிந்த வரை இயற்கை பொருட்களை கொண்டே வீட்டை அலங்கரிக்கவே வனிக்குப் பிடிக்கும்.

ஊட்டி கிளைமெட்டுக்கு நிஜ பூக்களே அருமையாய் வளர்கையில், பிளாஸ்டிக் பூக்களை தேடுவானேன். வசி வீட்டில் ரோஜா தோட்டமும் உண்டு.நிறைய வகை பூச்செடிகள் அவன் தாயார் கண்ணம்மா காலத்திலிருந்தே இருந்து வந்தன. வசியும் அவற்றை பராமரிக்க ஆளை வைத்திருந்ததால் வனிக்கு பூக்கள் பஞ்சமில்லை. மெரூன் ரோஜாக்களை பறித்து மண் உருளியில் நீர் ஊற்றி அடுக்கினாள்.
அழகாய் வாசலில் கோலமும் கூட வரைந்து விட்டிருந்தாள். பெண்ணின் கை வண்ணத்தில் தூசு படிந்திருந்த மாளிகை பொலிவு பெற்றது.

அன்றும் வசி மதிய உணவிற்கு வீட்டிற்கு வரவில்லை. அந்தி சாய்ந்தே வீட்டிற்கு வந்தவன் பிரமித்துப் போனான். அவன் அன்னை இருந்திருந்தால் எப்படி களையாய் வீடு இருந்திருக்குமோ, அதே போல இருந்தது. வனியின் கை வண்ணம் என்பது சொல்லாமலே புரிந்தது. அவளை தேடிக்கொண்டே அவன் போனது சமையலறைக்குதான். வனிக்கு டீ குடித்துக் கொண்டே இருக்கணும். அப்படி ஒரு பைத்தியம். அவன் எண்ணியது போல அவன் ராசாத்தி அங்கதான் டீ குடித்துக் கொண்டிருந்தாள். வசியை பார்த்து முறைத்தவள் டீ குடிப்பதில் கவனம் செலுத்தினாள்.

"ஹாய் செல்லக்குட்டி வந்ததும் உன் கை வரிசையை காட்டிட்டியா? நம்ம வீடுதானான்னு சந்தேகம் வந்திடுச்சு போ, ஜமாய்ச்சிட்ட தங்கம்," வாயை குவித்து முத்தம் கொடுப்பது போல செய்தான். வனி மேலும் முறைத்தாள்.

வனி அருகே வந்தவன், "வேணி நாம கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்மா, உன் புருஷன்ன கேக்கல, உன் மங்கி பிரண்ட்டா கேக்கிறேன், கொஞ்சம் நேரம் உன் புருஷன மறந்திட்டு எங்ககூட வாடா, இங்க புதுசா சைனீஸ் ரெஸ்டாரெண்ட் ஓப்பன் பண்ணியிருக்காங்க, இந்த குளிருக்கு சைனீஸ் புட் ஒரு கட்டு கட்டலாம் வா " இலகுவாய் வசி அழைத்ததாலோ இல்லை வயிற்று பசி கிள்ளியதனாலோ வனி சரியென்று தலையாட்டினாள்.

விரைந்து சென்று குளித்துவிட்டு டாப்ஸ் ஜீன்சுமாய் இறங்கி வந்தாள். வசியும் உல்லாசமாய் விசிலடித்தவாறே கிளம்பி வந்தான். ஜீன்ஸ்யும் ட்ஷிர்ட் டுமாய் பார்க்கவே அட்டகாசமாய் இருந்தான். வெளியில் பனி தூறலாய் ஊட்டியை அணைத்திருக்க, மூங்கில் தட்டிகளால் ஆன அந்த உணவகம் பார்க்கவே ரம்மியமாய் இருந்தது. இலகுவாய் அவனோடு பேசிக்கொண்டே வனியும் நன்றாகவே சாப்பிட்டாள். அங்கேயே சிறு பூங்காவை போல அமைந்திருந்த இடத்தில் வனியை அழைத்து வந்தான்.

இருவரைத் தவிர யாருமே அங்கே இல்லை. வசி மெல்ல வனியின் கையை பற்றிக் கொண்டே பேச ஆரம்பித்தான்.
"வனி நா உங்கிட்ட கொஞ்சம் பேசணும், எதையுமே மறைக்காம எங்கிட்ட ஷேர் பண்ணிக்கணும்.சரியா?. "
"உனக்கு ஹெல்ப் பண்ணனும்தாண்டா கேக்கிறேன்.என்னை தப்பா நெனைச்சிடாதேடி"
தயக்கமாய் வந்தது வார்த்தைகள்.
வனமோகினிக்கு ஏதோ புரிவது போல இருந்தது. தன்னை பற்றி ஏதோ ஒன்று வசிக்கு தெரிந்திருக்கின்றது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN